சித்தர்கள் தம் பாடல்களில் சித்துகளைப் பற்றியும்
யோகத்தைப் பற்றியும் வெகு விரிவாக எடுத்துரைக்கின்றனர். நிலையில்லாத இவ்வுடலை யோகப்
பயிற்சியை மேற்கொண்டு நிலைபேறுடையதாக மாற்றுகின்ற வழிமுறைகளை எடுத்துரைக்கும் செய்திகள்
பலநேரங்களில் மறைபொருளாக வெளிப்படுகின்றன. இச் செய்திகளை அறிந்துகொள்வது கடினம் என்பதுடன்
இவற்றைக் கைக்கொள்வது சாதாரண மக்களால் இயலாது என்பதும் வெள்ளிடை மலை. இறையியலும் சித்தர்களால்
விளக்கமாகப் பேசப்படுகிறது. இவற்றைத் தவிர இறையியலுக்கு அப்பாற்பட்டு, சமூகத்தில்
மக்கள் எவ்வாறெல்லாம் வாழவேண்டும் என்னும் வாழ்வியல் நெறிகளை மிகக் குறைவாகவே இவர்கள்
எடுத்தியம்புகின்றனர். இத்தகைய கருத்துகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
வாழ்நாள்
சுருக்கம்
மனிதர்கள் ஆறறிவு படைத்திருந்தாலும் அவர்கள்
என்றும் நிலைபேற்றுடன் வாழ்ந்திட இயலாது. உலகியல் வாழ்க்கை நிலையில்லாதது. அது மட்டுமல்லாமல்
உடலிலிருந்து உயிர் பிரிந்த உடனேயே அதனை இழிவானதாகக் கருதி அப்புறப்படுத்திவிடும் உலகியல்
உண்மையையும் மனிதர்கள் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை,
மண்கலம் கவிழ்ந்தபோது
வைத்துவைத்து அடுக்குவார்
வெங்கலம் கவிழ்ந்தபோது
வேணும் என்று பேணுவார்
நன்கலம் கவிழ்ந்தபோது
நாறும்என்று போடுவார் (79)
என்று சிவவாக்கியர்
எடுத்துரைக்கிறார்.
செல்வ
நிலையாமையை அறிதல்
செல்வம் அழிந்துபோகும் தன்மையது என்னும் சிந்தனை
மக்களிடத்தில் வேண்டும். ஏனென்றால் அச் செல்வத்தைத் தேடவேண்டும் என்னும் பேரவாவினால்
மக்கள் பல தீய செயல்களைச் செய்யத் தலைப்படுகிறார்கள். அதனால்தான் வெய்ய வினைகள் செய்யாதே
(25) என்று கடுவெளிச் சித்தர் கூறுகிறார்.
மாணிக்கமா மணிமுடி
வாகு வலயம்
மார்பில் தொங்கும்
பதக்கங்கள் மற்றும் பணிகள்
ஆணிப்பொன் முத்தாரம்
அம்பொன் அந்தக் கடகம்
அழிவான பொருளென
நின்று ஆடுபாம்பே (42)
என்று பாம்பாட்டிச்
சித்தர் செல்வத்தின் நிலையாத் தன்மையைத் தெளிவாக்குகிறார். மேலும் அச் செல்வம் அனைத்தும்
இறக்கும் தருவாயில் எவ்விதத்திலும் அதனைப் பெற்றவர்க்குப் பயனளிப்பதில்லை என்பதை,
நாடுநகர் வீடுமாடு
நற்பொருள் எல்லாம்
நடுவன்வரும் போது
நாடி வருமோ?
கூடுபோன பின்பு
அவற்றால் கொள்பயன் என்னோ?
கூத்தன் பதங் குறித்து
நின்று ஆடுபாம்பே (40)
என்று புலப்படுத்துகிறார்.
எனவே பொருட்பற்றை நீக்கவேண்டும் என்பதை,
யானை சேனை தேர்பரி
யாவும் அணியாய்
யமன் வரும்போது
துணையாமோ அறிவாய்
ஞானஞ்சற்றும் இல்லாத
நாய்கட் குப்புத்தி
நாடிவரும்படி நீ
நின்று ஆடுபாம்பே (41)
எனக்கூறி உணர்த்துகிறார்.
