Thursday, 26 January 2017

சுவர்கள்




                            கோபு. . . கோபு. . . பாலு உள்ளே நுழைவதற்கு முன், அவன் கூப்பிடும் ஒலி நுழைந்தது.

                         ‘கீதா. . . ,  கோபு குட்டி எங்கே?’ தன் சட்டையைக் கழற்றிக்கொண்டே கேட்டான் பாலு.

                           ‘ஹால்லதான் விளையாடிக்கிட்டிருந்தான். நீங்க வர்ரத பாத்து எங்கேயாவது ஒளிஞ்சிக்கிட்டிருப்பான். . .’ என்றாள் சமையல்கட்டில் கிரைண்டரில் மாவரைத்துக் கொண்டிருந்த கீதா.

                         கோபுவிற்கு மூன்று வயதாகிறது. படுசுட்டி. . .

                        தன் அப்பா மாலையில் வீட்டிற்கு வரும் நேரம் கோபுவுக்கு நன்றாகத் தெரியும். அப்பா தன்னைத் தேடவேண்டும் என்பதற்காக அவன் வரும்நேரத்தில் கட்டிலுக்கடியில், கதவின் பின்புறம், சோபாவின் பின்னால், பீரோவின் பக்கத்தில் - என்று எங்காவது நாளுக்கொரு இடத்தில் மறைந்துகொள்வான். அவன் பீரோவின் பக்கத்தில் ஒடுங்கிக்கொண்டு நிற்பது கண்களுக்குப் புலப்பட்டாலும் வீடுமுழுக்கச் சுற்றிச் சுற்றி ஐந்து நிமிடமாவது தேடுவதுபோல் பாவனை செய்துவிட்டு கோபுவைக் கண்டுபிடித்ததாகக் காட்டிக்கொள்வதில் பாலுவுக்கு அத்தனை மகிழ்ச்சி.

                      சும்மாவா? அவனைப் பெறுவதற்காகத்தான் எத்தனை எத்தனை முயற்சிகள். கல்யாணமாகி பத்து வருடமாய்க் குழந்தை பிறக்கவில்லையே என வேண்டாத தெய்வமில்லை; போகாத மருத்துவரில்லை; தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு கோயிலைக் காட்டி இந்தச் சாமியைக் கும்பிட்டால் பிள்ளை வரம் வாய்க்கும் என்று சொல்லிவிட்டால் போதும். உடனே காரோ, பஸ்ஸோ, ரயிலோ - எது சௌகரியப்படுமோ அதில் கணவனும் மனைவியும் கிளம்பிவிடுவார்கள். பாலு இதற்கு விடுப்பெடுக்க மறுப்பதே இல்லை.

                       அடுத்ததாக அவர்கள் பார்க்கும் இன்னொரு நிகழ்ச்சி - மருத்துவம். ‘இந்த லேகியம் தின்றால் குழந்தை பிறக்கும்’. ‘அந்தச் சூரணம் தின்றால் குழந்தை பிறக்கும்’ - என்று எதைச் சொன்னாலும் உடனே எப்படியாவது அந்த மூலிகைகளைக் கொண்டுவந்து அரைத்து, வதக்கி, குழைத்து - என்று எதையாவது செய்து, குடித்து, தடவி . . .  இப்படியாக ஒரு பக்கம்.
வெகுநாள் குழந்தை இல்லாத யாருக்கேனும் குழந்தை பிறந்தால் உடனே அவர்கள் பார்த்த மருத்துவரிடம் செல்வது, குழந்தையைப் பெற்றவர்களிடம் அறிவுரை கேட்பது  - என்று இப்படியாக ஒரு பக்கம்.

                      ஒருவருக்கு வரமளிக்கும் கடவுள் அடுத்தவருக்குக் கைவிரிப்பது தவறு என்று கடவுளிடம் கோபித்துக்கொள்ள முடியுமா?

                     ஒருவருக்குப் பலனளிக்கும் மூலிகை அடுத்தவருக்கும் பொருந்தும் என்று எதிர்பார்க்க முடியுமா?

