அன்று ஒரு நாள்
. . . அந்த நாள்தான் என் வாழ்க்கை பிழைபடக் காரணமாயிற்று. அந்த ஒரு நாளை என் வாழ்க்கையிலிருந்து
அழித்துவிட்டு மீண்டும் என்னால் வாழ முடிந்தால்?
அன்று நான் தழையத்
தழையப் பட்டுப்புடவை உடுத்தியிருந்தேன். என் ஒடிசலான தேகத்திற்கு அது அழகைக் கூட்டியிருந்தது
போலும். கழுத்தில் பழங்காலத்து அட்டிகை.
என் சின்ன வயதிலேயே
என் அம்மா இறந்துவிட்டிருந்தார். என் அப்பா ஓர் எழுத்தாளர். கொள்கைவாதி என்பதால் என்
ஆடை, அணிகலன்
விஷயத்தில் சிறிதும் அவர் கவனம் செலுத்தவில்லை. எனக்கும் நகைகளிலெல்லாம் பெரிதாக எந்தவித
நாட்டமும் இல்லை. அதனால் என் அம்மாவின் இறப்பிற்குப் பின் நான் ஒரு குன்றிமணி அளவு
தங்க நகைகூட என் அப்பாவிடம் கேட்கவுமில்லை. அவர் வாங்கித்தரவும் இல்லை. அம்மாவின் பழமைவாசம்
மிக்க தங்கநகைகள் ஏராளமாகவே பெட்டியில் இருந்தன.
அப்பா தன் உயிர்த்தோழரின்
மகன் திருமணத்திற்கு என்னையும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். கிறுக்குத்தனமான
ஏதோ ஒரு யோசனையில் நான் பெரியவளான அன்று கட்டிய பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டேன்.
அன்று தைத்த இரவிக்கை இன்னும் அளவு சரியாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
பட்டுப்புடவை உடுத்திக்கொண்டதும் அதற்கு ஏற்ப அணிகலன்களையும்
எடுத்து அணிந்துகொண்டால் என்னவென்று தோன்றியது. செயல்படுத்தினேன். இது நான் செய்த இரண்டாவது
தவறு.
கண்ணாடியில் என்னைப்
பார்த்துக் கொண்டேன். என் பட்டுப்புடவையும் பழங்கால நகைகளும் என் பெண்மைத் தோற்றத்தில்
ஒரு நூற்றாண்டுப் பழமையைப் புகுத்தியிருந்தன.
கல்யாண மண்டபம் களைகட்டி இருந்தது. அப்பா
ஓர் எழுத்தாளர் என்பதால் அவர் மகளான என்மீதும் ஆர்வப் பார்வைகள் உரசிச்சென்றன. அறிமுக
விசாரிப்புகள் படிந்தன.
பட்டுப் புடவையில்
நுழைந்துகொண்டு கழுத்து, கைகளில் அணிகலன்களையும் அணிந்துகொண்ட பிறகு
என்னால் சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை. நடக்கும்போது காலில் பட்டுப்புடவை சிக்கிக்கொண்டு
வந்தது. கழுத்தை அப்படி இப்படித் திருப்பமுடியாமல் அட்டிகையும் தங்கச் சரடுகளும் தடுத்தன.
கையைத் தூக்கினால் வளையல்கள் சிணுங்கியதால் கைகளையும் அடக்கமாக வைத்துக்கொண்டேன்.
எப்போதும்போல்
ஒரு கால்சட்டையும் ஒரு லூசான டீ சர்டும் போட்டு வந்திருந்தால் எவ்வளவு வசதியாக இருந்திருக்கும்
என்று எண்ணத் தோன்றியது. உயிர்த்தோழர் என்பதால் அப்பா உடனடியாகக் கிளம்புவதாகக் காணோம்.
கல்யாண மண்டபத்தை அனைவரும் காலிசெய்தபின்தான் கிளம்புவார் போன்று இருந்தது. வாடகைக்
காரை எடுத்துக்கொண்டு சென்றிருந்ததால் நான் மட்டும் தனியே வீட்டிற்குத் திரும்பவும்
அப்பா விடவில்லை.
இப்படிப்பட்ட தருணங்களில்
நேரத்தைக் கொல்வது என்பது கடினமான விஷயம். அப்பா அவரது நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.
எனக்குத் தெரிந்த நண்பர்கள் அங்கு யாரும் இல்லை. முன்பின் பழகிய சுற்றத்தினரும் இல்லை.