அறம் செய்தல்
மக்கள் தம் வாழ்க்கையில் அறச் செயல்களை அவசியம்
செய்தல் வேண்டும் என்று தமிழ் இலக்கியங்கள் தொடர்ந்து பேசுகின்றன. சித்தர்களும் மக்கள்
தம்மைச் சுற்றியுள்ள தம்மையொத்த மனித சமுதாயத்திற்குச் செய்யவேண்டிய அறங்களை எடுத்துரைக்கின்றனர்.
பெண்டாட்டி மந்தைமட்டும்
வருவாள் பெற்ற
பிள்ளை மசானக்
கரையின் மட்டும்
தொண்டாட்டுத் தர்மம்
நடுவினி லேவந்து
சேர்ந்து பரகதி
தான்கொடுக்கும் (82)
என்று பாடும் கொங்கணச்
சித்தர் உடலைவிட்டு உயிர் பிரிந்த பின்னர் உயிரோடு உடன்வருவது அறமே என்பதை வலியுறுத்துகிறார்.
ஏழை பனாதிக ளில்லையென்
றாலவர்க்கு
இருந்தா லன்னங்
கொடுக்க வேண்டும்
நாளையென் றுசொல்ல
லாகா தேயென்று
நான்மறை வேத முழங்குதடி
(86)
என்று அறத்தின்
வழிவகையினையும் எடுத்துரைக்கிறார். அறம் செய்வதை நாளை பார்ப்போம் என்று நினைப்பதும்
தவறு என்பதை வேதங்கள் கூறுவதாகவும் எடுத்துரைக்கிறார். புண்ணியத்தை மறவாதே ... கர்மியென்று
நடவாதே (ஞானம் 1.9) என்று அகத்தியர் விதந்துரைக்கிறார்.
பொய்பேசாமை
இந்த வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
(25) என்று கடுவெளிச் சித்தர் கூறுகிறார். கொங்கணச் சித்தரும் கூடிய பொய்களைச் சொல்லாதே
(90) என்று கூறுகிறார். அகத்தியர், சத்தியமே வேணுமடா என்றும் பொய் சொல்லாதே
(ஞானம் 1.9) என்றும் எடுத்துரைக்கிறார்.
சமுதாயப்
பிணைப்பு
சமுதாயத்தில்
மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து வாழவேண்டிய சூழல் நிலவுகிறது. அதனால்தான் மனிதனைச் சமுதாய
விலங்கு என்று சமூகவியலார் குறிப்பிடுகின்றனர். எனவே ஒருவர் செய்யும் செயல்கள் பிறரால்
ஏதோ ஒருவகையில் விரும்பப்படுவதாகவோ அல்லது வெறுக்கப் படுவதாகவோ அமைகின்றன. எனவே இச்சமுதாயத்தில்
நாம் வாழவேண்டிய நெறிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய நெறிமுறைகளை அறிவுரைகளாகச்
சித்தர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
போற்றுஞ் சடங்கை
நண்ணாதே – உன்னைப்
புகழ்ந்து பலரிற்
புகல வொண்ணாதே
சாற்றுமுன் வாழ்வை
யெண்ணாதே – பிறர்
தாழும் படிக்கு
நீ தாழ்வைப் பண்ணாதே (28)
என்பதன்மூலம் தற்பெருமை
கூடாது என்னும் சிந்தனையை முன்வைக்கிறார் கடுவெளிச் சித்தர். அதீத கற்பனைகளில் ஆழ்ந்துவிடக்
கூடாது என்பதையே சாற்றுமுன் வாழ்வை எண்ணாதே என்று சித்தர் குறிப்பிடுகிறார்.
பிறரைத்
துன்புறுத்துகின்ற செயல்களை மனிதர்கள் செய்யலாகாது. பிறர் தாழும் படிக்கு நீ தாழ்வைப்
பண்ணாதே (28) என்றும் நட்பு கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே (33) என்றும் கடுவெளிச் சித்தர் கூறுகிறார். மனிதனானால் சண்டாளஞ்
செய்யாதே என்பது அகத்தியர் வாக்கு (ஞானம் 1.9). கடுவெளிச் சித்தர், உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே (27) என்று அறிவுறுத்துகிறார். புத்தி கெட்டுத் திரியாதே,
பூசல்
கொண்டு தர்க்கி யாதே (ஞானம் 1.9) என்று அகத்தியர் கூறுகிறார்.
