Friday, 6 January 2017

திருமால் வண்ணம்

                                                      திருமால் வண்ணம்
(திருமாலின் நிறம் எது என்று ஆய்கிறது இக் கட்டுரை)
இலக்கியங்கள் இறைவனை ஓர் உருவம், ஒரு நாமம் இல்லாதவன் என்றே புகழ்ந்துரைக்கின்றன.  இறைவனை இத்தன்மையன் என்று எவராலும் அருதியிட்டுக் கூறவியலாது என்றும் அவை குறிப்பிடுகின்றன. கடவுளர் பற்றிய வருணனைகள் சமுதாய வழக்கில் இடையறாது மக்களிடையே பயின்று வந்துள்ளன. கடவுளின் தோற்றம், வாகனம், கொடி, அவனது அருள் செயல்கள், அவதாரங்கள் முதலான பல்வேறு செய்திகள் இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. மக்களில் நிறவேறுபாடு இருப்பதைப் போலவே கடவுளரிடையேயும் நிற வேறுபாடுகள் அமைந்திருப்பதை இலக்கியங்கள் பரவலாகப் பேசுகின்றன. அவற்றுள்ளும் குறிப்பாக, கடவுளரின் நிற வருணனைகளில் திருமாலைப் பற்றிய வருணனைகள் அதிகமாக இடம்பெற்றிருக்கக் காண்கிறோம். அவ்வகையில் திருமாலின் வண்ணச் சித்திரிப்பை நாலாயிரத் திவ்விய பிரபந்தம் வாயிலாகச் சித்திரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
கருமை
மாயோன் மேய காடுறை உலகமும் என்று குறிப்பிடும் தொல்காப்பியர் திருமாலைக் கரிய வண்ணனாகச் சுட்டுகிறார். திருமால் கருமை நிறத்தவன் என்ற நம்பிக்கையே பரவலாக உள்ளது. கண்ணனாக அவதரித்த போதும் அவன் கரிய நிறத்தவனாக இருந்ததாக இலக்கியங்கள் சுட்டுகின்றன.
கோலங் கரிய பிரானே என்றும் (3.5) கண்ணன் என்னும் கருந்தெய்வம் (13.1) என்றும் புறம் போலும் உள்ளுங் கரியானை (14.7) என்றும் ஆண்டாள் தமது நாச்சியார் திருமொழியில் குறிப்பிடுகிறார். கருஞ் சிறுக்கன் என்று கண்ணனைப் பெரியாழ்வார் (3.6.4) புகழ்கின்றார். கருமேனியம்மான் (1.11) என்றும் கரிய கோவே (9.3) என்றும் ஏரார்ந்த கருநெடுமால் என்றும் (9.11) குலசேகராழ்வார் திருமாலைப் பாடித் துதிக்கிறார்.
இவ்வாறு திருமாலின் கருமை நிறம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் மட்டுமன்றி அக் கருமை நிறம் பல்வேறு உவமைகளாலும்  அழகுறப் புலப்படுத்தப்படுகிறது.
கண்ணில் தீட்டிக்கொள்ளப் பயன்படும் மையானது கருமை நிறம் உடையது. இந்த மையைப்போன்ற அடர்ந்த கருமை நிறத்தைத் திருமாலின் நிறமாக ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றனர். மைம் மானவண்ணம் என்று திருமங்கையாழ்வாரும் (7.2.3) மைய வண்ணா (திரு.84), மைப்படியே (திரு.93), மைப்படிமேனி (திரு.94) என்று நம்மாழ்வாரும் குறிப்பிடுகின்றனர்.
கண் மையினை அஞ்சனம் என்று குறிப்பிடுவர். அஞ்சன வண்ணன் என்று நம்மாழ்வார் (3.4.3.) கூறுகிறார். பெரியாழ்வார் பல இடங்களில் திருமாலை அஞ்சன வண்ணன் (1.3.10, 1.4.2, 1.7.11, 1.8.3, 2.9.2,3.2.1, 3.9.5) என்று குறிப்பிடுகிறார். அஞ்சனம் புரையுந் திருவுருவனை என்று திருமங்கையாழ்வாரும் (5.3.10) குறிப்பிடுகிறார்.
