Tuesday, 30 July 2019

சொர்க்கத்தில் நவபாரதம் காட்சி 1


சொர்க்கத்தில் நவபாரதம்
(சமுதாய அவலங்களைச் சுட்டும்
நகைச்சுவை நாடகம்)

முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தி

காட்சி 1
     நிகழிடம்        :        கைலாயம்
    நிகழ்த்துவோர் :  சிவன், உமை, திருமால், நாரதர், எமன், சித்திரகுப்தன்.

***
                ஏழுவகை வண்ணங்களும் குழைத்துத் தூரிகையால் தீட்டியதுபோல் வானம்.  எங்கும் சில்லென்ற இளங்காற்று.  கற்பகத் தருக்களில் பஞ்சவர்ணக் கிளிகள் படபடவென்று இறக்கைகளை அடித்தவண்ணம் அன்றைய பொழுதினை ஆர்வமாய் எதிர்கொண்டன.  
                நெற்றிக்கண்ணை உடைய சிவன் அன்று தனது மோனத் தவத்திலிருந்து கண்விழித்தான். செய்தியறிந்து வழக்கம்போல் அவன் தரிசனத்திற்காக அனைவரும் கைலாயத்தில் குழுமினர். தேவலோகத்தில் சித்திரசபை கூடியது.  முக்கண்ணன் அனைவரையும் தவிர்த்து எமன், சித்திரகுப்தன் ஆகிய இருவரை மட்டும் தனது ஆலோசனைக் கூடத்தில் சந்திக்குமாறு ஆணையிட்டான்.
                ஆலோசனைக் குழுவின் துணைத்தலைவரான உமையம்மையும் செயலரான வசிட்டரும் உடன் செல்ல சிந்தனை இரேகைகள் நெற்றியில் படர பலத்த யோசனையோடு சிவன் ஆலோசனைக் கூடத்தில் நுழைந்தான். சமூகத்தில்பெரிய ஆட்கள்    கட்டுத்திட்டங்களுக்குள்  அடங்க விரும்புவதில்லை.  தலைவர் எவ்வழி, தொண்டர் அவ்வழிஎன்று சில கைத்தடிகளும் உண்டு.  இங்கே திருமால் என்றும்போல் தம் உரிமையை நிலைநாட்ட ஆலோசனைக் கூடத்தின் வாயிலில் சிவபெருமானை நலம் விசாரித்துக்கொண்டே உள்ளே  சென்றார்.  அவரைத் தொடர்ந்தார் அதிகப்பிரசங்கி நாரதரும்.  புருவத்தை உயர்த்திய சிவன் சூழ்நிலையால் கட்டுண்டவராய் வாளா இருந்துவிட்டார்.
***
சிவன்               :    சித்திரகுப்தா. . . ! உன்மேல் ஏகப்பட்ட     குற்றச்சாட்டுகள்! நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்? வரவர உன் போக்கே சரியில்லை.
சி.கு.   :                               மன்னியுங்கள் பிரபோ!  நீங்கள் இப்படி பொத்தாம் பொதுவாய்ச் சொன்னால் நான்   என்னவென்று எடுத்துக்கொள்வது? என் தவறு என்னவென்று குறிப்பிட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்.
சிவன் :   நீ சொல்வதை வைத்துப் பார்த்தால் நிறைய தவறுகள் செய்து வருகிறாய் என்று தெரிகிறது. சரி சரி! நான் சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன். இப்பொழுதெல்லாம் இறப்புக் கணக்கு தாறுமாறாய் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  நான் மோனத் தவத்தில் இருக்கும்போது என்னை இந்த மக்கள் நிம்மதியாக இருக்கவிடமாட்டேன் என்கிறார்கள்.
சி.கு.   :     இப்படி மக்களின் கூக்குரல் உங்கள் தவத்தைக் கலைப்பதென்பது இப்போதுதானா புதிதாக நிகழ்கிறது?  மார்க்கண்டேயன், சத்தியவான் சாவித்திரி காலத்திலிருந்து இப்படித்தானே நிகழ்ந்து வருகிறது.  அவர்கள் மட்டும் உங்களை நிம்மதியாக உறங்க விட்டார்களா என்ன?
