Tuesday, 16 July 2019

அமுதகவி சாயபு மரைக்காயர்


அமுதகவி சாயபு மரைக்காயர்
            காரைக்கால் இலக்கிய உலகில் தடம் பதித்த காரைக்கால் அம்மையாருக்குப் பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இசைத்தமிழ் வளர்த்த பெருமை இசுலாமியப் புலவராகிய அமுதகவி சாயபு மரைக்காயர் அவர்களுக்கு உண்டு. இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழ் வளர்த்த காரை இறையடியான், தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ்மாமணி சாயபு மரைக்காயர் இருவரும் அமுதகவி சாயபு மரைக்காயரின் வழித்தோன்றல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமுதகவியாரின் மகளார் பாத்திமா அம்மாள் ஆவார்.
பிறப்பும் இளமையும்
            அமுதகவி சாயபு மரைக்காயர் அகமது லெப்பை மரைக்காயருக்கும் ஆயிஷா அம்மாளுக்கும் கி.பி. 1878இல் பிறந்தார். வேலூரில் மார்க்கக் கல்வி பயின்று மார்க்க அறிஞரானார். முகம்மது மஸ்தான் புலவரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ், அரபு, பார்சி, மலாய் ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். இசையிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். இசைப்பாடல்கள் பலவற்றை இராகம், தாளக் குறிப்புகளோடு இயற்றி வெளியிட்டுள்ளார். அதனால் அமுதகவி என்று பாராட்டப்பெற்றார். தமிழ், அரபு, மலாய் ஆகிய மொழிகளில் சுமார் 550 நூல்கள் அடங்கிய நூலகமும் வீட்டில் வைத்திருந்தார். சித்த மருத்துவம், யுனானி மருத்துவம் போன்றவற்றிலும் சிறந்தவராகத் திகழ்ந்தார்.
வள்ளண்மை
            அமுதகவியார் சிங்கப்பூரில் வணிகம் செய்து பெரும்பொருள் ஈட்டினார். காரைக்கால் திரும்பிய பிறகு தம்மைச் சார்ந்த புலவர்களின் வறுமையைப் போக்கும் வள்ளலாகவும் திகழ்ந்தார். அவர் காலத்தில் பொறையாறைச் சேர்ந்த மு.செ. சுல்தான் அப்துல்காதர் அவர்கள் அமுதகவி பஞ்சகம் ஒன்றைப் பாடிச் சிறப்பித்துள்ளார். அவர்,
விண்டாய்க் கொடைகொடுத்த வித்தகனார் மார்க்கநெறி
கண்டாம் அமுதகவி கண்டீரே
என்று போற்றுகிறார்.
நிலவள மோங்கி நீர்வளம் பெருகிப்
            பலவளம் நிறைந்து பண்பினிற் சிறந்த
கலைவளப் புலவர் போற்றுங் காரையில்
            நிலைவளச் செல்வன் நிறைவளக் கல்வியின்
அமுதகவி சாயபு மரைக்காயர்
            தமையடுத் தவரைத் தாங்குப காரன்
என்று காரைக்கால் பெரும்புலவர் கோ. மாரியப்ப நாவலர் பாராட்டுகிறார்.
சமய இலக்கியப் பங்களிப்பு
            அமுதகவியார் இஸ்லாம் மார்க்கம் சார்ந்த பன்னிரண்டு நூல்களை இயற்றியுள்ளார். அவற்றை வெளியிட உதவியவர்கள் மீது வாழ்த்துப் பாக்களை இயற்றி அவற்றை அந்நூலில் இடம்பெறச்செய்துள்ளமை அவருடைய நன்றியுணர்வை வெளிப்படுத்தும். மேலும் அவர் வெளியிட்ட நூல்களை விற்பனை செய்யாமல், நூல் வேண்டுவோர் இனாமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்ற குறிப்பையும் நூலில் இடம்பெறச்செய்து நூல்களை இலவசமாக வழங்கியுள்ளார்.
