சங்க இலக்கியக்
குறிஞ்சித்திணைப் பாடல்களில் வேடர்களின் வாழ்வியல் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கு விரவிக்காணப்படுகின்றன.
சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் மறக்குடி மக்களின் வழிபாடு பற்றிய செய்தி உரைக்கப்பட்டுள்ளது.
கம்பராமாயணத்தில் குகனை ‘நாவாய் வேட்டுவன்’ என்று
கம்பர் குறிப்பிடுகிறார். குகன் சார்ந்த சமுதாயத்தின் வாழ்க்கையைக் கம்பர் விரிவாகப்
பேசவில்லை. இராமன் மீது குகன் கொண்ட அன்பின் திறத்தினையே கம்பர் மையப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களை நுணுகி நோக்கும்போது வேடர்களின் வாழ்வியலை விரிவாக
அறியும் வகையில் எந்த நூலும் அமையவில்லை எனலாம்.
சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாறுகளைக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் பல இனங்களைச் சார்ந்தவராவர். அவர்தம் சமுதாய வாழ்க்கையைக் குறிப்பாகவே புலப்படுத்தியுள்ளார். எனினும் கண்ணப்ப நாயனார் புராணத்தில் கண்ணப்பர் பிறந்த வேடுவக் குலத்தின் வாழ்வியலை விரிவாகவே பேசிச்செல்லும் பாங்கைக் காணமுடிகிறது. இந்நிலையில் பெரியபுராணத்தின் வாயிலாக அறியப்படும் வேடுவர் வாழ்வியல் தொடர்பான செய்திகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.
சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாறுகளைக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் பல இனங்களைச் சார்ந்தவராவர். அவர்தம் சமுதாய வாழ்க்கையைக் குறிப்பாகவே புலப்படுத்தியுள்ளார். எனினும் கண்ணப்ப நாயனார் புராணத்தில் கண்ணப்பர் பிறந்த வேடுவக் குலத்தின் வாழ்வியலை விரிவாகவே பேசிச்செல்லும் பாங்கைக் காணமுடிகிறது. இந்நிலையில் பெரியபுராணத்தின் வாயிலாக அறியப்படும் வேடுவர் வாழ்வியல் தொடர்பான செய்திகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.
வாழிடம்
வேடர்கள்
பெரும்பாலும் மலைப் பகுதிகளில் வாழ்பவராவர். அவர்களைக் ‘குன்றவர்’
(652) என்றும்
‘மலையர்’
(702) என்றும்
சேக்கிழார் குறிப்பிடுகிறார். மலர்ச்சோலைகளும் நீர்நிலைகளும் சூழ்ந்த பொத்தப்பி என்னும்
நாட்டினில் (650) முத்துகள் கொழிக்கும் நீரருவியின் சாரல் உடைய நீண்ட மலை சூழ்ந்த
இடமாகிய உடுப்பூர் என்னும் இடத்தைக் கண்ணப்பன் பிறந்த இடமாகச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்
(651).
வேடர்கள் தாம்
வாழும் ஊரைச் சுற்றி மதங்கொண்ட யானைகளின் கொம்புகளால் தொடர்ச்சியாக வேலியமைத்துப் பாதுகாத்தமை
(651, 674). சேக்கிழாரால் குறிப்பிடப்பெறுகிறது.
தோற்றம்
வேடர்கள் கரிய நிறத்தை உடையவர்கள்.
மைசெறிந்து அனைய மேனி (656.1) என்று அவர்களுடைய கருமைத் தோற்றத்தைச் சேக்கிழார்
குறிப்பிடுகிறார்.
கருவரை காள மேகம்
ஏந்தியது என்னத் தாதை
பொருவரைத் தோள்கள்
ஆரப் புதல்வனை எடுத்துக் கொண்டான் (664.3-4)
என்னும் பகுதியில்
குழவியாகிய கண்ணப்பனைக் கருமேகத்திற்கும் அவனை ஏந்திய தந்தை நாகனை கரிய மலைக்கும் ஒப்பிட்டுக்
கூறுவதன் வாயிலாக அவர்தம் கரிய நிறத்தைச் சுட்டிச்செல்கிறார்.
மைவண்ண
வரைநெடுந்தோள் நாகன் (692.2) என்று பிறிதோரிடத்திலும் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
கருங்கதிர்
விரிக்கும் மேனிக் காமரு குழவி (665.1),
கரும்போர்
ஏறு (689.4) மணிநீல மலை (701.2) கருங்குவளை மலர்போன்ற திருமேனி (714)
எனவரும்
பெரியபுராணத்தின் வருணனைப் பகுதிகள் கண்ணப்பனின் கரியநிறத்தை விதந்துரைப்பனவாக அமைகின்றன.
