Tuesday, 16 July 2019

பாவண்ணனின் ”காற்றில் கரைந்துவரும் குரல்” சிறுகதையில் தொன்மம்


பாவண்ணனின் ”காற்றில் கரைந்துவரும் குரல்” சிறுகதையில் தொன்மம்

            தொன்மக் கூறுகள் பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் மத்தியில் மறக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் அவற்றின் மீது மக்கள் காட்டும் ஆர்வமேயாகும். மக்களின் வாழ்வில் தொன்மங்கள் முக்கியப் பங்கு வகிப்பது ஒருபுறம் இருக்க, அவற்றைப் படைப்பாளர்களும் அவ்வப்போது தம் படைப்புகளில் எடுத்தாள்வதன் மூலம் அவற்றைப் பற்றிய அறிதலை வாசகர்களுக்குக் காலங்காலமாக நிலைநிறுத்தி வருகிறார்கள். புராணக் கதைகள் பிற்காலத்தில் புலவர்களால் சிறந்த படைப்புகளாக உருவாக்கம் பெற்றமையை இங்கு நினைவுகூரலாம். சான்றாக கம்பராமாயணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் முதலாயின சுட்டத்தக்கவை. தொல்காப்பியர் தொன்மம் என்பதை வனப்பு எட்டனுள் ஒன்றாக்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொன்மத்தின் பாலுள்ள ஈர்ப்பு இருபதாம் நூற்றாண்டுப் படைப்பாளர்களையும் விட்டுவைக்கவில்லை எனலாம். தம் காலத்து நடப்பியலைத் தொன்மக் கூறு ஒன்றோடு இணைத்துச் சொல்வதை ஓர் உத்தியாகவே இக்காலப் படைப்பாளர் கைக்கொள்கின்றனர். இதனால் தொன்மங்கள் மறுஆய்வு செய்யப்படுவதுடன் இன்றுவரை தொன்மங்களால் புலப்படுத்தப்படும் சில செய்திகள் மாறாமல் வருகின்ற தொடர்புப்பாட்டையும் வெளிப்படுத்த இயலுகிறது. அவ்வகையில் பாவண்ணனின் காற்றில் கரைந்துவரும் குரல் என்னும் சிறுகதைப் படைப்பின் தொன்மப் பயன்பாட்டை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
நூலாசிரியர் அறிமுகம்
            பாவண்ணன் புதுச்சேரி வளவனூரில் 20.10.1958இல் பலராமன் - சகுந்தலா இணையருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் பாஸ்கரன் என்பதாகும். இவர் புதுச்சேரி தாகூர் அரசு கலைக்கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து புதுச்சேரி தொலைபேசி அலுவலகத்தில் ஓராண்டு பணிபுரிந்தார். அதன்பின் கர்நாடகத்தில் பணிவாய்ப்புக் கிடைக்கப்பெற்று அங்கேயே வசித்துவருகிறார்.
            கவிதை, சிறுகதை, புதினம், சிறுவர் இலக்கியம், கட்டுரை, திறனாய்வு என அனைத்துத் தளத்தினிலும் தமது அடையாளத்தை நிலைநிறுத்தி வருபவர். 
சிறுகதையில் தொன்மக் கரு
            ஜமதக்கினி என்னும் முனிவரின் மனைவி ஆற்று மணலைத் தன் கற்பின் சக்தியால் பானையாக்கி அதில் பூசை செய்வதற்குரிய நீர் முகந்து செல்வது வழக்கம். ஒரு நாள் மணலைப் பானையாக்க ஆற்றங்கரையில் குனிந்தபோது ஆற்றுநீரில் வான்வழிச் சென்ற புட்பக விமானத்தின் நிழலைக் காணநேரிட்டது. உடனே ஆவல் மிகுதியால் வானில் சென்ற விமானத்தை அன்னாந்து பார்த்தாள். அதனால் அவளுடைய கற்பின் திண்மை குறைந்தது. அவளால் ஆற்று மணலைக் குடமாக வடிக்க இயலவில்லை. பன்முறை முயன்றும் தோல்வியே கண்டாள். தன் மனைவி நெடுநேரமாகியும் நீர்முகந்து வராததைக் கண்ட ஜமதக்கினி முனிவர் தன் ஞான திருட்டியால் நேர்ந்தமையை அறிந்தார். தன் மனைவி கற்பிழந்தாள் என்று கோபம்கொண்ட அந்த முனிவர் தன் மகனை அழைத்துத் தாயின் தலையைக் கொய்துவருமாறு கட்டளை பிறப்பித்தார். அவனும் அவ்வாறே செய்தான். தன் மகனின் பக்தியை மெச்சிய முனிவர் அவன் கேட்கும் வரத்தை அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். தன் தாயை முன்போல் எழுப்பித் தரவேண்டும் என்ற வரத்தை அவன் முன்வைத்தான். முனிவரும் அவ்வாறே செய்தார். எனினும் தன் மனைவியோடு இல்லறத்தைத் தொடரவில்லை என்பது புராணக்கதையாகும்.
