Friday 3 February 2017

மயிலிறகு முட்கள்


வெளியேயிருந்து வந்தகிளி
கூண்டுக்கிளியையும்
கூட்டிப் போய்விடுமென்ற
குருட்டுப் பயத்தில்
தன்வீட்டுக் கிளியின்
இறக்கைகளையும்
முறுக்கி முடக்கிப்போடுவர்!

புதிய உறவுக்காய்த்
தன்வீட்டில் பூக்கின்ற
பாராட்டுப் பூக்களைக்
கசக்கி எறிந்து
காலால் மிதிப்பர்!

அடுப்பறை ராஜ்ஜியத்தை
முழுசாக விட்டுக்கொடுத்தால்
அடிமைச்சாசனம்
ஆள்மாறி விடுமென்று
உப்புக்கார முடிவெடுப்புகளில்
பங்குபோட்டு
உணவுகளின் சுவைகெடுத்து
குப்பையில் கொட்டி
குதூகலம் அடைவர்!

ஒருகாலத்தில்
தான் ஓதிய
தலையணை மந்திர ஞாபகத்தில்
படுக்கைகளைப் பிரித்துப்போட
பிரயத்தனம் செய்வர்!

கைப்பிடியில் பிடித்திருந்த
கருவேப்பிலைக்கொத்து
முந்தானை முடிச்சுகளில்
சிக்கிக் கசங்கிப் போகுமென
சித்தாந்தம் பேசி
முடிச்சுகளை அறுத்தெறியும்
முட்டாள்தனம் வளர்ப்பர்!

கத்தியால் கீறி
காயப் படுத்துவதைவிட
இவர்கள்
வார்த்தைகளோடு நடத்தும்
வன்முறை
வரம்புகள் கடக்கும்!

மயிலிறகால் வருடுவதாய்
வெளியே காட்டினாலும்
அதற்குள்
மறைத்து வைத்திருக்கும்
முட்கள் கீறி
மனதெங்கும் இரணமாகும்!
(புதுவை அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதைநூலுக்குரிய பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் கூடிய கம்பன்புகழ் இலக்கிய விருது பெற்ற கவிஞர் ஔவை நிர்மலாவின் பெண்களின் கதை என்னும் கவிதை நூலிலிருந்து - (கவிஞர் ஔவை நிர்மலா, பெண்களின் கதை, காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2013, விலை ரூ80/-).


No comments:

Post a Comment