Saturday, 25 February 2017

வம்பு ஆடுகள்





வம்பு ஆடுகள்
புன்னகைக் கதவுகளை
முட்டித் தள்ளிவிட்டு
எளிதாக உள்நுழைந்து
மனவயல்களை மேய்ந்து
பாழ்படுத்தி விடும்!

புருவ வில்களையும்
பார்வை அம்புகளையும்
பாதுகாப்பாய் வைத்து
வாயிற் கதவுகளை
இறுக்கி மூடினால்
வம்பு ஆடுகளை
வாசல் நுழையாமல்
வகையாய்த் தடுக்கலாம்!

இவ் வம்பு ஆடுகள்
பயிர்களை மேய்ந்து
பயனை அழிப்பதோடு
எங்கெங்கோ
மேய்ந்துவிட்டு வந்த
முள்வேலிக் கருவைகளின்
நச்சு விதைகளைப்
புழுக்கையாய் இட்டுவிட்டு
மனச்சோலைகளில்
முட்புதரை உருவாக்கிப்
பாழடையச் செய்துவிடும்!

வம்பு ஆடுகளால்
முட்புத ராகிப்போன
இதய நிலத்தில்
அவசரத்துக்கு ஒதுங்குபவர்
மட்டுமே
ஆனந்தம் அடைவார்கள்
மற்றவர்கள்
மூக்கைப் பிடித்துக்கொண்டு
முகம்சுளிப்பார்கள்!

பண்பட்ட நிலத்தைப்
பாழாக்க விட்டுவிட்டால்
ஜேசிபி வைத்துப்
புதர்களைத் தோண்டி
எரித்துச் சாம்பலாக்கினாலும்
உடைந்து உதிர்ந்துகிடக்கும்
முள்ளின் முனைகள்
முன்னிருந்த நிலையை
முழுதாகத் தந்திடாது! 

(புதுவை அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதைநூலுக்குரிய பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் கூடிய கம்பன்புகழ் இலக்கிய விருது பெற்ற கவிஞர் ஔவை நிர்மலாவின் பெண்களின் கதை என்னும் கவிதை நூலிலிருந்து - (கவிஞர் ஔவை நிர்மலா, பெண்களின் கதை, காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2013, விலை ரூ80/-)


No comments:

Post a Comment