Sunday 19 February 2017

செவ்வியல் இலக்கியங்களில் மீவியல் நடனம்


கலையுணர்வு மனித இனத்திற்கு வரமாக அமைந்து வாழ்க்கைக்கு இன்பத்தை மிகுவிக்கிறது. ஆயகலைகள் அறுபத்து நான்கு என்று உரைப்பர். இக்கலைகளுள் சிறப்பிடத்தைப் பெறுவன இசைக்கலையும் நடனக் கலையுமாகும். மனிதர்க்கு உரிய இக்கலைகளை இறைவனுக்கும் உரியதாகக் கருதுகின்ற மனப்பாங்கு இந்தியப் பண்பாட்டில் நிலவுவதைக் காணலாம். நடனக் கலை கடவுளர் வாழ்வதாகக் கருதப்படும் வானுலகிலும் எவ்வாறு சிறப்புற அமைந்துள்ளது என்பதைச் செவ்வியல் இலக்கியங்கள் வகுத்துரைக்கும்; தன்மையை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
இந்திரலோகத்தில் நாட்டியம்
      இந்திரலோகத்தில் தெய்வமகளிரின் நாட்டியம் நிகழும் என்ற செய்தி பரவலாக நம்பப்படுகிறது. விஞ்சையன் ஒருவன் தன் மனைவியுடன் வான்வழியாகப் பூம்புகாரைச் சுற்றிப்பார்க்கும்போது  மாதவியைக் கண்ணுறுகிறான். மாதவியின் மூதாதையரின் வரலாற்றை அறிந்த அவ் விஞ்சையன் மாதவி ஊர்வசியின் வழியில் பிறந்தவள் என்பதைத் தன் மனைவிக்கு எடுத்துரைக்கிறான். ஊர்வசி இந்திரலோகத்தில் நடனமாடியபோது இந்திரன் மகன் சயந்தனைக் கண்டு மனம் மயங்கி ஆடலைப் பிறழ ஆடியதால் சபிக்கப்பட்டு மண்ணுலகடைந்தாள் என்பதை,
நாரதன் வீணை நயந்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரங் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்கா ளாகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
தங்குக இவளெனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி (சிலப். கடலாடு காதை 18-24)
என்று கூறுகிறான். இப்பகுதியின் மூலம் இந்திரலோகத்தில் ஊர்வசி என்னும் நடனமங்கை இருந்தாள் என்பதையும் அங்கு இந்திரனை மகிழ்வுறுத்த நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதையும் இளங்கோவடிகள் வெளிப்படுத்துகிறார்.
சிவன்
கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப்பாடல் சிவபெருமான் ஆடிய நடனங்களை,
படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ
கொடுகொட்டி யாடுங்காற் கோடுய ரகலல்குல்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ
மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து
பண்டரங்க மாடுங்காற் பணையெழி லணைமென்றோள்
வண்டரற்றுங் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ
கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவற்புரளத்
தலையங்கை கொண்டுநீ காபால மாடுங்கால்
முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என்று குறிப்பிடுகிறது. இப்பாடலில் சிவபெருமான் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் ஆகிய கூத்துகள் குறிக்கப்பெறுகின்றன.
சிவபெருமான் முப்புரம் எரித்தபோது சிவனின் நோக்கத்திற்கேற்ப அவன் செலுத்திய அம்பு எரிமுகத்தோடு தப்பாமல் கமலாஷன், தாருகாஷன், வித்துற்மாலி என்னும் மூன்று அரக்கரின் பொன், வெள்ளி, இரும்பினாலான கோட்டைகளையும் அழிக்க அதனால் மகிழ்ந்து கொடுகொட்டி என்னும் ஆடலை ஆடினான் என்பதை,
பாரதி யாடிய பாரதி அரங்கத்துத்
திரிபுர மெரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம் பேவல் கேட்ப
உமையவள் ஒருதிற னாக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்
(சிலப். கடலாடு காதை 39-43)
என்ற விஞ்சையன் கூற்றாக வெளிப்படுத்துகிறார் இளங்கோவடிகள்.
திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்
புரிதரு செங்கையிற் படுபறை ஆர்ப்பவும்
செங்கண் ஆயிரம் திருக்குறிப்பு அருளவும்
செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை ஒலியாது மென்முலை அசையாது
வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது
உமையவள் ஒருதிற னாக ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்
(சிலப். நடுகற் காதை 67-75)
என்று சிவன் ஆடிய கொடிகொட்டி நடனத்தின் சிறப்பு உரைக்கப்பெறுகிறது. உமையொரு பாகனாக விளங்கும் சிவனும் உமையும் பாதிப்பாதியாக நின்ற உடலில் உமையின் புறமாக இருந்த பாடகம், சூடகம், மேகலை, குழை ஆகிய அணிகலன்களும் குழலும் மார்பும் அசையாமல் சிவனுடைய உடற்பகுதியில் காணப்பெறும் சிலம்பு புலம்ப சடைமுடி ஆட பறை அடித்து ஒரு கண் மட்டும் அசையுமாறு ஆடியதாகக் கூறும் செய்தி நுணுக்கமுடையது. இத்தகைய நடனவகை ஆடற்கு அரிதாக அமைவதனை நடனக்கலை வல்லோர் உணரக்கூடும்.
