தமிழகத்தில்
சைவநெறி தழைத்தோங்கியதற்கு அறுபத்துமூன்று நாயன்மார்களும் இன்றியமையாக் காரணமாவர்.
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்,
காரைக்காலம்மையார்,
சேரமான்
பெருமாள் நாயனார் முதலான சிலர் சிவபெருமானின் திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டுப்
பாடல்களைப் பாடி இலக்கியம் படைத்துச் சிவநெறியைப் பரப்பினர். இவர்கள் தவிர்ந்த மெய்ப்பொருள்
நாயனார், கண்ணப்ப நாயனார் முதலான நாயன்மார்கள் இலக்கியப் படைப்பில் தம் பங்களிப்பை
ஏற்படுத்தவில்லையென்றாலும் சிவனடியார்களை ஆதரித்து உணவளித்துச் சிவபூசையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு
தம் வாழ்வையே சிவநெறிக்கு அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்தனர். இந்நிலையில் சைவநெறி வளரப்
பாடுபட்ட மகளிரின் செயலாண்மையைப் பெரிய புராணத்தின் வாயிலாக எடுத்துரைத்தல் இக்கட்டுரையின்
நோக்கமாக அமைகிறது.
நாயன்மார்களில்
மகளிர்
அறுபத்துமூன்று நாயன்மார்களில் காரைக்கா ம்மையார்,
மங்கையர்க்கரசியார்,
இசைஞானியார்
ஆகிய மூவர் மட்டுமே பெண்பாலராக அமைகின்றனர். அவர்கள் சிவநெறியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டமையைத்
தனித்தனிப் புராணமாகச் சேக்கிழார் பாடிச் சிறப்பித்துள்ளார். காரைக்காலம்மையார் வாழ்க்கையை
66 பாடல்களிலும் மங்கையர்க்கரசியார் வாழ்க்கையை 3 பாடல்களிலும், இசைஞானியார்
வாழ்க்கையை 1 பாடலிலும் சேக்கிழார் பாடியுள்ளார். இவர்கள் அல்லாமலும் நாயன்மார் சிலரின்
மனைவியர் சிவநெறியைப் போற்றிய பாங்கினையும் சேக்கிழார் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
சிவநெறியில்
ஈடுபட்ட பேராண்மை
சிறுவயது முதலே காரைக்காலம்மையார் எனப்படும் புனிதவதியார்
சிவனை வழிபடுவதிலும் சிவனடியார்களைப் போற்றிப் பாதுகாப்பதிலும் ஆர்வம் உடையவராக விளங்கினார்.
இதனை,
வண்டல் பயில் வனஎல்லாம்
வளர்மதியம் புனைந்த சடை
அண்டர்பிரான் திருவார்த்தை
அணையவரு வனபயின்று
தொண்டவரில் தொழுதுதா
தியர்போற்ற . . . (1721)
என்று புனிதவதியாரின்
இளமைக் காலத்தைச் சேக்கிழார் விவரிப்பதிலிருந்து அறியலாம். புனிதவதியார் மணப்பருவம்
எய்தியதும் அவர்தம் பெற்றோர் நாகபட்டினத்தின் மிகப்பெரிய வணிகராகிய தனதத்தன் மகன் பரமதத்தனுக்கு
மணம் செய்வித்ததுடன் தம் ஒரே மகளைப் பிரிந்திருக்க விரும்பாமல் தம் இல்லத்திற்கு அருகிலேயே
மகளும் மருமகனும் வாழுமாறு குடிவைத்தனர்.
