Friday 17 February 2017

ஆட்டோகிராஃப்.. . .





ஆட்டோகிராஃப்.. . .

'ஆஹா, செம கதை. சூப்பர்! ராயல் தியேட்டரில் படம்பார்த்துத் திரும்பும்போது தன் மனைவியிடம் சிலாகித்தான் தீனதயாளன்.

சில திரைப்படங்கள் பார்த்துவிட்டுத் திரும்பும்போது 'காசுகொடுத்து இந்தப் படத்தை தியேட்டர்ல வேற பாக்கணுமா? பேசாம டி.வி.யில போடும்போதே பாத்திருக்கலாம்' என்று தோன்றும். ஆனால் ஆட்டோகிராஃப் படம் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அந்தக் கதையே தீனதயாளனின் நெஞ்சில் ரீபிளே ஆகிக்கொண்டிருந்தது. கதாநாயகன் காட்டிய மென்மையான உணர்வுகள் அவனைச் சிலிர்க்கச்செய்தன.

தீனதயாளன், ஸ்டெல்லா, குதிரைவாலு சுந்தரம்பாள், குள்ளக் கத்திரிக்கா சித்ரா, ஈர்க்குச்சி கோவிந்து, தேங்காப் பல்லு மரகதம், யானைக் கண்ணு லீலாவதி, முட்டக்கண்ணு மல்லிகா, குண்டு கோகிலா, சட்டித்தலை சந்துரு எல்லோரும் ஒரு குரூப். ஒன்றாகத் திரிவார்கள். பிளஸ் ஒன், பிளஸ் டூ ஒன்றாகப் படித்தவர்கள்.
மற்றவர்கள் எல்லோரும் இப்போது என்ன செய்துகொண்டு இருப்பார்கள்?
பிளஸ் டூ முடித்துவிட்ட கையோடு கல்லூரிப் படிகளை மிதித்தவன் தீனா மட்டும்தான்.
சட்டித்தலை சந்துரு, யானைக் கண்ணு லீலா, தேங்காப் பல்லு மரகதம் மூவரும் பெயில் ஆகிவிட்டார்கள். மற்றவர்கள் பாஸ் பண்ணி இருந்தாலும் பட்டப் படிப்பு ஒன்றும் படிக்கவில்லை. ஸ்டெல்லாவும் சுந்தரம்பாளும் டீச்சர் டிரெய்னிங் படிக்கப்போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அவனுடைய பழைய டைரிகள் ஐந்தாறு அவன் வீட்டில் இருந்தன. திருமணமான புதிதில் அவற்றை அவன் தன்னுடைய மனைவிக்குக் காட்டினான். அவற்றில் அவன் அவ்வப்போது எழுதி வைத்திருந்த கவிதைத் துணுக்குகள் ஆங்காங்கே இருந்தன. அவை நன்றாகவே இருந்தன. ஒரு ஞாபகமாக இருந்துவிட்டுப்போகட்டுமே என்று  அவன் மனைவி அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். வருடம் ஒருமுறை தூசு தட்டி வைப்பது அவள் வழக்கமானது. எப்போதேனும் ஷெல்புகளை எதற்காகவோ அலசும் தருணங்களில் அவை கைகளில் அகப்படும்போது அவற்றைப் புரட்டிப்பார்த்துக் கணவனும்  மனைவியும் சிரித்துக் கொள்வார்கள். அவற்றில் அவனோடு படித்த நண்பர்களின் பெயர்கள், அப்போதைய விலாசம், சிலருடைய பிறந்த நாள் இத்யாதி விஷயங்கள்கூட இருந்தன.
ஆடோகிராஃப் கதாநாயகனைப் போன்று தானும் தேடலில் இறங்கினால் என்ன?
மாடிக்குத் தனியாகச் சென்றான் தீனா. தன் பழைய டைரிகளைத் தேடினான். பிளஸ் டூ டைரி கிடைத்தது. மெல்ல மெல்ல மேய்ந்தான்.
'ஸ்டெல்லா. . . !நினைவுகளை அசைபோட்டான்.
பிளஸ் டூ நண்பர் கூட்டத்திலேயே தீன தயாளனும் ஸ்டெல்லாவும்தான் நையாண்டிப் பெயர்களிலிருந்து தப்பியவர்கள். தீனதயாளன் அலைகள் ஓய்வதில்லை கார்திக் மாதிரி ஸ்டைலாக இருப்பான். ஸ்டெல்லா தன் கண்களுக்கு மை தீட்டி, தலைமுடியை அங்கங்கே வெட்டி, சுருட்டி அழகுபடுத்தியிருப்பாள். மாலைவரை அவள் முகத்தின் பவுடர் பூச்சு மங்காமல் இருக்கும். ஸ்டெல்லா உள்ளிட்ட பெண்கள் குழுவிற்குத் தீனதயாளன் மீது ஒரு கண். கோவிந்து, சந்துரு அனைவருக்கும் ஸ்டெல்லா மீது ஒரு கண்.
ஸ்டெல்லாவிடம் தீனாவிற்கும் தீனாவிடம் ஸ்டெல்லாவுக்கும் அப்படியரு நட்பு! 
இப்போதெல்லாம் செல்பேசியை எடுத்தால் காதல் பற்றி ஏதேனும் சந்தேகமிருந்தால் தீர்த்துக்கொள்ளும்படி செல்பேசி நிறுவனங்கள் உதவி செய்கின்றன. ஆனால் பதினைந்து வருடத்திற்கு முன்னால் காதல் பற்றி எல்லாம் தீனாவுக்கும் ஸ்டெல்லாவுக்கும் ஒன்றும் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க எந்தத் செல்பேசி நிறுவனமும் தொண்டு செய்யவில்லை. அதனால் அவர்களுடைய நட்பைக் காதாலா? இல்லையா? என்றெல்லாம் சரியாகப் பிரித்தறிய அவர்களுக்குத் தெரியவில்லை.
அவர்களுக்கு முன் வருடம் படித்த சந்திரிகா காதல் தோல்வியால் அந்த ஊர்ப் புளியமரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கிய செய்திவேறு காதலைப் பற்றிய குழப்பமான சித்திரத்தையே அவர்கள் மனத்தில் ஏற்படுத்தியிருந்தது.
தீனாவின் ஊர் சரியான குக்கிராமம். அவன் ஊரில் மேல்நிலைப் பள்ளி இல்லை. எனவே அவன் தன் மாமா வீட்டில் தங்கிப் படித்தான். ஸ்டெல்லாவின் வீடும் பள்ளியிலிருந்து வெகு தூரம்தான். ஆனால் அவள் பள்ளிக்குச் சென்றுவர பேருந்து வசதி இருந்தது. எனவே பேருந்தில் வந்து படித்தாள். அவர்கள் வகுப்பில் இப்படி எல்லோருமே தூர இடங்களிலிருந்து பேருந்திலோ நடந்தோ வந்து படித்தார்கள். கோவிந்து மட்டும் ஐந்து மைல் தூரம் சைக்கிள் மிதித்து வந்து படித்தான்.
தீனாவின் வகுப்பில் யாருக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் முக்கியமாகப் பெண் பிள்ளைகளுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் தீனாவிடம்தான் முதலில் கூறுவார்கள். அவன்தான் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பான். அவை ரகசியங்களாக இருந்தாலும் யாரிடமும் போட்டுடைக்க மாட்டான். பிரச்சனைக்கு ஏற்றவாறு தீர்வு கூறுவான். அவர்கள் பிரச்சினைகள் அசட்டுத்தனமாக இருந்தாலும் அதைச் சொல்லிக் கேலி செய்ய மாட்டான்.
அதனால் அனைவருடைய பிரச்சினைகளும் அவனிடம்தான் முன்னதாகச் சமர்ப்பிக்கப்படும் - பெண்பிள்ளைகளின் மாதாந்திர வயிற்றுவலிப் பிரச்சினை உட்பட! அது என்ன சொல்லிக்கொண்டா வருகிறது? திடீரென்று பெண்பிள்ளைகளுக்கு இப்படி ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் இப்போது கடைகளில் கிடைப்பதுபோல் நாப்கின்கள் அப்போது கிடைக்காது. உடனடியாக வீட்டிற்குச் செல்வதுஒன்றே சிறந்த வழி. ஆனால் நாம் நினைத்த நேரத்திற்கெல்லாம் பேருந்து வருமா? அதுவும் நடந்து பள்ளிக்குவரும் பெண்பிள்ளைகளாயின் வயிற்று வலியோடு இரண்டு மூன்று மைல் நடந்துசெல்ல முடியுமா?
இந்தப் பிரச்சினையும் முதலில் தீனாவிடம்தான் சொல்லப்படும். அவன் உடனே கோவிந்துவின் பெடல் உடைந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு  பள்ளி இருக்கும் தெருவின் முனையில் காத்திருப்பான். சம்பந்தப்பட்ட பெண்ணை டபுள்ஸ் அடிப்பான். வேறு எந்த விடலைப் பையனோடு பெண்பிள்ளைகள் இப்படித் தைரியமாக அமர்ந்து செல்லமுடியும்? சுத்தக் காட்டான்களாக அல்லவா அவர்கள் நடந்துகொள்வார்கள்?
தீனாவோடு உரசியும் உரசாமலும் இப்படிச் சைக்கிள் சவாரி கிடைக்கும் சந்தர்ப்பங்களுக்காக அவன் வகுப்புப் பெண்கள் மேற்படி உபாதைகளை வரவேற்று எதிர்பார்த்ததில் வியப்பில்லைதான்.
அத்துடன், தீனாவோடு செல்லும்போது யாரும் சந்தேகமாகவும் பார்க்கமாட்டார்கள். அவன் அந்தப் பெண்ணை வீட்டிலேயே தைரியமாகக் கொண்டுபோய் விட்டுவந்தால் கூட பெற்றோர் கோபிப்பதற்குப் பதிலாக மகிழ்ச்சி அடையவே செய்வார்கள். அவன் முகராசி அப்படி! அவனுடைய தைரியமான அணுகுமுறை யாரையும் சந்தேகப்படச் செய்யாது.
இன்னும் நாலு நாளில் பள்ளி இறுதித்தேர்வுகள். அந்தச் சமயம் பார்த்துத் தீனாவின் மாமாவுடைய அப்பா வெயிட்டிங் லிஸ்ட்டில் படுத்த படுக்கையில் இருந்தவர் சொர்க்கத்திற்கு டிக்கட் வாங்கிவிட்டார். அவருடைய ஈமச் சடங்குகளுக்காக மாமா, அத்தை, பையன்கள் அனைவரும் ஊருக்குப் போய்விட்டார்கள். பதினாலுநாள் துக்கம் முடியாமல் ஊர் திரும்ப மாட்டார்கள்.
பரீட்சை எழுதாவிட்டால் அவன் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிடும். செய்வது தெரியாமல் சோகத்தைச் சுமந்துகொண்டான் தீனா. ஸ்டெல்லாவிடம் சோகத்தைப் பகிர்ந்துகொண்டான். சந்துரு, கோவிந்து ஆகியோரிடம்கூட இச் சோகத்தைச் சொல்லி வழி கேட்டிருக்கலாம். ஆனால் ஏனோ அவ்வாறு செய்யத் தோன்றவில்லை.
