Saturday, 25 February 2017

இருண்ட வீடு

   
அவளுக்கு இரண்டு புதல்வர்கள். அவர்கள் படிப்பில்தான் அவளுக்கு எவ்வளவு அக்கறை? பெரியவன் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். சின்னவன் எல்.கே.ஜி.யில் இருந்தான். இருவரையும் நன்றாகப் படிக்கவைத்துப் பெரியஆளாக ஆக்கவேண்டும் என்று அவள் எண்ணியதில் என்ன தவறு இருக்கமுடியும்?
அவர்கள் இருவரும் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கவேண்டுமென்றால் கல்வியின் அடித்தளம் சிறப்பாக அமையவேண்டாமா?
செய்தித்தாளில் புத்தகக் கண்காட்சி விளம்பரம் வந்திருந்தது.
ஏன்னா, நாம பொஸ்தகக் கண்காட்சிக்குப் போலாமா?’
ஜானு, நேக்கு அதுக்கெல்லாம் நேரம் ஏதுடி? நீ வேணும்னா உஷாவ அழைச்சிண்டு போ!
நல்ல வசதியான குடும்பம்தான். அறுபதுக்கு நாற்பது பிளாட்டில் ஆயிரத்து எண்ணூறு சதுரஅடியில் பெரிய வீடுதான். ஜகனுக்கும் நல்ல உத்தியோகம். கைநிறையச் சம்பளம். போதாததற்கு ஜானகியின் பேரில் எல்.ஐ.ஸி. ஏஜெண்ட் எடுத்து இரவு பகலாகப் பாலிசி சேர்க்கிறான். அதிலும் மாதாமாதம் கணிசமான தொகை வந்து கொண்டிருக்கிறது. வசதிக்குக் கேட்கவா வேண்டும்?
பானை பிடித்தவள் பாக்கியசாலியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சாமர்த்தியசாலியாக இருக்க வேண்டாமோ? ஜானுவின் கை ஓட்டைக் கை. அதில் குடம் குடமாகத் தங்கத்தைக் கொட்டினாலும் தங்காது.
சம்பாதிக்கத் தெரிந்த ஜகனுக்கு அதனைக் கட்டும் செட்டுமாகச் செலவுசெய்து சேமிப்பதில் அக்கறை இல்லை. எல்லாம் ஜானுவின் பொறுப்பில்தான்!
ஆவடியிலிருந்து அவள் ஆட்டோ எடுத்தாள். அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து ஓடத்தான் செய்தது. பேருந்தில் போனால் பத்துப் பதினைந்து ரூபாயில் முடியும் செலவு. ஆமாம்! காச சேத்துச் சேத்து வெச்சுதான் என்ன செய்யப்போறோம்? போவட்டும் போ! அலுங்காம குலுங்காம ஆட்டோல போலாம்என்று உஷாவுடன் கண்காட்சிக்குப் புறப்பட்டாள் ஜானகி.
இந்தாப்பா, மவுண்ட் ரோடு போயிட்டுத் திரும்ப வரணும். எவ்வளவு கேக்கற?’
உங்களுக்குத் தெரியாதாம்மா? பாத்துப் போட்டுக் குடுங்கம்மா’.
நீ சொன்னாத்தானே தெரியும்பா!
நூத்தி அம்பது ரூபா ஆவும்மா’.
கொஞ்சம்  கொறச்சிக்கக் கூடாதா?’
நானே கம்மியாத்தான் கேட்டிருக்கேம்மா!
சரி சரி . . .  வண்டிய எடுப்பா!
புத்தகக் கண்காட்சியில் நூல் விற்பனை நிலையங்களின் பேனர்கள் வரவேற்றன.
அங்குதான் எத்தனை கடைகள். புத்தகங்கள்! புத்தகங்கள்! எங்கு நோக்கினும் புத்தகங்கள்!! வண்ண வண்ண அட்டைகள்! வழு வழுவென்ற தாள்! பிசினின் வாசம் மறையாத ஈரம் இன்னமும் காயாத புதிய புத்தகங்கள். ஒரு ரூபாயிலிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் கண்ணைக் கவர்ந்தன.
புடவைக் கடைகளில் மனத்தைப் பறிகொடுக்கும் மங்கையரை நாம் பார்த்ததுண்டு. ஜானகி இந்த விஷயத்தில் சற்றே வித்யாசமானவளோ? தன் புதல்வர்களுக்காகப் புத்தகங்களை வாங்கிக் குவிக்க ஆசைப்பட்டாள்.