வைதோரைக்கூட
வையாதே (25) என்று கடுவெளிச் சித்தர் கூறுகிறார். இதனால் தமக்குத் தீமை செய்தவர்களுக்கும்
தீமை செய்யாத செவ்விய நெறியைக் கைக்கொள்ளுமாறு பணிக்கிறார். இத்தன்மை மக்களை தெய்வநிலைக்கு
உயர்த்தும் சிறப்பைச் செய்துவிடுகிறது எனலாம்.
பஞ்சை பனாதி யடியாதே
யந்தப்
பாவந் தொலைய முடியாதே
தஞ்சமென் றோரைக்
கெடுக்கா தேயார்க்கும்
வஞ்சனை செய்ய நினையாதே
(87)
என்று கூறும் கொங்கணச்
சித்தர் முதலாளி – தொழிலாளி வர்க்கப் போராட்டத்தைக் குறிப்பால் உணர்த்துகிறார். ஏழைஎளியோரின்
வயிற்றில் அடிக்கக்கூடாது என்பதைக் கூறி அதனால் பாவம் வரும் என்றும் அத்தகைய பாவத்தைத்
தொலைக்க முடியாது என்றும் எடுத்துரைக்கிறார்.
கணவன்
- மனைவி பிணைப்பு
கணவன்
தன்னுடைய மனைவிக்குரிய மரியாதையைக் கட்டாயம் செலுத்தவேண்டும். அப்போதுதான் மற்றவர்களும்
அவளை மதிப்பார்கள் என்பதை உள்ளடக்கிக் கடுவெளிச் சித்தர், உன்றன் பத்தினி
மார்களைப் பழித்துக்காட் டாதே (27) என்று ஆடவருக்கு அறிவுரை கூறுகிறார். பெண்டாட்டிக்
குற்றது சொல்லாதே (88) என்று கொங்கணச் சித்தர் ஆடவருக்கு அறிவுறுத்துகிறார். மேலும்
இல்லறம் சிறக்க வேண்டுமானால் ஆடவன் தன் மனைவியோடு மட்டுமே வாழ்தல் வேண்டும் என்பதை
மாய்கைத் தேவடி யாள்தனம் பண்ணாதே (93) என்றும் கற்பு மங்கையர் மேல்மனம் வையாதே
(90) என்றும் அவர் வற்புறுத்துகிறார்.
போதைப்
பழக்கம்
மக்கள்
போதைப் பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும் என்பதையும் அப் பழக்கங்கள் உயிரைக் கொல்லும்
தன்மையுடையவை என்பதையும்,
கஞ்சாப் புகைபிடி
யாதே – வெறி
காட்டி மயங்கிய
கட்குடி யாதே
அஞ்ச வுயிர் மடியாதே
(29)
என்று கடுவெளிச்
சித்தர் எடுத்துரைக்கிறார்.
விலங்குகளைத்
துன்புறுத்தாமை
மனிதர்கள் வாழுமிடத்தில் பலவகைப்பட்ட விலங்கினங்களும்
வாழ்கின்றன. சில விலங்குகள் நன்மை செய்வனவாகவும் சில விலங்குகள் தீமை புரிவனவாகவும்
அமைகின்றன. எனவே மனிதர்கள் விலங்குகளின் வாழ்வியலைப் புரிந்துகொண்டால்தான் அவற்றின்
தீமைகளிலிருந்து தப்பித்து வாழமுடியும் என்ற சிந்தனையைச் சித்தர்கள் மக்களுக்கு எடுத்துரைக்கத்
தவறவில்லை.
விலங்குகளைத்
துன்புறுத்தும்போது அவற்றால் நமக்கும் ஆபத்துநேரக் கூடும் என்பதைப் பாம்பினைப் பற்றியாட்
டாதே (27.1) என்று கடுவெளிச் சித்தரும் ஆடிய பாம்பை அடியாதே (91) என்று கொங்கணச் சித்தரும்
கூறுகின்றனர். அக்காலத்தில் மக்கள் காடுகளில் இயங்கவேண்டிய சூழல் இருந்தமையால்,
நடுக்
காட்டுப் புலிமுன்னே நில்லாதே என்று கொங்கணச் சித்தர் கருத்துரைக்கிறார். இக் கருத்துகள்
விலங்கினங்களைப் பற்றி மக்களுக்கு இருக்கவேண்டிய புரிதலைப் பதிவுசெய்கின்றன.
தம்மைச்
சுற்றி வாழ்ந்துவருகின்ற விலங்கினங்களைக் காத்தல் மனிதர் கடமையாகும். மாறாக அவற்றை
நாம் துன்புறுத்தும்போது அந்த இனங்கள் நம்மைச் சுற்றி வாழ்வதை வெறுத்துக் காலப்போக்கில்
அழிந்துவிடும் நிலைக்கும் ஆளாகலாம்.
கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே (25) என்று கடுவெளிச் சித்தர் கூறுவதை சூழலியலைக் காக்கின்ற
சிந்தனையாக நாம் கொள்ளலாம்.
வாழ்வியல்
முரண்
வாழ்க்கையில் சில குறிக்கோள்களைக் கடைபிடிப்பதாகக்
கூறிக்கொள்பவர்கள் அவற்றிற்கு முரண்பட வாழ்வதைக் காணலாம். சைவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும்
இத்தகைய முரண்பட்ட வாழ்க்கை வாழ்வதைச் சிவவாக்கியர் எடுத்துரைக்கிறார்.
மீன்இறைச்சி தின்றதில்லை
அன்றும்இன்றும் வேதியர்
மீன்இருக்கும்
நீரலோ சூழ்வதும் குடிப்பதும்
மான்இறைச்சி தின்றதில்லை
அன்றும்இன்றும் வேதியர்
மான்உரித்த தோலலோ
மார்புநூல் அணிவதும் (157)
உதிரமான பால்குடித்து
ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததொன்று
இரண்டுபட்ட தென்னலாம்
மதிரமாக விட்டதேது
மாங்கிசப் புலாலதென்
சதிரமாய் வளர்ந்ததேது
சைவரான மூடரே (148)
எனவரும் பாடல்கள்
உயிர்களைக் கொல்வதில்லை என்றும் உணவாய் அவற்றைப் புசிப்பதில்லை என்றும் கூறிக்கொள்பவர்கள்
எவ்வாறு முரண்பட்ட வாழ்வியலைக் கொண்டிருக்கின்றனர் என்பதைப் புலப்படுத்துகின்றன. மீன்
உண்பதில்லை என்று கூறினாலும் மீன்கள் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்து வாழ்கின்ற அந்த
நீரைத்தான் குடிக்கிறார்கள், அந்த நீரில் தான் குளிக்கிறார்கள். மான்
இறைச்சியை உண்ணாவிட்டாலும் மான்தோலைப் பயன்படுத்துகின்றனர். புலால் உண்பதில்லை என்று
கூறினாலும் பசுவின் உதிரம்தானே அவர்கள் அருந்தும் பாலாக உருப்பெறுகிறது என்ற வினாவினையும்
சிவவாக்கியர் எழுப்புகிறார். இவ்வாறு அவர் வினவுவதால் புலால் உண்பதனை ஆதரிக்கிறார்
என்பது கருத்தல்ல. தாங்கள் சைவ உணவினர் என்று கூறித் தருக்குகின்ற செயலையே அவர் கடிந்துரைக்கிறார்
என்பதனை அறிதல் வேண்டும்.
மேற்கூறியவற்றால் மிகச் சில வாழ்வியல் கூறுகளை
மட்டுமே சித்தர்கள் புலப்படுத்தியுள்ளமையை அறியமுடிகிறது. உயிரை நிலைபேறுடையதாக ஆக்குதல்,
உடலில்
தங்கியிருக்கும் உயிர் நிலையற்றது என்னும் சிந்தனைகளைத் தவிர கட்டுரையில் எடுத்துக்கூறப்பெற்றுள்ள
செய்திகள் மிகச் சுருக்கமாக அமைவதைக் காணமுடிகிறது. மேலும் செய்யக்கூடாத செயல்கள் இவை
எனச் சுட்டப்பெறும் மேற்கூறிய செய்திகள் பாடல்களின் இறுதிப் பகுதியிலேயே அமைந்திருப்பதைக்
காணமுடிகிறது. சித்தர்கள் மக்களின் இயல்பான வாழ்வியல் ஒழுகலாற்றுச் செய்திகளைப் போற்றற்குரியதாகவோ
வெளிப்படுத்தியே தீரவேண்டிய அரிய செய்திகளாகவோ எண்ணியதில்லை என்பதையே இது தௌ;ளிதின்
புலப்படுத்துகிறது.
பயன்நூல் :
சித்தர் பாடல்கள், மறு பதி., சென்னை : மணிவாசகர் பதிப்பகம், 1998.
காண்க : ஔவை இரா நிர்மலா, சமயச் சாரலில்,
காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2016, பக்.146-153.
No comments:
Post a Comment