Sunday 5 February 2017

காக்க காக்க! காவிரி காக்க!


அலுவலகம் நுழைந்த எனக்கு வியப்பாக இருந்தது. அலுவலகத்தில் இடுகாட்டின் அமைதி அச்சுறுத்தியது. எல்லோருக்கும் என்னாயிற்று? கணினித் திரையை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார் பக்கத்து இருக்கை வளவன். வளவன்! என்ன அலுவலகமே அமைதியாக இருக்கிறது?’ என் வினாவிற்கு அவர் ஒற்றை விரலை உதட்டின் மேல் வைத்துச் சைகை செய்து பேசாதேஎன்று ஊமை மொழி பகன்றார்.
கையெழுத்திட மேலாளர் அறைக்குச் சென்றேன். தானியங்கி பொருத்துவிசை அமைக்கப்பட்ட கதவைத் திறந்தபோது உள்ளேயிருந்து காட்டுக் கூச்சல் கேட்டது. ஒருகணம் திகைத்து நின்றேன். புது மேலாளர் தலைமை எழுத்தரை வாய்க்கு வந்தபடி வைதுகொண்டிருந்தார். வருகைப் பதிவேட்டில் என் கையெழுத்தை இடவேண்டும். புது மேலாளருக்கு வணக்கம் சொல்லலாமா? வேண்டாமா? என்று என் மனத்தில் சிறு போராட்டம். 
வணக்கம் சொல்லாமல் போவது மரியாதையாக இருக்காது. மேலும் புது மேலாளரிடன் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் தேவையும் இருந்தது. ஆனால் சூழ்நிலைதான் சரியில்லை. என் மனப் போராட்டத்தின் சில நொடிகளில் மேலாளரின் பார்வை என்மேல் விழுந்தது. அத்துடன் ஏசல் சக்கரம்என் தலையில் இறங்கியது.
இதோ வருகிறார்கள் பாருங்கள் மகாராணியைப் போல்கத்தினார் மேலாளர். என் கடிகாரத்தைப் பார்த்தேன். ஒன்பதரை மணி அப்போதுதான் ஆனது. என் அலுவலகமும் ஒன்பதரை மணிக்குத்தான். அதற்குப் பின்னும் ஏன் இப்படிக் கத்த வேண்டும்?
திடீர்த் தாக்குதலால் வணக்கம் சொல்வதையும் மறந்து, ‘இப்போதுதானே ஒன்பதரை மணி ஆகிறதுஎன்றேன். ஏன், பத்துப் பதினைந்து மணித்துளி முன்னால் வரக்கூடாதா? அரசாங்கம் உங்களுக்குச் சம்பளம் தரவில்லையா?’ என்று எகிறினார் அவர். மேலதிகாரிகளிடம் தன்னைப் பொறுப்புள்ளவராகக் காட்டிக்கொள்ளும் தந்திரம் இதுவோ! மாற்றலாகிவந்து தனியே ஓர் இடுமுடுக்கு அறையில் வசித்ததால் அலுவலகத்திலேயே வசதியாக நெடுநேரம் கழிப்பது இதற்குக் காரணம் என்பது பின்னரே தெரிந்தது.
இதோ பாருங்கம்மா, நான் நேரம் கழித்து வந்தால் எனக்கு எச்சரிக்கை ஆணைகொடுங்கள். ஆனால் சரியாக நான் நடந்துகொண்டதற்கு என் மேல் பழிசொல்ல உங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லைஎன்று சொல்லிவிட்டு இருக்கைக்கு வந்துசேர்ந்தேன். என்மேல் அதிகாரத் தாக்குதல் நடத்த இயலாது என்று அப்போதே புரியவும் வைத்துவிட்டேன்.
எப்போதும் நேரம் கழித்து வருபவர்கள் முன்னதாகவே வந்துவிட்டிருப்பது எனக்கு வியப்பாகவே இருந்தது. அதற்காகச் சரியான நேரத்திற்கு வந்த என்னைக் குறை சொல்வானேன்?
மேலாளரைச் சொல்லியும் தவறில்லை. இந்தக் கூட்டம் சாயற பக்கம் சாயும் ஆட்டு மந்தைக் கூட்டம். கோல் எடுத்தால் ஆடுகின்ற குரங்குக் கூட்டம். இவர்கள் கடமையையும் செய்ய மாட்டார்கள்; உரிமைகளையும் பெற மாட்டார்கள்.