ஒரு கடையில் வண்ண வண்ணப் படங்களோடு வழுவழு தாளில் சிறுவர்களுக்காகவே எழுதப்பெற்ற வெளி நாட்டுப் புத்தகங்கள் அவள் கவனத்தை ஈர்த்தன. சிறுவர்களுக்காகப் பெரிய பெரிய எழுத்தில் அச்சிடப் பட்டிருந்தன. கருத்தைக் கவரும் படங்கள்! கனம் கனமான புத்தகங்கள்! தாவரங்களைப் பற்றி ஒரு புத்தகம், விலங்குகளைப் பற்றி ஒரு புத்தகம், அறிவியல் அறிஞர்களைப் பற்றி ஒரு புத்தகம், நாடுகளைப் பற்றி ஒரு புத்தகம், அரசர்களைப் பற்றி ஒரு புத்தகம், இப்படி ஒவ்வொரு பொருள் பற்றியும் ஒரு புத்தகம்.
பெரியவனும் சின்னவனும் சண்டை போட்டுக் கொண்டு இழுத்தாலும் சீக்கிரத்தில் கிழிந்துவிடாது. கனமான அட்டை! ஒவ்வொரு புத்தகத்தைப் பாதுகாக்கவென்று தனித்தனியாக ஓர் அட்டைப் பெட்டி கச்சிதமாக! என்ன ஒன்று . . . குழந்தைகளால் தூக்கத்தான் முடியாது. தானே மடியில் புத்தகத்தை வைத்துக்கொண்டு சொல்லித் தரலாம் - யோசித்தாள் ஜானு.
மொத்தம் பத்து புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகத்தின் பின்பகுதி அட்டையிலும் இரண்டாயிரத்து இருநூற்றைம்பது ரூபாய் என்று விலை ஒட்டப்பட்டிருந்தது.
கடைக்காரனிடம் அந்தப் புத்தகங்களின் தள்ளுபடி போகத் தரவேண்டிய விலையை விசாரித்தாள் ஜானகி.
இவள் என்ன கிண்டல் செய்கிறாளா?’ -கடைக்காரன் ஜானகியை ஏற இறங்கப் பார்த்தான்.
ஒரு சிலருக்கு இதே பிழைப்பாகிவிட்டது. கடையில் ஒவ்வொரு பொருளாகப் பார்த்து விலை விசாரிப்பார்கள். கடைசியில் எதையும் வாங்கமாட்டார்கள். தெருவில் ஏதேனும் பொருள் விற்றுக்கொண்டு போனால் வேலை மெனக்கெட்டு அதனைக் கூப்பிடுவார்கள். என்ன? ஏது? என்று விசாரிப்பார்கள். எவ்வளவு விலை என்பார்கள்? குறைத்துத் தருவானா? என்று கேட்பார்கள். அவனும் உங்களுக்கு எவ்வளவுக்குதான் வேணும்? கேளுங்க’, என்று பரிதாபமாகக் கேட்பான். வெயிலில் அலைந்துகொண்டு இருப்பதைவிட 'ஏதோ இரண்டு இடத்தில் வியாபாரத்தை முடிச்சோமா? மதிய சாப்பாட்டைத் திருப்தியாகச் சாப்பிட்டோமா? ஏதாவது மரத்தடி நிழலில் சற்றுநேரம் கண் அசந்தோமா?’ என்று எதிர்பார்த்திருப்பான்.
விலைகேட்டவர்கள் கடைசியில், 'இத வாங்கி நான் என்னா செய்யறது?’ என்பார்கள்.
அப்பறம் எதுக்குக் கூப்ட்டு வெல வெசாரிச்சிங்க?’
சும்மாத்தான். என்ன வெல விக்குதுன்னு தெரிஞ்சிக்கலாமேன்னுட்டுதான்என்று கூறிவிட்டுச் சட்டென்று வீட்டிற்கு உள்ளே சென்று மறைந்து விடுவார்கள்.
வெல கேக்கற மூஞ்சியப் பாருஎன்று திட்டிக்கொண்டு பொருளை மூட்டை கட்டிக்கொண்டு நகர்வான் வியாபாரி.
