‘விஜி, ஒனக்கெல்லாம்
சொன்னாப் புரியாது, அதெல்லாம் அனுபவிச்சிருந்தாதான் புரியும். அந்தக் காலத்துல ஜெராக்ஸெல்லாம்
ஏது? பரிட்சைக்கு
இருபது நாள்தான் இருக்கு. கடைசி பத்து நாள்ல பிரண்ட்ஸோட சேந்து படிச்சிக்கலாம்னு தெனாவட்டா
இருந்துட்டேன். எனக்குத் திடீர்னு அம்ம போட்டுடுச்சி, எவனும் என்னப்
பாக்கவரக்கூட பயப்படுறான். அவனுக்கும் அம்ம வந்துட்டா என்ன பண்றதுன்னு பயம். என் வீட்டுப்பக்கம்
கூட எவனும் தலவெச்சுப் படுக்கல. என்ன பண்ணுவேன்? ரெண்டு பேப்பருக்குச்
சுத்தமா எந்தப் பொஸ்தகமும் கெடயாது. ஒரு வருஷ நோட்ஸ். அப்பத்தான் வேதாவும் ரத்னாவும்
மாஞ்சி மாஞ்சி ரெண்டு கொயர் நோட்டு முழுக்க நோட்ஸ் எழுதிக் கொடுத்தாங்க தெரியுமா?
அதையெல்லாம்
நான் மறந்துட முடியுமா?’ - அவன் தரப்பு வாதத்தை முன்வைத்தான் புகழேந்தி.
‘அதையெல்லாம் மறந்துடுங்கன்னு
நான் எப்ப சொன்னேன்? தாராளமா நெனச்சுக்கிட்டே இருங்களேன்!’
‘நெனச்சுக்கிட்டே
இருந்தா ஆச்சா? நேர்ல போயி ஒரு தாங்க்ஸ் சொல்ல வேணாமா?’
‘ஏன் அப்பவே சொல்லலையா?
அதுக்கு
இவ்ளவு காலமா யோசிச்சீங்களா?’ கிண்டல் செய்தாள் அவன் மனைவி விஜயலட்சுமி.
‘அடடா விஜி! சொன்னா
புரிஞ்சுக்க மாட்டியா? பழைய நண்பர்களப் பாக்கறதுல என்ன தப்பு இருக்கு? அதுவும்
என்கூட நீயும் வரப் போற. நமக்கும் ஒரு கொழந்த இருக்கு, அவளுக்கும் கொழந்தைங்க
இருக்கு. இப்பப் போயி நீ சந்தேகப்படறது அபத்தமா இல்லியா?’
‘ஆமாமாம்! உங்களுக்கு
இப்ப சொன்னாப் புரியாது. பொண்டாட்டி சொன்னா எல்லாம் கசப்பாத்தான் இருக்கும். ஒங்களுக்கென்ன
. . . ? வேதாவப் போயி பாக்கணும் அவ்வளவுதானே! தாராளமாப் போலாம். எனக்கு
ஒன்னும் ஆட்சேபண இல்ல’.
புகழேந்தியின்
அலுவலகத்தில் புதிதாகப் பணிக்குச் சேர்ந்த சண்முக சுந்தரத்திற்கு அம்பத்தூரில் கல்யாணம்.
கல்யாண மண்டபத்திலிருந்து இரண்டு நிறுத்தங்கள் தள்ளிதான் வேதா குடியிருக்கிறாள்.
இரண்டு வாரங்களுக்கு
முன்னால்தான் தன்னோடு இளங்கலை படித்த கதிரேசனை எதேச்சையாகக் கோயம்பேடு பேருந்து நிலையத்தில்
சந்தித்தான் புகழேந்தி. கதிரேசனின் சொந்த ஊர்
திருச்சிப்பக்கம். ஊருக்குப் போவதற்காகக் காத்திருந்தான்.
என்ன ஆச்சரியம். அவனும் இதே சென்னையில்தான் பத்து வருடமாக இருக்கிறானாம். அதைவிட ஆச்சரியம்
வேதாவும் இதே சிங்காரச் சென்னையில்தான் இருக்கிறாளாம்.
புகழேந்தியும்
கதிரேசனும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஒரே விடுதியில் இருந்தவர்கள். பார்த்து
எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? காலந்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது?
கதிரேசன் வேதாவைப்
பற்றிய பேச்சை எடுத்ததும் புகழேந்திக்குக் கிரிக்கெட்டில் இந்தியா உலகக்கோப்பையை வென்றுவிட்ட
மகிழ்ச்சி ஏற்பட்டது. புகழேந்தி செல்ல வேண்டிய பேருந்து வந்தும்கூட அதனை விட்டுவிட்டுப்
பேச்சைத் தொடர்ந்தான்.
‘அப்படின்னா வேதாவும்
சென்னைலதான் இருக்காளா?’
‘வேதாவும் நானும்
ஒரே ஸ்கூல்லதான் வேல செஞ்சோம்பா. என் ஒய்ப் சைதாப்பேட்டல வேல செய்யறா. அதனால நான் ரெண்டு
வருஷத்துக்கு முன்னாடி டிரான்ஸ்பர் வாங்கிட்டுச் சைதாப்பேட்ட பக்கம் குடி வந்திட்டேன்.
வேதா இன்னும் அதே ஸ்கூல்லதான் வேல செய்யறாப்பா.’
‘அதெப்படி அவ்ளோ
உறுதியாச் சொல்ற கதிரு?’ என்று கொக்கிபோட்டான் புகழேந்தி.
‘ஏன்னா அவ அப்பவே
அங்க ஒரு ஃபிளாட் வாங்கி செட்டில் ஆயிட்டாப்பா, அவ புருஷனும் அம்பத்தூர்
தொழில்பேட்டலதான் வேல பண்றான்’.
‘அவ போன் நம்பர்
இருக்கா ஒங்கிட்ட?’
அவளைப் பார்க்கப்
புகழேந்தி மிகவும் விரும்புவான் என்பதைக் கதிரேசன் நன்றாகவே புரிந்துகொண்டான்.
