Saturday, 18 February 2017

சத்திய சோதனை



அக்டோபர் 2!
விவேகானந்தா நற்பணி மன்றத்தில் காந்தி ஜெயந்தி விழாவாம்.
என்னைச் சிறப்புரையாற்ற அழைத்தார்கள்.
காலையிலேயே பதற்றம் தொற்றிக்கொண்டது.
என்ன பேசுவது?
என் வீட்டு நூலகத்தில் நுழைந்து நூல் அடுக்குகளில் பார்வையைச் செலுத்தினேன்.
காந்திஜியின் சுயசரிதை நூலான சத்திய சோதனை என் கைகளில் தஞ்சம் புகுந்தது.
பக்கங்களைப் புரட்டினேன். எல்லாம் தெரிந்த செய்திகள்தாம்.
என் பேச்சைக் கேட்க வருபவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதிலேயோ அல்லது அதைத் தாண்டியவர் களாகவோதான் இருப்பார்கள். அவர்களும் காந்தியைப் பற்றி ஓரளவாவது அறிந்தவர்களாக இருப்பார்கள்.
அவர்களுக்குத் தெரிந்த செய்திகளையே எனக்கு மட்டுமே தெரிந்த செய்திகளைப்போல் எப்படி வீராவேசமாக உணர்ச்சிபொங்க எடுத்துரைப்பது?
கூட்டங்களில் பேசுவோர் சிலர் சொல்லிச் சொல்லி மழுங்கிப்போன செய்திகளையே உத்வேகத்துடன் பேசிக் கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயந்தான். ஏதோ அந்தச் செய்திகளை அவர்கள் மட்டுமே அறிந்தவர் போலவும் கூட்டத்திற்கு வந்திருப்போர் அவை எவற்றையும் அறியாதவர் போலவும் நினைத்துக்கொண்டு மணிக் கணக்காகப் பேசிக்கொண்டிருப்பார்கள்.
அதே தவறைத்தான் இன்று நானும் செய்யப் போகிறேனா? என் மனம் என்னைப் பார்த்துக் கேட்டது.
காந்திய வழிகள் இன்றைய சூழலில் எளிமையானவையா? பின்பற்றத் தக்கனவா என்று பேசலாமா?
அப்படி என்றால் இன்று ஒருநாள் நான் ஏன் காந்திய வழியில் நடந்து பார்க்கக் கூடாது?
அவரது கொள்கைகள்தாம் என்ன?
உண்மை!
அகிம்சை!
நேர்மை!
தம் குறைகளையும் மறைக்காமல் ஒத்துக்கொள்ளும் உறுதி!
இவற்றை என்னாலும் பின்பற்ற முடியாதா என்ன? முயற்சிப்போம். முடிவு செய்தேன்.
சில நிமிடங்களில் தொலைபேசி ஒலித்தது.
வணக்கம்! நான் சத்யா பேசறேன். நீங்க . . . ?’
வணக்கம்! நான் பாலா பேசறேன் சத்யா . . .  நான் ஒரு கம்ப்யூட்டர் வாங்கணும். ஒனக்குதான் அதப் பத்தி நல்லாத் தெரியுமே. இன்னிக்கு லீவுதானே, காலையிலேயே வாயேன். நல்ல கம்ப்யூட்டரா, லேட்டஸ்டா, எல்லா புரவிஷன்ஸோட வாங்கித்தாடா. வெல முன்னபின்ன இருந்தாலும் பரவாயில்லே . . .
காதுகள் அவன் சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்த அதே நேரம் - வாய் உம்’, ‘உம்என்று சொல்லிக்கொண்டிருந்த அதே நேரம் - என் மனம் வேகமாகச் செயல்படத் தொடங்கியது.
பாலா எந்த ஒரு விஷயத்திலும் வேகமாகச் செயல்பட மாட்டான். சின்னதான குண்டூசி வாங்கினால் கூட அது என்ன பிராண்ட், என்ன விலை, அதைவிட மலிவான - ஆனால் தரமான மற்றொரு பிராண்ட் இருக்கிறதா? பத்து தாள்களை ஒன்றாக வைத்தாலும் அதைக் குத்தி இணைக்க முடியுமா? இல்லை வளைந்துபோகுமா? என்றெல்லாம் அநியாயத்திற்கு ஆராய்ச்சி செய்வான்.