சிவன்  :            சித்திரகுப்தா.  .  . ! (கோபத்தோடு முறைக்க)   
சி.கு.  :               மன்னியுங்கள் மன்னியுங்கள் பிரபோ!   வாய்தவறிச் சொல்லிவிட்டேன். நீங்கள் எப்பொழுது உறங்கினீர்கள்? நீங்கள் எப்பொழுதும் மோனத் தவத்திலன்றோ இருக்கிறீர்கள்!  நீங்கள் உறங்கினால் இந்த பிரபஞ்சம் என்னாவது?  தயவுசெய்து என் பிழையைப் பொறுத்தருளுங்கள் பிரபோ!
 சிவன்              :                               சரி சரி பிழைத்துப்போ! விஷயத்திற்கு வா.  மார்க்கண்டேயன், சாவித்திரியைச் சான்று காட்டுகிறாய். ஆனால், அப்போதெல்லாம் ஓரிருவரின் அபயக் குரல்தான் கேட்டன.  எப்பொழுதேனும் சில நேரங்களில் இரு நாடுகளிடையே கடும்போர் நடைபெறும் பொழுது மட்டும் சுமார் நானூறு ஐநூறு பேர் ஒன்றாகச் சேர்ந்து என்னை உலுக்கி விடுவார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் நிலைமை முற்றிலும் மாறுபட்டு உள்ளது.
சி.கு.   :     நிலைமை எப்படி உள்ளது பிரபோ? சற்றுப்  புரியுமாறு சொல்லுங்களேன்.
சிவன்               :         இப்போதெல்லாம் திடீர் திடீரென்று ஆயிரம், இலட்சம், கோடி என்று மக்களின் கூக்குரல் ஒட்டுமொத்தமாக எழுகிறதே என்ன காரணம்?  அதுவும் இந்நிகழ்ச்சி அடிக்கடி நடக்கிறதே!
சி.கு.   :               ! அதைக் கேட்கிறீர்களா?
சிவன்               :               என்ன இப்படி அலட்சியமாகக் கேட்கிறாய்?
சி.கு.   :               அதெல்லாம் ஒன்றுமில்லை பிரபோ,  முன்பெல்லாம் எம்முடைய தலைவர் பாசக்கயிறை இடதுதோளில் போட்டுக் கொண்டு வலதுகையில் கதாயுதத்தை எடுத்துக்கொண்டு எருமையில் ஏறிச் செல்வார். நாங்களும் ஆளுக்கொரு எருமையில் ஏறிக்கொண்டு மெதுவாகச் செல்வோம். அப்படிச் செல்லும்போதே வழியில் எப்படி அந்த உயிரை உடலிலிருந்து பிரிப்பது என்று ஏதாவது யோசனைகளைப் பரிமாறிக் கொண்டே செல்வோம்.  ஆனால் இப்போது கதையே வேறு.  நாங்கள் செல்வதற்கு முன்பே அவர்கள் இறந்து கிடக்கிறார்கள். இறந்துபோக வேண்டியவர்கள் மட்டுமல்லாது வாழ வேண்டியவர்களும் சேர்ந்து இறந்து கிடக்கிறார்கள் பிரபோ!  இதைப் பற்றி எல்லாம் நாங்கள் எடுத்துச் சொன்னாலும் எம் தலைவர் கண்டு கொள்வதில்லை பிரபோ.  எப்படியோ வேலை முடிந்தால் சரி என்கிறார்.
சிவன்               :               எமன் உயிரை எடுக்காமல் எப்படி உயிர் பிரியும்?   எமனுக்கு மட்டும்தானே உயிரைப் பறிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறேன்.  காலனே! என்ன ஒன்றும் கூறாமல் இருக்கின்றாய்?
எமன் :               நான் மிகவும் நொந்து போயிருக்கிறேன் சர்வேஸ்வரா.
சிவன்               :               ஏன் அப்படிச் சொல்கிறாய்? நான் உதைப்பேன் என்று அறிந்தும் எனக்கே பயப்படாமல் என் பக்தர்களையே நீ அதிகாரம் செய்தவனாயிற்றே!
எமன் :               என் அதிகார மமதை குலைந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன சர்வேஸ்வரா.  பூலோகத்தில் என்னைவிட எமகாதகர்கள் அதிகம்.
சிவன்                               :               அப்படியா?  ஆச்சரியமாக இருக்கிறதே!
