Thursday, 11 July 2019

ஆமை

ஆமை...
தாமதமோ தாமதத்திற்கு
அடையாளக் குறியீடு!
அரசுஅலுவலகங்களில் 
கோப்பு நகரும் வேகத்தை 
ஆமையும் பொறுத்துக் கொள்ளாது!
முயலுக்கும் ஆமைக்கும்
'
நீட் ' வைத்துப் 
போட்டி நடத்தும் நாடு இது!
வகுப்பில் 
ஓட்ட முயல்களின் வேகத்திற்கு
ஆமைகளையும் ஈடுகொடுக்கச் 
செய்வதே
எம்போன்ற 
ஆசிரியர் இலக்கு!
பலநேரம் 
முயல் ஆமையிடம்
தோற்பதுண்டு... 
காரணம் முயலாமை!
நிலத்தில் 
ஆமையைப் பார்த்துத் 
தப்புக்கணக்குப்
போடுகிறோம்! 
எப்போதும் காட்சிப்பிழை
நம் கண்களில்!
கப்பலில் பயணிக்கையில் 
ஆழ்கடலில் 
ஆமையின் வேகம் கண்டு 
அதிசயப் பட்டதுண்டு!
ஆமை.... 
என்ன சாதித்து 
இன்று (மே 23)
சர்வதேச ஆமை நாளை 
ஆக்கிக் கொண்டது?
கல்யாணம் பண்ணிப் பார்
வீட்டைக் கட்டிப் பார்
என்று அனுபவஸ்தர்கள் அங்கலாய்க்கிறார்கள்! 
இரண்டையும் 
எளிதாக இயற்றிவிடுகிறது ஆமை!
கல்யாணத்தில்
பதினாறும் பெற்றுப்
பெருவாழ்வு வாழ வாழ்த்துவார்கள்!
ஆமையைப்போல் 
பெறுவாழ்வு யாருக்குக் கிட்டும்! 
நூற்றுக்குமேல் முட்டையிட்டுக்
கௌரவர்களை கண்ணியப்படுத்துகிறது!
அடுத்து வீடு.... 
முட்டை ஓட்டைத் 
தட்டி உடைத்து 
வெளிவரும்போதே 
ஓட்டு வீடோடு ஒய்யாரமாய் வருகிறது!
மாட மாளிகைகள் கட்டிவிட்டு 
கொள்ளைக்கு அஞ்சி
வீட்டைவிட்டு நகராத
காவல்பூதங்களாய்
ஆகிவிட்டனர் மனிதர்! 
போதுமென்ற மனத்தால் 
பொருத்தமான வீடுகட்டி
செல்லுமிடமெல்லாம் 
வீட்டைக் கொண்டு செல்கிறது! 
வெயில் மழைக்குக் 
குடையும் தேவையில்லை 
வெளியூரில் தங்க
விடுதி இடமும் 
தேவையில்லை! 
யாதும் ஊரே யாவரும் கேளிர் 
என்ற 
கணியன் பூங்குன்றனாரின் 
வைர வரியை 
வாழ்ந்து காட்டுகிறது!
முன்னூற்றைம்பது 
வகைகளுக்கு மேல்
பல்கிப் பெருகிய 
ஆமைகள் அனைத்தும்
நமக்குக் கற்றுத் தருகிறது 
அடக்கப் பாடம்! 
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை 
என்ற வள்ளுவப் பாடத்தால் 
நூறாண்டுக்கு மேல்
பாராண்டு வாழ்கிறது! 
ஐம்பொறிகளை அடக்கி ஆண்டால் மனிதருக்கும்
ஆண்டுவரும் நூறாண்டு என்னும் நுட்பம் 
உரைக்கிறது!
சினிமா நட்சத்திரங்களுக்கு 
என்றும் மவுசுதான்! 
ஆமைகளிலும் 
நட்சத்திர ஆமை உண்டு!
ஆமை புகுந்த வீடு 
விளங்காமல் போகும் 
என்பார்கள்! 
உண்மைதான்.....!
தீண்டாமை 
முயலாமை 
முடியாமை
அடங்காமை 
வணங்காமை 
வழங்காமை 
செய்யாமை
இயலாமை 
கல்லாமை
பொறாமை 
என 
வீட்டிற்குள் புகும் ஆமைகளால் 
வீடு விளங்காமல்தான் போகும்! 

No comments:

Post a Comment