பெரிதினும் பெரிது கேள்
பெரிதினும் பெரிது கேள்
என்று காலைப் பனி நேரம்
என் காதுகளில் ஒலித்தான் பாரதி
கண்திறந்தேன் காணவில்லை அவன்
மீண்டும் இமைமூட அதே ஒலி!
பட்டென்று கண்திறந்து
மறையப்பார்த்த
அவன் கரங்களைச்
சிக்கெனப் பிடித்தேன்!
‘பெரிதினும் பெரிதுகேள்’ என்று
என்னை உசுப்பேத்தும் பாரதியே!
சின்னதாய் எனக்குள் தயக்கம்
வழித்துணையாய் நீயும் வா!
கிணற்றடியோ குளக்கரையோ
காலைக்கடன் முடித்துக் குளித்துத்
துண்டை உதறிப்போடலாம்
என்று கற்பனைத் தேர் ஏறாதே!
திருவல்லிக்கேணி
- பெயரில் மட்டும்தான்
கேணி மிச்சமிருக்கிறது!
நீரின்றி அமையாது உலகு
என்பது எங்கள் அரசுக்குத் தெரியும்
அதனால் லாரிகளில் நீர் வருகிறது
காசுபோட்டு வாங்கிக்கொள்ளலாம்
அதுவும் எப்போது வருமென்று
யாருக்குத் தெரியும்?
வானவில்லாய்க்
குடங்களின் அணிவகுப்பு
கொட்டும் பனியில்
இடுப்பில் குழந்தையோடு பெண்கள்!
இவர்களைப் பார்த்து
விசனப்படாதே பாரதி
விசனப்படுவதற்கு
இந்நாட்டில்
விசயத்திற்குப் பஞ்சமில்லை!
பாரதி!
அதோ பார்!
நீண்ட வரிசை
நியாயவிலைக் கடையில்!
மாதத்தில் எந்தநாள்
பொருட்கள் வருமென்று
வந்தாலும் எப்போது தருவார் என்று
தந்துகொண்டிருக்கும்போதே
பொருள் எப்போது தீரும் என்று
அறியாத திருக்கூட்டம்
விசாரித்து விசாரித்து
விசனப்பட்டு
வீதியில் சுட்டெரிக்கும் வெயிலில்
விதியை நொந்தபடி!
இவர்கள் பெரிதாக என்ன கேட்டார்கள்?
இலவச அரிசிக்கு எத்தனைப் பாடு?
நேரமானது என்று
கண்ணோட்டம் இல்லாமல்
கதவுகள் அடைத்தாலும்
இடையிடையே
வசவுகள் வாய்தெரித்தாலும்
கொடைதானே எனநினைத்து
எடை குறைத்தாலும்
எழும்புமா உரிமை?
முடைநாறும் சமூகமிது
முன்னுரிமை கேட்காது!
மடைமாற்றம் செய்வதற்கு
மத்தியத்தில் கைநீளும்!
வரிசையில் நிற்பதே
இவர்களுக்கு வேலையாகிப்போனது
அன்றாடம் காய்ச்சிகளுக்கு
வேலைவெட்டி இல்லாத குறையை
இல்லாமையை நினைத்து
ஏக்கம் கொள்ளாதிருக்க
இத்தகைய நீண்ட வரிசைகளே
கற்றுத்தருகின்றன!
ஊர் சுற்றவேண்டும் என்கிறாயே பாரதி
ஒற்றையடிப் பாதைக் காலத்து
அமைதியைத் தேடாதே!
குறுக்கும் மறுக்குமாய் எங்கள் இளசுகள்
காதுகளில் ஹெட்போனும்
கண்களில் காதலுமாய்!
காற்றைப்போல் வாகனம்
வேகமெடுக்கையில்
கால்கை நமக்கு முறிந்துபோகலாம்!
பேருந்தில் பயணிப்போம் பாரதி!
தயாராய் நில்!
அச்சமில்லை அச்சமில்லை
யாவர்வந்த போதிலும்
அச்சமில்லை என்று பாடிய அடலேறே!
முண்டியடித்து ஏறும்
இந்தக் கூட்டத்தில்
உன் முண்டாசு அவிழாமல்
ஒரு துண்டுபோட்டு இடம்பிடி!
இல்லையென்றால்
மணிக்கணக்காய்த்
திண்டாடவேண்டிவரும்!
பாரதி!
நீ எங்கே தொலைந்துபோனாய்?
நான் இங்கே இருக்கிறேன்!
புளிமூட்டைகளாய்ப் பயணிகள்
உள்ளே நுழைந்து பிதுங்கி
என்னருகே வந்து அமர்ந்துவிடு!
என்ன முனகுகிறாய் பாரதி?
இந்தச் சின்ன இருக்கையில்
மூவர் எப்படி அமர்வது என்றா?
இது நெருக்கடி நிறைந்த அரசு
இருவர் அமரும் இருக்கையை
மூவருக்கு அளித்து
தீண்டாமை களையும்
முறையான முயற்சி இது!
அடுத்தவர் வியர்வையைப்
பூசிக்கொள்ளும் அரிய வாய்ப்பு!