            இத் தொன்மைக் கதையைத் தம் சிறுகதையின் கதைக்கருவாக எடுத்துக்கொள்ளும் பாவண்ணன் காலங்காலமாகப் பெண்கள் கடந்துவருகின்ற ஆணாதிக்கத்தால் ஊசலாடுகின்ற கணவன் - மனைவி பிணைப்பை நிகழ்காலத்துடன் பொருத்தி மிக அழகாகப் பின்னியுள்ளார்.
கதைச்சுருக்கம்
கற்பிழந்த அவளுடைய தலையை வெட்டிவா மகனே என்று கர்ஜித்த ஜமதக்னியின் குரலைக் கனவில் கேட்டு விழித்தாள் அம்மன். பல நூற்றாண்டுகள் கடந்த பிறகும் அக்குரல் அடிவயிற்றைக் கலக்கியது. வெப்பத்தில் உடல் தகித்தது. நெற்றியிலும் கன்னத்திலும் படர்ந்த வேர்வையைப் பெருமூச்சோடு துடைத்துக் கொண்டாள். (26)
என்று அம்மனாக மக்களால் வழிபடும் தெய்வமாக மாறிய முனிவரின் மனைவியை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். முனிவரின் மனைவி அம்மனாக அக்கோயிலில் உறைகிறாள். தன் தலை வெட்டப்படுவதற்குக் கணவனால் பிறப்பிக்கப்பட்ட ஆணை பல நூற்றாண்டுகள் ஆகியும் அம்மனின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்நிகழ்வால் பிறந்த அச்சத்தையும் அவளால் உதறித்தள்ள இயலவில்லை. அம்மனுக்கு அக்கோயிலில் பூக்கட்டி விற்கும் கௌரி என்ற பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அவளது யோசனைப் படியே அம்மன் மக்களின் வீடுகளுக்கு உலா சென்று மக்களின் வாழ்நிலையை அறிகிறாள். கௌரியோடு பஞ்சாயத்திற்குச் சென்று பெண்களின் துன்பத்தை அறிகிறாள். பாட்டுக் கச்சேரிக்குச் சென்று திரும்புகையில் தீயவன் ஒருவன் பின்தொடர அவனிடமிருந்து தப்பிக்க அம்மனும் கௌரியும் ஓடுகின்றனர் என்று கதையை முடிக்கிறார் பாவண்ணன்.
பெண்கற்பு
            பெண்கள் ஆடவனின் இயக்கத்திற்கு ஏற்ப இயங்கும் மரப்பாவைகள்; அவர்களுக்கென்று விருப்பு வெறுப்புகள் இல்லை. அவர்கள் ஆணின் எதிர்பார்ப்பிற்கு ஓர் இம்மி அளவு பிசகினாலும் கற்புப் பிறழ்ந்தவர்கள் என எண்ணும் ஆணாதிக்க மனப்பான்மை ஆடவர் மனங்களில் வேர்விட்டு இருப்பதை இச் சிறுகதை தெள்ளத்தெளிவாக்குகிறது.     