பைரவி
பாரதி யாடிய பாரதி அரங்கம் என்பதால் பைரவியும் நடனமாடியமை வெளிப்படுகிறது. மேலும் சிவனை மகிழ்விக்க உமையவளும் நடனம் ஆடினாள் என்பதும் பெறப்படுகிறது.
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண் டரங்கமும்
(சிலப். கடலாடு காதை 44-45)
என்னும் பகுதியில் இறைவன் வெண்ணீறு அணிந்து பாரதி கோலத்தில் உலகமாகிய தேரின் முன் திசைநான்கிலும் முகமுடைய நான்முகன் காணுமாறு பாண்டரங்கம் என்னும் கூத்தை ஆடியதாக இளங்கோவடிகள் பதிவுசெய்கிறார்.
கொற்றவை
அரக்கர்களைக் கொன்றொழிப்பதற்காக கொற்றவை மரக்கால் ஆடல் ஆடியதாக இளங்கோவடிகள் உரைக்கிறார்.
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்
(சிலப். கடலாடு காதை 58-59)
ஆய்பொ னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும்
      ஆர்ப்ப ஆர்ப்ப
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல்
வாளமலை யாடும் போலும்
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல்
வாளமலை யாடு மாயின்
காயா மலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி
காட்டும் போலும் (சிலப். வேட்டுவ வரி 11)
எனவரும் பகுதிகள் துர்க்கை ஆடிய மரக்கால் நடனம் தோன்றிய சூழலை எடுத்துரைக்கின்றன. அரக்கர்கள் தேள், பாம்பு முதலான கடிய விஷமுள்ள ஜீவராசிகளாக உருவெடுத்து துர்க்கையைத் தீண்ட வந்ததால் அவற்றை நசுக்கி அழிப்பதற்காக மரக்கால்மேல் நின்று நடனமாடினாள் என்பதாகக் கூறப்படுகிறது. பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலை என்று தொல்காப்பியப் புறத்திணையியல் (17) அமலை என்னும் கூத்தின் இலக்கணத்தை வகுத்துரைக்கிறது. போர்க்களத்தில் ஆடப் பெறுவதால் இதனை ஆடுவோர் மரக்காலில் நின்று சேய்மையில் உள்ளவரும் காணுமாறு ஆடியிருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. இதுவே தற்காலத்தில் மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் ஆகிய நாட்டுப்புறக் கலைவடிவங்களாகக் கால்கொண்டிருப்பதை அறியமுடிகிறது.
திருமகள்
அவுணர்கள் போர்க்கோலம் பூண்டபொழுது அவர்களின் நோக்கத்தைத் திசைதிருப்பி அவர்கள் மயங்கி வீழும்படிக் கொல்லிப்பாவை தோற்றத்தில் திருமகள் ஆடிய பாவைக்கூத்தினை,
செருவெங் கோலம் அவுணர் நீங்கத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்
(சிலப். கடலாடு காதை 60-61)
என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
இந்திராணி
      வாணன் என்னும் அசுரணின் சோ நகரத்தின் வடக்கு வாயிலில் கடைசி அதாவது உழத்தி வடிவம் மேற்கொண்டு இந்திராணி ஆடிய கடையக் கூத்தினை,
வயலுழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்
(சிலப். கடலாடு காதை 62-63)
என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
முருகன்
கரிய கடலின் நடுவிடத்தில் அலைகளையே அரங்காகக்கொண்டு சூரனை வதைத்த வெற்றிக்களிப்பில் முருகன் துடியைக் கொட்டித் துடிக்கூத்து ஆடியதை,
. . . மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற
சூர்திறங் கடந்தோன் ஆடிய துடியும்
(சிலப். கடலாடு காதை 49-51)
என்னும் பகுதியிலும் முருகனை எதிர்நிற்க மாட்டாமல் அவுணர்கள் தம் படைக்கலங்களை எறிந்துவிட்டுப் போர்க்களத்தில் ஆற்றல் இழந்து நின்றபோது முருகன் தனது வெண்கொற்றக் குடையைச் சாய்த்துச் சாய்த்து ஆடிய குடைக்கூத்தை,
படையவிழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடைவிழ்த்து அவர்முன் ஆடிய குடையும்
(சிலப். கடலாடு காதை 52-53)
என்னும் பகுதியிலும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
திருமால்
      அரக்கர்களை வதைத்தபொழுது திருமால் ஆடிய நடன வகைகளையும் விரித்துரைக்கிறார் இளங்கோவடிகள்.
கஞ்சமன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும் (சிலப். கடலாடு காதை 46-48)
