Thursday, 19 September 2019

கம்பராமாயணத்தில் மூவினப் பெண்டிர்


கம்பராமாயணத்தில் மூவினப் பெண்டிர்

            வைணவக் காப்பியமான கம்ப ராமாயணத்தில் தேவர், மனிதர், அரக்கர் என்னும் மூவினத்திலும் பெண் எவ்வாறு படைக்கப் பெற்றுள்ளாள் என்பதை ஆரண்ய காண்டம் வாயிலாகக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.
கற்பு
            குலமகளிரைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களில் பண்டைய புலவர்கள் கற்புடைமையை விதந்து கூறுவதைக் காணமுடிகிறது. அத்திரி முனிவரின் தண்டக வனத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘கற்பின் அனசூயை (2520:2) என்ற அனசூயையின் கற்புடைமையைக் குறிப்பிட்டுச் செல்கிறார் கம்பர்.
மறுஇல் கற்பினள் (3357:4),
படர் கற்பினாள் (3436:3),
கற்பினாள் (3453:2),
நிலம்பொறை இலதுஎன நிமிர்ந்த கற்பினாள் (3642:1)
என்றெல்லாம் சீதையைக் குறிப்பிடும் இடங்களில் அவளுடைய கற்புடைமையையும் இணைத்துக் காண்கிறார் கம்பர்.
            சீதையை இராமன் நினைவுகூர்கையில், ‘கற்பி னோர்க்கு அருங்கலம் (3637:1-2) என்று கருதுகிறான்.
மீன்சுடர் விண்ணும் மண்ணும் விரிந்தபோர் அரக்கர் என்னும்
பொற்பினுக்கு அணியினை புகழின் சேக்கையை
கற்பினுக்கு அரசியை கண்ணின் நோக்கினான் (3344:3-4)
என்னும் பகுதியிலும் சீதையைக் கற்புக்கரசியாகச் சுட்டுகிறார் கம்பர்.
            இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபிறகு சீதையை எங்குத் தேடியும் காணாமல் இராமன் வருந்துகிறான். அந்நிலையில் இராமனின் நிலையை,
வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும் துயிலை வெறுத்து அளியும்
கள்ளும் சிலம்பும் பூங்கோதைக் கற்பின் கடலில் படிவாற்கு
புள்ளும் சிலம்பும் பொழில்சிலம்பும் புனலும் சிலம்பும் புனைகோலம்
உள்ளும் சிலம்பும் சிலம்பாவேல் உயிர்உண்டாகும் வகைஉண்டோ (3568)
என்று குறிப்பிடும் கம்பர் சீதையின் கற்புத் தன்மையைக் கடலாக எடுத்துரைக்கிறார். தவமுனியின் வேடம்கொண்டு தோன்றிய இராவணனைச் சீதை வரவேற்றதை,
காண்டலும் கண்ணின்நீர் துடைத்த கற்பினாள்
ஈண்டு எழுந்தருளும் என்று இனிய கூறினாள் (3351:3-4)
என்று கம்பர் சுட்டுகிறார்.
            சூர்ப்பணகையைக் குறிப்பிடும்போது, ‘தேயும் கற்பினாள்’ (2757:4) என்று கம்பர் சுட்டுகிறார்.
இற்பிறந்தார் தமக்கு இயைவ செய்திலள்
கற்பு இறந்தாள் என கரன்கொலாம் இவள்
பொற்பு அறையாக்கினற்போல் என்றார் சிலர் (3098.2-4)
என்று சூர்ப்பணகையைக் காண்போர் உரைக்கும் கூற்றில் அவளுடைய செயலால் அவள் கற்புநெறி அற்றவளாய்த் திகழ்வதாகக் குறிப்பிடுகின்றனர். இதனால் அரக்கர் குலத்தில் தோன்றினாலும் பெண்களுக்குக் கற்பு போற்றப்பட வேண்டிய ஒன்று என்னும் சமுதாய மனப்பாங்கைக் கம்பர் வெளிப்படுத்தக் காணலாம்.
