Thursday, 25 July 2019

கயமை


கயமை

            இந்தக் கதைக்குக் கதாநாயகனே இல்லை.  வெறும் வில்லன் மட்டும்தான். அவனுக்கு ஏதாவது பெயர் வைப்போமா?  என்ன பெயர் வைப்பது?  ஒவ்வொரு பெயருக்கும் நல்ல அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.  அந்த நல்ல பெயர்களை இந்தக் கயவனுக்கு வைத்துப் பெயரின் சிறப்பைக் குலைப்பதா?  சரி, வேண்டுமானால் கெட்டவர் எவருடைய பெயரையாவது வைப்போம்.
                இராவணன்? - அவன் ஒரே ஒரு சீதையைத்தானே கவர்ந்து சென்றான்.  சீதையை மணமுடிக்க அவளுடைய அனுமதியையும் அல்லவா வேண்டி நின்றான்.  அவன் பராக்கிரமசாலி, இறைவனையே அடிபணிய வைத்தவன்.  இக் கயவன் ஒரு கோழை - அதனால் அவனுக்கு இந்தப் பெயர் வேண்டாம்.
                துரியோதனன்? - அவன் நட்பிற்கு இலக்கணம் - இவன் நண்பர்களையே கொச்சைப் படுத்துபவன்.
            துச்சாதனன் - திரௌபதி ஒருத்தியைத்தானே - அதுவும் அண்ணனின் கட்டளைக்காகத் துகில் உரித்தவன். இவனோ போக்கிரி; ‘பொம்பள பொறுக்கி’.
            அப்படியென்றால் என்னதான் பெயர் வைப்பது?  வேண்டாம்.  அவனுக்குப் பெயரே வைக்க வேண்டாம்.  அவன் பெற்றோர் செய்த தவறை நாம் வேறு ஏன் செய்ய வேண்டும்? அவன்அவனாகவே இருக்கட்டும்.
            அவன் கண்கள் உடற்கூற்றியல்படி எல்லோருக்கும் இருப்பதுபோலத்தான் அமைந்து இருக்கும். ஆனால் அதன் பார்வைதான் பெரிதும் வித்தியாசமானது.  எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவன் ஒரே கோணத்தில்தான்பார்ப்பான்’.  அவனைப் பொறுத்தவரை அனைத்துப் பெண்களும் பாலுணர்ச்சியின் சின்னங்கள். அப்படி யென்றால் தாயை?  உடன்பிறந்தவளை?  மகளை?  - அதை அவனைத்தான் கேட்க வேண்டும்.  ஃபிராய்டின் பால் ஈர்ப்பு பற்றிய தத்துவங்களுக்கு அவனைச் சோதனைக்கு உட்படுத்தினால் புதுப்புது தகவல்கள் கிடைக்கக் கூடும்.
            அவன் தன் பள்ளிப் பருவம் முதலாகவே பெண் ஆசிரியர்களை  கொச்சைப் பார்வையால்தான் அளப்பான்.  அவர்கள் நடத்தும் பாடங்களைவிட அவன் மனத்தில் பதிந்ததென்னவோ அவர்களின் தோற்றமும் உருவமும்தான் - அதற்கும் மேல் அவர்களைத் தன்னோடு இணைத்துக் காணும் ஆபாசக் கற்பனைகளும்தான் அவன் உலகம்.
            வாழ்க்கையின் கால ஓட்டத்தில் இத்தகைய ஒழுக்கம் சிலருக்கு மாறக்கூடும்.  அவர்கள் திருந்திய மனிதர்களாகவும் கூடும்.  சிலருக்கு இப்போக்கு குறையக் கூடும்.  ஆனால் ஒரு சிலர் தம்மைத் திருத்திக்கொள்வதே இல்லை.  மாறாக, வயது ஆக ஆக அவர்களின் கீழ்மைக்குணம் வளர்ந்து கொண்டுதான் போகும்.  அவனும் அப்படித்தான்.  கல்வி என்ற ஒற்றைத் தகுதி மட்டுமே அவனைக் கல்லூரிப் பேராசிரியனாக்கியது.
            கயவர்களுக்குப் பெண்கள் கல்லூரியில் வேலை கிடைத்துவிட்டால் கொண்டாட்டம்தானே.  சில சில வேலைகளுக்கென்று சில சில சலுகைகள் உண்டு.  வளையல்காரன் பெண்ணின் கையைப் பிடிக்கலாம். செருப்பு விற்பவன் பெண்ணின் காலைப் பிடிக்கலாம். தையல்காரன் உடலை அளவெடுக்கலாம் - இப்படி ஒவ்வொரு தொழிலுக்கென்று ஒருசில சலுகைகள் . . .