எனவரும் பகுதியால் கண்ணன் பலவகை நடனங்களை ஆடினான் என்பதும் அவற்றுள் அல்லியத் தொகுதி என்பது ஒன்று என்பதும் பெறப்படுகின்றன. அவன் ஆடிய ஆடல் வகைகள் பத்து என்று உரையாசிரியர் கூறுகின்றனர். கம்சனால் வஞ்சகமாக ஏவப்பட்ட யானையை வெற்றி கொள்வதற்காகக் கண்ணன் ஆடிய நடனம் அல்லியக் கூத்து எனப்படும் என்பது சிலப்பதிகாரத்தால் புலப்படுகிறது.
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும்
(சிலப். கடலாடு காதை 54-55)
என்ற பகுதி நெடியோனாகிய திருமால் ஆடிய குடக்கூத்தினைக் குறிப்பிடுகிறது. வாணாசுரனின் மகளாகிய உழை என்பவள் காமனின் மகனாகிய அநிருத்தன் என்பவன் மேல் மையல்கொண்டு அவனைக் கடத்திக்கொண்டுபோய் சோ என்னும் நகரத்தில் தன் உவளகத்தே சிறைவைத்ததாகவும் திருமால் அவனைச் சிறைவீடு செய்தபின் உலோகத்தாலும் மண்ணாலும் இயற்றப்பெற்ற குடங்களைக்கொண்டு குடக்கூத்து ஆடியதாகவும் கூறப்படுகிறது. இக் குடக்கூத்து விநோதக் கூத்து வகைகளில் ஒன்றாகும்.
. . . அவுணற் கடந்த
மல்லின் ஆடலும் . . . (சிலப். கடலாடு காதை 48-49)
என்னும் பகுதி அசுரனாகிய வாணனை வீழ்த்துவதற்காகத் திருமால் ஆடிய மற்கூத்தைக் குறிப்பிடுகிறது.
      ஆய்ச்சியர் குரவையில் ஆயர்பாடியில் கண்ணன் ஆடிய குரவைக் கூத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள். அக் குரவைக் கூத்தை மதுரை நகரத்து ஆய்ச்சியர் ஆடுவதாகக் காட்டுகிறார் அவர்.
மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர
ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழுதேத்தத்
தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே
(சிலப். ஆய்ச்சியர் குரவை, ஆடுநர்ப் புகழ்தல்)
என்னும் பாடல் கோவலர் சிறுமியரின் கூந்தலும் மாலையும் கட்டவிழுமாறு அவர்களின் வளையோசைக்கேற்பக் கண்ணன் தன் தமையனாகிய பலதேவனோடும் நப்பின்னைப் பிராட்டியோடும் குரவைக் கூத்து ஆடியதாகவும் அதனைக் கண்டு யசோதை கைகூப்பித் தொழுது புகழ்ந்ததாகவும் குறிப்பிடுகிறது. இதனை,
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவை இஃதாமென நோக்கியும்
   (மணி. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை 65-66)
என்று சீத்தலைச் சாத்தனாரும் குறிப்பிடுகிறார்.
காமன்
வாணாசுரனை அழித்துத் தனது மகன் அநிருத்தனைச் சிறைவீடு செய்வதற்காகத் திருமால் சென்றபோது உடன்சென்ற காமன் ஆண்மை திரிந்த திருநங்கை உருவெடுத்து பேடியாடலை நிகழ்த்தினான் என்பதை,
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி யாடலும்
(சிலப். கடலாடு காதை 56-57)
என்று இளங்கோவடிகள் சுட்டுகிறார். இதனைச் சீத்தலைச்சாத்தனாரும்,
சுரியற் றாடி மருள்படு பூங்குழல்
பவளச் செவ்வாய்த் தவள வாள்நகை
ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக்
கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல்
காந்தளஞ் செங்கை ஏந்திள வனமுலை
அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து
வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய
பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்
(மணி. மலர்வனம் புக்க காதை. 116-25)
என்று தம் காப்பியத்தில் மிக விரிவாக எடுத்துரைக்கிறார். இப் பேடு என்னும் கூத்து புறநாடகங்கள் பதினொன்றனுள் ஒன்று என்று கூறுவர்.
மேற்கூறிய செய்திகளை நோக்குமிடத்து சிவன், திருமால், முருகன், காமன், கொற்றவை, பைரவி, திருமகள் ஆகிய கடவுளர் பலவகை நடனங்களை ஆடிய புராணச் செய்திகளை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளமையைக் காணமுடிகிறது. இறை சார்ந்த மீவியல் நடன வகைகள் அனைத்தும் போர்ச் சூழலில் ஆடப்பெற்றமையை அறியமுடிகிறது. இவற்றை நோக்கும்போது போர்ச்சினமும் அதன் பின் அடைகின்ற வெற்றிக் களிப்பும் நடனம் தோன்றியதற்குக் காரணமாய் இருந்தமையை உறுதிப்படுத்த இயலுகிறது. இத்தகைய மீவியல் நடன வகைகளை இளங்கோவடிகள் பிறரைக் காட்டிலும் மிகச் சிறப்பாகப் புலப்படுத்தியிருத்தல் நடனங்களைப் பற்றிய அவரது ஆழ்ந்த ஈடுபாட்டை அறிவிக்கிறது எனலாம்.


 காண்க : ஔவை இரா நிர்மலா, சமயச் சாரலில், காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2016, பக்.72-80.   

No comments:

Post a Comment