எமன் :               ஆம் சர்வேஸ்வரா. நான் வைத்திருப்பது போல் அவர்கள் இவ்வளவு பெரிய கதாயுதத்தையோ பாசக் கயிற்றையோ வைத்துக்கொண்டு அலைவதில்லை. கையில் அடக்கமாக வைத்துக் கொள்ளும் அளவிற்குச் சிறுசிறு குண்டுகள் வைத்திருக்கிறார்கள். துப்பாக்கி முதலான சாதனங்கள் வைத்திருக்கிறார்கள்.  தூரத்தில் இருந்து கொண்டே குண்டுகளை வெடிக்கச் செய்யும்ரிமோட்’, ‘ராக்கெட் லான்ச்சர்போன்ற கருவி களையும் வைத்திருக்கிறார்கள் சர்வேஸ்வரா!
சிவன்               :               !  தேவர்களாகிய நாம் மட்டும் ஏன் இவ்வளவு பின்தங்கி இருக்க வேண்டும்?  நம் தெய்வத் தச்சன் மயனிடம் கூறி இத்தகைய நவீன உபகரணங்களைச் செய்து கொள்ளேன்.
திருமால்        :               மகேஸ்வரா. . .! என்ன இது?  உங்களை அழித்தல் கடவுள் என்று கூறுவது சரிதான்.  பூலோகத்தினர்தான் அர்த்தம் இல்லாமல் செய்கிறார்கள் என்றால் நீங்களுமா?
சிவன்               :               சரிதான்!  காத்தல் கடவுளான உம்மைக் கலக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது தவறுதான்!
திருமால்        :               நான் அதற்காகச் சொல்லவில்லை.  இந்த வெடிகுண்டு கலாச்சாரத்தால் எத்தனை மனித உயிர்கள் அற்பமாய்க் கொல்லப்படுகின்றன என்று தெரியுமா மகேஸ்வரா?  பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், சமூக அக்கறைக் குழுக்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் அரசின் சில செயல்பாடுகளை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறார்கள்.
எமன் :               ஆமாம்  சர்வேஸ்வரா.  சற்றும் எதிர்பாராத விதத்தில் இவ்வாறு வெடிகுண்டுகளுக்கு பலியாகி அகால மரணம் எய்தியவர்களை எண்ணிக்கையில் அடக்க முடியாது.  இதன் காரணமாகத்தான் உயிர் இழந்தோரின் சுற்றத்தார் துக்கம் தாங்காமல் அலறும் ஓலம் அவ்வப்போது உங்கள் செவிகளில் விழுந்து தவத்தைக் கலைக்கிறது.
சிவன்               :               இப்படித் தம் வாழ்நாள் முடியும் முன்பே இறப்பவரின் உயிரை மீண்டும் உடலில் புகுத்தி அவர்களை உயிரோடு மீட்க உன் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்வதுதானே?
எமன் :               அது சாத்தியமில்லை சர்வேஸ்வரா.  இவ்வாறு வெடிகுண்டுகளால் தாக்கப் பட்டவர்கள் உடல் சின்னாபின்னமாகச் சிதைந்து எரிந்து சிறு சிறு தசைப் பிண்டங்கள்தான் எஞ்சும் சர்வேஸ்வரா.
சிவன்               :               ! கேட்பதற்கே கொடுமையாக இருக்கிறதே.  இத்தகைய காரியத்தை மக்கள் எவ்வாறு செய்யத் துணிகிறார்கள்?  அரக்கர்களைக் காட்டிலும் கொடிய மனம் படைத்தவர்களாக அல்லவா இவர்கள் இருக்கிறார்கள்! இத்தகைய கயவர்களை அரசர்கள் தட்டிக்கேட்பதில்லையா?
திருமால்        :               சரியாய்ப் போயிற்று!  நீர் எந்தக் காலத்தில் இருக்கிறீர் மகேஸ்வரா!  அரசர்கள் ஆண்ட காலம் மலையேறி இப்போது மக்களை மக்களே ஆட்சிசெய்யும் முறை வந்துவிட்டது. 
சிவன்               :               அப்படியென்றால் மக்கள் தங்களைக் காத்துக்கொள்வது இன்னும் எளிதாயிற்றே?