சன்னல் ஓரமாக ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்துக்
கொண்டிருப்பதைத் தவிர வேறு வேலையும் இல்லை.
கால் மேல் கால்
போட்டுக்கொண்டு உட்கார்ந்தேன். குனிந்து பார்த்தால் கால் தெரிந்தது. சே! என்று அதனைத்
தவிர்த்தேன். கால்சட்டை போட்டுக்கொண்டால் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொள்ள எவ்வளவு
வசதியாக இருக்கும்! புடவை எல்லா வகையிலும் என்னை இம்சித்தது.
ஒருவழியாக அப்பா
மதியத்திற்கு மேல் கிளம்பினார். ‘அப்பாடா’ என்றிருந்தது.
வீட்டிற்குப் போனதும் என்னிடம் பேசவேண்டும்
என்று அழைத்தார்.
‘என்னப்பா?’
‘ஜென்னி! உன்ன இந்தக்
கோலத்துல பாக்கும்போது உங்க அம்மாவக் கல்யாணத்தன்னிக்குப் பாத்தது மாதிரியே இருக்கும்மா?’
என் புருவத்தைச்
சுருக்கினேன்.
‘உனக்கும் வயசாயிட்டே
போகுது. சீக்கிரமா கல்யாணம் பண்ணவேணாமா?’
தெரியாத்தனமாகப்
பட்டுப்புடவை கட்டிக் கொண்டது இப்படி ஒரு யோசனையை அப்பாவிடம் கிளப்பிவிட்டதே!
‘என்னப்பா,
அதுக்கு
இப்ப என்ன அவசரம்?’
‘ஏம்மா?
ஒனக்கு
இன்னும் வயசாகலன்னு நெனப்பா? எம்.ஏ., எம்.ஃபில்.னு ஆரம்பிச்சி
இப்ப பிஎச்.டி.யும் முடிக்கப்போற? இன்னும் எத்தன வருஷத்துக்குக் கல்யாணத்தத்
தள்ளிப் போடறதா உத்தேசம்?’
அப்பா சொல்வதும்
சரிதான். என் அடுத்த கட்ட வாழ்க்கை திருமணமாகத்தானே அமைய முடியும்?
என் தயக்கத்தைப்
பார்த்ததும் அப்பாவிற்கு இன்னொரு சந்தேகம் முளைத்தது.
‘ஏம்மா?
யாரையாச்சும்
லவ் பண்றியா? அப்படி ஏதாச்சும் இருந்தா சொல்லிடும்மா?’
அப்பா நிச்சயம்
என் காதலுக்குக் குறுக்கே நிற்கமாட்டார். ஊருக்கெல்லாம் உபதேசம் செய்பவர் எனக்கு மட்டும்
தடையா சொல்லப்போகிறார்?
ஆனால் நான் யாரையாவது
காதலிக்கிறேனா?
ஒருவனைக் காதலித்தேன்.
காதல் என்றால் உருகி உருகி என்றெல்லாம் இல்லை. ஏதோ அவனைப் பிடித்திருந்தது. ஜாலியாகப்
பழகினான். பெண்ணுரிமை, ஆண் - பெண் சமத்துவம் என்றெல்லாம் பேசினான். பரந்த மனதுடையவன் என்று
நினைத்தேன். ‘நாம் திருமணம் செய்துகொள்ளலாமா?’ என்று அவனைக் கேட்டேன்.
ஏதோ நான் கெட்ட வார்த்தை சொல்லி விட்டதைப்போலத் திகைப்படைந்தான். ‘ஐஅம் சாரி,
அப்படிப்பட்ட
கேவலமான எண்ணத்தோடு நான் பழகலை’ என்றான்.
ஓர் ஆணும் பெண்ணும்
பழகி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு திருமணம் செய்துகொள்ளும் காதலைக் கேவலமானது என்று
எண்ணுகின்ற இவனையா நான் பரந்த மனதுடையவன் என்று இத்தனை நாள் தப்புக் கணக்குப் போட்டேன்?
ஒருவேளை அவனாக
விரும்பித் தன் காதலை என்னிடம் சொல்லியிருந்தால் அது புனிதமாகி இருக்குமோ என்னவோ?
பெண்ணாகிய
நான் முந்திக்கொண்டதால் அது கேவலமாகிவிட்டது போலும். காதலைச் சொல்லக்கூட பெண்ணுக்கு
உரிமையில்லையா?