ஜானகியை ஏறிட்டுப் பார்த்த புத்தகக் கடைக்காரர் முகத்திலும் இத்தகைய ஏளனமும் எகத்தாளமும் தெரிந்தன. அதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் இத்தகைய விலையுயர்ந்த புத்தகங்களைப் பெரும்பாலும் சாதாரண மக்கள் சொந்த உபயோகத்திற்கு வாங்கிவிட முடியாது. பெரிய பெரிய நூலகங்களில் மட்டுமே வாங்கி வைக்கலாம். இல்லையென்றால் எப்படிச் செலவுசெய்துப் பணத்தைக் கரைப்பது என்று தெரியாமல் செலவுசெய்யும் பெரும்பணக்காரர்கள் வாங்கக்கூடும்.
இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லியான புக்குங்க!
அவன் சொல் ஜானகியை அவமானப்படுத்தியது. அவனை ஒருவழி செய்யவேண்டும் என்று மனத்தில் நினைத்துக்கொண்டாள்.
எல்லாம் எங்களுக்குத் தெரியாதா? தள்ளுபடி போனா எவ்வளவு வரும்னு சொல்லுங்க போதும்’.
அவளுடைய இருமாப்பு அவனைத் திகைக்க வைத்தது. கடந்த மூன்று நாட்களாக எத்தனையோ பேர் அந்த நூல்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் கை பட்டுப்பட்டுச் சற்றே அங்கங்கு அழுக்காகிவிட்டதே என்று கடை உரிமையாளர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். விலை அதிகமாக இருப்பதால் இரண்டே இரண்டு செட்டுதான் ஆர்டர் செய்துப் பார்வைக்கு வைத்திருந்தார். அதைப்போய் வாங்குவதென்றால் நிச்சயமாக அவள் பணக்காரியாய் இருக்கவேண்டும். ஆனால் ஆளைப் பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே!
மொத்த வெல இருபத்தஞ்சாயிரம் ரூபாய்ங்க. தள்ளுபடி போனா இருபத்ரெண்டாயிரத்து இருநூத்தம்பது ரூபா வருங்க’.
அப்டியா, சரி பில் போடுங்க!
விலையைச் சொன்னபிறகும் பின்வாங்காமல் நிற்கிறாளே? ஒருவேளை மென்ட்டலாக இருக்குமோ?’
புக் வேணும்னா யோசிச்சிச் சொல்லுங்க. பில் போட்டப்பறம் ரிட்டர்ன் எடுத்துக்க மாட்டோம்’.
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?’ -ஜானகியின் குரலில் கோபம் தெறித்தது.
அவள் செயல் கடைக்காரனுக்கே அதிகமாகப் பட்டது; ஆச்சரியமாகவும் இருந்தது. அவனாகவே பதினைந்து சதவீதம் சிறப்புத் தள்ளுபடி செய்து பில் போட்டான்.
புத்தகக் கண்காட்சியைப் பார்த்துவிட்டு அருகில் இருக்கும் எல்.ஐ.சி. அலுவலகத்தில் கட்டிவிட்டுவரும்படி அந்த மாதம் முழுக்கச் சேர்த்த எல்.ஐ.சி. பாலிசித் தொகையான முப்பதாயிரம் ரூபாயை ஜானகியிடம்  கொடுத்திருந்தான் ஜகந்நாதன்.
உஷாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. என்ன இருந்தாலும் அண்ணியின் தயவில் வாழ்ந்து வருபவள்!
கடைக்காரனின் மூக்கை உடைத்ததில் ஜானகிக்குப் பரம திருப்தி.
தான் ஆர்டர் செய்திருந்த இரண்டு செட் புத்தகத்தில் ஒரு செட் விற்றுவிட்டுக் காசு பார்த்ததில் கடை உரிமையாளருக்கும் திருப்திதான்!
புத்தகங்கள் அனைத்தையும் வைக்க அழகான அட்டைப்பெட்டியும் இருந்தது. கடைக்காரர் 'பேக்'செய்து புத்தக அட்டைப் பெட்டியை ஆட்டோவில் கொண்டுபோய் வைத்தார்.
என்னம்மா, எல்.ஐ.ஸி. போவணுமா?’ ஏற்கெனவே போட்டிருந்த நிகழ்ச்சிநிரலை ஆட்டோக்காரர் நினைவு படுத்தினார்.
வேண்டாம்பா, நேரா வீட்டுக்குப் போ!
