முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 4
திருச்சியில்
நெருங்கிய சொந்தக்காரர் ஒருவர் வீட்டுக் கல்யாணத்துக்கு முன்னதாகவே போகவேண்டி இருந்தது.
பெரும்பாலும் சுந்தரி இதுபோன்ற திருமணம், வளைகாப்பு போன்ற வைபவங்களுக்குச் செல்ல விரும்புவதில்லை. ஆளாளுக்குத் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டுக் குடைவார்கள். எதற்கு வம்பு என்று அவள் இப்படிப்பட்ட விசேஷங்களுக்குப்
போகாமல் 'வீட்டைப் பாத்துக்கறேன்' என்று தவிர்த்துவிடுவாள்.
கலாவுக்கும் விநாயகத்துக்கும் தர்மசங்கடத்தைத் தவிர்க்கவும் இது சௌகரியமாக
இருந்தது.
ஆனால் இப்போது கல்யாணம்
திருச்சியில். சென்றுவர இரண்டு, மூன்று நாட்கள் ஆகும். சுந்தரியை மட்டும் தனியாகச் சென்னையில் விட்டுவிட்டுப் போகமுடியாது.
காலம் கெட்டுக் கிடப்பதால் சுந்தரியையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.
எம்.எஸ்.வி.
கல்வி அறக்கட்டளையின் தாளாளர் சோமசுந்தரம் சென்னையிலிருந்து திருமணத்திற்குக் காரில் வந்திருந்தார். பெரிய பணக்காரர். உதவும் மனப்பான்மை கொண்டவர். சென்னையிலிருந்த அவரது கல்வி அறக்கட்டளையில் ஆரம்பப் பள்ளி தொடங்கி மேல்நிலைப்பள்ளி வரை அனைத்தும் பக்கம்
பக்கமாக இருந்தன. அவர் விநாயகத்துக்குத் தூரத்துச்
சொந்தம்.
விநாயகம் தனக்கு எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் நண்பர்களிடம் உதவி கேட்பானேயன்றி சுற்றத்தாரிடம்
கையேந்த மாட்டான்.
திருமணத்தில் சோமசுந்தரம் விநாயகத்தைப் பார்த்து நலம் விசாரித்தார்.
'கார்ல நான் மட்டுந்தான் வந்திருக்கேன்.
நீயும் பொண்டாட்டி கொழந்தைங்களோட என்கூடவே கார்ல வந்திடு'.
ஊருக்குத் திரும்பும்போது அவர்களைத் தன்னுடன் காரிலேயே வருமாறு வற்புறுத்தினார் சோமசுந்தரம்.
விநாயகம் சுய கௌரவம் பார்ப்பவன்.
ஏதேதோ காரணங்களைக் காட்டி மறுத்தான். சோமசுந்தரம் விடுவதாக இல்லை. கல்யாணம் முடிந்ததும் அவர்களை வற்புறுத்திக் காரில் ஏற்றிக்கொண்டார்.
பயணத்திடையே சுந்தரி திருமணமாகாமல் இருப்பது பற்றிக் கவலைப்பட்டான் விநாயகம். பிளஸ் டூ வரை மட்டுமே
தன்னால் அவளைப் படிக்கவைக்க முடிந்தது என்று வருந்தினான். அவள் வீட்டிலேயே இருப்பதைவிட
எங்காகிலும் வேலைக்குப் போனால் அவளுக்குப் பொழுது போக்காக இருக்கும் என்றான்.
சோமசுந்தரத்திற்குச் சொந்தமான மேல்நிலைப் பள்ளியில் இரண்டு மூன்று நாட்கள் முன்னதாக ஒரு அட்டெண்டர் வேலை
காலியானது. இன்னும் யாரையும் அவர் நியமிக்கவில்லை. பெரும்பாலும்
அவர் நிறுவனங்களில் தனக்குத் தெரிந்தவர்களையே பணியில் அமர்த்துவார். அவர்களுக்கும் தன்னாலான உதவி செய்தது போலிருக்கும்.
அவர்களை அன்பு என்னும் கட்டுப்பாட்டிலும் வைக்கலாம். அதுவும் பெண்களாக இருந்தால் செருப்பாகத் தேய்ந்து உழைப்பார்கள்.