ஸ்டெல்லா அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அவளிடம் நோட்ஸ் வாங்க, அவள் உடம்பு சரியில்லாதபோது வீட்டில் விட என்று ஏதேனும் ஒரு காரணத்தின் முகாந்திரத்தில் அவன் நாலைந்து முறை அவள் வீட்டிற்குச் சென்றிருக்கிறான். ஸ்டெல்லாவின் வீட்டில் அனைவருக்கும் தீனாவைப் பிடிக்கும்.
அவர்கள் வகுப்பிலேயே ஸ்டெல்லா கொஞ்சம் வசதியானவள்தான். மற்ற நண்பர்களுக்கு ஏக்கர் கணக்கில் விளைநிலங்கள், தோப்பு துறவு என்று இருந்தாலும் எல்லாம் குடிசை வீடுகள்தான். கொல்லைக்குப் போகவேண்டும் என்றால் பத்து நிமிடம் முன்னதாகவே திட்டமிடவேண்டும். ஒரு சொம்பு தண்ணீரைக் கையில் எடுத்துக்கொண்டு எங்காவது மரத்தின் மறைவைத் தேடிச்செல்ல வேண்டும். ஸ்டெல்லாவுக்கு நிலபுலன் என்று பெரிதாக எதுவும் இல்லை. ஆனாலும் அவள் வகுப்பிலேயே அவள் வீடு மட்டும்தான் ஓட்டு வீடு.  பாத்ரூம் வசதியெல்லாம்கூட இருந்தன.
தீனாவின் சோகத்தைக் கேட்டதும் ஸ்டெல்லாவின் அம்மா 'ச்சோ, ச்சோ' என்று சோகத்தைக் கொட்டினார்கள். 'இரு தம்பி, டீ கொண்டாரேன்' என்று உள்ளே சென்றாள் ஸ்டெல்லாவின் தாய் மேரி.
'அம்மா. . . , அம்மா. . . , தீனா நம்ம தாத்தா ரூம்ல படுத்துக்கட்டுமே. . . காலைல எழுந்து படிக்கப் போயிடுவான். வெளியில எங்கயாச்சம் சாப்புட்டுக்குவான். படுக்க மட்டும் எடம் கொடுத்தா போதும். பரீட்ச முடிஞ்சதும் ஊருக்குப் போயிடுவான், எனக்கும் பாடத்துல ஏதாவது சந்தேகம் வந்தா கேட்டுக்குவேன்மா' - அம்மாவிடம் விண்ணப்பித்தாள் ஸ்டெல்லா.
மேரிக்கும் ஸ்டெல்லாவின் யோசனையில் தப்பிருப்பதாகத் தெரியவில்லை. 'பாவம். பரீட்சை சமயம் வேறு. மாமனாரின் அறையும் ஒதுக்குப்புறமாக எந்த இடைஞ்சலும் இல்லாமல் இருக்கிறது. தீனாவும் நல்ல பையன்தான். இருந்துவிட்டுப் போகட்டும்' என்று ஒத்துக்கொண்டாள்.
ஸ்டெல்லா குடும்பத்தினரும் பக்கா கிராமத்தார்கள் இல்லை. அவர்கள் கொஞ்சம் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள்தான். அவர்கள் வீட்டிலும் இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். 'பிள்ளைகளோடு பிள்ளையாக ஒருவாரம் இருந்துவிட்டுப் போகட்டும்' என்று ஒப்புக்கொண்டார் ஸ்டெல்லாவின் அப்பா.
பரீட்சைக்கு முன்னர் இரண்டு நாள் வெளியில் சாப்பிட்டு, தோப்புகளில் படித்துவிட்டு, படுக்க மட்டும் ஸ்டெல்லாவின் வீட்டிற்கு வந்தான் தீனா. ஆனால் பரீட்சை அன்று வெளியில்போய்ச் சாப்பிட்டுவிட்டு பரீட்சைக்குச் செல்வது இயலாதாகிவிட்டது. அதனால் சாப்பிடாமலேயே வெறும் வயிற்றுடன் தேர்வு எழுதினான். அதனை அறிந்து ஸ்டெல்லா வருந்தினாள். தாயிடம் முறையிட்டாள். மேரிக்கும் பாவமாக இருந்தது. 'சரி தம்பி, இனிமே வெளியில போய்ச் சாப்பிட வேணாம். பரீட்ச முடியறவரைக்கும் நம்ம வீட்லயே சாப்புட்டுக்கோ'.
காலையில் பழைய சோறுதான். அதை எடுத்துத் தின்னக்கூட ஸ்டெல்லா சோம்பேறித்தனப்படுவாள். 'நேரமாச்சி, நேரமாச்சி' என்று பறப்பாள். மேரி பழைய சோற்றை உருட்டி அதன் நடுவில் சிறு குழியிட்டு நன்றாகச்  சுண்டக் காய்ச்சிய குழம்பைவிட்டு ஸ்டெல்லாவின் கையில் கொடுப்பாள். ஒரு ஐந்தாறு உருண்டைகளை வாயில் போட்டுக்கொண்டு 'போதும்!, போதும்!' என்பாள். தீனாவிற்கும் பாகுபாடு காட்டாமல் இப்படி உருட்டி உருட்டிக் கையில் கொடுத்தாள் மேரி. தீனாவின் கம்பெனி காரணமாக ஸ்டெல்லா இரண்டு மடங்கு உருண்டைகளைக் காலி செய்தாள். மேரிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
மதியமும் இரவும் கூட சோற்றைப் பிசைந்து உருட்டி இப்படி இரண்டு பேருக்கும் ஆளுக்கு ஓர் உருண்டை என்று மாற்றி மாற்றிக் கொடுத்துச் சாப்பிடவைத்தாள் மேரி. வீட்டிலிருந்த நாட்டுக்கோழி முட்டைகளை ஆம்லெட் ஊற்றிக் கொடுத்தாள்.
ஸ்டெல்லாவின் அக்கா ஜெஸிந்தா, தம்பிகள் டேவிட், தாஸ் அனைவருமே இந்த  ஒரு வார காலத்தில் தீனாவுடன் நன்றாகப் பழகிவிட்டார்கள்.
தேர்வுகள் முடிந்தவுடன் தீனா ஊருக்குப் புறப்பட்டான். கல்லூரியில் காலடி வைத்தான் தீனா. கல்லூரியிலும் அவனைச் சுற்றி ஏகப்பட்ட நண்பர்கள். அதனால் ஸ்டெல்லாவை நினைப்பதற்காக அவனால் அதிகமாக நேரம் ஒதுக்க முடியவில்லை. மனக்கண்ணாடியில் அவள் பிம்பம் மெல்ல மெல்ல ஒளி இழந்தது. ஸ்டெல்லாவின் வற்புறுத்தலால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை விடுமுறையில் கட்டாயம் ஸ்டெல்லா வீட்டிற்கு வருவான்.
தீனாவைப் பார்க்கும் நாளெல்லாம் ஸ்டெல்லா புத்தாண்டு பூத்ததுபோல் சந்தோஷப்படுவாள். அப்போது அவர்கள் பழைய நண்பர்களைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள்.
பிளஸ் டூ தேர்வு முடித்த கடைசிநாள் அவனிடம் பெற்ற முத்தத்தின் ஈரம் காய்ந்தாலும் அதில் தான் உணர்ந்த இனிமை இன்னும் மனத்தில் அப்படியே உறைந்து இருந்தது.
அவள் நெஞ்சில் அவன் நிறைந்திருந்தான். ஆனால் அவளுக்கு அவன் பச்சைக்கொடி காட்டவில்லை.
ஸ்டெல்லா பிளஸ் டூ முடித்த சில மாதங்களில் அவள் அக்கா ஜெஸிந்தாவுக்குத் திருமணம் நடந்துவிட்டது. ஸ்டெல்லா பிளஸ் டூ முடித்துவிட்டு வீட்டில் இரண்டு ஆண்டுகள் சும்மா இருந்துவிட்டாள். காலாகாலத்தில் கல்யாணம் செய்யவேண்டும் என்று அப்பா பல வரன்களைப் பார்த்துக் கடைசியாக, 'இதோ பார்! உனக்கு மாப்பிள்ளை இவர்தான்!' என்று அற்புதராஜின் போட்டோவை அவள் கையில் திணித்தார்.
ஸ்டெல்லா தீனாவிற்கு அவசரமாகக் கடிதம் எழுதினாள். எதேச்சையாக வருவதுபோல் ஞாயிற்றுக் கிழமை விடுமுறையில் ஸ்டெல்லாவைப் பார்க்கவந்தான் தீனா.
ஸ்டெல்லாவுக்கு நல்ல புத்தி கூறுமாறு தீனாவிடமே பொறுப்பைக் கொடுத்தார் அவள் அப்பா இருதய ராஜ்.
ஸ்டெல்லா அந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று தீனாவிடம் புலம்பினாள். 'பார்த்தா வயசானவராத் தெரியறார்' என்றாள். 'எனக்கும் அவருக்கும் பத்து வயசு வித்தியாசம் இருக்கும்' என்று அங்கலாய்த்தாள். தான் கடைசிவரை திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்று அடம்பிடித்தாள். தான் அவனிடம் பெற்ற முத்தப் பரிசை நினைவுகூர்ந்து சாடைமாடையாக அவள் காதலை வெளிப்படுத்தினாள்.
மதம்விட்டு மதம் செய்யப்படும் காதல் திருமணங்கள் படும் அவஸ்தையை தீனா கோடிட்டுக் காட்டினான். எந்த ஒரு வேலையிலும் இல்லாத வெறும் பயலை நம்பி ஊரைவிட்டு ஓடிப்போகும் பெண்கள் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாத நிலையை வட்டமிட்டுக் காட்டினான்.
'ஸ்டெல்லா. . . ! அற்புத ராஜ்  படிச்சிருக்கார். நல்ல வேலைல இருக்கார், உன்ன டீச்சர் டிரெய்னிங் படிக்கவெக்கறேன்னு சொல்றார். நீ வேலைக்குப் போக பர்மிஷன் தர்றேன்னு சொல்றார். உனக்கு எல்லா விதத்துலயும் பொருத்தமானவர்! நீ பேசாம  அவரையே கல்யாணம் பண்ணிக்கோ. அப்பத்தான் உன் வாழ்க்கை நல்லா இருக்கும். வீணா கற்பனையில காலத்தக் கடத்தாத! என் பேச்சக் கேளு!' என்று புத்திமதி கூறினான்.
ஸ்டெல்லாவுக்கு வேறு வழி தெரியவில்லை. தீனா கல்லூரியில் படிக்கிறான். இன்னும் மேற்படிப்புப் படிக்கப் போவதாகக் கூறிக்கொண்டிருக்கிறான். அவனுடைய அழகுக்கும் திறமைக்கும் இன்னும் எத்தனையோ பெண்கள் அவனைச் சுற்றுவார்கள். அதைத் தன்னால் எப்படித் தடுக்கமுடியும்? தீனா மண்குதிரையாகத் தெரிந்தான். அவனை நம்பி ஆற்றில் இறங்கமுடியாது. தன் விதிப்படி நடக்கட்டும்.
ஸ்டெல்லாவின் திருமணத்தன்று ஒருநாள் முன்னதாகவே சென்று தீனா ஓடியாடி எல்லா வேலை களையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான். மாப்பிள்ளையோடு சகஜமாகப் பேசி ஸ்டெல்லாவின் நற்குணங்களை எடுத்துரைத்தான். ஸ்டெல்லா திருமணம் முடித்துத் திருச்சி சென்றாள். தீனா தன் படிப்பைப் பார்க்கச் சென்னை சென்றான்.
