திருமூலரின் மூப்பு, இறப்புச் சிந்தனைகள்
உலகில்
தோன்றிய எந்த ஓர் உயிரும் எதிர்கொள்ள வேண்டிய இருபெரும் நிகழ்வுகளாக மூப்பும் இறப்பும்
திகழ் கின்றன. மூப்பைத் தள்ளிப்போட இயலுமே தவிர முற்றாக அதனைத் தவிர்த்தல் இயலாது என்கின்றனர்
மருத்துவ உலகின் மூப்பியல் துறையினர். இறப்போ
அவ்வாறன்றி எப்போது, எப்படி, எங்கு நிகழுமென்று அறுதியிட்டுக் கூறவியலாத
- ஓர் அவசர நிகழ்வாக - எதிர்பாராச் செயலாக - காலத்தின் கட்டாயமாக அமைகிறது. தனித்தன்மை
மிக்க இவ்விரு கூறுகளும் இலக்கியங்களில் பேசப்படும் தன்மை இயல்பானதும் பொருத்த மானதும்
ஆகும். அந்நிலையில் திருமந்திரம் வாயிலாக அறியப்படும் திருமூலரின் மூப்பு, இறப்புச்
சிந்தனைகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
மனித வாழ்க்கைப்
பருவங்கள்
உயிர் வாழ்வின் வளர்ச்சி உடலியல் மாற்றங்களைக்
கொண்டு வருகின்றது. காலை எழுந்தவர்கள் நித்தம்நித்தம் மாலை வருவதைக் கண்டு எவ்விதக்
கவலையுமின்றி இன்புறுகின்றனர். ஆனால் உண்மையில் இது அவர்களின் வாழ்நாள் ஒவ்வொன்றாகக்
கழிந்து ஒவ்வொரு கூறுபாடும் அழிவதையே காட்டுகிறது
(226). பிறவி பெற்ற ஒவ்வொரு
உயிரும் இம்மாற்றம் அடைவதிலிருந்து தப்புவதில்லை.
கிழக்கெழுந் தோடிய
ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார்
விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு
தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார்
வியனுல கோரே (221)
எனவரும் திருமூலரின்
பாடல், பசு பிறப்பின்போது கன்றின் நிலையிலிருந்து பின் வயது மூத்து எருதாகி
விடுவதைச் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய உடல் மாற்றம் பிற உயிர் வகைகளைக் காட்டிலும்
மனிதப்பிறவியில் கவனிக்கத் தக்க வேறுபாட்டுடன் அமைவதைக் காணலாம்.
குழந்தை
பிறந்தது முதலாக உடலின் பல்வேறு உறுப்புகளும் உடலின் உள்ளே இயங்கும் மண்டலங்களும் சிறிது
சிறிதாக வளர்ச்சியடைந்து ஒரு குறிப்பிட்ட உயர் நிலையை எட்டுகின்றன. அதன்பின்னர் உடலின் ‘வளர்ச்சி’
என்ற
நிலை மாறி ஒரு குறிப்பிட்ட காலஅளவு வரை அவ் உயர்நிலையின் ‘சமநிலை’
காக்கப்படுகிறது.
அதற்கடுத்த நிலையில் உடலின் வளர்ச்சி ‘வீழ்ச்சி’யை நோக்கிச் செல்கிறது. இதனைத் திருமூலர்,
முட்டை பிறந்தது
முந்நூறு நாளினில்
இட்டது தானிலை
ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம்
பன்னிரண் டாண்டினிற்
கெட்ட தெழுபதிற்
கேடறி யீரே (207)
என்னும் பாடல்
மூலம் புலப்படுத்துகிறார். கரு முட்டையானது பத்து மாதங்களில் குழந்தையாக உருவாகித்
தாயின் கருப்பையை விட்டு வெளிவருகிறது. அது படிப்படியாக வளர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள்
எய்தும்போது முழுவளர்ச்சி பெறுகிறது. அதன்பின்
முழுவளர்ச்சி எட்டிய அவ்வுடல் எழுபது ஆண்டுகள் அளவில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கிறது
என்று இப்பாடலின் வாயிலாகப் புலப்படுத்துகிறார்.