மஹ்பூபு பரபதக் கீர்த்தனம்
            இவருடைய முதல் நூலாகிய மஹ்பூபு பரபதக் கீர்த்தனம் 1911இல் சிங்கப்பூரில் பதிப்பிக்கப்பெற்றது. 168 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் இறைவனையும் இறைத் தூதரையும் இறையடியார்களையும் புகழ்கின்ற 103 கீர்த்தனைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
            இந்நூலில் நபிநாயகத்தின் பேரில் பதங்களுடன் 26 கீர்த்தனங்களை அமுதகவியார் இயற்றியுள்ளார். இமாம்ஹசன் ஹுசைன் றலியல்லாஹு அன்ஹுமா மீது குறள் வெண்பா, பஞ்சரத்ன வெண்பா ஆகியவற்றுடன் 5 கீர்த்தனங்களையும் குத்துபு நாயகத்தின் பேரில் பதங்களுடன் 14 கீர்த்தனங்களையும் சுல்தானுல் ஆரிபு ரலியல்லாஹு அன்ஹு செய்யி தகுமதுல் கபீர்றபாஇ அவர்கள் பேரில் விருத்தத்துடன் 9 கீர்த்தனங்களையும் குத்துபு றப்பானி அபூல்ஹஸன் அலியிஷ்ஷாதுலி ரஹ்மஹுல்லாகு பேரில் விருத்தத்துடன் 3 கீர்த்தனங்களையும் நாகூர் குத்துபு ஷாஹில் ஹமீதப்துல் காதிறு மாணிக்கப்பூரி ஆண்டவர்கள் பேரில் குறள் வெண்பா, பஞ்சரத்தினம் ஆகியவற்றுடன் 6 கீர்த்தனங்களையும் ஹலறத்து செய்யிதினா ஹாஜி ஷாஃஅலி இமாம் திவான் மஸ்த்தான் செய்யிது தாவூது புகாரி ஒலியுல்லா அவர்கள் மீது பஞ்சரத்தினத்துடன் 7 கீர்த்தனங்களையும், திருமலைராயன் பட்டணத்தில் ஹலறத்து செய்யிது அப்துர் ரஹ்மான் சாஹிபு வொலியுள்ளலா பேரில் 2 கீர்த்தனங்களையும் இயற்றியுள்ளார்.
            சிங்கைநகர் ஹலறத்து செய்யிது ஹபீபுநூஹு வொலியுல்லா, பகுதாது செய்யிது முஹம்மது றஷீதுல் காதிரி மவுலானா, திருச்சி ஹலறத்து ஷாஹ் ஒலியுல்லா சாஹிபு, திருமங்கலக்குடி ஹலறத்து மவுலா அபூபக்கர் ஒலியுல்லா, பாசிப்பட்டிணம் ஹலறத்து நெய்னா முகம்மது ஒலியுல்லா, முத்துப்பேட்டை ஹலறத்து செய்கு தாவூதொலியுல்லா ஆகியோர் பேரில் தலா ஒரு கீர்த்தனம் பாடப்பெற்றுள்ளது. ஹக்கு பேரில் முனாஜாத்து விருத்தத்துடன் 20 கீர்த்தனங்கள் பாடப்பெற்றுள்ளன. இந்நூலில் முனாஜாத்துப் பதிகமும் இறுதியில் அமைந்துள்ளது. 103 கீர்த்தனங்களைத் தவிர இறைத்தூதர்களின் மீது பல்வேறு பாவகைகளில் அமைந்த போற்றிப் பாடல்களும் பாடப்பெற்றுள்ளன.
கற்பகமே ஞானக்கடலே நிராமயத்
தற்பர னின்றூதே சமையோட்சப் பொற்பூச்
சிதம்பரவு மிதம்பரவுந் திகழ்பரவும் புகழ்பரவுஞ்
சிதக்குர் றசூலே தினம் (ப.28)
என்னும் பின்முடுகு வெண்பாப் பாடல் நபியவர்களைப் போற்றிப் பரவுகிறது.