‘போன் நம்பர்லாம்
எங்கிட்ட ஏதுப்பா? ஆனா நீ அங்க போனா ஈசியா கண்டுபிடிச்சிடலாம். பஸ் ஸ்டாப்புல எறங்கி
லெப்ட்ல கொஞ்சதூரம் போனா காவேரி அபார்ட்மென்ட்ஸ் வரும். அதுல எட்டாம் நம்பர் வீடுப்பா’.
எட்டாம் நம்பர்
தன் ராசி நம்பர் அல்லவா? -நினைத்துக்கொண்டான் புகழேந்தி. ஏதோ எல்லாம்
அவனுக்காகவே அமைந்ததுபோல் இருந்தது.
‘வேதாவோட புருஷன்
எப்டி?’
‘அவரு சொக்கத் தங்கம்பா,
நல்லா
சகஜமாப் பேசுவாரு. பால்காச்சிக் குடிபோன அன்னிக்குக் ஸ்கூல்ல எல்லாரும் அவங்க வீட்டுக்குப்
போனோம். அதுக்கப்பறம் கூட ரெண்டு மூனுவாட்டி நான் அவங்க வீட்டுக்குப் போயிருக்கேன்.’
வேதாவுக்கு நல்ல புருஷன் அமைந்துவிட்டதில்
புகழேந்திக்குத் திருப்தி.
பின்னே,
அவள்
மீது அக்கறை இருக்காதா? அவள் அவனைச் சுத்திச்சுத்தி வந்தவளாயிற்றே.
அவள் மட்டுமா? ரத்னாவும்தான்!
ரத்னா நம்பர் ஒன்!
வேதா நம்பர் டூ! முதலில் புகழேந்திக்கு ரூட் போட்டவள் ரத்னாதான். ரத்னாவும் வேதாவும்
ஒரே ஊர்க்காரிகள். இரண்டுபேர் வீடுகளுக்கும் இரண்டு முன்று தெருக்கள்தான் இடைவெளி.
ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள்.
ரத்னாவும் வேதாவும்
கல்லூரிக்கு ஒன்றாக வந்து ஒன்றாகச் சென்றார்கள். கல்லூரி சேர்ந்த புதிதில் அவர்கள்
வகுப்புத் தோழன் புகழேந்தியின் குணம் ரத்னாவுக்குப் பிடித்துவிட்டது. வீட்டிலிருந்து
கல்லூரி சேரும் வரையும், பின்னர்க் கல்லூரியிலிருந்து புறப்பட்டு
வீடுசேரும்வரையும் ரத்னா புகழேந்தியின் புகழையே பாடிக்கொண்டிருந்தாள். வேதா முதலில்
எதையும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் புகழேந்தியிடம் அடிக்கடி ரத்னா ஊடல் கொள்வாள். அந்த
ஊடலைத் தீர்க்க வேதாதான் முன்நிற்பாள். கடைசியில் அவள் மனத்திலும் ஏதோ ஒன்று பற்றிக்கொண்டது.
அதன் பின் ரத்னா போடும் பந்துகளைப் பிடித்து ரிடர்ன் அனுப்பினாள். அப்போதிருந்து சக்களத்திச்
சண்டையும் ஆரம்பித்து விட்டது.
புகழேந்தி விடுதியில்
தங்கிப் படித்தான்.
வேதா சுத்த சைவம்.
அவள் 'அந்த'
ஜாதியா
என்றா கேட்கிறீர்கள். சாப்பாட்டைப் பற்றிச் சொன்னால் ஜாதியைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்.
ஜாதி என்பது பரம்பரை சம்பந்தப்பட்ட விஷயம்; சாப்பாடு என்பது நாக்கு சம்பந்தப்பட்ட விஷயம்.
இரண்டையும் நாம் ஏன் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டும்?
ரத்னா சுத்தமான
அசைவம்.
புகழேந்தி இரண்டும்
உண்பவன். அவனுக்கு எதுவானாலும் கவலையில்லை. நாக்குக்கு ருசியாக இருந்தால்போதும். இதில்
சைவமென்ன? அசைவமென்ன?
மதிய உணவின்போது
ரத்னா தன் சாப்பாட்டில் பாதியை டிபன் பாக்ஸின் மூடியில் வைத்துப் புகழேந்தியிடம் நீட்டுவாள்.
‘போயும் போயும்
நாத்தம் பிடிச்ச மீனும் முட்டையும்தான் ஒனக்குப் பிடிக்குமாக்கும்? இந்தா
என் தயிர் சாதம் சாப்ட்டுப் பாரு’ என்று தன் டிபன் பாக்ஸின் மூடியில் தயிர்
சாதமும் மாவடு ஊறுகாயும் வைத்துப் போட்டி போட்டுக்கொண்டு நீட்டுவாள் வேதா.
மீன், முட்டை,
கறியின்
நாற்றம் பிடிக்கவில்லை என்றாலும் அவற்றை உண்ணும் புகழேந்தியை வேதாவிற்கு முழுசாகப்
பிடித்திருந்தது.
இப்படிப்பட்ட உணவைக்
கல்லூரிக்கு எடுத்து வருவதற்காக ரத்னாவை அவள் உள்ளூறத் திட்டிக் கொண்டிருப்பாள்.
அவன் இரண்டுவகை
உணவையும் ருசி பார்ப்பான். கடைசியில் வேதாவின் டிபன் பாக்ஸின் மூடியில் 'கவுச்சி'
நாற்றம்
வீசும்.
ரத்னாவுக்கும்
வேதாவுக்கும் இருந்த ஆழமான நட்பு பொறாமைத் தீயால் பொசுங்கிக் கொண்டிருந்தது.
இந்தத் தீயில்
பொசுங்காமல் காப்பாற்றப்பட்டது புகழேந்தியின் கற்பு. அவன் கற்பு ரத்னாவால் பறிபோகாமல்
வேதாவும் வேதாவால் பறிபோகாமல் ரத்னாவும் நன்றாகவே காவல் காத்தார்கள். புகழேந்தியும்
கடைசிவரையில் கற்போடு கல்லூரிப் படிப்பை உருப்படியாக முடித்து ஊரைப் பார்த்து நடையைக்
கட்டினான். தனக்கு அவன் கிடைக்காவிட்டாலும் தன் நண்பிக்கும் அவன் கிடைக்காமல் போன திருப்தியில்
இருவரும் தத்தம் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைக் கட்டிக்கொண்டு இயல்பு வாழ்க்கையில்
தங்களை ஒட்டிக் கொண்டார்கள்.
