கண்ணதாசனின் சேரமான்
காதலி - திறனாய்வு
கண்ணதாசன் இயற்றிய
வரலாற்றுப் புதினமாகிய சேரமான் காதலி சாகித்ய அகாதமியின் பரிசு பெற்ற சிறப்புடையது.
இப்புதினத்தின் பன்முகப் பரிமாணங்களை ஒரு
பருந்துப் பார்வையாக ஆய்வதாக அமைகிறது இக்கட்டுரை.
கதைக் களம்
கதையின்
பெயரே இது சேரர்களை மையமிட்டது என்பதை உணர்த்திவிடுகிறது. அந்நிலையில் சேரநாட்டின்
பகுதிகளாகிய திருவஞ்சைக்களம், திருவிதாங்கோடு, கிருஷ்ணன் கோயில்,
முதலானவை
இக்கதையின் களமாக அமைகின்றன.
கதைக் கரு
தமது கதைக்குரிய
கருவைத் தாம் தேர்ந்தெடுத்த விதத்தை,
அண்மைக் காலங்களில் நான் எந்தக் கதையை எழுதுவதென்றாலும்
மதக் கருத்துக்களோ, சமுதாயக் கருத்துக்களோ இடம்பெறக்கூடிய கருவைத்தான் எடுத்துக் கொள்வது
வழக்கம். (முன்னுரை 13)
சேரமான் பெருமாள் வரலாற்றிலும் மதக் கருத்துக்களைச்
சொல்வதற்கு நிறைய இடம் இருந்தது. காரணம், இரண்டாம் சேரமான் பெருமாள் குலசேகர
ஆழ்வார் ஆனது, வைணவக் கருத்துக்களைச் சொல்ல வசதியாக இருந்தது. அவரது திருமகன்
வேணாட்டடிகள் என்ற பட்டப் பெயரோடு சைவப் பெரியாராக வாழ்ந்தது சைவக் கருத்துக்களைச்
சொல்ல வசதியாக இருந்தது. மூன்றாம் சேரமான் பெருமாள் மதம் மாறி மகமதியரான குறிப்பும்
இருந்தது. (முன்னுரை 14-15)
என்று கண்ணதாசன் அவர்களே தமது முன்னுரையில்
தெளிவாக்கிவிடுகிறார்.
கதைநிகழ் காலம்
வரலாற்றுக்
கதைகளில் கதைநிகழ் காலம் இன்றியமையா இடம் வகிக்கிறது. சேரமான் காதலி என்னும் இப் புதினம்
மூன்றாம் சேரமான் ஆட்சிக்காலமாகிய கி.பி.798 முதல் கி.பி.834 வரையில்
நடந்த நிகழ்வுகளை மையமிட்டதாக அமைகிறது. எனினும் இந்த 36 ஆண்டுக்கால நிகழ்வுகள்
சுமார் மூன்று ஆண்டுகளில் முடிவு பெற்றதைப்போல் கதைப்பின்னல் விளங்கக் காணலாம்.
இந்த வரலாற்றில்
ஒரே ஒரு விஷயத்தில்தான் வாசகர்களுக்குக் குழப்பம் ஏற்படும்.
அதாவது கி.பி. 798இல் பட்டத்துக்கு
வந்த மூன்றாம் சேரமான் 834இல் தான் மெக்காவுக்குப் போகிறார். அவரது
36
ஆண்டு ஆட்சியை நான் கதைப் போக்குக்காகச் சுருக்கிக் கொண்டிருக்கிறேன். அதைத்தவிர,
அனைத்தும்
கலை நியாயங்களுக்குக் கட்டுப்பட்டவையே (முன்னுரை 15)
என்னும் முன்னுரைப் பகுதியில் வேண்டுமென்றே
இத்தகைய காலச்சுருக்கத்தைக் தாம் புகுத்தியமையையைக் கண்ணதாசன் தெளிவுபடுத்திவிடுகிறார்.
கதைமாந்தர்
பாஸ்கர இரவிவர்மன்
என்னும் இயற்பெயர் கொண்ட மூன்றாம் சேரமான் பெருமாள் இக்கதையின் நாயகனாகத் திகழ்கிறான்.
