பாரதியின் மூப்பு, இறப்புச் சிந்தனைகள்
மூப்பும் இறப்பும் மனித உலகின் மாறாத நியதி. இவற்றை எண்ணிப்பார்க்க எவரும் அஞ்சுவர். தம் மனத்திலிருந்து
அத்தகைய எண்ணங்களை விலக்கவே விரும்புவர். ஆனால், உலகின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்பாளர்களாக
இனங்காணப்பட்டுள்ள அனைவரும் பெரும்பாலும் மூப்பு, இறப்புச் சிந்தனைகளை, அவற்றின் பன்முகப்
பரிமாணங்களை அஞ்சாமல் எண்ணிப் பார்ப்பதோடு அவற்றைத் தத்தம் படைப்புகளில் பதிவுசெய்யவும்
தவறுவதில்லை. இந்தக் கருதுகோளுடன் காணும்போது
உலக மாக்கவி பாரதியும் இதற்கு விதிவிலக்கல்லர் என்பதை அறியமுடிகிறது.
முதுமையின் வாயிலாகக் கருதப்படும் நாற்பதைத்
தொடும் முன்னரே இப்பூவுலகைத் துறந்த புரட்சிக்குயில் பாரதி மூப்பு, இறப்புச் சிந்தனைகளை,
அவற்றின் பல்வேறு பரிமாணங்களைத் தம் அனைத்துப் படைப்புகளிலும் எடுத்தியம்பியுள்ளமை
வியப்பிற்குரியது. அவ்வியப்பின் வெளிப்பாடே இக் கட்டுரையின் ஆக்க நோக்கமாகும்.
பாரதியின் படைப்புக் கருப்பொருள்களான நாட்டு
விடுதலை, பெண் விடுதலை, மொழி உணர்வு ஆகியவற்றைப் போன்றே மூப்பு, இறப்புச் சிந்தனைகளும்
அவரை வெகுவாகப் பாதித்திருந்தமை கண்கூடு.
கடையத்தில் பாரதியார் குடியிருந்த வீட்டு
வாசலில் நின்று பாரதியார் ‘அமிர்தசாஸ்திரம்’ என்னும் சாகாதிருக்கும் வழியைப் பற்றிச்
சொற்பொழிவு ஆற்றுவார்
என்னும்
செய்தி இங்கு நோக்கத்தக்கது. பாரதியாரது கடைசி வெளியூர்ப் பயணச் சொற்பொழிவாக அமைந்தது
ஈரோடு - கருங்கல்பாளையம் வாசகசாலை சபையில் ஆற்றிய சொற்பொழிவாகும். தம் சொற்பொழிவு பற்றி,
எனக்கு ஒரு விஷயம்தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். எக்காலத்திலும்
மரணமில்லாமல் இருக்கக் கூடுமென்ற விஷயம் (மேற்படி 402)
என்று
பாரதியார் குறிப்பிடும் செய்தியும் மேற்கருத்தை உறுதிப்படுத்தக் காணலாம்.
மூப்பு, இறப்புப் பற்றிய பாரதியின் சிந்தனைகளைக்
கீழ்வரும் பகுதிகளில் தொகுத்துக் காணலாம் :
மூப்பச்சம்
நெடுநாள் வாழும் விழைவு
இறப்புச் சிந்தனை
இறப்புறுதி
இறப்பச்சம்
இறையும் இறப்பச்சமும்
இறைவனைத் தொழுதல் இறப்பைத் தவிர்க்கும்
மரணமிலாப் பெருவாழ்வு.
மூப்பச்சம்
வயது ஆகஆக இளமை கழிந்து உடல் தளர்ந்து
உள்ளமும் தளர்ந்து பல்வேறு பிணிகளும் வந்தடைய வாழும் மூப்புப் பருவம் அச்சத்தைத் தரக்கூடியதே.
இத்தகைய மூப்புப் பற்றி நடுத்தர வயதைத்தாண்டி முதுமையின் வாயிலைத் தொடுவோர் நினைத்துப்
பார்த்தல் இயல்பானதே. ஆனால் பாரதியார் தம் இளமைப் பிராயத்திலேயே இத்தகைய சிந்தனையைத்
தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளமை சிறப்புக்குரியது.
.
. . கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக்
கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை
மனிதரைப் போலே - நான்
வீழ்வே
னென்றுநினைத் தாயோ?