அம்பத்தூரின் கல்யாண
மண்டபத்தில் புகழேந்தியும் விஜியும் கல்யாணத்தில் தங்கள் வருகையைப் பதிவுசெய்ய மொய்ப்
பணத்தை மணமகனிடம் தந்தாகிவிட்டது.
‘கட்டாயம் சாப்ட்டுட்டுதான்
போவணும்’ - மணமகன் உபசரித்தான்.
இன்றைய திருமணங்கள்
எல்லாம் உணவுவிடுதிகள் போன்று ஆகிவிட்டன. உணவகங்களில் மதிய 'மீல்ஸ்'
சாப்பிடுபவர்கள்
காசுகொடுத்து டோக்கன் வாங்கிக் கொண்டு உட்கார்ந்தால்
சர்வர் அதை வாங்கிக்கொண்டு சாப்பாடு பரிமாறுவான். அதேபோல் இப்போதெல்லாம் நூறு ரூபாய்
மொய் எழுதிவிட்டு, 'சரி நாலு பேர் வந்திருக்கோம், ஆளுக்கு இருபத்தஞ்சி
ரூபா டிபன் செலவு, கணக்கு ஓ.கே.’ என்று கணக்குப் பார்க்கிறோம். கொஞ்சம் பணக்காரர்
வீட்டுக் கல்யாணம் என்றால் உணவு வகைகள் அதிகமாகவே இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும்.
ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். மொய்ப் பணத்திற்குமேல் இலாபமாகவும்
இருக்கும். 'டபுள் ஓகே' என்கிற ரீதியில் திருமணத்திற்கு வந்துவிட்டுப்
போகிறார்களே அன்றி அங்கே முழு அன்போடு ஆரஅமர உட்கார்ந்து திருமண வைபவத்தைக் கண்டு மகிழ்பவர்கள்
எத்தனைப் பேர்? கல்யாணத்திற்கு வருபவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. ஒரு சில கல்யாணங்களில்
காலை ஆறு - ஏழரை முகூர்த்தம் என்றால் இரண்டு மூன்று கல்யாணங்களுக்கு அட்டென்டன்ஸ் கொடுத்துவிட்டுப்
பத்து மணிக்குப் போய்ப் பாருங்கள். மணமக்கள் கல்யாண மண்டபத்தைக் காலிசெய்துவிட்டுப்
போயிருப்பார்கள். அந்த அளவிற்கு இப்போது இயந்திர மயமாகிவிட்டது உலகம்.
புகழேந்தியும்
தன் வரிசையான நூறு ரூபாய்க்கு இரண்டு பேர் சிற்றுண்டிக் கணக்கை நேர்செய்ய நன்றாக வயிறு
நிறையுமாறு உண்டான். இருந்தாலும் கணக்கு நேராகவில்லை. ஒரு தாம்பூலப் பை பத்து ரூபாய்
பெறும் என்று மனம் கணக்குப்போட்டது. ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொண்டார்கள். இருபது ரூபாய்
கணக்கில் சேர்ந்தது.
‘அடுத்தது என்ன?'
என்ற
பாவனையில் புகழேந்தியை ஏறிட்டாள் விஜி. 'லீவ் நாள்தானே. பக்கத்துலதானே இருக்கு.
போய்ப் பாத்துட்டுப் போயிடலாமே’ என்றான் புகழேந்தி. அதில் கெஞ்சலும் கொஞ்சலும்
இழையோடின.
அவன் எடுத்த முடிவில்
பிடிவாதமாக இருக்கிறான் என்பதைக் கண்டுகொண்டாள் விஜி. வேறு வழியில்லை. போய்த்தான் பார்ப்போமே,
அவனுடைய
முன்னாள் காதலி எப்படி இருக்கிறாள் என்று!
காவேரி அபார்ட்மென்ட்ஸ்
- கன கச்சிதமான அடுக்குமாடிக் குடியிருப்பு. மூன்றாம் தளம் ஏறினார்கள். எண் எட்டு.
காலிங்பெல்லில் புகழேந்தியின் ஆள்காட்டி விரல் அழுத்தம் கொடுத்தது. கதவைத் திறந்து
எட்டிப் பார்த்தது பத்துவயதில் ஒரு குண்டு முகம்.
‘அம்மா இருக்காங்களா?’
- புகழேந்திதான்
விசாரித்தான்.
அதற்குள் கைலியும்
பனியனுமாய் ஒருவர் எட்டிப் பார்த்தார். வேதாவின் கணவனாக இருக்க வேண்டும்.
‘இங்க வேதான்னு
. .
.’
‘ஆமா. இங்கதான்
இருக்காங்க . . . நீங்க . . . ?’ ஒருவேளை அவள் பள்ளியில் படிக்கும் பிள்ளையின்
பெற்றோராக இருக்குமோ? இவர்களைப் பார்த்தால் ஏதோ விசேஷத்திற்கு வந்தவர்கள் போலல்லவா இருக்கிறார்கள்!
அடுக்கடுக்காய் எண்ணங்கள் விரிந்தன.
அதற்குள் வேதாவே
வாசலுக்கு வந்துவிட்டாள்.
புகழேந்தி அன்று
பார்த்ததுபோலவே இருந்தான். சற்றே சதை பிடித்திருந்ததைத் தவிர வேறு மாற்றம் இல்லை.
'புகழ்தானே . .
. ?’
தன்னை எந்தச் சிரமமுமில்லாமல்
வேதா கண்டு பிடித்துவிட்டதில் புகழேந்திக்குப் பூரண திருப்தி. வேதாவின் கணவன் ஸ்ரீதர்
நன்றாகவே பழகினான்.
பத்து வயது குண்டு
முகத்திற்குச் சொந்தம் கொண்டாடிய அனு, சுட்டி டிவியில் மூழ்கியிருந்தாள்.
என்றாலும் பிரேக் விடும்போதெல்லாம் புது அங்கிளும் அப்பாவும் பேசும் உரையாடலைக் கவனிக்கத்
தவறவில்லை. புது அங்கிள் அவளுக்காக வாங்கிவந்திருந்த பார்பி பொம்மை அவளை வெகுவாகக்
கவர்ந்தது. அங்கிளுடைய பேச்சுந்தான்!
