Thursday, 11 July 2019

பெத்த மனம்


பெத்த மனம்
என் மனத்தில் நெருப்பு கனன்று கொண்டிருக்கிறது.  ஏன் என்று கேட்கிறீர்களா? எல்லாம் அவள் செயலால். . . யார் அவள்? என்று கேட்கிறீர்களா? எல்லாம் என் மகள்தான். மகள் மேல் தாய்க்கு இத்தனைக் கோபம் ஆகுமா? இது உங்கள் வினாவாக இருக்கலாம். என்ன செய்வது? என் சூழ்நிலை அப்படி. . .
என்ன சூழ்நிலை என்றா கேட்கிறீர்கள்? அதுதானே பார்த்தேன். அடுத்தவர் வீட்டுக் கதை என்றால் ஆர்வம் தானாக வந்துவிடும்.
கோபப்படாதீர்கள்! ஒரு பேச்சுக்குச் சொன்னேன். உங்களைத் தவறாக எதுவும் நினைக்கவில்லை. அது மட்டுமா? என் புலம்பலைக் கொட்டித் தீர்த்தால்தானே எனக்கும் ஆறுதல் கிடைக்கும். உங்களிடம் சொல்லாமல் நான் வேறு யாரைத் தேடுவது?
கதையைச் சொல் என்கிறீர்களா? இதோ... சொல்கிறேன்.
என் மகளை இப்போதெல்லாம் எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அவளை மறந்துவிட வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்து இப்போதுதான் சிறிதுசிறிதாக மறந்து வருகிறேன். அதற்குள் அவள் கடிதம்...
ஸ்மார்ட் போனும் ஸ்கைபும் வந்துவிட்ட இந்தக் காலத்தில் கடிதமா? ஆச்சரியமாக இருக்கிறதா? என்னையும் என் மகளையும் சத்த கர்நாடகம் என்று நினைத்துவிடாதீர்கள். என் மகள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தன்னிடமுள்ள திறன்பேசியை மாற்றிக்கொண்டே இருப்பாள். அப்படியொரு பைத்தியம். என்னுடன் அவள் இருந்தவரையில் புதிய திறன்பேசி அவள் வாங்கும்போதெல்லாம் பழையது என்னிடம் வந்துவிடும். இதில் என்ன தொல்லையென்றால் அதிலிலுள்ள விஷயங்களை நான் கற்றுமுடிவதற்குள் அடுத்தது வந்துவிடும்.
பிறகேன் அவள் எனக்குக் கடிதம் எழுதினாள்? நான் செல்பேசியில் அவளது எண்ணைப் பார்த்தவுடனேயே நிறுத்திவிடுவேனே. . . அப்படியும் அவள் தொடர்ந்து வேறு வேறு எண்ணிலிருந்து பேச முயன்றாள். அவள் குரலைக் கேட்டவுடன் பொசுக்கென்று நிறுத்திவிடுவேன். அதனால்தான் இப்பொழுது நீண்ட கடிதம் எழுதியிருக்கிறாள்.
அப்படியென்ன அவள்மேல் கோபம் என்றா கேட்கிறீர்கள்?
அவள் அப்பன். . .   அவரை. . .  அவர் என்ன அவர்? அவனை என்றே இனி நான் சொல்லப் போகிறேன்.  அதுதான் என் கணவன் சரியான ஈகோ பிடித்தவன். அவன் சொல்வதுதான் சட்டம். எதிர்த்துப் பேசக் கூடாது. திருமணம் நடந்து சில மாதங்கள்தான் ஒழுங்காக என்னுடன் குடும்பம் நடத்தினான். என் சம்பளம் மட்டும் அவனுக்கு வேண்டும். நான் சொல்லும் யோசனைகள் எவையும் பிடிக்காது. அவன் பெற்றோர், அவன் சுற்றத்தார் மட்டும்தான் மனுஷ ஜன்மங்கள். அவனைப் பொறுத்தவரை என்னைச் சார்ந்தோர் பிராணிவர்க்கம்தான். அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தால் எத்தனை வேண்டா வெறுப்பு. அவனைச் சார்ந்தவர்களை மட்டும் நான் ஓடியோடிக் கவனிக்க வேண்டும். நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில் வேலை செய்தோம். உங்கள் கண்களில் ஒரு கேள்வி தெரிகிறதே! எங்கள் கல்யாணம் நீங்கள் நினைப்பதுபோல் காதல் திருமணம்தான். என்ன செய்ய? காதலித்தபோது அவன் வேறொரு முகமூடி அணிந்திருந்தான்.