நாகனின் மனைவியைப் பற்றிக் குறிப்பிடும்போது
சூர்அரிப் பிணவு போல்வாள் (658.4) என்று அச்சமூட்டுகின்ற பெண்சிங்கத்திற்கு
ஒப்புமைப்படுத்துகிறார் சேக்கிழார்.
பெயர் வைத்தல்
கண்ணப்பனின் தந்தை பெயர் நாகன் என்பதாகும்
(656). அவன் மனைவியின் பெயரைத் தத்தை என்று குறிப்பிடுகிறார் (657)
சேக்கிழார்.
கண்ணப்பன் என்னும் பெயர் சிவபெருமானால் பின்னர் அளிக்கப்பெற்றதாகும். அவன் பிறந்தபோது
தூக்குவதற்குக் கனமாக இருந்த காரணத்தால் திண்ணன் என்ற பெயரை வைப்பதாக நாகன் கூறுவதன்
வாயிலாக வேடுவரின் பெயரிடும் மரபை அறியமுடிகிறது.
அண்ணலைக் கையில்
ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும்
திண்ணன் என்று
இயம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார் (666.1-2)
என்று கண்ணப்பருக்குப்
பெயரிடப்பெற்ற சூழலை விளக்குகிறார் சேக்கிழார்.
திண்ணனோடு
சென்ற வீரர்கள் நாணன், காடன் என்னும் பெயர் பெற்றவராவர். இவ்வாறு வேடர்குலத்தவரின் பெயர்கள்
அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப அமைந்துள்ளமையை அறியமுடிகிறது.
பண்பு
அச்சமும் அன்பும் என்றும் அடைவிலார்
(656.2) என்று வேடுவர்களின் அச்சமற்ற, அன்பற்ற பண்புநலனைக்
குறிப்பிடுகிறார் சேக்கிழார்.
பெற்றியால் தவம்முன்
செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா
வாழ்வான் கொடுமையே தலைநின் றுள்ளான்
விற்றொழில் விறலின்
மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான் (657.1-3)
என்று நாகனின்
பண்பினை எடுத்துரைக்கிறார். வேடுவர் குலத்து உதித்ததன் காரணமாகக் குற்றமே குணமாகக்கொண்டு
வாழ்பவன் நாகன் என்று குறிப்பிடுவதன் மூலம் வேடுவரைத் தீயபண்புகள் உடையவராக முன்வைக்கிறார்
ஆசிரியர்.
சினவில்
வேடர் (683.4), சினவேடர் (693.3), வெஞ்சொல் வேட்டுவர் (654.1)
எனவரும்
சொல்லாட்சிகள் வேடுவர் கோபம் நிறைந்தவர் என்பதனைச் சுட்டுகின்றன. வேடுவர்கள் வாழும்
இடத்தில் கொல், எரி, குத்து என்ற ஓசைகளே கேட்கும் (654)
என்றும்
சேக்கிழார் உரைக்கிறார்.
தொழில்
ஆறுஅலைத்து உண்ணும் வேடர் (655.1)
என்றும்
வயவர் (738.1) என்றும் குறிப்பிடுவதால் வேடர்கள் ஆறலைக்கள்வராக இருந்தமை பெறப்படுகிறது.
அவர்களை வன்தொழில் மறவர் (656.1) என்றும் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
வேற்றார் வளர்த்துவரும் பலதிறத்ததான
பசுக் கூட்டங்களையும் அவர்கள் கவர்ந்துவருவர் (655). நாகனைப் பற்றிக்
குறிப்பிடும்போது, கைவண்ணச் சிலைவேட்டை ஆடித் தெவ்வர் கணம் நிரைகள் பலகவர்ந்து (692.3)
என்று
சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
தெம்முனையில் அயல்புலங்கள்
கவர்ந்துகொண்ட
திண்சிலையின் வளம்
ஒழியாச் சிறப்பின் வாழ்வாய் (704.2)
என்று நாகன் தன்
மகனுக்கு எடுத்துரைக்கிறான். இவற்றால் ஆநிரை கவர்தல் என்பது அவர்களின் முக்கியத் தொழிலாக
அமைந்தமையை அறியமுடிகிறது.