படிப்பை முடித்த கையோடு அரசாங்க வேலைக்கு அலைந்தான். ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று விலை பேசினார்கள். 'காசு கொடுத்து வேலைக்குப் போறதவிட பேசாம அந்தப் பணத்த வங்கியில போட்டா உக்காந்து சாப்பிடலாமே' - யோசித்தான்.
ஓர் இருபதாயிரம் புரட்டினான். சிறியதாக ஒரு டைல்ஸ் கடை திறந்தான். அவன் திறமையாலும் அவன் மனைவியின் ஒத்துழைப்பாலும் அந் நிறுவனம் வளர்ந்து வளர்ந்து நகரின் மையத்தில் இன்று பெரிய ஷோ ரூமாகக் காட்சி தருகிறது. நவீன் டைமண்ட்ஜான்ஸன் டைல்ஸ், ஜாகுவார், பாரி வார், மெட்ரோ பாத்ரூம் பிட்டிங்ஸ் என்று அவன் கடை அமோகமாக நிறைந்திருந்தது.
நாலாயிரம் சதுர அடியில் இரண்டு மாடிக் கட்டிடம் அவன் வீடாகப் பெருமை சேர்த்தது. போர்டிகோவில் சாண்ட்ரோ நின்றது. அலுவலகத்திற்கென்று தனியாக டாடா சுமோ இருக்கிறது.
பதினைந்து வருட வாழ்க்கைப் பயணத்தில் அவ்வப்போது ஸ்டெல்லாவும் தன்னை மயக்கம்கிறங்கப் பார்த்துப் பெருமூச்சுவிட்ட மல்லி, கோகி, சித்ரா என பெண்பால் நண்பர்களெல்லாம் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் மனத்திரையில் நிழலாடி உதட்டில் சின்னதாய் ஒரு புன்னகையை ஏற்படுத்தி மறையத்தான் செய்தார்கள்.
ஆட்டோகிராப் படம் பார்த்ததிலிருந்து அவ் உருவங்கள் அச்சடித்த சித்திரம் மாதிரி அவன் மனத்திலிருந்து மறைய மறுத்தார்கள்.
அவன் தன்னுடைய விரைந்த வளர்ச்சியை எண்ணிப் பார்த்தான். படிக்கும்போது அவன் வகுப்பிலேயே அவன்தான் மிகுந்த ஏழையாக இருந்தவன். ஆனால் தன்னை ஏழை என்று எப்போதும் வெளிக்காட்டிக் கொள்ளாதவன். இப்போது மிகுந்த பணக்காரனாக இருக்கிறான். ஆனால் அதனைத் தன் பழைய நண்பர்களுக்குக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினான்.
அவன் தேடல் தொடங்கியது - ஆட்டோகிராப் கதாநாயகனைத் தன் குருவாக வணங்கி.
ஸ்டெல்லாவின் ஊராகிய குழித்துறை சென்று விசாரித்தான். அங்கே தெரிந்தவர்கள் யாருமே இல்லை. ஸ்டெல்லாவின் தம்பிகள் டேவிட், தாஸ் எல்லோருக்கும் திருமணம் ஆன கையோடு ஆளுக்கொரு திசை வேலை தேடிச் சென்றுவிட்டிருந்தார்கள். டீச்சர் வேலைக்குப் படித்துவிட்டு ஸ்டெல்லா தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் ஒரு அரசுப் பள்ளியில் வேலை செய்வதாகச் சிறு தகவல் கிடைத்தது.
அவனுடைய மதுரைக்கும் நாஞ்சிக்கோட்டைக்கும் ஒன்றும் பெரிதாக தூரமில்லையே. சாண்ட்ரோ இருக்கவே இருக்கிறது. காரில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டான். பள்ளி வேலை நாளான புதன் கிழமையைத் தேர்ந்தெடுத்தான். 'பெண் கெடச்சாலும் புதன் கிடைக்காது' என்று பழமொழியே இருக்கிறதே. இங்கே பெண்ணும் தேடப்படவேண்டும்.
ஒரு நாள் முழுக்க நாஞ்சிக் கோட்டையைச் சல்லடை போட்டான். கடைசியில் அவள் பணிபுரிந்த நடுநிலைப்பள்ளி அவனுடைய டூர் மேப்பில் சிக்கிக்கொண்டது.
பள்ளி இறுதி மணி அடிக்க இன்னும் அரைமணி நேரம் இருந்தது. கடைசி பீரியட் விளையாட்டுப் பீரியட். ஆதலால் அவளுக்கு அந்த வகுப்புநேரம் பிரீதான். தன்னைத் தேடி ஒருவர் வந்திருக்கிறார் என்று ஆயா வந்து சொன்னாள். 'யாரா இருக்கும்? எந்த ஸ்டூடண்டோட பேரண்ட்ஸையும் நான் வரச் சொல்லலையே?' மனத்தில் ஏற்பட்ட வினாவிற்கு விடைகாண முயல வாசலுக்கு விரைந்தாள்.
சாண்ட்ரோவில் சாய்ந்துகொண்டு சபாரியில் ஒய்யாரமாக நடுத்தர வயதில் ஒருவன் - தங்க பிரேம் போட்ட கண்ணாடி முகத்தில் பளிச்சிட்டது. யாராக இருக்கும்?
தன்னிடம் நெடுநாளைய பழக்கம் என்பது போலல்லவா அவன் தன்னைப் பார்த்துச் சிநேகப் புன்னகை பதிக்கிறான்?
உற்று நோக்கினாள் ஸ்டெல்லா. மெல்ல மெல்ல அவள் சுருங்கிய நெற்றி விரிந்தது. 'அட நம்ம தீனா. . .'
'தீனா. . . !பள்ளி என்பதையும் மறந்து மகிழ்ச்சியில் உரக்கக் கூவிவிட்டாள்.
தீனாவின் முகத்திலோ தன் ஒரு வாரத் தேடல் வெற்றிபெற்றதில் ஹாலோஜன் பல்பின் பிரகாசம். அவன் வரிசைப் பற்கள் ஒளி சிந்தின.
பதினைந்து வருடக் கதையை ஆளுக்குப் பதினைந்து நிமிஷங்கள் எடுத்துக்கொண்டு ரீவைண்ட் செய்தனர்.
ஸ்டெல்லாவின் வீடு ஒரு மணிநேரப் பேருந்துப் பயணதூரத்தில் இருந்தது. தீனா பயணப்பட வேண்டிய திசைக்கு எதிர்த்திசையில் இருந்தது. 'வா உன்னை டிராப் பண்ணிட்டுப் போறேன்'. முன் ஸீட்டில் அமர்ந்தாள் ஸ்டெல்லா. காரின் ஜன்னல் கதவுகளை ஏற்றினான். ஏ சி போட்டான்.  'நல்லா சாஞ்சி கம்பர்டபுல்லா உக்கார்'.  இருக்கையைச் சாய்த்து விட்டான்.
இன்னும் கொஞ்ச நேரம் பேச அவகாசம் கிடைத்தது. அவள் இறங்கவேண்டிய பேருந்து நிலையம் வந்தது. திடீரென்று தீனாவைத் தன் வீட்டிற்கு அழைத்துச்செல்லத் தயங்கினாள் ஸ்டெல்லா. அந்த அளவு நாகரிகம் தெரியாதவனா தீனா? அவன் செல்போன் நம்பரைக் கொடுத்தான். அவள் வீட்டு போன் நம்பரை வாங்கிக் கொண்டான். அவர்கள் பேசிக்கொண்டதில் ஏதேனும் விட்டுப்போயிருந்தால் போன் மூலம் பரிமாறிக்கொள்ளலாம்.
காரைத் திருப்பிக்கொண்டு வந்த திசையில் மீண்டும் பயணித்தான்.
காரைத் திருப்புவதுபோல் வாழ்க்கையைத் திருப்பி வாழ முடியுமா?
பிறந்ததும் தாயின் மார்பில் வாய்வைத்துப் பால்குடித்தோம் என்பதற்காக அதே செயலை நாற்பது வயதில் செய்ய முடியுமா?
இரண்டு வயதில் பிறந்தமேனியாய்த் திரிந்தோம் என்பதற்காக இருபது வயதில் அதனைச் செய்ய முடியுமா?
இரண்டு மாடிக் கட்டிடம் எழும்பியபிறகு முதலில் இருந்த கட்டாந்தரையைப் பார்ப்பதற்கு அக்கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்க முடியுமா?
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும்
கிடைக்கும் என்பதற்காகத் தேடிக்கொண்டே அலைந்தால் இருந்தவையும் காணாமல் போகாதா?
படுத்துக் கண்களை மூடினாள் ஸ்டெல்லா. இனித் தேவையில்லை என்று கட்டிப்போட்ட பழைய நினைவுப் பைல்களைத் தூசிதட்டி எடுத்தாள். ஏடுகளைப் புரட்டிப் பார்த்தாள். அவற்றை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது அவசரப்பட்டுச் சொகுசான வாழ்க்கையை இழந்துவிட்ட ஏமாற்றம், எண்ணத்தில் ஒரு மின்னல் கீற்றாய் ஓடியது.
மறுநாள் எழுந்ததும் முதல் நினைவாகத் தீனாதான் மனத்தில் தெரிந்தான். 'அவனோடு எப்படித் தொடர்பு கொள்வது?' வீட்டிலிருந்து லாண்ட் லைனில் போன் செய்தால் அனைவரும் 'யார்? எவர்?' என்று கேட்பார்கள். 'பள்ளிக்குச் சென்று பார்த்துக் கொள்ளலாம்.'
இடைவேளை நேரத்தில் பள்ளிக்கு எதிரே இருந்த எஸ்.டி.டி. பூத்தில் தொடர்பு கொண்டு பேசினாள். அங்கும் போன் திறந்தவெளியில் இருந்தது. சின்னதாகக் குரலெடுத்துப் பேசினாலும் போவோர் வருவோர் காதுகளில் ஒன்றிரண்டு சொற்கள் விழ அவர்கள் தன்னைச் சந்தேகத்தோடு பார்த்துச் செல்வதாக அவளுக்குத் தோன்றியது. 'நேரம் கிடைக்கும்போது நானே பேசறேன்' என்று கூறிப் போனை வைத்தாள்.
அவளுடைய மாமியார் வீட்டில் தங்காமல் அக்கம் பக்கத்து வீடுகளில் கதைபேசப் போய்விடுவார்கள். முன்பெல்லாம் 'இது என்ன பழக்கம்?' என்று அங்கலாய்த்து அந்தப் பழக்கத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்தவள் ஸ்டெல்லா. ஆனால் இப்போதோ அவள் மாமியார் எப்போது வெளியில் செல்வார் என்று எதிர்பார்த்தாள். காலை நேரங்களில் கணவனையும் மகளையும் கவனிக்க நேரம் சரியாக இருக்கும். மாலையில் மகள் லீமா டியூஷன் முடித்து வந்துவிட்டால் தன்னையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பாள். எனவே அவள் டியூஷன் முடித்து வருவதற்குள் ஒரு அரை மணி நேரம் மட்டுமே இடைவெளி கிடைத்தது. அப்போது பார்த்து வீட்டில் மாமியார் பூதம் காவலாக இருக்கிறது. அவரை எப்படி வெளியே அனுப்புவது?
