தொன்றுதொட்டு வழங்கிவரும் கதைகளை தொன்மக் கதைகள்
எனலாம். தொன்மக் கதைகளில் மீவியிற்கை நிகழ்வுகள் விரவிக்காணப்பெறும். மேலும் பல்வேறு
கற்பனை உயிரினங்களும், சூழ்நிலைகளும்,
செயல்களும் விரவியிருக்கும். இவற்றை தமிழ்ச்
சூழலில் புராணங்கள் என்றும் குறிப்பிடுவர். சில தொன்மக் கதைகள் உண்மையானவையாகவும் வரலாற்று
நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவையாகவும் அமைந்தாலும், காலப்போக்கில் அவை பல்வேறு திரிபுகளுக்கும் மாற்றங்களுக்கும்
உட்பட்டு உண்மைச் சம்பவங்களைக் காட்டிலும் புனைவுகளால் விஞ்சிநிற்கக் காணலம்.
சங்ககாலத்தின் இறுதியில் தமிழகத்தில் கால்கொண்ட
ஆரிய வழிபாட்டு முறையால் சிவன், விஷ்ணு
முதலான பெருந்தெய்வ வழிபாடு பரவலானது. பக்திக் காலத்தின் முதலாம் கட்டத்தைச் சார்ந்தவரான
காரைக்காலம்மையார் இயற்றிய சிவனைக் குறித்த பாடல்களில் சமுதாயத்தில் பரவியிருந்த சிவன்
பற்றிய தொன்மச் செய்திகள் வெகுவாக பதிவுசெய்யப் பெற்றிருக்கக் காணலாம். அவ்வகையில்
அவருடைய பாடல்களில் காணப்பெறும் தொன்மங்களை ஆய்ந்து காரைக்காலம்மையாருக்கு முன்பாக
இலக்கியங்களில் வழங்கப் பெறாமல் அவரால் முதல் பதிவாகச் செய்யப்பட்ட தொன்மங்களை இனங்காண்பதாக
இக்கட்டுரை அமைகிறது.
நஞ்சுண்டமை
கறைமிடற்றண்ணல் (புறம். 55:4) என்று மருதனிளநாகனாரும்,
மணி மிடற்றோன் (புறம். 56:2) என்று நக்கீரரும்,
நீலமணி மிடற்று ஒருவன் (புறம். 91:6) என்று
ஒளவையாரும் காரி யுண்டிக் கடவுள் (மலை.83) என்று பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனாரும்
மறு மிடற்று அண்ணல் (பரி. 8.127) என்று நல்லந்துவனாரும் மணி மிடற்று அண்ணல் (பரி.
9.7) என்று குன்றம்பூதனாரும் குறிப்பிடுகின்றனர்.
சிவனின் மணி மிடற்றை அருஞ்சோழன் நல்லுருத்திரனாரும் (கலி.
104:13) நல்லந்துவனாரும் (கலி. 141:27) சுட்டிச்செல்கின்றனர்.
விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்
(சிலம்பு.12:)
நஞ்சுண்டு கறுத்த கண்டி (சிலம்பு.
12:57)
என்னும் பகுதிகளில் கொற்றவையின் கண்டம் கறுத்திருப்பதாக
வேட்டுவர் வழிபடும் கொற்றவையை முன்னிறுத்துகிறார் இளங்கோவடிகள்.
இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம் என்கோ . . .கண்டத் தொளி
(அற்.திரு.
88.1-2,4)
என்று பாடும் காரைக்கால் அம்மையார் சிவபெருமானின் கண்டம்
கறுத்த தன்மையைப் பல இடங்களில் எடுத்துரைக்கிறார் (அற்.திரு. 1.2-3,; 4.2-3, 22.3, 23.2-3, 26.2, 33.2,
35.3-4, 36.1, 46.2-3, 54.1, 59.2, 65.4, 66.1, 89.2-3, 93.3; திருஇரட்டை மணிமாலை 9.3, 20.3). நஞ்சின் காரணமாகவே
சிவபெருமானின் கண்டம் கறுத்தது என்பதை,
படங் குலவு நாகம் உமிழ் பண்டமரர் சூழ்ந்த
தடங்கடல் நஞ்சுண்டார் தமக்கு
(திருஇரட்டை மணிமாலை 18.3-4)
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டங் கறுத்ததுவும் (அற்.திரு. 55.1-2)
முன்நஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான்
(அற். திரு. 6.3)
ஆலாலம் உண்டு இருண்டஃ கண்டத்தான்
(திருஇரட்டை மணிமாலை 10.3-4)
என்னும் பகுதிகளில் கண்டம் கறுத்தமைக்கான காரணத்தைச் சுருக்கமாகப்
புலப்படுத்துகிறார் அம்மையார்.