தன் பழைய தோழி
வேதாவும் அவள் கணவன் ஸ்ரீதரும் செய்த உபசாரத்தில் மகிழ்ந்து தங்கள் வீட்டு விருந்திற்கு
அடுத்த ஞாயிறு அவர்கள் கட்டாயம் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்ததும் முழு மன நிறைவோடு
திரும்பினான் புகழேந்தி.
‘பாத்தியா,
என்னமோ
பெருசா கற்பன பண்ணினியே! வேதாவும் அவ புருஷனும் எவ்ளோ அருமையாப் பழகறாங்க. ஒனக்கு எப்பவுமே
ஓவர் கற்பனதான்!’ என்று சொல்லிவிட்டு
அவன் பழைய நினைவுகளின் கற்பனைகளில் அமிழ்ந்து அமிழ்ந்து எழுந்தான்.
தன் மகள் வீட்டிற்குச்
சென்ற ஸ்ரீதரின் அம்மா ஞாயிற்றுக்கிழமை இரவே திரும்பிவிட்டாள். மகள் வீட்டில் ஒரு வாரம்,
பத்துநாள்
என்று தங்க முடிகிறதா? வேதாவும் ஸ்ரீதரும் வேலைக்குச் செல்கிறார்கள். வீட்டை யார் பார்த்துக்
கொள்வது? மாலையில் பள்ளிவிட்டு முன்னதாக வரும் அனுவை யார் பார்த்துக்கொள்வது?
எல்லாப்
பொறுப்புகளும் அம்புஜத்தின் தலையில்தான் விழுகின்றன. பள்ளியிலேயே ஸ்பெஷல் கிளாஸ் முடித்துவிட்டு
ஆறு மணிக்குதான் வேதா வருவாள்.
அம்புஜத்தின் சரணாகதி
எப்பொழுதும் தொலைக் காட்சிதான். பாட்டியைக் கண்டாலே இந்த விஷயத்தில் அனுவுக்குக் கொஞ்சமும்
பிடிப்பதில்லை. பாட்டி வீட்டில் இருந்தால் சுட்டி டிவி, போகோ என்று எதையும்
அனு சுதந்திரமாகப் பார்க்கமுடியாது. பாட்டிக்குப் பிடித்த தெல்லாம் சினிமாவும் சீரியலும்தான்.
தான் சினிமா பார்க்க வேண்டும் என்பதற்காகவே அனு பள்ளிவிட்டு வந்ததும் ‘படி படி’ என்று படுத்துகிறார்கள்.
திங்கட்கிழமை மாலை
அனு வீடு திரும்பியபோது தொலைக்காட்சியில் திரைப்படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. எப்பொழுதும்போல்,
‘கைய
கால கழுவிட்டு டப்பால முருக்கு இருக்கு, சாப்ட்டுட்டுப் படி’ என்று
புராணம் பாடினாள் பாட்டி.
‘போங்க பாட்டி!’,
என்று
பாட்டியின் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டாள் அனு.
படம் ஓடிக்கொண்டிருந்தது.
கதாநாயகியும் கதாநாயகனும் நண்பர்களாகப் பழகித் தங்களுக்குள் காதல் முகிழ்த்ததை அறியாமல்
கிடக்கிறார்கள். கதாநாயகிக்கு வேறொருவனுடன் மணம்பேசி நிச்சயம் செய்ததும்தான் நண்பர்களாகப்
பழகிய அவர்களுக்குள் மறைந்துகிடந்த காதலையே கண்டுபிடிக்கிறார்கள். மனப் போராட்டம்.
கடைசியில் நிச்சயம் செய்தவனை அம்போ என்று விட்டுவிட்டு காதலர் இருவரும் இணைகிறார்கள்.
‘அம்மாவும் அங்கிளும்
அவ்ளோ திக் பிரண்ட்ஸாமே? அப்பறம் ஏன் பாட்டி அவங்க ரெண்டுபேரும் கல்யாணம்
பண்ணிக்கல? நீங்கதான் கம்ப்பல் பண்ணிங்களா?’ அனு வெகுளியாய்க்
கேட்டாள்.
‘என்னடி உளறுறே,
எந்த
அங்கிள்?’
‘பாட்டி . . . ,
நேத்து
நம்ப வீட்டுக்கு ஒரு அங்கிள் வந்திருந்தாங்க. அம்மாவும் அந்த அங்கிளும் ரொம்ப திக்
பிரண்ட்ஸாம். இந்த சினிமாவுல ஹீரோவோட பேரண்ட்ஸ் கம்ப்பல் பண்ணினமாதிரி நீங்களும் கம்ப்பல்
பண்ணிங்களா? உங்களோட சப்போர்ட் கெடைக்காமதான் அம்மா அங்கிள கல்யாணம் பண்ணிக்க
முடியாம போயிடிச்சா? நீங்க மட்டும் அன்னிக்கு அம்மாவுக்குப் பர்மிஷன் கொடுத்திருந்தா
எனக்குச் சூப்பர் டாடி கெடச்சிருப்பாரு பாட்டி, நான் ரொம்ப மிஸ்
பண்ணிட்டேன்’ - அங்கலாய்த்துக் கொண்டாள் அனு.
வாசலில் செருப்பைக்
கழற்றி ஸ்டாண்டில் வைத்துக் கொண்டிருந்த வேதாவின் காதில் அனுவின் சொற்கள் தெள்ளத்தெளிவாக
விழுந்தன.
‘இதென்ன?
கிணறுவெட்ட
பூதம் புறப்படுகிறதே?’
வாசலில் திகைத்துநின்ற
வேதாவை மாமியாரின் தீட்சண்யமான பார்வை துளைத்தது.
‘அனு, இன்னும்
ஹோம் வொர்க் பண்ணலையா? மாடிக்குப்போ, என்ன பாட்டிய தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்க?’
அம்மாவின் விரட்டலில்
அனு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடியறைக்கு ஓடினாள்.
‘என்னடி இது?
அனு
என்ன சொல்றா? யாரது நேத்து வந்தது? ஏதோ காதல் கீதல்னு சொல்றா?’