சந்தானந் தந்தாளுஞ் சாபல்ய நாயகமே
செந்தா ளருளித் தின்மடியேன்
கோழை யகற்றுமென் கோமான் முகம்மதுவே
ஏழைக் கருள்செய் வீரே (ப.31)
என்னும் சவலை வெண்பாவில் அமைந்த பாடல் நபிகள் நாயகத்தைத் துதிப்பதாய் அமைந்துள்ளது.
தேமா வனந்திகழுஞ் செல்வபகு தாதூர்வாழ்
கோமான் முகியித்தீன் குத்பவர்கா ணம்மானை
கோமான் முகியித்தீன் குத்பவரே யாமாயின்
ஈமா நிலைகாட்டும் ரட்சகரோ வம்மானை
ஈமா நிலைகாட்டும் ரட்சகரே யம்மானை (ப.52)
என்னும் பாடல் குத்துபு நாயகத்தின் புகழை அம்மானை என்னும் இலக்கிய வடிவில் எடுத்தியம்பக் காணலாம்.
மானமுத்து ஞானமுத்து மன்னர்மன்னர் போற்றுமுத்து
வானமுத்து தீனர்முத்து வாய்மைமுத்து தூய்மைமுத்து
கோனமுத்து தானமுத்து குத்பொலிகட் காணிமுத்து
மோனமுத்து வேதமுத்து முகியித்தீன்நன் னாதர்முத்தே (ப.52)
என்னும் இன்னிசையில் அமைந்த பாடலும் குத்துபுநாயகத்தின் பெருமையை எடுத்துரைக்கிறது.
கப்படா சாஹிபு ஆரிபு பில்லா கீர்த்தனப் புகழ்பாக்கள்
            கப்படா சாஹிபு ஆரிபு பில்லா கீர்த்தனப் புகழ்பாக்கள் என்னும் நூலும் கீர்த்தனங்களைக் கொண்டிலங்குகிறது. இந்நூல் 1930இல் காரைக்காலில் வெளியிடப்பெற்றது.
            இது காரைக்காலில் சமாதி அடைந்த கப்படா சாஹிபு ஆரிபு பில்லாஹ் அவர்கள் மீது பாடப்பெற்றதாகும்.
கழனிக் கரையுள் சமாதி - வெகு
            கால மறைந்திருந்தீர் கண்டுகொள்ளாது
உழவன் கரைவெட்டும் போது - அவன்
            உணரவெட்டாதே யென்றும் உரைத்துங் கேளாது
வெட்டதன் காலில்பட்டு விழுந்தான் உதிரஞ்சிந்த
            துட்டந் துயரந் தீர்த்தீர் கப்படா சாஹிபே (ப.2)
என்று கப்படா சாஹிபுவின் சமாதி கண்டுபிடிக்கப்பட்ட சூழலையும் தம் கீர்த்தனத்தில் ஆசிரியர் பதிவுசெய்கிறார். இந்நூலில் நான்கு கீர்த்தனங்கள் அமைந்துள்ளன.
காரை மஸ்தான் காரணக் கீர்த்தனப்பா
            வரலாற்றைக் கூறும் கீர்த்தனப்பாவால் அமைந்துள்ள காரை மஸ்தான் காரணக் கீர்த்தனப்பா செப்டம்பர் 1938இல் பதிப்பிக்கப்பெற்றது. வஸீலாப் பதிகம், பஞ்சரத்தினம் முதலான வற்றுடன் ஏழு கீர்த்தனங்கள் இந்நூலில் அடங்கியுள்ளன.
வேதியன் பெருநோயைத் தீர்த்தீர் - ஒரு
            வேந்தனின் கும்பந் துலைத்தீர்
சோதிபெரும் ஷுஹூதில் தணித்தீர் - நித்யன்
            சுடர்ஞானக் கெங்கையில் குளித்தீர்
ஓதும் சாஹிபு மரைக்கானே - நிதம்
            உகந்து அருள்புரியுங் கோனே - பொல்லா
தீதுகளைப் போக்கிடும் மோனே - காரைத்
            திகழ்ந்திட வாழும் மஸ்தானே (ப. 8)
என்று காரை மஸ்தானின் அருட்செயல்களைச் சுட்டிச் செல்கிறா£ ஆசிரியர்.
