Saturday, 4 February 2017

வீரமாமுனிவரின் புலமைத்திறம்


தமிழ் வளர்த்த மேனாட்டுக் கிறித்தவர்களில் சிறப்பிடம் பெறுபவர் தமிழ் உரைநடையின் தந்தை வீரமாமுனிவர். அவருடைய பிறப்பு, இளமைக்காலம், தமிழ்ப் பணி, சமயப் பணி முதலான பல செய்திகளும் பலரால் அடிக்கடி விரித்தும் தொகுத்தும் வகுத்தும் கூறப்பெற்று வருவதால் கூறியது கூறலைத் தவிர்க்கும் பொருட்டு அதுபோன்ற செய்திகள் இக்கட்டுரையில் தவிர்க்கப் பெற்றுள்ளன.
தமிழ் இலக்கிய வரலாற்றின் மைல் கல்
முதல் இலக்கண நூல் இயற்றிய தொல்காப்பியர், அற இலக்கிய வகையைத் தொடங்கிவைத்த திருவள்ளுவர், முதல் தமிழ்க் காப்பியம் இயற்றிய இளங்கோவடிகள், விருத்தப்பாவினைக் காப்பிய வடிவமாக்கிய திருத்தக்கதேவர், மடலைச் சிற்றிலக்கியமாக்கிய திருமங்கையாழ்வார், ஆத்திசூடியை அறிமுகப்படுத்திய அவ்வையார், இன்னும் பிற சிற்றிலக்கிய வகைகளை அறிமுகப்படுத்தியவர்கள், சிலேடைப் புலவர் காளமேகம், சந்தங்களுக்குச் சொந்தக்காரரான அருணகிரிநாதர், முதல் நாவல் இயற்றிய வேதநாயகம் பிள்ளை, வசன கவிதையைத் தோற்றுவித்த பாரதியார் முதலானோர் தமிழ் இலக்கிய வரலாற்றின் மைல் கற்களாகத் திகழ்வதனைத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறியும். அவ்வகையில் வீரமாமுனிவரும் முதல் அகராதியை ஆக்கித் தந்தும் பரமார்த்த குரு கதை என்னும் உரைநடையிலமைந்த கதைகளைப் படைத்தும் தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு மைல் கல்லாகத் திகழ்கிறார்.
இலக்கண, இலக்கியப் புலமை
கற்பனை ஒருசிறிதும் கலவாத இலக்கணம், கற்பனை இன்றி நடைபெறவியலாத இலக்கியம் என்னும் வேறுபட்ட இருதுறைகளிலும் ஒருவரே புலமை பெற்றிருத்தல் அரிதாகும். அவ்வகையில் செறிவும் உண்மையும் கைகோர்க்கின்ற இலக்கணத் துறைக்குத் தொன்னூல் விளக்கத்தையும் கற்பனையும் நெகிழ்வும் பின்னிப் பிணைந்து செல்லும் இலக்கியத் துறைக்குத் தேம்பாவணியையும் அளித்துத் தம் புலமையையும் திறனையும் ஒருசேரப் புலப்படுத்தியுள்ளார் வீரமாமுனிவர்.
நடைத் தெரிவு
            செய்யுள், உரைநடை என்னும் வேறுபட்ட இரு வடிவங்களையும் ஒருங்கே கைவரப் பெறுதல் என்பது படைப்பாளரின் தனித்திறமையை எடுத்துக்காட்டும். அவ் வகையில் வீரமாமுனிவர் தம் படைப்புகளில் செய்யுள், உரைநடை என்னும் இருவேறுபட்ட நடைகளைச் சிறப்பாகக் கையாண்டிருப்பதுடன் இவை இரண்டினும் வேறுபட்ட வடிவுடைய அகராதிக் கலையிலும் ஆழங்கால் பட்டிருத்தல் அவரது புலமையைப் பறைசாற்றும். மேலும் பொருளாலும் நடையாலும் வேறுபடும் கடித இலக்கியமும் அவரால் படைக்கப்பட்டிருத்தல் குறிப்பிடத்தக்கது.
இலக்கிய வகைமைத் தெரிவு
காப்பியம் (தேம்பாவணி) என்னும் அளவில் பெரிய படைப்பை அளித்ததுடன் அளவால் சிறிய அம்மானை (கித்தேரியம்மாள் அம்மானை), கலம்பகம் (திருக்காவலூர்க் கலம்பகம்), மாலை (அடைக்கல மாலை), அந்தாதி (அன்னை அழுங்கல் அந்தாதி), பதிகம் (கருணாம்பரப் பதிகம்) முதலிய சிற்றிலக்கிய வகைகளையும் தெரிவு செய்துள்ளார்.