எழுபது வயதில் உடலுறுப்புகள் அதிகளவு தளர்வினைச் சந்திக்கின்றன என்னும் மூப்பியல்
துறையினர் கூறும் முடிபுகளுடன் இச்செய்தி ஒரளவு பொருந்தி வரக் காண்கிறோம். (Senile tremor, rare under the age of 70, begins in the
hands, especially in that most used, and spreads to the neck and head, rarely
occurring in the lower limbs. -
Rolleston Humphry, SOME MEDICAL ASPECTS OF OLD AGE , London : Macmillan &
Co. Ltd.,1922, 143. மேற்கோள் : இரா. நிர்மலா, தமிழிலக்கியத்தில்
மூப்பும்)
மனித வாழ்வினைக்
குழந்தைப்பருவம், பிள்ளமைப் பருவம், இளமைப்பருவம், நடுத்தர
வயதுப்பருவம், முதுமைப் பருவம் எனப் பலவாறு பகுத்துக்காணலாம். திருமூலர் பாலன்
இளையன் விருத்தன் எனநின்ற காலம் (225) என மனித வாழ்க்கையை மூன்று பருவங்களில்
அடக்கிக் காண்கிறார். மேற்கூறிய மனித உடல்வளர்ச்சியின் மூன்று படிநிலைகளான வளர்ச்சி,
சமநிலை,
வீழ்ச்சி
ஆகிய மூன்றையும் முறையே பாலன், இளையன், விருத்தன் என்னும்
முப்பருவப் பாகுபாடு சமன்செய்யக் காணலாம்.
மூப்பை
அறியும் வாயில்
மூப்புக் காலத்தில் பல்வேறு உடலியல்
மாற்றங்கள் தோன்றுமாயினும் ஒருவர் முதுமையடைகிறார் என்பதை ‘முடி நரைத்தல்’
என்னும்
கூறு எளிதாகப் புலப்படுத்திவிடுகிறது. இம்மாற்றம் எளிதில் புலப்படக்கூடியதாக இருப்பதோடு,
எல்லாவற்றுக்கும்
முதன்மையதாகவும் அமைகிறது. எனவே பெரும்பாலான புலவர்கள் முதுமையைச் சுட்டுமிடத்து முடி
நரைத்தலையே அதிகமாகச் சுட்டுகின்றனர்.
மாறு திருத்தி
வரம்பிட்ட பட்டிகை
பீறு மதனைப் பெரிதுணர்ந்
தாரிலை
கூறுங் கருமயிர்
வெண்மயி ராவது
ஈறும் பிறப்புமொ
ராண்டெனும் நீரே (234)
என்னும் பாடலில்
நல்ல பட்டாடையும் காலத்தால் நைந்துவிடும். அதேபோன்று மனிதருடைய வாழ்நாளாகிய அகவையைக்
காலம் ஈர்ந்து செல்கிறது; கருமயிர் உருமாறி வெண்மயிராய் நரைக் கிறது
என்று மூப்புப் பருவத் தோற்றத்தை எடுத்தியம்புகிறார் திருமூலர்.
மூப்புக்காலத்
துன்பம்
மூப்புக்காலம் என்பது உடல்தளர்வுறும்
காலமாகும். அதனால் இளமையில் எளிதாகச் செய்யமுடிந்த
காரியங்கள் முதுமையில் செய்ய இயலாத நிலையடைகின்றன.
தேய்ந்தற் றொழிந்த
இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை
அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப்
படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக்
கொள்ளும் உயிருள்ள போதே (223)
என்னும் பாடல்
மூலமாக, இளமைக் காலத்தில் செய்யவியன்ற காரியங்கள் முதுமையில் செய்வதற்கு
அரியனவாகிவிடுவதைத் திருமூலர் சுட்டுகிறார்.
மகளிர்
இகழ்தல்
முதுமையுற்ற ஆடவரைக்கண்டு மகளிர் வெறுத்
தொகுக்கும் தன்மையைச் சம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன், திருமங்கை
யாழ்வார் முதலியோர் தத்தம் பாடல்களில் புலப்படுத்தியுள்ளனர். ‘காலினோடு
கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால் / ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்’
என்று
சம்பந்தர் (233:9) தம் தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.
விரும்புவர் முன்னென்னை
மெல்லியன் மாதர்
கரும்பு தகர்த்துக்
கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை
ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக்
காஞ்சிரங் காயும்ஒத் தேனே (224)
என்று திருமூலர்
இளமையில் மகளிருக்குக் கரும்பாய் இனித்த தான், மூப்பில் எட்டிக்காயாய்க்
கசக்கும் தன்மையைக் கூறுகிறார். இவ்வாறு மூப்புற்ற ஆடவரைக் கண்டு மகளிர் வெறுப்பதன்
காரணம் யாது?