அதற்குப் பிறகு
அவன் என்னிடம் பேசுவதையே தவிர்த்து விட்டான். மற்றவர்களிடமும் என்னைப் பற்றித் தவறாகச்
சொல்லி இருப்பான் போலும். அதிலிருந்து எந்த ஆடவன் மீதும் எனக்குத் தனிப்பட்ட ஈர்ப்பு
ஏற்படவில்லை. எவனும் என்னிடம் காதலிப்பதாகக் காட்டிக்கொள்ளவும் இல்லை.
பெரும்பாலான ஆடவர்கள்
பெண்களிடம் வழிவது ஒரு பொழுதுபோக்கிற்கு மட்டுமே என்பது எனக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.
சகஜமாகப் பேசும் பெண்களோடு சிரித்துப் பொழுதுபோக்கும் ஆடவர்கள் கல்யாணம் என்று வந்துவிட்டால்
ஆடவர் யாருடனும் பேசாத கூச்ச சுபாவம் உள்ள
பெண்களைத்தான் நம்பித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது நான் கண்ட அனுபவம்.
‘என்னம்மா?
பேசாம
இருக்க? யாரயாச்சும் லவ் பண்ணா சொல்லு, அவனுக்கே கல்யாணம்
பண்ணி வச்சிடறேன்.’
‘அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா.
நீங்க யாரைச் சொன்னாலும் கல்யாணம் பண்ணிக்கறேம்பா.’
நிம்மதிப் பெருமூச்சு
விட்டார் என் அப்பா.
‘ஜென்னி, கல்யாணத்துல மாப்ள
தோழனா இருந்தானே ஒரு பையன், அவன ஒனக்குப் புடிச்சிருக்காம்மா?’
‘யாரது . . . ?
சாம்பல்
நிற கோட், சூட் அணிந்து இருந்தானே அவனா . . . ?’
‘ஆமாம்மா. மாநிறமா
இருந்தாலும் நல்ல பையம்மா. எதுக்கும் இருக்கட்டும்னு அவன் அப்பனக் கேட்டு வெச்சேன். அவன் அப்பனும் என் நண்பன்தாம்மா. ஒன்ன அவங்க வீட்ல
எல்லாருக்கும் பிடிச்சிப்போச்சி. இளங்கோவும் சரின்னான்.’
‘இளங்கோ . . . ?’
‘மாப்ள பேருதாம்மா.
அவனும் ஒங் அளவுக்குப் படிச்சிருக்கான். ஒரு தனியார் கல்லூரில வேல செய்யறான்.’
‘மாப்ளன்னே முடிவு
பண்ணிட்டிங்களாப்பா? சரிப்பா. எனக்கும் சம்மதம்தாம்பா.’
தன் வேலை இவ்வளவு
சுலபமாக முடியும் என்று அப்பா நினைக்கவில்லை. அவர் முகம் சந்தோஷத்தால் விரிந்தது.
இளங்கோ . . . பெயர்தான்
சற்றே கர்நாடகமாக இருக்கிறது. தமிழ்ப் பெயர். பரவாயில்லை. பெயருக்கும் ஆளுக்கும் என்ன
இருக்கிறது? அப்பா எனக்குக்கூடத்தான் கார்ல் மார்க்ஸின் நினைவாக அவர் மனைவி
பெயரான ஜென்னி என்று வைத்திருக்கிறார். என் பெயரைக் கேட்பவர்கள் நான் என்ன மதம் என்று
குழம்புவதுமுண்டு.
இளங்கோ பார்க்க
நாகரிகமாகவே தெரிகிறார். நானும் கோட், சூட் போட்டுக்கொண்டு வெளிநாடுகளுக்கு
அவரோடு விமானத்தில் பறப்பதாகக் கற்பனை செய்து கொண்டேன். கற்பனை நன்றாகவே இருந்தது.
நண்பர் வீட்டுக்
கல்யாணத்தன்று என்னை அவர் குடும்பத்தினர் அனைவரும் நன்றாகவே பார்த்துவிட்டதால் பெண்பார்க்கும்
படலம் தவிர்க்கப்பட்டுவிட்டது. நான்தான் அன்று பதுமைபோன்று ஒரே இடத்தில் அடக்கமாக அமர்ந்திருந்தேனே!
மாப்பிள்ளை ஜாதகத்தில்
அடுத்த ஒருவருடம் திருமணத்திற்கு உகந்ததில்லை என்றுகூறி ஒரு வாரத்தில் திருமணம் முடிவுபண்ணி
விட்டார்கள்.
