Sunday 19 February 2017

பெண்ணுலகு




மாமியார்
வார்த்தைகளால் வறுத்தெடுக்க
நாத்தனாரோ
நடுநடுவே நெய்சொரிவார்!

அக்கம் பக்கத்தார்
அவ்வப்போது வாங்கும்
இரவல்களுக்கு
நன்றிக்கடனாய்க்
கொம்புசீவிவிட்டுக்
குளிர்ந்துபோவார்கள்!

உற்றார் உறவினர்கள்
ஒருவேளை சோற்றுக்கு
நாக்குக்குள் வைத்திருக்கும்
வாழைப்பழ ஊசிகளை
கூர்தீட்டிக் கொடுப்பார்கள்!

கடைத்தெருவில்
கடைச்சரக்கு
கணிசமாக விற்பதற்கு
முகமன் உரையாக்கும்
நலம் விசாரிப்புகளில்
காய்கறிகளோடு
மாமியார் மெச்சாத
மருமகள் மேல்
போட்டுக்கொடுத்து
போனிசெயச் சொல்வார்கள்!

மீன்கூடை சுமந்துவரும்
முனியம்மா
மாமியார் கையால்தான்
வியாபாரம் என்றிருந்தால்
மருமகள் தலை
வெளித்தெரியாத பொழுதுகளில்
அவள்மேல்
கூடைகூடையாய்க்
குற்றங்கள் சுமத்திடுவாள்!

பேருந்து நிறுத்தத்தில்
பயணத்து நெரிசல்களில்
கோயிலில் அமர்ந்திருக்கும்
குறைவான நிமிடங்களில்
முன்பின் தெரியாத
முகங்கள்கூட
தம்வீட்டு வெறுப்புகளைத்
தாரை வார்த்துவிட்டு
மருமகள்கள் மீது
பொதுவான
குற்றப் பத்திரிகைகளைப்
பரிமாறிக் கொள்வார்கள்!

காலங்காலமாய்த்
தேய்ந்துபோன
கண்ணாடிகள் அணிந்துகொண்டு
பெண்ணுலகு
3 டி வித்தையுடன்
மருமகளை நோக்கும்
மஞ்சள்காமாலைப்
பார்வையால்
வலதுகால் வைத்துப்
படிதாண்டி
உள்ளே பிரவேசிக்கும்
உருப்படியான
மருமகள்களின்
உண்மைச் சொரூபம்

உருக்குலைந்துபோய் . . .

No comments:

Post a Comment