அலுவலகத்தில் சம்பளத்தை வாங்கும்போதே பக்கத்திலிருந்து என் கணவன் பிடுங்கிக்கொள்வான். அந்தக்காலத்தில் வங்கிப் பரிவர்த்தனை இல்லையே. மாதத்தின் கடைசி வேலைநாள் தப்பாமல் சம்பள உறையை’ கொடுத்துவிடுவார்கள். சுளையாய் ரூபாய் நோட்டுகளை உறையிலிருந்து எடுத்து எண்ணிப் பார்ப்பதென்னமோ தனி மகிழ்ச்சிதான். இப்போதெல்லாம் சம்பளம் இலட்சங்களில் வந்தாலும் வங்கி மூலமாக வருவதால் மாதாமாதம் அனுபவித்த அந்த மகிழ்ச்சியை இழந்துதான் போனோம்.
கையில் சம்பளத்தை வாங்கியபோதும் அந்த மகிழ்ச்சி ஒரு நிமிடத்திற்கு மேல் எனக்கு வாய்த்ததில்லை. பிறகு மாதம் முழுதும் காபி குடிப்பதற்கும் அவன் கையைத்தான் நான் எதிர்பார்க்க வேண்டும். எனக்கென்று நண்பர்கள், தோழிகள் எவரும் இருக்கக் கூடாது.
அப்படியே அவன் குடிக்கவும் ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாகச் சண்டை வலுத்தது. என் மகள் பத்தாம் வகுப்பு படிக்கும்போது இனி இருவரும் தொடர்ந்து வாழமுடியாது என்றானது. என் மகள் எதிரிலேயே என்னை அடிப்பான். என் மகளைக் கண்டகண்ட வசைச்சொற்களால் புண்படுத்துவான். ‘போதும் படித்தது. காலாகாலத்தில் இவளுக்குத் திருமணம் செய்துவிடப்போகிறேன்’ என்று அச்சுறுத்துவான். ‘முதலில் அப்பாவிடமிருந்து விவாகரத்து வாங்குங்கம்மா’ என்று என்னை வற்புறுத்தியதே என் மகள்தான். அவளது எதிர்காலத்தை - படிப்பை உத்தேசித்து வேறுவழியில்லாமல் விவாகரத்து வாங்கினேன்.
விவாகரத்து வாங்கியபின் நான் பட்ட துன்பங்களைப் பட்டியலிடத்தான் முடியுமா? ஒரே கல்லூரியில் நாங்கள் இருவரும் பணிபுரிந்த அந்தக் காலம் துயரங்களின் உச்ச காலம். வேறு இடத்திற்கு மாற்றல் வாங்கிப்போக என் ஈகோ இடம்தரவில்லை. அவனு’கென்ன நான் அஞ்சுவது?
பணியிடத்தில் அவன் சாக்கிட்டுப் பேசி என்னைத் தாக்குவான். என் கண் எதிரே பிற பெண்களோடு சிரித்துச் சிரித்துப் பேசி என் மனத்தைக் காயப்படுத்துவான். அவர்களுக்குப் பரிசுகளை வாங்கித் தருவான். மெல்ல மெல்ல என் ஈகோ மட்டுமல்ல, என் மனமும் சுக்குநூறானது. என் மௌனப் போராட்டத்திற்கு யாரும் உதவவில்லை. மாறாக மாற்றல் வாங்கி’கொண்டு கண்காணா இடத்திற்குப் போகுமாறு அறிவுரைகளை மட்டும் அவரவர் வழங்கி, தங்கள் அறிவுத்திட்பத்தையும் பெருந்தன்மையையும் புலப்படுத்தி’ கொண்டார்கள். இந்தச் சமுதாயம் எப்பொழுதும் ஆணின் ப’கம்தானே!
