முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 3
திடீரென்று ஒருநாள் அவள் வயது முப்பது
ஆகிவிட்டதைக் காலண்டர் நினைவுறுத்தியது. அவள் முதிர்கன்னி என்ற
விருதைப் பெற்றாள்.
அதற்குப் பின் வந்த வரன்களெல்லாம்
இரண்டாம் தாரமாகவே அமைந்தன.
'கல்யாணமாகி அண்மையில் மனைவியை இழந்தவன், ஆனால் பிள்ளை என்று எதுவும் இல்லாதவன்'.
'பையனுக்கு அம்பது வயசு, ஒரே பையன், அக்குதொக்கு
இல்ல, எக்கச்சக்கம் சொத்து இருக்கு, கார் பாங்களா என்று
வசதி இருக்கு'.
ஏற்கெனவே கல்யாணமாகி மனைவி இருக்கா, ஆனா வாரிசுன்னு சொல்லிக்க
ஒரு புள்ள இல்ல, எல்லா வசதியும் இருக்கு. மாப்பிள்ளைக்கும் கொஞ்சம் வயசுதான் ஆவுது!'
'நாப்பது வயசுதான் இருக்கும், அவனுக்கு ஒரு பிள்ளைய பெத்துட்டு
அவ பொண்டாட்டி கண்ண மூடிட்டா, பச்சப்
புள்ளய வச்சிக்கிட்டு மவராசன் கஷ்டப் படறான், அரசாங்க உத்தியோகம்'.
-
இப்படிப் பல வரன்கள்.
இவர்கள் யார் தலையிலாவது சுந்தரியைக்
கட்டிவிடவேண்டும் என்று விநாயகம் நெருக்கடி கொடுத்தான்.
'போயும் போயும் இரண்டாந் தாரமா நான் வாக்கப்படுறதா?'
'ஒரு கெழவனுக்கா?'
'எவளோ ஒருத்தி பெத்துப்போட்ட
கொழந்தய என் குழந்தையா நெனச்சி வளக்கணுமா?'
'காரு பங்களா இருந்து
என்ன லாபம்? என்னைக்கும் நான் ரெண்டாந் தாரந்தானே?'
'இதுக்குப்போயா நான் இத்தன நாள்
காத்திருந்தேன்?'
'கொஞ்சம் வசதியா, அழகான புருஷன அடையனுங்கற என்
கனவு நிறைவேறாதா?'
அழுதழுது அவள் தலையணை நனைந்தது.
'அண்ணி. . . ! தயவுசெஞ்சி இந்த மாதிரி எடமெல்லாம்
வேணாம் அண்ணி, நான் ஒங்களுக்குப் பாரமா
இருந்தாச் சொல்லிடுங்க, எங்கயாச்சும் போய்ப் பத்துப்பாத்திரம் தேச்சிப் பொழச்சுக்கறேன். இல்லன்னா ஆறு, கொளம்னு விழுந்து
உயிர மாய்ச்சுக்கறேன்'
'நான் உங்களுக்கென்ன பாதகமாவா
இருக்கேன்? உங்க பிள்ளைங்கள நான்
பாத்துக்கறேன். வீட்டு வேல எல்லாத்தையும் செய்றேன்.
நீங்க ஊத்தற கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு ஒரு
மூலைல கெடக்கறேன். நகை நட்டுன்னு நான்
எதுவும் கேக்க மாட்டேன். ரெண்டாந்தாரமா மட்டும் என்னை ஆக்கிடாதீங்க அண்ணி!' - அண்ணியிடம் புலம்பிக்கொண்டே இருந்தாள்.
கலாவுக்கும் சுந்தரி தன் வீட்டில் இருப்பது
ஒன்றும் பாரமாகத் தெரியவில்லை. அவள்தான் எல்லா வேலைகளையும் செய்கிறாள். அவர்கள் வீட்டிலென்ன எதற்கெடுத்தாலும் மிஷினா இருக்கிறது. இரு குழந்தைகளின் படிப்புச்
செலவிற்கே வரும் வருமானம் போதவில்லை.
அவர்கள் வீட்டில் ஒரு கிரைண்டர் உண்டா?
பிரிட்ஜ் உண்டா? வாஷிங் மெஷின் உண்டா?
