Friday, 19 July 2019

கவிஞர் துரை. மாலிறையனின் அருள்நிறை மரியம்மை காவியத்தில் இயற்கை


கவிஞர் துரை. மாலிறையனின்
அருள்நிறை மரியம்மை காவியத்தில் இயற்கை

            மனித வாழ்க்கையோடு இயற்கை நீக்கமற நிறைந்திருக்கிறது. இயற்கை மனிதனுக்கு உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை அளிப்பது மட்டுமன்றி மனநலத்தை வலுவுடையதாக்குவதிலும் பங்கு வகிக்கிறது. அதனால் மனிதனின் சிந்தனை இயற்கையோடு பின்னிப்பிணைந்தே இயங்குகிறது. இலக்கியம் படைக்கும் புலவனும் இயற்கையை விடுத்துத் தன் படைப்பைச் சிந்திக்க இயலாது எனலாம். இயற்கையை மட்டுமே பாடும் படைப்புகளும் பல உள்ளன. பக்தி, அறிவியல், அறவியல் எனப் பாடுபொருள் எந்தத் தளத்தில் அமைந்தாலும் இயற்கை பற்றிய புரிதலை வருணனையாக, உவமையாக, உருவகமாக எனப் பல நிலைகளில் படைப்பாளன் பயன்கொள்கிறான். அவ்வகையில் புதுச்சேரி துரை. மாலிறையனின் அருள்நிறை மரியம்மை காவியத்தில் காணலாகும் இயற்கை வெளிப்பாடுகளைக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.
நூலாசிரியர் அறிமுகம்
            நாராயணசாமி என்ற தம் இயற்பெயரைத் தனித்தமிழ்ப் பற்றால் மாலிறையன் என்று வைத்துக்கொண்ட இவர் புதுவையில் 1942 ஆகஸ்டு 29ஆம் நாள் துரைசாமி - கோவிந்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். புலவர், முதுகலை, பி.எட்., பிரஞ்சு அரசின் தமிழ் பிரவே ஆகிய பட்டங்களைப் பெற்ற இவர் தமிழ்மொழி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நடுவண் அரசின் தேசிய நல்லாசிரியர், புதுவை மாநிலத்தின் சிறந்த தமிழாசிரியர், புதுவை அரசின் தமிழ்மாமணி முதலான பல விருதுகளைப் பெற்றவர்.
            தனித்தமிழ் இயக்கப் பற்றாளராகிய இவர் தமிழ் எழுச்சி குறித்த பல நூல்களை இயற்றி வெளியிட்டுவருகிறார்.
1.         தமிழ் எழுச்சிக் குறள்
2.         தமிழ் எழுச்சி விருத்தம்
3.         தமிழ் எழுச்சி நானூறு
4.         தமிழ் எழுச்சித் தாழிசையும் துறையும்
5.         தமிழ் எழுச்சி முழக்கம்
முதலான நூல்கள் துரை. மாலிறையனின் தமிழ்ப் பற்றினைத் தெற்றெனப் புலப்படுத்த வல்லவை.
  சிறார் இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டு தொடர்ந்து சிறார்க்குரிய நூல்களை இயற்றி வருகிறார்.
1.         இளங்குருத்துகள்
2.         சிரிக்கும் இளம்பிறை
3.         தேன்பூக்கள்
4.         முத்தமிழ்ச் சோலை
5.         பசுமையின் கண்ணீர்
6.         மொழிப்பயிற்சிப் பாடல்கள்
7.         திருக்குறள் பூங்கா
8.         குழந்தைகள் விரும்பும் நேருகாவியம்
9.         தீண்டாமையை ஒழித்த அம்பேத்கர் காவியம்
10.       கல்வி வள்ளல் காமராசர் காவியம்
11.       அறிவூட்டும் கதைப்பாடல்கள்
12.       கணக்குப் பயிற்சிப் பாடல்கள்
13.       கல்வி வள்ளல் காமராசர் காவியம்
முதலான 17 சிறுவர் இலக்கிய நூல்களை இதுவரை படைத்துள்ளார் துரை. மாலிறையன்.
            அருள்ஒளி அன்னைதெரெசா காவியம் உட்பட பல காவியங்களையும் படைத்துள்ளார். இவரது பல நூல்கள் தமிழக அரசின் பரிசுகளையும் பிற பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்துள்ளன.
