பதினெட்டாம்
நூற்றாண்டில் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்து பல்வேறுபட்ட தெலுங்குக் கீர்த்தனைகளைப்
பாடியவர் தியாகராய சுவாமிகள். அவர் கீர்த்தனங்களைத் தெலுங்கில் பாடினாலும் அவரது வாழ்க்கை
முழுதும் தமிழகத்தில் அமைந்தமையை அறிகிறோம். எனவே அவருடைய பாடல்களில் புலனாகும் சமுதாயம்
அக்கால கட்டத்துத் தமிழ்ச் சமுதாயத்தைக் குறிப்பதாகவே எடுத்துக்கொள்ளல் சாலும். தியாகையர்
கர்நாடக இசையை முறையாகக் கற்றதன் பயனாக அவருடைய பாடல்கள் அனைத்தும் கர்நாடகக் கீர்த்தனை
வடிவில் அமைந்திருக்கின்றன. தியாகையர் பாடல்கள் இறைவனை மனமுருகிப் பாடுவதாக அமைந்தாலும்
அவற்றில் சமுதாய அக்கறையும் இழையோடுவதைக் காணமுடிகிறது. இந்நிலையில் தியாகையரின் பாடல்களில்
காணப்பெறும் சமுதாய அக்கறையை வெளிப்படுத்துவதாக இக் கட்டுரை அமைகிறது.
பேராசை
ஒழித்தல்
ஆசையை ஒழித்தல் வேண்டும் என்னும் அறிவுரையைத்
தொன்றுதொட்டுச் சமயவாதிகளும் அறிஞர்பெருமக்களும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
தியாகையரும் அளவுக்கதிமான பொருளைச் சேர்க்கின்ற பேராசையை விடுமாறு சமுதாயத்தினருக்கு
அறிவுறுத்த விரும்புகிறார். இதனை நேரடியாகக் கூறாமல் பேராசைமிக்க தன் மனத்திற்கு உரைப்பதுபோல்
கூறுகிறார். ‘ஆயிரக்கணக்கான பணமிருந்தாலும் உன் பசிக்குக் கையளவு நொய் போதாதா?
ஆயிரம்
புடவைகள் இருந்தாலும் உடுத்திக்கொள்வது ஒன்றுதானே? ஊரே சொந்தமானாலும்
படுப்பதற்கு மூன்று முழம் இடம்தானே? நூறுவகை பலகாரங்கள் இருந்தாலும் வாய்நிறையும்
வரைதானே உண்ணமுடியும்? ஆறு நிறைய நீரிருந்தாலும் பாத்திரம் அளவுதானே நீர் எடுக்க முடியும்?
ஆகவே
நெஞ்சே! பேராசையை விட்டுத் திருமாலை வணங்குவாயாக’ என்று தன் நெஞ்சிற்கு
எடுத்துரைக்கிறார். இப்பொருளை,
ரூகலு பதிவேலுன்ன
சேரெடு
நூகலு கதிகானி
ஓ மனஸா
கோகலு வெய்யுன்ன
கட்டு
கொனுட கொகடிகானி
ஓ மனஸா
ஊரேலின தா பண்டுட
மூடுமுர தாவு கானி
நூரு பஷணமுலப்பின
எந்தோ நோடி கந்தகாளி
ஏரு நிண்டின பாரின
பாத்ரரு தகு நீரு வச்சுகானி
ஸார தருனி ஹரினி
த்யாகராஜ
ஸந்நுதுனி மரவகே
மனஸா (29)
எனவரும் தியாகையருடைய
தெலுங்குக் கீர்த்தனை உணர்த்துகிறது.
பிறர்க்கு
உதவுதல்
செல்வத்தின் பயனே ஈதல் என்பர். பிறருக்கு
ஈயாதவர்கள் வாழ்ந்தென்ன? இறந்தென்ன? எட்டி மரம் காயாது
இருந்தென்ன? காய்த்துப் பயனென்ன? என்று காலங்காலமாக அறிஞர் உரைப்பர்.