                     ஒருவருக்குப் பார்க்கும் மருத்துவம் அடுத்தவருக்கும் வெற்றியளிக்க முடியும் என்று நம்பமுடியுமா?

                    நாடி சோதிடம் முதல் கிளி ஜோஸியம் வரை பார்த்தாகிவிட்டது.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஆங்கில மருத்துவம், அக்குப் பஞ்ச்சர், அக்குப் பிரஷர் என்று ஒன்றையும் பாக்கியாக விட்டுவைக்கவில்லை.

                       சோதனைக் குழாய் முறையும் முதல்தடவை தோற்றுப் போனபோது இரண்டாவது தடவையில் எவ்வளவோ கண்ணும் கருத்துமாக இருந்து ஒருவாறாகப் பெற்றவனாயிற்றே அவன்!

               கோபு பிள்ளைக்கலி தீர்க்கவந்தவனாயிற்றே. அவன் மீது பாலு பாசத்தைப் பொழிந்ததில் வியப்பேதுமில்லை.

                   அதுமட்டுமா? இது ஒரு பிள்ளைதான். இனி பிள்ளைப் பேற்றிற்கு வாய்ப்பில்லை என்று மருத்துவர் உறுதியாகக் கூறிவிட்டார். தங்கள் பரம்பரைக்கே அவன் ஒற்றைப் பிள்ளையாகிப் போனான். தன் தந்தைக்கு பாலு ஒற்றைப் பிள்ளை. இப்போது தனக்கும் கோபு ஒற்றைப் பிள்ளை. . .
கோபு, கோபு . . . கோபு, கோபு . . . ஒவ்வொரு இடமாகத் தேடிக்கொண்டே போனான் பாலு. சோபாவிற்குப் பின்னால் . . . பீரோவின் பக்கத்தில். . .
கட்டிலில் கோபு போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான். ‘திருட்டுப் படவா... இங்கதான் படுத்துக்கிட்டுப் பாசாங்கு பண்றியா?’ என்றவாறே போர்வையைச் ‘சரக்’கென்று இழுத்தான் பாலு. ஆனால் போர்வைக்குள்ளே தலையணைதான் இருந்தது. கோபுதான் வேண்டுமென்றே தலையணையைப் போர்த்தி வைத்திருந்தான். அவன் எதிர்பார்த்ததுபோலவே அப்பா இன்றும் ஏமாந்துவிட்டார்.

                          ‘கோபு செல்லம். . .  எங்கடா இருக்கே. . . ?’ தேடுதலைத் தீவிரமாக்கினான் பாலு.

                       ‘இவங்க ரெண்டு பேருக்கும் இதே வேலயாப் போச்ச. ஆபீஸ் விட்டு வந்தமா, கையகால கழுவுனமா, டீய குடிச்சமான்னு இல்லாம. . . மெதுவா சாவகாசமா விளையாடக் கூடாதா? வந்ததும் வராததுமா தினமும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிகிட்டு? என்ன சொன்னாலும் கேக்க மாட்டாங்களே. . .’ செல்லமாய்த் தனக்குள் அலுத்துக்கொண்டாள் கீதா.
பாலு, கீதா சுருக்கமான பெயர்கள். தங்கள் மகனுக்கும் அதேபோன்றே சுருக்கமாகப் பெயர் வைத்தார்கள். ஆனால் கூப்பிடும் போதெல்லாம் கோபு கண்ணா, கோபு செல்லம், கோபு கண்ணம்மா, கோபு குட்டி, கோபு தங்கம் என்று பெயர் நீண்ண்ண்டுகொண்டே போகும்.

                   ஒவ்வொரு கதவின் பின்புறமும் நிதானமாகத் தேடினான் பாலு. ஒருமுறை அப்படித்தான் வேகமாகக் கதவை இழுக்க கதவிடுக்கில் கோபுவின் விரல் சற்றே நசுங்கி அலறினான். கோபுவைவிட பாலு அதிகமாகத் துடித்துவிட்டான். கீதா அழுதேவிட்டாள்.