ஒருமுறை தர்கா மார்கெட்டில் பெல்ட் ஒன்று வாங்கவேண்டும் என்று கூறி அங்கே இருந்த எல்லாக் கடைகளையும் ஏறி இறங்கியதுதான் மிச்சம். ஒவ்வொரு கடையிலும் இருந்த பெல்ட்டுகளை எல்லாம் அலசி ஆராய்ந்து விலையையும் குறைத்துப் பேசிய பின்னால் நிறம் பிடிக்கவில்லை, அளவு சரியில்லை, அடுத்த கடை பார்க்கலாம் என்று அவன் சட்டென்று நழுவிவிட பெல்ட்டைக் கையில் பிடித்துக்கொண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தேன். அடுத்தடுத்து நான் செல்லும்போது அந்தக் கடைக்காரர்கள் என்னை மதிக்க வேண்டுமே என்பதற்காகத் தேவையே இல்லாமல் எனக்காக இரண்டு பெல்ட்டுகளை வாங்க வேண்டியிருந்தது. கடைசிவரை அவனுக்குப் பிடித்தமாக ஒன்றுகூட கிடைக்கவில்லை என்பதுதான் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. அதற்காக நாங்கள் செலவிட்ட நேரமோ சுமாராக மூன்றுமணி நேரம். ஒரு திரைப்படமே பார்த்திருக்கலாம்.
இவை எல்லாம் என் மூளையாகிய வலைத்தளத்தில் சிக்கின.
ஒரு பெல்ட் வாங்கவே அவ்வளவு யோசித்தவன் கம்ப்யூட்டரை வாங்க என்னை என்ன பாடு படுத்துவான்.
இன்று அவனிடம் மாட்டிக்கொண்டால் நாள் முழுக்க வீணாகிப்போகும்.
எங்கள் ஊரில் கடைக்காரர்கள் பெரும்பாலானோரை எனக்குத் தெரியும்.
அவனுக்குப் பெல்ட் வாங்கப்போய் கடைசியில் எனக்கு இரண்டு பெல்ட் வாங்கி என் பணத்தை வீணாக்கி னேன். கணினியை விலைபேசிவிட்டு அவன்  வாங்காமல் நழுவும் பட்சத்தில் அதனை நானா வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போகமுடியும்? ஏற்கெனவே என்னிடம் கணினி இருக்கிறதே! ஒவ்வொரு கடையிலும் விலைபேசிவிட்டு வாங்காமல் வந்தால் பிற்காலத்தில் எனக்கு ஏதாவது பொருள் வாங்க வேண்டுமானால் அக் கடைக்காரர்களை எதிர்கொள்வதில் சங்கடமாக இருக்கும்.
யோசித்தேன். நாலைஞ்சு நாள் ஏதாவது காரணம் காட்டி அவனிடமிருந்து தப்பித்துவிட்டால் பிறகு அவனே போய் வாங்கிவிட்டாலும் வாங்கிவிடுவான். தொல்லை விட்டது என்று இருந்துவிடலாம்.
பாலா. . . ! வீட்டுக்குக் கெஸ்ட் வந்திருக்காங்க. அவங்களுக்கு வேளாங்கண்ணி, நாகூர், திருக்கடையூர், தரங்கம்பாடின்னு ஊரச் சுத்திக் காட்டணும். அதனால முதல்ல நீபோய் சும்மா விசாரிச்சிட்டு வந்திடு. அப்பறம் நாமபோய் பாக்கலாம்என்றேன்.
சரி சத்யா . . . !என்று அரைமனதாய் ரிசீவரை வைத்தான் பாலா.
நான் சத்திய சோதனையை மீண்டும் புரட்டினேன்.
என்ன இது? நான் காந்தியைப் பின்பற்ற நினைத்து ஒரு அரைமணி நேரம்கூட ஆகவில்லை. எங்கள் வீட்டிற்கு வராத விருந்தாளியை வரவைத்துவிட்டு சுற்றாத ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறேனே! என்ன செய்யட்டும்?
பாலாவிடம் எனது உண்மையான எண்ணத்தைச் சொல்லியிருந்தால் எங்கள் நட்பு என்னாகும்?
