முனைவர்
ம.ஏ. கிருட்டினகுமார்
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை
புதுவை
அரசு கா.மா. பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி
605 008
புதுவைச் சாரலில் தமிழ் மணம்
தன்னை முன்னிறுத்தாமல் தன் குழந்தையை முன்னிறுத்தும்
தாய் போல தம் நூல்களை முன்னிறுத்தும் இலக்கிய ஆர்வலர் இந்நூலாசிரியர். அறிவும் திறமையும்
பதவியும் புகழும் கொண்டவர்களுக்கு நேரமே கிடைப்பதில்லை என்னும் கூற்றுக்கு முரணானவர்.
எச்செயலானாலும் ‘முடியாது’ எனக் கூறாமல் அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்றுத் திறம்படச்
செய்துமுடிப்பவர். அனைத்து செயல்களுக்கும் நேரம் கொடுக்கும்வகையில் எவரால் நாட்களைத்
திட்டமிட முடிகிறதோ அவரே சிறந்தவர் எனக்கூறி அவ்வாறே வாழ்ந்து வழிகாட்டுபவர். பேராசிரியராக,
துறைத்தலைவராகச் சிறக்கப் பணியாற்றும் இவர் இலக்கிய மேடைகளின் அழைப்பினை மறுக்காது
கலந்துகொண்டு சிறப்பிப்பவர். பயணம், காத்திருப்பு என்னும் சூழலிலேயே இன்று பெரும்பாலான
பொழுதுகள் வீணாகின்றன. இவ்விரண்டு சூழலையும் வெறுக்காது அதனைத் தமக்கான இலக்கிய நேரமாக
எடுத்துக்கொண்டு கவிதை, சிறுகதை, நாடகம் என ஏதேனும் ஓர் இலக்கியப் படைப்பை உருவாக்கும்
இடமாக மாற்றிக்கொள்ளும் வல்லமை உடையவர். அனைவரும் போற்றும் பெண்ணியத்தை சிரமேற்றுக்
கொண்டாடுபவர். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறார் எனத்
தம் துணைவர் முனைவர் நிக்கி. கிருட்டினமூர்த்தி அவர்களின் பண்பினை எடுத்துக்காட்டி
ஆண் இனத்தைப் போற்றுபவர்.
இலக்கியங்கள் எழுத்துக்களின் அழகிய கூட்டணி.
இலக்கியங்களே ஓர் இனத்தின் ஆவணம். மறைந்துபோன செல்வாக்கினை மீட்டுக்கொணரும் வல்லமை
இலக்கியங்களுக் குண்டு. அவ்வாறு கடின உழைப்புடன் வெளிவந்து உங்கள் கரங்களில் தவழ்ந்துகொண்டிருக்கும்
பேராசிரியர், முனைவர், துறைத்தலைவர், கவிஞர், எழுத்தாளர், நாடகாசிரியர் எனப் பல அடைமொழிகளில்
அழைக்கப்படும் ஔவை நிர்மலா அவர்களின் “புதுவைச் சாரலில்” என்னும் இந்நூல் புதுவை இலக்கிய
வரலாற்றில் இடம்பெறக்கூடிய அளவிற்குத் தரமான கட்டுரை களை உள்ளடக்கியுள்ளது. இந்நூலின்வழி
புலவர்களை மதித்த காலம் மலையேறிவிட்டது என்னும் குற்றச்சாட்டை மாற்ற விழைந்துள்ளார்.
புலவர்களின் அருமையினை புரவலர்கள் போற்றும் வகையில் இந்நூல் வெளிவந்துள்ளமை காலத்திற்
கேற்ற பரிசு.
இப்படைப்புக்கு இலக்கியக் களமாகப் புதுவையையும்
அதில் இடம்பெறும் பாத்திரங்களாக புதுவைப் படைப்பாளி களையுமே எல்லையாக வகுத்துக்கொண்டுள்ளார்
இந் நூலாசிரியர். கற்றோரைக் கற்றாரே காமுறுவர் என்னும் பழமொழிக்கேற்ப படைப்பாளிகளின்
பெருமையினை உணர்ந்த படைப்பாளியாக நிற்கிறார் இந்நூலாசிரியர்.