இருப்பினும் குலசேகராழ்வார் என்று வைணவர்களால் கூறப்படுகின்ற இரண்டாம் சேரமான் பெருமாளின்
வாழ்க்கையிலிருந்தே இக்கதை தொடங்குகிறது. அவர் வாயிலாக வைணவ சமய தத்துவங்களை விரிக்கக்கூடுமாகையால்
இவ்வாறு செய்ததாக ஆசிரியர் அதற்குரிய காரணத்தை முன்னுரையில் தெளிவுபடுத்துகிறார். குலசேகராழ்வாரின்
மகன் மார்த்தாண்ட வர்மன், அவருடைய மனைவி மெல்லிளங்கோதை, ரவிவர்மனின்
மனைவி பத்மாவதி, நாராயண நம்பூதிரி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தராக விளங்குகின்றனர்.
கதைச்சுருக்கம்
இரண்டாம் சேரமான்
பெருமாள் வைணவ பக்தி காரணமாகத் தம் அரசாட்சியைத் தம் மகன் மார்த்தாண்ட வர்மனுக்கு முடிசூட்டிவிட்டுக்
குலசேகர ஆழ்வார் என்ற பட்டத்தோடு வைணவத் தலயாத்திரை மேற்கொள்கிறார்.
இந்த ஏற்பாட்டை
விரும்பாது தாயாதியின் மகனாகிய ரவிவர்மன் மார்த்தாண்டனை வஞ்சகமாய் விரட்டிவிட்டு ஆட்சியைக்
கைப்பிடிக்கிறான். பல சிக்கல்களுக்குப்பின் பாண்டியன் தலையீட்டால் சேரநாட்டை இரு பிரிவுகளாகப்
பிரித்து பழைய தலைநகராகிய திருவஞ்சைக் களத்தைக் கொண்டு ரவிவர்மன் ஆள்வதென்றும் திருவிதாங்கோட்டை
மற்றொரு தலைநகராகக்கொண்டு மார்த்தாண்ட வர்மன் ஆள்வதென்றும் முடிவுசெய்யப்பெறுகிறது.
மூன்றாம் சேரமான்
முடிசூட்டிக்கொள்ளும்போது சேரமானின் யூதக்காதலி யூஜியானா கர்ப்பவதியாக இருக்கிறாள்.
வேற்று சமயத்தைச் சேர்ந்த பெண்ணின் வாரிசு சேரநாட்டின் எதிர்காலத்தைப் பாழாக்கிவிடாமலிருக்க
நாராயண நம்பூதிரியின் திட்டப்படி அவளது பூர்வ தேசமாகிய இஸ்ரவேலுக்குப் பயணப்படுகிறாள்.
ஆனால் அதே காலகட்டத்தில் சேரநாட்டில் தரையிறங்கிய அரபுநாட்டுப் பெண் சலீமா மூன்றாண்டுக்காலத்தின்
நிறைவில் சேரமானின் காதலியாக மாறும் நிலை ஏற்படுகிறது. இசுலாமியப் பெண்ணை வீழ்த்துவதற்கு
யூஜியானாவே சரியானவள் என்று கருதும் நாராயண நம்பூதிரி மீண்டும் அவள் சேரநாடு வருவதற்குத்
திட்டம் தீட்டுகிறார். அவளும் மூன்றாடுகள் நிரம்பாத குழந்தையோடு வந்திறங்குகிறாள்.
ஆனால் நாராயண நம்பூதிரி எதிர்பாராத வகையில் இருவரும் தமக்குள் சமாதானமாகிவிடுகின்றனர்.
அரபுப்பெண் சலீமாவை
மணம்முடிக்க வேண்டுமாயின் சேரமான் மதம் மாறவேண்டும் என்று இசுலாமியர்கள் வற்புறுத்துகின்றனர்.
நம்பூதிரிகள்சபை எதிர்ப்புக் குரல் கொடுத்து அவனையும் காதலியையும் சிறைசெய்ய எண்ணுகிறது.
மார்த்தாண்ட வர்மனும் பாண்டியனும் படையுடன் எதிர்க்கின்றனர். உள்நாட்டுக் கலகமும் மூள்கிறது.