அடுத்தவர் மூச்சு
மறுசுழற்சியில்
நமக்கு வரும்போது
சகோதரத்துவம் பொங்குமல்லவா?
ஆண்டாண்டு அழுக்கும்,
யாரோ என்றோ எடுத்த
வாந்தியின் மிச்சங்களும்
ஒட்டியிருக்கிறது பார்
சன்னல் கம்பிகளில்!
சற்றே உராயாமல் உட்கார்
வளர்த்துக்கொள்
‘கறை நல்லது’ என்ற மனப்பாங்கு!
உன் முகத்தில் ஏன் அட்ட கோணல்
கால்நீட்ட இடமில்லையா?
சரிதான் போ. . .
அமர்ந்தபின்னே சௌகரியம் கேட்கிறதா?
இது டயர் உள்ள இடம்
இது டயர் உள்ள இடம்!
விடுதலைப் போரில் மட்டுமா?
அரசுப் பேருந்திலும்
டயர்களால் எப்போதும் பிரச்சினைதான்
தொழில்நுட்பங்கள்
அரசுப் பேருந்துகளுக்கு
அறவே ஆகாது!
பாரதி! உனக்குப் பசிக்கிறதா?
பத்துநிமிடம் நிற்கும் இப்பேருந்து...
அதற்குள் புசித்துவிடு!
என்ன?
சாம்பார் சூடாக இல்லையா?
புளிக்கிறதா தோசை?
நீராக உள்ளதா குளம்பி?
யாரைத் தேடுகிறாய்?
கோபம் வேண்டாம் பாரதி
ரௌத்திரம் பழகாதே
வாதம் வேண்டாம்
வம்பெதற்கு?
பத்து மணித்துளியில்
பேருந்து புறப்பட்டுவிடும்
நம் அவசரத்தைப் பயன்படுத்தும்
அயோக்கியத்தனத்தின் அரங்கேற்றம் இங்கு
ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும்
ஓசியில் இங்குதான் கிடைக்கிறது
அதே புளித்த தோசையும் பூரிக்கிழங்கும்!
என்ன பாரதி?
உன்னோடு ஓயாத தொல்லை
கழிவறை செல்லவேண்டுமா?
பொறுத்துக்கொள் பத்துநிமிடம்!
பேருந்துநிறுத்தம் வரும்
அதுவரை தூங்கு!
தூக்கத்தில் நிறுத்தம் வருவது
தெரியாதே என்ற கவலைவேண்டாம்
சிறுநீர் நாற்றம்
உன் மூக்கைத் துளைக்காமல் விட்டுவிடாது!
ஒன்று தெரியுமா பாரதி
இங்கு கழிவறைகளுக்குக்கூட
கட்டணம் உண்டு!
ஐந்து ரூபாய் கொடுத்தால் அனுமதி!
இந்தக்
கட்டணக் கழிவறைகள்தான்
ஐந்து ரூபாய் நாணயம்
காலாவதியாகிப் போகாமல்
இன்னும்
வாழ்வளித்துக்கொண்டிருக்கின்றன!
ஆனால்
அங்கே கதவுகளை மட்டும்
எதிர்பார்த்தால்
ஏமாந்துபோவாய் பாரதி!
கள்ள ஓட்டு இல்லாத் தேர்தலும்
ஓட்டை இல்லா கழிவறைக் கதவும்
இந்தியாவில்
இல்லவே இல்லை பாரதி!
கழிவறைப் பிரவேசம் செய்துவிட்டு
வாந்தி எடுக்காமல்
மூக்கைப் பொத்தாமல் வந்துவிட்டால்
உன்னைப் போல் ஞானி
ஒருவருமில்லை என்று
ஓங்கியடித்து நான்
சத்தியம் செய்வேன்!
விட்டுவிடுதலையாகிப்
பறப்பாய்
சிட்டுக்குருவியைப் போலே
என்று பாடிய பாரதியே!
இந்தப் பேருந்தில்
அனுபவித்தாயா மீண்டும் சிறைவாசம்?
பாரதி
இப்போது சொல்
விடுதலை பாரதத்தில்
அடிப்படைகள் கூட
எமக்குக் கிடைக்கவில்லையே
நான் பெரிதாக எதனைக் கேட்க?
பெரிதினும் பெரிது கேள்
என்ற உன் வாசகம்
சில நேரங்களில் சாத்தியமாகிறதுதான்
மறுக்கமாட்டேன்!
திட்டங்கள் பல கோடிகளில்
அரசு அறிவிப்பு!
அத்தனையும்
கோட்டுப் பாக்கெட்டுகளில்
அடைக்கலமாகின்றன!
கடைசியில் பெரிய ஓட்டை
திட்டத்தில்!
விமான நிலையத்தின்
விதானத்தை நிறுத்த
முட்டுக்கொடுக்கும் சவுக்கோடு
முப்பதுபேர் நிற்கிறார்கள்!
கோடிகளில் கட்டிய பாலங்கள்
திறப்பதற்கு முன்பே விழுகின்றன!