திருமால்        :               அதுதான் இல்லை.  இப்பொழுதெல்லாம்தடியெடுத்தவன் தண்டல்காரன்என்று ஆகிவிட்டது. அதுமட்டுமில்லை மகேஸ்வரா,  பூலோகத்து நடைமுறையில் இப்பொழுது எதற்கெடுத்தாலும் ஆயிரத்தெட்டு சட்ட திட்டங்கள்!   
சிவன்               :               சட்டதிட்டங்களை நீ எவ்வாறு தவறு என்று சுட்டுகிறாய்?  எதற்கும் ஓர் ஒழுங்குமுறை இருந்தால் நல்லதுதானே?
நாரதர்             :               நல்லதுதான்.  ஆனால், ஒழுங்கு முறைகள் ஒழுங்காக இருக்கும்வரைதான் ஒழுங்கு ஒழுங்காக இருக்கும். ஒழுங்குமுறைகள் ஒழுங்கற்றிருந்தால் ஒழுங்குமுறைகளை வைத்துக்கொண்டிருப்பதில் என்ன ஒழுங்கு இருக்கமுடியும்?
சிவன்   :                           என்ன நாரதா. . . !   எங்களைக்      குழப்ப ஆரம்பித்துவிட்டாயா?      இதற்காகத்தான் உனக்குப் பேச வாய்ப்புக் கொடுக்காமல் இருந்தேன்.
நாரதர்             :               எம்பெருமானே! நான் குழப்பவில்லை.  ஒருமுறை பூலோகம் சென்றுவிட்டு வாருங்கள்.  அப்பொழுது தெரியும் உண்மையான குழப்பம் என்னவென்று?
சிவன்               :               நீ என்னதான் சொல்ல வருகிறாய்?
நாரதர்             :                               எம்பெருமானே. . . ! பூலோகத்தில் தவறுகள் செய்துவிட்டால் காவல்துறையினரால் வழக்குப் போடப்படுகிறது.  ஆனால் குற்றம் செய்தவர் தமது தரப்பில் சிறப்பாக வாதிடும் வழக்குரைஞர்களை அமர்த்திக் கொண்டு வாதாடித் தப்பித்துக் கொள்ளலாம். 
உமை                 :               ஐயோ! அப்படியென்றால் குற்றம் செய்யாதவர் கதி என்னாவது?
நாரதர்             :               அதோகதிதான் திரிலோக மாதா! பல நேரங்களில் குற்றம் செய்யாதவர்கள் தரப்பு வாதம் சரியான சாட்சிகள் இல்லாமல் வலிமை இழந்துவிடுகிறது. அது மட்டுமா? எம்பெருமானே! அவர்கள் காரணமே இல்லாமல் தண்டனை அனுபவிக்கவும் நேரிடுகிறது.  குற்றவாளிகளால் பாதிக்கப் பட்டவர்கள்அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்என்று நம் மீதுதான் நம்பிக்கை வைத்துக் காலத்தை ஓட்டுகிறார்கள்.
சிவன்               :               குற்றவாளி யார்? குற்றமற்றவர் யார்? என்றுதான் வழக்கறிஞர்களுக்கு நன்றாகத் தெரியுமே!  அப்படி இருக்கும்போது இந்தத் தவறு ஏன் நிகழ்கிறது?
திருமால்        :               பூலோகத்தில் வழக்குரைத்தல் என்பது பெரும்பாலும் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாகக் கருதப்பட்டு வருகிறது. மற்றபடி குற்றவாளிகளைத் தண்டிக்கவும் நியாயத்தை நிலை நிறுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட சட்ட திட்டங்கள் சிலருடைய வாழ்க்கையை ஓட்டுகிற பொருளீட்டும் வழிமுறை ஆகிவிட்டது.
சிவன்               :               இந்த முறையற்ற வழக்கத்தைச் சரி செய்யவே முடியாதா?
நாரதர்             :               ஏன் முடியாது கைலாய வாசா?  எல்லாம் முடியும்.  ஒருவன் குற்றவாளி என்று தெரிந்தும் வாதிடுகிறானே. . . , அந்த வழக்கறிஞனுக்கு என்ன தண்டனை? குற்றவாளியைவிட குற்றம் செய்யத் தூண்டியவன், குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்தவன், பொய்சாட்சி சொன்னவன் ஆகியோருக்குத் தண்டனை உண்டு என்று சட்டம் சொல்கிறது.  அதைப்போன்று குற்றவாளியின் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞனுக்கும் தண்டனை கிடைக்கும் என்ற சட்டம் வந்தால், தெரிந்தே குற்றவாளிக்குத் துணைபோகும் இவ்வழக்கம் தொடருமா என்ன?