மாலையில் வீடு திரும்பிய ஜகந்நாதன், தன் மனைவி ஜானகி வாங்கிய புத்தகங்களைப் பார்த்துத் தன் இதயத்தை நின்றுவிடாமல் காப்பாற்றிக்கொண்டான். எத்தனைப் பேருடைய பாலிசித் தொகை? இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரே நாளில் செலவு செய்துவிட்டாளே! அதனைத் திரட்டுவதற்கு அவன் எப்படி இரவும் பகலும் அலைந்து திரிந்தான்?
இது என்ன அழுகிப்போற பண்டமா? நான் என்ன எனக்காவா வாங்கினேன்? எல்லாம் நம்ம பசங்களோட எதிர்காலம் நல்லா இருக்கணுமேன்னுதானே வாங்கி வந்தேன்’.
கடைக்காரன் ரிடர்ன்லாம் எடுத்துக்கமாட்டேன்னு ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டான்ணேஎன்று உஷா போட்டுக் குடுத்தாள்.
ஜானகியின் முகம் சுருங்கிவிட்டது.
அவள் முகம் சுருங்குவதை ஜகனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. போவட்டும் விட்டுத் தள்ளு! ஆபிஸில் ஓவர்டைம் போட்டுச் சமாளிக்கறேன்’.
இப்படி ஜானகி புத்தகங்கள் வாங்கிய விருத்தாந்தத்தை உஷா என்னிடம் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனாள்.
கேட்ட என்னாலேயே அதை ஜீரணிக்க முடியவில்லை. கல்யாணமாகாத உஷாவிற்கு அந்தப் பணத்தில் அப்போதைய விலையில் சுமார் எட்டு பவுன் நகை வாங்கிப்போட்டிருக்கலாம்! அல்லது புறநகர்ப் பகுதியில் அறுபதுக்கு நாற்பதில் ஐந்து காலிமனைகள் வாங்கிப் போட்டிருக்கலாம்!
கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என்னால் அறிவுரை கூறாமல் அடக்கிக்கொள்வது கடினமாகவே இருந்தது. அவர்கள் வீட்டு மாடியில் குடியிருந்துகொண்டு அவர்களுக்கே அறிவுரை சொன்னால் நான் வேறுவீடு தேடி அலையவேண்டியதுதான் என்ற அச்சத்தால் பேசாமல் இருந்துவிட்டேன்.
சில மாதங்களில் பணி இடமாற்றம் காரணமாக நான் அவர்கள் வீட்டைக் காலிசெய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அறிவுரைகளைச் சொல்லாமல் அடக்கிவைத்துக் கொள்ளும் வேதனையிலிருந்தும் எனக்கு விடுதலை கிடைத்தது.
ஓர் ஐந்துவருடம் கழித்து அவர்கள் வீட்டுப்பக்கம் செல்லவேண்டிய வேலைவந்தது. நான் பழைய குடித்தனக்காரர் என்ற பாசத்தில் அவர்களைப் பார்க்கப் போனேன்.
வீட்டில் உஷாதான் இருந்தாள் இன்னும் திருமணமாகாமல்! எல்லாம் வயசாயிட்டுது? இனிமே எனக்கெதுக்குக் கல்யாணம்? பேசாம அண்ணனோட நிழல்ல இப்படியே இருந்துட்டுப் போறேன்’ - சலித்துக்கொண்டாள் உஷா.
உஷாவின் ஜாதக தோஷத்தைவிட ஜானகியின் ஆடம்பர வேஷமே இதற்கு முக்கியக் காரணம் என்பது எனக்கு விளங்கியது. விளங்க வேண்டியவர்களுக்கு விளங்காததுதான் அவள் விளங்காமல் போனதற்குக் காரணம்.
எங்கே ஜானுவக் காணோம்?’
கொஞ்சம் இருங்க, வர்ற நேரம்தான்!
எங்களுக்குப் பில்டர் காபி போடுவதற்காகச் சமையலறைக்குள் நுழைந்தாள் உஷா.
விலையுயர்ந்த சோபாவில் அமர்ந்தபடியே சும்மா இல்லாமல் வீட்டை ஒரு நோட்டம் விட்டேன். ஹாலின் ஷோ கேஸில் விலையுயர்ந்த அழகழகான பெரியபெரிய பொம்மைகள்! எத்தனையோ அலங்காரப் பொருட்கள்! அருகே போய்ப் பார்த்தேன்.
காபியுடன் வந்த உஷா, ‘எல்லாம் முகேஷ§க்கும் ராகேஷ§க்கும் வந்த பர்த்டே கிப்ட்டுங்கஎன்றாள். ஒவ்வொரு அன்பளிப்பும் வந்தவிதத்தை விலாவரியாக எடுத்துரைத்தாள்.
