முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 2
சுந்தரியின் சொற்களால் இன்னொரு பூதம் கிளம்பியது. தங்களுக்குப் புது வண்டியொன்றைக் கட்டாயம்
வாங்கியே ஆகவேண்டும் என்று கலா திட்டம் தீட்டினாள்.
சுந்தரியின் கல்யாணத்திற்காக அண்ணன் கொஞ்சம் தொகையும் சேர்த்து வைத்திருந்தான்.
'இப்போ வண்டியை வாங்கிடலாம். வரன் வரும்போது பாத்துக்கலாம். வரன்
அமைஞ்சிட்டா நான் என்ன சுந்தரிய
அப்படியே விட்டுடுவேனா? என் நகைகளை அவளுக்குத்
போட்டுட மாட்டேனா?' என்றாள் கலா.
'நல்ல வண்டியா நாம
இன்ஸ்டால்மென்ட்ல வாங்கலாங்க. அட்வான்ஸா கொஞ்சம் காசு கட்டுனா போதுமாம்.
மூனாவது வீட்டு லலிதா மாமி அவங்க பையனுக்குப்
போனமாசம் அப்படித்தான் வாங்கிக் கொடுத்திருக்காங்க' - ஆதாரங்களைக் காட்டி நச்சரித்தாள் கலா.
சுந்தரிக்கும் வேறு வழியில்லாமல் போய்
விட்டது. வண்டி ஆசையைக் கிளப்பியவள் சுந்தரிதான். இப்போது 'வண்டி வேண்டாம், என் கல்யாணம்தான் முக்கியம்'
என்று எப்படி அவளால் சொல்லமுடியும். அண்ணியின் பக்கம் பேசவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
'அண்ணா. . . ! அண்ணி சொல்றது சரிதான். பேசாம உங்க வண்டியக் கடாசிட்டு
புது வண்டிய வாங்குங்க. அப்படி புது வண்டி வாங்கற
ராசிலயாவது எனக்கு ஒரு நல்ல வரன்
அமையட்டும்' என்றாள்.
மூட நம்பிக்கைக்குச் சாமரம்
வீசும் இந்தப் பூமியில் ராசி போன்ற சொற்கள்
நிஜமாகவே வலிவுள்ளவை. 'இப்படிச் செய்', 'அப்படிச் செய்' என்று காரண காரியங்களைக் கற்பித்தால்
யாரும் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. ராசி, அதிஷ்டம் என்றெல்லாம் சொல்லிப் பாருங்கள். மசியாதவர்களும் மசிந்துவிடுவார்கள்.
விநாயகமும் மசிந்தான்.
அடுத்தது எந்த வண்டி வாங்குவது
என்ற கருத்தரங்கம் நடு வீட்டில் சூடு
பிடித்தது. புது டி.வி.எஸ். பிப்டி வாங்கி
விடலாம் என்று விநாயகம் கூறினான்.
அண்ணி 'ஓ ஹோ' வெனப்
பெரிதாகச் சிரித்தாள். 'ஒரு பிச்சக்காரனுக்கு முன்னால
கடவுள் வந்து ஏதாவது வரம் கேளுன்னாராம். சாமி!
இப்பல்லாம் யாரும் நல்ல சாப்பாடா பிச்சை
போட மாட்டேங்கறாங்க. பழைய ஊசிப்போன சோத்தத்தான்
போடறாங்க. வயசாயிட்டதால எனக்கு ஒத்துக்க மாட்டேங்குது. அதனால இனிமே எனக்குப் பிச்சை போடுறவங்க சுடுசோறா பிச்சை போடனும். இந்த வரத்த குடுத்தா
நான் உன்ன என் வாழ்நாள்
பூரா மறக்கவே மாட்டேன்னு சொன்னானாம்' என்று கூறிப் பெரிதாகச் சிரித்தாள். சுந்தரியும் அதற்கு ஆமாம் சாமி போட்டுச் சிரித்தாள்.
'வாங்கறதே வாங்கறீங்க. அதுவும் கடன்ல வாங்கப்போறோம். கொஞ்சம் கொஞ்சமாக் கட்டிடப் போறோம். அதுக்கு ஒரு நல்ல வண்டியா
வாங்கக் கூடாதா?' பொடிவைத்தாள்
கலா.
கடைசியில் ஹீரோ ஹோண்டா வாங்குவது
என்று முடிவானது.
சுந்தரியின் கல்யாணத்துக்காக வைத்திருந்த பணம் வண்டியாக உருமாறியது.
மாதா மாதம் தவணைத் தொகை கட்டியாக வேண்டும்.