            ஆனால் ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் சலுகை அனைத்தைக் காட்டிலும் அதிகம். அவர்கள் விரும்பினால் எதை வேண்டுமானாலும் கொச்சையாகப் பேசலாம் - கடைசியில் தன் மீது சந்தேகம் வராமல் பாடத்தோடு அவற்றைத் தொடர்புபடுத்திச் சமாளித்துக் கொள்ளலாம்.  அவனும் அதே முறைகளைத்தான் கையாள்வான்.  விஷயமறிந்து சிலர் முகம் சுளித்தாலும் எச்சரிக்கை உணர்வோடு தங்களைக் காத்துக்கொண்டாலும் எதையும் வெள்ளையாய் நம்பும் வெகுளிப் பெண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
            ஒவ்வொரு வருடமும் புதுப்புது மாணவிகள் - புதுப்புது முகங்கள் - புதுப்புது  கற்பனைகள் - புதுப்புது அனுபவங்கள்.
            அவனுக்குப் பாடப்பகுதியின் செய்திகள் தெரிகிறதோ இல்லையோ - மாணவிகளின் பெயர்கள் மட்டும் மனப்பாடம்; தலைக்கீழ்ப் பாடம். கல்லூரி வளாகத்திலும் பிற இடங்களிலும் மாணவிகளை வேண்டுமென்றே அழைத்து வைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருப்பது அவனது பொழுதுபோக்கு.  அட போடா நாயேஎன்று அவர்கள் மனத்தில் நினைத்துக் கொண்டாலும் வெளியில் அதை எப்படி வெளிப்படுத்த முடியும்? எல்லோருக்கும் அந்த நெஞ்சுறுதி வந்துவிடுமா? அவன்  ஆசிரியனாயிற்றே!
            வகுப்பிலோ அவன் பார்வை சுத்த மோசம்.  கண்களில் காமம் விஞ்ச கயமை எஞ்ச பெண்களை வைத்த கண் வாங்காமல் தாறுமாறாகப் பார்ப்பான். அவன் பார்வைக்கு அஞ்சி முதல் வரிசையில் மாணவியர் உட்காருவதே இல்லை.
. . .  நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?  இத்தகைய கிராதகனை ஏன் வேலையிலிருந்து தூக்கவில்லை என்றுதானே?  வேலையை விட்டு நீக்கிவிடலாம்தான்;  தனியார் கல்லூரி என்றால் இதற்கு அரை நிமிடம்கூட ஆகாது.  அவன் இருப்பதோ அரசுக் கல்லூரியாயிற்றே.  அதிகபட்ச தண்டனை என்பது வெறும் பணி இட மாற்றம் மட்டுமே.  அதனால் என்ன இழப்பு நேர்ந்துவிடப் போகிறது. ஓரிடத்தில் செய்த திருவிளையாடல்களை மற்றொரு இடத்தில் தொடர வேண்டியதுதானே.  அறுபது ஆனால்தானே அவன் ஓய்வு பெறக்கூடும். அப்போதும் அவன் பார்வைக்கோ எண்ணங்களுக்கோ யார் ஓய்வு தரமுடியும்?
            அரசுப் பணியில் ஒருவர் என்னதான் தவறு செய்தாலும் எளிதில் தண்டிக்க இயலாது.  விதிகள். . . விதிகள் . . . விதிகள். . . ஏகப்பட்ட விதிமுறைகள்!  இந்த விதிமுறைகளைக் காரணம் காட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.  அவர்களைப் பொறுத்தவரை இப்படி ஏதாவது நடவடிக்கை எடுத்தால் பெரும்பாவம் வந்து சூழ்ந்துகொள்ளுமாம்.  யார் பாவமும் நமக்கெதற்கு? என்பதே பெரும்பாலானோர் மனோபாவம்.  அதுவும் ஒரு பதவியிலேயே ஒருவர் அதிக ஆண்டுகள் நீடிப்பதும் இல்லை.  மூன்று மாதம், ஆறு மாதம் என பதவி வகிப்பவர்களுக்கு எதைப் பற்றி அக்கறை இருக்கமுடியும்?  இதனால் கயவர்களுக்குக் கொண்டாட்டம்தான்.  தங்களை யாரும் எதுவும் செய்யமுடியாது என்று போடுகிறார்கள் வெறியாட்டம்!