நூல் அறிமுகம்
            புதுச்சேரி துரை. மாலிறையனின் அருள்நிறை மரியம்மை காவியம் இயேசுவின் அன்னையான மரியாளின் சிறப்புகளை மையப்படுத்தி இயற்றப்பெற்ற காப்பியமாகும். இக்காப்பியம் உருக்காட்சிக் காண்டம், திருக்காட்சிக் காண்டம், அருட்சாட்சிக் காண்டம் ஆகிய மூன்று காண்டங்களையும் 57 படலங்களையும் 4745 பாடல்களையும் கொண்ட காப்பியமாகும்.
இயற்கை வருணனை
   இலக்கியப் படைப்புகளில் நிலம், பொழுது போன்றவற்றின் வருணனையில் இயற்கை முழுவீச்சுடன் வெளிப்படும். இத்தகைய விரிவான வருணனைகளைக் கம்பராமாயணம் போன்ற காப்பியங்களில் காணலாம். எனினும் அருள்நிறை மரியம்மை காவியத்தில் இத் தன்மையைக் காண இயலவில்லை. இயற்கை வருணனைகள் இக்காப்பியத்தில் அருகியே காணப்படுகின்றன.
            இயற்கை வளம் செறிந்த ஆல்ப்ஸ் மலையின் அழகை,
நிரைநிரை யாகக் குன்றின்
            நெடுகிலும் பைன்ம ரங்கள்
வரைமலை தாழ்வி டத்தில்
            வழிந்திடும் பசுமைக் காட்சி
தரையினில் இறங்கி வந்தால்
            தனிச்சுடர் இயற்கை மாட்சி
உறைபனிச் சிறப்பைச் சொல்லால்
            உளறுதல் வீண்பு கழ்ச்சி (3.21.3)
என்னும் ஒரு பாடலிலும்,
கானாங்கோ ழிகள்கௌ தாரி
காடைகள் கொக்குலாவும்
கோனான்குப் பம் (3.6.19:3-4)
என்று புதுவையிலுள்ள கோனான்குப்பத்தின் இயற்கை நலனை ஓர் அடியிலும் வருணிக்கிறார் துரை. மாலிறையன்.
இறை வருணனை
          உருவம் இன்னதென அறியப்படாதனவற்றை ஒருவாறு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தக் கண்ணால் காணுகின்ற பொருட்களோடு பொருத்திக்காட்டுதல் கவிஞர்கள் கைக்கொள்ளும் புலப்பாட்டு நெறியாகும். அவ்வகையில் இறை வருணனையை முக்கியமானதாகக் கருதலாம். இறைவனையும் அவன் பண்புநலன்களையும் விளக்குவதற்கு இயற்கைப் படைப்புகளையே சமயப் பெரியார்களும் கவிஞர்களும் துணைகொள்கின்றனர் எனலாம்.
          சைவ வைணவப் பெரியார்கள் இறைவனைப் போற்றும்போது அவனை இயற்கைப் பொருள்களாகக் காணும் திறத்தைப் பரிபாடல், தேவாரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் முதலியவற்றில் காணலாம். அவ்வகையில் துரை. மாலிறையனும் பல்வேறு இயற்கைப் பொருட்களைச் சுட்டி இறைவனின் பண்புநலன்களைப் பெறவைக்கிறார். பெருவெளி மலை (பாயிரம். 21:2), தருமண மலர் (பாயிரம். 21:4), (1.1.21.5, 6), மாங்குயில் இசை (பாயிரம். 22:1), பாங்குறு கடல் (பாயிரம். 22:3), கண்ணெதிர் குளிர்ச்சி ஊட்டும் கனல் (பாயிரம். 23:3) என்றெல்லாம் இறைவனைப் புகழ்கின்றார்.
ஓங்கிய மலையே உந்தன் உச்சியை
            எனக்குக் காட்டித்
தாங்கிய பெருமை முன்னே தாழ்ச்சிகொள்
            சிறுமை நானே
பாங்கியல் மிகுந்த சோலைப் பசுமையே (1.6.63:1-3)
என்று அருள்நிறை மரியம்மை காவியத்தில் மரியாள் இறைவனை வேண்டுகின்றாள்.
            அன்னம்மாள் கருவுற்றதை அறிந்து அப்பேற்றை அளித்த இறைவனை, வெள்ளைத் தாமரைப் பூம்பாத வெற்றியோய் (1.4.13:4) என்று பெண்கள் போற்றுகின்றனர்.