விலங்குகளைப்
பழக்குதல்
வன்புலிக் குருளை
யோடும் வயக்கரிக் கன்றி னோடும்
புன்தலைச் சிறும
கார்கள் புரிந்துடன் ஆடல் அன்றி
அன்புறு காதல்
கூர அணையும்மான் பிணைகளோடும்
இன்புற மருவி ஆடும்
எயிற்றியர் மகளிர் எங்கும் (653)
என்பதனால் புலிக்குட்டிகள்,
யானைக்
கன்றுகள், மான்கள் ஆகியவற்றை வேடர்கள் வளர்த்துவந்தமையை அறியமுடிகிறது.
கடுமுயல் பறழி
னோடும் கானஏ னத்தின் குட்டி
கொடுவரிக் குருளை
செந்நாய் கொடுஞ்செவிச் சாபம் ஆன
முடுகிய விசையில்
ஓடித் தொடர்ந்துடன் பற்றி முற்றத்து
இடுமரத் தாளில்
கட்டி வளர்ப்பன எண்ணி லாத (675)
என்னும் பகுதியும்
வேடுவர்கள் வளர்த்த விலங்குகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. சிறுவர்கள் தாம் விளையாடும்போது
முயல், காட்டுப் பன்றி, செந்நாய், புலி ஆகியவற்றின்
குட்டிகளைப் பிடித்துவந்து தம் வீட்டு முற்றத்தில் கட்டிவைத்து வளர்ப்பர்.
வளைந்து
தொங்கும் காதுகளைடைய நாய்களை விளாமரத்தின் கிளைகளில் கட்டிவைப்பர் (652) என்னும்
செய்தியால் வேட்டையாடுவதற்குப் பயன்படும் வகையில் நாய்களைப் பழக்கியமையை அறியமுடிகிறது.
இடிமுழங்கும்
மேகத்திற்கு எதிராகப் பிளிறுகின்ற மதம்மிக்க யானைக்கூட்டங்களையும் அவர்கள் வைத்திருந்தனர்
(655) என்றும்
அயல்புலம் சென்று கவர்ந்துவந்த பசுக்கூட்டங்களை வளர்த்தனர் (655) என்றும்
அறியமுடிகிறது.
திருமணம்
கண்ணப்பனின் தந்தையாகிய நாகனின் மனையாளாகத்
தத்தையைக் குறிப்பிடுகிறார் சேக்கிழார். மற்று அவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை
என்பாள் (657.4) என்பதன்மூலம் வேடுவர் வாழ்வில் காணப்பெற்ற ஒருதார மணத்தை எடுத்துரைக்கிறார்
எனலாம்.
குழந்தை
வளர்ப்பு
அலர்பகல் கழிந்த
அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக்
குலமுது குறத்தி
ஊட்டிக் கொண்டுகண் துயிற்றிக் கங்குல்
புலரஊன் உணவு நல்கிப்
புரிவிளை யாட்டின் விட்டுச்
சிலமுறை ஆண்டு
செல்லச் சிலைபயில் பருவம் சேர்ந்தார்
(676)
என்னும் பகுதியால்
குழந்தை வளர்ப்பில் குலமுது குறத்தியர் ஈடுபட்டமையை அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில்
செவிலித்தாயர் தலைவியை வளர்த்துப் போற்றும் பங்கைப் பெற்றிருந்தனர். எனினும் வேட்டுவர்
குலத்து முது குறத்தியர் பங்களிப்பு அதனினும் வேறுபட்டதாகும்.
உணவு
வேடுவர்களின்
முன்றிலில் ஐவனம் எனப்படும் மலைநெல்லைக் காயவைப்பர் (652) என்பதால் ஐவனம்
அவர்களின் முக்கிய உணவாக இருந்தமையை அறியமுடிகிறது.
மலைத்தேனையும்
ஊன் கலந்த சோறையும் அவர்கள் உணவாகக் கொள்வர் (656.3). இறைச்சியை நெருப்பில்
வதக்கி அதில் தேனைப் பிழிந்து கலந்து உண்பர் (797). காலையில் சிறுவர்களுக்குப்
புலால் கலந்த உணவை உண்ணக் கொடுப்பர் (676) முதலான செய்திகளைச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
விருந்துணவு
வில்விழாவின்போது
நிகழும் விருந்துபசரிப்பு பற்றிச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். மறவர்கள் அனைவரும்
வந்து குழும அவர்களுக்கு உணவாக ஐவனம் என்னும் மலைநெல், புல்லரிசி,
தினை,
மூங்கில்
அரிசி முதலியவற்றால் சோறு சமைப்பர். அவற்றுடன் ஊனும் கிழங்கும் கலந்து வைப்பர். (683)
இடித்த
செந்தினையின் மாவுடன் தேனைக் கலந்து விழாவிற்கு வந்தவர்கள் உண்பர். ஊனுணவைத் தேனில்
கலந்து இனிப்பாக்கி உண்பர். விளங்கனியோடு தேனைக் கலந்து கவளமாக்கி உண்பர். ஈசல் உணவை
விருப்பத்தோடு உண்பர். (684)
சூரியன்
உச்சிப் பொழுதைக் கடந்தபின் எயினரும் எயிற்றியரும் பலவகையான மதுவகைகளை அதிகமாக அருந்தி
மயங்கிக் களிப்பர் (685) என்னும் செய்தியும் சேக்கிழாரால் குறிப்பிடப்பெற்றுள்ளது.