சோமசுந்தரம் யோசித்தார். சுந்தரிக்கு அந்த வேலையைத் தருவதாகச்
சொன்னார்.
தலைமையாசிரியருக்கு மட்டும் பணிபுரியும் அட்டெண்டர் வேலை. அவர் சொல்லும் வேலைகளை
முடிக்க வேண்டும். அவர் அறையைத் தூய்மையாக
வைத்துக்கொள்ள வேண்டும்.
சமயத்தில் அவர் பள்ளியில் இல்லை
என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்களிடம் என்ன? ஏது? என்று கேட்டுவிட்டு
அதற்கேற்ப சரியான பதிலளிக்க வேண்டும்.
எப்போதேனும் தலைமையாசிரியரைப் பார்க்க அதிகாரிகள், அந்தஸ்தில் பெரியவர்கள் யாரேனும்
வந்தால் அவர்களுக்கு டீ, காபி, பிஸ்கட்
என்று தட்டில் வைத்து உபசரிக்க வேண்டும். அவற்றை வெளியில்சென்று வாங்கிவர வேறு பியூன்கள் இருந்தனர்.
எனவே வெளிவேலை இல்லை. சம்பளம் ஆயிரம் ரூபாய்.
தலைமையாசிரியருக்கென்று ஒரு ரெஸ்பெக்ட் இருக்கிறது
என்பதற்காக இப்படி ஓர் ஏற்பாடு செய்திருந்தார்
சோமசுந்தரம்.
இதுவரை ஒரு வயதான மூதாட்டிதான்
அப்பணியில் இருந்தார். அவரும் சொந்தம்தான். அவருக்கு அண்மையில் உடம்பு முடியாமல் போய்விட்டது.
விஷயத்தைச் சொன்னார் சோமசுந்தரம். விநாயகம் தன் தங்கைக்கு ஒரு
வழி பிறந்தது என்று மகிழ்ந்தான். பள்ளியும் பேருந்தில் போய்வரும் தூரத்தில் இருந்தது.
சுந்தரி வேலைக்குப் போய்விட்டால் வீட்டு வேலைகளை யார் பார்ப்பது என்று
கலா யோசித்தாள்.
எல்லா வேலைகளையும் ஓயாமல்
செய்துசெய்து அலுத்துவிட்டது. எப்போதும் வீட்டிலேயே அடைந்து கிடப்பதும் சுந்தரிக்கு இப்போதெல்லாம் கஷ்டமாக இருந்தது.
அண்ணி வேலைக்குப் போகவேண்டாம்
என்று கூறிவிட்டால் தன்னால் மறுத்துப்பேச முடியாது.
தான் தேடிக்கொண்டிருக்கும் கதாநாயகன் அங்கே
கூட இருக்கலாம். வீட்டிலேயே இருந்தால் தன் கனவு நாயகனை
எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது?
'நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க அண்ணி! நான் காலையிலேயே எழுந்து
எல்லா வேலையும் முடிச்சுட்டு வேலைக்குப் போறேன். அத்தோடு
மாசம் ஆயிரம் ரூபா வர்ரது நமக்கு
லாபந்தானே' - வேகமாகச் சொன்னாள் சுந்தரி.
ஆயிரம் ரூபாய் வருமானம் வரும் என்பதால் வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொள்ளலாம். மெதுமெதுவாக கிரைண்டர், பிரிட்ஜ் என்று சாமான்களை வாங்கிவிட்டால் வேலைப்பளுவும் குறையும்; வீட்டில் சுந்தரியின் வருமானத்தில் சாமான்களையும் சேர்த்துவிடலாம்; கொஞ்சம் காசும் பார்க்கலாம் என்று கலா கணக்குப் போட்டாள்.
'அதுக்கென்னம்மா! தாராளமாப் போ! எப்படியோ நீ
சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும் . . . ! கலா
திருப்தியோடு தலையாட்டினாள்.
அடுத்த வாரமே நல்ல நாள் பார்த்து
வேலையில் சேர்ந்தாள் சுந்தரி. புது வாழ்க்கை அவளுக்குப்
பிடித்துப் போனது.
(தொடரும்)
No comments:
Post a Comment