வேறு வழியின்றி மேலதிகாரிகளைப் பார்த்து வேறு இடத்திற்கு மாற்றல் வாங்குவதற்குள் நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.
மாலையில் பள்ளிப் பிள்ளைகளுக்குக் கணிதப் பாடம் டியூஷன் எடுத்தும் என் சம்பளத்தைச் சேர்த்து வைத்தும் என் வருமானத்தை அப்படி இப்படி என்று வட்டிக்கு விட்டும் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி என் மகளை மருத்துவம் படிக்க வைத்தேன். அப்போதெல்லாம் ‘அம்மா அம்மா’ என்று உயிரை விடுவாள். அவள் அப்பாவின் பேச்சை எடுத்தாலே கத்துவாள். ‘அவனெல்லாம் ஒரு மனுஷனாம்மா? உன்ன டைவர்ஸ் பண்ண கையோடு வேற கல்யாணம் பண்ணிட்டாரே. எப்படிம்மா அவருக்கு அப்படி மனசு வந்தது?’ என்று வருந்துவாள். ‘அவரோடு இருந்திருந்தால் எவனாவது குடிகாரனுக்கு என்னை வித்திருப்பார். நல்ல வேளை, நீதாம்மா என் தெய்வம். எவ்வளவு சிரமப்பட்டு டாக்டருக்குப் படிக்க வெக்கறே!’ என்று அடிக்கடிக் கண்ணீர்விட்டுக் கரைவாள். அவளைப் பார்த்துப் பார்த்து நான் வைராக்கியத்தோடு வாழ்ந்தேன்.
எல்லாம் டாக்டர் பட்டம் வாங்கும்வரைதான். அவள் டாக்டராகி சமுதாயத்தில் என்னைப் பெருமைப்படுத்துவாள் என்று கனவு கண்டேன். ஆனால் அவளோ என்தலையில் நெருப்பள்ளிப் போட்டாள். அவள் ஒருவனைக் காதலிப்பதாகக் கூறினாள்.
உடனே அவள் காதலுக்கு நான் தடை சொன்னேன் என்று கருதிவிடாதீர்கள். அவள் சொன்ன செய்திதான் என்னைத் திகைக்க வைத்தது. அவளுக்குத் திடீரென்று அவளுடைய அப்பாமேல் பாசம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. இடையில் அவள் அப்பாவை எதேச்சையாகச் சந்தித்திருக்கிறாள். இரண்டாவது மனைவி மூலம் அவருக்குப் பிள்ளை உண்டாகவில்லை. அதனால் தன் மகளோடு பாசப்பிணைப்பை ஏற்படுத்த முனைந்துவிட்டார். அவளுக்குக் கிளினிக் வைத்துத் தருவதாக ஆசை காட்டியுள்ளார். அவளும் அதில் வீழ்ந்தாள்.
என் மகள் என்று சொல்லவே இப்போது நா கூசுகிறது. அவளுடைய காதலன் . . . அவளது அப்பா குறித்துக் கேட்டானாம். அவளது அப்பா முன்னின்று நடத்தினால்தான் அவளைத் திருமணம் செய்துகொள்ள முடியும் என்று கூறிவிட்டானாம். என் மகளும் அதனை என்னிடம் கூறி, ‘அப்பாவிடம் சேர்ந்து வாழேன்’ என்றாள்.
‘அது எப்படி முடியும்?’ என்றேன்.
‘இதுதாம்மா, இந்தப் பிடிவாதம்தான் அப்பாவிற்குப் பிடிக்காமல் போனது... என்னையும் என் அப்பாவையும் பிரித்தது. என் வாழ்க்கையில் அப்பா இல்லாத பெண்ணாக என்னை ஆக்கியது’ என்று அடுக்கினாள்.
