Friday, 19 July 2019

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்
               
            ஸ்ரீ வந்தனா டிரேடர்ஸ் கடந்த பத்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.
            தேர்ந்த முந்திரிகளை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரம்.                
            அன்புச்செல்வனின் அயராத உழைப்பு.
            ஆரம்ப காலங்களில் அவனே பல இடங்களுக்கும் சென்று முந்திரித் தோப்புகளின் உரிமையாளர்களின் வீட்டுப் படிகளை ஏறி ஏறி அவர்களிடம் கொள்முதல் செய்து சிறுகச் சிறுக தன் வியாபாரத்தை வளர்த்தான். அவனுடைய மனைவி அவனுடைய எல்லாச் செயல்களிலும் பக்கபலமாக இருப்பவள். அவனுடன் அவளும் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி இருக்கிறாள். அவளிடம் கொண்ட அபிமானம் காரணமாகவே அவன் தன் கடைக்கு அவள் பெயராகிய வந்தனா எனப் பெயர்சூட்டினான்.
                ஆரம்ப நாட்களில் அவனும் அவன் மனைவியும் முந்திரிக் கொட்டைகளைக் கொள்முதல் செய்து, கைவலிக்க அச்சுமைகளைத் தூக்கிக்கொண்டுபோய் பேருந்து நிறுத்தம் சென்று பார்சல் போட்டு என எத்தனையோ வேலைகளைச் செய்து தங்கள் வியாபாரத்தைப் பெருக்கி இருக்கிறார்கள். முந்திரிக் கொட்டைகளைப் பார்சல் செய்யும்போது வேலையாட்கள் கவனக்குறைவாக இருந்து சொத்தை முந்திரிகளோ அல்லது அளவில் திரங்கி சிறிதாக இருக்கும் முந்திரிகளோ கலந்துவிட்டால் பின்னர் அதை வாங்குபவர்கள் ஒன்றிரண்டு தரமற்ற முந்திரிகளைப் பார்த்து மொத்த சரக்கையும் தரங்குறைந்ததாக மதிப்பிட்டுவிடுவார்கள் என்பதற்காக அவர்களே இறுதி பாக்கிங் செய்யும்போது கூட இருந்து ஒவ்வொன்றாக செக் செய்வார்கள். பல நாட்கள் நடுநிசியாகிய பன்னிரண்டு மணிக்குக்கூட பேய்கள் போன்று விழித்துக்கொண்டு அவர்கள் வேலை செய்வதை அவர்கள் வீட்டில் எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்குகள் சாட்சி கூறும்.
                இப்படியெல்லாம் வளர்ந்த அந்த ஸ்ரீ வந்தனா டிரேடர்ஸ் இப்போது காசை அள்ளிக் கொட்டிக் குவிக்கிறது. இப்போதெல்லாம் அன்புச் செல்வனும் வந்தனாவும் முந்திரியை வாங்குவதற்காக வீடு வீடாகச் செல்ல வேண்டிய தேவையில்லை. ஊர் ஊராக அலைய வேண்டிய தேவையும் இல்லை. அங்கங்கே ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்கள் அலைந்து திரிந்து நல்ல சரக்கைக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள்.
            ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும் தருவாயில்தான் யாரும் நம்பமாட்டார்கள். அதே அந்த நிறுவனம் வளர்ந்துவிட்டால் 'வேண்டாம் வேண்டாம்' என்று சொன்னால்கூட சரக்குகளைக் கொணர்ந்து சேர்க்கத் தயங்க மாட்டார்கள். கொடுத்த சரக்குக்குக் காசுகூட கேட்கமாட்டார்கள். அவசரப்பட்டுக் காசு கேட்டு விட்டால் தங்கள் சரக்கை எடுத்துப்போகுமாறு கூறிவிட்டால் என்ன செய்வது? பிறகு கொண்டு வந்ததற்கான வண்டிசத்தமும் வீண்தானே!
            காசுகொடுத்துக் கொள்முதல் செய்த காலம்போய் இப்போது அவன் அச்சரக்கை விற்றுவிட்டு நான்கைந்து மாதங்கள் கழித்தே உரிய பணத்தைப் பைசல் செய்யலாம் என்ற காலம் வந்துவிட்டது. அதற்குள் அடுத்த கொள்முதல் நடந்துவிடும்.
            கம்பெனி வளர்ந்துவிட்டதால் அலுவலகத்திலும் கணிசமாகவே வேலையாட்கள் சேர்ந்துவிட்டார்கள். அதனால் வந்தனாவுக்கென்று அவன் கம்பெனியில் வேலைகள் என்று எதுவும் இப்போதெல்லாம் இருப்பதில்லை. பெருக்க, துடைக்க என்று அதற்கு இரண்டு ஆயாக்கள் இருக்கிறார்கள். கம்பெனி ஆரம்பித்த புதிதில் அவள்தானே அத்தனை வேலைகளையும் செய்தாள்.