கொம்பும் அரவமும்
வென்றநுண் ணேரிடை
வம்புண் குழலார்
வாசல் அடைத்திக ழாதமுன்
செம்பொன் கமுகினந்
தான்கனி யும்செழுஞ் சோலைசூழ்
நம்பன் நறையூர்
நாம்தொழு தும்எழு நெஞ்சமே (நா.தி.பி. 1481)
என்னும் பாடலுக்குப்
பெரியவாச்சான்பிள்ளை,
(கொம்புமித்யாதி)
வஞ்சிக் கொம்பையும் அரவையும் வல்லிக் கொடியையும் மற்றுள்ளவர்களையும் தோற்பிக்க வற்றான
இடையையுடையராய், பரிமளிதமாக குழலை யுடைய ஸ்திரீகளானவர்கள். (வாசலித்யாதி) முற்காலம்
இவனை விரும்பி, பின்பு வெறுவியனானவாறே, புறம்பே தள்ளிக்
கதவடைப்பார்கள்; இவற்றான் பின்னையும் சாபலத்தாலே போகாதே புறம்பே நிற்கும்;
லஜ்ஜித்து
இவன் அங்கு நின்றும் கால் வாங்கிப் போகைக்காக, இவனுக்குப் ‘போக’
யோக்யதை
யில்லாமையைச் சொல்லிப் பரிபவிப்பர்கள்; இப்படிப்பட்டவர்கள் பரிபவோக்தி செவிப்படுவதற்கு
முன்னே. . . (ஸ்ரீ வைஷ்ணவ க்ரந்த முத்ராபக ஸபை
(பதி.), பெரிய திருமொழி
(4-7 பத்துக்கள்), காஞ்சீபுரம்
: ஸ்ரீ கீதாசார்ய அச்சுக்கூடம், 1909).
என்று விளக்கம்
அளிக்கிறார்.
இவ்வுரையினை
ஒப்புநோக்கும்போது, மூப்புற்ற போதும் இல்லற வேட்கை தணியாதிருத்தலும் அதன் காரணமாக மகளிரை
நாடும் செயலும் வெளிப்படுகின்றன. ஆனால் மூப்புக்கால உடலியல் மாற்றங்களும் அதனால் ஏற்பட்ட
செயல்திறன் குறைபாடும் அம்மகளிர் வெறுத்தொதுக்கும் காரணிகளாய் அமைகின்றன. அதனால் மனத்தில் ஏற்படும் ஆழமான துன்பத்திலிருந்து
தன்னைக் காத்துக்கொள்ளும் கேடயமாக இறையுணர்வு அமைவதை மேற்காட்டிய திருமூலரின் பாடல்
உய்த்துணர வைக்கிறது.
மூப்பைத்
தவிர்த்தல்
எக்காலமும் இளமையோடு இருக்கவேண்டும்
என்ற விழைவு எல்லா மனிதருக்கும் எழுவது இயல்பே.
மார்க்கண்டேயன், யயாதி முதலியோருடன் தொடர்புடைய ‘இளமையோடு
இருத்தல்’ பற்றிய புராணக்கதைகள் இளமை விழைவையும் மூப்பை வெறுத்தலுமாகிய மக்களின்
மனப்பாங்கைப் புலப்படுத்துகின்றன. யோகத்தால்
நரை, திரை
அணுகாது உடலைக் காக்கக் கூடும் என்றும் இளமைக்காலத்தில் யோகப்பயிற்சி அற்றோரும் முதுமையில்
யோகத்தைக் கைக்கொண்டாலும் இளமையை மீண்டும் பெறலாம் என்னும் கருத்தும் சித்தர் பாடல்களில்
குறிப்பிடப்பெற்றுள்ளன. சித்துகளிலும் யோகத்திலும் வல்லவரான திருமூலரும் மேற்குறித்த
செய்திகளைப் பலபாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
மேலையண் ணாவில்
விரைந்திரு காலிடிற்
காலனும் இல்லை
கதவுந் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை
மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி
ஆணையே (784)
என்னும் திருமந்திரப்
பாடல் ‘பிராணாயாமப் பயிற்சி’ இறப்பினைத் தவிர்ப்பதுடன் உலகோர் அறியுமாறு
மூப்பைப் புலப்படுத்தும் கூறுகளான நரையையும் திரையையும் மாற்றி இளமையை மீட்டுத்தந்துவிடும்
என்று ஆணையிட்டுச் சொல்கிறது.