சில சமயங்களில் மாலையில் லீமா கொரிப்பதற்காகவோ அல்லது இரவு டிபன் செய்வதற்கோ அது இல்லை, இது இல்லை என்று ஏதேனும் ஒரு பொருளை வாங்க அனுப்பும் சாக்கில் தெருமுனைக் கடைக்கு மாமியாரை அனுப்புவாள் ஸ்டெல்லா. அப்படிக் காரணம் காட்டி அனுப்பினால் சட்டென்று அவர்கள்தான் போய்விடுகிறார்களா? 'ஏன்? இது இல்லைன்னா வேற என்னத்தயாவது செய்யக் கூடாதா? அது இல்லாம ஒனக்கு சமைக்கத் தெரியாதா?' என்று எத்தனைக் கேள்விகள்! அவற்றிற்குப் பொறுமையாகப் பதில் சொல்ல வேண்டும். பொறுமை இழந்தால் காரியமே கெட்டுவிடும்.
மாமியாரை ஒரு வழியாக அனுப்பினால், அப்போது பார்த்துப் பக்கத்துவீட்டுப் பாபு குட்டிச்சாத்தன் ஓடிவந்து, 'ஆண்ட்டி . . . , ஆண்ட்டி . . . , எனக்குச் சாக்பீஸ் குடுங்க ஆண்ட்டி' என்று தொணதொணக்கிறது. தேடிப்பிடித்து எடுத்துக் கொடுத்தால் ஏதோ ரைம் சொல்லிக் கழுத்தறுக்கிறது. 'போய்ச் சமத்தா விளையாடு செல்லம், ஆண்ட்டிக்கு வேல இருக்கு, முடிச்சிட்டு வரேன்' என்று ஒருவழியாய் அவனை அனுப்புவதற்குள் கடைக்குச் சென்ற மாமியார் தெருமுனையிலிருந்து திரும்புவது கண்களுக்குத் தெரிகிறது. இனி அந்தச் சொற்ப நேரத்தில் எண்களை அமுக்கி, 'ஹலோ, எப்படி இருக்கீங்க, . . . நான் நல்லா இருக்கேன், சரி. . .  நான் அப்பறம் பேசறேன்' என்று இவ்வளவுதான் பேசமுடிகிறது. 'சே! என்ன இது? திரும்பவும் அடுத்தநாள் அடுத்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்க வேண்டும்'.
அந்த மாதத்தின் இடையில் டி.ஏ. அரியர்ஸ் வந்தது. ஆயிரத்து நானூறு ரூபாய். ஒரு நல்ல செல்போனை வாங்கினாள்.
'இப்ப ஒனக்கு இது தேவையா?' எகிறினான் அற்புதம்.
'ஆமாம். சமயத்துல நான் வர லேட்டாச்சுன்னா சொல்ல முடியல. பாப்பா வீட்டுக்கு வந்துட்டாளான்னு விசாரிக்க முடியல. போன வாரம் பாப்பாவுக்கு ஒடம்பு சரியில்லாமப் போயி அவ அவஸ்த பட்டாளே. என்கிட்ட செல்போன் இருந்திருந்தா அவ ஒடனே எனக்கு இன்பார்ம் பண்ணியிருப்பா இல்லையா?' என்று நியாயமான காரணங்களை அடுக்கிக் காட்டினாள் ஸ்டெல்லா.
தீனாவின் செல் நம்பரை மீனா என்ற பெயரில் பதிவுசெய்தாள்.
வாசலில் சாண்ட்ரோ கார் வந்து நின்றது. எட்டிப் பார்த்த அற்புதம் சற்றே யோசித்தான். யாராக இருக்கும்? கோடி வீட்டு அலெக்ஸ் வீட்டுக்கு வந்தவர்களாக இருக்கும். நம்பர் தெரியாமல் தன் வீட்டிற்கு வந்திருப்பார்கள். வழி சொல்லி அனுப்புவோம், கேட்டைத் திறந்து வெளியே செல்ல முனைந்தான்.
            அதற்குள் காரின் கதவைத் திறந்துகொண்டு தீனதயாளன் சிரித்த முகத்தோடு கைகூப்பியவாறே 'வணக்கம்' என்று முகமன் கூறினான். இடது பக்கக் கதவைத் திறந்துகொண்டு ஒரு நடுத்தர வயதுப் பெண்ணும் இறங்கினாள். அவள் கழுத்தில் காதுகளில் கைகளில் வைரம் டாலடித்தது.
            சமையலறை ஜன்னல் வழியாகத் தன் வீட்டில் கார் நிற்பதைக் கவனித்தாள் ஸ்டெல்லா. 'அட நம்ம தீனா!' - முகத்தில் சந்தோஷப் பூக்கள். அவசரமாக வெளியே வந்தாள்.
            'வாங்க, வாங்க', தன் பின்னாலிருந்து வந்த ஒலியைக் கேட்டுத் திரும்பினான் அற்புதம்.
            'ஏங்க, நான் சொல்லல, என் கூட படிச்ச கிளாஸ்மேட் தீனதயாளன். இவர்தான். நம்ம கல்யாணத்துக்குக்கூட வந்திருந்தாரே, அவங்க இவரோட மிஸஸ். . . , தேவி' - அறிமுகப்படுத்தினாள் ஸ்டெல்லா.
            சென்ற வாரம் தொலைபேசி வழியாகத் தீனா பேசியபோது 'வீட்டுக்கு வாங்க' என்று தான் ஒருவரை அழைத்தது அற்புதத்திற்கு ஞாபகத்திற்கு வந்தது. ', இவர்தான் அவரா? அழைத்ததும் வந்துவிட்டார். . .எண்ணம் ஓடியது. தீனதயாளனின் கேரக்டர் பற்றி அற்புதத்தால் அப்போதைக்கு ஒன்றும் கணிக்க முடியவில்லை. மனைவியோடு வந்திருந்ததால் அவர் நிச்சயமாகக் கண்ணியமானவர் என்ற முத்திரை மட்டும் பதிந்தது.
            'வாங்க, உள்ள வாங்க', மழுப்பலாகச் சொல்லி வரவேற்றான் அற்புதம். 'ஸ்டெல்லா ஒங்களப்பத்தி நிறைய சொல்லியிருக்கா.' ஆனால் அவள் என்ன சொன்னாள் என்பது அவன் நினைவிற்கு வரவில்லை. ஏனென்றால் அவள் ஒன்றும் அவனைப் பற்றிப் பிரமாதமாகச் சொல்லியிருக்கவில்லை.
            'இன்னைக்கு லீவ் நாள்தானே, மட்டன் பிரியாணி பண்ணி, சிக்கன் வறுத்துடறேன்', என்று அவள் காலையிலேயே தன் கணவனைக் கடைக்கு அனுப்பிச் சிக்கனும் மட்டனும் வாங்கிவரச் செய்திருந்தாள்.  மட்டன் பிரியாணி ரெடி, சிக்கன் வறுவல் அடுப்பில் இருந்தது.  வீடே அதன் நறுமணத்தில் கமழ்ந்தது. இன்னும் அரைமணி நேரத்தில் சாப்பிடலாம்.
            தீனாவின் வருகையும் உணவு ரெடியாகி இருப்பதும் எதேச்சையாக நிகழ்ந்தவையா?
            அற்புதத்தின் நண்பர்கள் யார் வந்தாலும் 'வாங்க!' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று மறைந்துவிடும் ஸ்டெல்லா இப்பொழுது தீனதயாளனை விழுந்துவிழுந்து கவனித்தாள். தன் மகள் லீமாவை அங்கிளிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள்.
            லீமா தீனாவிடம் கொஞ்சிக்கொண்டிருந்தாள். அற்புதம் உணவு பரிமாற ஒரு சிறிய மேஜையை ரெடி பண்ணிக்கொண்டிருந்தான். லீமா படிப்பதற்கும், துணிகளை அயர்ன் செய்வதற்கும் அந்த மேஜை தான் மூன்று கால்களால் உதவிசெய்துகொண்டிருந்தது. ஒரு காலின் அடிப்பகுதி சற்றே உடைந்திருந்தது. அதனால் அதற்குச் சப்போர்ட்டாகச் அச்சக்கல் ஒன்று முட்டுக்கு நின்றது. அதைத் தயார்செய்து இரண்டு நாற்காலிகளை எதிரெதிரே போட்டான் அற்புதம். கொல்லையிலிருந்த வாழையின் நுனி இலையை அறுத்து மேஜையில் விரித்தாள் ஸ்டெல்லா.
'ஏங்க அவரு பெரிய டைல்ஸ் ஷோ ரூம் வெச்சிருக்கார். நம்ம வீட்டுக்கு டைல்ஸ் போடறதுக்கு ஐடியா கொடுக்கறேன்னு சொன்னாரு. அதுதான் வீட்டைப் பாத்துச் சொல்லச்சொன்னேன். நமக்குக் கொறஞ்ச விலைல சிக்கனமா செஞ்சித் தருவாருங்க'. மெதுவாக தீன தாயாளனின் வரவில் இருக்கும் ஆதாயத்தை எடுத்துரைத்தாள் ஸ்டெல்லா.
            'சரி, சரி, ஆனா டைல்ஸ் போட இப்ப நம்மகிட்ட எங்கே பணம் இருக்கு?'
            'சும்மாத்தான் பேசிப் பாப்போமே, முடிஞ்சா மாத்துவோம், இல்லன்னா விட்டுடுவோம். அதுல என்ன நஷ்டம் வரப்போகுது?'
            ஐந்து வருடம் முன்னால்தான் ஒரு எண்ணூறு சதுர அடியில் அவர்கள் வீட்டைக் கட்டினார்கள். சிக்கனமாக இருக்கட்டும் என்று மொசைய்க் போட்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்கள் வீட்டிற்குச் செல்லும்போது அங்கெல்லாம் டைல்ஸ், மார்பில்ஸ், கிரானைட் என்று இருப்பதைப் பார்த்து ஸ்டெல்லா மனம் புழுங்கினாள். போதாததற்குத் தன் வீட்டிற்கு வரும்  நண்பர்களும் 'ஏன் டைல்ஸ் போட்டிருக்கலாமே? வீடு பளிச்சினு இருக்குமே, மெயின்டெனன்ஸ§ம் ஈஸி' என்று ஒரு விமரிசனத்தைப் போகிறபோக்கில் உதிர்க்கிறார்கள்.
            அந்தக் காரணமே தீனதாயாளனைத் தன் வீட்டிற்கு அழைக்கச் சிறந்த காரணமாய்க் கிடைத்தது.
            தீனதயாளனின் குடும்ப நண்பர் ஒருவர் மகனுக்குத் தஞ்சையில் விமரிசையான கல்யாணம். மனைவியுடன் வந்திருந்தான். வழியில்தான் ஸ்டெல்லாவின் வீடு. தன்னுடன் படித்த ஸ்டெல்லாவைச் சென்ற மாதம் பேருந்து நிலையத்தில் எதேச்சையாகச் சந்தித்ததாகவும் போகிற போக்கில் அவர்கள் வீட்டுக்கு ஒரு விசிட் அடிக்கலாம் என்றும் தீனா மனைவியிடம் சொன்னான். அவன் தேடல்கள் எதையும் வெளியிட்டுவிடாமல் கவனமாக மறைத்தான்.