அன்று அதற்குமேல் என்னால் அமைதியாய்ப் பணிசெய்ய முடியவில்லை. இருக்கையை விட்டு யாரும் எழுவதாகக் காணோம். அதற்காக அவர்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள் என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது. வேலை செய்வதுபோல் நடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவரை ஒருவர் அடிக்கடி ஓரக்கண்களால் நோக்கிக் கொண்டிருந்தார்கள். அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலையே நிலவியது. ஒழுங்காக வேலை செய்யும் எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.
மாடி அறைக்குச் சென்றேன். பொற்கொடி ஒரு கோப்பைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் எழுந்து வந்தாள். நேராக ஒப்பனை அறைக்குச் சென்றோம். வேறுவழி?
என்ன இது? நாம் என்ன கலவர பூமியில் இருக்கிறோமா? நூற்று நாற்பத்தி நான்கு தடை உத்தரவு போட்டது போலல்லவா நம்முடைய அலுவலகம் இருக்கிறது என்று கேட்டேன்.
அதை ஏன் கேட்கிறாய்? இந்த மேலாளர் இளவரசி படுத்தும் பாடு தாங்க முடியவில்லை. என்ன ஆணவம்? ஏதோ இதுவரைக்கும் இந்த அலுவலகத்தில் யாருமே பணிபுரியாதது போன்றும் தான் வந்துதான் அனைத்தையும் மாற்றியதுபோன்றும் கத்திக்கொண்டிருக்கிறார். இவர் வந்து ஒரு வாரத்தில் கொடுக்கும் தலைவலி தாங்க முடியவில்லை. உனக்குச் சொல்லலாம் என்றால் உன் அலைபேசித் தொடர்பு கிடைக்கவே இல்லை - அங்கலாய்த்தாள் பொற்கொடி.
நான் மத்தியஅரசு பணியாளருக்குரிய பயணச்சலுகைத் திட்டத்தில் கல்கத்தா சுற்றுப் பயணம் சென்றிருந்தேன். அதனால் தொலைபேசி இணைப்பு கிடைக்காமல் போய்விட்டது.
மேலாளர் இளவரசி படுத்திய பாட்டால் அலுவலகத்தில் வேலைகள் எதுவும் சரியாக நடைபெறவில்லை என்பதுதான் உண்மை. அது சரியில்லை, இது சரியில்லைஎன்று குற்றம் கண்டுபிடிப்பதிலும் தனக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என்பதாகக் காட்டிக்கொள்வதிலும் அரசாங்கப் பணத்தைப் பொய்க்கணக்கு காட்டிச் சூறையாடுவதிலுமே அவரது சிந்தனை இருந்தது. மொத்தத்தில் அனைவரையும் குத்திக் கிழித்து அவர்தம் குருதியைக் குடிக்கும் ஆணவ வெறி அவர் உடல்முழுக்கப் பரவிக் கிடந்ததை எங்களால் உணர முடிந்தது.
ஆனால் இதில் வருத்தம் என்னவென்றால் அலுவலகத்தில் யாருமே அத்தகைய வெறித்தனத்தைக் களைய முன்வராததுதான். அனைவருமே எனக்கென்ன வந்தது? என் வரையில் நான் நிம்மதியாக இருந்தால் சரி!என்ற எண்ணத்துடன் பணிந்துகிடந்தார்கள். உளவு சொல்லும் கூட்டம் ஒன்றும் முளைத்தது. அவர்கள் எந்நேரமும் மேலாளரை அண்டி, அடுத்தவர் பற்றிய செய்திகளைச் சொல்லி அதில் தமக்குரிய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். ஓர் ஆணின் கீழ் வேலை செய்வது எளிது. ஆனால் பெண்ணின்கீழ் வேலைசெய்வது கடினம் என்று அவ்வப்போது முணுமுணுத்தார் மேல்நிலை எழுத்தர் இறையரசன்.
ஒரு மாதத்திற்குப் பிறகு என் பள்ளித் தோழி மலர்க்கொடி என் அலுவலகத்திற்கே மாற்றலாகி வந்துவிட்டாள். அவள் இளவரசியைப் பற்றிக் கதைகதையாகச் சொன்னாள். பதவி உயர்வு பெறும் முன்னர் இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள். காலையில் அலுவலகத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டுக் காணாமல் போகும் முதல் ஆள் இளவரசியாகத்தான் இருக்குமாம். மீன்கடைக்குச் சென்று மீன் வாங்கிக் குழம்பு வைத்துத் தின்றுவிட்டு பிற்பகல் மெதுவாக வந்து அலுவலகம் சேருவாராம். எந்தப் பொறுப்பையும் எடுத்துச் செய்ததில்லையாம். மேலதிகாரிகளை மருந்துக்கும் மதித்தது இல்லையாம். இப்படிப்பட்டவரா எப்போது பார்த்தாலும் தன்னைப்போல் நேர்மையானவர் ஒருவரும் இல்லையென்று தருக்கிக் கொள்கிறார்? வியப்புதான்!
