ஒன்று பெறுவீர்
தொழில் நுட்பக் காலத்தில்மனிதக் கைகள்
மரத்துப்போய் விட்டன!
கருவிகள் கருவிகள்
எங்கும் எதற்கும்!
இனி
நான்கு சதுர அடிக்குள்
நானாவித வேலைகளும்
முடிந்து விடும்...
கல்வி
கேளிக்கை
விளையாட்டு
பணிவாய்ப்பு
கைப்பேசியில்
கச்சிதமாய் முடியும்!
வேலையில்லாத் திண்டாட்டம்
வேதனையின் உச்சமாய்....
நீரில்லை
விளையும் நிலமில்லை
வீடில்லை
காடில்லை
காற்றில் தரமில்லை
நஞ்சில்லா உணவில்லை
நல்ல மனமில்லை
என்று
அல்லலுறுங் காலம்
வெகுதொலைவில் இல்லை!
அத்தனைக்கும் காரணம்
அளவிலா மக்கள் தொகை!
நெரிசல் நெரிசல்
சாலை...
சோலை...
ஆலை....
மேலைநாட்டு வேலை....
சீலை வாங்கும் அங்காடி...
தோலை வெளுப்பாக்கும் அழகு நிலையம் ....
மாலைக்காற்று வாங்கும் கடற்கரை ....
மூலை மங்கிய உணவு விடுதி ....
எங்கும் நெரிசல்
பூமித்தாயின் முதுகெலும்பு நெரிக்கும் நெரிசல் !
என்ன செய்யலாம்?
ஏது செய்யலாம்?
எப்படிச் செய்யலாம்?
ஒரு குடும்பத்திற்கு
ஒரே ரேஷன் அட்டை போல்
ஒரே வாரிசு!
ஆணோ பெண்ணோ
அதுவே முதலும் இறுதியும்!
கூட விளையாட...
விட்டுக்கொடுப்பதைக் கற்க....
துணைக்குச் செல்ல....
இப்படி எத்தனையோ காரணங்கள் முன்வைத்து
அடுத்த குழந்தைக்கு
அனுமதி கேட்காதீர்!
அத்தனைக்கும்
அக்கம் பக்கம் வீட்டுக்
குழந்தைகளோடு
ஆயத்தம் ஆக்குங்கள்!
இல்லையேல்
வாரிசுகளே
ஒன்றை ஒன்று
அடித்து துவைத்து
ஏப்பம் விட
எதிர்காலம்
எதிரிக் காலமாய் ஆகலாம்!
ஒன்று பெறுவீர்
ஒளிமய மாக்குவீர்!
No comments:
Post a Comment