முதலில் ‘அமுதகவி சாயபு மரைக்காயர்’ என்னும்
தலைப்பில் கவிஞராகவும் வள்ளலாகவும் திகழ்ந்த கவிஞர் சாயபு மரைக்காயரின் இலக்கியப் புலமையினையும்
நற்பண்புகளையும் எடுத்துக்காட்டுகிறார். படைப்பாளிகள் இலக்கிய வளத்தைப் படைப்பில் காட்டினாலும்
மட்டும் போதாது. தம் வாழ்விலும் அவர்களுடைய எழுத்துக் களுக்கு உயிர்கொடுக்கவேண்டும்
என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அமுதகவி என்பதனை எடுத்துக்காட்டியுள்ளார். பிறர்
வாழ்வுக்காகத் தன்னையே கரைத்துக்கொள்ளும் பெண்ணைப் போற்றுவது மானுடத்தின் அடிப்படைக்
கடன் என்பதனை வலியுறுத்தும் வகையில்,
ஆண் சிசுக்களிலும் அதிக மாண்பைப்
பெண் சிசுக்களுக்கே பெரியவன் அளித்தான்
என்னும்
அடிகளில் உணர்த்துகிறார் அமுதகவி. இறைவனே பெண்ணுக்கு
அளித்த பெருமையினை அமுதகவி எடுத்துக் காட்டுவதனைச் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர்.
பாரதியின் மூப்பு, இறப்புச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் மகாகவியின் புதிய பரிமாணத்தைப் படைத்துக் காட்டுகிறார்
இந்நூலாசிரியர்.
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ
என
இளமைப்பருவத்திலேயே, பிறப்பு, இளமை, இறப்பு என வாழ்வை முடித்துக்கொள்ளும் மனிதர்களை
நினைத்து மகாகவி பாடியுள்ளதனை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். தாம் பாடிய பாடலுக்கேற்ப
இயல்பான மனிதரைப் போல் முதுமை எய்தி சாகாது, விலங்குகளுள் பெருமையுடைய யானையால் இடரப்பட்டு
மரணம் எய்தினார். பெரிய மனிதரைக் கொல்லப் பெரிய விலங்கினைக் காலன் தேர்வு செய்ததை எண்ணி
வியக்கமுடிகிறது.
பாவேந்தரின் குடும்ப விளக்கில் சமூக மரபு
மாற்றம் என்னும் தலைப்பில் புரட்சிக்கவிஞரின் எண்ணங்களை அழகாகப் படம்பிடித்துக்காட்டியுள்ளார்
இந்நூலாசிரியர் ஔவை நிர்மலா.
வேடப்பா நீ மின்நகை முத்தை
மணக்கவோ நினைத்தாய் வாழ்க்கைத் துணைஎன
அணுக எண்ணமோ அறிவித்திடுவாய்
என்னும்
அடிகளை எடுத்துக்காட்டி “மணமக்கள் இருவரின் சம்மதமும் பொதுமக்கள் உறவினர் மத்தியில்
உறுதிப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறார்” எனப் பாவேந்தரின் எண்ணத்தை எடுத்துரைப்பது
படைப்பாற்றலின் அருமையை உணர்த்தும் பானைக்குப் பதச்சோறு. “பாரதிதாசனார் கூறிய கருத்துகள்
அவை கூறப்பட்ட காலத்தில் நடைமுறையில் பரவலாக இல்லாமல் மக்களால் ஏற்கப்பட முடியாதனவாகவும்
கருதப்பட்ட நிலைமாறி இன்று அவையனைத்தும் நடப்பியலில் உண்மையாகி இருப்பதை அவரது படைப்பின்
வெற்றியாகக் கருதலாம்” எனக்கூறி பாவேந்தர் மக்கள் நெஞ்சில் நிலைபெற்றிருப்பதற்கான காரணத்தினை
நூலாசிரியர் நன்கு புலப்படுத்தியுள்ளார்.
கம்பதாசன் கவிதைகளில் சமுதாயக் கருத்துகள்
என்னும் தலைப்பில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, ஏழ்மையில் வாழ்ந்து பல இடர்ப்பாடுகளுக்கிடையே
கம்பதாசன், சிறந்த படைப்பாளியாகத் திகழ்ந்ததனை நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.