மலர்க்கொடி வந்த காலகட்டத்தில் அமுதாவும் மாற்றலாகி வந்தார். அவர் மலர்க்கொடி போன்று தீரம் மிக்கவர் அல்லர். எதற்கெடுத்தாலும் அஞ்சி நடுங்குவார். சிறுவயதிலேயே கணவனை இழந்தவர். அவருடைய மகன் சேலத்தில் மருத்துவம் கடைசி ஆண்டு படித்துக்கொண்டிருந்தான்.
இளவரசிக்கு ஆண்களைக் கண்டால் மட்டும் உள்ளூற அச்சம்தான். முதலில் மிரட்டிப் பார்ப்பார். அவர்கள் எதிர்த்தால் அவர்களைச் சீண்டாமல் விட்டுவிடுவார். இளவரசியின் முதன்மை இலக்கு பெரும்பாலும் பெண்கள்தாம். அவர்கள் வாயிலிருந்து வார்த்தையைப் பிடுங்கி உண்டு, இல்லைஎன்று ஆக்கி விடுவதில் கைதேர்ந்தவர்.
இளவரசியிடம் அமுதாவும் மாட்டிக்கொண்டார். எலிப்பொறியில் வால் மாட்டிக்கொண்ட எலியாகத் துடித்தார். நாள்தோறும் அவரைக் கரித்துக் கொட்டுவதற்கு ஏதேனும் காரணம் இளவரசிக்குக் கிடைத்துவிடும். அமுதாவின் சார்பில் பரிந்துபேச யாரும் முன்வரவில்லை. அனைவருக்கும் அச்சம்தான், என்ன செய்வது? அவரவர்க்கும் அவரவர் வேலை!
இளவரசியிடம் கொண்ட அச்சத்தால் ஒருநாள் காலை புறப்படும் அவசரத்தில் அமுதா வழுக்கிவிழுந்து காலை உடைத்துக் கொண்டார்.  காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஒருமாதம் மருத்துவ விடுப்பில் இருந்தார். ஒருவகையில் அது அமுதாவிற்கு நிம்மதி அளித்ததோ?
என்னதான் நிம்மதி என்றாலும் எத்தனை நாட்கள்தான் விடுப்பு எடுக்க முடியும்? இன்னும் சரிவர மாடிப்படிகள் ஏற அவரால் முடியவில்லை. அவருடைய இருக்கை மாடியில் இருந்தது. மருத்துவ விடுப்பிற்குப் பிறகு அலுவலகம் வந்த அமுதா தனக்குக் கீழ்த்தளத்தில் ஓர் இருக்கை ஏற்பாடு செய்துதருமாறு கெஞ்சிப் பார்த்தார். இளவரசி மசியவில்லை. அமுதாவிற்கும் இளவரசியின் வயதுதான். ஆனால் யார்யாரையோ பிடித்து மேலாளர் பதவிக்கு வந்தாகிவிட்டதுதான் அங்கே பணியாற்றும் பெண்ணினத்திற்கே ஏற்பட்ட தொல்லையாகிவிட்டது.
அமுதா கீழ்த்தளத்திலேயே ஓர் ஓரமாக இருக்கையன்றைப் போட்டுத் தன் கோப்புகளைக் கவனிக்க ஆரம்பித்தார். இளவரசி விடவில்லை. சம்பளமில்லா விடுப்பு எடுத்துக்கொண்டு போகுமாறு கத்தினார். குறைந்தபட்ச வசதியைக் கூட மறுத்தார். தொடர்ந்து வேறுவேறு காரணங்களுக்காக அமுதாவைத் திட்டுவதை அவர் நிறுத்தவில்லை.