என்று
கூறுவதன் மூலம் மூப்புக்கால வாழ்வில் செயல்பாடுகள் குன்றிப்போகும் பயனற்ற தன்மையைப்
பாரதியார் புலப்படுத்துகிறார்.
நெடுநாள் வாழும் விழைவு
மனிதனின் ஆயுட்காலம் நூறு ஆண்டுகள் என்று
வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு மனிதனுக்கு வரையறுக்கப்பட்டதாகக் கருதப்படும்
நூறாண்டுகளும் வாழ மனிதன் விரும்புவதை வேதங்கள் புலப்படுத்துகின்றன. அத்துடன் நூறாண்டுகள்
வாழ வழிசெய்யும் வழிபாட்டுப் பாடல்களையும் அவை தன்னகத்தே கொண்டுள்ளன. நூறாண்டுகளை முழுமையாக
வாழ இறைவன் தமக்கு அருள்புரிய வேண்டும் என்று மக்கள் விரும்பும் மனப்பாங்கைத் தமிழ்
இலக்கியங்களில் பரவலாகக் காணமுடிகிறது. இதே சிந்தனையைப் பாரதியாரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மனம்,
சக்திதனக் கேகருவி யாக்கு - இந்தத்
தாரணியில்
நூறுவய தாகும்
(சக்திக்கு ஆத்ம ஸமர்ப்பணம்
20:1-2, பா.கவி., ப.83)
கனக்குஞ்
செல்வம் நூறு வய
திவையுந் தரநீ கடவாயே
(விநாயகர் நான்மணிமாலை
7: 4, பா.கவி., ப.3)
நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்
(விநாயகர் நான்மணிமாலை
20:14, பா.கவி., ப.8)
ஆகிய
பகுதிகள் வேதங்களாலும் வழிவழியாக மக்களாலும் சொல்லப்பட்டுவரும் நூறாண்டென்னும் கால
அளவில் பாரதியாரும் நம்பிக்கை கொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றன.
நூறு
வயதுண்டு என்பதேனும் நல்ல நிச்சயமாக இருந்தால் குற்றமில்லை. நூறு வருஷங்களில் எவ்வளவோ
காரியம் முடித்துவிடலாம். அடுத்த நிமிஷம் நிச்சயமில்லை என்று தீர்ந்துவிட்டால் எதைக்
கொண்டாடுவது?
என்று
பாரதியார் கூறும்போது வாழ்க்கையின் நிச்சயமற்ற போக்கு எந்த உயர்ந்த இலட்சியத்தையும்
தம் வாழ்க்கையில் மேற்கொள்ளமுடியாத சங்கடமான மனநிலையை மக்களுக்கு ஏற்படுத்துவதைத் தெளிவுபடுத்துகிறார்.
மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ்
வையமிசை நித்தம் பாடு கின்றோம்
நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே
(வைய
முழுதும் 6, பா.கவி. 79)
என்று
தாம் நினைத்த குறிக்கோள்களை நிறைவேற்றத் தமக்கு நூறாண்டுக்கால வாழ்க்கை அருளப்பட வேண்டும்
என்று பாரதியார் விழைகிறார்.
இறப்புச் சிந்தனை
மரணத்தைப் பற்றிச் சிந்திப்பவன்
வாழத் தொடங்குகிறான் என்று செர்மானியப் பழமொழி ஒன்று உரைக்கிறது. மனித வாழ்க்கையில்
மூப்புப் பருவம் ஏற்படுவதற்கென்று ஒரு கால வரையறை அமைந்திருக்கிறது. அதன் காரணமாக மூப்பினால்
ஏற்படும் அச்சம் அனைத்து வயதினரையும் பற்றுவதில்லை. மூப்பின் வாயிலை அடைபவரே அதைப்பற்றிச்
சிந்திக்கத் தொடங்குகின்றனர். ஆனால் இறப்புக்கு எந்தக் காலத்தையும் எவரும் நிர்ணயிக்க
முடியாது. ‘இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல்
என்னாது ஃ பின்னையே நின்றது கூற்றம்க் என்று நாலடியார் (36) இறப்பு நிகழும் காலத்தின்
நிச்சயமற்ற தன்மையை எடுத்துரைக்கிறது. இதனால், சிந்திக்கத் தொடங்குகின்ற சிறுவயது முதலாகவே
ஏதேனுமொரு சூழலில் இறப்புப் பற்றிய சிந்தனையை மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அடைகின்றனர்
எனலாம். இதன் அடிப்படையில் பாரதியாரும் மூப்பைப் பற்றி மிகச் சில இடங்களில்தான் சிந்தித்திருக்கிறார்.