திருமால்        :               அது மட்டுமல்ல மகேஸ்வரா! பூலோகத்தில் அரசியல்வாதிகள் எப்படியேனும் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்று தங்கள் கட்சிக்கு உதவும்  தாதாக்களை வளர்த்து விடுகிறார்கள்.  எதிர்க் கட்சிகளுக்குத் தொந்தரவு தருவதற்காகத் தீவிரவாதக் குழுக்களுக்கு மறைமுகமாக ஆதரவு தந்து அவர்களையும் வளர்த்து விடுகிறார்கள்.  இவர்களிடையே மாட்டிக்கொண்டு அப்பாவி மக்கள்தாம் துன்புறுகிறார்கள்.
நாரதர்             :               அப்பாவி மக்கள், அப்பாவி மக்கள் என்று அவர்களையும் அவ்வளவு இலேசாக எண்ணிவிட வேண்டாம்!
உமை                :               மறுபடியும் குழப்ப ஆரம்பித்துவிட்டாயா?
நாரதர்             :               அப்பாவி மக்களும் வாய்ப்புக் கிடைக்கும் போதுஅடப்பாவிஎன்று சொல்ல வைத்து விடுகிறார்கள் அம்பிகையே!
திருமால்        :               நாரதா! சொல்வதைச் சற்றுத் தெளிவாகத்தான் சொல்லேன். . . 
நாரதர்             :               வெடிகுண்டுகளை வெடித்துக் கொலை செய்யும் தீவிரவாதிகள் ஒருபுறம்.  துப்பாக்கி களையும் கத்தி போன்ற ஆயுதங்களையும் வைத்துக் கொலை புரியும் தாதாக்கள் மறுபுறம். இதற்கிடையில் சாதாரண மக்களோவென்றால்வாகனம்என்ற எமன் மூலமாக உயிர்க்கொலை செய்கிறார்கள்.
உமை                :               அதெப்படி நாரதா?
நாரதர்             :               கைலாய வாசினியே! தற்போது பூலோகத்தில் மக்கள்தொகை அதிகமாகப் பெருகிவிட்டது. அதற்கு ஈடாக வாகனப் போக்குவரத்தும் பெருகிவிட்டது.  ஆனாலும் மக்கள், போக்குவரத்து விதிகளை எங்கே ஒழுங்காக அனுசரிக்கிறார்கள்? கண்ணை மூடிக் கொண்டு வெகுவேகமாகச் சாலைகளில் பறக்கிறார்கள். அதனால் தினந்தோறும் தேவையில்லாத விபத்துகள்! மரண அவஸ்தைகள்!
சிவன்               :               ஒரு கன்றின் மீது தன் மகன் அறியாது தேர் ஏற்றிக் கொன்றதற்காகத் ஒரே மகன் என்றும் பாராது அவன் மீது அதே தேரை ஏற்றிக் கொன்று, பசுவிற்கு நீதி வழங்கிய மனுநீதிச் சோழன் வாழ்ந்த பூவுலகிலா இத்தகைய கோர விபத்துகள்? இவை ஆச்சரியத்தையும் மன வேதனையையும் ஏற்படுத்துகின்றனவே!
நாரதர்             :               இதைவிட வேதனைக்குரிய விஷயம்                என்னவென்றால், இவ்வாறு விபத்தில் சிக்கி அடிபட்டவர்களுக்கு மருத்துவர்கள் உடனடிச் சிகிச்சை அளிக்க மறுப்பதுதான்!
உமை                :               கொடுமை! கொடுமை!! ஏன் அப்படி?. . .
நாரதர்             :               இதற்குக் காரணம் அவர்கள் இயற்றி வைத்திருக்கும் சட்டங்கள்தான்! அடிபட்டவர் களைக் காப்பாற்றவேண்டும் என்று நினைப்பவர் முதலில் காவல்துறையில் விபத்து குறித்துப் பதிவு செய்யவேண்டும். பின்னர்தான் அடிபட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும்.  தேவை இல்லாமல் காவல் நிலையத்திற்குச் சென்று அவஸ்தைப்பட வேண்டுமே என்று இரக்க குணமுள்ள பொதுமக்களும் அடிபட்டவர்களைக் கண்டும் காணாததுபோல் சென்றுவிடுகிறார்கள்.