அம்மா இல்லாததால்
எடுத்துக்கட்டி செய்ய ஆளில்லை என்று எளிமையான திருமணம் ஏற்பாடு செய்தார் அப்பா.
என்னைக் கரையேற்றி
விட்டதாக என்மீது அக்கறை கொண்ட அப்பா நினைத்தார்.
சம்சார சாகரத்தில்
விழுந்தது நானல்லவா?
படிப்பும் ஆய்வும்
என் அப்பாவின் சீர்திருத்தக் கொள்கைகளும் என்னை அறிவுஜீவியாக ஆக்கியிருந்தன. அதனால்
முதல்ராத்திரி அன்று சினிமாத்தனமாக என்னால் நடந்துகொள்ள முடியவில்லை. எனக்கு வெட்கப்படத் தெரியவில்லை. உள்ளே நுழைந்ததும் பேச்சை ஆரம்பிக்க
‘ஹலோ’
என்றேன்.
தன்னுடைய காலில்
நான் விழுவேன் என்று அவன் எதிர்பார்த்திருப்பான் போலும்.
திருமணநாள் வரை
நாங்கள் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. அதனால் நானாகவே அவனைப்பற்றி எல்லாம் விசாரித்தேன்.
நான் பத்துவார்த்தை பேசினால் அவன் ஒரு வார்த்தை பேசினான்.
‘நீ யாரையாவது லல்
பண்ணியா?’ - அவன்தான் கேட்டான்.
அதன் அர்த்தத்தை என்னால் சரியாக ஊகிக்க முடியவில்லை.
விழித்தேன்.
‘இல்ல . . . கல்யாணத்துக்கு
உன் கேள் பிரண்ட்ஸ விட பாய் பிரண்ட்ஸ்தான் அதிகம் வந்திருந்தாங்க. ஒரே கேலியும் கிண்டலுமா
இருந்ததே அதனாலதான் கேட்டேன்.’
அவன் கேள்வியில்
ஏதோ உள்ளர்த்தம் தொனிப்பதாகப் பட்டது.
‘ஒங்க பக்கமிருந்து
கூடத்தான் நெறைய பொண்ணுங்க வந்திருந்தாங்க. குறுகுறுன்னு உங்களையே பாத்துகிட்டுக் கெக்கேபிக்கேன்னு
சிரிச்சுட்டிருந்தாங்க. அப்ப நீங்க அவங்கள லவ் பண்ணீங்களா?’ - நான் திருப்பிக்
கேட்டேன்.
‘அவங்கல்லாம் என்னோட
மாணவிகள்.’
‘ஓஹோ?’
அவன் கேள்வி எனக்குள்
எரிச்சலை உண்டுபண்ணியது. சரி பேச்சை மாற்றுவோம். இனி அடுத்தது அதுதானே!
‘நானும் ஒரு வேலைக்குப்
போயிட்டா அப்பறம் கொழந்த பெத்துக்கலாம். உடனடியா நாம கொழந்த பெத்துக்க வாணாம். கொஞ்சம்
கேர்புல்லா இருப்போம்’ என்று ஆரம்பித்தேன்.
‘கேர்புல்னா?’
‘கேர்புல்னா .
. . ? தற்காப்பா
இருந்துப்போம்.’
‘முன் அனுபவமோ?’
நான்சென்ஸ். இத்தனை
வயதில் இதைப்பற்றித் தெரிந்திருக்க வேண்டுமானால் முன் அனுபவம் வேண்டுமா? படித்தறிந்து
தெரிந்துகொண்டிருக்க முடியாதா? என்ன மடத்தனமான எண்ணம். பல்கலைக்கழகக் கல்வியையே
அஞ்சல் வழியாகக் கற்றுத்தெளியும் இக்காலத்தில் இந்தச் சாதாரண விஷயத்தை நூல்கள் வழி
தெரிந்துகொள்ள முடியாதா? இவர்களெல்லாம் எப்பொழுது திருந்தப் போகிறார்கள்.
மனத்தில் கோபம் கொந்தளித்தது.
‘பர்ஸ்ட் நைட்டப்
பத்தி உங்களுக்குத் தெரியும்னா உங்களுக்கு முன்அனுபவம் இருக்குன்னு அர்த்தமா?’
அவனை நான் திருப்பிக்கேட்டது
தப்பாகிவிட்டது. கணவன் வார்த்தைக்கு மறுவார்த்தையா? அவன் முகம் சுண்டிவிட்டது.