            வெளியே சென்றுவர நாலைந்து பியூன்கள் இருக்கிறார்கள். அப்புறம் கிளார்க், மேனேஜர், பார்சல் செய்பவர்கள் இத்யாதி என முப்பதுக்கும் மேல் அலுவலர்கள் பணியாற்றினார்கள்.
            அன்புச்செல்வன் தன் மனைவியிடம் சொல்லி விட்டான். 'இனிமேல் உன் உடம்பை வருத்திக் கொள்ளாதே. பேசாமல் சாப்பிட்டுவிட்டு நன்றாக உடுத்திக்கொண்டு நகைகளையெல்லாம் போட்டுக்கொண்டு ராணியாட்டம் ரெஸ்ட் எடு. என்ஜாய் யுவர்செல்ப்' என்றான்.
            வந்தனா தன் கம்பெனிக்குப் போவது பெரும்பாலும் குறைந்தேவிட்டது. அதனால் கம்பெனி நிமித்தமாக அவன் மேற்கொள்ள வேண்டிய செயல்களை அவளால் அவனுக்குச் சொல்ல இயலவில்லை. அதற்கு முன்னால் 'அந்தச் செக்கைப் போடவேண்டும்', 'அவர்களிடமிருந்து பணம் வரவில்லை' என்றெல்லாம் அவனுக்கு அவன் ஞாபகம் வைத்துக் கூறிக்கொண்டிருப்பாள்.
            அன்புச்செல்வனின் நண்பர் ஒருவர் தனக்குத் தெரிந்த பெண் ஒருத்தி கம்யூட்டர் படித்துவிட்டு வேலையின்றி இருக்கிறாள், அவளுக்கு ஒரு வேலை போட்டுத் தாருங்களேன் என்று சிபாரிசு செய்தார்.
            தன் கம்பெனி கணக்குகளையும் பொறுப்பாக நிர்வகிக்க அவனுக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. அதுவும் இந்தக் காலக்கட்டத்தில் கம்யூட்டர் தெரிந்திருக்க வேண்டியது அத்தியாவசியம் அல்லவா? 'சரி அனுப்புங்கள் பார்க்கலாம்' என்றான்.
            புனிதா சற்று அழகாகவே இருந்தாள். அது இளமை தந்த அழகு. வேலைகளையும் வெகு எளிதாகக் கற்றுக்கொண்டாள். அவளுக்கு என்று ஒதுக்கிய வேலைகளைவிட மற்ற வேலைகளையும் தானே முனைந்து தெரிந்து கொண்டாள். அதுதான் ஆடவர்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வித்தியாசம்.
            ஆணாக இருந்தால் அலுவலகத்தின் வேலைகளைத் தெரிந்துகொண்டால் எல்லா வேலையும் தம் தலையில் சுமத்திவிடுவார்கள் என்று பட்டும்படாமல் வேலை செய்வார்கள். அப்படியே ஒருசிலர் ஓனருக்காக உயிரைக் கொடுத்து உழைத்தாலும் 'இவர் நல்லா வேலை செய்வார், எஜமான விசுவாசம் நிறைஞ்சவர், ரொம்ப நல்லவர் என்ற ஒன்றிரண்டு புகழ் மாலைகள் மட்டுமே பரிசாகக் கிடைக்கும்.
            அதே பெண்களாக இருந்தால் புகழ்மாலைகளோடு பலவித சலுகைகளும் கிடைக்கும்.
            ஆணாக இருந்தால் இரவு நேரமாகிவிட்டால் 'இந்தாங்க ஆட்டோ பிடிச்சிப் போயிடுங்க, போம்போது ஓட்டல்ல சாப்புடுங்க' என்று ஒரு நூறு ரூபாய்த் தாள் ஓனரிடமிருந்து கைமாறும். அதே பெண்ணாக இருந்தால், 'அடடா ரொம்ப நேரமாயிடுச்சே, வாம்மா, நான் ஒன்னக் கார்லயே டிராப் பண்ணிடறேன்' என்று சி கார் சவாரி கிடைக்கும். சமயத்தில் திரி ஸ்டார் மெரிட்டுள்ள ஓட்டலின் குளுகுளு சி யில்  உயர்தர சிற்றுண்டியும் கிடைக்கும். அவ்வப்போது வெளியே செல்லும் போது கவனமாக வாங்கிவரும் சிறுசிறு பொருட்கள் பரிசாகக் கிடைக்கும். அப்பரிசுகளில் செண்டிமென்ட் ஏறிக் கொள்ளும். அவற்றைப் பத்திரப்படுத்தச் சொல்லும்.