சேரமான் தமது நாட்டைப் பன்னிரு சிறு நாடுகளாகப் பிரித்து தமது ஐந்து சகோதரிகள்,
தம்பி,
சுற்றத்தினர்,
நண்பர்கள்
என அளித்துவிட்டுத் தன் காதலியோடு அரபுக் கப்பல் ஒன்றில்ஏறி தப்பித்துச் சென்று அரபிக்கரையில்
சகர்முக்கல் என்னும் துறைமுகத்தை அடைகிறான் என்று இக்கதை முடிகிறது.
வரலாறும் புனைவியலும்
மூன்றாம்
சேரமான்பெருமாள் ஆட்சிக்கால வரலாறு கதையின் பின்னலுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இருப்பினும் கதையின் சுவைக்காக யூஜியானா என்ற யூதகுலப் பெண்ணை அவன் காதலித்ததாய்க்
கற்பனை செய்ததாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் நம்பூதிரித் தலைவர், சேரமான்
காதலித்த இசுலாமியப் பெண் ஆகியோர் உண்மையில் வரலாற்று மாந்தராயினும் அவர்களுடைய பெயர்
தம்மால் படைத்தளிக்கப்பெற்றதாகப் பதிவுசெய்கிறார் ஆசிரியர்.
மீமெய்ம்மையியல்
இப் புதினத்தின்
இரண்டாம் பாகம் முழுமையும் (205-359) மீமெய்ம்மையியல் புனைவுடன் அமைகிறது.
இறைவியே வேட்டுவ மகளாகத் தோன்றி மெல்லிளங்கோதையுடனும் கண்மணியாகத் தோன்றி பத்மாவதியுடனும்
உரையாடுவதாகவும் அவள் மேலும் குலசேகராழ்வார், ரவிவர்மன்,
நம்பூதிரி,
சாலியூர்த்
தாவளி அனைவருடனும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொள்வதாகவும் அவளது சிவப்பு மூக்குத்தியின்
ஒளிபரவல் அதீத நிலையை ஏற்படுத்துவதாகவும் கதையைப் புனைந்துள்ளார் கண்ணதாசன். கதைக்குள் இடம்பெறும் இத்தகைய மீமெய்ம்மையியல்
புனைவுகள் ஆசிரியரின் மிகுகற்பனையாக அமைந்து கதைக்கு மர்மத்தன்மையை ஏற்படுத்துகிறது.
இலக்கிய அறிமுகம்
தம் கதையின்
வாயிலாக தமிழ் இலக்கியம், மொழி முதலானவை பற்றிய சிந்தனையை மக்களுக்கு
ஊட்டப் பெருமுயற்சி மேற்கொள்கிறார் ஆசிரியர்.
குலசேகராழ்வார்
இயற்றிய பதினைந்து பாடல்கள் கதைப்போக்கில் அளிக்கப்பெறுகின்றன (103, 229-30,
256, 297). ஆழ்வார்
அரங்கனைச் சேவித்துப் பாடத் தொடங்கினார் என்ற பகுதியைத் தொடர்ந்து,
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்
இவ்வையத் தன்னோடும் கூடுவ தில்லையான்
ஐயனே அரங்கா வென்றழைக் கின்றேன்
மையல் கொண்டொழித் தேனென்றன் மாலுக்கே (103)
என்று தொடங்கி ஒன்பது பாடல்களை வாசகர்களுக்கு
அறிமுகப்படுத்துகிறார் கண்ணதாசன். மேலும், நாச்சியார் திருமொழியிலிருந்து ஒரு
பாடலையும் (223) அறிமுகப்படுத்தும் கண்ணதாசன் ஆங்காங்கு சங்க இலக்கிய அடிகளையும்
பிற இலக்கிய அடிகளையும் கதைப்போக்கில் பின்னியிருத்தலை அறியமுடிகிறது.
சங்க காலம்,
சங்கம்
மருவிய காலம், சங்கம் இருந்த கபாடபுரம, தொல்காப்பியக்
காலத் தமிழ் முதலான பல செய்திகளைக் கண்ணதாசன் கதையினூடே கூறிச்செல்லும் பாங்கு சிறப்பானதாகும்.
தமிழகத்தின் இலக்கியப் பெருமையையும் மொழியின் நுணுக்கங்களையும் அனைவரும் அறிந்துகொள்ள
வேண்டுமென்று கதைப்போக்குடன் பின்னியிருக்கிறார். இத்தகு செய்திகள் கதையைத் தொய்வுள்ளதாக
ஆக்கிவிடும் என்னும் அச்சமின்றி இப்படியாவது மக்கள் கூட்டத்திற்குச் இவற்றைச் சொல்லியே
ஆக வேண்டுமென்று நுட்பமாக அளிக்கும் திறன் பாராட்டுக்குரியது.