மொழி ஆளுமை
ஒருவரே இரண்டு மொழிகளில் படைப்புகளைச் சிறப்பாக அளித்தல் என்பது கடினமான செயலாகும். பல மொழிகளை அறிந்த படைப்பாளர்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு மொழியினைத் தம் படைப்பு மொழியாக அமைத்துக் கொள்வதைக் காண்கிறோம். அவ் வகையில் காணும்போது வீரமாமுனிவர் தம் தாய்மொழியான இலத்தீன் மொழி, இடையில் கற்றுக்கொண்ட தமிழ்மொழி ஆகிய இரண்டிலுமே பல படைப்புகளை அளித்துள்ளமை அவர்தம் மொழி ஆளுமையைப் புலப்படுத்தும். ஒரே மொழியில் படைப்பைப் படைத்தளித்தல் என்பதோடு ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குப் பெயர்த்தலாகிய மொழிபெயர்ப்பு என்னும் செயலை ஒப்பிடும்போது பின்னது அதிகச் சவால் நிறைந்த ஒன்று என்பதனை மொழி வல்லுநர் அனைவரும் ஏற்பர். அந்த வகையிலும் வீரமாமுனிவர் இருதிறப்பட்ட பணிகளையும் சிறப்பாகச் செய்திருத்தல் அவருடைய மொழி ஆளுமையைத் தெளிவுபடுத்துகிறது.
செறிவும் எளிமையும்
செறிவும் திட்பமும் கொண்ட கற்றோர்க்கு மட்டுமே புலனாகும் உயர்ந்த நடையில் எழுதப் புகுவோர் தம் புலமை நடை என்னும் தரத்திலிருந்து இறங்கி எளிய பாமர நடையைக் கைக்கொள்ளுதல் கடினமான செயலாகும். மெத்தப் படித்த பலர் கற்றறிந்தார் அவையில் பொருளுணர்த்தும் திறன் வாய்க்கப் பெற்றிருந்தும் சாமானியர் நிறைந்த அவையில் பொருளுணர்த்தும் திறமின்றித் தோற்றுப்போதல் கண்கூடு.
அவ்வகையில் நோக்கும்போது புலமை நடை செறிந்த இலக்கியங்களைப் படைத்துள்ள வீரமாமுனிவர் பாமர மக்களும் குழந்தைகளும் எளிதில் புரிந்துகொள்ளும் நடையில் பரமார்த்த குரு கதையைப் படைத்து இருவேறுபட்ட நடை ஆளுமையைப் புலப்படுத்தியுள்ளார்.
முரண் இல் முரண்
வீரமாமுனிவர் வாழ்க்கையும் முரண்பட்ட இரண்டு நெறிகளை ஒருங்கிணைப்பதாக அமைந்து சிறந்தது. வாழ்க்கை நெறிமுறை என்பது பண்பாடு, சமயம் என்னும் இரண்டின் பிரிக்க முடியாத, காலங்காலமாக உருவாக்கப் பெற்றுவந்த கூட்டுக் கலவையால் அமைக்கப் பெறுவது. ஒவ்வொரு மனிதனும் அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவன் தோன்றிய சமுதாயத்திற்குக் கட்டுப்பட்டு அவ் வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிக்கிறான்.
உரோமானிய பண்பாட்டுடன் கூடிய கிறித்தவ சமய வாழ்க்கை நெறியில் முப்பதாண்டுகள் திளைத்த வீரமாமுனிவர் அடுத்த முப்பத்தேழு ஆண்டுகளைத் தமிழ்ப் பண்பாட்டோடு இணைத்துக் கொண்டார். ஒரு கிறித்தவ மதகுரு என்ற நிலையில் இந்து சமயத்தோடு பின்னிப் பிணைந்த தமிழ்ப் பண்பாட்டைக் கைக்கொண்டமை வியப்பளிக்கும் செய்தியாகும்.
மூலமும் உரையும்
தமது முப்பதாவது வயதில் தமிழைக் கற்றுக்கொண்டு, தாய்மொழியாகத் தமிழைக் கொண்டிராத ஒருவரால் படைக்கப்பெற்ற நூல் என்று இனங்காண இயலாத வகையில் பல இலக்கிய நூல்களைப் படைத்துள்ளமை வீரமாமுனிவருடைய ஆழங்கால்பட்ட தமிழ்ப் புலமையைக் காட்டுகிறது.