கூலித்தொழிலாளர்களை யும், கலைப்புலத் தொழிலாளர்களையும் தம் கவிதையின் நாயகர்களாகக்கொண்டு
பாடியுள்ள திறத்தை எடுத்துக் காட்டுகிறார் நூலாசிரியர். “பசியைப் பாடாத பெருங்கவிஞர்கள்
இல்லை எனலாம். மனிதனின் இறப்புவரை பூர்த்தி செய்யப்பட வேண்டிய முதல் தேவையாக இருப்பது
பசியேயாகும். பசியைப் போக்கும் உணவைப் பெறமுடியாத நிலையே வறுமையால் நேரும் முதல் துன்பமாகும்.
இதனைக் கம்பதாசன் தொழிலாளர்களின் வாழ்வில் நீக்கமுடியாத துன்பமாக ஆங்காங்கே குறிப்பிட்டுச்
செல்கிறார்” எனக் கம்பதாசனின் கவிதையின் கருத்தாழத்தை
ஆடையிலே பொத்தல் உளதே - கூடை
அதனிலே பொத்தல் உளது அதிசயமோ?
என்னும்
அடிகளின்வழி எளிமையாகப் புலப்படுத்துகிறார் இந் நூலாசிரியர்.
இலெனின் தங்கப்பாவின் படைப்பாளுமையில்
ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த படைப்பாளியின் தமிழுணர்வினை அவரது படைப்பாளுமையின்வழி
எடுத்துக் காட்டுகிறார் நூலாசிரியர். “கல்வியின் காரணமாக மேம்பாடு அடைந்த மகளிர், உரிமை,
நாகரீகம் என்ற பெயரால் மரபுவழிப்பட்ட குடும்பம் சார்ந்த கடமைகளை மறந்துபோன தன்மையையும்
சாடுகிறார் கவிஞர்” எனத் தங்கப்பாவின் எண்ணத்தைப் புலப்படுத்துகிறார் நூலாசிரியர்.
காரை இறையடியான் படைப்புகளின் பெண் என்னும்
தலைப்பில் முகம்மதலியாகக் காரைக்காலில் பிறந்தவர் தமிழ்ப்பற்றால் காரை. இறையடியானாக
எழுத்துலகில் வலம்வந்ததனை எடுத்துக்காட்டுகிறார். இதழாசிரியாகத் திகழ்ந்த காரை இறையடியானின்
ஆளுமையினை அவருடைய பெண்ணைப்போற்றிய எழுத்துக்களின்வழி எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர்.
“பிற சமூகத்தினரைப் பார்க்கும் பெண்குழந்தைகள் அவர்களைப்போன்றே தாமும் பள்ளி சென்று
பயிலவேண்டும் என்று விரும்பினால் அதனைத் தடுத்தல் கூடாது என்பதனை,
பள்ளிக்குச் செல்லற்குப் பாவையர் ஆர்வுற்றால்
தள்ளற்க; செய்யேல் தடை
என்று
கூறுகிறார்”. இவ்வடிகளின்வழிப் பெண்ணின் முன்னேற்றத்தைப் பாடிநிற்கும் காரை இறையடியானின்
பெருமையினைப் புலப்படுத்துகிறார் நூலாசிரியர்.
கவிஞர்
துரை. மாலிறையனின் அருள்நிறை மரியம்மை காவியத்தில் இயற்கை என்னும் தலைப்பில் துரை.
மாலிறையனின் இயற்கை ஈடுபாட்டைப் போற்றுகிறார்.
காடுகள்
கலங்க காட்டில் கறவைகள் கலங்க மந்தை
ஆடுகள்
கலங்க மேய்க்கும் ஆயர்கள் கலங்கப் புள்ளின்
கூடுகள்
கலங்கக் கூட்டின் குஞ்சுகள் கலங்க மக்க
ளோடு
கண்ணீர் கலந்தே ஒடுங்கிற்றே வையமெல்லாம்
எனவரும்
பாடல்களில் இயற்கையே கலங்கியதாக வருணிக் கிறார் ஆசிரியர்” என நூலாசிரியர் காவியத்திலுள்ள
இயற்கைப் பதிவுகளை நுணுக்கமாக ஆய்ந்து வெளிப்படுத்துகிறார்.
