கவிஞர் அவ்வை நிர்மலாவின்
நூலக ஆற்றுப்படை
நூல் அணிந்துரை
முனைவர் நா.இளங்கோ
தமிழ்த்துறைத் தலைவர்
தமிழ் இணைப் பேராசிரியர்
தாகூர் கலைக்கல்லூரி
புதுச்சேரி- 605008
மனிதன் தான் சிந்தித்த, கற்பனை செய்த, விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்துவடிவில் பதிந்து வைக்க உருவாக்கிக் கொண்டதோர் கருவிதான் நூல். எழுத்து வடிவிலான இத்தகைய பதிவுகள் தொடக்கத்தில் கல்லிலும் சுடுமண் பலகைகளிலும், ஓலைகளிலும் பதிந்து வைக்கப்பட்டன. காகிதம் மற்றும் அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு நூல்களின் பெருக்கத்திற்குப் பெருமளவில் வழிவகுத்தது. தமிழகத்தில் தொடக்ககால நூல்கள் பனையோலை நறுக்குகளில் எழுதப்பட்டன.
அவை சுவடிகள் என்றழைக்கப்பட்டன. பனையோலை நறுக்குகள் துளையிட்டுக் கயிற்றால் கோர்த்துக்கட்டப்பட்டிருந்த காரணத்தால் அவை பொத்து அகம்- பொத்தகம் என்றழைக்கப்பட்டன. நூல் என்ற சொல்வழக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்திலேயே இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் குறிப்பிடும் நூல் இலக்கண நூல் ஆகும். நன்னூல் தனது பொதுப்பாயிரத்தில் நூல் என்ற சொல்லுக்கான பொருட்காரணத்தை விளக்கிக் காட்டுகின்றது.ஒரு மரத்தின் வளைவு நெளிவுகளைக்
கண்டறிவதற்கு மரவேலை செய்யும் தச்சர்கள் பயன்படுத்தும் கருவி, நூல் ஆகும்.
மரத்தின் வளைவைக் கண்டறிந்து
அதனைச் சீர் செய்வதற்கு நூலைப் பயன்படுத்துவது போல மனிதனின் மனதில் உண்டாகும் கோணல்களைக்
கண்டறிந்து அவன் மனக்கோளாறுகளை ஒழுங்குபடுத்தும் கருவியாக நூல் செயல்படும் என்கிறார்
நன்னூல் ஆசிரியர்
பவனந்தியார்.
மனிதகுல வரலாறு மற்றும் சிந்தனைகளின்
எழுத்துப் பதிவுகளாக
அமைந்திருக்கும் நூல்கள்
ஒரு குறிப்பிட்ட
இடத்தில் சேமித்து
வைக்கப்பட்டு ஒருவருக்கோ
பலருக்கோ வாசிக்க
இடமளிக்கும் போது
அவ்விடம் நூலகம்
என்றழைக்கப்படுகிறது. இவ்வகை
நூலகங்கள் அரசாலோ
கல்வி மற்றும்
பொது நிறுவனங்களாலோ
குழுக்களாலோ, தனி
நபர்களாலோ உருவாக்கப்பட்டு நிறுவகிக்கப்படும். இத்தகு சேவைகள்
பெரும்பாலும் கட்டணமின்றியும் ஒரோவழி கட்டணச் சேவையாகவும்
வழங்கப்படும்.
நூலகங்களின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
தொடங்குகின்றது. மெசபடோமியர்கள்
என்றழைக்கப்படும் இன்றைய
ஈராக்கியர்களே முதன்முதலில்
நூலகத்தை உருவாக்கியவர்கள். இவர்கள் களிமண் பலகைகளில்
எழுதி அவற்றை
நெருப்பில் சுட்டு
அரண்மனைகளிலும் கோவில்களிலும்
பாதுகாத்து வைத்திருந்தனர். துறைவாரியாகப் பகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட மெசபடோமியர்களின் முயற்சியை நூலகங்களுக்கான
முன்னோடி முயற்சி
எனலாம்.
அச்சியந்திரங்கள்,
காகிதங்கள், அச்சிடும் மை முதலான
பொருட்களின் பயன்பாடு பெருகிய கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தான் நூல்களும் பெருகின நூலகங்களும் பெருகின. தற்போதைய நூலகங்களின் தோற்றமும் வளர்ச்சியும் நூற்றைம்பது ஆண்டுக்கால வரலாற்றினை மட்டுமே கொண்டுள்ளது. கல்வி மற்றும் மத நிறுவனங்களின்
பெருக்கமே நூலகங்களின் பெருக்கத்திற்கு வழிவகுத்தன. உலகம் முழுமைக்கும் இதுவே பொதுவிதி.