            அரசாங்க அலுவலகத்தில் பொறுப்பிருந்தால் என்ன? பொறுப்பு இல்லை என்றால் என்ன, அதைப்பற்றி யார் கவலைப்பட்டார்கள்?
            தனியார் அலுவலகங்களில் பணியாளர்களிடம் பொறுப்புணர்ச்சி அதிகமாகவே எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை ஆடவரை வேலைக்கு வைத்தாலும் அவர்களுக்கு எந்தவித பொறுப்பும் இருப்பதில்லை. அவர்கள் மேல் வேலைகளையெல்லாம் திறமையாகச் செய்வார்களே அன்றி ஓனரைப் பற்றி எந்தவித கவலையும் படமாட்டார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவ்வப்போது டிப்ஸாகப் தரப்படும் பணம். அவ்வளவே. அதைக்கொண்டுபோய் சாப்பிட்டு ஏப்பம் விட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
            ஆனால் பெண்கள் என்றால், அதுவும் கல்யாணமாகாத பெண்கள் என்றால், 'தங்கள் ஓனர் சாப்பிட்டாரா? அவருக்குத் தாகம் எடுக்கிறதா? அவர் களைப்பாய் இருக்கிறாரா? அவருக்குத் தலை வலிக்கிறது போல் இருக்கிறதே' என்றெல்லாம் முகத்தைப் பார்த்து உணரும் சக்தி நிறையவே இருக்கும். தங்கள் ஓனரிடம் நிறைய அக்கறை செலுத்துவார்கள். ஜெண்டில்மேன் அர்ஜுனிடம் நேசம் வளர்க்கும் மதுபாலாவிற்கு இணையாக நடந்து கொள்வார்கள். ஓனர் மணமாகாதவனாக இருந்தால் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை. மெதுமெதுவாகக் காதலித்துத் திருமணம்கூட செய்துகொள்ளலாம். ஆனால் அவனே மணமானவனாக இருந்தால் ? ? ?
            வந்தனா டிரேடர்ஸ் உரிமையாளர்  அன்புச் செல்வனிடம் வேலைக்குச் சேர்ந்த புனிதாவின் கதையும் இப்படித்தான் ஆனது.
            ஒரு கட்டத்தில் புனிதாவுக்கு வீட்டில் நிகழ்ந்த திருமணப் பேச்சுகள் கூட புனிதாவை எரிச்சல் அடைய வைத்தது. இப்ப என்னப்பா கல்யாணத்துக்கு அவசரம், கொஞ்ச நாள் போகட்டும் என்று எரிந்து விழுந்தாள். தனக்கு ஏன் இப்போதெல்லாம் திருமண ஆசை எழவில்லை என்பதை அவளால் உணர்ந்துகொள்ள முடியவில்லை.
            புனிதாவிடம் அன்புச்செல்வனும், 'ஒனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா நானே பாத்துச் சொல்றேன். நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும். கல்யாணம் வேணாம் வேணாம்னு சொல்லாதே', என்று அவளுக்கு இப்போதெல்லாம் திருமணம் தொடர்பான அறிவுரை கூறத் தொடங்கிவிட்டான்.
            அவளுக்கு பொருத்தமானவனாக யாரையாவது தேடலாம் என்றால் ஏனோ அவன் பார்த்த கல்யாணமாகாத எந்தப் பையனும் அவளுக்குப் பொருத்தமில்லாததுபோலும் அவர்கள் ஏதாவது ஒரு குறையுடையவர்கள் போலும் அனைவரைக் காட்டிலும் பண்பால் பாசத்தால் அவள் மட்டுமே உயர்ந்து நிற்பதைப்போலும் அன்புச் செல்வன் உணர்ந்தான். அதற்கும் என்ன காரணம் என்று அவனால் உணர முடியவில்லை.
                'ஒங்கள மாதிரி ஒரு நல்லவர் கிடைச்சா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனா சார்?' புனிதாவின் சர்டிபிகேட் அன்புச்செல்வனை மதிமயங்கச் செய்தது. தன்னைப்போன்ற நல்லவன் இந்த உலகத்தில் ஏது? புனிதாவைப் போன்ற புனிதமானவளும் இந்த உலகத்தில் ஏது?
            தன் ஓனர் அன்புச் செல்வனிடம் பாசத்தைக் காட்ட ஆரம்பித்து அவனும் 'சிறிய பெண்ணாக இருக்கிறாளே' என்ற ஒருவித பாசத்தோடு அணுகப்போய் இருவழிப் பாதையாக அங்கே பாசத்தின் நெரிசல் உண்டானது. அந்த நெரிசலில் அவர்கள் ஒருவரோடு ஒருவர் உரசிக் கொண்டனர்.