            காலையில் திருமண விருந்தைத் தூக்கிச் சாப்பிட்டது ஸ்டெல்லாவின் விருந்து. பார்த்துப் பார்த்து, ருசித்து ருசித்துச் சமைத்திருந்தாள். தங்கள் நட்பின் வெளிச்சமான பக்கங்களை தீனாவும் ஸ்டெல்லாவும் அற்புதம், லீமா, தேவி, மாமியார் முன்னால் வெளியிட்டு ஆனந்தித்தார்கள்.
            அற்புதம் தீனாவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி கொண்டான். தீனாவின் மனைவி தேவியும் பழகுவதற்குப் பண்பானவளாகத் தெரிந்தாள்.
'நல்ல ஜோடிதான்', என்று அவர்களைப் பற்றிய விமரிசனத்தோடு தூங்கிப்போனான் அற்புதம்.
ஸ்டெல்லாவுக்குத்தான் தூக்கம் வரவில்லை. கண்களை மூடினால் வைரக்கற்கள் டாலடிக்க தீனாவின் மனைவிதான் தெரிந்தாள். எவ்வளவு நகை? தீனா மட்டும் தன் காதலை அன்று ஏற்றுக் கொண்டிருந்தால்? அவன் சற்றே பிடிகொடுத்துப் பேசியிருந்தால் எத்தனை வருஷமானாலும் அவனுக்காகக் காத்திருந்திருப்பாளே! தீனாவின் மேலும் கோபம் கோபமாக வந்தது.
            அதற்குப் பிறகு தினமும் ஒருமுறை ஸ்டெல்லா தீனாவோடு பேசுவது வழக்கமாகிவிட்டது.
இப்போதெல்லாம் மாமியார் மருமகள் பிரச்சனை தொடங்கி பள்ளியில் தன் சகாக்களோடு ஏற்படும் சிறுசிறு மோதல் வரை அனைத்தையும் தீனாவிடம்தான் பகிர்ந்து கொள்கிறாள். சாப்பாட்டு இடைவெளி நேரம் அதற்குத் தோதாக அமைகிறது. முன்பெல்லாம் தன் வகுப்பில் மக்கான மாணவர்களை மதிய உணவு இடைவேளையில் உட்கார வைத்துப் பாடம் படிக்குமாறு கட்டாயப் படுத்துவாள். இப்போது அவர்களெல்லாம் சந்தோஷமாகத் திடலில் விளையாடமுடிகிறது.
தீனாவும் செல்பேசியில் ஸ்டெல்லா என்றிருந்த பெயரை ஸ்டான்லி என்று மாற்றிப்போட்டான்.
தீனா எப்போதும் வியாபார நிமித்தமாக வெளியிலேயே சுற்றிக்கொண்டிருப்பான்; அல்லது கடையில் இருப்பான். அதனால் தீனாவோடு அவள் எந்த நேரம் வேண்டுமானாலும் கலாய்த்துக்கொண்டிருக்க முடிந்தது. மணிக்கணக்கில் பேசினாலும் அவளுக்கு எந்தச் செலவும் ஆகப்போவதில்லை. அவள் ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுப்பாள். அதற்கு, 'நான் பிரீயாக இருக்கிறேன்.  நீ என்னுடன்  பேச அழைப்பு விடுக்கிறேன்' என்று அர்த்தம். பள்ளி வேலை நாட்களாக இருந்தால் அப்போது அவளுக்குப் ஃபிரீ பீரியட் என்று அர்த்தம். அப்படியென்றால் ஒரு மணிநேரம் கூட பேசலாம். வீடாக இருந்தால் வீட்டில் அவளைத்தவிர வேறுயாரும் இல்லை என்று அர்த்தம்.
எப்போதேனும் அசந்தர்ப்பவசமாக தீனா வீட்டில் இருக்கும்போது அதுவும் மனைவியோடு ஒரே அறையில் இருக்கும்போது ஸ்டெல்லாவின் போன் வந்துவிடுவதுண்டு. அப்படி வந்துவிட்டால், 'வீட்டிலதான் இருக்கேன், தேவிகிட்ட பேசுங்க' என்ற முகவுரையோடு பேச ஆரம்பிப்பான். ஸ்டெல்லாவும் புரிந்துகொண்டு ஏதோ ரொம்ப நாள் கழித்து அவனிடம் அப்பொழுதுதான்  பேசுவதுபோல் பொதுவாக நலம் விசாரித்துவிட்டு, தேவியிடமும் நலம் விசாரித்துவிட்டு வைத்துவிடுவாள்.
'ஸ்டெல்லா இந்து, கிறிஸ்டீன்னு பாக்கமாட்டா, மதுரை மீனாட்சிஅம்மன் கோயில் பாக்க வரனும்னு சொன்னா. லீமாவுக்கு இப்ப லீவாம். வரச்சொல்லலாமா?' தேவியிடம் அனுமதி கேட்டான் தீனா.
அற்புதம் வீட்டில் இருக்கும் நேரமாகப் பார்த்து தீனா ஸ்டெல்லா வீட்டிற்குப் போன் செய்தான். நலம் விசாரித்தான். அவர்களைத் தங்கள் வீட்டிற்கு அழைத்தான். தேவியிடம் போனைக் கொடுத்து அவர்களைத் தம் வீட்டுக்கு அழைக்கச் சொன்னான் - த்ரூ பிராப்பர் சேனல்!
தீனாவின் வீட்டிலிருக்கும் விருந்தினர் அறைக்கு புது ஏ.சி. பொருத்த வேண்டும், ஹீட்டர் போடவேண்டும், புது கட்டில் மெத்தை வாங்கிப்போட வேண்டும் என்றெல்லாம் ரொம்ப காலமாகத் தேவி சொல்லிக்கொண்டிருந்தாள். அவையெல்லாம் ஒரே மூச்சில் நிறைவேற்ற தீனாவுக்கு இப்பொழுதுதான் சமயம் வாய்த்தது. அத்துடன் தன் வீட்டிற்குப் புது டைனிங் டேபிளும் வாங்கிப் போட்டான்.
'ஏன்? ஏற்கெனவே இருக்கற டைனிங் டேபிள் நல்லாத்தானே இருக்கு, எதுக்கு புதுசா ஒன்னு தெண்டத்துக்கு?' - தேவி இப்படி எதையாவது குடைந்து குடைந்து கேள்வி கேட்பதுதான் தீனாவுக்குப் பிடிப்பதில்லை.
'இந்த மாடல் ரொம்ப நல்லா இருந்தது. ஒரே நேரத்துல எட்டுபேர் சாப்பிடலாம். இருக்கட்டுமேம்மா. பழைய டைனிங் டேபிள் பெயிண்ட் எல்லாம் உறிஞ்சிபோய் வீணா போயிடுச்சி பார்', - காரணத்தைக் கண்டுபிடிக்கத் திணறினான் தீனா.
அவன் சொன்ன காரணம் ஒன்றும் பொருத்தமாகப் படவில்லை தேவிக்கு.
அற்புதத்திற்கு லீவு கிடைக்கவில்லை என்று ஸ்டெல்லாவையும் லீமாவையும் மட்டும் மதுரைக்கு அனுப்பிவைத்தான்.
பேருந்து நிலையம் வந்தவுடன் போன்செய்தாள் ஸ்டெல்லா. காரை எடுத்துக்கொண்டு அழைத்துவரக் கிளம்பினான் தீனா.
தீனாவின் வீட்டைப் பார்த்துப் பிரமித்தாள் ஸ்டெல்லா. குடிசை வீட்டில் வாழ்ந்த தீனா இப்படியரு மாளிகையில் வாழக்கூடும் என்று அவள் அக்காலத்தில் நினைத்துப் பார்க்கவில்லைதான். 'அவன் தன் காதலைப் பொருளாதாரக் காரணங்களைக் காட்டித்தானே நிராகரித்தான். தான் சற்றே பிடிவாதமாக இருந்திருக்கலாம்! தான் வாழவேண்டிய வீட்டில் இன்னொருத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்!'
தனக்கு வேறொருவனுடன் திருமணமாகி பன்னிரண்டு வயதுப் பெண்ணுக்குத் தாயாக இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட எண்ணங்கள் ஏன் தோன்று கின்றன?
இப்படியெல்லாம் நினைக்கக் கூடாது என்று மனத்திற்கு அலிகார் பூட்டா போட முடியும்?
அவன் வீட்டில் தங்க நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் அளித்திருந்தான் அற்புதம். தேவியின் அலுவலகத்தில் ஆடிட்டிங் நடந்துகொண்டிருந்தது. அதனால் லீவு, பர்மிஷன் எதுவும் போட முடியாது.
'நீங்களே போய் ஊர்சுற்றிப் பாருங்கள்!' என்று தீனாவுக்கும் ஸ்டெல்லாவுக்கும் மனதார அனுமதி தந்தாள் தேவி.  ஸ்டெல்லாவுக்க அதுவே போதுமானதாக இருந்தது. அவள் எதிர்பார்த்ததும் அதுதான்!
அந்த நான்கு  நாட்களும் ஸ்டெல்லாவுக்கு வசந்த காலமாகத் தெரிந்தது. ஏ.சி. கார் சவாரி, த்ரீ ஸ்டார் ஓட்டல்களில் மதிய உணவு - நேரம் சுகமாக நகர்ந்தது.
மதுரை தீம் பார்க்கில் லீமா எல்லாவகையான விளையாட்டுகளையும் ஆடி இன்புற்றாள். லீமா விளையாட்டுகளில் மூழ்கி இருந்த நேரம் ஸ்டெல்லா தீனாவின் பேச்சாகிய மந்திரத்தில் கட்டுண்டிருந்தாள். அவன் உச்சரிக்கும் சாதாரண சொற்கள் கூட ஆயிரம் அர்த்தங்களைத் தருவதாக நினைத்தாள் ஸ்டெல்லா. தீனாவை எவர் இடையூறும் இல்லாமல் அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள். பள்ளி நாட்களில் பார்த்ததைவிட அவன் அழகனாவும் கம்பீரம் நிறைந்தவனாகவும் தெரிந்தான்.
தீனா லீமாவின் விளையாட்டுகளுக்காகக் கணக்கில்லாமல் பணக்கட்டைக் கரைத்தான்.
தன் பரீட்சை நேரத்தில் ஸ்டெல்லாதானே சோறுபோட்டு இடம்தந்து பாதுகாத்தாள். அதனால் தன் வளர்ச்சிக்கு ஸ்டெல்லாதான் பொறுப்பாளி, அவள் மட்டும் அன்று இருந்திருக்காவிட்டால் தான் நடுத்தெருவில் நின்றிருப்பான் என்பதுபோல் கற்பனை செய்துகொண்டான் தீனா. அவன் படித்ததற்கும் அவன் வியாபாரத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை அவன் மறந்துபோனான்.
'தனக்குச் செலவு செய்யாமல் யாருக்குச் செலவு செய்யப் போகிறான்? அவனிடம் தனக்கில்லாத உரிமையா?' தான் ஏதோ தேவிக்கு விட்டுக்கொடுத்ததாக நினைத்துக் கொண்டாள் ஸ்டெல்லா.
ஒருவேளை தீனாவை ஸ்டெல்லா மணம் செய்திருந்தால் இன்று தீனா பஞ்சத்தில் அடிபட்டுக் கொண்டுகூட இருந்திருக்கலாம். கற்பனை உலகத்தில் வாழ்பவர்கள் மனத்துக்கு மகிழ்ச்சி அளிப்பதையே கற்பனை செய்வார்கள். துன்பம் தரும் உண்மைகளை நினைத்தும் பார்க்கமாட்டார்கள். தீனாவும் ஸ்டெல்லாவும் அந்த நிலைமையில்தான் இருந்தார்கள்.