நூலகங்கள்
பலதிறத்தன, வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான நூலகங்கள் அரசு நூலகங்களாவே உள்ளன. அரசு நூலகங்களைப் பொதுவாக தேசிய நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், கிராம நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் என்று வகைப்படுத்தலாம். இவ்வகை அரசு நூலகங்கள் மட்டுமல்லாமல் பல்கலைக் கழக நூலகங்கள், கல்லூரி, பள்ளி நூலகங்கள், தனியார் நூலகங்கள், வாசகசாலைகள் முதலான பல்வேறு நூலகங்கள் நாட்டில் இயங்குகின்றன.
இத்தகு
நூலகங்களின் அருமை பெருமைகளை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் பாங்கில் தமிழின் மரபுச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான ஆற்றுப்படை இலக்கணத்திற்கேற்ப உருவாகியுள்ள சிற்றிலக்கியமே கவிஞர் அவ்வை நிர்மலாவின் நூலக ஆற்றுப்படை என்ற இந்நூல்.
கவிஞர் அவ்வை நிர்மலா,புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்ப் பேராசிரியர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியப்
பணியோடு பல நூறு கவிஞர்களையும் பேச்சாளர்களையும் மாணவியர்களிலிருந்து உருவாக்கி
வளர்த்த பெருமை அவருக்குண்டு. இவர் சிறந்த கல்வியாளர், ஐந்து முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலம் மட்டுமன்றிப் பிரஞ்சு, இந்தி, தெலுங்கு, மராட்டி முதலான மொழிகளைப் பயின்றவர். கவிதை, நாவல், சிறுகதைகள்,
நாடகம் எனப் படைப்பிலக்கியத்தின் பல்வேறு வகைமைகளிலும் தொடர்ச்சியாக நூல்களை
எழுதி வெளியிட்டு வருவதோடு மிகச்சிறந்த ஆய்வாளராகவும் திகழ்பவர். அண்மையில் புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் விருதினைப்
பெற்றுள்ள அவர் படைப்பிலக்கியத் திறன், ஆய்வுத் திறன்களோடு முனைப்பான ஆளுமைத்
திறனும் பெற்றுத்திகழ்வது அவரின் தனித்தன்மைக்கு மிகச்சிறந்த சான்றாகும். உலக
நாடுகள் பலவற்றையும் சுற்றிப்பார்ப்பதில் அவருக்கிருக்கும் ஆர்வம் அலாதியானது.
பல்வேறு, மொழி, இன, பண்பாட்டு வேற்றுமைகள் கொண்ட மனித குலத்தைக் கூர்ந்து நோக்கி
உலகியல் அறிவை விசாலப்படுத்திக் கொள்வதில் அவருக்கிருக்கும் அதே நாட்டம், சக
மனிதர்களின் அக மன முரண்களையும் புற உடல் நடவடிக்கைகளையும் கூர்ந்து நோக்கித் தம்
கதை, கவிதை முதலான படைப்பிலக்கியங்களில் பதிவுசெய்வதிலும் இருப்பது வியப்பானதொன்றாகும்.
அண்மைக் காலங்களில்,
குறிப்பாகக் கடந்த ஓராண்டாக அவர் மரபிலக்கியங்களின் பக்கம் பார்வையைத் திருப்பியிருப்பது
தமிழ் மரபிலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி. ஓராண்டுக்கு முன்னர் அன்பு
அண்ணனின் பிறந்தநாள் பரிசாக நான் அவருக்குத் தந்த இலக்கணச்சுடர் இரா.