நேற்று எங்கள் அலுவலகத்தில் எங்கள் மேலதிகாரி ஓய்வு பெற்றமைக்கு நடந்த பிரிவு உபசார விழா ஞாபகத்திற்கு வந்தது. விழாவின் அனைத்துச் செலவுப் பொறுப்பும் என்னிடமிருந்தது. அனைவரும் தலைக்கு இருநூறு ரூபாய் கொடுத்திருந்தார்கள். எப்போதும்போல் பற்றாக்குறை பட்ஜெட்தான். பார்த்துப் பார்த்துச் செலவு செய்யவேண்டியிருந்தது. என்னதான் நாம் உண்மையாக நடந்துகொண்டாலும் சில தேள்கொடுக்குப் பேர்வழிகள் இருப்பார்கள். அவர்கள் பண விஷயத்தில் எல்லோரையும் சந்தேகப்படுவார்கள். நாம் ஏதோ பெருந்தொகையைச் சுருட்டிவிட்டதாக நாக்கில் நரம்பில்லாமல் கதைகட்டி விடுவார்கள்.
எனக்குக் கடைக்காரர்கள் பரிச்சியம் என்பதால் வரவேற்புச் சாமான்கள், இனிப்புக் கார வகைகள், நினைவுப் பரிசு, பொன்னாடை எனப் பல பொருட்களின் விலையிலும் சலுகை கிடைத்தது. அவசரத்தில் அவற்றிற்கெல்லாம் பற்றுச்சீட்டு வாங்கவில்லை. ஆறஅமர வாங்கிக் கொள்ளலாம் என்று வந்துவிட்டேன்.
இன்று விடுமுறைதானே. ஒரு ரவுண்டு போய் எல்லோரிடமும் பற்றுச்சீட்டு வாங்கிவந்துவிடுவோம். கிளம்பினேன்.
அனைவரும் நான் கொடுத்த தொகைக்கு ரசீது போட முன்வந்தார்கள். சிலர் நான் கொடுத்த தொகையைக் காட்டிலும் அதிகமான தொகைக்கும் ரசீது போட்டுத் தருவதாகக் கூறினார்கள்.
வேணாம் வேணாம். அப்படில்லாம் பில் வேணாம். பொருளோட உண்மை வெல என்னவோ மொதல்ல அதப் போடுங்க. அப்பறம் தள்ளுபடி பண்ண தொகையை டிஸ்கவுண்ட் போட்டுக் கணக்குக் காட்டுங்க போதும்.என்றேன்.
அப்போதுதானே என்னால் எவ்வளவு இலாபம் கிடைத்தது என்பதைச் சக ஊழியர்களுக்கு உணர்த்தமுடியும். அத்துடன் தள்ளுபடியோடு பொருட்களை வாங்கி யுள்ளேன் என்பதை அறிந்தால் அவர்கள் மகிழ்ச்சி அடையக்கூடும் அல்லவா?
ஆனால் அப்படிப் பற்றுச்சீட்டு கொடுக்கப் பலர் மறுத்தார்கள். சார். . . நாங்க டிஸ்கவுண்ட் பண்ணதே உங்கள எங்களுக்கு நல்லாத் தெரியுங்கறதாலதான். உங்களுக்கு நாங்க டிஸ்கவுண்ட் போட்டுப் பில் குடுத்தா அப்பறம் எல்லாரும் டிஸ்கவுண்ட் கேப்பாங்க சார். நீங்க கொடுத்த பணத்துக்கு வேணும்னா பில் போட்டுத் தரேன் சார்!என்றார்கள்.
என்ன இது! நான் உண்மையாக இருக்கவேண்டும் என்று முனைந்தாலும் கடைக்காரர்கள் விடமாட்டேன் என்கின்றனரே!
ஒவ்வொரு பற்றுச்சீட்டாக வாங்கிவரும்போது என் அலுவலக நண்பர் எதிர்ப்பட்டார். அவர் மனைவியும் குழந்தைகளும் ஊருக்குப் போய்விட்டார்களாம். உணவு விடுதிக்குச் சாப்பிடச் சென்றுகொண்டிருந்தார். என்னையும் தன்னுடன் சாப்பிட வருமாறு வற்புறுத்தினார்.  இன்னும் இரண்டு கடைகளில் பற்றுச்சீட்டு வாங்கவேண்டி இருந்தது. எனக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. இன்றைக்கு எடுத்த வேலையை முடிக்காவிட்டால் நாளையும் அலைய வேண்டும். சரியென்று அவருடன் சாப்பிடச் சென்றேன்.
மனைவிக்குச் சொல்லலாம் என்று அலைபேசியை எடுத்தால் அதில் உயிரொளி இல்லை. விடுமுறை நாளாதலால் சார்ஜ்போட மறந்துவிட்டிருந்தேன். சரிதான் சாப்பிட்டுவிட்டு சொல்லிக்கொள்ளலாம்.
நல்ல வேலையாக எல்லா வேலையும் முடிந்து விட்டது. வீட்டை நெருங்கியபோது மணியைப் பார்த்தேன். கடிகாரம் மூன்று என்று காட்டியது.