‘உங்க அப்பா எப்பேர்ப்பட்ட
மனுஷர். எவ்ளோ பொறுமசாலி! அவருக்குத்தான் நீ பொறந்தியான்னு சந்தேகமா இருக்கு!’
என்றான்.
வார்த்தைகள் மென்மை
இழந்தன. எங்கள் ஊடல் பெரிதாகி அன்று அனைத்திற்குமாய் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
என் மனத்தில் கோப
அலை ஓய இரண்டு நாட்கள் ஆயின. அவன் இன்னமும் கோபமாகத்தான் இருந்தான்.
அவன் கோபத்தை எப்படித்
தீர்ப்பது? நாமே முந்திக்கொள்வோம்’ - என் மனம் யோசனை
சொன்னது.
ஊடலை முடிவுக்குக்
கொண்டுவருவது கூடல் தானே! இலக்கியத்தின் வழி யோசித்தேன். அன்றிரவு நானாகவே அவனைத் தழுவினேன்.
என் தழுவல் அவன்
கோபத்தைத் தீர்ப்பதற்கு பதிலாக இன்னும் அதிகப்படுத்தியது.
பெண் முந்திக்கொண்டு
ஆணைத் தழுவலாமா? இப்படித் தழுவுபவள் நடத்தை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதுதான்
அவன் ஆராய்ச்சி.
தழுவலில்கூடவா
ஆண்பெண் பேதம்? எப்பொழுதும் தழுவலை ஆண்தான் தொடங்க வேண்டும். அதனை ஏற்றுக்கொண்டு
அவனுள் ஒடுங்குபவளாகப் பெண் அமைய வேண்டும். ஆணின் விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் கருவியாக
மட்டுமே அவள் செயல்படவேண்டும். என்னவொரு ஆதிக்க மனப்பாங்கு?
என் மனம் அவன்
கருத்தோடு இணங்கமுடியாமல் முரண்டு பிடித்தது.
காலங்காலமாகப்
பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் பண்பாடு ஏற்படுத்தியிருந்த கருத்தாக்கம்
அவன் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது.
பெண்களுக்கும்
ஆணைப்போல் உணர்வுகள் உண்டு, உரிமை உண்டு என்று முழங்கிய பெண்ணியவாதிகளின்
கருத்தாக்கம் என்னுள் புகுந்து என் அறிவைக் கூர்தீட்டி இருந்தது.
இந்த இரண்டிற்குமான
போராட்டத்தில் நாங்கள் இருவருமே வெற்றியடைய முடியவில்லை.
‘ரெண்டுபேரும் ஏன்
வீட்லயே அடைஞ்சி கெடக்கறீங்க? எங்கயாச்சும் வெளியில போய்ட்டு வாங்களேன்!’
என்றார்
என் மாமியார். திரைப்படத்திற்குப் போகலாம் என்று முடிவானது.
பழைய காலத்து வீடு
என்பதால் அவ்வீட்டில் ஏகப்பட்ட அறைகள் இருந்தன. உடைமாற்றிக்கொள்ள என் துணிமணிகளை வைத்திருந்த
அறைக்குச் சென்றேன். வெகுவிரைவில் தயாராகிவிடுவது என் வழக்கம். ஆடை மாற்றிக்கொண்டு
நான் வீட்டு வாசலில் காத்திருந்தேன்.
உள்ளேயிருந்து
வந்த என் கணவனைப் பார்த்து நான் திகைத்தேன்.
என்னைப் பார்த்து
அவன் மிரண்டான்.
வெள்ளை வேட்டி
சகிதமாக இளங்கோ காட்சியளித்தான். திரைப்படத்திற்கு இந்த ஆடையா? என்று
நான் திகைத்தேன்.
'இதென்ன ஆம்பிளைபோல்
கால்சட்டையும் டீ சர்ட்டும்? இதென்ன தமிழ்நாடா? இல்ல அமெரிக்காவா?'
- கடுப்படித்தான்
என் கணவன்.
வாசலிலேயே தர்க்கம்
ஆரம்பமானது. இளங்கோ தன் வாழ்க்கையிலேயே ஒருமுறைதான் கோட், சூட் போட்டிருக்கிறான்
- தன் உயிர் நண்பனின் திருமணத்தன்று - அவனுடைய வற்புறுத்தலுக்காக - மாப்பிள்ளைத் தோழனாக
நிற்பதற்காக. நான் என் திருமணத்திற்கு முன் இரண்டே நாள்தான் புடவை கட்டியிருக்கிறேன்.