‘அது ஒன்னும் இல்ல
மாமி! என்கூட காலேஜ்ல படிச்சவர் ஒருத்தர் நேத்து வந்திருந்தாரு. அவரப் பத்தித்தான்
அனு . . .’
‘காலேஜ்ல படிச்சவர்
காலேஜோட போனார். இப்ப எதுக்கு வந்தார்?’
‘இல்ல மாமி,
அவரு
இந்த ஊர்லதான் இருக்காராம். சும்மா பாத்துட்டுப்போலாம்னு வந்தாராம். அவ்வளவுதான்!’
பேனா எடுக்கலாம்
என்று கீழே ஓடிவந்த அனு அவளுடைய ஷெல்பைத் திறந்தாள். உள்ளே அங்கிள் வாங்கிக்கொடுத்திருந்த
விலையுயர்ந்த பொம்மை அவள் கவனத்தைக் கவர்ந்தது.
‘பாட்டி,
பாட்டி!
இதோ பார்! நேத்து வந்த அங்கிள் எனக்கு இந்தப் பொம்ம பிரசண்ட் பண்ணார். இது எவ்ளோ தெரியுமா
பாட்டி? ஆயிரத்து இருநூறு ரூபா! நான்கூட என் பர்த்டேக்கு டாடிகிட்ட இந்தப்
பொம்ம கேட்டேன். ஆனா டாடி வாங்கித்தரவே இல்ல. இப்பப் பாரு! அது எனக்குத் தானாவே கெடச்சுட்டது’.
‘அனு, படிக்கப்
போகாம என்ன வெளயாட்டு? ஓடு’ - அதட்டினாள் வேதா.
பொம்மையைப் பாட்டியின்
கையில் திணித்துவிட்டு ஓடினாள் அனு.
‘அந்த ஆளு ஏண்டி
இவ்ளோ காஸ்ட்லியான பொம்ம வாங்கித் தந்தான்?’ மாமியாரின் கேள்வியில்
ஏதோ உள்ளர்த்தம் தொனித்தது.
‘என்ன மாமி,
இதையெல்லாம்
பெரிசா கேட்டுக்கிட்டு? ஏதோ ரொம்ப நாள் கழிச்சு வறோமே, குழந்தைக்கு
ஏதாவது ஒரு கிப்ட் கொடுக்கணும்னு தோனி இருக்கும். இதுக்கெல்லாம் என்கிட்ட காரணம் கேட்டா?
அவர்
வந்தப்ப ஒங்க மகனும்தான் இருந்தாரு. சந்தேகமா இருந்தா அவரையே கேளுங்க.’
வேதா சற்றே தைரியமானவள்.
மாமியாருக்கு அஞ்சி நடுங்கும் சுபாவம் அவளுக்கில்லை. ஆனாலும் மாமியார் கேட்பதற்குச்
சரியான விளக்கம் அளிக்காமல் இருக்க முடியுமா? மாமியாரிடமிருந்து
தப்பிக்க ஒரே வழி சமையல் அறையில் தஞ்சம் புகுவதுதான்!
ஸ்ரீதர் களைப்போடு
வீடுவந்து ‘அப்பாடா’ என்று சோபாவில் உட்கார்ந்தான். ‘அம்மா
. . . ! செத்த அந்த ரிமோட்ட குடேன். நியூஸ் பாக்கலாம்’.
‘மொதல்ல நம்ம வீட்டு
நியூஸ் என்னாச்சின்னு சொல்லு. அப்பறமா ஒலகத்தப் பத்தி யோசிக்கலாம்’. ஓடிக்கொண்டிருந்த
தொலைக்காட்சியைப் பட்டென்று நிறுத்தினாள் அம்புஜம்.
‘என்னம்மா?
எதையும்
சுத்தி வளைக்காம நேரா சொல்லத் தெரியாதா? உன் மருமகளப் பத்தி ஏதாச்சும் கம்ப்ளெயின்ட்டா?
நீ
சாப்பிட்டியா? தூங்கினியா? -அப்படின்னு கேக்க மறந்துட்டாளா?’
‘என்னை மறந்துபோறது
கெடக்கட்டும். எவனோ ஒருத்தன் அவள மறக்க முடியாம வந்துட்டுப் போனானாமே, அத விசாரிச்சியா?’
அம்மாவின் திடீர்த்
தாக்குதலுக்குச் சில நொடிகள் அர்த்தம் புரியாமல் திணறினான் ஸ்ரீதர். பிறகுதான் புகழேந்தியின்
நேற்றைய வருகை ஞாபகத் திரையில் எட்டிப்பார்க்க மெதுவாய்ச் சுதாரித்தான்.
‘ஏம்மா இப்படி அசிங்கமா
பேசற? ரெண்டுபேரும்
ஒன்னாப் படிச்சவங்க, இப்ப வேதா எப்படி இருக்கான்னு பாத்துட்டுப்போக வந்தாங்க,
இதுல
என்ன தப்பு இருக்கு?’
‘ஒனக்கு எதுவும்
தப்பாத் தெரியாது, நீ வெளுத்த தெல்லாம் பாலுன்னு நம்பு’.
‘ஏம்மா இப்படிப்
பேசற? அவகூட
படிச்ச செண்பகம், ஸ்டெல்லா அவங்கல்லாம்கூடத்தான் நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போனாங்க!’
‘ஏண்டா,
ஒரு
பொம்மனாட்டியப் பாக்கறதுக்கு பொம்மனாட்டிங்க வர்றதும் ஆம்பளைங்க வர்றதும் ஒன்னா ஆயிடுமாடா?’
‘நீ ஏன் இப்படிப்
பத்தாம் பசலியா இருக்கே? பிரண்ட்ஸ்ல ஆம்பள, பொம்பள
வித்தியாசம் ஏதும்மா? என்கூட வேலசெய்யற லேடீஸ் வீட்டுக்கு நான் கூடத்தான் போறேன்’.