அவையும் மிக மேலோட்டமாகவே அமைந்துள்ளன. மாறாக, இந்திய விடுதலைப் போரின் காலகட்டத்தில்
வறுமை, பிணி ஆகிய சூழலில் வாழ்ந்த பாரதியார் இறப்புப் பற்றியே அதிகம் சிந்தித்திருப்பதைக்
காணமுடிகிறது.
பல
வருஷங்களின் முன்னே தெரு வழியாக ஒரு பிச்சைக்காரன் பாடிக்கொண்டு வந்தான்.
தூங்கையிலே
வாங்குகிற மூச்சு - அது
சுழிமாறிப்
போனாலும் போச்சு
இந்தப் பாட்டைக் கேட்டவுடனே எனக்கு நீண்ட
யோசனை உண்டாகிவிட்டது. என்னடா இது! இந்த உடல் இத்தனை சந்தேகமாக இருக்கும்போது இவ்வுலகத்திலே
நான் என்ன பெருஞ் செய்கை தொடங்கி நிறைவேற்ற முடியும்? (பாரதியார் கட்டுரைகள் 32)
எனவரும்
பகுதி இறப்பினைப் பற்றிச் சிந்திக்கின்ற பாரதியின் மனப்போக்கைக் காட்டுகிறது.
இறப்புறுதி
மனித வாழ்க்கையில் மூப்புக் காலத்தை அனைவரும்
சந்திப்பர் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.
சிறுவயதிலேயே இறந்து விடுபவர்களுக்கு மூப்புக்காலத் துன்பங்கள் பற்றுவதில்லை.
ஆயின் இறப்பென்பதைச் சந்திக்காத உயிர்கள் இல்லை என்பது கண்கூடு. ஒரு செல் உயிர் தொடங்கி
மனித உயிர் வரை பிறந்த அனைத்து உயிர்களும் இறந்தேயாக வேண்டும்.
சாகாத
ஜந்து உண்டா? எல்லா உயிர்களும் ஓயாமல் உயிரைக்
காக்கின்றன. அதில் பயனுண்டா? உயிரே, ஜீவனுடைய வசமில்லாதபோது போறதைப் பற்றிக் கவலைப்
படுவதிலேயும் என்ன பயன்?
(மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம் 235)
என்று
இறப்புறுதியை நினைத்துப் பார்க்கிறார் பாரதியார்.
இறப்பச்சம்
இறப்பின் உறுதித் தன்மை அவ்வப்போது நமக்கு
அது பற்றிய அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. யாரேனும் இறந்துவிட்ட செய்தியைக் கேட்கும்போதும்
அல்லது இறந்தவரைப் பற்றிய நினைவுகள் நம் மனத்தில் தோன்றும்போதும் அச்சிந்தனைகளை ஒட்டி
இறப்பின் நிச்சயமற்ற தன்மை, இறப்பிற்குப் பின்வரும் அறிவுக்கெட்டாத மாயத் தோற்றம் முதலிய
பல்வேறு சிந்தனைகள் நம் மனத்தில் நிழலாடக் காணலாம். பிணி, விபத்து ஆகியவற்றை எதிர்ப்படும்
சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயமாக இறப்புச் சிந்தனையால் கலங்குவதுண்டு. இவ்வாறு
அடிக்கடி தோன்றி அச்சுறுத்தும் இந்த இறப்பச்சம் பண்பட்ட மனமுடைய சான்றோரையும் யோகிகளையும்கூட
விட்டு வைப்பதில்லை.
வஞ்ச
உருவின் நமன்த மர்கள்
வலிந்து நலிந்தென்னைப் பற்றும் போது
அஞ்சலை
யென்றென்னைக் காக்க வேண்டும்
அரங்கத் தரவணைப் பள்ளி யானே (நா.தி.பி. 429)
என்று
பெரியாழ்வார் திருவரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பரந்தாமனை வேண்டுகிறார்.
