Friday 19 July 2019

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 1


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 1
                 சுந்தரி என்ற பெயருக்கு ஏற்றாற்போல் களையான முகம். சற்றே கருத்த நிறம் என்றாலும் அந்நிறம் டாலடித்து மற்றவர்களை வசீகரிக்கச் செய்தது. கொழுகொழு என்றிருந்த கன்னங்கள்; சிரிக்கும்போது அவற்றில் விழுந்து பரவும் குழிகள் ஒரு பிளஸ் பாய்ண்ட்; குட்டை என்றாலும் கருகரு என்றிருந்த சுருண்ட கூந்தல்; அடர்ந்த ஆனால் ஒழுங்காகத் தானே வளர்ந்த புருவம்; சிரிக்கும் கண்கள் என்றெல்லாம் அவளை வருணிப்பேன் என்று நினைத்துவிடாதீர்கள்.
            கதாநாயகி என்றால் அவள் பேரழகியாகத்தான் இருக்கவேண்டுமா என்ன? எழுத்தாளர்கள் எல்லாம் இப்படி அழகானவர்களைப் பற்றியே கதை எழுதுகிறார்களே! ஏன்?
            நம் கதையில் வரும் சுந்தரியைப் பெரிய அழகி என்று கூறிவிடமுடியாது. 'இது' அவளிடத்தில் மட்டும்தான் ஸ்பெஷல் என்று எதுவும் இல்லை. எல்லோரையும் போல இருந்தாள்.
            சிவப்பா, சிவப்பில்லையா என்று தெரியாத நிறம். நிச்சயமாகக் கருப்பு அல்ல என்று தெரிகிறது.
            நல்ல உயரம் என்றும் சொல்லமுடியாது. குட்டை என்றும் சொல்ல முடியாது. பெரும்பாலானோரைப் போல சராசரி உயரம்.
            நல்ல அழகான கொழுகொழு குண்டு என்று சொல்லமுடியாது. புடவை கட்டி நிற்கும்போது முன் கழுத்துப் பட்டை எலும்புகள் சற்றுத் துருத்திக்கொண்டு தெரிந்தன.
            தெருவைக் கடந்து போகும்போது எத்தனையோ சுமாரான பெண்களைப் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் நம் கண்ணில் நிற்பதில்லை. அப்படித்தான் சுமாரான தோற்றத்தை உடையவள் நம் கதாநாயகி சுந்தரி.
            முகத்தில் வசீகரம் ஏதாவது இருக்கிறதா? எனக்கொன்றும் அப்படித் தெரியவில்லை. வேண்டுமானால் சந்திரன் கண்களுக்கு மட்டும் அவள் வசீகரமானவளாகத் தெரிந்திருக்கலாம்.
            சந்திரன் யார்? அவனைப் பற்றிப் பிறகு சொல்கிறேன்.
            இருபது வயதில் இப்படிப்பட்ட சராசரி அழகுக்குச் சொந்தக்காரியாக இருந்த அவளுக்குத் திருமணம் ஆகவில்லை. சிறுவயதிலேயே தந்தையை இழந்தவள். பதினைந்து வயதில் அவள் தாயும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாள். அண்ணன் அண்ணியின் தயவில் வளர்ந்தாள். நடுத்தரக் குடும்பம். பிளஸ் டூ வரை படித்திருந்தாள்.
            சுந்தரிக்கு அழகிருக்கிறதோ இல்லையோ, பேச்சுத் திறன் அதிகமாகவே இருக்கிறது. அப்படியென்றால் கூட்டங்களில் நன்றாகப் பேசுவாளா என்று கேட்காதீர்கள். ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று அவள் நினைத்துவிட்டால் அதைப் பற்றிப் பன்னிப்பன்னிப் பேசியே சாதித்துவிடுவாள். அக்காரியம் செய்வதில் (தனக்கு) உள்ள நன்மைகளை அடுக்கிக்கொண்டே போவாள். அதனை உடனே செய்யாவிட்டால் நேரும் இழப்புகளைப் பட்டியலிடுவாள். எத்தகைய விடாக் கண்டன் கொடாக்கண்டனாக இருந்தாலும் அவளிடமிருந்து தப்ப முடியாது. யாராக இருந்தாலும் அவள் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் 'ஆளை விடு சாமி' என்று அவள் சொல்வதைச் செய்துவிடுவார்கள். அந்த அளவில் அவள் கெட்டிக்காரிதான்.