            முனிவரின் மனைவியின் வாழ்க்கையை ஒரு சிறு நிகழ்வு மாற்றிப்போட்டு விட்டது. அந்த நிகழ்வினால் ஏற்பட்ட துன்பமும் அச்சமும் அந் நிகழ்வுக்குப் பின்னால் வானத்தைப் பார்ப்பதற்கே அஞ்சும் முனி பத்தினியின் நிலையை,
வானத்தைப் பார்த்தே பல நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. (26)
ஆற்றங்கரைக்குத் தண்ணீர் எடுக்கச் சென்றபோது ஏதோ சந்தர்ப்பவத்தால் காலை வானத்தை நிமிர்ந்து பார்த்ததும் அதே வேளையில் புஷ்பக விமானமொன்று கருக்கலைக் கிழித்துப் பறந்து சென்றதும் தற்செயலான செயல்கள். அவை தன்னுடைய வாழ்வின் போக்கை மாற்றப் போகிறவை என்பது அப்போது தெரியாது. வெட்டுப்பட்டு தலை உருண்டதும் வேகவேகமாகத் தெய்வமாக்கப்பட்டதும் அடுத்தடுத்து நடந்த விஷயங்கள். கருவறைக்குள் அடைபட்ட பிறகு வானத்தைப் பார்க்க வாய்ப்பில்லாமலே போய்விட்டது. (27)
வானம் எவ்வளவு அழகான படைப்பு என்று மறுபடியும் நினைத்துக் கொண்டாள். கொஞ்சம் எக்கினால் தொட்டு ரசிக்க முடியுமென்று தோன்றியது. அதே கணத்தில் ஏடாகூடமாக ஏதாவது புஷ்பக விமானம் கண்ணில் தட்டுப்பட்டு விடுமோ என்று உள்ளூர அச்சம் படர்ந்ததையும் உதற முடியவில்லை. (26-27)
என்னும் பகுதிகளில் உணர்த்துகிறார் ஆசிரியர். உலா சென்ற அம்மனை இளைஞர் சிலர் கிண்டல் செய்ய, அவர்களை நிமிர்ந்து பார்த்திருந்தால் அடங்கிப் போயிருப்பார்களே என்று ஆலோசனை சொல்லும் கௌரியிடம்,
அது சரி, ஒரு தரம் நிமுந்து பாத்ததுக்கே நான் இந்தக் கதிக்கு வந்துட்டேன். மறுபடியும் அனுபவிக்கணுமா? அத நெனைச்சாலே பயமா இருக்குது. (32-33)
என்று அம்மன் கூறுவது அம்மனின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துபோன அச்சத்தையும் அதனால் எழுந்த எச்சரிக்கை உணர்வையும் வெளிப்படுத்துகிறது. இது பெண்களின் மனப்பாங்கை எதார்த்தமாக வெளிப்படுத்துகிறது எனலாம்.
            தொன்மப் பாத்திரம் வாயிலாக காலங்காலமாகத் தொடர்ந்துவரும் பெண்களின் பிரச்சினையை முன்னிறுத்துகிறார் ஆசிரியர்.
அப்ப என் பிரச்சனைக்கு முடிவே இல்லை? (28)
என்று அம்மன் அதிர்ச்சியடைவதும்,
ஆனா இவுங்கள பாத்து பாத்து எல்லாருக்கும் உள்ளதுதான் உனக்கும்ன்னு சொல்லி மனச தேத்திக்கலாமே (29)
என்று கௌரி அம்மனுக்கு அறிவுரை கூறுவதும்,
ஆனா எனக்கு நிம்மதியில்லயே கௌரி (29)
என்று அம்மன் புலம்புவதும் கடவுளராக இருந்தாலும் அவர்களும் விதிவிலக்குகள் அல்லர் என்னும் கருத்தை முன்வைக்கிறது.
            பொம்பளைன்னாவே சோகம்தானா? (32) என்ற அம்மனின் கேள்வியில் ஆம் என்ற விடை வெளிப்பட்டு நிற்கக் காணலாம். இதனால் பெண்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டவராகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார் பாவண்ணன்.
ஒனக்கு நடந்தத நெனச்சா இப்பவும் ஒடம்பு ஒதறுது. ஆனா நடந்ததயே நெனச்சி நெனச்சி எவ்வளவு நாளு ஒன்ன நீயே கஷ்டப் படுத்திக்குவ சொல்லு. மனுஷியா பொறந்தவ எல்லாத்தயும் மறந்து தொலைச்சிட்டுப் புதுசா மாறிடணும். (29)
என்று கௌரி கூறும் அறிவுரை அம்மனுக்காக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பெண்குலத்திற்கே ஏற்புடையதாக அமைகிறது.