            இத்தகைய கயவர்களால் பாதிக்கப்படுபவர்களோ வென்றால் 'நமக்கு ஏன் தேவையில்லாமல் கெட்ட பேர்' என்று விஷயங்களை மூடிமறைத்து ஒதுங்கிச் சென்று விடுகிறார்கள்.  தப்பித் தவறி போராடிப் பார்ப்போம் என வருபவர்கள் கொச்சைப்படுத்தப் படுகிறார்கள்.  'சாக்கடை என்று தெரிந்தும் ஏன் அருகே செல்கிறீர்கள்?' என்ற அனைவரின் அறிவுரைகளும் போனஸாக வேறு கிடைக்கிறதே! அப்படியென்றால் சாக்கடையை எப்பொழுதுதான் அப்புறப்படுத்துவது?
            கதைக்கு வருவோம்.  கயவனைக் கைப்பிடித்த காரிகை காலம் செல்லச் செல்ல அவனது எல்லையற்ற காமவெறியைக் கண்டுகொண்டாள்.  அக் கயவன் தன்னை மணப்பதற்கு முன்பே வேறொரு பெண்ணை மணந்து இருப்பதும் பிறகுதான் தெரியவந்தது.  காலம்கடந்த செய்தி என்ன பயனைத் தரும்?  குழந்தைகள் வேறு பிறந்துவிட்டன.  குழந்தைகளுக்காக வாழவேண்டிய அடுத்த அத்தியாயத்தில் அவள் இருந்தாள்.
            கணவனோ காமப் பிரியன்.  கூடவே குடிகாரன்.  பெண்பிள்ளையோ பருவமடைந்து விட்டாள்.  இனியும் அவனோடு ஒன்றாய் வாழ்ந்தால் தன் குழந்தைகள் எதிர்காலம் பாழாகும் என்று தன் பணியைக் காரணம் காட்டி மணமுறிவு வாங்காது பிரிந்து வாழ்ந்தாள்.  அதனால் மேலும் மேலும் அவன் காட்டில் மழைதான்.  அவன் இப்போது தனிக்காட்டு ராஜா!
            உலகில் அவன் மட்டும்தானா கயவன்?  அவனைப் போன்று வேறு சிலர் இருக்க மாட்டார்களா என்ன? பருவம் வந்த அவன் மகள் பள்ளிப்படிப்பை முடித்தாள்.  கல்லூரியில் காலடி வைத்தாள்.  அவள் கருப்புதான் என்றாலும் அவளது மிதமிஞ்சிய வளர்ச்சி ஆடவரை ஈர்க்காதா என்ன? 
            அவள் படித்த கல்லூரியிலும் தன் அப்பனின் 'ஜெராக்ஸ் காப்பி'யாய்  மற்றொரு கயவன்.  அவன் சற்று அத்து மீறுபவன். தலைமுறைகள் மாறும்போது வளர்ச்சி இருக்கத்தானே செய்யும்? தாய் தந்தை சரியில்லாதபோது குழந்தைகள் திசைமாறிப் போவதை எப்படித் தடுக்கமுடியும்?  ஏதோஒன்று எக்குத்தப்பாய் நடந்தேறிவிட்டது.  எதிர் காலத்தில் தாலிக்கயிற்றுக்குத் தலைகொடுக்க வேண்டிய அவள் தூக்குக் கயிறுக்குத் தலைகொடுத்தாள்.
            தன் மகள் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து விழுந்தடித்துச் சென்றான் அவன்.  மனைவியின் ஓலம்.  தன் கணவனின் கயமை, வேறு ரூபத்தில் தன் மகளைத் தாக்கியதால் ஏற்பட்ட மனவேதனை. 
            அவனுக்கும் துக்கம் வரத்தான் செய்தது.  தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமாமே?  இறந்த மகளின் உடலருகே சிறிதுநேரம் கண்மூடி அமர்ந்திருந்தான்.
            திடீரென்று பல பெண்களின் கூக்குரல் ஒட்டு மொத்தமாய் எழுந்தது. அவர்களின் ஓலம் அங்கிருந்தவர்களை அசர வைத்தது.  அவன் சிந்தனையை உசுப்பியது.  கண்கள் திறந்தான்.  பத்துப் பதினைந்து பருவப் பாவையர்.  அனைவரும் அவன் மகளின் சிநேகிதிகள்.  துயரம் தாங்காமல் தோழியர் விழுந்து விழுந்து அரற்றினர் - அவன் மேலும்!  அதீத துன்பம் வரும்போது நாம் நமது சூழலை மறந்துவிடத்தான் செய்கிறோம்?  அவர்களும் அப்படித்தான்,  அவர்கள் தங்கள் ஆடை விலகிக் கிடப்பதைக்கூட சற்றும் அறியாது இருந்தனர் . . .
            அவன் கண்கள், சூழ்ந்திருந்த துயரத் திரையை விலக்கின. அம் மாசிலா மங்கையரின் பருவப் பாங்கு அவன் கண்களுக்கு விருந்தளிக்கத் தொடங்கின.  இன்னும் அதே மயக்கத்தில் அவன் . . .
(2008)

No comments:

Post a Comment