            புனிதா அவனுடைய பர்சனல் செக்கரட்டரி ஆனாள்!
            அன்புச் செல்வனுக்கு மதிய உணவு எடுத்துவந்து அருந்தும் வழக்கம் இல்லை. வந்தனா உணவைக் கட்டித் தருகிறேன் என்று சொன்னால் வெகுவாக அலுத்துக் கொள்வான். 'ஆமாம் காலைல செஞ்சி ஆறிப்போய் அத மத்தியானம் சாப்பிடனும்'.
                'ஏன் நான் ஹாட் பேக்ல வெச்சுத்தரேன். சூடா இருக்கும். சாம்பார், ரசம்னு தனித்தனியாய் வெக்கிறேன் கொண்டுபோய் சூடா சாப்பிடுங்க'
                'அது என்ன ஆபிஸா? வீடா?  அங்க எப்பவும் யாராச்சும் வந்துகிட்டே இருப்பாங்க. அங்க உக்காந்துகிட்டு சாதம், சாம்பார்னு கடை பரப்பி வெச்சுக்கச் சொல்றியா? அதுவும் நான் சாப்புடறதுக்குன்னு ஆபீஸ்லயே உக்காந்து இருக்க முடியுமா? யாரையாவது பாக்க அங்க இங்க போக வேண்டியிருக்கும். பேசாம நான் வெளியிலயே சாப்புட்டுக்கறேன்'. அன்புச்செல்வனை வற்புறுத்த இயலாமல் அவனுக்கு மதிய உணவு அளித்துவிடுவதையே விட்டுவிட்டாள்.
            புனிதா வேலைக்கு வந்ததிலிருந்து அலுவலக நேரம் முழுக்க அவனை நன்றாகவே கவனித்துக் கொண்டாள். சில மாதப் பழக்கத்திலேயே அவன் மதிய வேளைகளில் ஒழுங்காகச் சாப்பிடாமல் இருப்பது அவளை வருத்தியது. தன் ஓனர் சாப்பிடாமல் தான் மட்டும் வேளாவேளைக்குச் சாப்பிடுவதா? தான் கொண்டுவரும் உணவில் கொஞ்சம் சாப்பிடுமாறு வற்புறுத்துவாள். அவன் சாப்பிடவில்லை யெனில் தானும் சாப்பிடப்போவதில்லை என்று முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு கணினியின் முன்னால் அமர்ந்து வேலைசெய்து கொண்டிருப்பாள்.
            அவளுக்காக வேண்டி - அவள் பட்டினி கிடக்காமல் சாப்பிட வேண்டுமே என்று நினைத்து இப்போதெல்லாம் பியூனைவிட்டு ஓட்டலில் சாப்பாடு வாங்கிவரச்சொல்லி சாதம், சாம்பார், அப்பளம், பொரியல் என்று வெகு விமரிசையாக அவன் அறையில் இப்போது சாப்பாட்டுக் கடை நடைபெறுகிறது. புனிதாவும் அவள் பங்குக்கு வகைவகையாகத் தானே சமைத்து அவனுக்குப் பரிமாறித் தானும் உண்கிறாள்.
            முதலில் உணவைப் பரிமாறிக்கொண்டவர்கள் மெல்ல மெல்ல உடலையும் பரிமாறிக்கொண்டார்கள்.
            அன்புச்செல்வனின் அண்மைக் காலத்துப் போக்கில் ஏற்பட்ட ஏதோ ஒரு மாற்றம் இன்னதென அறியாமல் வந்தனா தடுமாறினாள். தன் குழந்தை களிடத்தில் கூட முன்பைப்போல் அன்புச்செல்வன் கொஞ்சி விளையாடுவ தில்லை. முன்பெல்லாம் வீட்டிற்கு வந்ததும் தன் காரில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு கடற்கரைக்குச் சென்று விளையாடுவான். இப்போது அவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. பிரச்சனை தெரியாமல் மருத்துவம் எப்படிப் பார்க்கமுடியும்?
                விக்னேஷுக்கு இரண்டு நாட்களாகக் காய்ச்சல். எல்.கே.ஜி. படித்துக்கொண்டிருந்தான். இன்று அவன் பள்ளிக்கும் போகவில்லை. திடீரென்று உடல் நெருப்பாய்த் தகித்தது. அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு அன்புச் செல்வனை வரவழைத்தாள். டாக்டரிடம் கொண்டு சென்றார்கள். ஊசி போடப்பெற்றது. கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று டாக்டர் சொன்னார். வந்தனாவையும் குழந்தையையும் வீட்டில்விட்டான்.  அலுவலகம் புறப்படத் தயாரானான். பன்னண்டு மணியாவுது. இதோ அரை மணி நேரத்துல சாப்பாடு ரெடியாயிடும். சாப்ட்டுட்டுப் போலாம்' என்றாள்
                'இல்ல ஆபீஸ்ல வேலயிருக்கு,  நான் வெளியிலயே சாப்ட்டுக்கறேன்' என்று பிடிவாதம் பிடித்தான்.