உடை
உடைவன் தோலார் (656.2) என்பதனால்
வேடுவர்கள் வலிமை வாய்ந்த தோலாடை அணிந்தமையை அறியமுடிகிறது.
அணிகலன்
திருமணமான
மகளிர் பெரிய புலிப்பல்லைத் தாலியாக அணிந்துகொள்வர் (658.2). அதில்
இடையிடையே ‘மனவு’ எனப்படும் சங்கு மணிகளைக் கோர்த்திருப்பர்.
அம் மாலையானது முதுகிலும் அலையுமாறு தொங்கிக் கொண்டிருக்கும் (658).
குழந்தையின்
பெயர்சூட்டும் விழாவன்று அக் குழந்தைக்குப் பல அணிகலன்களை அணிவிப்பர் (666).
மறவர்கள்
காலில் கழல் அணிந்திருப்பர் (732, 738.1).
மகளிர்
தம் கொண்டையில் மயில் பீலியையும் தளிர்களையும் பூக்களையும் அணிவர் (658) என்னும்
செய்திகள் பெரியபுராணத்தில் அறியக்கிடக்கின்றன.
ஆயுதங்கள்
நச்சழல்
பகழி வேடர் (656.4), விற்றொழில் விறலின் மிக்கான் (நாகன் : 657.3), திண்சிலை
வேடர் (666.2) முதலான தொடர்களால் வேடுவர்கள் பெரும்பாலும் வில்லினைப் பயன்படுத்தியமையை
அறியமுடிகிறது. காட்டில் நெருப்பில் வேகவைக்கும் விலங்குகளின் இறைச்சியை ஈர்ந்து எடுக்கவும்
(766) இறைச்சித்
துண்டுகளைக் கோர்த்து நெருப்பில் வதக்கவும் (767) அம்புகளைப் பயன்படுத்தினர்.
சகுனம்
பார்த்தல்
தன் மகனுக்கு வேடர் தலைமை கொடுக்கப்போவதாக
நாகன் உரைக்க அதனைக்கேட்ட தேவராட்டி தான் புறப்படும்போது நல்ல குறிகள் தோன்றியதாகக்
கூறுகிறாள். இருப்பினும் அவை என்ன என்பதை அவள் குறிப்பிடவில்லை (700).
வேட்டைக்குச்
செல்லும்போது சில பறவைகள் எதிர்பட்டால் இரத்தப் பெருக்கினை உண்டாக்கும் என்று நம்பி,
சகுனம்
பார்க்கிறான் திண்ணன். எனினும் எப் பறவைகள் என்ற குறிப்பினைச் சேக்கிழார் சுட்டவில்லை
(817).
காலடி
பணிதல்
திண்ணனைக்
காண்பதற்காக நாகன் அழைப்பு விடுக்கிறான். தந்தையைக் காணவரும் திண்ணன் தந்தையின் கழல்அணிந்த
கால்களை வணங்குகின்றான் (701). தலைமைப்பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று
கேடயத்தையும் உடைவாளையும் அளித்தபோது தந்தையின் கால்களை வணங்கி அவற்றைப் பெறுகிறான்
(703). விடைபெற்றுக் கொண்டு செல்லும்போது மீண்டும் ஒருமுறை தந்தையின் கால்களை
வணங்குகிறான் (705).
தன்னை
வணங்கிய தன் மைந்தனை தன் தோள்கள் நெருங்கத் தழுவிக்கொள்கிறான் நாகன் (701).
இறை வழிபாடு
வேடர்கள்
குறிஞ்சிநிலக் கடவுளான முருகனை வழிபடுவர்.