காஜா முஈய்னுத்தீன் ஜிஸ்தி (ரலி) ஜீவிய சரித காரணப்பா
            காஜா முஈய்னுத்தீன் ஜிஸ்தி (ரலி) ஜீவிய சரித காரணப்பா என்னும் நூல் அஜ்மீரில் வாழ்ந்த முஈனுத்தீன் அவர்களின் வரலாறாக 462 நேரிசை ஆசிரியப்பா அடிகளில் அமைந்துள்ளது. இதுவும் 1938 அக்டோபரில் வெளியிடப் பெற்றது. முஈனிய்யா தோத்திரம் மும்மணி, முஈனிய்யா முனாஜாத்துப் பதிகம், பஞ்சரத்தினக் கலிவிருத்தம், முஈனிய்யா கீர்த்தனங்கள் (6) முதலியனவும் இந்நூலை அணிசெய்கின்றன.
முத்தலம் போற்றிடும் மெய்ஞான சற்குருவாய்
இத்தலம் வந்த இறையொலியே - மெத்தலயீ
புற்றுத் தினம்வருத்தும் பையலின் நல்குரவை
முற்றும் அகற்றியருள் வீர் (ப.22)
என்று வேண்டுகிறார் ஆசிரியர்.
உபதேசக் கீர்த்தனம்
            நிலையாமையை வலியுறுத்தும் அறிவுரைகள் அடங்கிய உபதேசக் கீர்த்தனம் என்னும் நூல் 1939இல் வெளியிடப்பெற்றது. நேரிசை வெண்பா, நேரிசை யாசிரியப்பா, கலி விருத்தம், ஆனந்தக் களிப்பு எனப் பலவும் விரவிப் பாடப்பெற்ற நூலாகும். கோ. மாரியப்ப நாவலரின் பதிநான்குசீர்ச் சந்த ஆசிரிய விருத்தத்தில் அமைந்த சாற்றுக்கவியுடன் இந்நூல் தொடங்குகிறது.
மரணம் நம் வாழ்விற்கு முரணாக நிற்குது
            மகிழ்ச்சியே துனக்கிந்த மகிதலமீது
தருணம்பார்த் துன்மீது தாவிடும்போது
            தற்காக்க எவருண்டு தரணியின்மீது
கருணை நிறைந்தஆதி இறைவனல்லாது
            காப்பதற் கெவருக்கும் இயலாத போது
வருஷமும் மாதங்களும் வாரமுந் திகதிகளும்
            வந்து எச்சரிக்குது அறிந்துணர்மின் (ப. 3)
என்னும் இந்துஸ்தானி மெட்டில் அமைந்த பாடல் உலக வாழ்க்கையில் மக்கள் செய்யவேண்டிய ஆன்மீகத் தேடலை முன்னிறுத்துகிறது. 25 பாடல்களைக் கொண்ட ஆனந்தக் களிப்பு,
மண்டு மனைகளும் தீது - இனிய
பெண்டுப் பிள்ளைகளும் பிரபல்ய வாது
பண்டு இருந்தோர்க ளேது - கூடக்
கொண்டு போனார்களோ கூறுஇப் போது (1)
என்று உலக நிலையாமையைத் தௌ;ளிதின் முன்னிறுத்துகிறது.
கெட்ட வீச்சமுள்ள உடலே - அதை
எட்டிப் பார்த்தாலெங்கும் மலமுள்ள திடலே
விட்டுயிர் போனால் முட்படலே - அது
கட்டிற் குதவாத கடுநாற்றக் குடலே (6)
என்று யாக்கையின் தன்மையைத் தோலுரித்துக் காட்டுகிறார்.