அலுவலகத்திலிருந்து தேவி வரும் முன்பாகவே ஊரெல்லாம் சுற்றிவிட்டு ஸ்டெல்லாவையும் லீமாவையும் வீட்டில் விட்டுவிட்டுக் கடை கட்டச் சென்றுவிடுவான் தீனா.
தேவியைச் சமையலில் விடாமல் ஸ்டெல்லாவே சமைத்து வைத்துவிடுவாள். சில்லி சிக்கன், தந்தூரி சிக்கன், சிக்கன் கடாய், சிக்கன் கபாப் என்று விதவிதமாகச் செய்து அசத்தினாள். வாழ்நாள் முழுக்க அவனுக்குச் சமைத்துப் போடத்தான் இறைவன் அருள்செய்யவில்லை. இந்த நாலு நாளாவது சமைத்துப் போடலாமே! அவனும் ஸ்டெல்லாவை இழந்த இழப்பை உணரச் செய்ய வேண்டாமா?
தீனா கடையை மூடிக்கொண்டுவர பத்து மணியாகும். 'சாப்பிட்டுப் படுங்கள்!' என்று தேவி ஸ்டெல்லாவை வற்புறுத்துவாள். 'அவர் வரட்டும்' என்று ஏதோ கட்டிய மனைவிபோல் காத்துத் தவங் கிடந்தாள் ஸ்டெல்லா.
'நான் பரிமாறுகிறேன்', என்று தீனாவையும் தேவியையும் அமரவைத்துப் பரிமாறுவாள் ஸ்டெல்லா. தீனாவுக்கு மட்டுமே பரிமாறவேண்டும் என்றுதான் உள்ளூற ஆசை. ஆனால் அது சாத்தியமில்லை. தேவியுமல்லவா சாப்பிடாமல் காத்திருக்கிறாள் பாதகி!
தங்களுடனே சாப்பிடுமாறு தீனா வற்புறுத்தினாலும் ஸ்டெல்லா சாப்பிடமாட்டாள். 'வேண்டாம்! வேண்டாம்! நீங்க சாப்பிடுங்க! சமைச்சவங்களுக்கு அத மத்தவங்க ரசிச்சுப் சாப்பிடறதப் பாத்தாத்தான் திருப்தி!' என்பாள். தீனா சாப்பிட்டு முடித்ததும்தான் ஸ்டெல்லா சாப்பிட்டாள்.
தன் மனைவி தேவிகூட எத்தனையோ நாட்கள் தன்னைவிட்டுச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கி இருக்கிறாள். ஆனால் ஸ்டெல்லா இப்படித் தனக்காகக் காத்திருக்கிறாளே! தன் மீது இன்னும் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள்? நெகிழ்ந்து போனான் தீனா.
ஸ்டெல்லாவின் வீட்டுக்காரர் அற்புதத்துக்கு உணவு பரிமாறாமல் அவள் சாப்பிட்டதுண்டா? தூங்கியதுண்டா? என்று தீனா அவளிடம் கேட்கவில்லை. ஒரு இரண்டுநாள் ஒருவரின் நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு ஒருவரைப் பற்றிய பண்புநலனைத் தீர்மானிப்பது எவ்வளவு முட்டாள்தனம்? இப்படித்தானே உலகத்தில் பலர் மற்றவர்களைப் பற்றி நல்லவர் என்றும் தீயவர் என்றும் எடுத்த எடுப்பில் அவரவர் பார்வைக்கேற்பத் தீர்மானித்து விடுகின்றனர்?
வீடுபெருக்கி, டாய்லெட் முதலாக பாத்ரூமைச் சுத்தம் செய்து, துணி துவைத்து, ஒட்டடை அடித்து, சமைத்து, வேலைக்கும் சென்று இப்படி எல்லா நேரமும் தனக்காகவே வாழும் மனைவியையும் இரண்டு நாள் வந்து தங்கும்போது வேறு வேலைவெட்டி இல்லாமல் சமையல் ஒன்றை மட்டும் செய்துவிட்டுத் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டு பரிமாறும் ஸ்டெல்லாவையும் ஒரே தராசின் இரண்டு தட்டுகளில் வைத்துப் பார்த்தான் தீனா.
இப்படித்தான் அநேகம் ஆடவர்கள் தங்கள் வீடுகளுக்கு எப்போதோ வரும் அக்கா, தங்கை போன்ற சொந்த பந்தங்கள், உடன்பணியாற்றும் பெண்கள் ஆகியோரின் குறுகியகால உபசாரங்களில் மயங்கி அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவார்கள். அவர்கள் செய்யும் சின்னச்சின்ன உபகார வேலைகளையும் விளக்கெண்ணெய் போட்டுக் கண்டுபிடித்துப் போற்றுவார்கள். ஏதோ தன் மனைவி தனக்காக எதுவுமே செய்யாததுபோல் காட்டிக் கொள்வார்கள். அதனால் எரிச்சலுறும் மனைவி விருந்தினரின் வெளிப்பகட்டு நாடகத்தைப்  பற்றி ஏதாவது விமரிசித்தால் 'உனக்கு யாரையும் புடிக்காதே. நம்ம வீட்டுக்கு யார் வந்தாலும் ஒனக்குப் புடிக்காது. நான் யார் கூடயாவது சந்தோஷமா பேசினாப் பிடிக்காது.  ரொம்ப பொசசிவ். இதுக்குத்தான் நான் யாரையும் கூப்பிடறதில்லை. ஒனக்கு யாரப் பாத்தாலும் சந்தேகம், என்னை என்னவோ வெல்லத்துல வெச்சி முழுங்கிடுவாங்கன்னு பயம்' என்று கூறிக் குதிப்பார்கள். தங்கள் வீடுகளுக்கு ஆடவர்கள் வரும்போது காட்டப்படாத அக்கறை பெண்கள் வரும்போது மட்டும் அத்துமீறிக் காட்டப்படுகிறதே என்று தங்கள் மனைவி கேட்டுவிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள் இந்த ஆடவர்கள்.
சில பெண்கள் இப்படிப்பட்ட இளகிய மனம் கொண்ட அசடான ஆடவர்களை எளிதில் இனங் கண்டு பிடித்துவிடுகிறார்கள். அண்ணன் தம்பியாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, இப்படிப்பட்டவர்களை ஏதேனும் ஒருவகையில் தன் மீது பச்சாதாபப்பட வைத்துவிடுவார்கள். தங்களுடைய குறைகளை, தேவைகளை, பண முடையை அவன் மனைவி இல்லாத நேரத்தில் அவனிடம் எடுத்துரைப்பார்கள். அவனும் அதைக்கேட்டு 'ஐயோ பாவம்" என்று மனம் இளகிவிடுவான். 'நீ எதுக்கும் கவலப்படாதே, நான் இருக்கேன் உனக்கு' என்று உறுதிப் பத்திரம் எழுதித் தருவான். கணவனின் மருத்துவச் செலவு, பிள்ளைகளின் படிப்புச் செலவு, பையன் வேலைக்குக் கொடுக்கவேண்டிய லஞ்சம், பொண்ணுக்குச் செய்யவேண்டிய கல்யாணச் செலவு என்று அவள் கவலைகள் அனைத்தையும் மெல்ல மெல்ல அவன் மீது சுமத்துவாள். அதைக் கேட்கும் அவனும் ஏதோ தங்கள் வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லாதது போன்றும் அவளுக்கு மட்டுமே எல்லாப் பிரச்சனைகளும் இருப்பது போன்றும் எண்ணிக்கொள்வான். அவளுக்கு எப்படியேனும் தன்னாலான உதவி செய்யவேண்டும் என்று நினைப்பான். மனைவிக்குச் சொன்னால் 'ஏன்?' 'எதற்கு?' 'என்னவாம்?' 'அவள் கணவனுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கெதற்கு?' என்று கேள்விகளை அடுக்குவாள். 'எதற்கு வம்பு?' என்று அவன் செய்யும் உதவிகளை மனைவிக்குச் சொல்லாமல் மறைத்துச் செய்வான். அவளிடமும் தன் மனைவிக்குத் தெரியாமல் மறைக்கச் சொல்வான். அவன் வீட்டிலிருக்கும் ஆயிரம் ஓட்டைகள் அவன் கண்களுக்குப் புலப்படாது. கணவன், மனைவிக்கு இடையே விரிசலை ஏற்படுத்திவிட்டு அந்தப் பெண் நன்றாகக் குளிர்காய்ந்து கொண்டிருப்பாள். வீடு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கும்மாளம்தானே. கடைசியில் இச் செய்திகள் எல்லாம் வெளியே வந்தால் கணவனும் மனைவியும் யாரோ மூன்றாவது நபருக்காக தங்களுக்குள் சண்டைபோட்டுத் திரிவார்கள். வீடு ரணகளமாகும். சில நேரங்களில் பாலைவனமாகும். சில நேரங்களில் மயான பூமியாகும். நிறைய வீடுகளில் இதேகதிதான்.
தீனாகூட இப்படிப்பட்ட இளகிய மனம் படைத்தவன்தான். அதில் ஸ்டெல்லா முடிந்தவரை குளிர்காய நினைத்தாள்.
'டைனிங் டேபிள் புதுசா வாங்கினியா? பழச நான் எடுத்துக்கட்டுமா?' என்று குழைந்தாள்.
'எடுத்துக்கோ'
ஸ்டெல்லாவின் வீட்டில் மூன்றுகாலில் நின்றாடிய மேஜையில் சாப்பிட்டதிலிருந்து அவனும் அவளுக்கு தங்கள் வீட்டின் பழைய டைனிங் டேபிளைக் கொடுத்துவிடலாம் என்றுதான் அவசரமாகப் புது டைனிங் டேபிள் வாங்கிப் போட்டான்.
இன்னும் அவன் வீட்டில் வேறென்ன பொருட்களை எல்லாம் சேகரித்து எடுத்துப் போகலாம் என்று ஒரு நோட்டம் விட்டாள் ஸ்டெல்லா. பழைய விண்டோ ஏ.சி., பழைய வாஷிங் மெஷின், ஒரு டேபிள் ஃபேன் ஆகியவை கூட ஏதோ சிறுசிறு பழுதுகளின் காரணமாகப் பயன்படுத்தப் படாமல் கிடந்தன. அவற்றையும் அவள் கோடிட்டுக் காட்டினாள்.
'எல்லாம் எடுத்துக்கோயேன்'.
'நான் எப்படி எடுத்துட்டுப்போக முடியும்? பேசாம நீயே பார்சல் பண்ணிடேன்'. - தீனா தனியாக இருந்தால் அவனை நீ, வா, போ என்று அவள் ஒருமையில்தான் பேசுவாள். இது அவள் உரிமையை வெளிப்படுத்த!
'உன் பொண்டாட்டி என்னை ஒன்னும் சொல்லமாட்டாளே?'
'அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டா. நான் பாத்துக்கறேன்.'
மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை. நான்காம் நாள் மாலையில் தேவியிடம் சொல்லிவிட்டுச் செல்லத் தயாராக இருந்தாள் ஸ்டெல்லா.
அவள் கிளம்புவதற்கு முன்னதாக அவள் கேட்ட பொருட்கள் அனைத்தும் பார்சல் லாரி ஆபிசுக்குத் தட்டுவண்டி மூலம் அவன் செலவிலேயே அனுப்பப்பட்டன.