ஆங்கவன்தன் இல்வாழ்க்கை
அருந்துணையாய் அமர்கின்ற
பூங்குழலார் அவர்தாமும்
பொருவிடையார் திருவடிக்கீழ்
ஓங்கியஅன் புறுகாதல்
ஒழிவின்றி மிகப்பெருகப்
பாங்கில்வரும்
மனைஅறத்தின் பண்புவழாமையில் பயில்வார்
(1730)
நம்பர் அடியார்
அணைந்தால் நல்லதிரு அமுதளித்தும்
செம்பொன்னும் நவமணியும்
செழுந்துகிலும் முதலான
தம்பரிவினால் அவர்க்குத்
தகுதியின் வேண்டுவ கொடுத்தும்
உம்பர்பிரான் திருவடிக்கீழ்
உணர்வுமிக ஒழுகுநாள் (1731)
என்று திருமணத்திற்குப்
பின்னரான புனிதவதியாரின் வாழ்க்கையைச் சேக்கிழார் எடுத்துரைக்கிறார். தம் கணவன் ஊராகிய
நாகபட்டினத்தில் இல்வாழ்;க்கையைத் தொடராமல் தாம் பிறந்துவளர்ந்த காரைக்காலிலேயே
மணவாழ்க்கையைத் தொடர்ந்தமையால் சிவனடியார்களைப் போற்றுவதில் எந்த இடையூறுமின்றிக் காரைக்காலம்மையாரால்
செயல்பட முடிந்தது எனலாம்.
தான் அனுப்பிவைத்த
இரு மாங்கனிகளில் ஒன்றை உண்ட பரமதத்தன் சுவைமிகுதி காரணமாக மற்றொரு மாங்கனியையும் உண்ணக்
கேட்கின்றான். அதனைச் சிவனடியாருக்குத் தாம் அளித்துவிட்டமையைத் தம் கணவனிடம் கூறாமல்
காரைக்காலம்மையார் மறைக்கவேண்டியதன் காரணம் யாதென்பதைச் சேக்கிழார் சுட்டாமல் வாசிப்பவரின்
யூகத்திற்கே விட்டுவிடுகிறார்.
இனையதொரு பழம்இன்னும்
உளததனை இடுக என
அனையதுதாங் கொண்டுவர
அணைவார்போல் அங்ககன்றார்
(1740.3-4)
என்று காரைக்காலம்மையின்
செயலை விவரிக்கிறார் சேக்கிழார். தம் கணவனிடம் உண்மையைக் கூறத் தயங்கிய காரைக்காலம்மை
இல்லாத பழத்தை எடுத்துவரச் செல்வதாய் நடிக்கவும் செய்கிறார். காரைக்காலம்மை இறைவனிடம்
வேண்ட இறையருளால் மாங்கனி ஒன்று கையில் தோன்றுகிறது. அதனைத் தம் கணவனுக்கு அளிக்க அதனை
உண்ட பரமதத்தன் அதிசயத்தக்க சுவையுடைய அக்கனி யாதென வினவுகின்றான்.
அவ்வுரைகேட் டலும்மடவார்
அருளுடையார் அளித்தருளுஞ்
செவ்வியபேர் அருள்விளம்புந்
திறமன் றென்றுரை செய்வார்
கைவருகற் புடைநெறியால்
கணவன் உரை காவாமை
மெய்வழியன் றெனவிளம்பல்
விடமாட்டார் விதிர்ப்புறுவார்
(1743)
செய்தபடி சொல்லுவதே
கடன் என்னுஞ் சீலத்தால்
மைதழையுங் கண்டர்சே
வடிகள்மனத் துற வணங்கி
எய்தவருங் கனியளித்தார்
யார் என்னுங் கணவனுக்கு
மொய்தருபூங் குழல்மடவார்
புகுந்தபடி தனை மொழிந்தார்
(1744)
என்று காரைக்காலம்மையாரின்
மெய்ப்பாட்டை விளக்குகிறார் சேக்கிழார்.
நாயன்மார்களின்
மனைவியரை நோக்குமிடத்து காரைக்காலம்மையாரின் வாழ்க்கை வேறுபட்டமைந்தமையை அறியமுடிகிறது.
இளையான்குடி நாயனார், சிறுத்தொண்ட நாயனார் முதலானோரின் மனைவியர் தமது கணவனின் இறைத்தொண்டிற்குப்
பக்கபலமாக இருக்கின்ற நிலையைக் காணலாம். ஆனால் புனிதவதியாரின் கணவன் பரமதத்தன் சிவத்தொண்டினில்
பேரார்வம் காட்டவில்லை என்பதை ஊகித்துணர முடிகிறது. பரமதத்தன் சிவனடியார்கட்குத் தொண்டு
செய்ததாகவோ சிவநெறியில் மிகுந்தநாட்டம் கொண்டிருந்ததாகவோ சேக்கிழாரால் காட்டப் பெறவில்லை.