முதன் முதலில் - என் மஞ்சள்நீராட்டு விழாவின்போது, அடுத்து - அப்பாவின்
நண்பர்வீட்டு, விதி விளையாடிய அந்தக் கல்யாணத்தின்போது.
ஒருநாள் வேஷத்தில்
நாங்கள் இருவருமே மற்றொருவருடையது வேஷம் என்று அறியாமல் அந்தத் தோற்றத்தில் மயங்கியது
எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? உடை என்பது உள்ளத்தின் பிரதிபலிப்பல்லவா?
உடை
விஷயத்திலேயே ஒத்துவராதபோது உள்ளம் எப்படி ஒத்துப் போகும்?
பழமைப் பிடிப்பென்பது
அவன் தோலாகவே உருக்கொண்டிருந்தது. அவனுடைய பழமைத் தோலை உரிக்கப் பாடுபட்டேன்.
நான் போர்த்தியிருந்த
நாகரிகத்தின் போர்வையை இழுத்துப்போட்டுத் தீவைக்க அவன் குறியாயிருந்தான்.
என் சிந்தனைகளை
ஏற்றுக்கொள்ளும் முற்போக்கு வெளிச்சம் அங்கே இல்லை. அவனது பழமை படிந்த இருட்குகையில்
என் மூச்சுத் திணறியது.
அப்பா வருந்தினார்.
என்போக்கை மாற்றிக் கொள்ளுமாறு எனக்கு அறிவுரை கூறினார்.
இத்தனைநாள் - திருமணத்திற்கு
முன்னால் - எது சரியானது, எது முற்போக்கானது, எது பெண்
விடுதலையைப் பெற்றுத் தருவது, எது ஆணாதிக்கத்தை ஒடுக்குவது என்று என்னை
ஏற்றுக்கொள்ளச் செய்தாரோ அவற்றைத் திருமணத்திற்குப் பின்னால் தவறென்று கூறிக் கைவிடச்
சொன்னார். இந்தச் சந்தர்ப்பவாத இரட்டைநிலை பார்த்து எனக்கே என் அப்பாவின்மீது அருவருப்பு
தோன்றியது.
தந்தையாக இருந்தாலும்
அவரும் ஆண்தான். ஆண்களுக்காகப் பெண்கள் மாறவேண்டும் என்றும் ஆணுக்குப் பெண் அடங்கியவள்தான்
என்றும் நினைக்கும் ஆதிக்க இருளின் நிழலாகத்தான் அவரும் தெரிந்தார்.
தான் ஏமாந்துவிட்டதாகக்
காட்டிக்கொண்ட இளங்கோவின் புலம்பலைக் கேட்டவர்கள் என்னைத்தான் குற்றப்படுத்தினார்கள்.
‘வழிக்கு
வரலன்னா பேசாம விவாகரத்து பண்ணிட்டு இன்னொரு நல்ல பொண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணிட்டு
வாழற வழியப் பாரு’ என்று அவனுக்குத் தைரியம் ஊட்டினார்கள்.
அவனுக்கு அது போதாதா?
அவன்
எதிர்பார்ப்பிற்கு ஈடுகொடுக்கின்ற, தலையை ஆட்டுகின்ற ஒருபெண்ணை மணந்துகொண்டு
குழந்தை பெறுதல், வளர்த்தல் என்று தன் வாழ்க்கையின் அடுத்தடுத்த அத்தியாயங்களை எல்லோரையும்போல்
எழுதிக் கொண்டிருக்கிறான்.
என் தந்தை இறந்ததற்குக்கூட
என் தந்தையின் நண்பர்கள் என்னைத்தான் பழித்தார்கள். அவருக்கு நான் மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டேனாம்.
புத்துலகச் சிந்தனையற்ற ஒருவனை என் கணவனாகத் தேடிப்பிடித்தது யார் குற்றம்?
அடங்காப்பிடாரி
என்றும் பிடிவாதக்காரி என்றும் பலப்பல வசவுகளை என் பின்னால் சொல்லித் திரிந்து கொண்டிருக்கிறது
இந்தச் சமுதாயம் . . .
பழமையை ஏற்கமுடியாமல்
புதுமையைக் கடைபிடிக்க முடியாமல் பழைமைக்கும் புதுமைக்கும் ஏற்பட்டிருக்கும் மோதலில்
சிக்கிச் சின்னாபின்னமானது என் வாழ்க்கை மட்டுமே . . . !
No comments:
Post a Comment