அடடா, நான் சாப்பிட்டுவிட்டதை அவளிடம் இன்னும் கூறவில்லையே!
கதவைத் திறக்கும்போது என் மனைவி என்னை எரித்துவிடுவதுபோல் பார்த்தாள்.
அவள் எப்போதும்போல் சாப்பிடாமல் காத்திருந்தாள்.
என்ன சொல்லிச் சமாளிப்பது . . . யோசித்தேன்.
சாப்பிட்டுவிட்டேன்என்று சொன்னால் நிச்சயமாகக் கோபத்தில் கடுகுபோல் பொரிவாள். சாப்பிடவில்லை என்று சொன்னாலாவது பாவம் என்ற பச்சாதாபத்தில் ஆறிய அப்பளம்போல் கோபம் தணிவாள்.
நெறைய வேல இருந்ததும்மா, எப்டி அப்டிஅப்டியே விட்டுட்டு வரமுடியும்? சரி சரி வா, ரெண்டுபேரும் சாப்புடலாம்.
அவளுக்காக இரண்டுவாய் சாப்பிட்டு எழுந்தேன்.
நேரமாகிவிட்டதால்தான் என்னுடைய பசி அடங்கி விட்டது என்று அவள் சொல்லிச் சொல்லி வருந்தினாள்.
அவள் வருந்தியதற்காக என் மனம் குற்றஉணர்வால் குமைந்தது.
அலைபேசியைச் சார்ஜில் போட்டேன். சிறிது நேரத்தில் சிணுங்கியது.
என் நண்பன் சீனிவாசன்.
மைசூரிலிருந்து தன் நண்பர்களோடு ஊர் சுற்றிப் பார்க்க வந்திருந்தான். அவன் ஊர்சுற்றும் மேப்பில் காரைக்கால் முக்கிய இடம் பிடித்தது.
புதுச்சேரி, காரைக்கால் என்றாலே மக்களுக்கு ஒரு கிளுகிளுப்பு தொற்றிக்கொள்கிறது.
எங்காவது வெளியூர் செல்லும்போது நான் இருப்பது புதுவை அல்லது காரைக்கால் என்றால் என்னை நோக்கி எய்யப்படும் முதல் வினா, ‘அங்க அது ரொம்ப சீப்பாமேஎன்பதுதான்.
இந்த ஊர்களுக்கு எவ்வளவோ பெருமைகள் இருந்தாலும் ஆடவரால் சிலாகித்துச் சொல்லப்படுவது இவ்வூர்களின் குடிப்பெருமை மட்டுமே.
அவர்களது தாகம் எப்போது தீருமோ?
சீனிவாசன் அக்டோபர் இரண்டாம் நாளைக் காரைக்காலுக்கு ஒதுக்கி இருந்தான். ஊர் சுற்ற அல்ல. ஒதுக்குப்புறமாக அமர்ந்து தண்ணீர்த் தாகத்தைத் தணித்துக்கொள்ள.
அவன் என்னிடம் ஒரே ஒரு உதவிதான் கேட்டான்.
சத்யா, சாரிடா. . . எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுடா . . . அத ஒங்கிட்ட கேக்கவே வெக்கமா இருக்கு. ஒனக்கு அந்தமாதிரி பழக்கமெல்லாம் இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும் . . . இருந்தாலும் வேற வழி இல்ல. இந்த ஊர் எனக்குப் புதுசில்லையா? என் பிரண்ட்ஸ் எல்லாம் கம்ப்பல் பண்றாங்கப்பா . . . ’ - தயங்கிக்கொண்டே அவன் பேசினான்.
அவன் தயக்கத்திற்குக் காரணம் இருந்தது. எனக்கு அவன் கேட்டது பற்றி அரிச்சுவடிகூட தெரியாது. ஏனோ நான் தெரிந்துகொள்ளவில்லை. தெரிந்துகொள்ளவும் இதுநாள் வரை விரும்பவில்லை. என் நண்பர்களாக ஆனவர்கள் சிலர் என் நட்பு ஏற்பட்டபின் அந்தப் பழக்கத்தை அறவே விட்டதும் உண்டு.
சீனிவாசன் எனக்கு இப்படி நெருக்கடி கொடுப்பான் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அக்டோபர் இரண்டு - அந்தக் கடைகள் எல்லாம் மூடி இருந்தன. அதுதான் அவன் பிரச்சனையே.