நடப்பியல் ஒப்பீடு
வரலாற்றுக்
கதையைக் கூறும்போது சிலநேரங்களில் அக் கதைக்கூறுகளில் இன்றைய வாழ்வியல் இல்லாதிருக்கும்போது
வாசகர்களின் புரிதல் குறைவுபடலாம். அத்தகைய சூழல்களில் கதையின் ஆசிரியர்கள் அதனை எவ்வாறேனும்
விளக்க முயலுகின்றனர். அவ்வகையில் கண்ணதாசனும் தம் கதையில் சில கதைமாந்தரின் நிலையை
விளக்கவருகையில்,
தற்போதைய நிலையை மேற்கோள் காட்டினால் நாராயண
நம்பூதிரி பிரதம மந்திரியாகவும், இரண்டாம் சேரமான் பெருமாள் குடியாட்சித்
தலைவராகவும் விளங்கினார்கள் (19)
என்று இன்றைய நடப்பியல் வாழ்முறையோடு பொருத்திக்
காட்டுகிறார்.
அரசனின்
வலிமையையும் செல்வாக்கையும் பொறுத்து நாட்டின் எல்லைகளும் தலைநகரம் போன்றவையும் மாற்றத்திற்குட்படுகின்றன.
வரலாற்றுப் புனைவுகளில் இத்தகைய செய்திகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. எனவே இவற்றைப்
பற்றிய தெளிவான விளக்கம் வாசகர்களுக்குத் தரப்படல் வேண்டும். இதனைக் கண்ணதாசன் மிக
நேர்த்தியாகச் செய்திருப்பதை,
சேரநாடு - சங்க காலத்தில் இதன் தலைநகரம்
கரூர் என்பார்கள். ஆனால் நம் கதை நடக்கும் காலத்தில் இதன் தலைநகரம் வஞ்சியாகவே இருந்தது.
(18)
என்னும் பகுதியால்; அறியமுடிகிறது.
தம்கால அரசியல்
கண்ணதாசன்
தம் புதினத்தில் வாய்க்கும் இடமெல்லாம் தம்கால அரசியல் செய்திகளை இலைமறை காயாக பதிவுசெய்து
வாசகர்களைக் கவரத் தவறவில்லை. சான்றுக்கு,
ஒரே கேள்வியை ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொண்டிருக்க
அரசியல்வாதிகளால்தான் முடியும். (38)
ஈடுகட்ட முடியாத ஒரு தலைவன் தன் இடத்தைக்
காலிசெய்யப் போகிறான் என்றால் அடுத்த வரிசையிலுள்ளவர்களுக்குள் பலப் பரீட்சை நடப்பது
இயற்கை. (52)
பிணத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடத்துவது
ஒரு கலை! அது ஒருவகை ராஜதந்திரம்.
இயற்கையாக அழுது அறியாதவன் செயற்கையாக அழுது
பழகுவதற்குப் பெயரே அரசியல்.
அரசியலில் செய்கின்ற காரியத்தைவிட அது செய்யப்பபடும்
காலமே முக்கியமானது. (114)
ஆகிய பகுதிகளைச் சுட்டலாம்.
பெரும்பாலான மக்கள் அரசு பீடத்தில் யார்
இருக்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்களது அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு
இல்லாமல் இருந்தால் போதும் என்பதுதான் அவர்கள் நிலை. (184)
என்று அரசியல் குறித்த மக்களின் மனநிலையையும்
எடுத்துரைக்கிறார் கண்ணதாசன்.
மறுவாசிப்பு
சமுதாயத்திலும்
இலக்கியத்திலும் காணப்படுகின்ற தீர்க்கமுடியாத சந்தேகங்களுக்கும் சிக்கல்களுக்கும்
சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளின் வாயிலாக விடைசொல்ல முயலுகிறார்கள். அத்தகைய
போக்கிற்கு,
முனிவனோடு உடலுறவு கொள்ளாததால். அவனது உடலுறவு
எப்படி இருக்கும் என்று அறியாமல் முனிவனாகத் தோன்றிய இந்திரனுக்கு இணங்கிவிட்டாள் அல்லவா,
அகலிகை?
