நாட்டிற்கும் நதிகளுக்கும்
பெண்பெயரை வைப்பார்!
தினம்
நாவினிக்க அவர்பெருமை
பேசிப்பேசிக் களிப்பார்!
பெண்ணை
வீட்டினிலே பூட்டிவைத்து
வன்கொடுமை புரிவார்!
விட்டில் பூச்சியைப்போல்
கேவலமாய்
நசுக்கித் தூரஎறிவார்!
இதுவா நமது தேசம்?
அட
இதுதான் நமது தேசம்!
வாழ்லில்
கலையாத கனவான
திருமணங்கள்!
பெண்ணின் கண்ணீரால்
தினம்நனையும்
தலையணைகள்!
மணச்சந்தையில்
விலைபோக வில்லையென்று
பெற்றோரே
மகளை
வினையாக நினைக்கின்ற
இழிகுணங்கள்!
இதுவா நமது தேசம்?
அட
இதுதான் நமது தேசம்!
பெண்
சிசுவைத்
தலைதிருகிக்
கொன்றுபோடக் கூசார்!
அதைப்
பெற்றெடுத்த தாய்மனதின்
வேதனையைப் பேசார்!
வரதட்சணை
கேட்டுப் பெண்ணைக்
கொலைசெய்ய முனைவார்!
சமைக்கும்போது
தீப் பிடித்ததெனப்
பொய்க்கதைகள் புனைவார்!
இதுவா நமது தேசம்?
அட
இதுதான் நமது தேசம்!
புதுச்சேரி கலைப் பண்பாட்டுத்துறை நடத்திய கவியரங்கில் (8.02.2017) |
No comments:
Post a Comment