நோன்புவை ஜக்காத்தும்  கொடுத்து - மன
            சோம்ப லில்லாது ஹஜ்ஜையும் முடித்து
பாம்பனி புலீசைக் கடுத்து - பய
            காம்பரின் சொல்லைப் பொருத்தமாய் எடுத்து
நல்லஷு ஹூதெனும் யாகம் - அதை
            அல்லும் பகலும் புரிவதே யோகம்
சொல்லும் கலிமாவே ஏகம் - உல
            கெல்லாம் அவனுக்குள் ளடங்கிய பாகம் (11, 12)
என்று இஸ்லாமியர் தம் வாழ்நாளில் மேற்கொள்ளவேண்டிய நெறிகளைக் குறிப்பிடுகிறார்.
            நேரிசை வெண்பாவில் அமைந்த அதிகுணன்பால் வேண்டும் முனாஜாத்துப் பதிகம், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அமைந்த திருநபி முனாஜாத்துப் பதிகம், அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அமைந்த குருமணி முனாஜாத்து பஞ்சரத்தினம், கஞ்சவாய் முனாஜாத்து பஞ்சரத்தினம் ஆகியனவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 17.11.1937 அன்று மறைந்த செ.மு. ஹாஜி முகம்மது கௌது மரைக்காயர் பேரில் இரட்டையாசிரிய விருத்தத்தில் அமைந்த சரமகவியும் பின் அட்டையின் உட்புறம் அச்சிடப்பெற்றுள்ளது.
மான்மியப் பா
            1939 செப்டம்பரில் மதார் (ரலி) ஜீவிய சரித மான்மியப் பாவையும் இயற்றி வெளியிட்டுள்ளார் அமுதகவியார். இந்நூல் 281 நிலைமண்டில ஆசிரியப்பா அடிகளில் அமைந்த மக்கன்பூரில் தோன்றிய குத்பு மதாரின் வரலாறாகத் திகழ்கிறது.  நிரையசைக் கட்டளைக் கலித்துறையில் அமைந்த மதாரிய்யா முனாஜாத்துப் பதிகம், நேரசைக் கட்டளைக் கலித்துறையில் அமைந்த மதாரிய்ய முனாஜாத்துப் பஞ்சரத்தினம், நேரிசை வெண்பாவில் அமைந்த மதாரிய்யா தோத்திரம் (17 வெண்பாக்கள்), கொச்சகத்தில் அமைந்த மதாரிய்ய கஸீதாக்கள் (6 பாடல்கள்), நிரையசைக் கட்டளைக் கலிப்பாவில் அமைந்த மதாரிய்யா மகத்துவம் மும்மணி முதலானவையும் இந்நூலில் அமைந்துள்ளன.
முன்னவனின் திருவருளால் மகிதலத்தின் மீது
            மதிசிறந்த சன்மார்க்கம் மிளிர்ந்தென்றும் வாழி
நன்னபியின் தீன்குழுவார் நாடெங்கும் சிறந்து
            நெறிதவறாத் தினகரன்போல் நிலஉலகில் வாழி
பன்னயங்கள் புரிந்துலகில் பானொலியாய் வந்த
            பதீஉத்தீன் கௌதுபுகழ்ப் பாவிதுவும் வாழி
பின்னமில்லா தின்னூலைப் பிரியமுடன் உவந்து
            படிப்பவருங் கேட்பவரும் பீடுபெற வாழி (ப.32)
என்னும் வாழ்த்துப்பா நூலை நிறைவுசெய்கிறது.