                'அப்படின்னா போங்க. எனக்கும் சாப்பாடு வேணாம். காலைல சுட்ட சப்பாத்தி ஒன்னு இருக்கு அத நான் சாப்ட்டுக்கறேன்' என்றாள்.
            கொஞ்சமாய் மனைவிமேல் எஞ்சியிருந்த அன்பு சற்றே எட்டிப்பார்த்தது. அடடா நாம் சாப்பிடவில்லை யென்றால் அவளுக்காக அவள் சமைத்துக் கொள்ள மாட்டாள் போல் இருக்கிறதே என்று நினைத்தான். 'சரி, சாப்ட்டுட்டே போறேன்' என்று சலித்துக் கொண்டான்.
            வந்தனா சமைப்பதற்காகச் சென்றாள். குழம்பைக் கூட்டி அடுப்பில் வைத்தாள். விக்னேஷ் உடம்பு எப்படி இருக்கிறது பார்ப்போம் என்று படுக்கையறை நோக்கி அடி வைத்தாள்.
            உள்ளே அன்புச்செல்வன் யாரோடோ மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்தான். 'நீ சாப்ட்டுடுமா, எனக்காகக் காத்துட்டு இருக்காதே, நான் வீட்ல சாப்ட்டுக்கறேன். இன்னைக்கு ஒருநாள்தானே, இன்னைக்கு மட்டும் பர்மிஷன் குடு, நான் என்ன பண்ணட்டும், இப்படி நடக்கும்னு தெரியுமா?  சரி சரி நான் வரும்போது பார்சல் வாங்கி வரேன்' வீட்டில் வேறெந்த சத்தமும் இல்லையாகையால் அவன் பேசிய சொற்கள் வந்தனாவின் காதுகளில் துல்லியமாக விழுந்தன.
            தன் வீட்டில் சாப்பிட இவருக்கு யாருடைய பர்மிஷன் வேண்டும்? எங்கோ ஒரு பிரச்சினை முளைத்திருக்கிறது. 'மனமே சற்றே அமைதிகொள், கண்டு பிடிப்போம்' - தன் உள்ளத்திற்குச் சிறியதாய்ப் பூட்டு போட்டாள்.
            அன்புச் செல்வனுக்குப் பிடித்தமான கருவாட்டுக் குழம்பும் பப்படமும் அவன் முகத்தில் எந்தவித மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.
                'ஏன் நீங்க சரியாவே சாப்புடல?' அவனிடமிருந்து ஏதாவது செய்தி கிடைக்குமா என்று ஆராய்ந்தாள் வந்தனா.
                'கொழந்தைக்கு ஒடம்பு நல்லா இல்லாதப்போ எப்படிம்மா என்னால சாப்புட முடியும்?'
            பத்து மாதம் சுமந்து பெற்ற தனக்கே இல்லாத பாசமா அவனிடத்தில்?
                'அப்படின்னா நீங்க கவலையோட ஆபீஸுக்குப் போகவேணாம். பேசாம நீங்க கொழந்த பக்கத்துலயே இருங்க'. 
                'வேலயெல்லாம் அப்படி அப்படியே போட்டுட்டு வந்திருக்கேன். நான் போய்ட்டு சீக்கிரமா வந்துடறேன்'. அவன் விரைந்து கிளம்புவதிலேயே குறியாக இருந்தான்.
            ஒரு மூன்று மணி இருக்கும். விக்னேஷைத் தொட்டுப் பார்த்தாள். அவன் உடம்பு மீண்டும் நெருப்பாய்க் கொதித்தது. அதைவிட அவள் மனம் பன்மடங்காய்க் கொதித்தது. தன் கணவன் காட்டிய இன்றைய பரிதவிப்பு நிச்சயமாகக் குழந்தையின் பொருட்டல்ல. வேறு ஏதோ ஒன்று.
            அவனுக்குத் தொடர்புகொண்டு மீண்டும் வரச் சொல்லலாமா? வேண்டாம். அவன் வருவதைவிட அவன் இருக்கும் இடத்திற்கே தான் செல்வதுதான் சரி. ஒரு ஆட்டோவைப் பிடித்தாள். அமிஞ்சிகரை வந்தனா டிரேடர்ஸ் போப்பா.