திரிபுரம் எரித்தமை
சிவபெருமான்
திரிபுரம் எரித்த தொன்மத்தைக் காரைக்காலம்மையார் காலத்திற்கு முன்பே பல பாடல்களில் குறிப்பிட்டிருக்கக் காணலாம். பரிபாடலில்
முருனைப் பற்றிய பாடலில்,
ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ
வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து
நாக நாணா மலைவில் லாக
மூவகை,
ஆரெயில் ஓரழல் அம்பின்
முளிய
மாதிரம் அழல (பரி. 5;:22-26)
என்று சிவபெருமான் திரிபுரம் எரித்த நிகழ்வினைக் கடுவனிளவெயினனார்
விரிவாகச் சுட்டுகிறார். வேதங்கள் குதிரைகளாகவும், வையகம் தேராகவும் அமைய ஆதி அந்தணனாகிய பிரமன் தேர்க்குதிரைகளை
ஓட்ட, வாசுகி என்னும் நாகத்தை நாணாகவும்,
மேரு மலையை வில்லாகவும் கொண்டு மூவகைப் புரங்களை
ஒரு தீக்கணையால் சிவபெருமான் அழித்தான் என்றும் முப்புரங்கள் வெந்து அத்திசையே தீயாக
மாறியது என்றும் இப்பகுதி சுட்டுகிறது.
தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல்சாய,
அமரர்வந்து இரத்தலின்,
மடங்கல்
போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்தடு
முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்
உடன்றக்கால், முகம்போல ஒண்கதிர் தெறுதலின்,
சீறருங்
கணிச்சியோன் சினவலின் அவ்வெயில்
ஏறுபெற்
றுதிர்வன போல் (கலி. 1:1-7)
எனவரும் பகுதியில் அமரரின் வேண்டுகோளின்படி மாயம் செய்வதில்
வல்ல அவுணர்களின் திரிபுரத்தைச் சினத்தீயால் சிவன் எரித்தான் என்பதாக இத் தொன்ம நிகழ்வைப்
பெருங்கடுங்கோ பதிவுசெய்கிறார்.
இயங்கு எயிலெயப் பிறந்த எரி (கலி.149:2) என்று நல்லந்துவனார்
குறிப்பிடுகிறார்.
ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த (புறம். 55:1-3)
என்று மருதனிளநாகனாரும் மூஎயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
(திருமுருகு. 154) என்று நக்கீரரும் மேற்கண்ட தொன்ம நிகழ்வைப் பதிவுசெய்கின்றனர்.
திரிபுரமெரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப
உமையவ ளொருதிற னாக வோங்கிய
இமையவ னாடிய கொடுகொட்டி யாடலும்
(சிலம்பு. 6:40-43)
என்று இளங்கோவடிகளும் சிவன் எரிமுக அம்பினால் திரிபுரம்
எரித்த நிகழ்வைச் சுட்டிச்செல்கிறார். மேலும் திரிபுரம் எரித்தபிறகு கொடுகொட்டி என்னும்
நடனத்தைச் சிவபெருமான் ஆடியதாகவும் குறிப்பிடுகிறார்.
கோல ஃ அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான் (அற்.திரு.
81.2-3)
நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே
கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக்
கண்டாலும் முக்கணான் கண் (அற்.திரு. 84)
என்று குறிப்பிடும் காரைக்காலம்மையார் சிவன் தன் கண்ணால்
முப்புரம் எரித்தாகக் கூறுகிறார்.
முரணழிய
/ ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தான்
(அற்.திரு. 27.2-3) என்னும் பகுதியில் ஓர் அம்பினால் திரிபுரம் எரித்ததாகச் சுட்டுகிறார்
அம்மையார்.
. . . அந்தரத்தே
நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமாறு
ஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை அடும் (அற்.திரு. 34)
நீநின்று தானவர் மாமதில் மூன்றும் நிரந்துடனே
தீநின்று வேவச் சிலைதொட்ட வாறென்
(திருஇரட்டை மணிமாலை 15.1-2)
ஆகிய பகுதிகளும் சிவபெருமான் திரிபுரத்தைத் தன் அம்பினால்
எரித்தாகச் சுட்டுகின்றன.
சிவபெருமான் திரிபுரம் எரித்த இத் தொன்ம நிகழ்வைக்
காரைக்காலம்மையார் ஆங்காங்கு குறிப்பிட்டுச் செல்கிறார் (அற்.திரு. 32.3, 37.1, திருஇரட்டை மணிமாலை 9.2-3).
திரிபுராந்தகர் (திரிபுர அந்தகர்) சிவனின் திருமூர்த்தங்களுள்
(திரு உருவங்கள்) ஒன்று. இது பறக்கும் கோட்டைகளை கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் உடன்பிறந்த மூன்று அசுரர்களை (திரிபுரர்)
அழிப்பதற்காக எடுத்த கோலமாகும். தேவர்கள் படைகளாகவும் சூரிய, சந்திரர்கள் சக்கரமாகவும், உலகம் தேராகவும் அமைய விஷ்ணுவை அம்பாகவும்,
பிரம்மாவைத் தேரோட்டியாகவும் கொண்டு சிவன்
அவர்களை அழிக்கப் புறப்பட, தேவர்கள்
தாம் இல்லாவிட்டால் ஈசனால் அவர்களை அழிக்க முடியாது என்று நினைக்க, செருக்குற்ற தேவர்களை அடக்க புன்முறுவல் பூத்து
அச் சிரிப்பினாலேயே திரிபுரங்களை அழியச் செய்தருளினார் என்று கூறப்படுகிறது.