திருமுருகனாரின் பாவலர் பண்ணை என்ற நூல் அவரின் கவிதைப் பயணத்திற்குப் புதியதோர்
பாதையைச் சமைத்துத் தந்துள்ளது என நான் கருதுகிறேன். தற்போது அவர் எழுதிவரும்
வெண்பா, அகவல், விருத்தம், காவடிச் சிந்து முதலான மரபுப்பாடல் வகைகள்மிகச்சிறப்பான
செய்நேர்த்தி கொண்ட படைப்புகளாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது.புதுக்கவிதைகளில்
மட்டுமே தமது படைப்பாளுமையைக் காண்பித்து வந்த அவ்வை நிர்மலா அவர்களின் பார்வையை
மரபுக் கவிதைகளின் பக்கம் திருப்பிய பெருமையில் எனக்கும் பங்குண்டு என
மகிழ்கிறேன். இலக்கணச் சுடர் அய்யா அவர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி
தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழின்
முதல் சிற்றிலக்கியம் என்ற பெருமை ஆற்றுப்படை நூல்களுக்கு உண்டு. சங்க இலக்கிய எட்டுத்தொகையின் புறப்பாடல் தொகுப்புகளான புறநானூறு, பதிற்றுப்பத்து முதலான நூல்களிலேயே ஆற்றுப்படை தொடர்பான பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்றாலும் பத்துப்பாட்டில்தான் ஆற்றுப்படை தனி இலக்கிய வகைமையாக, இலக்கியமாக உருப்பெற்றுள்ளது. பத்துப்பாட்டின் செம்பாதி நூல்கள் ஆற்றுப்படைகளே. ஆறு என்றால் வழி, குறிப்பிட்ட ஒரு வழியில் செல்லும்படி பிறரை ஆற்றுப்படுத்திச் சொல்வதே ஆற்றுப்படையாகும். இது உயர்ந்த மக்களைப் பாடும் பாடாண் திணையைச் சேர்ந்தது. பதிற்றுப்பத்து, புறநானூறு போன்ற சங்கப் புறப்பாடல்களில்இடம்பெறும் ஆற்றுப்படைகள் அளவால் சிறியன. இந்தத் தலைவனிடம் போனால் பரிசில் பெறுவாய் என்ற நிலையிலேயே அந்தப் பாடல்கள் நின்றுவிடுகின்றன. பத்துப்பாட்டில் இடம்பெறும் ஆற்றுப்படைகள் புதிதான ஓர் இலக்கியவகை.
இந்தவகை
ஆற்றுப்படைகளுக்கென்று ஒரு தனித்த கட்டமைப்பு உண்டு. ஆற்றுப்படை இலக்கியங்களில் முதற்கண் புலவரும் பாணரும் பொருநரும் கூத்தரும் தம்தம் வாழ்க்கையின் பழைய நிலையை எடுத்துக்கூறுவர், அடுத்துப் பரிசு தந்து வறுமை போக்கிய தலைவனுடைய புகழைப் பலபடப் புகழ்ந்து பேசுவர், அடுத்து, வாடி வருந்தி எதிர்ப்பட்ட புலவரையும் பாணரையும் பொருநரையும் கூத்தரையும் நோக்கி, இவ்வறுமைத் துன்பம் ஒழிந்து நீங்களும் எம்மைப்போல் வாழவேண்டுமானால் இந்த வழியே சென்று இன்ன தலைவனைக் கண்டு இன்னபயன் பெற்று வருவீர்களாக என்பர், மேற்சுட்டிய நிகழ்ச்சிக் கூறுகள் ஆற்றுப்படைகளின் அடிப்படை நிகழ்ச்சிகளாக இவ்வகைச் சிற்றிலக்கியத்தில்இடம்பெறும். பிற பகுதிகள் அந்தந்தப் புலவர்களின் தனித்தன்மைகளுக்கேற்பக் கூடியும் குறைந்தும் வரும்.
கூத்தரும்
பாணரும்
பொருநரும்
விறலியும்
ஆற்றிடைக்
காட்சி
உறழத்
தோன்றிப்
பெற்ற
பெருவளம்
பெறாஅர்க்கு
அறிவுறீஇச்
சென்று
பயன்
எதிரச்
சொன்ன
பக்கமும் (தொல்..
புறத். 36)
என்று ஆற்றுப்படைகளுக்குத் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கின்றது.
உரைநடையின் மறுவருகைக்குப் பின்னர் மரபான செய்யுள் இலக்கிய வகைமைகள் வழக்கொழிந்து விட்டன என்ற பொதுக்கருத்தில் உண்மையில்லை. கடந்த இருபதாம் நூற்றாண்டில் காலத்திற்கேற்ற புதுப்புது உள்ளடக்கங்களோடும் புத்தம்புது பாட்டுடைத் தலைவர்களைக் கொண்டும் உருவாகியுள்ள சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை பல்லாயிரமாகும். அவ்வகையில் உருவானதோர் புதுமைப் படைப்பே இந்த நூலக ஆற்றுப்படை. இது உருவத்தில் மரபையும் உள்ளடகத்தில் புதுமையையும் கொண்டு உருவான காலத்தின் தேவைக்கு ஏற்றதோர் கவின்மிகு படைப்பாகும்.