தலைமயிரைக் குறிப்பிடும்போது முதலில் நமது கவனத்தை எட்டுவது அதன் கரிய நிறமாகும். இந்தியாவைப் பொறுத்தவரை இளைய வயதில் கூந்தலின் கரிய நிறம் அழகினது இலக்கணமாக அமைகிறது. திருமாலின் கரிய நிறத்திற்கு உவமைதேடும் திருமங்கையாழ்வார் குழல் நிறவன்ன (6.1.3) என்றும் துன்னு குழற் கருநிறத்து (திருநெ.16) என்றும் குறிப்பிடுகிறார்.
வெளிச்சம் மறையும்போது நம்முடைய கண்களுக்குப் பொருள்களின் புலப்பாடு இன்மையால் இருளைக் கரிய நிறத்ததாக நாம் உணர்கிறோம். எனவே கருமைக்கு உவமையாக இருளைப் பயன்படுத்துதல் மரபாக அமைகிறது. திருமாலின் மேனியை இருளார் திருமேனி (மூன்.29) என்று பேயாழ்வாரும், இருளன்ன மாமேனி (பெரி. 26) என்று நம்மாழ்வாரும் குறிப்பிடுகின்றனர்.
நீர்திரண்ட மேகம் நம் கண்களுக்குக் கருமை நிறத்ததாகப் புலப்படுகிறது. கார் வண்ணன் என்று பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
கொண்டல் வண்ணன் என்றும் முகில் வண்ணன் என்றும் கார்முகில் வண்ணன் என்றும் திருமாலைப் பாடுகின்றனர் ஆழ்வார்கள். சுமார் இருநூறு இடங்களில் திருமாலின் நிறத்திற்குக் கருமுகிலும் காரும் உவமையாகக் எடுத்தாளப்பெற்றுள்ளன.
கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக் காண்டல் ஒக்குங் கண்கள் என்று பெரியாழ்வார் (2.7.2) உரைக்கின்றார்.
கருக்கலந்த காளமேக மேனியாய் என்று திருமழிசையாழ்வார் (திரு.103) பாடுகிறார்.
இருண்ட வம்புதம் போன்று (2.8.3), கருமுகில் போல்வதோர் மேனி (3.3.9), மழைபோல் ஒளிவண்ணா (7.7.2) என்றெல்லாம் திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார்.
வான்கலந்த வண்ணன் என்று பூதத்தாழ்வாரும் (75) நெடுமால் நிறம்போல் கார் வானம் காட்டும் என்று பேயாழ்வாரும் (86) குறிப்பிடுகின்றனர்.
கார்முகில் உவமையை அடுத்து நூற்றுப் பதின்மூன்று இடங்களில் கடலின் நிறம் உவமையாக்கப்பட்டுள்ளது. கடல் வண்ணனே என்று திருமங்கையாழ்வார் (7.3.7), திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், குலசேகர ஆழ்வார் முதலியோர் குறிப்பிடுகின்றனர்.
கார்க்கடல் வண்ணன் (பெரி.4.2.11; நா.10.1, 12.5; மங்.8.2.4; நம்.7.3.8) என்று கூறுவது கருமை நிறத்தை விதந்துரைக்கக் காணலாம்.
கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய் (4.7.1) என்று திருமங்கையாழ்வார் கூறுவதிலிருந்து கடலின் நிறத்தைக் கருமையாக ஆழ்வார்கள் கருதியதை உணர முடிகிறது.
கருநீலம்
திருமால் கருநீல நிறத்தவன் என்றும் குறிப்பிடப்படுகிறது. நீலக் கருநிறமேக நியாயற்கு என்று நம்மாழ்வார் (6.6.1) குறிப்பிடும்போது திருமாலைக் கருநீல வண்ணனாகக் காண்கிறார்.
கருநீல நிறத்திற்கும் உவமையாகப் பல பொருட்களை ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றனர்.
கருவிளை போல் வண்ணன் என்று ஆண்டாள் தமது நாச்சியார் திருமொழியில் (1.6) உரைக்கின்றார். கருவிளை மலரோடு திருமாலின் வண்ணத்தைத் திருமங்கையாழ்வாரும் (10.5.6) ஒப்புநோக்குகிறார்.