பாரதியாரின் வேடிக்கைக் கதைகளில் ஒரு கதையில்
காசியை ஆண்ட அரசன் ஒரு முனிவனைச் சந்திக்கிறான். அம்முனிவரை வணங்கி ‘முனிவரே, நான்
ஏற்கெனவே பூமண்டலாதிபதியாக வாழ்கிறேன். எனக்கு எதிலும் பயமில்லைக் என்றான். அதற்கு
அம் முனிவர், ‘நீ மரணத்துக்குப் பயப்படுகிறாய். நீ பயமில்லை என்று சொல்வது எனக்கு நகைப்பை
உண்டாக்குகிறதுக் என்றார். இப்பகுதியின் மூலமாகப் பாரை ஆளும் அரசரேயானாலும் இறப்பச்சத்திலிருந்து
விடுபடவியலாது என்னும் கருத்தைப் பாரதியார் முன்வைக்கிறார்.
இந்த
மனமாகிய கடலை வென்றுவிடுவேன். பல நாளாக இதை வெல்ல முயன்றுவருகிறேன். இந்த மனதை வெல்ல
நான் படும்பாடு தேவர்களுக்குத் தெரியும். இதிலே ப்ராண பயம், வியாதி பயம், தெய்வபக்திக்
குறைவு, கர்வம், மமதை, சோர்வு முதலிய ஸ்ம்ஸகாரங்கள் மிகுதிப்பட்டிருக்கின்றன. இவற்றை
ஒழித்துவிட வேண்டும்
{ஜூலை 1915}. (மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம் 232)
எனவரும்
பகுதியில் பாரதியார் தாம் கொண்ட இறப்பச்சத்தை வெளிப்படுத்துகிறார்.
பாரதியார் தமது ஆத்திசூடியில் ‘சாவதற்கு
அஞ்சேல்க் என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறார். இவ்வாறு கூறியிருப்பினும் உண்மையில்
பாரதியார் இறப்புக் குறித்து மிகுந்த அச்சம் கொண்டிருந்தார் என்றும் அந்த அச்ச உணர்வின்
காரணமாகவே இறப்பை வெறுத்தும் உவமித்தும் பாடியுள்ளார் என்றும் தமது ஆய்வேட்டில் சிவ.
மாதவன் குறிப்பிடுகிறார். காலனுக்கு எதிராகப்
பாரதியார் சவால் விடுப்பது முதலானவை சாவு பற்றி அடிமனத்தில் ஊறிப்போயிருந்த அச்சவுணர்வின்
வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை என்று ஷெல்லியும் பாரதியும் - ஒரு புதிய பார்வை என்ற
தமது ஆய்வுநூலில் ஜான் சாமுவேல் குறிப்பிட்டுள்ளார்.
தூங்கையிலே
வாங்குகிற மூச்சு, அது சுழிமாறிப் போனாலும் போச்சு. என்ன ஹிம்சை இது? நூறு வயதுண்டு
என்பதேனும் நல்ல நிச்சயமாக இருந்தால் குற்றமில்லை. நூறு வருஷங்களில் எவ்வளவோ காரியம்
முடித்துவிடலாம். ‘அடுத்த நிமிஷம் நிச்சயமில்லைக் என்று தீர்ந்துவிட்டால் எதைக் கொண்டாடுவது.
இது கட்டி வராது. எப்படியேனும் தேகத்தை உறுதிசெய்து கொள்ள வேண்டும். நமது காரியம் முடிந்த
பிறகுதான் சாவோம்; அதுவரை நாம் சாகமாட்டோம். நம் இச்சைகள் நம்முடைய தர்மங்கள் நிறைவேறும்வரை
நமக்கு மரணமில்லை. (பா. கட்டுரைகள் 34)
என்றுவரும்
பகுதியை நோக்குமிடத்து பாரதியாரின் இறப்பச்சம் தம் உடற்சார்ந்த இன்பங்களை இழக்கும்
அடிப்படையில் அமையாமல் இவ்வுலகுக்கும் தம்மைச் சார்ந்த சமூகத்திற்கும் தம்மால் எதையும்
செய்யவியலாது போய்விடக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் எழுந்ததே என்பதை உணரமுடிகிறது.
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?
சொல்லடி, சிவசக்தி! - எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்து விட்டாய்,
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
. . . - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
(கேட்பன, பா.கவி., ப.75)
எனவரும்
கவிதை அடிகளிலும் பாரதியார் தம் சுடர்மிகு அறிவையும் வாழ்க்கையையும் மாநிலம் பயனுறச்
செய்வதற்காகத் தம் உயிர் வாழ்க்கையை விழைந்து நிற்கும் மனப்பாங்கைக் காணலாம். ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் ஃ தன்னை நன்றாகத்
தமிழ்செய்யு மாறேக் எனவரும் திருமூலரின் திருமந்திர அடிகள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன.