                         சமையல்கட்டின் கதவு, படுக்கையறைக் கதவு, பாத்ரூம்... எல்லா இடத்தின் கதவின் பின்னாலும் தேடியாகிவிட்டது.
                       எங்கே? எங்கே? யோசித்தான் பாலு.

                        இந்த வீட்டைக் கட்டிய மனை பூர்வீகச் சொத்தாக வந்தது. தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அவர்கள் மகன் சந்தானம் தன்னுடைய அப்பா, அம்மா என்று கூட்டுக்குடும்பமாக இருந்தார்கள். அறுபதுக்கு முப்பது இடம்.
அண்ணன் தம்பி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பாலுவையும் சந்தானத்தையும் பாராட்டியதெல்லாம் அந்தக் காலம். ஒரே பாயில் ஒரே தலையணையில் படுத்து ஒரே போர்வையில் உருண்டு, ஒரே தட்டில் சாப்பிட்டு காலைமுதல் மாலைவரை கட்டிப்புரண்டு விளையாடிய காலங்களை மறக்க முடியுமா? உண்மையில் அவர்கள் பெரியப்பா சிற்றப்பா பிள்ளைகள். ஆனால் சிறுவயதில் அண்ணன் தம்பியாகவே தெரிந்தார்கள். இந்தப் பாசம், நேசம் எல்லாம் பெரியவர்களானதும் எங்கே போய்த் தொலைகின்றன?

                            ஒரே குடும்பமாய்க் கூட்டுக்குடும்பமாய் இருந்தவரையில் யார் செலவு செய்கிறார்கள்? யார் சாப்பிடுகிறார்கள்? என்றெல்லாம் கணக்குப் பார்த்ததே கிடையாது.

                              பாலுவுக்கும் சந்தானத்துக்கும் அடுத்தடுத்துத் திருமணம் நடந்தேறின. வீட்டின் மக்கள் தொகையில் இரண்டு எண்ணிக்கை கூடியதோடு அவர்களைப் பார்க்க வருவோர் போவோர் என்று இடநெருக்கடி கூடுதலாகத் தெரிந்தது. சந்தானத்திற்கு வாய்த்த கஸ்தூரி தாராளமாகச் செலவு செய்பவள். அடிக்கடி ஓட்டலுக்குப் போகவேண்டும் என்று விரும்புபவள். புதிய படம் வெளிவந்தது என்றால் திரைப்பட அரங்குக்குச் சென்றுதான் பார்க்க வேண்டும் அவளுக்கு. இப்படியெல்லாம் செலவுகள் தாறுமாறாயின. கீதாவோ படு சிக்கனம். - இவற்றால் அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வெடித்தன.
தன் மகன்கள், மருமகள்கள், பேரன்களையும் கைப்பிடியில் வைத்திருந்த தாத்தா மேலோகம் போய்ச்சேர்ந்தார். இனி சௌகரியப்படாது என்று பாகம் பிரித்துவிட்டார்கள். வீடு ரொம்பவும் பழைய வீடாகையால் இனி உதவாது என்று இடித்து, மனையாகப் பிரித்துத் தரப்பட்டது.

                             பாலுவோ சந்தானமோ முழுசாய் ஒருவர் அந்த இடத்தை எடுத்துக்கொண்டு மற்றொருவருக்குப் பணத்தைத் தந்துவிட்டால் அவர் வேறொரு இடம் வாங்கிவிடலாம். இருவருமே தாராளமாக வீடு கட்டலாமே என்று எதிர்வீட்டு ஏகாம்பரம் மாமா சொன்ன அறிவுரை இருவர் காதிலும் ஏறவில்லை. பிறந்து வளர்ந்த இடம் என்ற சென்டிமென்ட்டை இருவரும் விடத் தயாராய் இல்லை.