‘நீ என்ன வேலவெட்டி
இல்லாமச் சும்மாவா போயிட்டு வர்ற? ஆபீஸ் விஷயமா போறே! அதோட அதெல்லாம் கல்யாணத்துக்கு
அப்பறம் மனம் பக்குவப்பட்ட வயசுல வந்த பிரண்ட்ஷிப். ஆனா இவளப் பாக்க வந்தவன் வாலிப
வயசுல பழகியவன்! ரெண்டுக்கும் வித்யாசம் இல்லையாடா?’
‘ரெண்டுக்கும் அப்டி
என்ன பெரிய வித்யாசம் கண்டுட்டே?’
‘அது சரி,
இவளப்
பாக்க வந்த பொம்பள பிரண்ட்ஸ் மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு அம்பது ரூபாக்குப் பழம் வாங்கி
வந்திருப்பாங்களா? நீ கூடத்தான் ஒங் பிரண்டு வீட்டுக்குப் போனா நாப்பது அம்பது ரூபாயில
ஏதோ ஒன்னு வாங்கிட்டுப்போயி பேரு பண்றே. சிலபேரு வீட்டுக்கு அதுவும் வாங்கிட்டுப் போறதில்ல,
‘ஒங்க
கொழந்தைக்கு என்ன புடிக்கும்னு தெரியல’, ‘நீங்க என்ன சாப்பிடுவிங்கன்னு தெரியல’,
‘வர்ற
வழியில கடையே பாக்கல, அதனாலதான் ஒன்னும் வாங்கிட்டு வரல’, அப்படின்னு ஏதாவது
ஒரு காரணம் சொல்லி எத்தன முறை அசடு வழிஞ்சிருக்கே? ஆனா அவன் ஆயிரத்து
எரநூறு ரூபாக்கு அதுவும் ஒரு பொம்மயப்போயி மனசுவந்து வாங்கித் தந்தானே! அதுக்கு என்னடா
அர்த்தம்?'
‘அவர்கிட்ட நெறைய
காசு இருக்குன்னு அர்த்தம், வாங்கித்தர மனசு இருக்குன்னு அர்த்தம்’.
‘எனக்கு என்ன வேணா
பதில் சொல்லு, நான் கேட்டுக்கறேன். ஆனா உன் பொண்ணு கேக்கற கேள்விக்கு உன்னால பதில்சொல்ல
முடியுதான்னு பாப்போம்!’
‘அவளுக்கு நான்
பதில் சொல்லிக்கறேன். நீ ஒன்னும் அவ நெஞ்சுல நஞ்ச கலக்காம இருந்தா சரி!’
‘எனக்கெதுக்குடா
வம்பு, உன் ஆத்துக்காரி! உன் பொண்ணு! நான் செவனேன்னு இருக்கேன்’.
அத்துடன் அந்த
உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் தொலைக்காட்சியை 'ஆன்' செய்தான்
ஸ்ரீதர். தொலைக்காட்சித் திரை ஒளிர்ந்தது. அதே நேரம் அவன் நினைவுத்திரையும் உயிர்பெற்று
வேறொரு இருட்பிம்பத்தை உலவவிட்டது.
தன் கணவன் - மாமியார்
உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த வேதாவுக்கு மனம் முழுக்க நெருடல்.
‘அம்மா பசிக்குது!’
‘ஹோம் ஒர்க் எல்லாம்
முடிச்சுட்டேன் டேடி!’
வீட்டுப்பாடம்
முடித்துவிட்டதாக அனு ஒப்புதல் அளித்தால்தான் அவளைக் கீழே வர அனுமதிப்பான் ஸ்ரீதர்.
படிப்பு விஷயத்தில் அவன் கண்டிப்பானவன்.
சாப்பிடும்போது
அவர்கள் வீட்டில் தொலைக்காட்சி முற்றிலுமாக அணைக்கப்பட்டுவிடும். நிறைய பேருக்கு தொலைக்காட்சியைப்
பார்த்துக்கொண்டே சாப்பிடுவது பழக்கமாகிவிட்டது. சாம்பார், குழம்பில் பூச்சி
புழு விழுந்திருந்தால்கூடத் தெரியாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிடுவார்கள்.
சிலர் சாப்பிட்டு முடித்தும்கூட தொலைக் காட்சியிலிருந்து கண்களைப் பிடுங்கமுடியாமல்
மூழ்கிக் கிடப்பார்கள். எச்சில் கை கழுவப்படாமல் காய்ந்துகொண்டிருக்கும். சுமாராகச்
சமைப்பவர்களுக்கு ஒருவகையில் இது நல்லதுதான். சாப்பிடுபவர்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே
உணவில் உப்பு, காரம் சரியில்லாத குறையை கவனிக்காமல் விட்டுவிடும் வாய்ப்பும் இருக்கிறது.
‘வேதா கொஞ்சம் ரசம்
விடு!’ - ஸ்ரீதர் வேதாவின்
கவனத்தைத் திருப்பினான்.
‘மம்மி! அந்த அங்கிள்
உங்கள எப்படிக் கூப்பிடுவாங்க?’ - அனு தன்
அம்மாவைக் கிண்டினாள்.
‘இவள் ஏன் சம்பந்தா
சம்பந்தம் இல்லாமல் இப்படிக் கேள்விகளைக் கேட்கிறாள்?’ - தவித்தாள் வேதா.
குழந்தைகளுக்கு
அபார ஞாபக சக்தியாயிற்றே. ஒருமுறை வேதாவின் தோழி செண்பகம் வந்தபோது ‘நாங்கல்லாம்
உங்க அம்மாவ வேதாந்தி வேதாந்தின்னு கூப்டு கிண்டல் பண்வோம்' என்று கூறியிருக்கிறாள்.
குழந்தைகளுக்கு
எப்பொழுது எப்படிப்பட்ட சந்தேகம் வரும் என்று யாரால் நிர்ணயிக்க முடியும்?
அம்புஜம் தன் மகனை எரித்துவிடுவதுபோல் பார்த்தாள்.
‘அனு . . . ! சாப்பிடும்போது
பேசக்கூடாது. பேசினா பொற ஏறும். சயின்ஸ்ல படிச்சி இருக்கல்ல. சாப்ட்டுட்டு அப்பறமா
பேசலாம்’. அந்த அளவில் அனுவின் வாயை அடைத்தான் ஸ்ரீதர்.