பள்ளி நண்பர்கள் இவ்வளவு விலை உயர்ந்த பொருட்களைக் கொடுத்திருந்தால் அவற்றிற்கு மாற்றாக ஜானகி அவர்களுக்கு எவ்வளவு செலவு செய்திருப்பாள்? பிறந்தநாள் விழாக்களை எவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடியிருப்பாள்? மனத்தில் வரவுசெலவுக் கணக்கு ஓடியது.
ஏன் நீதான் அவங்களுக்குப் படியளக்கப் போறியா? வந்தமா? பாத்தமா? போனமான்னு இருக்கணும். அவங்க என்ன செஞ்சாங்க, எப்படி செலவழிக்கிறாங்க, எப்படி ஆடம்பரமா வாழறாங்கன்னெல்லாம் யோசிச்சிட்டிருக்கறது ஒனக்கு அதிகபட்சமா தெரியல?’ என்று எனது இன்னொரு மனம் என்னை இடித்துக்காட்டியது.
பேசாமல் காபியை வாங்கிச் சுவைத்தேன்.
வெளியே ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டது. ஜானகிதான் இறங்கிக்கொண்டிருந்தாள்.
உஷா. . . ! செத்த இங்க வாயேன். . .’ - ஜானகியின் குரல் ஓங்கிக் கேட்டது.
உஷா வேகமாகச் சென்று ஆட்டோவில் இருந்த கைப்பையை எடுத்து ஜிப்பைத் திறந்து ஆட்டோவிற்காகப் பணத்தை எடுத்துக் கொடுத்தது அவளைத் தொடர்ந்து சென்ற என் பார்வையில் பட்டது.
ஜானுவின் கைகளுக்கு என்னாயிற்று?’
உஷா நாங்கள் உள்ளே அமர்ந்திருப்பதைக் கூறியிருக்கவேண்டும்.
ஜானகி உள்ளே வரும்போதே கோவைப்பழ நிற உதடுகள் மலர எங்களை 'வாங்க வாங்க' என்று வரவேற்றுக்கொண்டு நுழைந்தாள்.
வந்ததும் சோபாவில் அமர்ந்தாள்.
கை என்னாச்சு?’ பதற்றத்துடன் கேட்டேன்.
ஒன்னுமில்லையே!' கைகளை விரித்துக்காட்டினாள். இரு கைகளிலும் மெஹந்தி இட்டிருந்தாள்.
எங்கே போயிருந்தீங்க?’
மெஹந்தி போட பியூட்டி பார்லர் போயிருந்தேன்’.
கொல்லையில் வளர்ந்திருந்த மருதாணிச் செடியின் இலைகளைப் பறித்து அம்மியில் விழுதாக அரைத்துக் கைவிரல்களின் நுனிப்பாகத்தில் குப்பி குப்பியாக நான் வைத்துக்கொண்டது ஞாபகத்திற்கு வந்தது.
உள்ளங்கையின் நடுவில் ஒரு பெரிய வட்டம். அதைச்சுற்றிச் சின்னச் சின்ன வட்டங்களாக ஏழு எட்டு வில்லைகள். கைவிரல் ரேகைகளில் பட்டையாய் மருதாணிக் கோடுகள். இதுதான் மருதாணி அலங்காரத்தின் மொத்த தத்துவம்.
இதற்கு ஆகும் நேரம் : அரைக்க - ஐந்து நிமிடம், வைக்க - பத்து நிமிடம். காய - இரண்டு, மூன்று மணி நேரம். அவ்வளவுதான். அதன் ஈரம் தானாகவே காய்ந்து கொட்டிவிட வேண்டும். இரவு சாப்பிட்டுவிட்டு வைத்துக் கொண்டால் அப்படியே தூங்கிவிடலாம். என்ன ஒன்று - தூங்கும்போது தலையணையில், போர்வையில், உடையில் அங்கங்கே அப்பிக்கொண்டிருக்கும்.
பகலில் இட்டுக்கொண்டால் அப்போதுதான் பார்த்து ஈ மொய்க்கும், கொசு கடிக்கும், பாத்ரூம் வரும். கையை இப்படி, அப்படி தூக்கும்போது உள்ளங்கையில் காய்ந்துவரும் பதத்தில் இருக்கும் மருதாணிப் பொட்டுகள் விழுந்துவிடும். உடனே அம்மா அதைத்தேடி எடுத்துப் பழையபடி கையில் வைத்து அதில் ஒரு சொட்டுத் தண்ணீர் விட்டு ஒட்டிவிடுவார்கள்.