இலக்கியத் தென்றல் நசீமா பானு : வாழ்வும்
பணியும் தலைப்பில் தமிழ்மணம் மாறாத இலக்கியப்
பரம்பரையில் சரோஜினியாகப் பிறந்து தமிழில் ஈடுபாடுகொண்டு படைப்பாளியாகவும் பேராசிரியராகவும்
தமிழ்த்துறைத் தலைவ ராகவும் சிறக்கப் பணியாற்றிய திறத்தை நூலாசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.
“பேராசிரியர் என்றுமே தம் மாணவர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வார். அவர்களிடத்து
தாய்போல் பரிந்து அன்பு செலுத்தும் நேயமுடையவர். அதே நேரத்தில் அவர்கள் செய்யும் தவறுகளைக்
கண்டித்து நல்வழிப்படுத்தும் திறமுடையவர். ஏழை மாணவர்களுக்கு உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும் அவர்கள் மேன்மைக்கு வழிகோலுபவர். இவரை ஓர் ஆசிரியராக மட்டும் நினையாமல்
இவர்தம் மாணவர்கள் இவர் இல்லத்திற்கு அடிக்கடிச் சென்று தமது பல்வேறு சிக்கல்களுக்கு
நெறிகாட்டுதலைப் பெற்று வாழ்க்கையில் உயர்ந்திருப்பதைக் காணலாம்” எனப் பேராசிரியர்
நசீமாபானு அவர்களின் நற்பண்புகளை இக்கட்டுரையில் அடுக்கிச்சொல்வது அவர்மேல் நூலாசிரியர்
கொண்டுள்ள மதிப்பினை எடுத்துரைக்கிறது.
இலக்கியச்சுடர் சாயபு மரைக்காயர் என்னும்
தலைப்பில் பேராசிரியராகவும் துறைத்தலைவராக வும் சிறக்கப் பணியாற்றிய படைப்பாளியான சாயபு
மரைக்காயரின் பெருமைகளை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். “இலக்கியச்சுடர்” என்னும் திறனாய்வு
நூலின் தலைப்பே சாயபு மரைக்காயருக்கு அடைமொழியாக நிற்கும் பெருமையுடையது என்பதனை அவருடைய
இலக்கியப் பணியின்வழி எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் ஔவை நிர்மலா. ‘இலக்கியச் சுடர்’
என்னும் இந்நூலில் அமைந்த இருபது கட்டுரைகளும் தமிழ் இலக்கியப் பரப்பின் பல்வேறு காலகட்டத்தைப்
பல்வேறு கோணங்களில் நோக்குவதாக அமைந்துள்ளன” என்னும் நூலாசிரியரின் அடிகளே சாயபு மரைக்காயரின்
திறனாய்வுப் புலமைக்குச் சான்றாக அமைவதனை உணரமுடிகிறது.
பாவண்ணனின் காற்றில் கரைந்துவரும் குரல்
என்னும் தலைப்பில் தொன்மத்தைக் கையாண்ட பாவண்ணனின் திறத்தை எடுத்துக்காட்டுகிறார் இந்நூலாசிரியர்
“தொன்மக் கதையைத் தம் சிறுகதையின் கதைக்கருவாக எடுத்துக்கொள்ளும் பாவண்ணன் காலங்காலமாகப்
பெண்கள் கடந்துவருகின்ற ஆணாதிக்கத்தால் ஊசாலாடுகின்ற கணவன் - மனைவி பிணைப்பை நிகழ்காலத்துடன்
பொருத்தி மிக அழகாகப் பின்னியுள்ளார்” என்னும் நூலாசிரியரின் அடிகள் பாவண்ணனின் படைப்புத்திறனை
எடுத்துக்காட்டுகிறது.
கவிஞர் மலையருவியின் மனிதத் தின்னிகள்
; ஓர் அங்கதப்படைப்பு என்னும் தலைப்பில் கவிஞர் மலையருவி தம் படைப்பில் அங்கதச் சுவையினைக் கையாண்டுள்ள திறத்தைப் புலப்படுத்துகிறார்
நூலாசிரியர். “புரிகின்ற தமிழில் குழந்தைக்குப் பெயர் இடாமல் தமிழ் இலக்கணப்படி சொற்களின்
முதல் ஒலியாக வராத ரி, ரீ, லு, லூ என்றெல்லாம் வருகின்ற எழுத்துக்களில் பெயரிடுதல்,
பெயர்களில் ஜ, ஸ்ரீ, ஷ முதலான வடமொழி ஒலிகள் வந்தால்தான் “மாடர்னா”க இருக்குமென்று
கருதுகின்ற தவறான கொள்கை, எழுத்துக்களைக் கூட்டினால் கூட்டுத்தொகை இத்தனை வந்தால் வாழ்வு
வளமாக இருக்கும் என்று நம்புதல் முதலிய சமுதாயத்தில் பரவிவருகின்ற அயற் பண்பாட்டு மோகத்தைக்
கோபத்தோடு நையாண்டி செய்கிறார் கவிஞர்” என மலையருவியின் தமிழுணர்வை வெளிப்படுத்தும்
அங்கதக் கவிதையின் சாரத்தை வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.