இறப்பு
உறுதி
இறப்பு உறுதியானது. பிறந்த எல்லா உயிர்களும் இறந்தேயாக வேண்டும்.
தழைக்கின்ற செந்தளிர்த்
தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம்
இறக்கின்ற கண்டும் (229.1-2)
என்று கூறும் திருமூலர்
வெட்டவெட்டத் தழைத்து வளர்வதாய் நாம் நினைக்கும் தாவரங்களே இறத்தல் என்னும் வினையைத்
தவிர்க்கவியலாது போகும்போது மனிதனுக்கு நிச்சயமாக இறப்பு உண்டு என்பதைப் புலப்படுத்துகிறார்.
அவ்வாறு இறப்பு நிகழ்ந்தவிடத்து அதனை மாற்றத்தக்க வழியும் இல்லை.
உடம்பொ டுயிரிடை
விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை
(220)
என்று உடலை விட்டு
உயிர்பிரியும்போது அதனைத் தடுக்கும் வழி இன்மையையும் புலப்படுத்துகிறார்.
இறப்பை
அறிய இயலாது
இறப்பு நிகழ்தல் உறுதியானதே என்றாலும்
இறப்புநேரும் காலத்தை யாராலும் கணித்தறிய முடியாது. அழைக்கின்றபோது அறியார் (229.4) என்று
திருமூலர் இறப்பு நிகழும் காலம் அறியாத தன்மையைக் குறிப்பிடுகிறார்.
அடப்பண்ணி வைத்தார்
அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு
மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை
நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே
(192)
என்னும் பாடல்
எப்பொழுதும்போல் உணவு உண்டுவிட்டுத் தூங்குவதற்காகப் படுத்தவர்கள் அப்படியே உயிரை விட்டுவிட்ட
அகால இறப்பை எடுத்துரைக்கிறது. மூப்பு தோன்றுவதற்கென்று கால எல்லை இருப்பதுபோல் இறப்பு
நிகழ்வதற்கு எந்தவித வரையறையும் இல்லை.
தன்னை அறியாது
தான்நல்ல ரென்னாதிங்
கின்மை யறியா திளையரென்
றோராது
வன்மையில் வந்திடுங்
கூற்றம் வருமுன்னந்
தன்மையின் நல்ல
தவஞ்செய்யும் நீரே (112)
என்ற பாடல் இளமைக்காலமாயினும்
இறப்பு நிகழ்ந்துவிடுவதை எடுத்துரைக்கிறது.
இறப்பிற்கு
முன் இறைதொழுதல்
உடலைவிட்டு உயிர் பிரிந்தபிறகு அவ்வுடல்
ஒரு முடிவினை எய்தி விடுகிறது; மண்ணோடு மண்ணாகி அழிந்துவிடுகிறது. ஆனால்
இத்தகையதொரு முடிவை உயிர் அடைவதில்லை. உயிர் என்றும் நிலைபேறுடையது. அதற்கு ‘மறுமை’
என்ற
நிலை உண்டு என்ற நம்பிக்கைகள் உலகளாவியதாகக் காணப்படுகின்றன. மத வேறுபாடின்றி உலகின்
அனைத்து மதங்களும் பாவம், புண்ணியம், சொர்க்கம்,
நரகம்
ஆகியவற்றைப் பரிந்துரைக்கின்றன.
பொல்லாப் புலாலை
நுகரும் புலையரை
எல்லாருங் காண
இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித்
தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி
மறித்துவைப் பாரே (242)
என்ற திருமூலரின்
பாடல் மறுமை நம்பிக்கையை ஆணித்தரமாக முன்வைக்கிறது. உயிரை எமதூதர்கள் கொண்டு செல்வர்
என்றும் பாவம் செய்வோர் நரகம் செல்வார்கள் என்றும் சமூகத்தில் நிலவிவரும் நம்பிக்கையை
இங்கே திருமூலர் பதிவுசெய்கிறார். இறப்புத்
துன்பத்தைப் போக்கி மறுமை இன்பத்தை எதிர்கொள்ள இறைவனை வழிபடும் வழியைச் சமயப் பெரியோர்
அனைவரும் ஒருமனதாக எடுத்துரைக்கின்றனர்.