அருந்ததி - கற்புக் குறியீடு
            கற்பின் குறியீடாக அருந்ததியைச் சுட்டுகின்ற மரபினைத் தமிழ் இலக்கியங்களில் தொடர்ந்து காணமுடிகிறது.
அருந்ததிக் கற்பின் அம் சொல்
வேய்இடை தோளினாள் (2796.1-2)
என்னும் பகுதியில் அருந்ததி போன்ற கற்பினை உடையவள் சீதை என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
நாமநூல் மார்பினன் நணுகினான் அரோ
தூமனத்து அருந்ததி இருந்த சூழல்வாய் (3341:3-4)
எனவரும் பகுதியிலும் சீதையை அருந்ததியாகவே காணுகிறார் கம்பர். சீதையை மீட்கப் போராடித் தோற்று வீழ்ந்துகிடந்த சடாயு அவ்வழியே வந்த இராமனையும் இலக்குவனையும் பார்த்து, ‘அம்சொல் மயிலை அருந்ததியை நீங்கினிரோ’ (3505:3) என்று கேட்கிறான். இங்குச் சடாயு சீதையை அருந்ததியாகவே உரைக்கிறான்.
சூர்ப்பணகை தன் தாயைப் பற்றிக் குறிப்பிடும் போதும், ‘அருந்ததிக் கற்பின் எம்மோய்’ (2781:1) என்று கூறுகிறாள். சூர்ப்பணகை அரக்கியாக இருந்தாலும் அவளும் கற்பிற்கு முக்கியத்துவம் அளித்து அருந்ததியை உதாரணப்படுத்துதல் குறிப்பிடத்தக்கது.
கற்பு ஆற்றல் மிக்கது
            மகளிரின் கற்பு, ஆற்றல் மிக்க ஒன்றாகப் பாரதப் பண்பாட்டில் கருதப்படுகிறது.
கெட்டாய் கிளையோடும் நின் வாழ்வை எலாம்
சுட்டாய் இதுஎன்னை தொடங்கினை நீ
பட்டாய் எனவே கொடு பத்தினியை
விட்டு ஏகுதியால் விளிகின் றிலையால் (3410)
என்று இராவணனுக்குச் சடாயு அறிவுரை கூறுகின்ற பொழுது கற்புடையோரைத் தீண்டினால் அழிவு உறுதி என்பதை எடுத்துரைக்கிறான். இதன் மூலம் கற்பு ஆற்றல் மிக்கது என்னும் கருத்தாக்கத்தை முன்வைக்கிறார் கம்பர்.
            சீதையை இராவணன் கண்ட காட்சியை, ‘கான்சுட முளைத்த கற்பின் கனலியைக் கண்ணின் கண்டான்’ (2789:3-4) என்று குறிப்பிடும் கம்பர், சீதையைக் கற்பின் கனலி என்ற சுட்டுகிறார். இதன்மூலம் கற்பினுக்கு உள்ள ஆற்றலை விதந்துரைக்கிறார்.
ஒருத்திக்கு ஒருவன்
            அயோமுகி என்னும் அரக்கி இலக்குவனைக் கண்டு காதல் கொள்கிறாள். அவள் இலக்குவனைப் பார்த்து,
. . .  பேர் எழில் வீரா
முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன்
பொன்னின் மணித்தட மார்பு புணர்ந்து என்
இன்உயிரைக் கடிது ஈகுதி . . . (3593)
என்று உரைக்கிறாள். அரக்கர் குலமாகவே இருந்தாலும் ஒரு பெண் ஒருவனையே மணத்தல் வேண்டுமென்ற மனப்பாங்கு இங்கு வெளிப்படுவதாகக் கொள்ளலாம்.