நலம் பாராட்டல்
            தலைவன் தலைவியின் நலம்பாராட்டும்போது இயற்கையில் காணலாகும் சிறப்புமிகு பொருள்களைத் தலைவியின் உறுப்புகளோடு ஒப்பிட்டு நோக்குவது மரபாகும். சிலப்பதிகாரத்திலும் கண்ணகியின் நலனைப் பாராட்டும் கோவலன் சொற்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.
            கருவுற்ற அன்னம்மாளின் நலத்தைப் பாராட்டும் அவள் கணவன் சுவக்கின்,
அன்னமே! அன்பே! என்றன் ஆருயிர்ப் பொன்னே! முற்றல்
கன்னலே! கனியே! இன்பக் கற்கண்டே! சுவையே! (1.4.17:1-2)
பூவே!நற் பணியே! பாலே! போற்றும்கண் மணியே! மானே!
வாவிச்செந் தாம ரையே! வாடாத முளரிப் பூவே! (1.4.18:1-2)
என்று போற்றுகின்றான். இங்கு அன்னம்மாளின் சிறப்பை உணர்த்த அன்னம், பொன், கன்னல், கனி, கற்கண்டு, பூ, பால், மான், செந்தாமரை, முளரி முதலான இயற்கைப் படைப்புகள் துணைபுரிகின்றன எனலாம். குழந்தை மரியாவின் அழகை,
விண்மீன்கள் கண்க ளாக விழைந்துவந் தனவோ? அன்றி
மண்மீதில் நீர்வாழ் கெண்டை வாழவந் தனவோ? தண்ணார்
கண்மீதில் குவளைப் பூக்கள் கலந்துகொண் டனவோ? என்று
பண்மீதில் சொல்ல டுக்கிப் பகர்ந்தவர் வியந்து சென்றார் (1.5.56)
என்றும்,
கொந்திலே பூத்த பூவின் கூட்டம்போல் உருக்காட்டும்மே
                                                            (1.5.61:4);
மரத்தின்/ பூவசைந்த தைப்போல் சேயின் புகழ்த்தலை அசைந்த
                                                (1.6.8:2-3);
குளமலர்த் தாம ரைபோல் குறிப்பினில் கவர்ச்சி (1.6.9:2);

விளைபசும் பயிர்போல் கண்கள் விளைத்திடும் குளிர்மைக் காட்சி
                                                                                                            (1.6.9:4)
என்றும் பாராட்டுகிறார் ஆசிரியர். மரியாளைக் கண்டோர்,
முழுநீலக் கடலோ? இஃது மூண்டபுண் ணியத்தின் ஊற்றோ?
எழுவான மதியோ? விண்ணில் எழுவண்ண வில்லோ? நாணோ?
தொழுவான வர்க்கே ஏற்ற சுடரோ? பொன் தூறல் தானே?
                                                                        (1.8.55:1-3)
பயிர்விளை மலையோ? காட்டுப்
            பசுமையின் ஒளியோ? தேனோ?
உயிர்களின் பாவம் போக்க  
            உருக்கொடு வரும ருந்தோ?
குயில்தரும் இசையோ? யாழோ?
            குழந்தையின் மழலை தானோ?
வெயில்சுடர் அணியோ? மண்மேல்
            விளையாடும் தாம ரையோ? (1.8.56)
என்றெல்லாம் அதிசயிக்கின்றனர்.
வருணனை
            ஒரு பொருளையோ நிகழ்வையோ வருணிக்கும்போது உவமைகள் கைகொடுக்கின்றன. அவ் உவமைகள் இயற்கை நிகழ்வுகளிலிருந்து கால்கொள்கின்றன எனலாம்.
பாத்திர வருணனை
            கதை மாந்தரின் தோற்ற வருணனையில் இயற்கைப் பொருட்கள் உவமையாக, உருவகமாகப் பயன்கொள்ளப் பெறுகின்றன. அன்னம்மாள் அன்னம்போல் நடந்துவருவாள் (1.4.2); வண்ணத்து மயிலைப் போல வருவாள் (1.4.3); மானைப் போல் வருவாள் (1.4.5); தேனைப்போல் பேசுவாள் (1.4.5) என்று தோழிகள் வருணிக்கின்றனர். அன்னம்மாள் கருவுற்றாள் என அறிந்த தோழியின் மகிழ்வை, முகத்தாமரை மலர்ந்தாள் (1.4.7) என்கிறார் ஆசிரியர். மேலும் முல்லையே என்று சொல்லும் முத்துப்பல் காட்டி நகைக்கின்றனர் (1.4.10) என்கின்றார்.