                                 மாமனார் உதவியால் சந்தானம் உடனடியாக வீடுகட்டத் தொடங்கிவிட்டான். கட்டடத்தின் இரண்டு பக்கமும் இரண்டு அடியாவது விடவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஏற்கெனவே குறைவாய் உள்ள பதினைந்தடி அகலத்தில் பக்கவாட்டில் வேறு காலிஇடம் விட முடியுமா? தன் பாகம் முழுக்கக் கட்டவேண்டும் என்றான் சந்தானம். ‘அப்படியென்றால் சன்னல்கள் வைக்க முடியாதே’ என்றார் பொறியாளர். ‘சன்னல் தேவையில்லை சார். இப்பல்லாம் எல்லாரும் ஏ.சி. வெச்சுக்கறாங்க. எதுக்கு சன்னல்? சுவராகவே எழுப்பிவிடுங்கள்’ என்றான் சந்தானம். ஓர் ‘இன்ச்’ இடமும் விடாமல் சுவர் எழும்பியது. எல்லைத் தகராறும் எழுந்தது. பாலுவும் கருவிக்கொண்டிருந்தான் தன் இடம் குறைந்துவிட்டதாக. இரண்டு பக்கமும் சன்னல்கள் இன்றிச் சிறைச்சாலை போன்று இரண்டுமாடி வீடு எழுந்தது.
பெரியப்பா மகன் வீடுகட்டி விட்டதால் தானும் உடனே வீடுகட்டத் துடித்தான் பாலு. வங்கிக் கடன் வாங்கக் கால தாமதம் ஆனது. கடன் கிடைத்துக் கட்டத் தொடங்கியதும்தான் இன்னொரு பிரச்சனை எழுந்தது. சந்தானம் கட்டியதுபோன்றே தானும் தன் மனை முழுக்கக் கட்டடத்தை எழுப்பவேண்டும் என்று சொன்னான் பாலு.

                         ‘சார், அவரு வீடு கட்டும்போது உங்க மன காலியா இருந்திருக்கும். ஆனா இப்ப எப்படி நாங்க நின்னு வேல செய்ய முடியும்?’ வினவினான் மேஸ்திரி.

                          பாலு ஒத்துக்கொள்ளவில்லை. சந்தானம் வீட்டுச் சுவரிலே கட்டிவிடலாமா என்று யோசித்தான். சந்தானம் தன் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டுத் தன் அலுவலகத்திற்கு அருகில் குடியேறிவிட்டாலும் பாலு வீடு கட்டும்போது அடிக்கடி வந்து கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.

                          பொறியாளரும், ‘பிற்காலத்தில் வீடு விற்கக் கொள்ளப் பிரச்சனையாகும்’ என்று எச்சரித்தார். அதனால் சுவர் தனியாகத்தான் கட்ட வேண்டும் என்றார். பேச்சுவார்த்தையின் இறுதியில் அரையடி இடுக்குவிட்டு அடிக்கல் நாட்டிச் சுவர் எழுப்பப்பெற்றது. கட்டுவேலையின்போது கையை இடைவெளியில் விட்டுப் ‘பதிந்து விடவும்’ துடைப்பத்தால் பெருக்கிவிடவுமே கடினமாக இருந்தது. அடிக்கடி ஆள் பெருக்கிவிடும்போது புறங்கையைப் பக்கத்து வீட்டுச் சுவரில் தேய்த்துக்கொண்டனர். கட்டுவேலையில் சுவரைப் பதிந்துவிடும்போது கலவைக்கனத்தால் மேலும் ஓர் அங்குலம் இடைவெளியில் குறைந்துபோனது.

                              சந்தானத்திற்கும் பாலுவிற்குமிடையே சிலபல வாக்குவாதங்களோடு ஒருவழியாகக் கட்டடம் முடிக்கப்பட்டுவிட்டது. சந்தானத்தின் வீட்டின் பக்கம் மட்டும் பாலுவின் வீட்டுச் சுவர் பூசப்படாமல் இருந்தது. அதற்கு வழியில்லை.