நாகனுக்கு மகப்பேறு இன்றி வருந்தியபோது, முருகலர் அலங்கல்
செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று/ பரவுதல் செய்து நாளும் பராய்க்கடன் நெறியில் நிற்பார்
(659.3-4) என்று மகப்பேறு வேண்டி முருகனை வழிபட்டமையைச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
வாரணச் சேவ லோடும்
வரிமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச்
சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவே லோற்குப்
புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங்கு ஆடல்
செய்து பெருவிழா எடுத்த பின்றை (660)
என்பதால் முருகனுக்குக்
காணிக்கைப் பொருள்களாகச் கோழிச்சேவல்களையும் வரிகளையுடைய மயில்களையும் தருவதை அறியமுடிகிறது.
விழா நாளன்று மணிமாலைகளைத் தோரணங்களாகக் கட்டுவர். வண்டுகள் மொய்க்கின்ற கதம்ப மலர்மாலைகளைத்
தொங்கவிடுவர். குரவைக்கூத்தும் அணங்காடலும் ஆடுவர். தத்தைபால் கருப்பம் நீடியபோது இறைவனுக்குப்
பல பலிப்பொருள்களை நல்கி வெறியாடல் நிகழ்த்தினர் (662) என்று சேக்கிழார்
குறிப்பிடுகிறார்.
நெடுவேலோன்
(660) என்ற
குறிப்பால் வேடர்கள் நெடிய வேல் ஏந்திய முருகனின் சிலையை வைத்துவழிபடும் உருவ வழிபாடு
புலனாகிறது. அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் (661.4) என்று பிறிதொரு
இடத்திலும் முருகனின் தோற்றம் குறிக்கப்பெறுகிறது.
தேவராட்டி
காட்டிலுள்ள தளிர்களை நெருக்கமாகக்
கட்டிய கண்ணியைத் தலையில் சூடியிருப்பாள். மான்கொம்பினை அரிந்து காதில் குழையாக அணிவாள்.
கத்தூரி மானின் வயிற்றில் தோன்றிய கத்தூரியை நெற்றியில் பொட்டாக வைத்திருப்பாள். சங்கு
மணியை மாலையாகக் கழுத்தில் சூடியிருப்பாள். இடையில் மரவுரி அணிந்து அதன்மீது நீண்ட
மயிற்பீலியைச் சூடியிருப்பாள் (697).
பூவும் அரிசியும் கலந்த அட்சதை நல்குவாள்
(697).
மென்மையான இறைச்சி, ஈயல்,
தேன்,
மலையில்
விளையும் பொருட்கள், பிற வளங்களோடு தேவராட்டி கேட்கும் அளவு மானியமாக அளிக்கப்பெறும்
(698).
விழாக்கள்
தமது தலைவனுக்குக்
குழந்தை பிறந்தபோது மக்கள் அனைவரும் பெருவிழா எடுத்து மகிழ்கின்றனர் (664).
வில் விழா
வில்விழா எடுக்கும்போதும்
இறைவனுக்குப் பராய்க் கடன் இயற்றுவர் (680). அப்போது வில்லிற்குத்
திருக்காப்பு செய்வர் (681). வலிமையுடைய புலி நரம்பில் செய்த நாணாகிய
கயிற்றை வில்லில் காப்பாகக் கட்டுவர் (682). வில்வித்தை கற்பவரின்
முன்கையிலும் அதனைக் காப்பாகக் கட்டுவர் (682).
வில்லிற்குப்
பசுமையான இலைகளை மாலையாகக் கட்டிச் சூட்டுவர். பல மலர்களைக்கொண்டு கட்டிய மாலைகளையும்
சூட்டுவர். காசுகள் கொண்ட வடத்தோலைக் கட்டி அழகுபடுத்துவர். பலகறை மணிகளை கோர்த்துக்
கட்டிய மாலைகளைச் சூட்டுவர். வெட்சி முதலான போர்க்குரிய அடையாள மாலைகளையும் சூட்டுவர்
(686).
வில்விழாவின்போது
தொண்டக முரசு, கொம்பு, துடி, துளைகொண்ட புல்லாங்குழல்
முதலியவற்றை இசைப்பர் (687).
வில்விழாவானது
ஏழு நாள் நடக்கும் (688). ஏழாம் நாளில் மக்கள் மங்கல வாழ்த்து கூற,
பல
இசைக்கருவிகள் முழங்க, வில்லாசிரியரின்பால் மாணவனை ஒப்படைப்பார்கள் (689).
வில்விழா
மலையடிவாரத்தில் நடக்கும் (690).
வில் பயிற்றுதல்
வில் பயிற்றுவதற்கென்று
ஆசிரியர்கள் இருந்தனர் (677, 686). அவர்களை தனுத்தொழில் வலவர் (689.3)
என்று
பெரியபுராணம் சுட்டுகிறது.