            குழந்தையைத் தூக்கிக்கொண்டு நேராக அன்புச்செல்வனின் அறைக்கதவைத் திறந்து உள்ளே பிரவேசித்தாள்.
            அன்புச்செல்வனின் இருக்கையில் புனிதா அமர்ந்திருந்தாள். அவள் வாயில் கேக்கை அன்புச் செல்வன் ஊட்டிக் கொண்டிருந்தான்.
            வந்தனாவின் திடீர்ப் பிரவேசம் புனிதாவை வெலவெலக்கச் செய்துவிட்டது. அன்று அவளுடைய பிறந்தநாள். அவள் பிறந்தநாளைக் கொண்டாட ஒரு பெரிய ஓட்டலுக்கு லன்ச்சிற்காக அழைத்துச் செல்கிறேன் என்று ஒரு வாரம் முன்பிருந்தே கூறிக்கொண்டிருந்தான். அவளும் அதே கற்பனையில் திளைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் திடீரென்று மதியம் அவன் போன்செய்து சாப்பிட வரமாட்டேன் என்று சொன்னால் அவளுக்கு எப்படி இருக்கும்? அதனால்தான் அவளைத் தாஜா செய்வதற்காகக் கேக் வாங்கிவந்து ஊட்டிக்கொண்டிருந்தான்.
            இப்படி வந்தனா வந்து நிற்பாள் என்று அன்புச்செல்வனும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
            வந்தனா அலுவலகச் சூழலில் எதுவும் பேச வேண்டாம் என்று அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றாள். அன்புச் செல்வனும் நல்ல பிள்ளையாக மானேஜரிடம் அலுவலகத்தைப் பார்த்துக் கொள்ளும்படிக் கூறிவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டான்.
            ஏதோ அறியாது நிகழ்ந்துவிட்ட ஒரு சிறு தவறு என்றான்.
            விக்னேஷிற்கு உடம்பு சரியாகிவிட்டதால் அவன் பழையபடி பள்ளிக்குச் சென்றான். வந்தனாவும் அன்புச் செல்வனுடன் அலுவலகம் சென்றாள். அதே அறையின் ஒரு பக்கத்தே இருந்த புனிதாவிற்கு வெளியே மானேஜர் எதிரில் இருக்கை கொடுக்கப்பட்டது. புனிதாவின் இருக்கையில் வந்தனா அமர்ந்தாள். இனி அலுவலகத்திற்குத் தானும் தொடர்ந்து வரப்போவதாகக் கூறினாள். விக்னேஷை கவனித்துக்கொள்ள ஓர் ஆயாவை ஏற்பாடு செய்தாள். வந்தனாவின் இத்தகைய செயல்பாடுகளினால் புனிதாவால் அன்புச்செல்வனைச் சந்திக்க எவ்வித வாய்ப்பும் கிட்டவில்லை. அவனிடம் தொலைபேசியிலும் பேச இயலாதவாறு வந்தனா பார்த்துக்கொண்டாள். எந்நேரமும் அட்டைபோல் வந்தனா ஒட்டிக் கொண்டிருப்பது புனிதாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
            அன்புச்செல்வனின் கார், பங்களா, பணத்தைக் கொட்டுகின்ற வியாபாரம் ஆகியவற்றைப் பார்த்து ஆசைப்பட்டே புனிதா அவனைக் காதலித்தாள் என்று வந்தனா கூறிய மொழிகள் அவன் செவியில் ஏறவில்லை.
            தன் அன்புக்கு மட்டுமே அவள் அடிபணிந்தாள் என்றும் அவள் நிச்சயமாகச் சொத்துக்கு ஆசைப்படவில்லை என்றும் அவன் தர்க்கம் செய்தான்.
            அப்படியென்றால் அவர்கள் அலுவலகத்தில் பியூன் வேலையில் இருக்கும் குமார் இன்னும் மணமாகாதவன்தான். அன்புச்செல்வனைவிட அழகாகவும் இருக்கிறான். நல்லவனாகவும் தெரிகிறான். அப்படி இருக்கும்போது அவனை ஏன் அவள் காதலிக்கவில்லை என்று வந்தனா கேட்டதற்கு அன்புச் செல்வனால் பதில்சொல்ல முடியவில்லை.
            மேனேஜர் ராஜகோபாலன் பணிவும் அடக்கமும் அந்த அலுவலகமே பாராட்டும் ஒன்று. யாரையும் கடிந்துரைக்காதவர். அவருக்குக் கூட மனைவி சரியாக அமையவில்லை. நோயாளி. பியூன், ஆயாக்களிடம்கூட அன்பு பாராட்டுபவர். அன்பு காட்டும் விஷயத்தில் அன்புச்செல்வனைவிட பல படிகள் உயர்ந்தவர். அவரைக்கூட அவள் காதலித்திருக்கலாம். அவரை ஏன் அவள் காதலிக்கவில்லை என்று வினவினாள் வந்தனா. அதுக்காக ஊர்ல இருக்கற எல்லாரையுமா காதலிக்க முடியும்? என்றான் அன்புச் செல்வன்.
