பெண்ணாகப் பெற்றெடுத்துப்
பொத்திப்பொத்தி வளர்த்தார்கள்!
கேட்டதெல்லாம் வாங்கித்தந்து
ராணிபோலே காத்தார்கள்!
தாய்மாம னோடுபேச
தடைவிதித்தார் தந்தையுமே!
தருதலையாய்ச் சுற்றுபவன்
தகுதியற்ற பேதைஎன்றார்!
அப்பாவின் தங்கைபெற்ற
அருமந்தப் பிள்ளையிடம்
அண்டாதே என்றுசொன்னார்
அம்மாவோ தொணதொணத்து!
அக்கம்பக்க வீடுகளின்
அரும்புமீசை ஆடவர்கள்
குறும்புப்பார்வை பட்டிடாமல்
காத்துவந்தார் பாட்டியுந்தான்!
பெண்கள்மட்டும் பயிலுகின்ற
பள்ளியிலே படித்துவிட்டுப்
பட்டப்படிப்பு வேண்டுமென்று
பரிதவித்து நின்றேனே!
கல்லூரியில் கால்வைத்துக்
கருத்தாகப் படிக்கையிலே
கண்ணுக்குத் தெரியாமல்
காதலிலே சிக்கிவிட்டேன்!
பாடத்தின் படிகொடுத்து
பஸ்படியில் கைகொடுத்து
ஊர்மறியல் கடையடைப்புக்
காலத்தில் காவலாகி
நூலகத்தில் படித்துவிட்டுக்
களைப்பாக வருகையிலே
கடிந்திடாமல் காத்திருந்து
கேக்கோக்கு வாங்கித்தந்து
தேர்வுமுடிவு வரும்போது
தேறுதலாய் வார்த்தைதந்து
ஆசிரியர் திட்டிவிட்டால்
ஆறுதலாய் அன்புகாட்டி
சுட்டுவிரல் கட்டளைகள்
சுறுசுறுப்பாய் முடிக்கின்ற
இளமைத் துடிப்புமிகு
இளவரசன் போல்வந்த
கட்டழகுக் காளையைத்தான்
காதலித்தேன் கருத்தழிந்தேன்!
தரங்கெட்ட செயலிதென்று
தெருவினரோ பரிகசிக்கப்
பெயர்கெடுக்கப் பிறந்ததாய்த்
தாயென்னைக் கடிந்தாளே!
காதலித்தல் குற்றமெனக்
கண்மண் தெரியாமல்
அடித்துத் துவைத்தாரென்
அன்பான தந்தையுந்தான்!
திரைப்படத்துக் காதலர்கள்
எங்களுக்கு வழிகாட்ட
எதிர்த்துமணம் புரிந்திடுதல்
எளிதென்று எண்ணிவிட்டு
வீட்டைவிட்டு ஓடிப்போய்
ஒளிந்துகொள்ளும் இடந்தேடி
காடுமேடு அலைந்திட்டோம்
கைகொடுப்பார் யாருமில்லை!
கள்வர்களும் கொள்ளையரும்
சுதந்திரமாய் வாழுகின்றார்!
தீவிரவாத கும்பலுமே
திமிரோடு நடைபயில்வார்!
கள்ளக்காதல் புரிகின்ற
கசடர்வாழ இடமுண்டு!
மனைவியோ வீட்டிருக்க
மங்கையர்கள் பலரோடு
மகிழ்வுடனே களிக்கின்ற
மனிதர்களும் திரிகின்றார்!
காதலித்த இருமனங்கள்
கலந்துவாழ உலகினிலே
வழியின்றித் தவிக்கின்ற
வன்கொடுமை மாறிடுமோ?
பெண்ணைக் கடத்தியதாய்ப்
பெற்றோர்தம் புகாரதனால்
காதலனின் வீட்டாரைக்
காவல்துறை கண்டிக்க
கலகம்செயக் காத்திருந்த
கருங்காலிக் கூட்டமொன்று
சாதித்தீ மூட்டிவிட்டுத்
தீய்த்துவிட்டார் ஊரினையே!
எமைத்தடுத்து நிறுத்திடவே
இயலாத ஆத்திரத்தில்
சாதியைக் காப்பாற்ற
தந்தைசாக வேண்டுமென
தறிகெட்ட ஒருகூட்டம்
பிதற்றித்தான் திரிந்ததுவே!
மூடர்களே இதுவெமது
குடும்பத்து விஷயமென
முகம்நோக்கும் துணிவின்றி
அடிமுட்டாள் தனமாகத்
தற்கொலையே தீர்வென்று
தன்னுயிரை அழித்தாரே!
இத்தரணி மீதினிலே
என்னுயிரை விதைத்தவர்தான்
நாலுதிசைத் தேடியந்த
நரித்தனத்துக் கூட்டந்தான்
ஓடிஓடிக் களைத்துநாங்கள்
ஓய்ந்தேதான் கிடைக்கையிலே
கூடுவிட்டு உயிரைமட்டும்
குடைந்துதான் எடுத்ததுபோல்
இருவரையும் பிரித்துவிட்டார்
வீட்டினிலே சிறையிலிட்டார்!
ஊசிஇடம் கிடைத்திட்டால்
ஒட்டகமே நுழைவதுபோல்
சாதியென்னும் ஓட்டைவழி
அரசியலார் உள்நுழைந்து
அன்புநிறை கோட்டைதனை
அடிமட்டம் ஆக்கிவிட்டார்!
அரவணைத்த காதலனின்
தலையதனைத் திருகிவிட்டார்!
கூடாதிந்த வாழ்க்கையென்று
ரயிலடியில் போட்டுவிட்டார்!
தந்தையைச் சாகடித்தேன்
என்றென்தாய் சபிக்கின்றாள்!
காதலனை இழந்ததுவும்
சரியென்றே கரிக்கின்றாள்!
என்சார்பாய் அவன்சார்பாய்
எத்தனையோ பொதுமக்கள்
கூட்டங்கள் போடுகிறார்!
கொடிகளைத்தான் ஏந்துகிறார்!
அரசியல்சார் தொண்டரெலாம்
ஆறுதல்கள் உரைக்கின்றார்!
வக்கில்கள் கூட்டமொன்று
வாதாடித் தீர்க்கிறது!
நீதியதை நிலைநாட்ட
நீதிபதி துடிக்கின்றார்!
செய்திதரு சாதனங்கள்
சேர்ந்துகுரல் கொடுப்பதுடன்
மாணவர்கள் கூட்டமைப்பும்
மல்லுகட்டி நிற்கிறது!
இத்தனைபேர் எங்கிருந்தார்
தெருத்தெருவாய் அலைகையிலே!
எங்களைத்தான் வாழவைக்க
இவர்களெலாம் என்செய்தார்?
பேசாமல் இருந்திருந்தால்
பிழைத்துப்போய் இருப்போமே!
உலகமது தெரியாமல்
ஆசையாய் வளர்த்தவெங்கள்
காதலெனும் நெடுமரத்தைக்
கோடரியால் சாய்த்துவிட்டு
வெறுங்கூட்டை அலங்கரித்து
வெற்றிவிழா கொண்டாடும்
இவருடைய நோக்கமென்ன
இன்னும்பல காவுகளா?
No comments:
Post a Comment