இச்சூழலில் காரைக்காலம்மையார் சிவனடியார்களுக்கு அமுது படைத்தமையாகிய செயலைச் செய்ய
தனிப்பட்ட பேரார்வமும் நெஞ்சுரமும் இருந்திடல் வேண்டும். அதனால்தான் கணவன் சுவைப்பதற்கு
முன்பாகச் சிவனடியாருக்கு மாம்பழத்தை உண்ணக் கொடுத்தலாகிய சாதாரண நிகழ்வையும் கணவனிடம்
சொல்வதற்குத் தயங்கி அதற்குரிய தீர்வை இறைவனிடமே மன்றாடுகிறார் எனலாம்.
காரைக்காலம்மையாரின்
இறைத்தன்மையை உணர்ந்த பரமதத்தன் அவரோடு இல்லறம் புரிய அஞ்சி வணிகம்செய்யச் செல்வதுபோல்
போக்குக்காட்டிப் பாண்டியநாடு சென்று மற்றொரு திருமணமும் புரிந்துகொண்டு பெண்குழந்தையைப்
பெற்றெடுத்து அதற்குக் காரைக்காலம்மையின் இயற்பெயராகிய புனிதவதி என்ற பெயரையும் இட்டு
வாழ்ந்துவருகிறான். இந்த நீண்ட இடைவெளிக்காலத்தில் தன் கணவன் வரக்காணாத காரைக்காலம்மையார்
கணவன் பிரிவிற்காக அழுது புலம்பியதாக ஓரிடத்தும் சேக்கிழார் சுட்டவில்லை. மன்னிய கற்பி
னோடு மனையறம் புரிந்து வைகலாகிய (1755.4) அவருடைய ஒழுகலாற்றைச் சுட்டுகிறார். பெற்றோரும்
சுற்றத்தினரும் பரமதத்தனைத் தேடிக் கண்டுபிடித்துக் காரைக்காலம்மையை அவனோடு சேர்க்க
முயற்சி எடுக்கின்றனர். பரமதத்தன் வாழ்கின்ற பாண்டிய நாட்டுக்கே காரைக்காலம்மையை அழைத்துச்
செல்கின்றனர். காரைக்கா லம்மையின் கால்களில் தன் மனைவி மகளோடு பரமதத்தன் விழுகிறான்.
அதனைக் கண்டு காரைக்காலம்மை தம் கணவனை நோக்கி எதுவும் வினவவில்லை.
கணவர்தாம் வணங்கக்
கண்ட காமர்பூங் கொடிய னாரும்
அணைவுறுஞ் சுற்றத்
தார்பால் அச்சமோ டொதுங்கி நிற்ப
(1762.1-2)
என்று அந்நிகழ்வைச்
சேக்கிழார் எடுத்துரைக்கிறார். பரமதத்தனின் செயல்பற்றிச் சுற்றத்தினர் வினவ,
அவன்,
காரைக்காலம்மை
மானுடர் அல்லர் என்றும் நல்பெருந் தெய்வம் ஆதல் அறிந்தே தான் அகன்றதாகவும் கூறுகிறான்.
அதற்குக் காரைக்காலம்மை எதிர்ச்சொல் எதுவும் கூறாமல் இறைப்பணியே தமக்கு உகந்தது என்று
உடனடியாகத் தம் மனத்திற்குள் முடிவெடுத்து, அவ்வாழ்க்கைக்குத்
தக தம் உடலையும் மாற்றுமாறு இறைவனிடம் வேண்டுகிறார்.
ஈங்கிவன் குறித்த
கொள்கை இதுஇனி இவனுக் காகத்
தாங்கிய வனப்பு
நின்ற தசைப்பொதி கழிந்திங் குன்பால்
ஆங்குநின் தாள்கள்
போற்றும் பேய்வடிவு அடியே னுக்குப்
பாங்குற வேண்டும்
என்று பரமர்தாள் பரவி நின்றார் (1765)
என்று காரைக்காலம்மையாரின்
இறைப்பற்றையும் எண்ணியாங்கு எய்துகின்ற திண்மையையும் எடுத்துரைக்கிறார் சேக்கிழார்.