புது வண்டி வாங்கியதில்
அதில் சவாரிசெய்ய எளிமையாக இருந்தது. முன்பெல்லாம் டி.வி.எஸ்.
பிப்டியில் செல்வதென்றால் நரக வேதனையாக இருக்கும்.
பெரியவள் சுமித்ரா முன்பக்கம் விநாயகத்தின் காலடியில் கோழிக்குஞ்சு போன்று உடலைச் சுருக்கிக்கொண்டு அமர்ந்துகொள்ள வேண்டும். விநாயகம் சீட்டின் முன் நுனிக்குச் சென்றுவிட
வேண்டும். கலா பின்னால்! இருவருக்கும்
இடையில் குழந்தையான சுதா நசுங்கிக் கிடப்பாள்.
மேடு பள்ளம் வந்தால் கேட்கவே வேண்டாம். நடுவில் உள்ள குழந்தை சட்னிதான்.
கலா வழுவழுப்பான புடவை கட்டிவிட்டால் அவ்வளவுதான். உட்கார முடியாமல் புடவை ஒருபக்கமாகச் சருக்கிச் சருக்கி விடும். பத்து நிமிடத்திற்கு ஒருமுறை சற்றே வண்டியை நிறுத்தச்சொல்லி சரியாக உட்கார வேண்டும்.
சுந்தரிக்கு அண்ணனோடு அவ்வண்டியில் செல்லவே பிடிப்பதில்லை. வழுக்காமல் இருக்கக் கையை எங்கும் பிடித்துக்கொள்ள
முடியாது. ஆபத்து அவசரமென்றால் அண்ணனின் வண்டியில் செல்வதை விட ஆட்டோவில் சென்றுவிடலாம்.
அதற்குப் பணம் வேண்டுமே! பேசாமல்
நடந்தே சென்றுவிடலாம்.
ஆனால் இப்போது புது
வண்டியில் கலா மாற்றிச் சுந்தரி
போட்டி போட்டுக்கொண்டு ரவுண்டு அடித்தனர். கலாவுக்குக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடைத்தெரு, கோயில், பீச், சினிமா என்று சுற்றுவதற்குச் சௌகரியமாக இருந்தது.
பீச்சிற்குச் செல்வதென்றால் குழந்தை சுதாவையும் தன் மனைவியையும்
ஒரு டிரிப் அடிப்பான் விநாயகம். தன் தங்கையையும் சுமித்ராவையும்
அடுத்த டிரிப் அடிப்பான்.
புதுவண்டி வாங்கிய பிறகு வாரத்தில் இரண்டு நாட்கள் பீச்சுக்குச் செல்வது வழக்கமாகிவிட்டது. அது ஒன்றுதான் குறைந்த
அளவு காசில் செல்லும் பொழுது போக்கு இடமாக அமைந்தது. ஆனால் அதற்கும் மாதாமாதம் ஒரு கணிசமான தொகை
பெட்ரோலுக்காகச் செலவழிந்தது.
வண்டிக்குக் கட்ட வேண்டிய தவணைத்
தொகையும் பெட்ரோல் செலவும் கணக்கில் இடித்தன. அந்த ஞாபகத்திலேயே இருந்த
விநாயகம் அடிக்கடி ஓவர் டைம் செய்தான்.
அதற்குப் பிறகு களைத்துப்போய் வருபவன் எப்படித் தங்கைக்குரிய வரனைத் தேடி அலைவான்.
கலாவிற்கும், 'மெதுவாக வரன் வரட்டும் இப்போது
என்ன அவசரம்?' என்ற எண்ணம்தான்.
அன்று ஏதோ ஒரு பேச்சிற்குத்
தன் நகைகளைப் போட்டுக் கல்யாணத்தைச் செய்துவிடலாம் என்று கூறினாள். ஆனால் உண்மையில் எப்படி அப்படிச் செய்ய முடியும்? தனது திருமணத்திற்குத் தன்
பெற்றோரால் போட்ட நகைகளல்லவா அவை? அதில் தொக்கிநிற்கும்
செண்டிமெண்டை மறக்க முடியுமா?
சுந்தரியின் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை முடுக்கிவிடாமல் மெத்தனம் காட்டினாள் கலா.
இடையில் வரன்களும் சரியாக அமையவில்லை. முக்கால்வாசி வரன்களைச் சுந்தரியே தள்ளுபடி செய்தாள். மீதியை அண்ணி தள்ளுபடி செய்தாள்.
சுந்தரியின் திருமணப் பேச்சு மெல்ல மெல்ல வேகம் குறைந்தது.
(தொடரும்)
No comments:
Post a Comment