பார்த்தீர்களா அவள் சொல்வதை. . . ? நான் பட்ட வேதனைகளைப் பார்த்திருந்தும் இப்போது எப்படிக் கட்சி மாறிவிட்டாள்? என் மனத்தை ஆயிரம் ஊசிகளால் குத்திப் புண்ணாக்கிவிட்டாள்.
அதற்கப்புறம் என்ன நடந்தது தெரியுமா? அப்பாவும் அவளும் ராசியாகிவிட்டார்கள். என்னை அவள் ஒதுக்கிவிட்டாள். தன் காதலனோடு இணையவேண்டும் என்ற சுயநலம். பிரச்சனையை அவனுக்கு விளக்குவதற்கு பதிலாகச் சுயநலமாய் இருந்துவிட்டாள்.
அவள் அப்பா மற்றும் அப்பாவின் இரண்டாம் மனைவியின் தலைமையில் அவள் திருமணம் ஜாம்ஜாம் என்று நடந்தது. நான் மூன்றாவது நபர்போல் திருமணத்திற்குச் சென்று வந்தேன். சாப்பிடக்கூட இல்லை. எல்லோரும் என்னை ஏதோ மூதேவி சென்றதுபோன்று ஓரக்கண்ணால் பார்த்துப் பார்த்து ஜாடை பேசினார்கள். முள்மேல் நிற்பதுபோல் தாலிகட்டுவதைக் கண்ணால் பார்த்துவிட்டு வந்தேன். அன்று முழுக்கக் குமுறிக் குமுறி அழுதேன்.
அதற்குப் பின் அவள் என்னிடம் பேசவோ தொடர்பு கொள்ளவோ இல்லை. அவளும் அவள் கணவனும் மருத்துவப் பணிக்கு அமெரிக்கா போய்விட்டதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். என் நிலைமையைப் பார்த்தீர்களா?
ஒருமாதம் முன்னால்தான் அவளிடமிருந்து குழந்தை பிறக்கப் போகிறது என்று போன் வந்தது. ‘நீ எக்கேடு கெட்டால் என்ன?’ என்று கேட்டுவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டேன். அதனால்தான் அவள் கடிதம் அனுப்பியிருக்கிறாள்.
காலையில் வந்த கடிதத்தைக் கசக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டேன். இப்போது அதனைக் குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்துப் பிரித்துப் படித்துவிட்டு விழித்துக் கொண்டிருக்கிறேன். நான் செய்த தவறு அக் கடிதத்தைச் சுக்குநூறாகக் கிழிக்காமல் விட்டதுதான்.
அவளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதாம். பார்த்துக்கொள்ள அமெரிக்காவில் ஆள் கிடைக்கவில்லையாம். அவள் வேலைக்குப் போக வேண்டுமல்லவா? குழந்தையைப் பார்த்துக்கொள்ள என்னைக் கூப்பிட்டிருக்கிறாள். ஆயா வேலை பார்ப்பதற்காக...
இப்போது என்ன முடிவு எடுப்பது? நீங்களே சொல்லுங்கள். இவ்வளவு ஆங்காரம் பிடித்தவளுக்காக நான் செல்லவேண்டாம் என்பதுதான் உங்களது முடிவாக இருக்கும். அதைத்தான் நான் செய்யவேண்டும் என்று என் அறிவு சொல்கிறது.
ஆனால் மனம் கேட்கவில்லையே ஆயிரம்தான் இருந்தாலும் பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்தானே.
இதோ உடனே புறப்பட்டாக வேண்டும். ஆயா வேலை பார்க்க என்னை அழைப்பாள் என்று நினைத்து முன்பே விசா எடுத்துவைத்தது எவ்வளவு சௌகரியமாகப் போய்விட்டது பார்த்தீர்களா?
*

No comments:

Post a Comment