            தன்னைச் சந்தேகிக்கும் கணவன் கட்டிய தாலியைப் பஞ்சாயத்தார் முன் கழற்றி எறிவதைக் காட்டி சாதாரண வாழ்நிலையில் வாழ்கின்ற பெண்ணால் எடுக்கப்படும் முடிவினைக் கடவுளால் ஏன் எடுக்க முடியவில்லை என்ற கேள்வியை நம்முள் எழுப்புகிறது. இறுதிவரை அம்மன் தன் அச்சத்திலிருந்து விடுபட முடியாதவளாகத் திணறுகிறாள். சாதாரண மானிடப் பிறவியிலுள்ள ஆடவனையும் எதிர்த்து நிற்கமுடியாமல் தன் கணவனின் ரூபமாகவே காண்பது ஆணாதிக்கத்தின் குறியீடாக எண்ணமுடிகிறது.
கடவுளுக்கு மனிதத் தன்மை
            சாபங்களின் காரணமாகத் தேவர், காந்தருவர் முதலியோர் பூவுல வாழ்க்கையை மேற்கொள்ளும்போது அவர்களுடைய இறையாற்றல் அனைத்தும் நீங்கிவிடுவதாகப் படைக்கப்பட்டிருத்தலைப் புராணங்களில் காணலாம். இத்தகைய தொன்மக் கூறினை வெகு சிறப்பாக மெருகூட்டிப் பயன்படுத்துகிறார் பாவண்ணன்.
மூலையில் குவிந்திருந்த இலைக்குப்பைகளில் முகத்தை விட்டுக் கலைத்துக்கொண்டிருந்த நாயொன்று இவளைக் கண்டு குரைத்ததால் அம்மனின் கவனம் கலைந்தது. (27)
என்று சொல்லும்போது கடவுளாக இருந்தாலும் நிலவுலகத்தில் இருந்தால் நாய் அவர்களைப் பார்த்துக் குரைக்கத்தான் செய்யும் என்பதாகப் படைத்திருத்தல் நோக்கத்தக்கது.
            மனிதர்களைக் காட்டிலும் பூலோகத்தில் சஞ்சரிக்கும் கடவுளர் எந்த விதத்திலும் ஆற்றலுடையவர்கள் இல்லை என்பதுடன், மக்களின் நிலையைக் காட்டிலும் அவர்களுடைய நிலை வெகு மோசமாகவே அமைந்திருக்கும் என்ற பாவண்ணனின் கற்பனை அங்கதச் சுவையை மிகுவிக்கிறது.
ஓ? சாமியா? அடிக்கடி மறந்து போவுது. மனுஷியா இருந்தா ரெண்டு தலைவலி மாத்திரய போட்டுக்னு நல்லா தூங்கி எழுந்தா சரியா போயிடும். நீயெல்லாம் சாமி குலம். அந்தக் குடுப்பனையும் இல்ல. (30)
என்று துன்பத்திலிருந்து விடுபடமுடியாத அம்மனின் நிலையை எண்ணி வருந்துகிறாள் மானிடப் பிறவியளாகிய கௌரி என்ற பூக்காரி.
இங்க பாரு. மெரண்ட மாதிரி நின்னா இந்த மண்டபத்து வாட்ச்மேன்கூட மெரட்டிட்டு போயிடுவான். தைரியமா நில்லு. (31)
என்று பூக்காரி அம்மனுக்கு தைரியம் ஊட்டும் பகுதி அங்கதத்தின் உச்சமாகும்.
            நிலத்தில் கடவுளரைவிட மனிதர்களே தைரியசாலிகள் என்றும் சக்தி படைத்தவர்கள் என்றும் சிறுவயதிலிருந்து நிலவுலக வாழ்க்கையில் ஏற்படுகின்ற அனுபவங்கள் எதனையும் எதிர்கொள்கின்ற ஆற்றலை மக்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது என்பதையும் பாவண்ணன் வெளிப்படுத்துகிறார். அதே நேரத்தில் நிலஉலக வாழ்க்கைக்குப் பழக்கப்படாத கடவுளரால் திடீரென்று தம்மைத் தகவமைத்துக்கொள்ள இயலாமல் பூவுலக வாழ்க்கையில் திண்டாடவே செய்வர் என்று எண்ணுவது நகையைத் தோற்றுவிக்கும் கற்பனையாகும். சான்றாக,
அடுத்த நாளே அம்மன் உலாவுக்குக் கிளம்பிவிட்டாள். ஒரு வேகத்தில் திடுதிப்பென்று வெளியேறி ஒரு தெருவின் எல்லைவரைக்கும் வந்தபிறகுதான் எப்படித் தொடர்ந்து செல்வது என்று குழப்பம் ஏற்பட்டது. தம் பக்தர்கள் வீடுகளை எப்படிக் கண்டுபிடிப்பது என்றும் புரியவில்லை. கௌரியிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது. கண்மூடித் திறப்பதற்குள் நூறு வாகனங்கள் இப்படியும் அப்படியுமாகப் பறந்து கொண்டிருந்தன. இரைச்சல்களும் விளக்கு வெளிச்சமும் தடுமாற வைத்தன. சரவிளக்குகள் வைத்ததைப்போல இரண்டு பக்கங்களிலும் தொகுப்பு வீடுகள் நின்றிருந்தன. ஊடுபாதைகள் சரியாகத் தெரியவில்லை. (30-31)
என்னும் பகுதியைச் சுட்டலாம்.