மனோமணிக் கும்மி
            ஜூலை 1939இல் வெளியிடப்பெற்ற இஸ்லாமிய நெறிமுறை விளக்கமாக அமைந்துள்ள நூல் மனோமணிக் கும்மியாகும். காரை கோ. மாரியப்ப நாவலரின் அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தத்தில் அமைந்த சாற்றுக் கவியைத் தொடர்ந்து மு.செ. சுல்தானப்துல் காதிறு அவர்களின் கட்டளைக் கலித்துறையில் அமைந்த பாடல் அழகுசெய்கிறது. இந்நூலை இலலசமாய் அச்சிட்டு உதவிய சா. அப்துர் ரஹ்மான் பேரில் பாடிய வாழ்த்துப் பஞ்சரத்தினமும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
            நூன்முகம், ஈமான், இஸ்லாம், கலிமா, தொழுகை, ஜக்காத்து, நோன்பு, ஹஜ்ஜு ஆகிய தலைப்புகளில் 101 கும்மிப் பாடல்கள் அமைந்துள்ளன. தொடர்ந்து இறைவன்பால் இறைஞ்சும் இல்லடைப் பதிகம் என்னும் கட்டளைக் கலித்துறையில் அமைந்த 10 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
நூறு ரூபாயில் இரண்டரை ரூபாவும்
நெல்லும் கனிபல தானியத்தில்
கூறும் வகைபோல் ஏழைகளுக்குக்
கொடுப்பாய் பகிர்ந்து மனோன்மணியே (62)
என்று ஜக்காத்து தரும் முறையை மனோமணிக் கும்மி எடுத்துரைக்கிறது.
ஆதாரம் நீயே அல்லாது கதியேது பதிமீது - இனி
ஆவியகலு மப்போது
அவ்வல் கவிமாவை செவ்வையாய் என்னாவை
அறைய அருள் புரிவாயே - ஈமான்
நிறைவுடன் திகழ வைப்பாயே
                                    (மனோமணிக் கும்மி ப. 21)
என்று இறைவனை வேண்டுகிறார் ஆசிரியர்.
திருமண வாழ்த்துமாலை
            1940இல் திருமண வாழ்த்து மாலையைக் கையெழுத்துப் படியாகவே அமுதகவியார் அச்சேற்றினார்.
அல்லா வருளினால் மன்றலே இன்று அணிந்தநீவிர்
நல்லா இருவரும் இல்லற வாழ்க்கையில் நீட்சியுடன்

எல்லா சிறப்புந் திகழ்ந்திட மக்களை யீன்றுமிக
வல்லா னுதவியால் சீருடன் வையமேல் வாழ்குவீரே!
என்று மணமக்களை வாழ்த்தும் இந்நூல் குறள் வெண்பா, நேரிசை வெண்பா, நேரிசை கட்டளைக் கலித்துறை, நிரையசைக் கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் ஆகிய பாவகைகளில் அமைந்த 19 செய்யுட்களைக் கொண்டது.
மணவாழ்த்து மாணிக்க மாலை
            இது 1940இல் காரைக்கால் கா. ஹாஜி முஹம்மது செய்கு ஹுசைன் அவர்களின் மகளை செ. செய்கு இஸ்மாயீல் லெப்பை அவர்களின் மகனுக்குத் திருமணம் செய்வித்தபோது 28 செய்யுட்களில் வாழ்த்திப் பாடியதாகும்.
ஆதி அருள்பெற்ற ஆதம்நபியுடன்
அன்பாக ஹவ்வா வாழ்ந்ததுபோல்
மேதினில் அப்துல்லா மனைரஹ்மான்பியும்
மகிட்சியாய் வாழ்க சோபனமே (1)
என்று தொடங்கி, கலீல் இபுறாஹீம் - காதலி சாறா, யாக்கூபு நபி - இராஹீலா, யூசுப் நபி - சுலைகா, ஐயூபி நபி - ரஹீமா, மூசா நபி - சபூறாள், தாவூது நபி - நஸபிஹூ, சுலைமான் நபி - பல்கீஸூ, யூநூஸூ நபி - ஹபீபா, ஜகரிய்யா நபி - ஈஷா, ஹபீப் முஹம்மது - கதிஜா ஆயிஷா, அலி - பாத்திமா, என முன்வாழ்ந்த தம்பதியரை எடுத்துக்காட்டி அவர்களைப்போல் வாழுமாறு வாழ்த்துகிறார் ஆசிரியர்.