உமை :               சட்டங்களும் விதிமுறைகளும் நலம் பயப்பதாக இருக்க வேண்டுமே அல்லாது இப்படியா முட்டுக் கட்டையாகவும் அபத்தமாகவும் இருப்பது?
நாரதர்             :               சட்டங்களை அவ்வப்போது தனிமனிதனுக்கு ஏதுவாக வளைத்துக் கொள்கிறார்களே அன்றி அனைவருக்கும் பயன்படும் விதமாகக் காலத்திற்கு ஏற்றாற்போல் அச் சட்டங்களை மாற்றி அமைப்பதில் அக்கறை செலுத்துவது இல்லை மகேஸ்வரா!
எமன்                 :               சர்வேஸ்வரா, நான் பூவுலகில் எவ்வளவு துன்பப்படுகிறேன் என்பது தங்களுக்கு இப்பொழுது நன்றாகப் புரிந்திருக்கும்.  இனி, தாங்கள்தான் இந்தச் சிக்கல்களுக்கு நல்லதொரு தீர்வு சொல்ல வேண்டும்.
சிவன்               :               இதுவரை இவ்வாறு தமது வாழ்நாள் முடியாமலேயே உயிர் இழந்த ஆத்மாக்களை என்ன செய்தாய் கூற்றுவா?
எமன்                 :               தங்கள் தவத்தைக் கலைத்துத் தங்கள் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க, அவர் களுக்காகப் புதுநகரம் ஒன்றை உருவாக்கித் தனியாக வைத்துள்ளேன் சர்வேஸ்வரா!
சிவன்               :               நல்ல காரியம் செய்தாய்! அவர்கள் வாழவேண்டிய காலம் வரை அங்கேயே இருக்கட்டும்.  இருந்தாலும் என்னை நீ இதுநாள் வரை கலந்து ஆலோசிக்காது உன் இஷ்டத்திற்கு முடிவெடுத்தது குற்றமே!
எமன் :               மன்னியுங்கள் சர்வேஸ்வரா! தங்கள் நெற்றிக்கண்ணை நினைத்துதான் . . .
உமை :               நாதா, இதற்கு நானொரு வழி சொல்கிறேன்.  இனி நீங்கள் மோனத் தவத்தில் இருக்கும்போது பிரச்சனைகளை என் பார்வைக்குக் கொண்டுவந்து ஆலோசனை பெறச் சொல்லுங்கள்.  நானும் ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர்தானே!  அதனால் எனக்கும் அதிகாரம் உண்டல்லவா?
திருமால்        :                               சிம்ம வாஹினியே!  உனக்கு அதிகாரம் இல்லாமலா?  நீ சிவனின் ஒருபாதி - அதுவும் சரிபாதி ஆயிற்றே ! ! !
உமை                 :                               சீதை மணாளா, சரியாகச் சொன்னீர்! அதனால் இனி நானும் நம் தேவலோகச் சட்ட திட்டங்கள் சிலவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.  அது என்னவென்றால். . .
சிவன்               :                               தேவி. . . இதோ          பார்! நாம் கூட்டம் ஆரம்பித்து வெகுநேரமாகிவிட்டது. வேறு சில பிரச்சனைகளையும் நான் சென்று பார்க்க வேண்டியுள்ளது.  அதனால் நீ கொண்டுவர விழையும் மாற்றங்களைப் பிறகு பரிசீலிப்போம். (உமையம்மையின் முகம் சுருங்குகிறது)
                                (எமனை நோக்கி) 
எமா, எதற்கும் இரண்டு நாட்களில் நீ மக்களின் இறப்புக் கணக்குப் புத்தகங்களோடு என்னை வந்து பார்.  நானும் நீ உருவாக்கி வைத்திருக்கும் புது நரகத்தை - இல்லை இல்லை - நகரத்தை வந்து பார்க்கிறேன்.
எமன்                 :               நன்றி சர்வேஸ்வரா!  நாங்கள் வருகிறோம்.
                                (எமனும் சித்திரகுப்தனும் அங்கிருந்து  வெளியேறுகிறார்கள்)
                                                                          ***

No comments:

Post a Comment