மொழிநடை
            பெரும்பாலும் பிற படைப்பாளர்களிடம் வேறுபட்ட நிலையில் தொன்மப் பாத்திரங்களுக்கான மொழிநடையைப் பாவண்ணன் கையாளுகிறார். படைப்பாளர்கள் தொன்மப் பாத்திரங்களை உலவவிடும்போது மொழித்தூய்மை உடையதாகவும் இலக்கணம் பிழையாத எழுத்துநடையில் பேசுவதாகவும் அவர்தம் பேச்சு அமைவதாகக் காட்டி அவர்கள் தொன்ம மாந்தர் என்பதனை வாசகருக்கு நினைவூட்டிய வண்ணம் இருப்பர். ஆனால் பாவண்ணன் தொன்மக் கதைமாந்தருக்கும் அவரோடு சொல்லாடும் தற்காலக் கதைமாந்தருக்கும் எத்தகைய வேறுபாட்டையும் கைக்கொள்ளாமல் ஒரே மாதிரியான நடையைப் படைக்கிறார்.
யோசிக்காம இருக்கறதுக்கு நான் என்ன கல்லா? பூசாரி, பக்தருங்கன்னு சுத்தியும் ஆளுங்க இருந்தா எப்படியோ பெராக்கா நேரம் ஓடிடுது. தனியா இருக்கும்போதுதான் தாங்க முடியாம போய்டுதுடின்னு சொன்னா, புரிஞ்சிக்கவே மாட்டேங்கரியே. நிம்மதியா இரு நிம்மதியா இருன்னா, எப்பிடிடி இருக்க முடியும் நிம்மதியா? அம்மன் குரலில் வேகமும் ஏமாற்றமும் கலந்து வெளிப்பட்டன. (28)
ஒரு மூலையில நாலஞ்சி எளவட்டப் பசங்க நின்னுட் டிருந்தானுங்க. என்ன பாத்ததும் கட்ட கட்ட நாட்டுக்கட்டன்னு ராகமா பாடனானுங்க. ஒடம்பே நடுங்கிடுச்சி எனக்கு. நிமுந்து பாக்காமகூட வந்துட்டேன். (32)
என்னும் சான்றுகளில் பெராக்கு, எளவட்டம், நாட்டுக்கட்ட, நிமுந்து முதலான பேச்சுவழக்குச் சொற்களைப் பயன்படுத்தித் தொன்மப் பாத்திரத்திற்கு எதார்த்தத்தை மிகுவிக்கிறார் பாவண்ணன்.
            புராணக் காலத்தையும் தற்காலத்தையும் மிக எதார்த்தமாக நூலிழை அறுபடாமல் கதையாக்கியுள்ளார். சராசரி மனிதர்களைக் காட்டிலும் பெண்பாற் கடவுளர் எவ்விதத்திலும் இன்பம் உடையவர் என்றோ ஆற்றல் உடையவர் என்றோ எடுத்துக்கொள்ள இயலாது என்பதையும் புலப்படுத்தியுள்ளார். அம்மன் மானிடப் பெண்ணைக் காப்பதைவிட மானிடப் பெண் அம்மனுக்குப் பாதுகாப்பளிப்பவளாகக் கதை பின்னப்பட்டிருத்தல் சிறந்த முரணாகும்.
பயன்நூல் :
பாவண்ணன், ஏவாளின் இரண்டாவது முடிவு, சென்னை :  தமிழினி, 2002.

No comments:

Post a Comment