வில்வித்தை
கற்பதற்கு நாள் குறிப்பர் (677). அதனை மறவர்களுக்குச் சொல்லிவிடுவர் (677).
துடிப்பறை
முழக்கி அதனை அறிவிப்பர் (678).
மலைபடு மணியும்
பொன்னும் தரளமும் வரியின் தோலும்
கொலைபுரி களிற்றுக்
கோடும் பீலியின் குவையும் தேனும்
தொலைவில்பல் நறவும்
ஊனும் பழங்களும் கிழங்கும் துன்றச்
சிலைபயில் வேடர்
கொண்டு திசைதொறும் நெருங்க வந்தார் (679)
என்னும் பகுதி
வில்வித்தை கற்போர் ஆசிரியருக்குப் பரிசுப் பொருள்களை அளித்தலைக் காட்டுகிறது.
வில் வித்தை
முதன்மையானதாகக் கற்பிக்கப்பட்டாலும் பிறவகைப் படைக்கருவிகளையும் ஆசிரியர் கற்றுத்தருவார்
(691).
கன்னிவேட்டை
கூட்டத்திற்குப்
புதியதாகத் தலைமை ஏற்று வேட்டை நடத்துவதனைக் கன்னி வேட்டை என்பர் (696.2).
கன்னி
வேட்டைக்குச் செல்லும்போது காட்டிற்குரிய வனதேவதைக்குப் பலி கொடுப்பர் (696,
699).
கன்னிவேட்டைக்கு
வனதெய்வங்களை மகிழ வைப்பதற்காக வேண்டிய பொருட்களைப் பெற்றுச்சென்றாள் (700).
மங்கலநீர்ச் சுனையில் நீராடி இருள்புலரும்
காலைநேரத்தில் கன்னிவேட்டையாடச் செல்கின்றனர் (705).
வேட்டைக்குப் புறப்படும்போது
தேன், நல்ல
இறைச்சி, தேறல், பொரி மற்றும வனதேவதைகளுக்குரிய பலிகளையும்
எடுத்துக்கொண்டு தேவராட்டி வந்தாள் (714).
தலைமை
தாங்கிச்செல்பவர் நெற்றியில் அட்சதை சாத்தி தேவராட்டி வாழ்த்து சொல்வாள் (715).
தனக்கு
வாழ்த்து நல்கிய தேவராட்டிக்குச் சிறப்புகள் பல செய்து வழியனுப்புவர் (716).
திங்கள்தோறும்
வேட்டையாடுவர் (693).
வேட்டைக்குரிய
படைக்கலங்கள் வில்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் (705). வேட்டைக்குச் செல்லும்போது
பல்வேறு வகைப்பட்ட அம்புகளை அம்புக் கூடுகளிலிருந்து தேர்ந்து எடுத்துக் கொள்வர் (713).
வேட்டைக்குச்
செல்லும்போது தலைமை ஏற்பவருக்கு வேட்டைக்கோலம் புனைந்துவிடுவதற்காகப் புனைதொழில் கைவினைஞர்
இருப்பர் (705).
அடர்ந்துவிளங்கும்
சுருண்ட தலைமயிரை நிமிர்ந்து இருக்குமாறு மேலே தூக்கிக்கட்டி அதில் தளிர்களால் கட்டப்பட்ட
மாலை சூட்டுவர். அதன் இடையே மயிலிறகைச் செருகுவர். நறுமணமுடைய முல்லைப் பிணையலையும்
குறிஞ்சி, வெட்சி முதலான மலர்மாலைகளையும் சூட்டுவர் (706).
முன்நெற்றியில்
மயிலிறகின் முருந்தையும் குன்றிமணி களையும் சேர்த்துக் கோர்த்த மயிர்க்கற்றையைக் கட்டுவர்.
சங்கால் செய்த முழுமதி போன்ற வெண்ணிறத் தோடு காதில் தொங்கவிடுவர் (707).
கழுத்தில்
வெண்ணிறப் பலகறையினால் ஆன மாலை அணிவிப்பர். பலவகை மணிகளோடு இடையிடையே காட்டுப்பன்றிக்
கொம்பினை பிறைபோன்று துண்டுபடுத்திக் கோர்த்த மாலையை அணிவிப்பர். புலியின் வலிமையான
தோலை அணிவித்து சன்ன வீரம் எனப்பெறும் வெற்றிமாலை அணிவிப்பர் (708).