அவள் கொண்டுபோகும் இந்தப் பொருட்கள் ஸ்டெல்லா - தீனா தொடர்பு குறித்து எந்தக் கேள்வியும் கேட்கவிடாமல் அற்புதத்தின் வாயை அடைத்துப்போடும்.
தீனாவே அவளைப் பேருந்து நிலையம்வரை சென்று அனுப்பிவிட்டு வந்தான்.
'நம்ம வீட்ல ஏதோ சாமான்லாம் கொறையற மாதிரி இருக்கு?', பூடகமாகக் கேட்டாள் தேவி.
'எல்லாம் வீணாத்தானே இருக்கு. எடத்தவேற அடச்சிக்கிட்டு கிடக்கு, தேவையில்லாம டஸ்ட் அடைஞ்சிகிட்டிருக்கு அப்படின்னு நீதானே சொன்னேஸ்டெல்லாகூட உன்னக் கேட்டுட்டு எடுத்துக்கறேன்னுதான் சொன்னா. நான்தான் நீ ஒன்னும் சொல்லமாட்டேன்னு எடுத்துக்கச் சொன்னேன்'. தேவியின் தயாள குணத்தை ஏற்றிவிட்டு, தேவி என்றோ சொன்ன சில வார்த்தைகளை துணைக்கு வைத்துக்கொண்டு  தப்பிக்கப் பார்த்தான் தீனா.
'போம்போதுகூட இதப்பத்தி என்கிட்ட ஒன்னும் சொல்லலையே?'
'அட விடும்மா அதை. எனக்கு ரொம்பப் பசிக்குது. சாப்பாடு போடப் போறியா? இல்லைன்னா சாப்பிடாமப் படுக்கட்டுமா? இதையெல்லாம் போய்ப் பெரிசு படுத்திக்கிட்டு?' அவன் கோபமாய் இருப்பதாய்க் காட்டிக் கொண்டான். மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்கப்பட்டுவிடாமல் தப்பித்துக் கொள்ள தீனா கையாளும் ஒரு டெக்னிக் இது.
அதற்குப் பின் இரண்டு மூன்று முறை ஸ்டெல்லா வீட்டில் டைல்ஸ் போடுவது தொடர்பாக அவள் வீட்டிற்குத் தனியாகச் சென்றான் தீனா - அவன்  மனைவிக்கு அங்கே செல்வது குறித்து ஏதும் சொல்லாமல். பிசினஸில் இருப்பவர்கள் ஆயிரம் வாடிக்கையாளரைச் சந்திக்கவேண்டி இருக்கும். அதை எல்லாமா வீட்டில் சொல்லிக் கொண்டிருப்பார்கள்? ஸ்டெல்லாவின் வீட்டிற்கு டைல்ஸ் போடவேண்டுமென்றால் அவளும் ஒரு கஸ்டமர்தானே? நினைத்துக்கொண்டான் தீனா.
டைல்ஸ் மாற்ற இப்பொழுது வசதியில்லை என்று அற்புதம் தெளிவாகவே சொன்னான். ஸ்டெல்லா இப்படி சாதாரண வீட்டில் வசிப்பது தீனாவுக்கு வருத்தம் தந்தது. 'நான் என்ன காசா கேட்டேன்? காசெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று உயர்ரக மார்பொனைட் டைல்ஸ் அனுப்பிவைத்தான். அவற்றைத் தரையில் பதிக்கும் லேயரையும் அவனே பேருந்திற்குக் காசுகொடுத்து அனுப்பி வைத்தான். சிமெண்டுக்கும் மணலுக்கும்தான் அற்புதம் செலவுசெய்தான்.
தீனாவின் கடையிலிருந்து கொண்டுவரப்பெற்ற பாத்ரூம் பிட்டிங்ஸ், லைட் பிட்டிங்ஸ் கூட புதியதாகப் பொருத்தப்பெற்றன.
தீனாவின் உபகாரத்தால் வீடு பளிச்சென்று பிரகாசித்தது.
சீக்கிரத்தில் தீனாவின் கடனை அடைக்கவேண்டும் என்றுதான் அற்புதம் நினைத்தான். கடன் என்பது என்றைக்கும் சுமைதானே?
நாஞ்சிக்கோட்டைக்கு டைல்ஸ், பாத்ரூம் பிட்டிங்ஸ், லைட் பிட்டிங்ஸ் அனுப்பிய கணக்கில் ஒரு மாதமாக பணம் வரவு வைக்கப்படவில்லை என்று மானேஜர் நினைவு படுத்தினார். 'அடடா? சொல்ல மறந்துட்டேன். கணக்குல நில் பேலன்ஸ் போட்டுடுங்க. அவர் பணத்தைப் போனவாரமே செட்டில் பண்ணிட்டார்'.  தன் கடைக் கணக்கில் பொய்க்கணக்கை எழுதவைத்தான் தீனா.
ஏழாவது படித்துக்கொண்டிருந்த லீமா, அப்பாவிற்கு மேலும் செலவு வைக்கப் பூப்பெய்தினாள். அற்புதத்தின் தாய் அதனை விமரிசையாகக் கொண்டாடியே தீரவேண்டும் என்று அடம்பிடித்தாள். மண்டபத்தில் சடங்கு சுற்ற வேண்டும். சாப்பாடு அது, இது என்று நிச்சயம் ஒரு லட்சம் கிழிந்துவிடும். திடீரென்று பணத்திற்கு எங்கே போவது?
'தீனா கிட்ட கேட்டுப் பாருங்களேன்' ஸ்டெல்லா அற்புதத்திற்கு ஆலோசனை வழங்கினாள்.
'ஏற்கெனவே டைல்ஸ் போட்டதுக்கே நாம பணம் கொடுக்கல, இப்ப அவர் கிட்டயே கடன் கேக்கச் சொல்றியா? அவர் நம்பளப் பத்தி என்ன நினைப்பார்?'
'தப்பா ஒன்னும் நெனக்க மாட்டார். டைல்ஸ் பணம் மெதுவா கொடுங்கன்னு அவர்தானே சொன்னார். ஒரு லட்சமெல்லாம் அவருக்குக் கால்தூசு. அவர் ஒரு டூர் போனாலே லட்ச ரூபாய்கு மேல செலவு செய்யறவர். அவர் என்ன நம்ப காசை நம்பியா இருக்கார்? கேட்டுத்தான் பாருங்களேன். நிச்சயமா தருவார்'.
'பிரண்ட்ஸ் கிட்ட பணம் கடன் வாங்கினா அப்பறம் பிரண்ட்ஷிப்பே கெட்டுடும் ஸ்டெல்லா!'
'அதெல்லாம் ஒன்னும் கெடாது. அதுக்கப்பறம் ஒங்க இஷ்டம். கேட்டாக் கேளுங்க, கேக்காட்டி விடுங்க. எனக்கென்ன?'
'சரி! சரி! கடன் கேக்க எனக்குக் கூச்சமா இருக்கு. நீயே கேட்டுடு.'
பொதுவாக இப்படிச் சடங்கு சுற்றுவது எல்லாம் தீனாவுக்குச் சற்றும் பிடிப்பதில்லை. இந்தக் காலத்தில் இதெல்லாம் அனுஷ்டிப்பது அநாகரீகம் என்று அவன் வன்மையாகக் கண்டிப்பான். ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் சூழலில் அச் சிறுமி வயதுக்கு வந்துவிட்டாள் என்று ஊராருக்கும் பள்ளிக்கும் தம்பட்டம் அடித்து அவளை அனைவரின் மத்தியிலும் நாணப்பட வைக்கும் செயல் இது என்பான். சமுதாயத்திலிருந்து நீக்கப்பட வேண்டிய கொடிய வழக்கம் இது என்று பரிந்துரைப்பான். இதுவரை சுற்றத்தார், நண்பர்கள் ஆகியோர் வீடுகளில் நடைபெற்ற இத்தகைய சடங்குகளுக்கு வேண்டுமென்றே செல்லாமல் தவிர்த்தவன்.
ஸ்டெல்லா வீட்டிற்கு வரவேண்டும் என்று அவனுக்கு அழைப்பு விடுத்தாள். அடிக்கடி அவள் வீட்டிற்குச் செல்வது அவனுக்கும் பிடித்திருந்தது. ஆனால் அப்படிச் செல்ல ஏதேனும் ஒரு காரணம் வேண்டுமே? அவனுடைய கம்பெனியும் நன்றாக வளர்ந்துவிட்டதால் அங்கே எப்போதும் அவன் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
மறுநாளே விரைந்தான் தீனா. ஸ்டெல்லா மெதுவாக விஷயத்தைச் சொன்னாள். சடங்கு செய்வது அவனுக்குப் பிடிக்காதது. ஆனால் ஸ்டெல்லாவுக்குக் கடன் கொடுப்பது பிடித்திருந்தது. அவர்கள் வீட்டு விசேஷத்தில் தான் முக்கியப் புள்ளியாகக் கலந்துகொள்ளப்போவது பிடித்திருந்தது. சடங்கில் கலந்துகொள்ள ஸ்டெல்லாவின் அக்கா, தம்பிகள் அனைவரும் வருவார்கள். அவர்களை யெல்லாம் சந்திக்க வாய்ப்பு ஏற்படும். அதுவும் பிடித்திருந்தது. அதற்கு மேல் ஸ்டெல்லா மகிழ்ச்சியால் பூரித்துப் போவாள். அதுவும் பிடித்திருந்தது. இவ்வாறு பிடிக்காதது ஒன்றாகவும் பிடித்தது பலவாகவும் இருந்ததால் அவன் உடனே அதற்கு ஒப்புக்கொண்டான்.
பணம் கைமாறியது. ஏற்பாடுகள் நடந்தன. 'உங்க வீட்டுக்கு நேர்ல வந்து பத்திரிகை வைச்சு அழைக்கப் போறேன்' தீனாவிடம் அற்புதம் அடம்பிடித்தான்.
'உங்களுக்கு நெறைய வேலைங்க இருக்கும். அதப்பாருங்க. பங்ஷன் எப்ப, எங்கேன்னு மட்டும் சொல்லுங்க. நான் வந்துடறேன், இது என் வீட்டு பங்ஷன், அதுக்குப்போய் எனக்கு எதுக்கு இன்விடேஷன்?' என்று அன்பாக மறுத்துவிட்டான். ஸ்டெல்லாவிடமும், 'பத்திரிகை எல்லாம் வெக்க வரவேணாம், நான் சொன்னா எல்லாம் சரியா இருக்கும். புரிஞ்சுக்கோ', என்றான். அவளும் விஷயத்தை நன்றாகவே புரிந்து கொண்டாள்!
மனைவியை அழைத்துவந்தால் ஆயிரம் தலைவலி. இதுபோன்ற மஞ்சள் நீராட்டு விழாக்களைத் தவிர்க்கும் அவன் எதற்கு இந்த விழாவுக்கு முக்கியத்துவம் தருகிறான் என்று முதல் கேள்வி தொடுப்பாள். அதிலேயே அவன் ஆஃப் ஆகிவிட வேண்டியதுதான்.