கணவன் பெயர் கூறாமை
            கணவனின் பெயரை மனைவி உரைத்தலாகாது என்னும் மரபு தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்தது. இராவணன் சீதையைப் பார்த்து அவள் யாரென்று கேட்க அதற்கு அவள்,
சனகன் மாமகள் பெயர்சனகி காகுத்தன்
மனைவியான் . . . (3357:3-4)
என்று விடையிறுக்கிறாள். தன் கணவனின் பெயரைக் கூறலாகாது என்ற மரபு பற்றித் தன் கணவனின் பெயராகியஇராமன்என்ற சுட்டாமல் அவன் பிறந்த குலப்பெயராகியகாகுத்தன்என்னும் பெயரைச் சுட்டினாள் என்பர் .வே.சா. மேலும் சீதை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இராவணன் உரைத்தபோது,
கவினும் வெஞ்சிலைக்கை வென்றிக் காகுத்தன் கற்பினேனை
புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்கெரி புனிதர் ஈயும்
ஆவியை நாய் வேட்டதென்ன என்சொனாய்? அரக்க  (3385:2-4)
என்று சீதை சினந்து உரைக்கும்போதும் இராமனைக் காகுத்தன் என்றே குறிப்பிடுகிறாள்.
பெண் - மடமை
            பெண்கள் மடமை மிகுந்தவர்கள் என்ற கருத்தாக்கம் பன்னெடுங்காலமாகத் தமிழகத்தில் நிலவி வந்துள்ளது. இதனைக் கம்பர் தம் காப்பியத்தில் வெளிப்படுத்துகிறார். மாயமானை விரட்டிச் சென்றபோது இராமன் அலறுவதைப்போன்று ஒலி எழுகிறது. தன் கணவனுக்கு ஆபத்து நேர்ந்துவிட்டதாகக் கருதும் சீதை உடனே சென்று பார்க்குமாறு இலக்குவனிடம் கூறுகின்றாள். இராமனுக்குத் தீங்கு நேராது என்று தெருட்டும் இலக்குவன்,
எண்மை ஆர் உலகினில் இராமற்கு ஏற்றம்ஓர்
திண்மையார் உளர்எனச் செப்பற் பாலரோ
பெண்மையால் உரைசெயப் பெறுதிரால் . . . (3323:1-3)
என்று கூறுகிறான். இங்குக் கம்பர், ‘பெண்ணாகிய காரணத்தால்தான் இவ்வாறு கூறுகிறீர்கள்என்று இலக்குவன் கூறுவதைத் தவிர்த்திருக்கலாம். எனினும் பெண் என்பவள் பேதமைத் தன்மையள் என்னும் செய்தியைச் சுட்டவேண்டும் என்பதற்காகவே கம்பர் இவ்வாறு குறிப்பிடுகிறார் எனக் கருத முடிகிறது.
            பொன்மானை விரட்டிச்சென்ற இராமன் அது மாயமான் என்று அறிந்து அம்பினை எய்து கொல்கின்றான். அதன் பின்னர்ச் சீதையின் நிலையினை எண்ணிப் பார்க்கிறான்.
. . . தோகையும்
பெண் எனும் பேதைமை மயக்க பேதினால்
உள்நிறை சோரும் என்று ஊசலாடும் அக்
கண்ணனும் . . . (3465)
என்ற இராமனின் எண்ணத்தைக் கூறுகையில் பெண்ணைப் பேதைமை உடையவளாகக் காட்டுகிறார் கம்பர்.
காதல் உரைத்தலாகாது
            குலமகளிர் தம் காதலைத் தாங்களே வெளிப் படுத்துதல் கூடாது என்னும் கருத்தாக்கமும் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிவந்தது. இதனை இராமன்மேல் தான்கொண்ட காதலைச் சூர்ப்பணகை வெளிப்படுத்தும் வேளையில்,
தாம்உறு காமத் தன்மை தாங்களே உரைப்பது என்பது
ஆம்எனல் ஆவது அன்றால் அருங்குல மகளிர்க்கு அம்மா
ஏமுறும் உயிர்க்கு நோவேன் என் செய்கேன் யாரும் இல்லேன்
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக் காத்தி (2776)
எனக் கூறும் கூற்றின் மூலமாக வெளிப்படுத்துகிறார் கம்பர்.
                நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றான் (2777:4) என்று இலக்குவன் கூற்றிலும் பெண்கள் காதலை உரைத்தல் நாணமற்ற செயல் என்பதைக் கம்பர் சுட்டுகிறார்.