காயா மலர் நிறவா என்று பெரியாழ்வார் (1.5.6) உரைக்கின்றார்.  திருமால் காயாவின் நிறத்தவன் என்று நம்மாழ்வாரும் (8.10.10, 9.7.8, 10.5.5, 10.10.6), ஆண்டாளும் (நா.1.6) திருமங்கையாழ்வாரும் (1.5.6, 8.4.6, 8.4.9), குலசேகராழ்வாரும்(1.2), திருமழிசையாழ்வாரும் (51) உரைக்கின்றனர்.
குவளைமலர் நிறவண்ணர் என்றும் (9.5.1) குவளை வண்ணன் (10.3.8) என்றும் திருமங்கையாழ்வாரும் திருநிறமாய்க் கருங்குவளை என்று பெரியாழ்வாரும் (4.8.3) பாடுகின்றனர்.
நீலம்
நீல முகில் வண்ணர் (மங்.2.4.5, 9.10.80; நம்.1.4.4) என்னும் தொடர் திருமாலை நீல நிறத்தவனாகக் காண்கிறது. திருவுருவம் மலர்நீலம் என்கிறார் பெரியாழ்வார் (4.9.1). உருவொத்தன நீலங்களே என்று நம்மாழ்வார் (திரு.38) உரைக்கிறார்.
கணமா மயில்காள் கண்ணபிரான் திருக்கோலம் போன்று என்று ஆண்டாள் (நா.10.6) குறிப்பிடுகிறார்.
செம்மை
காவி யப்பார் (2.8.8); காவிபோல் வண்ணர் (12) என்று திருமங்கையாழ்வாரும் காவிநன் மேனி (1.9.8); காவிசேர் வண்ணன் (5.4.2) என்று நம்மாழ்வாரும் உரைக்கின்றனர்.
எரிஏய் பவளக் குன்றே என்று நம்மாழ்வாரும் (5.8.7) செம்பவளக் குன்றினை (பெரிய) என்று திருமங்கையாழ்வாரும் குறிப்பிடும்போது திருமால் சிவந்த நிறத்தவனாகக் காட்டப்பெறுகிறார்.
களங்கனி வண்ணா (4.3.9) என்றும் கனிக் களவத் திருவுருவத்து ஒருவனையே (11.6.40 என்றும் திருமங்கையாழ்வார் உரைக்கிறார். கண்ணனின் வண்ணம் களாப்பழம் போன்றது என்று கூறுகையில் களாம் பழவண்ணம் . . . ஞால முண்டான் வண்ணம் என்று நம்மாழ்வார் (திரு.71) குறிப்பிடுகிறார். களாப்பழத்தின் உவமை காரணமாகத் திருமாலின் நிறம் செம்மை படர்ந்ததாக இருக்கவேண்டும் என்பதை அறியமுடிகிறது.
பழுப்பு
பூவை வண்ணனே என்று திருமழிசையாழ்வாரும் (99, 119) திருமங்கையாழ்வாரும் (2.2.8, 11.1.7) குறிப்பிடுகின்றனர். பூவைப்பூ வண்ணா என்று பெரியாழ்வாரும் (3.7.6), ஆண்டாளும் (நா.23) உரைக்கின்றனர்.
கருமாமுறி மேனி காட்டுதியோ (பெரி.6) என்று நம்மாழ்வார் உரைக்கும்போது திருமாலின் நிறத்தை மாந்தளிர் வண்ணமாகக் காணுகிறார்.
பச்சை
திருமாலின் நிறம் பச்சை என்றும் ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றனர்.
கமலத்து இலைபோலும் திருமேனி என்று நம்மாழ்வார் (9.7.3) உரைக்கின்றார். பைங்கிளி வண்ணன் என்று ஆண்டாள் (நா.5.9) குறிப்பிடக் காணலாம்.
பச்சைமா மலைபோல் மேனி என்று தொண்டரடிப்பொடியாழ்வார் வருணிக்கிறார்.
திருமால் மரகதக் குன்றம் போன்றவன் என்று நம்மாழ்வார் (திருவா.1, 2.5.4) குறிப்பிடுகிறார்.
மஞ்சள்
மஞ்சளும் மேனியும் (3.4.3) என்று பெரியாழ்வார் திருமாலின் வண்ணமாக மஞ்சளைக் கூறுகிறார்.