நூல் வாசிப்பு என்பது ஒரு மகிழ்வான அனுபவம். கதை, கவிதை முதலான படைப்பிலக்கிய வாசிப்பு மட்டுமல்லாமல் எந்தவகை வாசிப்பாக இருந்தாலும் அது வாசகனின் மனவுலகைத் தன்வயப்படுத்துகிறது. வாசிப்பே கற்பனைகளின் ஊற்றுக்கண், கற்பனைகளே மனித சமூக வளர்ச்சியின் படிக்கட்டுகள். மனித மனத்தின் கற்பனைகள் இல்லாமல் அறிவியல், தொழில்நுட்பம் முதலான வியத்தகு விந்தைகள் எவையும் இல்லை என்பதை உணர்ந்தால்தான் வாசிப்பின் இன்றியமையாமை நமக்குப் புலனாகும். இத்தகு உன்னத வாசிப்பை நமக்கு வழங்குவன நூல்களும் நூலகங்களும்தான்.
நூல்கள் மற்றும் நூலகத்தின் அருமை பெருமைகளை அதன் சிறப்பறியா இளைஞன் ஒருவனுக்கு எடுத்துச் சொல்லி நூலகத்திற்குச் செல்ல ஆற்றுப்படுத்தும் மூத்த அறிஞர் ஒருவரின் ஆற்றுப்படுத்தலாக முந்நூற்று அறுபத்தைந்து அடிகளில் விரிகிறது இந்த நூலக ஆற்றுப்படை. நூல்களின் சிறப்பறியா இளைஞனின் வாய்மொழிக் கூற்றாக இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. பாடங்களை மனனம் செய்து விடைத்தாளில் கக்கி விழுக்காடுகளைப் பெறும் இன்றைய சராசரி இளைஞனின் பிரதிநிதி இந்த ஆற்றுப்படையின் இளைஞன், அதனால்தான்,
பாட
நூலெனில்
பாகலின்
கசப்பே
ஏடுக
ளின்றி
எழுதுகோ
லின்றிக்
கையை
வீசிக்
களித்தோம்
அங்கே!
தேர்வு
வருங்கால்
நண்பர்
கூடிச்
சேர்த்த
நகலைத்
தெளிவே
யின்றிப்
பார்த்த
துண்டு(உ)டல் வேர்த்த துண்டு!
தன்னாட்சி
பெற்ற
கல்லூரி
யதனால்
நாட்டில்
தமது
மதிப்பைக்
காக்க
ஏட்டில்
வெற்றி
வீதம்
நிறுத்த
படித்தார்
படியார்
அத்தனை
பேர்க்கும்
பெரும்படி
மதிப்பெண்
அளித்தார்
முதல்வர்!
என்று மாணவர்களின் பொறுப்பற்ற கற்றலையும் கற்பிப்பவர்களின் வணிக நோக்கிலான சுயநலச் செயல்பாடுகளையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றான் அவன். மேற்காட்டிய பகுதியில் கவிஞர் அவ்வை நிர்மலா இன்றைய கல்விமுறை மற்றும் தேர்வுமுறை மீதான தமது விமர்சனங்களை மாணவன் கூற்றாக அமைத்து எள்ளி நகையாடுகின்றார்.
அதுமட்டுமா? அடுத்து, கல்லூரி மற்றும் துறை நூலகப் பொறுப்பு ஏற்றிருக்கும் பேராசிரியர்களின்உண்மை நிலைமைகளை மாணவன் வாயிலாக விவரிக்கும் பின்வரும் பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கது.
துறைநூ
லகமும்
இருந்தது
அங்கே
புல்லிய
நெஞ்சப்
பேரா
சிரியரின்
பொறுப்பில்
இருந்தன
அடுக்கிய
நூல்கள்!
மாணவத்
தோழர்
நூல்களை
வேண்டி
அவ்வப்
போது
அணுகிய
துண்டு!