            அத்தகைய திறமைதான் இப்பொழுது அவளுக்கு எதிராக அமைந்துவிட்டது. திரைப்படங்களில் வருவது போல் அழகான மாப்பிள்ளை தனக்கு வரவேண்டும் என்று கனவு கண்டாள். தனக்கு நல்ல வரன் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள். அவள் பிடிவாதத்தை அண்ணனால் எப்போதும் ஜெயிக்க முடிந்ததில்லை. அண்ணன் என்ன? அந்த ஆண்டவனே வந்தாலும் அவனையும் தன்னுடைய நச்சரிப்பால் பயமுறுத்திச் சாதித்து விடுவாள் சுந்தரி.
                'பதனஞ்சிப் பவுன் போட்டுக் கல்யாணம் செஞ்சி குடுங்க', என்று எத்தனையோ வரன்கள் பேரம் பேசின.
                'தங்கம் விக்கிற விலையில பதனஞ்சிப் பவுனா?' அங்கலாய்த்தாள் அண்ணி கலா.
            அவளுக்கு இப்போதே தன் இரண்டு வயதுப் பெண் குழந்தைக்கு நகைகளைச்  சேர்த்துவிட வேண்டும் என்ற யோசனை தோன்றியது.
                'பாப்போம் பாப்போம், இதைவிட நல்ல வரனாய் வரும்' என்று கலா காலத்தைக் கடத்தினாள்.
            சுந்தரிக்கும் வந்த வரன்களில் அதிகமாக அக்கறை இல்லை. வந்தவர்கள் எல்லாம் ஏதேதோ நிலையில்லாத வேலை செய்துகொண்டிருந்தனர்.  சிலர் அவள் படித்த அளவிற்குக்கூட பிளஸ் டூ படிக்காதவர்களாக இருந்தனர்.
            சின்னஞ்சிறிய மளிகைக் கடை வைத்திருந்தான் ஒருவன்.  ஒருவன் ஏதோ மெக்கானிக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவன் டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவன் கேபிள் கடையில் வேலைசெய்து கொண்டிருந்தான்.
            இப்படி எல்லாம் பிரயோசனமில்லாத வரன்கள்.
            அரசாங்க உத்தியோகத்திலிருந்தும் ஒருவன் வந்தான். ஆனால் அவனைப் பார்க்கச் சகிக்கவில்லை. முகத்தில் அம்மைத் தழும்புகள். சுமார் உயரம். தலையில் பித்த நரை. அவனை எப்படியேனும் முடித்துவிட வேண்டும் என்று அண்ணன் விநாயகம் துடித்தான்.
            அரசாங்க உத்தியோகத்தில் இருப்பதால் ஒரு டூ வீலர் வாங்கிக் கொடுத்துவிடுங்கள் என்று பிள்ளை வீட்டில் வற்புறுத்தினர். அவனைத் தட்டிக் கழித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்த சுந்தரிக்கு அவர்கள்  வண்டி கேட்டது வசதியாகப் போய்விட்டது.
                'அண்ணி. . . ! அண்ணனே ஒரு பழைய டி.வி.எஸ். பிப்டி வச்சிக்கிட்டு கஷ்டப்படுது. லொட லொடன்னு காயலான் கடை வண்டிபோல இருக்கு. எந்த நடுரோட்டுல நிக்கும்னு தெரியல, எப்போ பிரேக் புடுங்கிக்கும்னு தெரியல. பேரிச்சம் பழத்துக்குப் போட்டாக்கூட எவனும் வாங்க மாட்டான். அண்ணன் கஷ்டப்படறப்போ எனக்கெதுக்கு அண்ணி புது வண்டி? இப்படி அண்ணன் கஷ்டப்பட்டுத்தானா எனக்குக் கல்யாணம் பண்ணனும்?' அம்மைத் தழும்பு வரனைக் கழற்றிவிட வேண்டும் என்பதற்காகச் சுந்தரி அண்ணிக்குத் தூபம் போட்டாள்.
            கலாவுக்கும் சுந்தரி சொன்னதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. அண்ணன் மீதும் தன் மீதும் சுந்தரிதான் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறாள்.
            அப்போதைக்கு அந்த வரன் மறுக்கப்பட்டது. மறக்கப்பட்டது.
(தொடரும்)

No comments:

Post a Comment