திரிபுரம் எரித்த கதை யசுர் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக்
கூறுவர்.
இராவணன் செருக்கு அடக்குதல்
சிவபெருமான்
இராவணன் செருக்கினை அடக்கிய நிகழ்வினை,
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமையமர்ந் துயர்மலை இருந்தன னாக
ஐஇரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையின் கீழ்ப்புகுத்து அம்மலை
எடுக்கை செல்லாது உழப்பவன் போல (கலி. 37;.1-5)
என்று கபிலர் சுட்டுகிறார்.
முரணழியத் / தானவனைப் பாதத் தனிவிரலாற்
செற்றானை (அற்.திரு. 18.2-3)
செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்டோள்
அரக்கனையும் முன்னின் றடர்த்த (அற்.திரு.
80.1-2)
அடித்தலத்தால் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீமுரித்த வாறென்
(திருஇரட்டை மணிமாலை 14.1-2)
எனவரும் காரைக்காலம்மையாரின் பாடற் பகுதிகள் சிவபெருமான்
இராவணனின் செருக்கினை அடக்கிய தொன்ம நிகழ்வினைச் சுட்டிநிற்கின்றன.
கங்கையைத் தலையில் ஏற்றமை
சிவன் கங்கையைத் தலையில் ஏந்திய குறிப்புப் புலப்படுமாறு
சலதாரி (பரி. 9.6) என்று குன்றம்பூதனாரும் ஈர்ஞ்சடை அந்தணன் (கலி. 37;:1) என்று கபிலரும் பிறங்கு நீர் சடைக் கரந்தான்
(கலி. 149:9) என்று நல்லந்துவனாரும் தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள் (சிலம்பு.
26:64), கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன்
(சிலம்பு. 12:10.3) என்று இளங்கோவடிகளும் குறிப்பிடுகின்றனர்.
தூய / புனற்கங்கை ஏற்றான் (அற்.திரு.
8.2-3) என்றும் கங்கையான் (11.3) என்றும் இசைக்கிறார் காரைக்காலம்மையார். கங்கையைத்
தலையில் அடக்கிய செய்தி பல பாடல்களில் காணப்படுகிறது (அற்.திரு. 23.1, 53.1-3, 67.2, 73.2-3,
75.1, 90, 91.1,
95.2, திருஇரட்டை மணிமாலை 1.3-4, 7.2-4, 13.2-3,
14.2-3, 18.2)
கங்கை மணவாளன் (அற்.திரு. 44.3) என்றும் சிவனைக்
குறிப்பிடுகிறார் அம்மையார். கங்கையைச் சிவன் மணந்துகொண்டமையால் ஊடல்கொண்ட உமையின்
கோபத்தைத் தீர்க்க அவள் காலில் விழுந்து வணங்கியதாகக் கீழ்வரும் பாடல் உணர்த்துகிறது:
சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச்
சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற்
றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி (அற்.திரு. 68).
பர்வதராஜன், மைனாவதி தம்பதியினரின் மகளான கங்கை, சிவபெருமானிடம் புனித தன்மை உடையவளாகத் திகழ வரம் பெற்றாள்.
இதனால் தேவலோகத்தினைப் புனிதம் செய்ய இந்திரன் அழைப்பால் தேவலோக நதியாக மாறினாள். பகிரதனின்
முன்னோர்கள் சாபம் பெற்றுச் சாம்பலாக இருந்தார்கள். அவர்களுக்கு முக்தி கிடைக்க கங்கை
நதி பூமிக்கு வந்தால் மட்டுமே இயலும் என்பதை அறிந்த பகிரதன் கங்கையை நோக்கித் தவமிருந்தான்.
தேவ லோகத்திலிருந்து பூமிக்கு வரும்பொழுது எழும் பிரவாகத்தினைக் கட்டுப்படுத்த சிவபெருமானால்
மட்டுமே இயலும் என்று கங்கை கூறியதால், பகிரதன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து கங்கை பூமிக்கு வரும்பொழுது பிரவாகத்தினைத்
தடுத்துக் காத்தருள வேண்டினான். பகிரதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் கங்கையைச் சடாமுடியில்
தாங்கிப் பூமி தாங்கும் அளவில் மட்டும் வெளிவிட்டான். இதனால் சிவபெருமான் கங்காதரன்
என்று பெயர்பெற்றான் என்ற இத் தொன்ம நிகழ்வு விளக்கப்படுகிறது.
சிவபெருமான் உருவத்தோற்றம்
சிவபெருமானை
வேண்டிப் பேயுருவம் பெற்று அவனையே துதித்த காரைக்காலம்மையார்,
அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது (அற்.திரு.
61)
என்று பாடி சிவனின் உருவம் எது என்று வினா எழுப்புகிறார்.
இருப்பினும் தாம் முன்பு கேட்டறிந்த தொன்மங்களின் அடிப்படையில் சிவனின் உருவத்தைப்
பலவாறு தம் பாடல்களில் விவரிக்கவும் செய்கிறார். அவ்வகையில் சிவன் குறித்த அவருடைய
வருணனையினையும் அவற்றிற்குரிய தொன்மங்களின் விரிவையும் இனிக் காணலாம்.