மும்மணி மாலை
            மகளிர்க்கான அறிவுரைகளைக் கொண்ட மும்மணி மாலை 1948இல் வெளிவந்தது. இது வெண்பா, கலித்துறை, அகவல் என்னும் முறையில் முப்பது பாடல்களைக் கொண்டது.
அரசியா யிருக்கினும் அடிமை போலப்
புருஷன் பணியைப் புரிவது கடமை
ஏழைக் கணவனை ஏளனஞ் செய்து
கோழைப் படுத்துங் காரிகை மீது
இறைவன் முனிவு இரங்கு மென்றும்
குறைவிலான் றூதர் கூறின ருணர்மின் (30. 9-14)
என்று பெண்களுக்குத் தேவையான நற்குணத்தை வற்புறுத்துகிறது இந்நூல்.
ஆண்சிசு களிலும் அதிக மாண்பைப்
பெண்சிசு களுக்கே பெரியவ னளித்தான் (27. 25-26)
என்று மகளிரின் பெருமையை விதந்தோதுகிறார் ஆசிரியர்.
            வரலாற்றைப் பாடுபொருளாகக் கொண்ட பலுலூன் சுஸ்ஹாபி மாலை, இஸ்லாமியக் கொள்கைகளை விளக்கும் உரைநடை நூலான சன்மார்க்க போதினி ஆகிய இரண்டும் இன்னும் அச்சேறவில்லை.
            இவ்வாறு மரபுவழிச் செய்யுள் இயற்றுவதில் வல்லவராகத் திகழ்ந்த அமுதகவி சாயபு மரைக்காயர் சமயநெறி பரப்புவதிலும், சமயப் பெரியோரைப் போற்றுவதிலும் தம் திறனைச் சிறப்பாகப் பயன்கொண்டார் எனலாம். இந் நூற்றாண்டின் தொடக்ககாலத் தமிழர் இசை பற்றி நன்கு அறிய இவருடைய பாடல்கள் சிறப்பாக உதவுகின்றன என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஏ.என். பெருமாள் (அமுதகவி சாயபுமரைக்காயர் ப.25). எல்லா வகை யாப்புகளிலும் பாட வல்லவராக அமுதகவியார் திகழ்ந்தார். வழக்கொழிந்த பின்முடுகு வெண்பா, சவலை வெண்பா போன்ற யாப்புகளையும் இவர் பயன்படுத்தியுள்ளமை அவரது ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்து கிறது.

பயன்நூல்கள்
சாயபு மரைக்காயர், மஹ்பூபு பரபதக் கீர்த்தனம், சிங்கை : ஞானோதய அச்சியந்திர சாலை, 1911.
---, காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி (ரலி) ஜீவிய சரித காரணப்பா, காரைக்கால் : ஹுசைனிய்யா அச்சுக்கூடம், 1938.
---, காரை மஸ்தான் காரணக் கீர்த்தனப்பா, காரைக்கால் : ஹுசைனிய்யா அச்சுக்கூடம், 1938.
---, மனோமணிக் கும்மி, காரைக்கால் : ஹுசைனிய்யா அச்சுக்கூடம், 1939.
---, உபதேசக் கீர்த்தனம், காரைக்கால் : ஹுசைனிய்யா அச்சுக்கூடம், 1939.
---, மதார் (ரலி) ஜீவிய சரித மான்மியப் பா, காரைக்கால் : ஹுசைனிய்யா அச்சுக்கூடம், 1939.
---, மாதர்களுக்குணர்த்தும் மும்மணிமாலை, காரைக்கால் : வளர்பிறை பதிப்பகம், 1948.
---, திருமண வாழ்த்துமாலை (1940), மேற்கோள் : மு. சாயபு மரைக்காயர், காரைக்கால் : பாத்திமா பதிப்பகம், 2007, 91-94.
---, மணவாழ்த்து மாணிக்கமாலை (1940), மேற்கோள் : மு. சாயபு மரைக்காயர், காரைக்கால் : பாத்திமா பதிப்பகம், 2007, 95-100.

No comments:

Post a Comment