                            பாலு வீடு கட்டும்போதே சந்தானத்தைப் போன்று முதல் மாடியையும் சேர்த்துக் கட்டிவிட்டான். ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டுவிட்டால் ஆபத்து அவசரத்திற்கு உதவியாக இருக்குமல்லவா? அத்துடன் வங்கிக்கடனைக் கட்டவும் வசதியாக இருக்குமே!
பாலு மேல்மாடியில் இருந்துகொண்டு கீழே வாடகைக்கு விட்டான். ஏனென்றால் கீழ் போர்ஷனுக்குத்தான் வாடகையாக ஐநூறு ரூபாய் சேர்த்துவாங்க முடிந்தது.

                              கோபுவை ஒவ்வொரு அறையாகத் தேடியபோது அறையின் விஸ்தாரமற்ற தன்மை பழைய நினைவுகளைப் பாலுவுக்குக் கொண்டுவந்து சேர்த்தது. பாலுவிற்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. ‘ஒருவேளை பையன் கீழே குடித்தனக்காரர் வீட்டில்போய் விளையாடிக் கொண்டிருப்பானோ?’ படிக்கட்டுகளில் வேகமாக இறங்கினான் பாலு. கதவு உள் தாழ்ப்பாள் இட்டிருந்தது. அழைப்பு மணியை அழுத்தினான். பங்கஜத்தம்மாள் எட்டிப் பார்த்தார்.

                        ‘என்னப்பா பாலு? நேத்திக்கே கீதாகிட்ட வாடகை குடுத்துட்டேனே!’ என்றார்.
                         ‘இல்லம்மா, கோபு உள்ள இருக்கானா?’
                       ‘கோபுவா? இங்க வரலியேப்பா!’
                      பாலுவுக்குச் ‘சொரேர்’ என்றது.

                       தான் வரும்போது ‘வாசல்கேட்’ கதவு தாழிடப்படாமல் திறந்திருந்தது. ஒருவேளை வெளியே ஒடிஇருப்பானோ? ‘கீதா பொறுப்பில்லாமல் என்ன செய்துகொண்டிருந்தாள்?’ மனத்திற்குள் கோபம் கொப்பளித்தது. அதற்குள் கீதாவும் இறங்கி வந்தாள்.

                      கோபு. . . கோபு. . . என்று உரக்கக் கூவினர். தெருவின் இரு முனைகளுக்கும் குரல்கொடுத்துக்கொண்டே ஓடினர். இங்கும் அங்கும் தேடித்தேடி ஓடினார்கள். ஒவ்வொரு வீட்டையும் தட்டினார்கள். வீட்டின் சந்துபொந்துகள் எல்லாம் தேடினார்கள். தெருவே தேடியது. எங்கும் கோபுவைக் காணவில்லை.

                            கோபுவின் கையில் பொன்னாலான காப்பு அணிந்திருந்தான். அது கையில் இறுகிக் கிடந்தது. காப்பைக் கழற்றிவிடலாம் என்று பாலு பலமுறை சொன்னான். கீதாதான் கேட்கவில்லை. அது அவள் அம்மா போட்டது. தங்கக் காப்பிற்கு ஆசைப்பட்டுக் கோபுவை யாராவது கடத்திக்கொண்டு போய்விட்டார்களோ? அண்மையில்கூட ஒரு குழந்தையின் காதில் இருந்த நகையைத் திருடிக்கொண்டு கிணற்றில் குழந்தையை வீசிவிட்டதாகச் செய்தி வந்திருந்ததே. பாலுவின் மண்டைக்குள் வண்டு குடைந்தது.

                    கோபு அழகுப் பிள்ளையாயிற்றே! யாரேனும் ஆண்பிள்ளைக்கு ஆசைப்பட்டுக் கடத்திச் சென்றிருப்பார்களோ? - கீதா புலம்பினாள். தேடித்தேடித் திகைத்துப்போனார்கள்.

                     காவல்துறையிலும் புகார் செய்தார்கள்.