நெற்றிக் கண்
முக்கண்ணான் (கலி. 103:12) என்று நல்லுருத்திரனாரும்,
முக்கட் செல்வர் (புறம். 6:18) என்று காரிகிழாரும்,
நுதல் விளங்கும் ஒருகண் (புறம். 55:5) என்று
மருதனிளநாகனாரும், இமையா முக்கண்
(திருமுருகு. 153) என்று நக்கீரரும், நுதல்விழி நாட்டத்து இறையோன் (சிலம்பு. 14:7) என்று இளங்கோவடிகளும் சிவனைக்
குறிப்பிடுகின்றனர். கண் மூன்றுடையான் தாள் சேர்தல் கடிதினிதே என்று இனியவை நாற்பது நூலின் கடவுள் வாழ்த்துப்
பாடல் கூறுகிறது.
கண்ணுதல் பாக மாளுடையாள் (சிலம்பு.
12:2.3-4)
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி (சிலம்பு.
12:55-56)
எனவரும் பகுதிகளில் நெற்றிக்கண் வாய்க்கப் பெற்றமையைக் கொற்றவையின்
உருவக்கூறாக இளங்கோவடிகள் பதிவுசெய்கிறார்.
ஒண்ணுதலின் மேலோர் ஃ தனிக்கணங்கு வைத்தார் தகவு
(அற்.திரு. 12.3-4) என்று குறிப்பிடும் காரைக்காலம்மையார், கண்ணுதலான் (அற்.திரு. 7.3, 54.1, 67.3),
நுதற்கண்ணான் (அற்.திரு. 32.4), முக்கணான் (அற்.திரு. 69.1, 71.4, 84.4) என்றெல்லாம் சுட்டி நெற்றியில் மூன்றாம் கண்ணைக் கொண்டிருக்கும் (அற்.திரு.
59.2, 86.3) சிவனின் தனித்துவமிக்க
தோற்றத்தைக் குறிப்பிட்டுரைக்கிறார்.
யானைத்தோல் அணிந்தவன்
கொற்றவை யானைத்
தோலைப் போர்த்தியுள்ளதாக இளங்கோவடிகள் சுட்டுகிறார் (சிலம்பு. 12:63, 12.8.1-2).
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ
தம்மான் திருமேனி அன்று (அற்.திரு. 60)
- மயக்கமே தன் உருவாகத் துதிக்கையை உடைய விலங்காக மதம் மிகுந்த
யானையாக வந்த கஜாசுரனைச் சங்காரம் செய்து. அந்த யானையின் கரிய தோலைச் சிவன் போர்த்துக்கொண்டபோது
அவன் திருமேனி மேலே படர்ந்த கரிய மேகங்கள் ஒன்றாகக் கூடி ஒரு பொன்மலையில் வீசிய மிக்க
ஒளியை மறைத்தால் அமையும் காட்சியை ஒத்திருக்காதோ? என்று கூறும் காரைக்காலம்மையார் இந்நிகழ்வை வேறு சில பாடல்களிலும்
கோடிட்டுக் காட்டுகிறார் (அற்.திரு. 7.3, திருஇரட்டை மணிமாலை 16.2-4).
சிவபெருமான்
யானைத் தோலைப் போர்த்திக் கொண்டமைக்கான தொன்ம விளக்கத்தைக் கந்தபுராணத்தில் விரிவாகக்
காணமுடிகிறது.
துங்க மால்கரி யாக்கையின் உலகெலாந் தொலைக்கும்
வெங்க யாசுரன் என்பவன் மேருவின் மிசைபோய்ப்
பங்க யாசனற் போற்றி செய்தருந் தவம்பயில
அங்கண் நாடியே தோன்றினன் உலகெலாம் அளித்தோன்
(128)
என்ற கயாசுரன் என்னும் அரக்கனை அறிமுகப்படுத்தும் கச்சியப்ப
சிவாசாரியார் அவ் அரக்கனின் கதையை 26 பாடல்களில் விரித்துரைக்கிறார் (கந்த. ததீசி உத்தரப்
படலம் 128-153).
நான்முகனை நோக்கித் தவமியற்றுகிறான் கயாசுரன். சிவனைத்
தவிர பிறரால் அவனுக்க இறப்பு நிகழாது என்று வரமளிக்கிறான் நான்முகன். வரம்பெற்ற கயாசுரன்
தேவர்களை எல்லாம் வருத்துகிறான். மானிடர்களை அழிக்கிறான். தவயோகியர் காசியில் எழுந்தருளியிருக்கும்
விசுநாதரிடம் முறையிடுகின்றனர். அதற்குள் காசியை அடையும் கயாசுரன் விசுவநாதராகிய சிவனையே
எதிர்க்கிறான். அவனது சிரத்தை ஒருகாலால் மிதித்து மற்றொரு காலால் தொடையை மிதித்து அவன்
முதுகைப் பிளந்து அவனது தோலையுரித்துப் போர்வையாகப் போர்த்திக் கொள்கிறான் சிவன்.