அப்படியே விழாவுக்கு வந்தாலும் 'வந்தோமா போனோமா' என்று ஓர் அரைமணி நேரம் மட்டுமே வந்துபோக முடியும். எல்லோரிடமும் சகஜமாகப் பழக முடியாது. ஸ்டெல்லாவுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. அவன் அவர்கள் வீட்டுக்குக் காசே வாங்காமல் டைல்ஸ் போட்டது, சடங்குக்கு லட்ச ரூபாய் கடன் கொடுத்தது, அடிக்கடி அவர்கள் வீட்டில் எழுந்தருளுவது என்று இத்யாதி விஷயங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டுவிடலாம். எதற்கு வம்பு? என்று தன் மனைவியிடம் இவ் விஷயத்தைச் சொல்லாமல் விட்டான் தீனா.
விழா தொடங்க நாலு மணிநேரம் முன்னதாகவே சென்று விட்டான் தீனா. தீனாவை அனைவரிடமும் பெருமையாக அறிமுகப்படுத்திவைத்தாள் ஸ்டெல்லா. வீடே கோலாகலமாக இருந்தது.
ஸ்டெல்லாவின் அக்கா ஜெஸிந்தாவுக்கும் தீனாவைப் பார்த்ததில் மகிழ்ச்சி. அவன் தங்கள் வீட்டில் தங்கியிருந்த நாட்களை நினைவுகூர்ந்தாள். தன் தங்கையோடு படித்த தோழிகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தாள். ஸ்டெல்லாவின் நட்பை அவன் மீட்டெடுத்ததைக் கேட்டு அதிசயித்தாள். கோகிலாவும் மல்லிகாவும் திருச்சியில்தான் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் முகவரியைத் தேடித் தருவதாகவும் வாக்களித்தாள்.
பழைய நண்பர்களைத் தேடித்தரும் அக்காவின் வாக்குறுதியைக் கேட்ட ஸ்டெல்லா உள்ளூறப் பொருமினாள். 'இவளுக்கு வேற வேல இல்லையா? தீனா என்ன சாதாரண ஆளா? அந்தப் பனாதிங்க வீட்டுக்கெல்லாம் போறதுக்கு?' தனக்கும் தீனாவுக்குமான அந்தரங்க நட்பில் அவர்களுக்கும் ஒரு பங்கு பிரிப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. 'சரி அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம்.'
விழா மண்டபம் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தது. வீட்டிற்கு முன்னதாகவே வந்திருந்த சுற்றத்தினரை மண்டபத்தில் விடும் பணியைத் தானே முன்வந்து ஏற்றுக்கொண்டான் தீனா. காரில் நாலு டிரிப்  அடித்தான்.
சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து விருந்து அருந்திவிட்டு அனைவரும் மண்டபத்தைவிட்டுக் கிளம்பினர். ஊரிலிருந்து வந்த சுற்றத்தினரும் மறுநாள் வேலைக்குப் போகவேண்டும் என்று சொல்லி மண்டபத்திலிருந்தே விடைபெற்றுக் கொண்டனர்.
வீட்டு உறுப்பினர்களையும் மிச்ச சொச்சம் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு இரண்டு டிரிப் அடித்தான் தீனா.
காலையிலிருந்து ஓடியாடி வேலை செய்ததில் சற்றே அசதியாக இருந்தது. மாடியறைக்குச் சென்று சற்றே இளைப்பாறினான்.
விழாவின்போது ஐம்பதினாயிரம் பெறுமானமுள்ள ஒரு நெக்லஸை லீமாவுக்குத் தன் பரிசாக அளித்தான் தீனா. அவன் செலவு செய்வது என்று இறங்கிவிட்டால் கண்மண் தெரியாமல் செலவு செய்வான். எல்லாம் அவன் பார்த்துச் சம்பாதித்ததுதானே! யார் கேள்வி கேட்க முடியும்? ஆற்றில் வருகுது, மணலில் சொருகுது. தேவியும் அவன் எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறான், எவ்வளவு செலவு செய்கிறான் என்று கணக்குக் கேட்டது இல்லை. அவன் மீது அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை.
லீமாவின் கழுத்திலிருந்த அந்த நெக்லஸைக் கழற்றி அணிந்துகொண்டாள் ஸ்டெல்லா. தீனாவுக்குத் தேநீர் எடுத்துக்கொண்டு ஸ்டெல்லா மாடிக்குச் சென்றாள்.
'என் கழுத்துக்கு இந்த நெக்லஸ் எப்படி இருக்கு?' சைகை மொழியால் தீனாவைக் கேட்டாள்.
'உனக்கென்ன? அன்னைக்குப் பாத்த மாதிரிதான் இருக்கே. உன் பொண்ணு வயசுக்கு வந்துட்டான்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. இப்பகூட ஒரு தாவணி கட்டிட்டு நீ நின்னா பிளஸ் டூ படிக்கிற பொண்ணு மாதிரிதான் இருப்பே!'
களுக்கென்று சிரித்தாள் ஸ்டெல்லா.
'ஏன் சிரிக்கிறே?'
'இப்பல்லாம் யார் தாவணி போடறா? எல்லாம் சுடிதார்தான்!'
'அப்படின்னா நீயும் ஒரு சுடிதார் போட்டா பத்தாவது படிக்கற பொண்ணு மாதிரிதான் இருப்பே!அநியாயத்திற்குக் கலாய்த்தான் தீனா.
அவன் சொல்வதிலும் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்தது. அவள் இந்த வயதிலும் கண்களுக்கு மை தீட்டி, புருவத்தை டிரிம் செய்து, தலைமுடியைச் சுருளாக்கி, உடல் சிக்கெனத் தெரியுமாறு புடவைக்கு அழகாக மடிப்பு வைத்துக் கட்டித் தன்னை அழகுபடுத்திக் கொள்கிறாள். அவளது கணவன் எந்த அளவிற்கு முதுமைத் தோற்றத்தை வரவேற்றுத் தன்னை வயோதிகனாகக் காட்டிக்கொண்டானோ அதற்கு எதிராக ஸ்டெல்லா தன்னைச் சின்னப்பெண் போலக் காட்டிக்கொண்டாள். பார்ப்பவர்கள் அவர்களைத் தந்தை மகளோ என்று நினைக்குமாறு அவர்கள் தோற்றத்தில் தெரிந்த வித்தியாசம் அமைந்தது.
தீனாவின் பேச்சைக் கேட்டு நாற்பது வயதில் முகத்தில் நாணத்தைப் படரவிட்டாள் ஸ்டெல்லா. அவன் செய்த அழகின் ஆராதனையில் மெய் மறந்தாள்.
அவன் தனக்குக் கடைசியாகக் கொடுத்த முத்தம் நினைவுச் சிப்பியிலிருந்து வெளிவந்தது. அவன் மோகனப் புன்னகை அவளைக் கிறங்கச் செய்தது. உணர்ச்சிகள் கொந்தளித்தன. அவள் உதட்டிலிருந்து அவன் உதடுகளுக்கு அந்த முத்தம் இடமாற்றம் அடைந்தது.
லீமாவிற்கு வந்த கிப்ட் பாக்கட்டுகளை மாடி அறையில் வைக்கலாம் என்று மேலேறி வந்த அற்புதம் சன்னல் வழியே தன் மனைவியின் காதல் வெளிப்பாட்டைப் பார்த்து விக்கித்து நின்றான். அவன் கால்கள் தள்ளாடின.
உள்ளே நுழைந்து, தீனாவின் சட்டையைப் பிடித்திழுத்து வெளியே தள்ளலாமா? தீனாவுக்குத் தான் தர வேண்டிய பெரிய கடன் ஞாபகத்துக்குவந்து அச்சுறுத்தியது.
தன் மனைவியின் கன்னத்தில் 'பளார்' 'பளார்' என்று அறையலாமா? விஷயம் விபரீதமாகும். தன் அம்மாவின் காதுகளுக்கு எட்டும். அப்புறம் ஊர் முழுக்க அச் செய்தி பரவ நிமிஷங்கள் போதும். வயதுக்கு வந்துநிற்கும் தன்மகள் லீமாவின் கதி? நிதானித்தான் அற்புதம். மெதுவாகப் பின்னுக்கு நகர்ந்து படிகளில் இறங்கினான்.
அவன் இயலாமையும் ஏழ்மையும் அவனை நோக்கிக் கேலிசெய்தன. 'வெளிய போய்ட்டு வரேம்மா' என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு நேரே டாஸ்மார்க் சென்றான். ஏற்கெனவே அவன் குடிகாரன்தான். தன் மகளின் எதிர்காலம் கருதி மெல்ல மெல்ல அப்பழக்கத்தை விட்டு இப்போது மூன்று ஆண்டுகளாக அறவே நிறுத்தியிருந்தான். தன் மனைவியால் இப்படி மறைமுகமாகத் தன் இயலாமை வெளிப்படுத்தப்பட்டுத் தான் நிராகரிக்கப்பட்டதைவிட பெரிய சோகம் இருக்கமுடியுமா? இப்போது வேறு வழி தெரியவில்லை. மதுவென்னும் அந்தப் பூதத்திடமே சரணாகதி அடைந்தான்.
ஸ்டெல்லா இப்படி உணர்ச்சிவசப் படுவாள் என்று தீனா சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். ஒருகணம் திகைத்தான். 'சரி புறப்படட்டுமா' என்றான். ஸ்டெல்லாவுக்கும் சற்றே வெட்கமாக இருந்தது. 'ம்' என்று தலையசைத்தாள். இதைத்தான் முதியோர் காதல் என்பதா?
அற்புதத்தை இருவரும் தேடினார்கள். அவன் சீக்கிரத்தில் வருவதாகத் தெரியவில்லை.
நேரமாகிறது என்று புறப்பட்டான் தீனா.
ஸ்டெல்லாவின் முத்தம் அவனை என்னவோ செய்துகொண்டிருந்தது.
இது,
சரியா? தவறா?
இன்பமா? துன்பமா?
நிறுத்துவதா? தொடர்வதா?
அவனால் பதில்காண முடியவில்லை.
அவன் கார் ஓட்டியபோது இரண்டு மூன்று இடங்களில் கவனக் குறைவால் விபத்து நேர இருந்தது.  சமாளித்தான்.
ஸ்டெல்லாவின் வாழ்க்கையில் நேர்ந்து கொண்டிருக்கும் விபத்தை எப்படிச் சமாளிப்பாள்?
எத்தனையோ ஆண்டுகளாகச் சீராகச் சென்று கொண்டிருந்த அவள் வாழ்க்கைப் பயணம் இப்போது தடுமாற்றம் அடைய எது காரணம்?
ஆட்டோகிராஃப் திரைக்கதையா?
அக்கதையைப் பார்த்து ரசித்ததோடு நின்றுவிடாமல் அதே முயற்சியில் தீனா ஈடுபட நினைத்ததா?
என்றோ வெம்பிப் போய் வீழ்ந்துவிட்ட காதலைத் தேடி எடுத்து தீனாவுடன் தான் வாழ்ந்திருந்தால் எப்படித் தன் வாழ்க்கைப் பாதை இருந்திருக்கும் என்று இல்லாத ஒன்றை ஸ்டெல்லா தேடிக் கொண்டிருப்பதா?

தீனாவின் பள்ளித் தோழிகள் கோகிலா, மல்லிகா முதலியோர் முகவரியை எப்படித் தேடுவது என்று அங்கே ஜெஸிந்தா யோசித்துக்கொண்டிருந்தாள்.
நிர்மலா கிருட்டினமூர்த்தி, வாலாட்டும் மனசு (சிறுகதைத் தொகுப்பிலிருந்து (விழிச்சுடர்ப் பதிப்பகம், 2008, பக். 9-50) . . .

No comments:

Post a Comment