(36)
என்று கதைப்போக்கில் அகலிகையின் வாழ்வில்
காணப்படுகின்ற அவிழ்க்கவியலாத முடிச்சை அவிழ்த்து வாசகர்களின் கேள்விக்கு விடைசொல்கிறார்
கண்ணதாசன்.
புதுமைச் சிந்தனை
சிறந்த எழுத்தாளர்கள்
சமுதாயத்திற்குத் தேவையான புதுமைக் கருத்துகளையும் சொல்;வதில் முன்னிற்கின்றனர்.
சேரமான் மனைவி பத்மாவதிக்குப் பணிப்பெண் ஒருத்தி விசிறி வீசுகிறாள். அவள் தனது கதையைக்
கூறும்போது தான் கணவனை இழந்தவள் என்று கூறுகிறாள். அப்போது,
'மங்கலம் இழந்தாயா? நெற்றியில்
குங்குமம் இருக்கிறதே!"
'மனத்திலே நாயகன் இருக்கிறான்; அதனால்
மார்பிலே மாங்கல்யம் இருக்கிறது. கனவிலே அவனோடு உறவாடவே இந்த மாங்கல்யமும் இந்தக் குங்குமமும்!"
(236)
என்னும் உரையாடல் தொடர்கிறது. இதில் அப்
பணிப்பெண்ணை இறைவியாகக் காட்டுகிறார் கண்ணதாசன். இவ் உரையாடலில் பெண்கள் கணவனை இழந்தாலும்
தமது தாலியையும் குங்குமத்தையும் அகற்றத் தேவையில்லை என்னும் கருத்தை வலியுறுத்தும்
ஆசிரியர், கணவன் இறப்பிற்குப் பின்னர் அவன் மனைவியின் கனவில் தோன்றும் வாய்ப்பு
நேர்ந்தால் அவள் தாலியோடும் குங்குமத்தோடும் இருப்பதுதான் முறை என்னும் புதுமையான சிந்தனையையும்
முன்வைக்கிறார்.
தத்துவம்
கண்ணதாசனின்
தத்துவப் பாடல்கள் தமிழகமக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்றவை. தமது புதினத்திலும்
ஆங்காங்கு அழகிய வாழ்வியல் தத்துவங்களைச் சுவைபட விரித்துச்செல்கிறார் கண்ணதாசன். ரவிவர்மன்
தன்னை எதிர்ப்பான் என்று அத்தாக்குதலுக்குத் தயாராக இருந்த நாராயண நம்பூதிரி எதிர்பார்த்ததற்கு
மாறாக அவன் தன்னைப் புகழவே ரவிவர்மனின் எதிர்பார்ப்பிற்குத் தாம் இணங்கிப்போக வேண்டிய
சூழல் ஏற்படுகிறது. இச் சூழலில்,
எதிர்த்துப் பேசினால் சுடச்சுடப் பதில் கொடுத்துவிட
முடியும். புகழ்ந்துபேச ஆரம்பிப்பவனை அப்புறப்படுத்துவது கடினமான காரியம். (98)
என்று வாழ்வியல் தத்துவத்தை நமக்குப் புலப்படுத்துகிறார்
கண்ணதாசன்.
இதுகாறும் கண்டவற்றால்
ஒரு வரலாற்றுப் புனைவிற்குரிய அனைத்துச் சிறப்புகளையும் பெற்று சேரமான் காதலி என்னும்
இப் புதினம் திகழ்வதை அறிய முடிகிறது. எனினும் ஆசிரியர் 36 ஆண்டுக் கதையை
மூன்றாண்டுக் காலத்தில் சுருக்கிவிட்டமை சேரமான் ரவிவர்மனின் காதல்கள் அவனது ஆட்சிச்சிறப்பை
வெகுவாகச் சுருக்கிவிட்டது என்று வாசகர்கள் கருதிவிடக்கூடிய பொய்மைச் சூழலை ஏற்படுத்தி யுள்ளமையையும்
மறுக்க முடியாது.
பயன்நூல் :
கண்ணதாசன், சேரமான் காதலி,
சென்னை
: கண்ணதாசன் பதிப்பகம், 2010.
No comments:
Post a Comment