திருத்தலங்களை
வழிபட்டுப் பாடல் பாடுதல்
தமிழகத்தில் பெண்டிர் பிறர் செய்திராத மற்றொரு
சாதனையையும் காரைக்காலம்மையார் புரிந்துள்ளார். இறைவனை தரிசிக்கத் தமிழக எல்லையைக்
கடந்து கயிலை மலைவரை சென்று திரும்பியுள்ளார்.
வடதிசைத் தேசம்
எல்லாம் மனத்தினும் கடிது சென்று
தொடையவிழ் இதழி
மாலைச் சூலபா ணியனார் மேவும்
படரொளிக் கைலை
வெற்பின் பாங்கணைந் தாங்குக் காலின்
நடையினைத் தவிர்ந்து
பார்மேல் தலையினால் நடந்து சென்றார் (1771)
என்று வடக்கின்கண்
உள்ள தேசங்களை எல்லாம் தனித்துக் கடந்துசென்று கயிலை மலைக்கண் வீற்றிருக்கும் சிவபெருமானைத்
தரிசித்த தன்மை ஆடவராலும் எளிதில் நிகழ்த்தமுடியாத செயலாகும். இமயம்வரை சென்ற காரைக்காலம்மையார்
மீண்டும் தமிழகம் நடந்துவந்து திருவாலங்காட்டில் கோயில் கொண்டிருக்கும் சிவனை வழிபட்டு
முத்தியடைகிறார். சிவன்மீது திருப்பாடல்கள் இசைத்த ஒரே பெண்நாயன்மாராகவும் இவர் திகழ்கிறார்.
இவ்வாறு பெண்ணாகப்
பிறந்தும் செயற்கரிய செயல் செய்து சிவநெறி வளர்த்தவராகச் சிறப்படைகிறார் காரைக்காலம்மையார்.
தன்னையே
அர்ப்பணித்தல்
நாயன்மாரில்
ஒருவரான இயற்பகை நாயனாரின் பெருமையைப் புலப்படுத்த அவர்தம் மனைவியையே தனக்கு அளிக்க
வேண்டும் என்று சிவபெருமான் கேட்க, இயற்பகை நாயனார் அதற்குச் சம்மதித்து அதனை
மனைவியிடம் தெரிவிக்கிறார். அதற்கு மறுவார்த்தை எதுவும் பேசாமல் தம் கணவனின் சொல்லைச்
சிரமேற்கொண்டு உடனடியாக நிறைவேற்ற முடிவும்செய்கிறார் அவருடைய மனைவியார்.
இன்று நீரெனக்
கருள்செய்த திதுவேல்
என்னுயிர்க்
கொருநாத நீர்உரைத்த
தொன்றை நான்செயும்
அத்தனை யல்லால்
உரிமை
வேறுள தோஎனக்கு என்று
தன்தனிப்பெறுங்
கணவரை வணங்கத்
தாழ்ந்து
தொண்டனார் தாமெதிர் வணங்கிச்
சென்று மாதவன்
சேவடி பணிந்து
திகைத்து
நின்றனள் திருவினும் பெரியாள் (412)
என்று இயற்பகை
நாயனாரின் மனைவி தன் கணவன் சொல்காக்கும் தன்மையைச் சேக்கிழார் எடுத்துரைக்கிறார். இதன்மூலம்
இயற்பகை நாயனார் சிவநெறி வெற்றிபெற்றமைக்கு அவர் மனைவியே முழுக் காரணமாகிறார் எனலாம்.
தமிழகப் பெண்ணின் மரபுவழிப்பட்ட கற்புக்கோட்பாட்டையே இவர் செயல் மாற்றியிருக்கக் காணலாம்.
எல்லைகடந்த
துன்பங்கள் எதிர்கொள்ளல்
இளையான்குடி மாறநாயனார் தம்மை நாடிவந்த சிவனடியாருக்கு
உணவளிக்க முனைகிறார். பெருமழை பெய்துகொண்டிருக்க வயலில் முளைவிட்டிருக்கும் நெல்லைக்
கொண்டுவந்து மாறனார் கொடுக்க அதனைக் கழுவிச் சுத்தஞ்செய்து குற்றி அரிசியாக்குகிறார்
மனைவியார். அடுப்பில் எரிக்க விறகெதுவும் இன்மையால் தம் வீட்டுக்கூரையிலிருந்து குச்சிகளை
எடுத்துத்தந்து, கறிசமைக்க நீரில் மூழ்கிக்கிடக்கும் குப்பைக்கீரைகளைப் பறித்துக்கொடுக்கிறார்
மாறனார். அடுப்பை மூட்டி, கீரைகளைக் கழுவிச் சுத்தம் செய்து சமைத்து
முடிக்கிறார் மனைவியார்.