தலைமேல்
அவர்க்குத்
தாங்கொணாப்
பணியால்
இலையே
நொடியும்
ஓய்வெனச்
சொல்லி
தட்டிக்
கழித்தே
தடைசெய
லானார்
வலிந்து
கேட்டால்
முகத்தைச்
சுளிப்பார்
விலங்கு
போலே
வெறுப்புடன்
கடிப்பார்
காவிய
நூல்களின்
கல்லறை
அமைத்தார்
கேட்டுக்
கேட்டுப்
புளித்துப்
போனதால்
அதற்குப்
பின்னால்
கேட்பதை
விடுத்தோம்
துறையில் இருக்கும் நூல்களை விரும்பிக் கேட்கும் மாணவர்களுக்கு வழங்காமல் பூட்டிவைத்துப் பாதுக்காக்கும் பொறுப்பற்ற ஆசிரியப் பெருமக்களின் மீதான கவிஞரின் தார்மீகக் கோபம்,வலிந்து கேட்டால் முகத்தைச் சுளிப்பார், விலங்கு போலே வெறுப்புடன் கடிப்பார், காவிய நூல்களின் கல்லறை அமைத்தார் முதலான அடிகளில் நெருப்புக் கணைகளாக வெளிப்படுப்படுகிறது.ஆக, மாணவர்களின் வாசிப்புக் குறைபாட்டிற்கு மாணவர்களை மட்டுமே குற்றஞ்சொல்ல முடியாது என்றும் ஆசிரியர்களின் அக்கறையின்மை, சுயநலப்போக்கு முதலான காரணங்களும் அதற்குண்டு என்றும் கவிஞர்குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
கவிஞர் அவ்வை நிர்மலா ஆசிரியர், மாணவர்கள் குறித்தும் கல்விமுறை, தேர்வுமுறைகள் குறித்தும் விமர்சிப்பதோடு நிறுத்தாமல் நூலகங்களை நாடிச் சென்று வாசிக்கும் பழக்கமுடைய பொதுமக்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளையும் கண்டிக்கத் தவறவில்லை. நூலகம் பொதுச்சொத்து என்பதையும் அது அனைவருக்குமானது என்பதனையும் மறந்து சுயநலப் போக்கோடு பொது நூலகங்களில் செயல்படும் சராசரி வாசகரைச் சாடும் பின்வரும் பகுதி குறிப்பிடத்தக்கது.
நூலைத்
தேடும்
வாசகர்
சிலரோ
பின்னர்ப்
படிக்க
விரும்பிடும்
நூல்களை
வேறொரு
துறையின்
நூல்களின்
அடுக்கில்
செருகிச்
செருகி
மறைத்தே
வைப்பர்
காலப்
போக்கில்
மறந்தும்
தொலைப்பர்!
நல்ல
நூல்கள்
பலவும்
இப்
படிச்
செல்லாக்
காசாய்ப்
பயனில
வாகும்
பாடம்
தொடர்பாய்ப்
படித்திடும்
நூல்களின்
பக்கம்
கிழிப்பர்
பண்பிலா
மாணவர்
மறுபதிப்
பில்லா
மாறிலா
நூல்கள்
இத்தகு
செயலால்
இல்லா
தாகுமே!
நூலகப் பணியாளர்கள் வாசகர்களுக்குத் தேவைப்படும் நூல்களை விரைந்து தேடியெடுப்பதற்கு வாகாகக் கோலன் முதலான நூலகப் பகுப்பு முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நூல்களை வகுத்தும் பகுத்தும் அடுக்கிவைத்திருப்பர். இந்த ஒழுங்கைச் சிதைக்கும் விதமாய்த் தாறுமாறாக நூல்களைக் கண்ட இடத்தில் செருகி வைக்கும் நூலக வாசகர்களின் புன்மைச் செயலைக் கண்டிக்கும் பகுதியும் நூல்களின் பக்கங்களைக் கிழித்து எடுத்துச் செல்லும் பண்பற்ற செயலைக் கண்டித்துரைக்கும் பகுதியும் அனைவருக்கும் ஏற்ற நூலக அறநெறிகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
புதுச்சேரியை
அடுத்துள்ள கோட்டக்குப்பம் ஊரில் அமைந்துள்ள அஞ்சுமன் நுஸ்ரதுல் இஸ்லாம் நூலகம் குறித்து ஆற்றுப்படுத்தும் ஆற்றுப்படையின் அடுத்த பகுதி இந்நூலின் மிக இன்றியமையாத பகுதியாகும். இந்நூலகத்தின் பெருமைகளை விரிசைப்படுத்தி விவரிக்கும் நெடிய கூற்றின் ஒருபகுதிபின்வருமாறு,
கோட்டக்
குப்பம்
என்னும்
ஊரில்
அஞ்சுமன்
நுஸ்ரதுல்
இஸ்லாம்
என்னும்
அருமை
நூலகம்
உண்டே
அறிவாய்
தொண்ணூ
றாண்டுகள்
தழைத்து
வளர்ந்து
துறைதுறை
தோறும்
நூல்கள்
பெருத்து
நல்லார்
பல்லோர்
திசைதொறும்
அடுத்து
இல்லா
நூல்கள்
இலையென
விடுத்துச்
சொல்லால்
புகழ்ந்த
செம்மலோர்
பலரே!