நீளி ருங்கரி உரித்திடும் அதளினை நிமலன்
தோளின் மேற்கொடு போர்த்தனன் அருள்புரி தொடர்பால்
(148)
என்று கயாசுரனுக்குச் சிவன் அருள்செய்த திறத்தை எடுத்துரைக்கிறார்
கச்சியப்பர்.
புலித்தோல் ஆடை
கொற்றவை புலித்தோலை உடுத்தியுள்ளதாக இளங்கோவடிகள்
சுட்டுகிறார் (சிலம்பு. 12.8.1-2).
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்து (அற்.திரு.
28.1-2)
என்னும் பகுதி புலித்தோலை ஆடையாக அணிந்து அதன்மேல் பாம்பினை
நாணாகக் கட்டியுள்ளமையைச் சுட்டுகிறது.
பாய்புலியைத் தாங்கும் மலையாகவும் சிவபெருமானைக்
காண்கிறார் காரைக்காலாம்மையார் (அற்.திரு. 67.1). சிவபெருமான் புலித்தோல் அணிந்துள்ளமையைத்
திருவாலாங்காட்டு மூத்த திருப்பதிகத்திலும் குறிப்பிட்டுள்ளார் (17.3).
அரவு அணி
பாம்பினை அணிகலனாக
அணிந்துள்ளமை சிவபெருமான் தோற்றத்தின் தனித்தன்மையாகும்.
புதுத் திங்கட் கண்ணியான் பொன் பூண் ஞான்று (கலி.149:17)
என்று நல்லந்துவனார் சிவபெருமான் பாம்பினைச் சூடியுள்ளதாகக் கூறுதல் சங்ககாலப் பதிவாக
விளங்குகிறது.
இத்தன்மையைப் பல பாடல்களில் காரைக்காலம்மையார் குறிப்பிடுகிறார்
(அற்.திரு. 42, 46.3, 48, 57, 67.1, 90.2-3, திருஇரட்டை மணிமாலை 4.4, 17.1).
பரிசுடையான் நீண்முடிமேற் பாம்பியங்க லாலும்
(அற்.திரு. 75.3)
சடைமேல் /
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியன்
(திருஇரட்டை மணிமாலை 6.1-2)
என்னும் பாடற் பகுதிகள் சிவபெருமான் பாம்பினைச் சடையில்
தரித்திருப்பதாகச் சுட்டுகின்றன. இவ்வாறே மேலும் பல இடங்களில் சடைதனில் பாம்பு சூடப்பட்டுள்ளமை
நேராகவும் குறிப்பாகவும் சுட்டப்படுகிறது (அற்.திரு. 13, 14.3-4, 22.1,
23.1, 36.1-2, 49,
53.2-3, 55.3, 64,
திருஇரட்டை மணிமாலை 7.1-2).
. . . இன வண்டு கிண்டிப்
பொரா நின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்து
பொம் மென்று ஓர் ஐ வாய்
அரா நின்று இரைக்குஞ் சடைச் செம்பொன் நீள்முடி
அந்தணனே
(திருஇரட்டை மணிமாலை 3.2-4)
என்னும் பாடற்பகுதியில் சிவபெருமான் ஐந்து தலை நாகத்தைத்
தலையில் சூடியுள்ளதாகச் சுட்டுகிறார். அங்காந் தனலுமிழும் ஐவாய / நாகத்தாய் (அற்.திரு. 99.3-4) என்று அற்புதத் திருவந்தாதியிலும் ஐந்தலை நாகம்
சிவன் மீதிருப்பதாகச் சுட்டுகிறார் அம்மையார்.
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் (அற்.திரு.
35.2-3), ஆடும் அரவப் புயங்கன் (திரு.மூ.தி.8.4)
என்னும் தொடர்கள் சிவபெருமான் கழுத்தில் பாம்பினை அணிந்திருப்பதாகச் சுட்டுகிறது.
மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ
பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு (அற்.திரு.
66)
என்னும் பாடலில் பாம்பானது சிவனின் மார்பில் ஆடுவதை வருணிக்கிறது.
மேலும் சில பாடல்கள் இத்தன்மையைச் சுட்டுகின்றன (அற்.திரு. 26.2,4, 27, 38).
ஆடும் அரவம் அரையில் (திரு.மூ.தி.23.2) என்னும்
தொடர் சிவபெருமான் தன்னுடைய இடையிலும் பாம்புகளை அணிந்துள்ளமையைச் சுட்டுகிறது.
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்
கென்முடிவ தாக இவர் (அற்.திரு. 28)
என்னும் பாடலில் பாம்பினையே மார்பிலும் சடைமுடியிலும் அணிகலனாகவும் புலித்தோல் ஆடை நழுவாதிருக்க
மேற்கட்டிய நாணாகவும் சிவபெருமான் பயன்படுத்திக் கொள்வதாகக் காரைக்காலம்மையார் சுட்டுகிறார்.