இப்படிக் கஷ்டப்பட்டாலும் காலையில் கையைக் கழுவிவிட்டுப் பார்த்தால் வெள்ளையான கையில் செக்கச்செவேல் என்று அதன் நிறம் பார்க்கவே அற்புதமாக இருக்கும். கையை மூக்கருகில் கொண்டுபோகும் போதெல்லாம் மருதாணியின் வாசனை நெஞ்சை அள்ளும்.
வருஷத்துல ரெண்டு தடவையாவது மருதாணி வெச்சிக்கிட்டா நகமெல்லாம் சொத்தைவிழாம நல்லா இருக்கும். வெயில் காலத்துல மருதாணி வெச்சிக்கிட்டா ஒடம்புக்குக் குளிர்ச்சியா இருக்கும்என்று கூறிக்கொண்டு அம்மா எனக்கு மருதாணி வைப்பதுண்டு. அம்மா பெரிய பெரிய குப்பிகளாக நாசுக்கில்லாமல் வைப்பார்கள் என்பதற்காக இடது கையில் நானாகவே வைத்துக் கொள்வேன். வலது கையில் மட்டும் அம்மா வைப்பார்கள். பைசா செலவில்லாமல் இப்படி மருதாணி வைத்துக் கொண்டதை நான் நினைத்துக் பார்த்தேன்.
நவநாகரிக உலகில் ரெடிமேடாகக் கிடைக்கும் மருதாணிக் கோன்களைப் பயன்படுத்தி மருதாணி வைத்துவிடக்கூட பார்லர்கள் வந்துவிட்டன. அதற்காகும் காசு, போய்விட்டுவரும் நேரம், ஆட்டோ செலவு - கைப் பையின் கனத்தைக் குறைத்துவிடும். ஆனால் இப்படி வைத்துக்கொள்ளும் மெஹந்தி வெகுவிரையில் அழிந்து போவதுதான்  அபாக்கியம்.
ஜானகியை உற்றுப் பார்த்தேன். கடந்த ஐந்து வருடத்தில் நன்றாகவே மாற்றம் தெரிந்தது. உதட்டுச் சாயம், கண் இமையில் வண்ணங்கள், திரெட்டிங் செய்யப்பெற்று இருக்கா இல்லையா என்று நம் நெற்றியைச் சுருங்கவைக்கும் புருவங்கள், விலையுயர்ந்த செண்ட் வாசனை, சற்றே குட்டையான கையுடன் கழுத்துக்கும் முதுகுக்கும் தடை ஏற்படுத்தாத ஆழமாகவும் அகலமாகவும் வளைந்த லோகட் ஜாக்கட்!  தலை முடியைச் சுருள் சுருளாகத் தூக்கிக்கட்டி கிளிப்புகள் செருகியிருந்தாள். ஏதோ பாஷன் ஷோவிற்கு ஆயத்தமானதுபோல் இருந்தது.
கல்லூரி வேலைக்குச் செல்லும் நான்கூட உதட்டுச் சாயத்தையோ, சென்டையோ தொட்டதுகூட கிடையாது.
என்ன இன்னக்கி விசேஷம்?’
சாயந்திரம் ஒரு ஃபங்க்ஷன் இருக்கு
மேரேஜ் ரிசப்ஷனா?’
இல்ல இல்ல, முகேஷோட பிரண்டுக்கு இன்னிக்கு பர்த்டே. லாஸ்ட் மந்த் முகேஷோட பர்த்டேக்கு அவன் ஆயிரம் ரூபாய்ல ஒரு கிப்ட் வாங்கித் தந்தான். நான் ரெண்டாயிரம் ரூபாய்ல அவனுக்குப் ஃபாரின் கிப்ட் நேத்தே வாங்கி வெச்சிட்டேன்’.
ரெண்டாயிரம் ரூபாய்க்கா?’ அதிர்ச்சியில் வாயைப் பிளந்தேன். அதில் மூனு கிராம் கம்மல் வாங்கலாம் என்று மனத்திற்குள் கணக்குப் போட்டேன்.