அம்மாதான் புரியாமல்
குடைகிறாள் என்றால் இந்த அனுவேறு அவ்வப்போது எடுத்துக் கொடுக்கிறாளே?
‘அனு போய்ப்படு.
நாழியாறது. நாளைக்கு டெஸ்ட் இருக்குன்னு சொன்னியே. காலைல எழுந்து படிக்கணும்’
-விரட்டினான்
ஸ்ரீதர்.
அனு படுக்கப்போகும்
முன் பொம்மையையும் எடுத்துக்கொண்டாள். படுத்துக்கொண்டு பொம்மையைத் தன் பக்கத்தில் படுக்க
வைத்தாள்.
‘செல்லம் தூங்குடா
. . . தூங்கு. நீயும் காலைல சீக்கிரமா என்கூட எழுந்திருக்கணும். ஓ.கே!’ என்று பொம்மையிடம் கொஞ்சிக்கொண்டிருந்தாள்.
பொம்மை இன்னும்
தூங்கவில்லை. அனுவிற்கும் தூக்கம் வரவில்லை. நாளைக்குத் தன் நண்பர்களுக்கு இந்தப் பொம்மையைக்
கொண்டுபோய்க் காட்டினால் என்ன? அம்மா அப்பா பர்மிஷன் தருவார்களா?
ஸ்ரீதரும் அனுவின் பக்கத்தில் படுத்துக்
கொண்டான். தூக்கம் வரும்வரை காலச்சுவடு, தீராநதி போன்று ஏதாவதொரு இதழைப் புரட்டிக்கொண்டிருப்பது
அவன் பழக்கம்.
‘செல்லம் நீ தூங்கு.
நாளைக்கு நீயும் என்கூட ஸ்கூலுக்கு வர்றே தெரியுதா? நீ சமத்தா இருந்தா
நான் ஒனக்கு ஒரு முத்தம் தருவேன். இல்ல இல்ல! பத்து தருவேன். ஓ கே யா?’
அனு பொம்மைக்கு
முத்தம் தருவதைத் தன்னை மறந்து இரசித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.
‘டாடி, அந்தச்
சினிமால பிரண்ட்ஸ் ரெண்டுபேரும் கிஸ் பண்ணிட்டாங்க. அப்ப அந்த அங்கிள் மம்மிய கிஸ்
பண்ணாங்களா?’ பொம்மையைத் தட்டிக்கொடுத்துக் கொண்டே கேட்டாள் அனு.
காய்ந்த துணிகளை
மடித்து வைத்துக் கொண்டிருந்த வேதாவை அனுவின் கேள்வி திடுக்கிட வைத்தது. அவளை ஸ்ரீதரும்
ஏறிட்டு நோக்கினான். அவன் பார்வையை அவளால் சந்திக்க முடியவில்லை.
‘என்ன இது?
சதா
அனு அவனைப் பற்றியே பிதற்றிக்கொண்டிருக்கிறாள்!’
விலையுயர்ந்த பொம்மை
வாங்கிக்கொடுத்த அந்த அங்கிளை அவள் எப்படி மறப்பாள்? அதுவும் அடுத்த
வாரமும் அவன் வீட்டிற்குச் செல்லும்போது நிறைய கிப்ட் தருவதாக வாக்கு அளித்திருக்கிறான்.
‘அனு, பேசாம
தூங்கப்போறியா? இல்லையா?’ ‘வேதா.
. . ! இந்தப் பொம்மயத் தூக்கி உள்ள வை’
என்று
கூறிக்கொண்டே அந்தப் பொம்மையைப் பிடுங்கி வேதாவை நோக்கி எறிந்தான் ஸ்ரீதர்.
அந்த எறிதலின்
வேகத்தில் அவன் கோபம் நன்றாகவே புலப்பட்டது. அவன் முகத்தில் எரிச்சலின் நெடி வெளிப்பட்டது.
தன்னிடமிருந்து
பொம்மை பிடுங்கப்பட்டதால் வருத்தத்தோடு முகத்தைத் தலையணையில் புதைத்துக் கொண்டு படுத்தாள்
அனு. ஸ்ரீதரும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டுக் கண்களை மூடிக்கொண்டான். துணிகளை மடித்து
வைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு அனுவிற்கு வலப்பக்கமாகப் படுத்தாள் வேதா.
கண்களை மூடினாலும்
தூக்கம் வரவில்லை.
‘இதோ பாருங்க .
. . நாங்க ஜஸ்ட் பிரண்ட்ஸ்தான்! ஹலோ, எப்படி இருக்கீங்க? என்ற லெவல்லதான்
பேசிக்குவோம். அதுக்குமேல எங்களுக்குள்ள எதுவும் இல்ல’ என்று பட்டென்று
அவளால் சொல்லமுடியவில்லையே!
ஸ்ரீதரின் நற்பண்புகளில்
மயங்கிப்போய் புகழேந்தியும் வேதாவின் குணநலன்களைப் பற்றியும் தங்கள் நட்பைப் பற்றியும்
இப்படியா விலாவரியாகக் கொட்டித் தீர்ப்பான்?
‘நீங்க ரொம்ப திக்கா
இல்லன்னா உன்னப் பத்தி அவ்வளவு மேட்டர் அவனுக்கெப்படி தெரியும்?’ என்று
தன் கணவன் கேட்டால்?
‘சும்மா பிரண்ட்ஸ்
அப்படின்னா ஏன் இப்படி வேலமெனக்கெட்டு ஒன்னத் தேடிக்கிட்டு வரணும்?’ என்று
கேட்டால்?
‘வெட்டித்தனமா ஏன்
இப்படி வெல ஒசந்த கிப்ட் வாங்கி வரணும்?’ என்று கேட்டால்?
மனத்தில் கேள்விகளாக
எழுந்தன? விடைகளை அவள் எந்த நோட்ஸில் தேடுவாள்?
காலையில் எழுந்தவுடன்
அனு எதுவும் ஏடாகூடமாகக் கேட்டுவிடக்கூடாதே என்று அஞ்சினாள் வேதா.