மனிதநேயக் கவிஞர் நிக்கியின் கேட்காத வரங்கள் என்னும் தலைப்பில் புதுச்சேரிக்கு அண்மையில் உள்ள
அனுமந்தையில் பிறந்து பள்ளி, கல்லூரி, ஆய்வு என அனைத்துக் கல்வி நிலைகளிலும் சிறந்து
விளங்கி, முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராகத் தம் வாழ்வை உயர்த்திக்கொண்ட நிக்கி.
கிருட்டினமூர்த்தி அவர்களின் படைப்புத்திறனை ஆய்ந்துள்ளார் நூலாசிரியர். தமிழில் மிகுந்த
ஈடுபாடுகொண்ட நிக்கி அவர்கள் ஆசு கவியாகிக் கவிதை புனைந்து நின்ற சிறப்பினை இத்தலைப்பில்
நூலாசிரியர் வெளிப்படுத்துகிறார். “கவிஞர்கள் முன் எழுதப்பட்ட கவிதையின் அழகைக் கண்டு
வியப்பதும் அத்தகைய கவிதைகளைப் படைத்த கவிஞர்களைப் போற்றுவதும் இயல்பு. அவ்வகையில்
கிருட்டினமூர்த்தி சங்ககாலம் தொட்டு இன்றுவரை தமிழ் இலக்கியப் பரப்பைச் செழுமைப்படுத்திய
கவிஞர்களை நினைவுகூர்வதிலும் அவர்தம் படைப்புகளின் சிறப்பை எடுத்துக்கூறுவதிலும் மனம்
மகிழ்கிறார்” என நிக்கி அவர்களின் பரந்துபட்ட தமிழ்ப்புலமையினை எடுத்துக் காட்டுகிறார்
நூலாசிரியர்.
எண்ணிலா மாணாக்கர்கள் இவரால் பேராசிரியர்களாக
வும் அலுவலர் களாகவும் இலக்கியவாதிகளாகவும் உலகை வலம்வந்துகொண்டிருப்பது இவருடைய அருமையான
வழிகாட்டுதலுக்குச் சான்று. இவருடைய நூல்களே பல இலக்கியப் படைப்புகளுக்கு வழிகாட்டியாக
இருப்பதனை இவருடைய நூல்களைக் கற்றவர்கள் நன்குணர்வர். “புதுவைச் சாரலில்” என்னும் இந்நூலும்
படைப்பாளிகளை உலகிற்கு எங்ஙனம் அறிமுகம் செய்யவேண்டும் என்னும் வழிகாட்டுதலை யும் இலக்கியப்
படைப்பாளிகளின் கடமையினையும் நன்கு எடுத்துரைக்கிறது.
தன்னை எதிர்த்து நிற்பவரே ஆயினும், நேர்மையான;
உண்மையான வழியில் நிற்பாராயின் குற்றம் பார்க்காது குணத்தைக்கொண்டு அவரை மேடையிலேயே
பாராட்டும் அரிதான குணம் கொண்டவர் இந்நூலாசிரியர். இவருடைய தலைமையில் தமிழ்த்துறையில்
பணியாற்றுவது எனக்கு மட்டுமல்ல என்னைப் போன்ற பலருக்கும் மனநிறைவைத் தரும் எனில் மிகையில்லை.
இவர் மேன்மேலும் இலக்கியங்களைப் படைத்து, தமிழ் இலக்கிய உலகிற்குப் பெருமை சேர்க்கவேண்டும்
என வாழ்த்தி வணங்குகிறேன்.
மதிப்புடன்.
ம.ஏ. கிருட்டினகுமார்
No comments:
Post a Comment