மழு ஏந்தியவன்
மாற்று ஃ அருங் கணிச்சி (புறம். 56:1-2) என்று நக்கீரரும்
குடாரிகொண் டவன் (பரி 5;.34) என்று
கடுவனிளவெயினனாரும், சீறு அருமுன்பினோன்
கணிச்சி (கலி. 100:8), எரிதிகழ் கணிச்சியோன்
(கலி. 102:25), பெரும் பெயர்க் கணிச்சியோன்
(கலி. 104:13) என்றெல்லாம் அருஞ்சோழன் நல்லுருத்திரனாரும் கணிச்சி என்னும் மழுப்படையைச்
சிவன் ஏந்தியுள்ளமையைப் பதிவுசெய்கின்றனர்.
கொடுவெண் மழுவினைச் (திரு.மூ.தி. 21.3) சிவபெருமான்
ஏந்தியுள்ளதாகக் காரைக்காலம்மையார் சுட்டுகிறார்.
சிவபெருமான் புலித்தோலை அணிந்தமை, பாம்புகளைப் பூண்டமை, மான், மழு
ஆகியவற்றை ஏந்தியுள்ளமை ஆகியவற்றிற்குரிய தொன்ம நிகழ்வுகளின் வரலாற்றை அறிய கந்தபுராணம்
துணைநிற்கக் காணலாம்.
தாருகவனத்து
ரிஷிகள் பலவித யாகங்களைச் செய்து மோட்சத்தை அடையக் கருதினர். இதனை,
முன்பு தாருக வனத்தின் முனிவரர் யாரும் ஈசற்
கன்பி லராகி வேள்வி அளப்பில புரிந்து தாமே
இன்புறு முத்தி தன்னை எய்துவான் உன்னி அங்கம்
துன்புற வாளா நோற்றுத் துணிவினால் ஒழுக லுற்றார்.
(கந்த. ததீசி உத்தரப் படலம் 30)
என்று சொல்லத் தொடங்கி அவர்களுடைய செருக்கைச் சிவன் அடக்கிய
வரலாற்றை கச்சியப்பர் 98 பாடல்களில் விரிவாக எடுத்துரைக்கிறார்.
சிவனின் ஆணையின்படி
விஷ்ணு பஞ்ச சக்திகளில் ஒன்றாகிய மோகினி வேடம் தரித்தார். விஷ்ணு பெண் உரு எடுத்ததும்
ஆண் உருவிலிருந்த சிவனை மோகித்ததால் மால் என்ற பெயர் கொண்டார். அதுமுதலாக விஷ்ணுவிற்குத்
திருமால் என்ற பெயர் ஏற்பட்டது. மோகினி வடிவுடன் ரிஷிகளை மயக்கி அவர்களது தவவலிமையைக்
குறைக்கிறார் திருமால். சிவன் பிட்சாடனர் உருவம் கொண்டு சிவந்த சடைகள் அசைய கையில்
பாத்திரம் ஏந்தி ரிஷி பத்தினிகள் உள்ள குடிலுக்கருகில் செல்கிறார். இனிய குரலால் பண்களைப்
பாட அதனைக் கேட்க ரிஷிபத்தினிகள் சிவன்மீது காமம்கொண்டு பின்தொடர்ந்தனர். இஷ்டகாமியத்தை
விரும்பிய அவர்கள் தழுவுமாறு அவரவர் விரும்பிய உருவங்களைச் சிவன் மாயாஜாலத்தால் படைக்கிறார்.
அதன் பலனாகப் பிரசவ வருத்தமின்றித் தண்டு, கமண்டலம், சடைமுடி,
மரவுரியுடன் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் தோன்றினர்.
அவர்களைத் தவஞ்செய்யுமாறு கூறிவிட்டுச் சிவன் புறப்படுகிறார். பின்தொடரும் ரிஷிபத்தினிகளைச்
சிவன் அவர்தம் கணவன்மார் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்க்கிறார். ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும்
சந்திக்கையில்தான் சிவனின் மாயம் புலனாகிறது. தம் மனைவியர் கற்பை இழந்தமைக்குச் சினம்
கொள்ளும் ரிஷிகள் சிவனைக் கொல்ல அபிசார யாகம் நடத்தி யாக குண்டத்திலிருந்து பல்வேறு
பொருட்களைத் தோற்றுவிக்கின்றனர்.
யாகத்திலிருந்து
சிவனைக் கொல்லக் கொடிய புலியொன்று தோன்றுகிறது. அதனைக் கொல்லும் சிவன் அதன் தோலை உரித்து
ஆடையாக அணிகிறார்.
சூலத்தைச் சிவன்
ஆயுதமாக ஏற்கிறார்.
தன்னைக்கொல்ல வந்த மானை இடது கையில் ஏற்கிறார் சிவன்.
ஏராளமான விஷப் பாம்புகள் தோன்ற அவற்றை ஆபரணங்களாக
அணிந்துகொள்கிறார்.
யாக குண்டத்தில் தோன்றிய பூதகணங்களைத் தம் சேனைகளாக
ஆக்கிக் கொள்கிறார்.
ரிஷிகள் அதர்வண மந்திரங்கள் அனைத்தையும் ஜெபித்து
அதிர முழங்கும் உடுக்கையைத் தோற்றுவித்தனர். அதனையும் சிவன் கைப்பற்றிக் கொண்டான்.