மேனாட்டுக் கிறித்தவர்கள் பலரும் வீரமாமுனிவர் போன்றே தமது இளமைக் காலம் கழிந்த நிலையில் புதிதாகத் தமிழைக் கற்றுக்கொண்டு தமிழில் பல நூல்களைப் படைத்துள்ளனர் என்பதும் மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளனர் என்பதும் தமிழ் இலக்கிய வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும் அவர்கள் அனைவரைக் காட்டிலும் இவரது புலமையும் திறனும் விஞ்சி நிற்கின்றன என்பது ஆய்வு முடிவு. இதனை அறிய வேண்டுமாயின் நமக்குக் கிடைக்கும் அளவுகோலாக அமைவது அவர் படைத்த தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலாகும்.
தொன்னூல் விளக்கத்தின் நூற்பாக்களைத் தனியே கண்ணுறும் தமிழ்ப்புலவர், அவை தொல்காப்பிய நூற்பாக்களோ என ஐயுறுவர் என்பது திண்ணம். அந்த அளவிற்கு வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல் செறிவும் திட்பமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அவர் புலமை அத்துடன் நின்றுவிடவில்லை. தம் இலக்கண நூலுக்கு அவரே வகுத்துள்ள உரை இடைக்காலத்தில் தமிழில் தோன்றிய உரையாசிரியர்களின் உரைத்திறனோடு ஒப்பிடும் அளவிற்கு அமைந்திருக்கக் காணலாம். அவர் உரையில் சேனாவரையர் நடையின் தாக்கத்தை இனங்காண முடிகிறது. ஒரு நூற்பாவிற்கு (நூ.எண். 315) வீரமாமுனிவர் கொடுத்த விளக்கம் ஐந்து பக்கங்களில் விரிகிறது.
இவ்வாறு ஒருவரே மூலநூலாசிரியராகவும் சிறந்த உரையாசிரியராகவும் அமைந்திருக்கும் பெற்றிக்கு வீரமாமுனிவர் சான்றாகிறார்.
நுண்மாண் நுழைபுலம்
தொன்னூல் விளக்கத்தின் உரையைக் கூர்ந்து பயிலுவார் அவர் பெற்றிருந்த தமிழ் இலக்கிய நூல்களின் புலமையையும் தமிழ் இலக்கண நூல்களின் புலமையையும் நன்கு அறியக்கூடும். அது மட்டுமன்றி அவருடைய காலகட்டத்தில் அருகிய வழக்குகளாக ஆகிவிட்ட மொழிப் புலப்பாட்டு உத்திகளையும் எடுத்துக்காட்டுமிடத்து இலக்கிய இலக்கண நூல்களை மானிடவியல் பார்வையிலும் வரலாற்று அடிப்படையிலும் அவர் நோக்கிய திறம் புலனாகிறது.
மேலும் அவர் காலத்து வழக்குகளையும் புலப்படுத்தும் தன்மை அவருடைய சமுதாயவியல், நாட்டுப்புற வழக்காற்றியல் பார்வையையும் நாம் தெள்ளிதின் அறிந்துகொள்ள வழிவகுக்கிறது.
இவ்வாறு வேறுபட்ட துறைகள் : இலக்கணம் - இலக்கியம்; வேறுபட்ட வடிவம் : செய்யுள் - உரைநடைவேறுபட்ட புலமை : ஒருமொழிப் படைப்பு - மொழிபெயர்ப்புவேறுபட்ட நடை : புலமை நடை - எளிய நடை என்னும் எதிர்எதிர் முனைகளில் ஒரே மாதிரியான ஆற்றல் படைத்துள்ளமையுடன் இரு துருவங்கள் எனச் சொல்லத்தக்க வேறுபட்ட பண்பாடுகளையும் இணைத்துத் தம் வாழ்க்கை நெறியாக அமைத்துக் கொண்டமை மனித சமுதாயத்திற்கு நலம்பயக்கும் சிந்தனையாகும்.
வீரமாமுனிவர் தம் சமயத்தைச் சார்ந்தவர் என்று கிறித்தவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளும் அதே வேளையில் அவருடைய வாழ்க்கை நெறியைப் பின்பற்றுவதுடன் அவருடைய இலக்கண இலக்கியப் படைப்புகளை ஆர்வத்துடன் கற்றுணர்ந்து என்றும் பயனளிக்கின்ற வகையில் தாமும் சிறந்த நூல்களைத் தம் தாய்மொழியாம் தமிழுக்கு ஆக்கித்தர வேண்டும்.
 காண்க : ஔவை இரா நிர்மலா, சமயச் சாரலில், காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2016, பக்.169-174.  



No comments:

Post a Comment