தற்பெருமை கூடாது
            குலமகளிர் தம் பெருமையைத் தாமே எடுத்துக் கூறலும் கூடாது என்ற சமுதாய மனப்பாங்கையும் கம்பர் சூர்ப்பணகையின் மூலமாக வெளிப்படுத்துகிறார்.
காவல்திண் கற்புஅமைந்தார் தம்பெருமை தாம்கழறார்
ஆவல்பேர் அன்பினால் அறைகின்றேன் ஆம்அன்றோ (2858:1-2)
என்று சூர்ப்பணகை தன்னைப் பற்றி இராமனிடம் உரைக்கிறாள். கற்புடைய மகளிர் தம் பெருமையைத் தாங்களே எடுத்துரைக்க மாட்டார்கள் என்னும் பெண் குறித்த சமுதாய மனப்பாங்கைச் சூர்ப்பணகை மூலம் கம்பர் குறிப்பிடுகிறார்.
மகளிரின் அடிமை வாழ்வு
            இலங்கையில் தேவர்கள் அனைவரும் இராவணனின் ஏவல்படி வாழ்வதனைச் சுட்டும் சடாயு,
தெண்திரை உலகம்தன்னில் செறுநர்மாட்டு ஏவல்செய்து
பெண்டிரின் வாழ்வர்அன்றே இதுஅன்றோ தேவர்பெற்றி? (3525:1-2)
என்று குறிப்பிடுகிறான். வெற்றிபெறும் அரசன் பகைவர் நாட்டிலிருந்து கைப்பற்றிவரும் அரண்மனை மகளிரை ஏவல் மகளிராக்கிக்கொண்டிமகளிர்என்னும் பெயரால் அடிமையாக்குவர். முடியாட்சிக் காலத்தில் காணப்பெற்ற இத்தகைய வழக்கத்தை இங்குக் கம்பர் குறிப்பிடுகிறார்.
விலைமகளிர் மனம்
குன்றிடை இவரும் மேகக் குழுவிடைக் குதிக்கும் கூடச்
சென்றிடின் அகலும் தாழின் தீண்டல்ஆம் தகைமைத்து ஆகும்
நின்றதே போல நீங்கும் நிதிவழி நேயம் நீட்டும்
மன்றல்அம் கோதை மாதர் மனம்எனப் போயிற் றம்மா (3309)
என்று மாயமான் அலைக்கழித்த தன்மையை ஓரிடம் நின்று நிலைக்காத விலைமகளிர் மனத்துடன் கம்பர் ஒப்புமைப் படுத்துகிறார்.
            இதுகாறும் கண்டவற்றால் கம்பர் தம் காப்பியத்தில் பெண்களைப் பற்றிய சமுதாய மனப்பாங்கினை வாய்க்குந்தோறும் தம் காப்பியக் கதைமாந்தர் வாயிலாகப் புலப்படுத்துவதை அறியமுடிகிறது. மேலும் பெண்ணின் கற்புடைமை தொடர்ந்து தமிழ்ச் சமுதாயத்தில் வற்புறுத்தப்பட்டு வந்தமையும் மடமை, நாணம் முதலானவை கற்புடைமையின் அளவுகோலாகத் திகழ்ந்து வருவதையும் அறியமுடிகிறது. அரக்க குலத்தினராயினும் மனித குலத்தினராயினும் தெய்வப் பிறப்பாயினும் பெண்மைக்குரிய மரபார்ந்த பண்புகள் பொதுவானவை என்பதையும் அவை காக்கப்பட வேண்டியவை என்பதையும் வற்புறுத்துகிறார் கம்பர். தெய்வப் பிறப்பேயாயினும் பெண் என்பவள் பேதைமை உடையவளே என்பதனை நிறுவுவதில் கம்பர் முனைப்புடன் இருத்தலைக் காணலாம். இவற்றால் தேவர், மனிதர், அரக்கர் என மூன்று இனத்திலும் பெண்யை ஒரே தன்மையாளாக நோக்கும் ஆணாதிக்க மனப்பாங்கு புலனாகிறது.

நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி, பெண்ணியச் சாரலில், காரைக்கால் :      விழிச்சுடர்ப் பதிப்பகம், 2014, 90-97.

No comments:

Post a Comment