முயலகன் என்ற அசுரன் தோன்றினான். அவனைத் தள்ளி மிதித்து அதன் மீதேறி நடனம் செய்கிறார்.
இறுதியில் முனிவர்கள் வேள்வித் தீயையே ஏவினர். அதனை மழுவாக மாற்றிக்கொள்கிறார் சிவன்.
சிவனிடம் காணப்படும் புலித்தோல், சூலம், பாம்புகள், பூதகணம்,
உடுக்கை, மழு ஆகிய அனைத்திற்குமான தொன்ம நிகழ்வைத் தெளிவுபடுத்தும்
முதல்நூலாகக் கச்சியப்பர் கந்தபுராணம் (கந்த. ததீசி உத்தரப் படலம் 30-127) விளங்குகிறது.
பிறை சூடல்
காமர் சென்னிப் / பிறை (புறம். 55:4-5) என்று
மருதனிளநாகனாரும் பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி (புறம். 91:5) என்று ஒளவையாரும்
குறிப்பிடுகின்றனர்.
கொலைவன் சூடிய குழவித் திங்கள் (கலி.
102:15)
சூடிய பிறை (கலி. 102:25)
மிக்கொளிர் தாழ்சடை மேவரும் பிறை நுதல்
(கலி. 103:11)
என்னும் பகுதிகள் அருஞ்சோழன் நல்லுருத்தினாரின் பதிவுகளாகவும்,
கோடுவாய் கூடாப் பிறையை பிறிதொன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள்கண் டாங்கே
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
காணான் திரிதரும் கொல்லோ - மணிமிடற்று
மாண்மலர்க் கொன்றையான் (கலி. 141:24-28)
புதுத்திங்கட் கண்ணியான் (கலி. 149:17)
என்பன நல்லந்துவனாரின் பதிவுகளாகவும்
குழவித் திங்கள் இமையோர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்தாயினும்
உரிதின் நின்னோ டுடன்பிறப் புண்மையின்
பெரியோன் தருக திருநுதல் ஆகென (சிலம்பு.
2:38-41)
பிறைமுடிக்கண்ணிப் பெரியோன் (சிலம்பு
11:72)
சென்னியன் இளம்பிறை சூடிய இறையவன்
(சிலம்பு. 22:86-87)
நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி (சிலம்பு.
26:54)
என்பது இளங்கோவடிகளின் பதிவாகவும் அமைந்து காரைக்காலம்மையாருக்கு
முன்பே சிவன் பிறைசூடும் தொன்மத்தை வெளிப்படுத்துகின்றன.
மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி (சிலம்பு.
12:54)
திங்கள் வாழ்சடை யாடி (சிலம்பு. 12:3.4)
சங்கரி யந்தரி நீலி சடாமுடிச்
செங்க ணரவு பிறையுடன் சேர்த்துவாய்
(சிலம்பு.12:21.3-4)
என்னும் பகுதிகளில் கொற்றவை தலையில் சூடும் அணிகலனாகவும்
பிறை அமைவதை இளங்கோவடிகள் பதிவுசெய்கிறார்.
காரைக்காலம்மையார்
சிவனின் தோற்றத்தைக் குறிப்பிடும் பல பாடல்களில் அவன் தலையில் பிறையைச் சூடியுள்ளமையைப்
பதிவாக்குகிறார் (அற்.திரு. 3.3-4, 11.3,
22.4, 35.1, 36.4,
37.2, 40.2-3, 56.4,
63, 64, 67.1,
69.1, 75.2, 88.3-4,
90.3, திரு.மூ.தி. 21.3, 23.1)
சிவன் இளம்பிறையைச்
சூடியுள்ளான் (அற்.திரு. 32.1-2, 38.1,
42, 43.1, 48.2,
71.1, 72.2-3, திருஇரட்டை
மணிமாலை 1.3-4) என்றும், அப் பிறை
வளராதது (அற்.திரு. 19.3) என்றும், அதனை
சடாமுடியின் இடப்பால் சூடியுள்ளான் (அற்.திரு. 71.1) என்றும் சிவன் சூடியுள்ள பிறையின்
தன்மைகளை ஆங்காங்கு சுட்டிச்செல்கிறார் அம்மையார்.
திருநீறு அணிதல்
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி யாடிய வியன் பாண் டரங்கமும்
(சிலம்பு. 6:44–45)
பிரமன் முன்னர் சிவபெருமான் வெண்ணீற்றை அணிந்து ஆடிய பாண்டரங்கக்
கூத்தை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இப்பகுதியில் சிவபெருமான் நீறு அணியும் செய்தி
சுட்டப்பெறுகிறது.
வெண்ணீற்ற / அம்மான் (அற்.திரு.
7.3-4) என்று பாடும் காரைக்காலம்மையார் வெண்ணீறு பூசும் சிவனின் இச்செயலையும் பல இடங்களில்
குறிப்பிட்டுச் செல்கிறார் (அற்.திரு. 29.3, 39, 59.3-4,
65.1-2, 95.2-3, திருஇரட்டை
மணிமாலை 12.3-4, 14.3-4).