கோட்டக்குப்பத்தில்
1926 முதல் இயங்கிவரும் அஞ்சுமன் நூலகம் தொண்ணூறு ஆண்டுகளாய்த் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஓர் அரிய ஆவணக் காப்பகமாகும் உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் ஓர் இஸ்லாமிய அறிவு மையமாய் இயங்கும் இந்நூலகத்தின் பெருமைகளை விரிவாகக்கூறும் நூலின் இப்பகுதி ஆற்றுப்படையின் மையப்பொருளை விவரித்துச் சொல்கிறது.
நிறைவாக
மூத்த அறிஞர் விவரித்துரைத்த நூல்களின் நூலகத்தின் பெருமைகளை உணர்ந்து கொண்ட இளைஞன் நன்றி கூறுவதாக அமையும் பகுதி இதோ,
'ஐயா,
மகிழ்ந்தேன்
நன்றி
மொழிந்தேன்
மெய்யாய்
இன்றே
கண்கள்
திறந்தேன்
பொய்யாம்
வாழ்வின்
போக்குகள்
விடுத்து
நையா
நூல்கள்
நாளும்
படிப்பேன்
கையா
லாகும்
நூல்களை
வாங்கி
விழாக்கள்
தோறும்
பரிசாய்
அளிப்பேன்
வீணாய்ச்
சுற்றி
அலைவதை
விடுத்து
விருப்பாய்
நூலக
அறையில்
கழிப்பேன்"
நூல்களை வாசிப்பதோடு, இனி நூல்களை விலைகொடுத்து வாங்கி விழாக்கள் தோறும் பரிசளிப்பேன் என்றும் நூலகங்களில் விருப்பத்தோடு பொழுமைக் கழிப்பேன் என்றும் இளைஞன் கூறுவதாகக் கவிஞர் அமைத்துள்ள இப்பகுதி இன்றைய இளைஞர்களுக்கான இன்றியமையாச் செய்தியாகும்.
365 அடிகளில் ஆற்றுப்படை இலக்கணத்தை ஏற்றும் புதுக்கியும் கவிஞர் அவ்வை நிர்மலா படைத்துள்ள இந்நூலின் சிறப்பியல்புகளைப் பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.
1. எளிய இனிய சொற்களில் ஆற்றொழுக்கான நடையில் கற்போர் நெஞ்சைக் கவரும் வகையில் நடைநலத்தால் சிறப்புற்றுள்ளது.
2.
காட்சி
ஊடகங்களின் படையெடுப்பால் காட்சி ஊடகங்களில் கரைந்து போகும் இன்றைய தலைமுறையினருக்கு நூல்களின் நூலகங்களின் சிறப்பியல்புகளை மென்மையாக எடுத்துரைக்கும் உள்ளடக்கத்தால் சிறப்புற்றுள்ளது.
3.
இன்றைய
கல்விமுறையின் போதாமையை விமர்சனப் போக்கில் துணிந்து எடுத்துரைப்பதோடு செப்பனிட வேண்டிய நிலைமைகளை சுட்டிக்காட்டும் ஆக்க பூர்வமான அணுகுமுறையால் சிறப்புற்றுள்ளது.
4. ஆய்வுலகமும் அறிஞருலகமும் அறிந்துகொள்ள வேண்டிய அஞ்சுமன் நூலகத்தின் அரும்பணியை அடையாளப்படுத்தும் நோக்கத்தால் சிறப்புற்றுள்ளது.
சிறுகதைகள், நாடகங்கள், புதினம், புதுக் கவிதை, மரபுக் கவிதை, கட்டுரை, திறனாய்வு எனத் துறைகள் தோறும் ஈடுபட்டு நூல்கள் படைத்துவரும் கவிஞர் அவ்வை நிர்மலாவின் சிற்றிலக்கியப் பணியைப் பாராட்டுவோம். தொடர்ந்து படைப்புலகில் அவர் தரமான படைப்புகளைத் தருவார் என்ற நம்பிக்கையோடு. வாழ்க! வளர்க!!.
nagailango@gmail.com
No comments:
Post a Comment