                     கோபு காணாமல்போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. கீதா கிழிந்த நாராய்க் கிடந்தாள். அவள் உயிரோடு இருக்கிறாளா? என்றே பலமுறை அசைத்துப்பார்க்க வேண்டியிருந்தது. பாலுவுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

                       ஊருக்குச் சென்றிருந்த வேலைக்காரி பொன்னம்மா இரண்டுநாள் கழித்துத் திரும்பிவந்தாள். செய்தியைக் கேள்விப்பட்டு அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. ‘அம்மா, நீங்க வேணா பாருங்க. போலீஸ்காரங்க கட்டாயம் நம்ப கொழந்தய கண்டுபிடிச்சுடுவாங்க. வருத்தப்படாதிங்கம்மா’, என்று ஆறுதல் சொன்னாள்.

                     வீடே அலங்கோலமாகக் கிடந்தது. மனத்தைத் தேற்றிக்கொண்டு சீர்ப்படுத்தினாள்.  துணிகளைத்  துவைத்தாள்.  கோபுவின்   துணிகளைப் பார்க்கும்போது நெஞ்சே நின்றுவிடும்போல் இருந்தது பொன்னம்மாவிற்கு. அழுகை பீறிட்டது. ‘மகமாயி, ஆத்தா! புள்ளயக் கொண்டுவந்து சேத்துடும்மா. . .’ என்று மாரியம்மனை வேண்டிக்கொண்டாள்.

                        துணிகளைக் காயவைக்க மேல்மாடி சென்றாள். ஏற்கெனவே காயவைத்த துணிகள் இரண்டு நாட்களாக எடுக்கப்படவில்லை. காற்றில் அசைந்து அசைந்து கிளிப்போடு சேர்ந்து கொடிக்கயிற்றின் ஒருபுறமாக ஒதுங்கிக் கிடந்தன. சில துணிகள் கிளிப்பைவிட்டுக் கழன்று கீழே அலங்கோலமாகக் கிடந்தன.

                         சில நேரங்களில் காற்றில் துணிகள் பறந்து பின்வீட்டிலோ அல்லது பக்கத்து வீட்டின் சுவர் இடுக்கிலோ விழுந்து கிடக்கும். எத்தனை கிளிப்புகள் போட்டாலும் காற்றில் நிற்கிறதா? என்று கூறிக்கொண்டே சந்தானம், பாலு இருவர் வீட்டுச் சுவர் இடுக்கில் துணிகள் வீழ்ந்துவிட்டதா என்று பொன்னம்மா எட்டிப்பார்த்தாள்.

                       அவள் நினைத்ததைப்போலவே இடுக்கில் கோபுவின் ஆரஞ்சுச் சட்டை நடுவாந்திரத்தில் மாட்டிக்கொண்டு கிடந்தது.

                      ஆனால். . . ஆனால். . .  அங்கு சட்டை மட்டுமா இருக்கிறது?

                      நெஞ்சுக்குள் ஒரு பயப் பந்து உருண்டது. ‘குழந்தை. . . குழந்தை . . . ’
‘கோபூஊஊஊ. . .’  - வீறிட்டாள் பொன்னம்மா. அவள் வீறிட்ட ஒலி அந்தத் தெருவையே அதிரவைத்தது. கீதா தன் உயிரை ஏந்திக்கொண்டு ஓடிவந்தாள். பாலு பதறியடித்துக்கொண்டு வந்தான். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பொன்னம்மாள் அரை மயக்கத்தில் இருந்தாள். அவளை அனைவரும் உலுக்கினார்கள். அவள் விரல் காட்டிய இடத்தில் உற்றுநோக்கினர்.
கோபு. . .

                      அவன் தலை இரண்டு சுவர்களின் இடுக்கில் சிக்கித் தலைகீழாக. . .
அவன் ஆசையாய் விளையாடும் சிவப்புப்பந்து அவனுக்குக் கீழே தரையில் அசையாமல் . . .                                                      


                                                                                   ***

No comments:

Post a Comment