மாதொரு பாகன்
சிவன் தன் மனைவியான
உமையம்மைக்குத் தன் உடலில் பாதியை ஈந்தவன்.
இமையச் சிமையத் திருங்குயி லாலுவத்து
உமையொரு பாகத்து ஒருவன் (சிலம்பு
28:102-103)
என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி (சிலம்பு.
12:63)
கொம்பினைஓர் பாகத்துக் கொண்ட குழகன் (அற்.திரு. 39.1) என்று
காரைக்காலம்மையாரும் மாதொருபாகனாகிய சிவனின் வடிவத்தைப் பாடுகிறார். மேலும் பல பாடல்களில்
உமையொரு பாகனாகிய சிவனின் தோற்றம் பதிவுசெய்யப்பட்டுள்ளது (அற்.திரு. 13, 41, 50, 51, 58, 59.2-4, 68, 71, 94, 95.1, திருஇரட்டை
மணிமாலை 12.2-3).
விடை வாகனன்
ஆன் ஏற்றுக் கொடியோன் (கலி. 26:5) என்று பாலைபாடிய
பெருங்கடுங்கோ சிவனின் கொடி எருதுச் சின்னம் உடையது என்பதனைக் குறிப்பிடுகிறார்.
வெள் ஏறு / வலம்வயின் உயரிய (திருமுருகு. 151-152), ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை (புறம்
56:1) – எனச் சுட்டும் நக்கீரனாரும்,
புங்கவம் ஊர்வோன் (பரி 8:2), உருவ ஏற்று ஊர்தியான் (கலி.149:13) என்று சுட்டும்
நல்லந்துவனாரும், சிவபெருமானின் வாகனமாக
எருதினைக் கூறுகின்றனர்.
ஆனேற்றாய் (அற்.திரு. 59.3)
அங்கோர் ஏறுகந் தேறுவதே
(திருஇரட்டை மணிமாலை 17.4)
ஏறலால் ஏற மற்றில்லையே எம்பெருமான்
(திருஇரட்டை மணிமாலை 18.1)
சுமக்கின்ற பிள்ளை
வெள்ளேறு
(திருஇரட்டை மணிமாலை 19.3)
என்றெல்லாம் சுட்டும் காரைக்காலம்மையார் சிவபெருமான் ஏறியுள்ள
எருது வாகனத்தின் தன்மையாக,
நடக்கிற் படிநடுங்கும் நோக்கிற் திசைவேம்
இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கற்
பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னே
றுருமேறோ ஒன்றா உரை (அற்.திரு. 100)
என்று குறிப்பிடுகிறார்.
மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலை விடையாகக் கொண்டவனே என்னும்
பொருள்பட நிற்கும் மஞ்சுபோல் மால்விடையாய் (அற்.திரு. 94.3) என்னும் பகுதி திருமாலே
எருதாகத் தோற்றம் கொண்டான் எனச் சுட்டுகிறது.
மேற்கண்ட பகுதிகளில்
காரைக்காலம்மையாருக்கு முன்பும் காரைக்காலம்மையார் பாடல்களிலும் காணப்பெற்ற சிவன் தொடர்பான
தொன்மங்கள் ஒருதிறத்தனவாக அமைந்திருக்கின்றன. ஆனால் சிலப்பதிகாரத்தில் சிவனுக்குரிய
தொன்மங்களைப் பதிவுசெய்யும் இளங்கோவடிகள் அவற்றில் பலவற்றைக் கொற்றவைக்குரிய தொன்மமாகவும்
வகுத்துரைக்கக் காணலாம்.
சிலம்பின் இவ்வேட்டுவவரி பழந்தமிழர்களின் கொற்றவை
வழிபாடு குறித்த தகவல்களின் களஞ்சியமாக இளங்கோவடிகளால் படைக்கப்பட்டுள்ளது. . . .
கொற்றவையின் தோற்றம் குறித்துச் சிலம்பின் வேட்டுவவரி படைத்துக்
காட்டும் வருணனையில் குறிஞ்சி, முல்லைநிலத்
தாய்த்தெய்வக் கொற்றவையின் பழைய உருவம் மாற்றம்பெற்று புதிய வைதீகத் தோற்றத்தைக் காணமுடிகிறது.
கொற்றவையின் புதிய தோற்றம் சிவனின் தோற்றத்தை ஒத்ததாக வருணிக்கப் பட்டுள்ளமையை நோக்கும்போது
தாய்த்தலைமைத் தெய்வமாயிருந்த கொற்றவை, தந்தைத் தலைமைச் சமூகத்தில் ஆண்தெய்வமாம் சிவனோடு கலந்து ஒருமைப்பட்டுள்ளமையை
உணர முடிகின்றது. (நா. இளங்கோ)
என்னும் கருத்தின் அடிப்படையில் சிவனுக்கும் பொருந்திவரும்
கொற்றவை குறித்த தொன்மங்களைச் சிவனுக்குரிய தொன்மங்களாகக் கொள்ளலாம்.
இலங்கை திரிகோணமலையில் (16.12.2016) |
Super super blessing u
ReplyDelete