இறையும் இறப்பச்சமும்
மனித வாழ்க்கையை அச்சுறுத்தும்
இந்த இறப்பச்சத்தை வெற்றி கொள்ளும் ஒரே வழியாக பக்திநெறி அமைவதை இலக்கியங்கள், தத்துவங்கள்,
மதங்கள், உளவியல் கோட்பாடுகள், சமூகவியல் சார்ந்த நடைமுறைகள் முதலிய அனைத்தும் புலப்படுத்துகின்றன.
எல்லாரும்வந் தேத்துமளவில் யமபயங்கெடச்
செய்பவன் (அல்லா 2:4, பா.கவி., ப.104)
யானெ தற்கு மஞ்சேன் - ஆகி
எந்த நாளும் வாழ்வேன்
(காளி ஸ்தோத்திரம் 5:3, பா.கவி., ப.62)
கரணமுந் தனுவு நினக்கெனத் தந்தேன்
காளிநீ
காத்தருள் செய்யே
மரணமு மஞ்சேன்
(மஹாசக்தி பஞ்சகம் 1:1-2, பா.கவி., ப.87)
சக்திதனை யேசரணங் கொள்ளு - என்றும்
சாவினுக்கோ ரச்சமில்லை தள்ளு
(சிவசக்தி புகழ் 3:1-2, பா.கவி., ப.90)
எனவரும்
பாரதியாரின் கவிதை அடிகளும் இறப்பச்சத்திலிருந்து விடுதலை பெறும் ஒரே வழியாக இறைவனைத்
தொழுவதைக் காட்டுவதைக் காணலாம்.
இறப்பைத் தவிர்க்கும் தொழுகை
இறைவன் எல்லையிலா ஆற்றல் உடையவன். அவனை நாடும் பக்தர்களுக்கு அவன் இறப்பில்லா வாழ்க்கை
அளிக்க வல்லவன் என்பதைப் பெரும்பாலான சமயங்கள் வற்புறுத்துகின்றன.
அபயம் என்னும் வேடிக்கைக் கதையில் பாரதியார்
சாகாத வரத்தை வேண்டுகின்ற ஒரு முனிவரைப் படைத்துக் காட்டுகிறார்.
காட்டில்
ஒரு ரிஷி பதினாறு வருஷம் கந்த மூலங்களை உண்டு தவம்செய்து கொண்டிருந்தார். அவர் பெயர்
வாமதேவர். ஒருநாள் அவருக்குப் பார்வதி பரமேசுவரர் பிரத்தியஷமாகி ‘உமக்கு என்ன வரம்
வேண்டும்க’ என்று கேட்டார்கள். ‘நான் எக்காலத்திலும் சாகாமல் இருக்க வேண்டும்க் என்று
வாமதேவ ரிஷி சொன்னார்.
(பா.கதை. 273)
என்ற
பகுதியில் உலகியல் ஆசைகளை எல்லாம் துறந்தவராக இருந்தாலும் முனிவர்களும் இறவாதிருப்பதில்
பேரார்வம் காட்டுவதைப் பாரதியார் புலப்படுத்துகிறார். தத்துவ நெறியில் இவ் வேண்டுதலைக்
காணும்நெறிக்கு அப்பால் உலகியலிலும் பாமர மக்கள் தொடங்கி நல்கூர்ந்தாராயினும் நிறைவாழ்வு
வாழ்ந்த மூத்தோராயினும் பிணியுடையோராயினும் பெரும்பாலும் எவரும் இறவாதிருக்கவே விரும்புவர்.
இதற்கு இறைவன் நிச்சயம் அருள்செய்வார் என்றும் உறுதியாக நம்புகின்றனர்.
. . . பராசக்தியைத் தியானம் செய்துகொண்டே
இருந்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கிவிடும். உடலும் உயிரும் ஒளிபெற்று வாழும். நூறு
வயதிற்குக் குறைவில்லை. இது ஸத்யம். நூறாவது நிச்சயமாய் வாழ்வாய். மனிதனுக்கு நூறு
வயது இயற்கையிலேயே ஏற்பட்டது. இயற்கை தவறாமல் மூடக் கவலைகளில்லாமல் இருந்தால் நூறு
வயது அவசியம் வாழலாம். மகனே அச்சத்தைப் போக்கு. (மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம் 236)
என்று
உரைப்பதன் மூலம் மனக்கவலையற்ற தன்மையோடு இறைவனின் அருள் வாழ்நாள் நீட்டத்தை அளிக்கும்
என்ற கருத்தைப் பாரதியார் முன்வைக்கிறார்.