நிகழ்ச்சி வருணனை
        கதையோட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளை எளிதில் புலப்படுத்துவதற்குப் படைப்பாளர்கள் பல்வேறு உவமைகளைப் பயன்படுத்துகின்றனர். அவ் உவமைகளை அமைப்பதில் இயற்கை நிகழ்வுகளும் பொருட்களும் துணைபுரிகின்றன.
 அன்னம்மாளும் சுவக்கினும் தம் குழந்தை மரியாளுக்கு மூன்று வயதாகும்போது தேவாலயத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். அக் குழந்தையை அவ்வழிச்செல்லும் மக்கள் ஆர்வமுடன் நோக்குகின்றனர். அக்காட்சியை,
தாமரைக் குளத்தை நோக்கித் தாவிடும் வண்டு கள்போல்
மாமலர்ச் சூரி யன்முன் மலர்வண்ணம் துலங்கு தல்போல்
ஆய்மயில் மரியா தம்மை ஆங்குள்ள மக்கள் எல்லாம்
பாய்மன ஆர்வத் தோடும் பரிவுடன் நோக்கி னாரே!
                                                            (1.6.43)
என்று வருணிக்கிறார் ஆசிரியர்.
சூரியன் நோக்கிப் பூக்கும் சுடர்மணத் தாம ரைபோல்
சீரிய இறைவ னையே சிந்தனை கொண்டி ருந்தார் (1.7.33:1-2)
என்று மரியாளின் மனத்தன்மை கூறப்பெறுகிறது.
விடியாம லேயே தோன்றும் விரிகதிர்ச் சூரி யன்போல்
படியாம லேயே நல்ல பயன்தரும் மறைக்க ருத்து
முடியாம் நல்மணி புனைந்து முன்னின்ற மரியா வுக்கே
இடியாமுன் மின்னல் போல எல்லாமே தோன்றிற் றேயால்
                                                                        (1.7.36)
என்று குழந்தைப் பருவத்திலேயே இறையாண்மையில் சிறந்திருந்தமை வருணிக்கப்பெறுகிறது.
            கோயிலுக்குள் வானதூதரைக் கண்ட செக்கரியா கீரைத் தண்டெனச் சாய்ந்து அச்சத்தால் தலைகுனிந்தார் (1.9.6) என்று அழகான உவமையை இயற்கையிலிருந்து எடுத்தாள்கிறார் ஆசிரியர். இறையருளால் கர்ப்பம் தரிக்க எலிசபெத்து வீட்டைவிட்டு வெளிவராத தன்மையைச் சுட்டும் ஆசிரியர் அதனைக் கூட்டினுள் அடைந்துகொண்ட பட்டுப்பூச்சியோடு ஒப்பிடுகிறார் (1.9.17).  அன்னையின் மாட்சிமை உரைத்த படலத்தில் தீவினைக் குழியில் மக்கள் வீழ்ந்ததைச் சுட்டவந்த ஆசிரியர், சொறித் தவளைபோல் கத்தும் சொற்பகை வளர்த்தார் (2.16.30) என்கிறார்.
            இயேசுவின் நற்றாயாகிய கன்னி மரியாளின் புகழைத் தான் கூறவந்த செயலை எடுத்துரைக்குங்கால் ஆசிரியர் துரை. மாலிறையன், சிறுகொசு புவியைத் தூக்கச் சிந்தித்த தன்மை போல (பாயிரம்.10) என்றும் விண்வெளி நீயே உன்னை வெறும்புழு வலம்செய் வேனோ (பாயிரம் .23:1) என்றும் கூறுகிறார்.
           உடல்நலமிழந்த நிலையில் தன்னைத் தந்தையார் காண விரும்புகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட மரியாள், கனியது காம்ப றுந்து கடுந்தரை வீழ்தல் போல (1.7.57:2) நடுக்குற்று வீழ்ந்தாள் என்றும், சூசையைத் திருமணம் செய்துகொண்ட மரியாள் தாமரை தென்றல் காற்றால் தலைசாயும் தன்மைபோல சீமையோன் காலில் விழுந்து வணங்கினாள் என்றும், மாமரத் தளிர்போல் தூய மனத்தினளாகத் திகழ்ந்தாள் என்றும் (1.8.61) சித்திரிக்கிறார் ஆசிரியர்.