‘டெஸ்டுக்குப் படிச்சிட்டியா?’,
‘எல்லாக்
கொஸ்டீனுக்கும் ஆன்ஸர் பிரபேர் பண்ணியா?’, ‘பேனா எடுத்துக்கிட்டியா?’,
‘பென்சில்
சீவிட்டியா?’, ‘ரப்பர் எடுத்து வெச்சியா?’ என்று எப்போதும்
அவள் கேட்காத கேள்விகளையெல்லாம் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தாள்.
பள்ளிக்குச் சென்றும்
மனம் ஒருப்படவில்லை. பதில் சொல்லாத பிள்ளைகள் மீது அளவுக்கதிகமாகவே அன்று கோபம் வந்தது.
‘நளவெண்பாவை இயற்றியது
யார்?’
‘சுதாகர் சொல்லு
பாப்போம்’.
சுதாகர் விழித்தான்.
‘நேத்துதானே நடத்தினேன்.
ஏண்டா படிச்சிக்கிட்டு வரலை?’
‘படிச்சேன் டீச்சர்!
மறந்து போச்சி டீச்சர்’.
‘ஒழுங்காப் படிச்சா
மறக்குமா? மறக்குமா?’ பிரம்பால் நாலு விளாசினாள் வேதா. எப்பொழுதும்
ஓர் அடிக்குமேல் அடிக்காத வேதா இன்று அதனைத் தாராளமயமாக்கினாள்.
‘இல்ல டீச்சர் இனிமே
மறக்க மாட்டேன், இனிமே மறக்க மாட்டேன்’, - ஒவ்வொரு அடியின்போதும்
ஒருமுறை சொன்னான்.
‘இப்ப சொல்லு,
நளவெண்பா
இயற்றியது யார்?’
பெஞ்சின் பின்னால்
உட்கார்ந்திருந்தவர்கள் குசுகுசு வென்று ‘புகழேந்திப் புலவர்’ என்று
உச்சரித்ததைச் சுதாகர் பிடித்துக்கொண்டான்.
‘புகழேந்தி டீச்சர்!
புகழேந்தி டீச்சர்! இனிமே மறக்க மாட்டேன் டீச்சர்! புகழேந்தி. . . இனிமே மறக்க மாட்டேன் டீச்சர்!’
சுருக்கென்றது
வேதாவுக்கு.
‘புகழேந்தி!’
அவனை மறந்திருக்க
வேண்டும். அவனும் தன்னை மறந்திருக்க வேண்டும். சில நேரங்களில் மறதியைப்போன்ற அரிய பாதுகாப்பு
எதுவும் இல்லை. மறக்க வேண்டியவற்றை ஞாபகம் வைத்திருப்பதைப் போன்ற ஆபத்தும் வேறில்லை.
ஞாயிற்றுக்கிழமை
அவர்கள் புகழேந்தியின் வீட்டு விருந்திற்குச் செல்ல எந்த ஆயத்தமும் செய்யவில்லை.
‘அங்கிள் வீட்டுக்கு
விருந்துக்குக் கூப்டாங்களேப்பா! நாம எப்பப் போறோம்?’
‘அங்கிள் எனக்கு
நெறைய கிப்ட் கொடுக்கறேன்னு சொன்னாங்கம்மா! நான்போய் என் பர்த்டேக்கு எடுத்த டிரஸ்
போட்டுக்கட்டுமா?’
‘பாட்டி,
நீங்க
வரலயா? நீங்க ஏன் இன்னும் ரெடி ஆகலை?’
இப்படி அனு நிமிடத்திற்கொருமுறை
ஏதாவது ஒரு வினாவை எழுப்பிக்கொண்டே இருந்தாள். அனுவிற்கு எதைச் சொல்லிப் புரியவைக்க
முடியும்? அனுவின் தொல்லை தாங்காமல் அனைவரும் பொருட்காட்சிக்குச் செல்லத்
தீர்மானித்தார்கள்.
ஸ்ரீதர் அனுவின்
‘சூப்பர்
அப்பா’ ஸ்தானத்தைத் தக்கவைக்க இரண்டாயிரம் ரூபாய் செலவழித்தான். புகழேந்தி
வாங்கிக்கொடுத்த பொம்மையைவிட பெரிய அழகான பொம்மை அனுவின் அணைப்பில் சிக்கியது. மனத்திலும்தான்!
வேதாவின் வீட்டுத்
தொலைபேசிக்குப் புகழேந்தி பலமுறை நம்பர் அழுத்திப் பார்த்தான். போன் எடுக்கப்பட வில்லை.
வீட்டில் யாரும் இல்லை என்பது தெரிந்தது.
விஜியின் காரப்
பார்வையும் சூடான சொற்களும் அவனை வறுத்தெடுத்தன. விருந்திற்காகச் சமைத்த உணவு அவனுக்கு
ருசிக்கவில்லை.
‘என்ன காரணம் இருக்கும்?
அட்லீஸ்ட்
ஒரு போன் பண்ணியாவது சொல்லியிருக்கலாமே!’ புகழேந்தியின் மனம் இதே தொடர்களைத்
தொடர்ந்து ரிபீட் செய்தது.
மறுநாள் காலையிலேயே
வேதாவிற்குப் போன் செய்தான்.
வேதாதான் தொலைபேசியை
எடுத்தாள்.
‘ஹலோ!’
‘ஹலோ வேதா!,
நான்தான்
புகழ் பேசறேன், ஏன் நேத்து விருந்துக்கு வரலை? நாங்க எவ்வளவு
நேரம் சாப்பிடாம காத்திட்டு இருந்தோம் தெரியுமா? அன்னைக்கு அவ்வளவு
தூரம் சொல்லிட்டு வந்தோம். யாருக்காவது ஒடம்புகிடம்பு சரியில்லயா? போன் பண்ணிப்
பண்ணிப் பாத்தேன், ரிங் போயிட்டே இருந்தது. வீட்ல யாருமே இல்லையா? என்னாச்சி?
. . .’ கேள்விகளை
அடுக்கிக்கொண்டே போனான் புகழேந்தி.
‘ஸாரி!,
நான்
மறந்திட்டேன்!’ - ஒற்றை வரியை உதிர்த்துவிட்டுத் தொலைபேசியைப் பட்டென்று வைத்தாள்
வேதா.
ஆசைமுகம் மறந்து போச்சே சிறுகதைத் தொகுப்பிலிருந்து பக்ஃ11-33
No comments:
Post a Comment