மரணமிலாப் பெருவாழ்வு
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம். .
.
அமரத் தன்மையு மெய்தவும்
இங்குநாம் பெறலாம்
(விநாயகர் நான்மணிமாலை 4:8, பா.கவி., 19-20)
சக்திசக்தி சக்தீசக்தீ சக்தீ சக்தீ யென்றோது
சக்திசக்தி சக்தீயென்பார் - சாகா ரென்றே
நின்றோது
சக்திசக்தி யென்றே வாழ்தல் சால்பா நம்மைச்
சார்ந்தீரே
சக்திசக்தி யென்றீராயில் சாகா உண்மை சேர்ந்தீரே
(சக்தி திருப்புகழ் 1-2, பா.கவி., 81)
. . . மெய்யைச்
சக்திதனக் கேகருவி யாக்கு - அது
சாதலற்ற வழியினைத்தேறும்
(சக்திக்கு ஆத்ம ஸமர்ப்பணம் 6:2-4, பா.கவி., ப.81)
எனவரும்
பகுதிகள் பாரதிக்குச் சாகாநிலை என்னும் மரணமிலாப் பெருவாழ்வு பற்றிய சிந்தனை இருந்தமையை
உறுதி செய்கின்றன.
நிறைவாக, பாரதியார் தமக்கு மட்டும் இறவா
வாழ்க்கை அருள வேண்டும் என்று இறைவனை வேண்டாமல் இவ்வுலக உயிர்கள் அனைத்துமே இன்புற்று
நெடுநாள் வாழவேண்டும் என்று விழைகிறார். இதனை,
‘பூமண் டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்கக் என்பேன்! இதனைநீ
திருச்செவிக் கொண்டு திருவுள மிரங்கி
‘அங்ஙனே யாகுகக் என்பாய், ஐயனே!
(விநாயகர்
நான்மணிமாலை 32: 9-14, பா.கவி., ப.12)
எனவரும்
பகுதி காட்டும்.
இவ்வாறு பாரதி தம் கவிதை, கட்டுரை மற்றும்
தம் கதைப் படைப்புகள் யாவற்றிலும் மூப்பச்சம் குறித்தும் நெடுநாள் வாழும் விழைவு குறித்தும்
அவ்வாறு வாழ இறைவனை இறைஞ்சுதல் இன்றியமையாதது என்றும் எத்தகு இறைப்பேறு கிட்டினும்
வியத்தகு மாற்றங்கள் வாழ்வில் ஏற்படினும் இறப்பு உறுதி என்றும் அத்தகு இறப்பு குறித்த
சிந்தனைகள் மனிதர்க்கு அச்சம் ஏற்படுத்தும் என்றும் விரிவாக விளக்கிச் செல்கிறார்.
மரணமிலாப் பெருவாழ்வு என்னும் நுண்ணிய
சிந்தனையில் பாரதிக்குப் பெரிதும் நம்பிக்கை இருந்தமை அவர்தம் படைப்புகளில் ஆங்காங்கே
புலப்படுகிறது. எதிர்பாராத வண்ணம் தம் இளவயதில் பாரதி இறந்துபட்டாலும் அவரது படைப்புகள்
அமரத்தன்மை பெற்றுத் திகழ்வது அவரது நூறாண்டு வாழும் வாழ்வு நாட்டத்தை உறுதிசெய்வதாய்
அமைகிறது எனலாம்.
பயன் நூல்கள்
பாரதியார் கவிதைகள், கோயமுத்தூர் : மெர்க்குரி புத்தகக்
கம்பெனி, 2ஆம் பதி. 1971.
பாரதியார் கட்டுரைகள், சென்னை : பூம்புகார் பிரசுரம் பிரஸ்,
1977.
முல்லை
முத்தையா (பதி.), பாரதியார் கதைகள் 1957.
தி
முத்துகிருஷ்ணன், மகாகவி பாரதியார் வாழ்க்கைச்
சித்திரம், சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், 1986.
துணைமை நூல்கள்
இரா.
நிர்மலா, தமிழிலக்கியத்தில் மூப்பும் இறப்பும்,
சென்னை : விழிச்சுடர்ப் பதிப்பகம்,
1999.
No comments:
Post a Comment