தியாகையரும் செல்வம் இருந்தும் பிறருக்கு அளித்து வாழாதவர்கள் வாழ்வதால் பயனில்லை என்பதை,
ஸாரமௌ கவிதல வினி
வெர்றிவாடு
ஸந்தோஷபடி யேமி
படகேமி
சேரடேஸி குட்டி
கன்னுலு பாகுக
தெரசியேமி தெரவகுண்டின
நேமி
துரக வீதிலோ விப்ருனிகி
பாகனபூஜ
நெரஜேஸிநேமி ஸேயகுண்டேநேமி
தரநீநி தனகோடுலகு
யஜமானுடு
தா ப்ரதிகியேமி
தய்யமைன னேமி (33)
எனவரும் கீர்த்தனை
மூலம் புலப்படுத்துகிறார். அதாவது, பைத்தியக்காரன் சுவையுள்ள பாடலைக் கேட்டுச்
சுவைத்தென்ன? சுவைக்காவிட்டால் என்ன? குருடனுடைய கண்கள்
திறந்தென்ன? மூடியிருந்தாலென்ன? அதுபோல் கருமியாக இருக்கின்ற செல்வந்தன்
வாழ்ந்தென்ன? இறந்தென்ன? என்று அவர் வினாக்களைத் தொடுத்து ஈதலின்
சிறப்பை விளக்குகிறார்.
மனத்துக்கண்
மாசிலனாதல்
பல தீர்த்தங்களில் நீராடினாலும் உள்ளத்
தூய்மையற்றவன் சிறந்தவன் ஆகமாட்டான். மனத்திலுள்ள மாசுகளை அகற்றியபின் செய்யப்படுகின்ற
இறைவழிபாடே உகந்ததாக இருக்கமுடியும் என்பதை,
த்யானமே வரமைன
கங்கா ஸ்நாநமே, மனஸா
வானநீட முனுக முனுக
லோனி வஞ்சன
த்ரோஹமனு கர போனா?
பரதன நாரீமணுலனு
தூரி
பரநிந்தல பரஹிம்ஸல
மீரி
தரனு வெலயு ஸ்ரீராமுனி
கோரி
த்யாகராஜு தெலுஸ§கொன்ன
ராம (39)
என நெஞ்சிடம் கூறுவதாக
எடுத்துரைக்கிறார். அதாவது, 'ஓ மனமே, ராம தியானமே சிறந்த
கங்காஸ்நானம். தீர்த்தங்களில் எவ்வளவு மூழ்கினாலும் மனதிலுள்ள வஞ்சனை, துரோகம்
முதலிய கறைகள் மறைந்துவிடுமா? பிறருடைய பொருள், பெண்டிரை வெறுத்து
நிந்தை, தீங்கு, இவற்றை நீக்கித் தியாகராஜன் அறிந்துகொண்ட
ஸ்ரீராம தியானமே சிறந்தது என உணர்க' என்று எடுத்துரைக்கிறார்.
பொய் வேடதாரிகள்
காமத்தில் கட்டுண்ட பலர் காவியுடை
தரித்துத தம்மைப் பாகவதர்கள்போல் காட்டிக்கொண்டு உலகை ஏமாற்றுகிறார்கள். எவ்வாறு பாலின்
சுவையைப் பாத்திரம் எவ்வாற அறியாதோ அதேபோன்று இறைவனின் மகிமையை இப் போலி வேடதாரிகளால்
அறிந்துகொள்ள இயலாது என்பதை,
எந்தவாரலைன கானி
காம
சிந்தாக்ராந் துலைநாரு
அத்தமீத கநுலஸாகு
தாஸ§லு
ஸத்த பாகவத வேஸ§லைரி
துத்த பாலுருசி
தெலியு ஸாம்யமே
துரீணுடௌ த்யாகராஜநுதுடு
(87)
என்னும் கீர்த்தனையில்
புலப்படுத்துகிறார்.
வாழ்க்கையில்
பொய்மை
சிலர் தாமும் தம்மைச் சார்ந்த மனைவி,
குழந்தைகளும்
வாழவேண்டும் என்பதற்காகச் செல்வந்தர்களை அண்டி, அவர்களைப் புகழ்ந்து
அவ்வாறு சம்பாதித்த பணத்தினால் செருக்கடைந்து திரிகின்றனர். அத்தகையவர்களில் ஒருவனான
என்னையும் எவ்வாறு காக்கப்போகிறாய் என்று தியாகையர் இறைவனை நோக்கிக் கேட்கும்போது அத்தகைய
மக்களை உய்விக்குமாறு இறைவனை வேண்டுவதாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது.
