Tuesday 16 July 2019

காமராசர்




படிக்காத மேதை 
வயிற்றுப் பசி தீராமல்
அறிவுப் பசி எடுக்காது
என்ற கல்வி விதி கண்டவர்!

பரிந்துரைக் கடிதத்தோடு வந்த 
விண்ணப்பங்களை 
ஒதுக்கி விட்டு 
படிப்பறிவில்லா 
ஒடுக்கப்பட்ட 
குப்பனுக்கும் சுப்பனுக்கும் 
பிறந்த
ஏழை மாணவர்க்கு
மருத்துவப் படிப்பை
முதல்வர் ஒதுக்கீட்டில் 
ஒதுக்கிய உத்தமர்!

அரசியல் பணி என்பது 
பதவிகளைப் பற்றிக்கொள்வது
என்னும் பாமரத்தனத்தை
ஒதுக்கி விட்டு 
திறமை மிக்கவரைப்
பதவியேற்றிய 
சாணக்கியர்!

பதவிக்கு வந்தவுடன் 
எஸ்டேட்களையும்
புறம்போக்கு நிலங்களையும்
காடுகளையும்
கடற்கரையையும்
பினாமிகள் பெயரில்
வளைத்துப் போடும்
தலைவர்கள் மத்தியில்
தன் வீட்டுக்கு 
அளித்த 
குடிநீர் இணைப்பைத் 
துண்டிக்கச் செய்த
நேர்மைச் செம்மல்!

முரசு முழங்கும் 
முதல்வர் ஊர்தியின்
தலைக்கிரீடத்தை 
இறக்கிவைத்து
ஒற்றை மகிழுந்தில்
அலட்டிக் கொள்ளாமல் 
அலுவலகப் பணியாற்றிய
மக்கள் சேவகர்!

சிகரங்களை ஒப்பிடும்போதுதான்
எவரெஸ்டின் உயர்ச்சி 
தெரிவதுபோல்
இன்றைய 
அரசியல் தாதாக்களைக்
காணும்போதுதான்
காமராசரின் 
செம்மாந்த உயரம்
கற்பனைக்கு எட்டாதது

என்பதைக் 
கண்டுகொள்ள முடிகிறது!
- ஔவை நிர்மலா



kamarajar க்கான பட முடிவு








No comments:

Post a Comment