ஆறுகளில் வெட்டிய கால்வாய்களில்
சாக்கடை நீர்!
எங்கள் ஆறுகள் கூட அடிக்கடி
சோப்புப்போட்டுக் குளிக்கின்றன!
லாரிகளில் மணற்கொள்ளை
வாரிகளில் நீர்க்கொள்ளை
ஏரிகளில் அடுக்குமாடிகள்
அத்தனையிலும்
பெரிதுபெரிதாய் ஊழல்!
குப்பனும் சுப்பனும்
ஆயிரம் ஐநூறு மாற்றப்போய்
நொந்து வெந்து
இதயத்துடிப்பு நின்று பாடையில்!
ஆனால்
கட்டுக்கட்டாய்ப் பணம் கோடிகளாய்ப்
பெட்டிகளில் மணக்கின்ற மாயாஜாலம்
எங்கள்
அரசியல்வாதிகளுக்கு மட்டுமே
சாத்தியமாகிறது!
மாதம் ஒருரூபாய்ச் சம்பளத்தைச்
சிக்கனமாய்ச் சேர்த்துவைத்து
ஐந்தாண்டுகளில்
கார்ப்பரேட் நிறுவனங்களாய்
மாற்றும் அதிசயம்
அவர்களால் மட்டுமே
நிகழ்த்தமுடிகிறது!
அரசு அலுவலகத்தில்
கோப்புகள் அசைய
பெரிதினும் பெரிது கேட்கிறார்கள்!
மேட்டுக் குடியினர்க்குத்
தங்கநாற்கரச் சாலை
ஓட்டுக் குடியினர்க்கோ
குண்டுகுழியாய்ச் சந்துகள்
பலர்வீடுகள் எலிப்பொந்துகள்!
சந்து பொந்துகளில்
சாக்கடை ஓரங்களில்
கொசுக் கடிகளால்
நொந்து மடிகின்ற
பட்டினியால் வெந்து மடிகின்ற
இந்நாட்டு மன்னர்களைக்
கண்டாயா பாரதி?
அரசு அதிகாரிகளுக்கு
விஸ்தார மாளிகைகள்!
கட்டணம் செலுத்த
வாரம் தவறினால்
எரிய மறுக்கின்றன
குடிசைகளின் குண்டு பல்புகள்!
அரசுரிமை பெற்ற
தனியார் நிறுவனங்களில்
வருடக்கணக்காய்க்
கணக்கின்றி மின்சாரம்
கச்சிதமாய்ப் பணமாகும்
கோடிகளில் மின்கட்டண ஏமாற்று
அத்துடன்
ஓடிப்போகிறார்கள் தம் நாட்டுக்கு!
ஈருந்து
உரிமம் இருந்தாலும்
அடிக்கடி மாமூல் கட்டுகிறது!
வானுந்து வாங்கிய கடனுக்கு
மல்லு கட்டாமல்
வாழ்த்தும் வரவேற்பும்
வங்கியில் பரிவட்டமும்!
வறட்சியால் காய்ந்த வயல்
வெள்ளத்தில் மூழ்கிய பயிர்
கடன் தள்ளுபடி கேட்டு நிற்கின்றன
வினை விதைத்தவர்கள்
வேடிக்கை பார்த்தனர்!
விதை விதைத்தவர்கள்
அழுதனர் புரண்டனர்
மண்சோறு தின்றனர்
எலும்புமாலை அணிந்தனர்
ஆடையில்லா ஆர்ப்பாட்டமும் நடந்தது
இறுதியில் தள்ளுபடி ஆயிற்று
உழவர்களின் உயிர்கள்!
கோடி மதிப்பில் படகுகள்
ஆடிய புயலில்
சிக்கிச் சின்னாபின்னமாயின!
தேடப்படவில்லை மீனவர்
தமிழர் உயிர்கள்
இங்கு
எப்போதும் செல்லாக் காசுகள்!
ஓட்டு வங்கியை நிரப்பவே
ஓடுகின்ற தலைவருக்கு
மீட்புப் பணிக்கேது நேரம்?
பெரிதினும் பெரிதுகேள் என்ற பாரதியே!
புழுதியில்லாத் தெருக்கள்
நெரிசலில்லா சாலைகள்
நிற்போர் இல்லாத் தொடர்வண்டி
விபத்தில்லா பயணம்
குடிசைகள் இல்லா ஊர்கள்
தரிசு இல்லா நிலங்கள்
மின்வெட்டில்லா நாள்
கட்டணமில்லாக் கல்வி
கையூட்டில்லா பணிவாய்ப்பு
- இப்படி
பாரதி
என் பட்டியல் நீள்கிறது?
சாதாரண இச் செய்திகள் கூட
நம் நாட்டில்
பெரிதாகப் படுகிறதே!
பாரதி! இப்போது சொல்!
அடிப்படைகள் கூட
எமக்குக் கிட்டவில்லையே
நான்
பெரிதாக எதனைக் கேட்க?
பெரிதினும் பெரிதாக எதனைக் கேட்க?
நியாயமான கேள்விகள்
ReplyDelete