            தன் தாய் தந்தையைக் காணச் சென்ற மரியாள் தந்தையின் இறப்பிற்குப்பின் மீண்டும் ஆலயத்திற்கு வந்த செய்தி, கூண்டுள்வந் தடங்கி வாழும் குருவியைப்போல வாழ்ந்து (1.7.75:2) என்று குறிப்பிடப்பெறுகிறது. தனித்திருக்கும் தன் அன்னையைத் தானே தாங்கவேண்டும் என்னும் செய்தியைச் சீமையோனிடம் தெரிவிக்கும் மரியாள், ஆலவேர் மட்கி விட்டால் அதைவீழ்தான் காக்கும் ஐயா (1.7.80:4) என்கின்றாள்.
            மரியாளை மணப்பதற்காக வந்த இளைஞர் கூட்டத்தில் சூசை, முகிலினைக் கிழித்துத் தோன்றும் முழுநிலா ஒப்பாராகக் (1.8.30:3) காட்சியளித்தார். சூசை சான்றோரின் சொற்களை, கன்றுதாய் ஆவின் முன்னர்க் கருத்தொடும் ஒன்று தல்போல் ஒன்றினார் (1.8.51:3). ஆலயத்தில் சூசையைக் கண்ட மற்ற இளைஞர்கள் புதருளே முயல்களைப்போல் பொலிமுகம் மறைத்துக்கொண்டு / கதிரவன் முன் இருள்போல் கலங்கிச் சென்றனர் (1.8.52:3-4) என்றும் ஆண்டவன் அருளில் மூழ்கிய குழந்தை மரியாவை, விளைத்திடும் நன்செய் போல விளங்கினார் (1.7.23:4) என்றும் வெடிக்கின்ற இலவம் பஞ்சின் மென்மைபோல் மனம்காத் தார் (1.7.26:4) என்றும் சுனைதரும் குளிர் நகைப்புடையவர் (1.7.27:1) என்றும் கொத்துப்பூக் கூட்டத் துள்ளோர் கோதில்தா மரையே ஒத்தார் (1.7.37:4) என்றும் சுட்டுகிறார்.
            இராயப்பர் கைப்பாசு என்பவரின் இல்லம் வருவதை, இலவங் காயின் / பஞ்சுபின் கருவி தைபோல் பதுங்கியும் தெரிந்தும் சென்று (2.13.51:1-2) என்று வருணித்தல் ஆசிரியரின் நுணுகிநோக்கும் திறனை வெளிப்படுத்துகிறது.
            எருசலேம் நகரில் நடைபெற்ற பெந்தகொச்தே விழாவில் யூதர்கள் நிலையை,
கரும்பினை மொய்க்கச் செல்லும்
            கறுப்பெழில் எறும்பு கள்போல்
திரும்பிய பக்கம் எல்லாம்
            திகழ்சுறு சுறுப்புக் காட்டி
வரும்போகும் எறும்பொவ் வொன்றும்
            வந்துமுன் பேசு தல்போல்
விரும்பியே பேசி யூதர்
            மிகவிரை வுற்று வந்தார் (3.1.41)
என்றும், தீயவர்கள் நிலையை,
ஆங்காங்கே மின்னிப் பெய்த அருமழை கூடிப் பொங்கு
மாங்கடல் கலந்த தன்பின் மதிப்புடன் திகழ்வ தைப்போல்
தீங்கான பேரும் அன்பு தெளிதிகழ் எருச லேமின்
பாங்கான தெருவில் வந்தே பளிச்சிட்டு மின்னி னாரே  (3.1.42)
என்றும் சித்திரிக்கிறார் ஆசிரியர்,
       இறைமையில் ஒன்றிய அன்னம்மாளை, 'இறைமை நீரில் ஃ ஒன்றிப்போய் நீந்தும் மீன்போல் உணர்வுடன் கலந்தி ருந்தார்' (1.5.19:1-2) என்றும் இயற்கைக் காட்சிகளை உவமையாக்கி நிகழ்ச்சிகளின் புலப்பாட்டிற்கு வழிவகுக்கிறார் ஆசிரியர்.