அனுதினமுனு தாரதனய
வர்காதுலபா
லனமு ஸேயுடகொரகு
தனமுலு கலிகின
மனுஜுலபொகடி ஆர்ஜிஞ்சின
பைகமுல ஜூசி
தனகு ஸரிலேதனி
புகுவுன திரிகின நந்
நெடுல காபாடுதுவோ
ஸ்ரீராம சந்த்ர (45.1)
எனவரும் பாடற்பகுதி
தியாகையரின் சமுதாய அக்கறையை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
தீநெறி
வாழ்க்கை
மக்கள் பலருடைய வாழ்க்கை தீயநெறியில்
செல்வதைப் பார்த்த தியாகையர் ‘கடைத்தேறும் வழியாதோ?’ என்று
வருந்துகிறார். மக்கள் செய்யும் தீய செயல்களைத் தன்மீது ஏற்றிக் கூறிச் சமுதாயத்திற்கு
உண்மை உணரவைக்கிறார்.
பட்டிகொட்டு ரீதி
பஷிஞ்சி திரிகிதி
புட்டு லோபுலனு
பொட்டனை பொகடிதி
துஷ்டுலதோகூடி
தூஷிக்ருத்யமுல ஸல்பி
றட்டு ஜேஸின த்யாகராஜுனி
தயதோ
எடுல ப்ரோதுவோ
தெலிய தேகாந்த ராமய்யா (83)
எனவரும் கீர்த்தனையில்
பட்டியில் அடைபடும் மாடுகளைப்போல் திரிந்து சாண் வயிற்றிற்காகக் கருமிகளைப் புகழ்ந்து,
தீயவர்களோடு
கூடித் தீயசெயல்களைப் புரிகின்ற மக்களைக் காக்குமாறு இறைவனை வேண்டுகிறார் தியாகையர்.
குடிமக்களைக்
காவாத அரசு
பக்திப் பாடல்களைப் பாடுகின்ற பக்தர்கள்
தம்மையும் போற்றிப் பாடவேண்டும் என்று அரசர்கள் எதிர்பார்த்தமை இலக்கிய வரலாற்றால்
அறியப்படுகிறது. ஆனால் உலகியல் ஆசையை வெறுத்து இறைநெறியில் முற்றிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட
உண்மையான சமயவாதிகள் இச்செயலில் ஆர்வம் காட்டாமல் அரசர்களை அலட்சியப்படுத்தியுள்ளனர்.
இதே நிகழ்வு தியாகையர் வாழ்விலும் நிகழ்ந்தது. பக்தர்கள் தம்மைப் போற்றவில்லை என்ற
காரணத்திற்காக அரசன் அவர்களை அலட்சியப் படுத்துதல் நியாயமற்றதாகும். ஏனெனில் தம் நாட்டில்
வாழ்கின்ற எவராயினும் பாரபட்சமின்றி அவர்களைக் காப்பது அரசனின் கடமையாகும். பக்தர்களைக்
காக்காமல் அலட்சியப்படுத்துகின்ற அரசர்களைத் தியாகையர் கண்டிக்கிறார். அந்தணர்கள் தங்கள்
வாழ்நாள் முழுக்க வள்ளல்களைத் தேடி யாசித்து வாழவேண்டும் என்றால் அவர்கள் வாழ்க்கையில்
எந்த இன்பமும் ஏற்படாது. நியாயத்தை விட்டு அரசாட்சி நடத்தினால் எந்த இலாபமும் ஏற்படாது
என்று தியாகையர் உரைக்கின்றார்.
காஸிச்சேதெ கொப்பாயெனுரா
கலிலோ ராஜுலகு
ஹரிதாஸ§லு ஸேவிம்பரநுசு
ப்ரபுவுலு
தயமானிரி பரமெஞ்சக
போயிரி
ராஜாங்கமு கொரகு
நால்கு ஜாதுல
ரஷண பரஸ§கமோ
ராஜஸ§லை ஸன்மார்க
மெறுககப
ராகு ஸேய கனமோ
ஆஜன்மமு கொலிசே
விப்ரவருல
கானந்தமு கலதோ
த்யாக (78)
எனவரும் கீர்த்தனைப்
பகுதி அரசாங்கத்தின் கடமையை முன்னிறுத்துகிறது.
தியாகையருடைய
பாடல்களின் மையநோக்கம் இறைவனைப் போற்றுவதாகவே அமைகிறது. இருப்பினும் அவரது பல பாடல்கள்
சமுதாயத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிமுறைகளையும் சுட்டிச்செல்வதன்
மூலம் சமுதாயநலன் மீது அவர்கொண்ட அக்கறையை வெளிப்படுத்துகின்றன.
பயன்நூல்:
ஸத்குரு ஸ்ரீத்யாகராஜ
கீர்த்தனைகள், சென்னை : ஏ.கே.கோபாலன் பப்ளிஷர், 1984.
No comments:
Post a Comment