தந்தத்தை
மணிகளாக்கிக் கோர்த்த நீண்ட மாலையை மார்பில் சூட்டுவர். மாலை போன்ற வாகுவலயங்கள் தோளில்
ஓளிவீசுமாறு பொருத்துவர். கங்கணம் கட்டப்பட்ட முன்கையில் வில்லிற் கட்டிய நாணை ஏற்றி அம்பு எய்வதற்கு ஏற்ற
சாதனமாகிய செறிகட்டி எனப்படும் விரலுறையைக் கட்டுவர். (709)
இடையில்
தோலாடையின் மீது கடலலைகளால் கரையில் குவிக்கப்பெற்ற பலகறைகளைக் கோர்த்து விளிம்பாய்
ஓரத்தில் கட்டி, வரிசையாய் விளங்கும் நீண்ட உடையாகிய தோலையும் வாளின் பக்கத்துச்
செறிந்த நறுமணம் சூழ்ந்த துவர் ஏற்றிய வாரையும் சேரக்கட்டும் விசியைப் பூட்டுவர் (710).
வீரக்கழல்
காலில் அணிசெய்யும். பாதத்தோடு சேரும்படி நீண்ட செருப்பு அணிவர். (711)
வேட்டைக்குச்
செல்லும்போது அனைவரும் வாழ்த்துவர் (713).
துடிப்பறையை
முழக்கிக்கொண்டு செல்வர் (713).
நாய்வேட்டை
வன்தொடர்ப் பிணித்த
பாசம் வன்கை மள்ளர் கொள்ளவே
வென்றி மங்கை வேடர்
வில்லின் மீது மேவு பாதம்முன்
சென்று மீளு மாறு
போல்வ செய்ய நாவின் வாயவாய்
ஒன்றொ டொன்று நேர்படாமல்
ஓடும் நாய்கள் மாடெலாம்
(718)
வன விலங்குகள்
ஓடுமாறு வேட்டை நாய்களை இடையே பல பக்கங்களிலும் ஓடச்செய்வர் (725). பல வழிகளிலிருந்தும்
வருகின்ற விலங்குகள் அவ் வலைகள் அறுமாறு அச்சம்கொண்டு விழுந்து, கற்பாறைகளின்
வழியாகத் தப்பிச்செல்ல முற்பட அவற்றைச் சினம் மிக்க வேட்டை நாய்கள் கவ்விப் பற்றும்.
இத்தன்மையானது இருவினையின் வலைப்பட்டுத் தடுமாறிச் சுழல்பவர் நன்னெறி சேரும் மெய்யறிவு
காணும்போது அதன்பால் நாடவொட்டாது தடைசெய்யும் ஐம்புலன்களைப் போன்று விளங்கின (734).
வேட்டையாடுவதற்கு
வலைகளையுடம் சுமந்து செல்வர் (719).
கோடு முன்பு ஒலிக்கவும்
குறுங்கண் ஆகு ளிக்குலம்
மாடு சென்று இசைப்பவும்
மருங்கு பம்பை கொட்டவும்
சேடு கொண்டு கைவிளிச்
சிறந்த ஓசை செல்லவும்
காடு கொண்டு எழுந்த
வேடு கைவளைந்து சென்றதே (721)
என்பதனால் கைகளையும்
தட்டி ஒலி எழுப்புவர் என்பது புலப்படுகிறது. துடிப்பறை முழங்கவும் பம்பை ஒலிக்கவும்
கைதட்டியும் ஒலி எழுப்புவதுடன் வாயினாலும் ஒலி எழுப்புவர் (726).
கலைமான்களைக் குரலெழுப்பி அழைப்பர்
(792).
விலங்குகளின்
இயக்கம் கண்டறிதல்
வனவிலங்குகள்
சஞ்சரிக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு அவ்விடத்திலுள்ள மரக்கிளைகளை ஒடித்து அகற்றியும்
வாரினால் ஆன வலைகளை ஒரு யோசனையளவு நெடிது கட்டியமைத்து பரந்த காட்டினைக் காவல் செய்வர்
(724).
தென்திசைப் பொருப்புடன்
செறிந்தகானின் மானினம்
பன்றிவெம் மரைக்கணங்கள்
ஆதியான பல்குலம்
துன்றி நின்ற என்றடிச்
சுவட்டின் ஒற்றர் சொல்லவே
வன்தடக்கை வார்கொடுஎம்
மருங்கும் வேடர் ஓடினார் (723)
என்று விலங்குகளின்
சஞ்சாரத்தைக் கண்டறிவதைச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
வேட்டையாடும்போது
எப்போதும் வில்லை மட்டுமே பயன்படுத்துவதில்லை. தாங்கள் வேட்டையாடும் விலங்கிற்கு ஏற்ப
ஆயுதத்தைத் தெரிவுசெய்து பயன்படுத்துவர்.