இயற்கையில் தற்குறிப்பேற்றம்
           இயற்கை நிகழ்வுகளில் தற்குறிப்பை ஏற்றுதல் புலப்பாட்டு உத்திகளில் ஒன்றாகும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் முதலான காப்பியங்களில் இத்தன்மையைப் பரக்கக் காணலாம். துரை. மாலிறையனும் இவ்வுத்தியைத் திறமையாகப் பயன்கொள்கிறார்.
            இராயப்பர் மூன்றாம் முறையும் தான் இயேசுவின் சீடர் இல்லை என்று மறுதலிக்க இயேசுவை பாதாளச் சிறையில் அடைக்கின்றனர். மறுநாள் சூரியனின் தோற்றத்தை,
பாவத்தின் கறையை எல்லாம் பாடுகள் பட்டு நீக்கும்
காவலர் தம்மைக் கண்ட காட்சியால் கலங்கிச் சென்றும்
ஆர்வமாய்க் கதிரோன் காலை அலைகடல் மேலே வந்தான்
தேவனின் திருமைந் தர்தம் தீர்ப்பினை அறிவ தற்கே
                                                            (2.13.61)
என்று சித்திரிக்கும் ஆசிரியர் இயற்கை நிகழ்வைத் தற்குறிப்பேற்றமாகப் படைத்துள்ளார்.
            இயேசுவைச் சிலுவையில் அறைந்து கள்ளிலும் முள்ளிலும் இழுத்துச் சென்றனர். மாலைப் பொழுதில் சூரியன் மறைந்த காட்சியை,
கண்படக் கலங்கி யோர்கள் கண்ணீரும் ஐய னார்மேல்
புண்பட யூதர் துப்பும் புகழிலா எச்சில் நீரும்
மண்படக் கொப்பு ளித்த மரிமக னார்செந் நீரும்
விண்பட நிவந்தெ ழுந்து வெய்யோனை மறைத்த வேயால்
                                                            (2.14.33)
என்றும் அதற்கு மறுநாள் சூரியன் மறைந்ததனை,
கடும்பகை யூத மக்கள் கனல்மூச்சுக் கெதிர்நில் லாமல்
சுடும்கதிர் வெய்யோன் அஞ்சிச் சோர்ந்துவான் உச்சி நீங்கிப்
படும்கதிர் மலைக்கண் வீழப் பண்ணியே குளிர்ந்தான் என்றால்
கொடுங்கய வர்கள் கூட்டக் கொதிப்பினை மதித்தல் எங்ஙன்?
                                                                        (2.14.33)
என்றும் வருணிக்கிறார். இயேசுபிரானைக் கல்லறையில் வைத்து மூடினர். அதனை,
மண்கலங் கவும்மே லுள்ள மரம்கலங் கினமண் மீதில்
கண்கலங் கினர்நல் லோர்கள் கலம் கலங் கிடுநீர்ப் பவ்வம்
விண்கலங் கிடமேல் ஓங்கி வெளிகலங் கினகாற் றோடும்
எண்கலங் கிடத்தீத் துன்பம் எங்கெங்கும் கலந்த வேயால்
                                                                        (2.16.53)
காடுகள் கலங்கக் காட்டில் கறவைகள் கலங்க மந்தை
ஆடுகள் கலங்க மேய்க்கும் ஆயர்கள் கலங்கப் புள்ளின்
கூடுகள் கலங்கக் கூட்டின் குஞ்சுகள் கலங்க மக்க
ளோடுகண் ணீர்க லந்தே ஒடுங்கிற்றே வைய மெல்லாம்   (2.16.54)                                                                    
எனவரும் பாடல்களில் இயற்கையே கலங்கியதாக வருணிக்கிறார் ஆசிரியர்.
            மேற்கண்டவற்றால் துரை. மாலிறையன் தம் அருள்நிறை மரியம்மை காவியத்தில் இயற்கை வருணனையில் அதிகமாகக் கவனம் செலுத்தவில்லையெனினும் நலம் பாராட்டல், வருணனைகள், தற்குறிப்பேற்றம் முதலானவற்றில் இயற்கைக் குறிப்புகளைச் சிறப்பாகக் கையாளுகின்ற தன்மையைக் காணமுடிகிறது.
பயன்நூல்
துரை மாலிறையன், அருள்நிறை மரியம்மை காவியம், புதுச்சேரி : மரியம்மை பதிப்பகம், 1996.

No comments:

Post a Comment