            காதலிக்கறது தப்பு இல்லை. ஆனா கல்யாணமானவனை வசியப்படுத்தறதுதான் தப்பு. காதல் தப்புன்னு யார் சொன்னா? வளைச்சுப் போடறதுதான் தப்பு. புனிதா மீதான எந்தவித குற்றச்சாட்டையும் அன்புச்செல்வனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
            அவளக் கல்யாணம் பண்ணிட்டா எப்படி ரெண்டு பேரையும் மெயின்டெயின் பண்ணுவிங்க? என்றாள்.
            உனக்காக நான் வீட்ல இருக்கற நேரத்துல அவ நிச்சயமா டிஸ்டர்ப் பண்ணமாட்டா. அவ உன் கிட்ட எதுவும் பங்கு கேக்கமாட்டா, அவ என் அன்பை மட்டும்தான் எதிர்பார்க்கிறா, என்றான்.
            அவன் உடம்பென்ன பிளாட் போட்டு விற்கப்படும் தரிசுநிலமா? ஆளாளுக்குப் பங்குபோட்டுக் கொள்ள? தன்னோடு இதுவரை அவன் கழித்த நேரத்திற்கு அவள் உரிமை கொண்டாட மாட்டாளாமே. எல்லாம் அலுவலகத்திலே முடித்துக்கொள்வார்களாமே! இதென்ன பேச்சு? ஒவ்வொரு நாட்டிலும் எல்லையிலுள்ள இடம் வெறுமனேதான் கிடக்கிறது. அது சும்மாத்தானே எந்தவிதப் பயனும் இல்லாமல் கிடக்கிறது என்று அடுத்த நாட்டுக்காரன் பாத்யதை கொண்டாட விட்டுவிட முடியுமா? எல்லையைக் காப்பாற்றத்தானே நம் இராணுவத்தின் பெருந்தொகை செலவிடப்படுகிறது. சும்மா கிடக்கும் நிலத்திற்கே இந்த முக்கியத்துவம் என்றால் உயிரும் உடலும் இருதயமும் உள்ள ஒரு மனிதனைக் கூறுபோட்டு காலையில் நீ, இரவில் நான் என்று வாழமுடியுமா?
            அலுவலகத்தில் அன்புச்செல்வனுக்கு தரப்பட்ட அதே அளவு மரியாதை புனிதாவுக்கும் கிடைத்துவந்தது. பியூன் முதல் மானேஜர் வரை அனைவரும் அவளை அம்மா, அம்மா என்று விளித்து வந்தனர்.  வந்தனாவின் வருகைக்குப் பிறகு எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது. புனிதாவை அங்குப் பெரிதாக மதிப்பவர்கள் யாரும் இல்லாமல் போனது. அதைவிட வந்தனாவையே அனைவரும் மேடம், மேடம் என்று பணிந்து நின்றதைப் பார்த்துப் பொறாமை பொங்கியது.
            மேனேஜர் அன்புச்செல்வனுக்கு அனுப்பும் கோப்பு ஒன்றைத் தயாரித்து மேஜை மேல் வைத்தார். புனிதா தன் ஆத்திரத்தை எல்லாம் கொட்டி ஒரு கடிதம் வரைந்தாள். அந்தக் கடிதத்தை மேனேஜர் பார்க்காத நேரத்தில் கோப்புக்குள் சொருகினாள்.
            அன்புச் செல்வனிடம் தான் கொண்ட காதலை விவரித்துத் தள்ளினாள். வந்தனா பண்பற்றவள், அடக்க மற்றவள், பணக்காரத் திமிர் கொண்டவள், அடங்காப் பிடாரி, தற்பெருமை அடிப்பவள், கொடும் பாவி  என்றெல்லாம் சரமாரியாக அவளைத் திட்டித் தீர்த்திருந்தாள். தான் அவனைத் தெய்வமாக நினைப்ப தாகவும் வாழ்க்கை முழுக்க அவனுக்கே உரியவள் என்றும் அவனைக் கணவனாகத் தான் வரித்துவிட்டதாகவும் அழுத்தம் திருத்தமாக எழுதியிருந்தாள். அவனைத் தவிர வேறொருவனைத் தன்னால் நினைத்தும் பார்க்கமுடியாது என்றும் அவள் வாழ்க்கைக்கு அவனே பதில்சொல்ல வேண்டும் என்றும் உணர்த்தியிருந்தாள்.