அத்தருவளர் சுழலிடைஅடை
அதன்நிலைஅறி பவர்முன்
கைத்தெரிகணை யினில்அடுவது
கருதலர்விசை கடுகி
மொய்த்தெழுசுடர்
விடுசுரிகையை முனைபெறஎதிர் உருவிக்
குத்தினர்உடல்
முறிபடஎறி குலமறவர்கள் தலைவர் (740)
என்று துரத்திச்சென்ற
பன்றியானது மேற்கொண்டு ஓட இயலாதவாறு தளர்ச்சியுற்று நின்றபோது உடைவாளைக்கொண்டு அதன்
உடலைத் துண்டாகும்படிக் குத்தினார் கண்ணப்பர்.
காட்டில்
வேட்டையாடிய மிருகங்களை உண்பதற்கு ஏற்ப சமைப்பதற்கு தீக்கடைகோலால் தீமூட்டுவர் (748).
சிறு பரல்கள்
இடப்பெற்ற துடி, கொம்பு, சிறுமுகம் கொண்ட ஆகுளி எனப்படும் சிறுபறை
ஆகியவை வேட்டுவர் பகுதியில் ஒலியெழுப்பியபடி இருக்கும் (654)
வலிமையான
பருத்த அடிப்பகுதியை உடைய விளா மரத்தின் கிளைகளில் வார்களையுடைய வலைகள் தொங்க விடுவர்
(652).
காட்டுப்
பன்றி, புலி, கடமை எனப்படும் காட்டுப் பசு, மான் ஆகிய
பார்வை விலங்குகள் அங்கிருக்கும் (652). வேட்டையாடிய பன்றி முதலான விலங்கினை
எரியினில் வதக்கி, அதன் தசைகளை அம்பினால் ஈர்ந்து எடுப்பர் (766). அவ்வாறு
எடுத்த தசைப் பகுதிகளை அம்பில் கோர்த்து நெருப்பில் வேகச்செய்வர் (767). சருகு
இலைகளை இணைத்துத் தைத்து அவற்றில் அவ் உணவை வைப்பர் (767).
தேக்கிலைகொண்டு
வட்டமான தொன்னைகளை அமைத்து அவற்றில் கொம்புத்தேனை நிறைப்பர் (793).
வேட்டை
அறம்
துடியடியன மடிசெவியன
துறுகயமுனி தொடரார்
வெடிபடவிரி சிறுகுருளைகள்
மிசைபடுகொலை விரவார்
அடிதளர்வுறு கருவுடையன
அணைவுறுபிணை அலையார்
கொடியனஎதிர் முடுகியும்உறு
கொலைபுரிசிலை மறவோர்
(735)
என வேடுவரின் வேட்டை
அறம் எடுத்தியம்பப்பெறுகிறது. யானைக் கன்றுகளைக் கொல்லமாட்டார்கள். சிறிய குட்டிகள்,
கருவுற்ற
நிலையிலுள்ள தளர்நடை பெண்விலங்குகளையும் துன்புறுத்த மாட்டார்கள்.
இசையும்
நடனமும்
கண்ணப்பன் பிறந்தபோது அரியிடப்பெற்ற
குறுந்துடியை ஆர்த்தனர்.
குன்றவர்கள் வரிக்கூத்தாடுவர்.
வேட்டுவப் பெண்கள் துணங்கைக் கூத்தாடுவர் (688).
மருத்துவ
அறிவு
வேடர்கள்
அம்பினால் ஏற்படும் புண்களை ஆற்றுவிக்கவல்ல மூலிகைகளை அறிந்திருந்தனர் (824)
பயில்வடுப் பொலிந்த
யாக்கை (661.1) என்று நாகனைக் குறிப்பிடுகிறார் சேக்கிழார்.
இவ்வாறு கண்ணப்பர் வாழ்க்கை மூலமாக
வேட்டுவர் சமூகத்தின் வாழ்வியல் தொடர்பான உணவு, உடை, உறையுள்,
தொழில்,
பழக்க
வழக்கங்கள், சடங்குகள், விழாக்கள் முதலான பல செய்திகளைச் சேக்கிழார்
மிக நுணுக்கமாகப் பதிவுசெய்திருப்பதை அறியமுடிகிறது.
No comments:
Post a Comment