ஒரே ஒரு ஹைதர்
அலி காலத்து மிக்ஸிதான் இருக்கிறது. அதில் சட்னி அரைத்தால் மசிந்தும் மசியாமல் இருக்கும். அதன் மூடிகூட வீறல்
விட்டிருக்கிறது. அதை மாற்றலாம் என்றால்
'இந்தக் கம்பெனி இப்ப வர்றதே இல்லீங்க!
இதுக்கு பார்ட்ஸ்ஸெல்லாம் கெடைக்காது. பேசாம தூக்கிப் போட்டுட்டு புதுசா வாங்கிடுங்க!' என்று கேலி செய்கிறான் ரிப்பேர்
கடைக்காரன்.
அவர்கள் வீட்டில் நவீன கருவி என்று
எடுத்துக் கொண்டால் வண்ணத் தொலைக்காட்சிப்
பெட்டி ஒன்று, அயர்ன் பாக்ஸ் ஒன்று, அவ்வளவே!
அவர்கள் வீட்டில் புழுங்கல் அரிசியை வடித்துச் சாப்பிட்டால்தான் அனைவருக்கும் ஒத்துக்கொள்ளும். கஞ்சியை வடிக்காமல் சாப்பிட்டால் வயிறு 'கடபுடா'தான். அதனால் அவர்கள் வீட்டில் சாதாரண பிரஷர் குக்கர் கூட அனாவசியமாகப்பட்டது.
எந்தவித வசதியும் இல்லாமல் கலா ஒருத்தி மட்டும்
வீட்டு வேலைகள் அனைத்தையும் எப்படிச் சமாளிப்பாள்!
துணிகளைத் துவைப்பது, அயர்ன் செய்வது, வீடு வாசல் பெருக்கிக்
கோலம் போடுவது, காய்கறி வாங்கி வருவது, கீரையை ஆய்வது, இட்லிக்கு மாவாட்டுவது என்று எல்லா வேலைகளையும் சுந்தரியே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். அதனால்தான் தொலைக்
காட்சியில் அடுக்கடுக்காக வரும் மெகா சீரியல்களை ஒரு
சுற்றுவர முடிந்தது
கலாவால்!
பிளஸ் டூ வரை
படித்திருப்பதால் குழந்தைகள் படிப்பையும் சுந்தரியே மேற்பார்வை பார்த்துக் கொண்டாள்.
இப்படிப்பட்ட நிலையில் சுந்தரியின் சேவையை இழந்துவிட கலாவுக்குச் சிறிதும் விருப்பம் இல்லை.
சுந்தரியும் தன் திருமணத்தைப் பற்றிய
கவலையை வெளிப்படுத்தாமல் இருந்ததால் அண்ணிக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் போனது.
விநாயகத்துக்குத்தான் யாரேனும் தன்னைப் பார்த்துத் 'தங்கச்சிக்கு இன்னும் கல்யாணம் பண்ணலையா? வயசாயிக்கிட்டே போகுதேப்பா' என்று கேட்கும்போது மனசு உறுத்தியது.
'அப்பன் ஆத்தா இருந்திருந்தா இந்நேரத்துக்குக் கல்யாணம் ஆகி நாலு கொழந்தயும்
பெத்திருப்பா' என்று அவர்கள் தெருவிலிருக்கும் ஒரு பாட்டி விநாயகத்தைப்
பார்க்கும் போதெல்லாம் வியாக்கியானம் செய்து கொண்டிருப்பாள்.
'சுந்தரிதான் கல்யாணப் பேச்ச எடுத்தாலே மொகத்தச் சுளிக்கறாளே! நான் என்ன செய்யட்டும்?'
என்று தன் மனத்திற்குச் சமாதானம்
கூறிக்கொண்டான் விநாயகம்.
சுந்தரிக்கு வீட்டு வேலைகள் செய்வதிலும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதிலும் நேரம் போனது.
ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சித்
தொடர் களையும் திரைப்படங்களையும் மியூசிக் சேனலில் அழகான கதாநாயகனும் அழகிய கதாநாயகியும் கட்டிப் பிடித்து ஆடும் நடனங்களையும் பார்த்துவிட்டு
இரவுநேரக் கனவுலகில் வாழ்வதில் ஒரு சுகம் கண்டாள்
சுந்தரி.
'எனக்கென ஒருவன் இதுவரை பிறக்காமலா இருப்பான்? அவனைத் நான்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். நிச்சயமாகக் கண்டுபிடித்துவிடலாம்' என்று அவள் நம்பவும் செய்தாள்.
(தொடரும்)
No comments:
Post a Comment