            மேனேஜரின் கோப்பினைப் பியூன் அன்புச் செல்வனிடம் கொணர்ந்தான். வந்தனா அதனைத் தன்னிடம் வைத்துவிட்டுப்போகுமாறு சைகையால் உணர்த்தினாள்.
            கோப்பினைத் திறந்தவளுக்கு புனிதாவின் கடிதம் கண்களில் பட்டது. மணி நான்கரை ஆகியிருந்தது. பெரும்பாலும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஐந்து மணிக்குச் சென்றுவிடுவார்கள். 
            ஒரு கடிதம் கூரியரில் அனுப்பத் தயார் செய்ய வேண்டும் என்றும் அதற்காகப் புனிதாவை ஒருமணிநேரம் தாமதிக்குமாறும் அன்புச்செல்வன் வாயிலாகப் புனிதாவிற்குச் செய்தி போனது.
            பணியாளர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக நடையைக் கட்டினர். புனிதாவை அழைத்தாள் வந்தனா. மேஜை மேல் கடிதத்தை வைத்தாள். புனிதாவிற்கு என்ன வேண்டும் என்று கேட்டாள்.
            அன்புச்செல்வனுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டதாகவும் அவனைத் தான் திருமணம் செய்துகொள்ள நினைப்பதாகவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தாள் புனிதா.
                'தாராளமா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்ல'.
            அன்புச்செல்வனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. வந்தனா இப்படி முரண்டு பிடிக்காமல் ஒத்துக்கொள்வாள் என்று அவன் துளிகூட எண்ணவில்லை.
            புனிதாவும் ஸ்தம்பித்து நின்றாள். அவளால் தனது உணர்ச்சிகளை அடக்கமுடியவில்லை. அக்கா என்று கூறிக்கொண்டு வந்தனாவின் கால்களில் வீழ்ந்தாள்.
            அன்புச் செல்வன் தாவிவந்து வந்தனாவின் கைகளைப் பிடித்துக்கொண்டான்.
                'ஆனா ஒரே ஒரு கண்டிஷன்'.
            அவர்கள் இருவரின் மகிழ்ச்சியும் சடன் பிரேக் போட்டு நின்றது.
                'என்னது?' இருவரின் நான்கு கண்களும் ஏக காலத்தில் வந்தனாவின் கண்களைச் சந்தித்தன.
                'உங்க கல்யாணத்துக்கு முன்னாடி இன்னும் மூனு கல்யாணம் நடக்கனும்'.
                'யார் யாருக்கு?' - புனிதாதான் கேட்டாள்.
                'ஒன்னு உங்கப்பாவுக்கு. தேடு நல்லாத் தேடு. உங்க அம்மாவைவிட நல்லவங்க எத்தனையோ பேர் இருப்பாங்க. விதவையா இருக்கலாம். ஏன் இதுவரைக்கும் கன்னியாகூட யாராவது கல்யாணமாகாது இருப்பாங்க. அவங்களத் தேடி உங்க அப்பாவுக்கு ரெண்டாந்தாரமா ஒரு கல்யாணத்தப் பண்ணனும்'.
                'முனிசிபாலிட்டி ஆபீஸ்ல வேல பாக்கறாரே உங்க அண்ணன். அவருக்கு இன்னொரு பொண்ணத் தேடு. உங்க அண்ணிதான் வேலைக்குப் போகலையே. வேலைக்குப் போற ஒரு பொண்ணத் தேடு. அவருக்கு ஒன்னும் வயசாயிடலையே. நிச்சயமா ஒரு பொண்ணு கெடைக்கும். அவருக்கும் ரெண்டாந்தாரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணிடனும்'.
                'அடுத்ததா, உன் அக்கா, பெங்களூருலதானே இருக்காங்க, அவங்களுக்குக்கூட இன்னும் ஒரு கொழந்த பொறக்கலன்னு கேள்விப்பட்டேன்.  அவ புருஷனுக்கும் ஒரு நல்ல பொண்ணாப் பாத்து ஒரு கல்யாணம் பண்ணிடனும்'.
                'உங்க அப்பா, அண்ணன், உன் மாமா இந்த மூனு பேருக்கும் ரெண்டாம் கல்யாணம் நடக்கும் அதே மேடையில என் புருஷன் உனக்கும் தாலி கட்டுவார்!!! .கே.?'

நிர்மலா கிருட்டினமூர்த்தி, வாலாட்டும் மனசு (சிறுகதைத் தொகுப்பிலிருந்து (விழிச்சுடர்ப் பதிப்பகம், 2008, பக். ) . . .

No comments:

Post a Comment