முறித்தவை அடுப்பின் மாட்டி முளைவித்துப் பதம்முன்
கொள்ள
வறுத்தபின் அரிசி யாக்கி வாக்கிய உலையிற் பெய்து
வெறுப்பில்இன் அடிசில் ஆக்கி மேம்படு கற்பின்
மிக்கார்
கறிக்கினி என்செய் கோம்என் றிறைஞ்சினார் கணவ னாரை
(459)
என்று இளையான்குடி
மாறநாயனார் தம் மனைவியின் செயல்திண்மையைச் சேக்கிழார் எடுத்துரைக்கிறார். இவ்வாறு சிவனடியாருக்கு
உணவுபடைக்க வழிஇல்லாத காலத்தும் தம் திறமையால் உணவாக்கிக் கொடுத்த மனைவியின் திறமை
காரணமாகவே இளையான்குடி மாறநாயனாரின் சிவத்தொண்டு சிறந்து விளங்கிற்று எனலாம்.
அழகு துறத்தல்
மானக்கஞ்சாற நாயனார்
தம் மகளுக்குத் திருமணம் செய்யவிருந்த நாளில் சிவனடியார் ஒருவர் வருகின்றார். அவரிடம்
ஆசிபெற வணங்கிய மணப்பெண்ணைக் காணும் சிவனடியார் அவளது நீண்ட கூந்தலை அறுத்துத் தருமாறு
நாயனாரை வேண்ட உடனே அதனை நிறைவேற்றுகிறார் நாயனார். எனவே, மானக்கஞ்சாற நாயனார்
புகழ்பெறுவதற்கு அவருடைய மகள் தனது கூந்தலை மனமுவந்து அளித்தமையே காரணமாக அமைவதை மறுக்கமுடியாது.
காரைக்காலம்மையார் தம் வனப்பைத் துறந்து என்பு உருக்கொண்டமையும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
குழந்தையை
இழத்தல்
அப்பூதியடிகள் நாயனார் புராணம் குழந்தையின் இறப்புக்குக்
கலங்காமல் சிவனடியாருக்கு உணவுபடைப்பதை முதன்மையாகக் கருதும் தாயைக் காட்டுகிறது. அடியார்க்கு
உணவுபடைக்க வாழைஇலை அறுக்கும்போது மூத்தமகன் பாம்புதீண்டி இறந்துவிட அதற்காகச் சற்றும்கலங்காது
சிவனடியாராகிய திருநாவுக்கரசருக்கு உணவளித்தல் தடைபடலாகாது என்று கருதுகின்றாள் தாய்.
தளர்ந்துவீழ் மகனைக்
கண்டு தாயாரும் தந்தை யாரும்
உளம்பதைத் துற்று
நோக்கி உதிரஞ்சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியும்
கண்டு விடத்தினால் வீந்தான் என்று
துளங்குதல் இன்றித்
தொண்டர் அமுதுசெய் வதற்குச் சூழ்வார் (1810)
என்று ஒரு தாயின்
மனநிலையை எடுத்துக் காட்டுகிறார் சேக்கிழார். எனவே அப்பூதியடிகளின் வெற்றியில் அவர்தம்
மனைவியாரின் பங்கும் இருப்பதை அறியலாம்.
இவ்வாறே
சிறுத்தொண்ட நாயனார் புராணத்திலும் தம் மகனையே சமைத்துக்கொடுக்கின்ற தாயாக விளங்கி
நாயனாரின் சிவநெறி வெற்றிக்குப் பெருந்துணைபுரியும் துணைவியாரும் இங்குக் குறிப்பிடப்பட
வேண்டியவரே.
மேற்குறித்த
செய்திகள் சைவசமய வளர்ச்சியில் பெண்களின் பங்கை முன்னிறுத்துவதைக் காணமுடிகிறது.
காண்க : ஔவை இரா நிர்மலா, சமயச் சாரலில்,
காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2016.
பக்.81-89.
No comments:
Post a Comment