அவனோட அப்பா பெரிய ஆபீஸரா இருக்கார். இப்படிப்பட்டவங்களோட பிரண்ட்ஷிப் கெடைக்கறதே கஷ்டம். அதனால பைசாவுக்கெல்லாம் கணக்குப் பாக்கக் கூடாது. அவங்க பிரண்ட்ஷிப் மூலமா பெரிய பெரிய ஆட்களோட அறிமுகம் கெடைக்கும். பாலிஸி சேக்க யூஸ் ஆவும் இல்ல!
கையில் போட்டுவந்த மெஹந்தி காய்ந்து விட்டிருக்க, ‘கையக் கழுவிட்டு வரேன்' என்று கூறிவிட்டு ஜானகி உள்ளே போனாள்.
இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் டெய்லி ஒரு பார்ட்டிக்குப் போறாங்க. ஆனா மன்னி இதுவரைக்கும் ஒரு உருப்படியன பாலிசிகூட சேத்தது கிடையாது. எல்லாம் அண்ணன்தான் அலையா அலைஞ்சி பாலிசி சேக்கறார். மகாராணியம்மா அதை வேட்டு விடறாங்ககாதைக் கடித்தாள் உஷா.
நான் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளாமல் பேசாமல் இருந்தேன்.
ஜானுவப் பாத்தா வீட்ல இருக்கறவ மாதிரியா இருக்கு? என்னமோ நடிக்கப்போறது மாதிரியில்ல அலங்காரமெல்லாம் தூள்பரக்குது? இப்படியே செலவு பண்ணிக்கிட்டிருந்தா குடும்பம் உருப்பட்ட மாதிரிதான்!’ - நான் என் கணவரிடம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன்.
நீயேன் தேவயில்லாம புலம்பற. அவங்க என்ன பொண்ணா பெத்து வச்சிருக்காங்க, சேத்து வெக்கணுமேன்னு கவலப்பட? ரெண்டும் பையனா இல்ல அமைஞ்சிடுச்சி. பசங்க படிச்சு வேலைக்குப் போயிட்டா காசுவந்து கொட்டப்போகுது’.
இருந்தாலும் இது ரொம்ப அதிகங்க!
பாரதிதாசன் எழுதிய இருண்டவீடு என்னும் காப்பியத்தின் கதாநாயகி என் மனத்தில் நிதர்சனமாய்த் தெரிந்தாள்.
கால ஓட்டத்தில் அவளைப் பற்றிய எண்ணங்கள் கரைந்துபோயின.
பல வருடங்களுக்குப் பிறகு நேற்று திடீரென்று ஜானுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மாலையில் வீட்டிற்கு வரப்போவதாகச் சொன்னாள்.
அன்று பார்த்ததற்கும் இன்று பார்ப்பதற்கும் அவள் நடை, உடை, பாவனையில் எந்த வேறுபாடும் தெரியவில்லை. இந்நேரம் அவளுடைய பையன்கள் படித்து டாக்டராகவோ, இன்ஜினியராகவோ இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் விசாரித்தேன்.
தயங்கித் தயங்கிச் சொன்னாள். 'எங்க . . . ? அவங்களுக்குப் படிப்பே ஏறலை. என்ஜினியரிங்கும் எம்.பி.பி.எஸ்.ஸ§ம் மெரிட்ல கெடைக்கல’.
இப்பத்தான் மூலைக்கு மூலை ரெண்டும் கூவிக்கூவி விக்கறாங்களே?’
செல்ஃப் பைனான்ஸ்ல காசுகுடுத்தெல்லாம் சேக்க முடியாதுன்னு அவங்க அப்பா சொல்லிட்டாரு’.
நீங்க என்ன பத்துப் புள்ளயா பெத்துவச்சிருக்கிங்க, அல்லது பொண்ணா பெத்துவச்சிருக்கிங்களா? நீங்க சேத்து வச்சிருக்கறதெல்லாம் பிற்காலத்துல அவங்களுக்குதானே? அவங்க படிக்கறதுக்காகச் செலவுசெய்யாம வேறு எதுக்குச் செலவுசெய்யப் போறாராம்?’
லட்சக்கணக்குல யாரு கடன் தருவா?’
ஏன் கடன் வாங்கணும்? வீடுவாசல் இல்லையா? நகையில்லையா? இத்தன வருஷமா அவர் சம்பாதிச்சது எங்க? வீட்டு வாடகை வருது. எல்.ஐ.ஸி. பாலிசியில பணம் வருது. அப்பறம் ஏன் அவரு பஞ்சப்பாட்டு பாடறார்?’
இப்ப எதுவும் இல்ல’.