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே
(223)
என்று திருமூலரும்
இறப்பிற்கு முன் இறைவனைத் தொழவேண்டும் என்னும் கருத்தினை முன்வைக்கிறார். இறப்பதற்கு முன் இறைவனைத் தொழுதல் வேண்டும் என்னும்
கருத்தைப் பல பாடல்களில் திருமூலர் (112, 229) வற்புறுத்துகிறார்.
இறப்பால்
கொள்ளவேண்டிய சமூக உணர்வு
தவிர்க்க இயலாத இறப்பினைக் கண்டாவது
மக்கள் நல்வழியில் செல்ல முயலவேண்டும். சமூக நலனில் அக்கறை கொள்ள வேண்டும். ஆனால் சமூகச் சூழலில் மக்கள் இறப்பையும் மிகச் சாதாரணமாக
ஏற்றுக்கொண்டு விழிப்புணர்வு பெறாமல் இறக்கின்றனர். இறந்தவருக்காகச் சிறிதுநேரம் அழுதுவிட்டு
இறந்தவரின் உடலை எரித்துவிட்டு அந்த நினைப்பையும் விட்டுவிட்டு எப்பொழுதும்போல் தத்தம்
பணிகளில் ஈடுபடுகின்றனர்.
ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே
(189)
என்னும் திருமூலரின்
பாடல் மக்களின் சமுதாய விழிப்புணர்வற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
மரணமிலாப்
பெருவாழ்வு
சாதாரண வாழ்வு வாழும் மக்களால் இறப்பினைத்
தவிர்க்கமுடியாது என்றாலும் யோகவழி நிற்பின் வாழ்நாள் நீட்டம் பெறலாம். நூறாண்டு இன்பமாய்
வாழலாம். யோகநிலையில் அணுவளவும் பிசகாது இருப்போர்
மரணமிலாப் பெருவாழ்வு வாழக்கூடும் என்ற சித்தர்களின் சிந்தனையைத் திருமூலரின் பாடல்வழியும்
அறியமுடிகிறது.
கூத்தவன் ஒன்றிடுங்
கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில்
எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து
பதுமரை நோக்கிடிற்
சாத்திடு
நூறு தலைப்பெய்ய லாமே (737)
சாத்திடு நூறு
தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங்
கட்டுறக் காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ்
சேர இருந்தவர்
மூத்துடன் கோடி
யுகமது வாமே (738)
ஆகிய பாடல்கள்
மனிதன் மரணமிலாப் பெருவாழ்வினை யோகம் மூலம் எய்தக்கூடும் என்பதைக் கூறுகின்றன. திருமூலரும் யோகநிட்டை காரணமாக மூவாயிரம் ஆண்டுகள்
வாழ்ந்தவர் என்று சொல்லப்படும் கருத்தும் இதனோடு ஒப்புநோக்கத் தக்கது.
இவ்வாறு திருமூலர், மூப்பு
இறப்புப் பற்றிய பன்முகப் பரிமாணங்களைத் தம் படைப்பில் வாய்க்குந்தோறும் பரவலாகச் சொல்லிச்செல்வதை
அறியமுடிகிறது. மக்களின் சாதாரண நடப்பியல்
வாழ்வில் தவிர்க்க இயலாதனவாகக் கருதப்படும் மூப்பையும் இறப்பையும் சிறந்த யோக முறைகளாலும்
தெய்வீக நெறிகளாலும் நிச்சயமாக வெற்றிகொள்ள இயலும் என்பதை உறுதியாகக் குறிப்பிடுகிறார்.
மரணமிலாப் பெருவாழ்வு குறித்த இன்றைய சர்ச்சைக்குரிய சிந்தனை இவருக்கு இருந்தமையும்
இவருடைய பாடல்கள் வாயிலாக நம்மால் அறியமுடிகிறது. இவற்றை அறிவியல் அடிப்படையில் நிரூபிக்க
நமக்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லாத நிலையில் இச்சிந்தனைகள் எதிர்கால ஆய்வுக்கு விடப்படுகின்றன.
பயன் நூல் :
திருமந்திரம், சென்னை : கழகப் பதிப்பு,
1969
காண்க : ஔவை இரா நிர்மலா, சமயச் சாரலில், காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2016ஈ பக்.61-71.
No comments:
Post a Comment