இந்த உதவியைச் செய்யாவிட்டால் சீனிவாசனின் நண்பர்கள், ‘என்னப்பா என்னவோ எனக்காக என் நண்பன் உயிரையே கொடுப்பான்னு பெருசா சொன்னே! ஆப்ட்ரால் ஒரு பாட்டில் அரேன்ஞ் பண்ண முடியலயேஎன்று நக்கல் அடிப்பார்கள். அவர்கள் மத்தியில் அவனுடைய இமேஜ் பாதிக்கப்படும். போடா போ, நீயும் உன் கொள்கையும்என்று என் நட்பைத் தூக்கி எறிந்தாலும் எறிவான்.
நட்பைத் தூக்கி எறிவதா? கொள்கையையா? யோசித்தேன்.
எக்காரணத்தாலும் பழைய நட்பை விட்டுவிடக் கூடாது என்று திருக்குறளும் நாலடியாரும் சொன்னது ஞாபகத்தில் வந்தது.
எனக்குத் தெரிந்த நபருக்குத் தொடர்பு கொண்டேன். அவர் இந்த விஷயத்தில் தலைகீழாகத் தண்ணீர் குடித்தவர். இதென்ன பிரமாதம், எல்லாம் நான் பாத்துக்கறேன். கவலய விடுங்கஎன்று என் வருத்தத்தைப் போக்கினார்.
எப்படியோ எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. என்னதான் கெடுபிடி இருந்தாலும் அது பாட்டுக்கு ஒருபுறம் விற்பனையாகிக்கொண்டுதான் இருக்கிறது. அந்தஒருநாள் கூட பெருங்குடிமக்களால் பத்தியம் இருக்க முடிவதில்லை என்பதுதான் அது.
ஒருவழியாக பிரச்சனை முடிந்தது என்று பெருமூச்சுவிட்டேன்.
மனைவி அழைத்தாள் . . .
என்னங்க, மணி அஞ்சு ஆவுது. . . கூட்டத்துக்குக் கிளம்பலயா?’
இதோ ரெடியாயிட்டேன்.
நன்றாக அயர்ன் செய்யப்பட்ட மொடமொட வென்றிருந்த வெண்மையான கதர்வேட்டி, கதர்சட்டை அணிந்துகொண்டு கம்பீரமாக மேடையில் அமர்ந்தேன்.
நான் பேசி முடித்ததும் அனைவரும் கைதட்டி ஆரவாரித்தார்கள். என்ன பேசினேன் என்று தெரிய வில்லை. காந்தியின் வாழ்க்கையைப் பற்றிப் பேசினேன். என்னைப் பற்றி என்னால் பேசமுடியவில்லை. அப்படிப் பேசினால் கேட்பவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
எல்லோர் முகங்களையும் உற்று நோக்கினேன்.
மேடையில் இன்னும் பேச வேண்டியவர்கள் இவன் எப்போது முடிப்பான்என்ற வினாவோடு மைக் பிடித்துக் கொண்டிருப்பவரை எதிர்நோக்கினர்.
கூட்டத்தில் அமர்ந்திருந்தோர் பெரும்பாலும் விழா ஏற்பாடு செய்தவர்கள், சொற்பொழிவாளர்கள் ஆகியோரின் முக தாட்சண்யத்திற்காக வந்திருந்தவர்கள்கூட்டத்திற்கு வராவிட்டால் பின்னர் அவர்களைச் சந்திக்கும்போது அசடுவழிய வேண்டிவருமே என்று வந்தவர்கள். கூட்டத்தை எவ்வளவு சீக்கிரத்தில் முடிப்பார்கள் என்று நிமிடத்திற்குப் பத்து முறை அவர்கள் தங்கள் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
காந்தி ஜெயந்தி என்பது அவர்களைப் பொறுத்தவரை கூட்டம் போட்டு பேசக்கூடிய விழா மட்டுமே . . . காந்தியின்  கொள்கைகள் . . . ?
நாள் முழுதும் அலைந்த களைப்பு . . . படுக்கையில் வீழ்ந்தேன். தூக்கம் வர மறுத்தது. காலையில் நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழி நினைவுக்கு வந்தது.
உறவு, நட்பு, சமுதாயம் எந்த வழியிலும் என் உறுதிமொழி தோற்றுப்போனது. என்னால் முடிந்தது கதர்ச் சட்டை அணிந்தது மட்டுமே . . .
காந்தி ஜெயந்தி . . . ! காந்தியக் கொள்கைகள் . . . ! விழாவாவிழைவா?

No comments:

Post a Comment