என்ன இல்ல?’
வீட்ட வித்துட்டோம்!
கேட்டதும் எனக்குத் திக்' என்றது.
என்னது வீட்ட வித்துட்டிங்களா? சென்னையில சென்டர் ப்லேஸ் ஆச்சே. அதப்போயா வித்துட்டீங்க? நெறைய வாடகவேற வந்துட்டிருந்ததே?’
வீட்டு பேர்ல ஹவுஸிங் லோன் இருந்தது. ரொம்ப வருஷமா டியூ கட்டாம இருந்தது. அதனால வீடு ஏலத்துக்கு வந்துடிச்சி’.
சுத்த சைவம் என்பதால் கறி, மீன் என்று உணவு விஷயத்திலும் செலவாகிவிடப் போவதில்லை. அப்படி யென்றால் அவள் எவ்வளவு பொறுப்பற்றவளாக நடந்து கொண்டிருக்க வேண்டும்? ஒரு குடும்பத்தின் தலைவி இப்படியா தான்தோன்றித்தனமாகச் செலவுசெய்வாள். தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்ற திருக்குறள் ஞாபகத்திற்கு வந்தது. இவளோ அனைத்தையும் அழித்து விட்டல்லவா மறுவேலை பார்த்திருக்கிறாள்?
அப்படின்னா பசங்க என்னதான் பண்றாங்க?’
பெரியவன் எலக்ட்ரானிக் டிப்ளமா முடிச்சிட்டு ஒரு கம்பெனில அசிஸ்டெண்டா இருக்கான்’.
எவ்ள சேலரி?’
ரெண்டாயிரம் வருது. ஆனா அவன் டூவீலர்க்கு பெட்ரோல் போடவே சரியாயிடுது’.
சின்னவன் என்ன பண்றான்?’
அவனத்தான் டிகிரிக்குப் படிக்கவெச்சேன். நாலஞ்சு பேப்பர்ஸ் அரியர்ஸ் இருக்கு. பரீட்சைக்குப் பீஸ் கட்டணும்.  அதுதான் உங்களக் கேக்கலாம்னு வந்தேன். ஒரு ரெண்டாயிரம் ரூபா கடன் தந்திங்கன்னா அவனுக்குப் பரீட்சை பீஸ் கட்டிடுவேன்’.
என் பார்வை அவள் காதுகளில், கழுத்தில், கைகளில் நின்றுநின்று பயணித்தது.
அந்தப் பார்வையை அவள் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
எல்லாம் கவரிங்தான். என்னோட நகையெல்லாம் வித்தாச்சி’.
நான் வாயைத்திறந்து பேசமுடியாத நிலைக்குப் போய்விட்டேன்.
ஒருத்திய நம்பி சூரிட்டி போட்டேன். அவ லோன் வாங்கிட்டுக் கட்டாம விட்டுட்டா. என் நகைகள வித்துக் கட்டவேண்டியதாப் போச்சி. வேற வழி தெரியல’.
ஒருத்தி அடுக்கடுக்காய் எத்தனைத் தவறுகளைச் செய்வாள்? நினைக்கும்போதே அவள்மீது எனக்கு அருவருப்பாய் வந்தது?
பரீட்சை பீஸ் ரெண்டு நாள்ல கட்டியாகணும். இல்லன்னா அடுத்த வருஷம்தான் எழுதலாம். நான் உங்க பணத்தச் சீக்கிரத்துல திருப்பிக்கொடுத்திடறேன்.
இருபதாண்டுகளுக்கு முன்னால் எல்.கே.ஜி. படிக்கும் குழந்தைக்கு இருபதாயிரத்திற்குத் தேவையே இல்லாமல் புத்தகங்களை வாங்கி அடுக்கியவள், இப்பொழுது அவன் படிப்பிற்குச் செலவுசெய்ய வேண்டிய முக்கியமான நேரத்தில் இரண்டாயிரம் ரூபாய்கூட இல்லாமல் அவதிப்படுவதைப் பார்த்துக் கை கொடுப்பதா?
கை விரிப்பதா?
கைகொட்டிச் சிரிப்பதா?
கழுத்தைப்பிடித்துத் தள்ளுவதா?
நீங்களே சொல்லுங்கள்!
அவ்வை நிர்மலா, ஆசைமுகம் மறந்து போச்சே (சிறுகதைத் தொகுப்பிலிருந்து) பக். 34-51


No comments:

Post a Comment