ஒருமுறை அமுதாவின் மகன் தன் அம்மாவிற்குத் தொலைபேசியில் அழைப்பு விடுத்தான். அது அணைக்கப்பட்டிருந்தது. தாய்க்கு என்னாயிற்றோ என்று பதறி, சிறிது தூரத்தில் வசித்த சொந்தக்காரர் ஒருவரைத் தொலைபேசியில் அழைத்து அம்மாவை நேரில் பார்த்துவரச் சொன்னான். அவர் எங்கள் அலுவலகத்தில் விசாரித்தபோதுதான் இரண்டு நாட்கள் அமுதா பணிக்கு வரவில்லை என்பதும் விடுப்புக் கடிதமும் கொடுக்கவில்லை என்பதும் தெரியவந்தன. அமுதா பணிமாற்றலானதால் ஊரைவிட்டு உறவைவிட்டு ஒரு சிறு அறையில் தங்கியிருந்தார். சொந்தக்காரர் அங்குச்சென்று கதவைத் தட்டித்தட்டிப் பார்த்துக் கை சோர்ந்ததுதான் மிச்சம். கதவு திறக்கப்படவில்லை. உள்ளே மின்விசிறி சுழலும் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. அச்சம்கொண்ட அவர் அதனை அலுவலகத்திற்குத் தெரிவித்தார். நிலைமையின் தீவிரத்தை அறிந்த இறையரசன் காவல்துறைக்குத் தெரிவித்தார். காவலர்கள் இருவர் அறைக்கதவை உடைக்க இருப்பதாகவும் சாட்சிக்கு அலுவலகத்திலிருந்து யாரையேனும் அனுப்புமாறும் சொன்னார்கள். செய்தியைக் கேள்விப்பட்டதும் மனதுக்குள் அச்சமும் துக்கமும் எழுந்து நெஞ்சை அடைத்தன. யாரும் செல்வதற்கு முன்வரவில்லை. நானும் பொற்கொடியும் ஓடினோம். அறையின் முன்னால் காவலர்கள் இருந்தனர். பத்திரிக்கையாளர்கள் புகைப்படக் கருவிகளோடு உள்ளே நடந்திருக்கும் கொடுமையைப் படமெடுக்கும் ஆர்வத்தோடு ஆயத்தமாய் நின்றனர். காவலர்கள் அறைக்கதவை உடைத்தனர். உள்ளே கொடும்நிகழ்வு எதுவுமில்லை என்றதும்தான் எங்களுக்கு மூச்சே வந்தது.
தொட்டிப் பூட்டு பொருத்தப்பட்டிருந்ததால் அமுதா உள்ளே இருப்பதாக நினைத்துவிட்டார் சொந்தக்காரர்.
ஆனால் எந்த அளவிற்கு அமுதாவின் உள்ளம் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் மின்விசிறியை நிறுத்தாமலும் தன் மகனுக்குத் தொடர்பு கொள்ளாமலும் சென்றிருப்பார் என்பதை ஊகிக்தறிய முடிந்தது. நிலைமை எதுவும் தமக்கு எதிராக இல்லை என்றவுடன் இளவரசியும் உள்ளுக்குள் மகிழ்ந்து பழையபடி ஆணவப் பேயாட்டம் ஆடினார்.
இளவரசியால் பொறுக்கமுடியாத மனச்சிதைவுக்கு ஆளாகி அமுதா புதுவையில் தம்முடைய சிநேகிதி ஒருவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டிருந்தார். அதற்குப்பின்னர் இருவார காலத்திற்கு விடுப்பளிக்குமாறு கடிதம் மட்டுமே வந்தது. ஆனால் எது நடக்கக் கூடாது என்று நாங்கள் நினைத்தோமோ அது நடந்தே விட்டது. இரண்டு வாரங்கள் கழித்து அமுதா இறந்துவிட்டார் என்ற செய்திதான் அது.
தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்ட அமுதா, அங்கே இளவரசியின் ஆதிக்க வெறித்தனத்தால் மனச்சிதைவுக்கு ஆளாகித் தூக்கில் தொங்கிவிட்டார். தற்கொலைக்குரிய காரணத்தை உறுதிப்படுத்தி இளவரசிக்குத் தண்டனை வாங்கித்தர மருத்துவம் படித்த மகனுக்கு எந்தவித ஆதாரமும் அகப்படவில்லை. அனாதையாய் நின்ற அவன் தன் தாய் தற்கொலை செய்துகொண்டதைச் சொல்ல விரும்பாமல், இயற்கை மரணம் என்று வெளியே சொல்லிக்கொண்டான். இறப்புச் சடங்கிற்குச் சென்ற எங்களிடம் இளவரசியைச் சபித்துக் கொட்டியதைத் தவிர அவனால் என்ன செய்யமுடியும்?
முடியாட்சி மறைந்துவிட்டாலும் பல அலுவலகங்களில் பெண் ஆளுமைக்கே கலங்கமாய் இத்தகைய இளவரசிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அடிமைகளும் எட்டப்பர்களும் இருக்கும்வரை இவர்களும் இருப்பார்கள். . .
இதோ மாலையில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட மேலாளரின் அறைக்கதவைத் திறக்கிறேன். புதிதாக வேலையில் சேர்ந்த காவிரியிடம் கத்திக்கொண்டிருக்கிறார் இளவரசி. முடிந்தால் அவளையாவது காப்பாற்றுங்களேன்!


                                                                                ***

No comments:

Post a Comment