பொன் மலையை என்று திருமங்¬கையாழ்வாரும் (8.9.4, 11.7.1) நம்மாழ்வாரும் (2.6.3) குறிப்பிடுகின்றனர்.
கனலுருவா (7.9.9), என்று திருமங்கையாழ்வார் குறிப்பிடும்போது நெருப்பு வண்ணனாகத் திருமால் தோற்றமளிக்கிறான்.
இளஞாயிறு எழுந்தாற்போல் (4.9.7) எனவரும் பெரியாழ்வார் பாடல் தொடரிலும் திருமாலின் நிறம் மஞ்சள் வண்ணமாக அறியக் கிடக்கிறது.
வெண்மை
பனிமுகில் வண்ணா (மங்.1.6.5), பனிப்புயல் வண்ணன் என நம்மாழ்வார் குறிப்பிடும்போது திருமாலின் வண்ணத்தை வெண்மையாகக் காணகிறார்.
நீர் வண்ணன் (2.6.2) என்று திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார். பனிநீர் நிறக் கண்ணபிரான் என்று நம்மாழ்வார் (8.9.9) குறிப்பிடுகிறார். நீர் என்பது நிறமற்றது என்று கூறும் அறிவியல் செய்தியைப் புறந்தள்ளி, இங்கு வெண்மைநிறம் குறிப்பிடப் பட்டிருப்பதாகக் கொள்ளலாம்.
மின்னுருவாய் (1); மின்னிலங்கு திருவுருவும் (25) என்று திருநெடுந்தாண்டகத்தில் திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார் (நெ.1). மேலும் அவர் வெள்ளியான் (1.8.2, 9.10.3) என்றும் திருமாலைக் குறிப்பிடுகிறார்.
சங்கவண்ண மன்னமேனி சார்ங்கபாணி யல்லையே (766.4) என்று திருமழிசை ஆழ்வார் குறிப்பிடுகையிலும் பாற்கடல் வண்ணா என்று பெரியாழ்வார் (3.3.7) குறிப்பிடுகையிலும் வெண்மை நிறம் சுட்டப்படுவதை அறியலாம். தவள வண்ணர் (2.4.5) என்று நம்மாழ்வாரும் குறிப்பிடுகிறார்.
மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்
புனலுருவாய் அனலுருவில் நின்ற எந்தை
தளிர்புரையும் திருவடியென் தலைமே லவே (2052)
என்று திருநெடுந் தாண்டகத்தில் இடம்பெறும் திருமங்கையாழ்வார் பாசுரமும்
கருமாமுகில் உருவாகனல் உருவா புனல் உருவா
பெருமால்வரை யுருவா பிற வுருவா நின துருவா
திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து
அருமாகட லமுதே உன தடியேசர ணாமே (1636)
என்று பெரியதிருமொழியில் இடம்பெறும் திருமங்கையாழ்வார் பாசுரமும்
குயில்காள் மயில்காள் ஒண்கருவிளைகாள் வம்பக்
களங்கனிகாள் வண்ணப் பூவை நறுமலர்காள்
. . . எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு (9.4)
எனவரும் ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப் பாடலும்
குன்றாகு கொழுமுகில்போல் குவளைகள் போல்
குரைகடல் போல் நின்றாடுகண மயில்போல்
நிறமுடைய நெடுமால் (4.8.9)
எனவரும் பெரியாழ்வார் பாசுரமும் திருமாலின் பல்வேறு வண்ணங்களை ஒரே பாசுரத்தில் பட்டியலிடுகின்றன.
மேற்கூறியவற்றால், திருமாலின் வண்ணம் கருமை என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படினும், ஆழ்வார்ப் பாசுரங்களை நுணுகிநோக்குமிடத்து நீலம், பச்சை, செம்மை, மஞ்சள், பழுப்பு, வெண்மை எனக் காணும் வண்ணங்கள் அனைத்திலுமே  ஆழ்வார்கள் திருமாலைக் கண்டனர் என்னும் உண்மையும் புலனாகிறது.
*
பயன்நூல்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், 2ஆம் பதி. 1973; சென்னை : திருவேங்கடத்தான் திருமன்றம், 1981.
தி. இராசமாணிக்கம், திவ்ய பிரபந்த ஒளிநெறி, சென்னை : கழகம், 1988.

No comments:

Post a Comment