Friday, 27 January 2017

அவ்வை நிர்மலாவின் 'சமயச் சாரலில்' நூல் அணிந்துரை


முனைவர் சிவ. மாதவன்
தமிழ் இணைப்பேராசிரியர்
காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி 605 008.
அவ்வை நிர்மலாவின் 'சமயச் சாரலில்' நூல் அணிந்துரை
     தமிழ்க் கவிதைகளைப் பாடுபொருள் அடிப்படையில் அகம், புறம், அறம், காப்பியம், பக்தி என பகுத்துக் காணும் மரபு பழமை வாய்ந்த மரபாகும். இவ்வகைக் கவிதைகளில் முதன்மையான பாடுபொருளுடன் கூடவே வாழ்வியலுக்கு உதவவல்ல பல கருத்துகளும் இடையிடையே பின்னிப் பிணைந்து நிற்றலைக் காணமுடியும். சமயச் சார்பற்ற சங்கப் பாக்களில் கடவுள், வழிபாடு, சடங்கு, நம்பிக்கை, தொன்மம் சார்ந்த கருத்துகள் இடம்பெற்றிருத்தல் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அவ்வாறே, சமய நூல்களாகக் கருதப்பெறும் திருமுறை இலக்கியங்கள் ஆழ்வார் பாசுரங்கள் சீர்திருத்தக் கருத்துகளை முன்வைக்கும் சித்தர் பாடல்கள், இறையின்பம் மிகுவிக்கும் இசைப்பாடல்கள் போன்றவற்றில் சமுதாயத்தின் - மக்களின் - வாழ்க்கையை விவரிக்கும் கருத்துக்களும் உயரிய வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பதையும் ஒதுக்கிவிட இயலாது.
   இலக்கியப் படைப்புகள் மக்களை முன்னிறுத்திப் படைக்கப்பெறுவதால், அவை எவ்வகைப் பொருண்மையைச் சார்ந்திருப்பினும் அவற்றில் மக்களின் வாழ்வோடு தொடர்புடைய பல செய்திகள் அமைவது இயல்பான ஒன்றாகும். இறைமையைப் போற்றும் இலக்கியமாயினும் மக்களை அவர்தம் மொழியை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டுக் கூறுகளைப் புறந்தள்ளிவிட்டுப் படைக்கப்பெறின் அவ்விலக்கியம் மக்களிடையே நிலைத்து வாழ்தல் இயலாது. இவ்வெண்ணத்தை உறுதிபட நிலைநிறுத்திக் கொண்டவர்களாகத் தமிழ்இலக்கியப் படைப்பாளர்களைக் கூறலாம். அதிலும் குறிப்பாக, தமிழ் பக்தி இலக்கியக் கவிஞர்களிடம் இந்த எண்ணம் சிறப்பாக இருந்ததெனலாம். தம் காலத்திற்கேற்ற கருத்துகளைப் பழைய மரபின் பின்னணியோடு உரசிப்பார்த்துப் புதிய நெறியைப் படைத்துக்கொள்ளும் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்ந்து வளர்ந்துவருதல் கண்கூடு. இத்தகைய இலக்கிய வரலாற்றுப் பின்னணியை நன்குணர்ந்த நிலையில் சமய நூல்களில் இடம்பெறும் பல்வகைச் செய்திகளையும் தொகுத்தும் பகுத்தும் ஆய்ந்துகூறும் நூலாக, ‘சமயச் சாரலில்என்னும் தலைப்பமைந்த தம் நூலை எழுதியுள்ளார் முனைவர் இரா. நிர்மலா அவர்கள்.
  பதினேழு கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்நூல். செவ்வியல் நூல்களான கலித்தொகை, சிலப்பதிகாரம், காப்பியங்களான சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், பக்தி இலக்கியங்களான தேவாரம், திருமந்திரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், பெரியபுராணம் போன்ற முற்காலத் தமிழ்நூல்களும் ஐரோப்பியர் வருகைக்குப் பிற்பட்டுத் தோன்றிய வீரமாமுனிவரின் நூல்கள், தியாகையரின் இசைப் பாடல்கள், வள்ளலாரின் அருட்பா, கோபால கிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, மகாகவி பாரதியாரின் பாடல்கள், இருபதாம் நூற்றாண்டில் துரைமாலிறையன் எழுதிய மரியம்மை காவியம் போன்ற நூல்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளுக்கு மூலமாக விளங்குகின்றன.
   இடைக்காலத்தில் காரைக்கால் பகுதி பெற்றிருந்த சிறப்பைத் தேவாரப் பாடல்கள் வாயிலாக நூலாசிரியர் எடுத்து இயம்பியுள்ளார். சைவம் மகளிரால் வளர்ந்தது என்னும் கருத்தைச் சேக்கிழார் துணையோடு விளக்கும் கட்டுரை மனையறத்தின் வேர்களாக மகளிர் உள்ளனர் என்னும் கூற்றை மெய்ப்பிக்கின்றது.
மூப்பும் இறப்பும் குறித்த திருமூலரின் சிந்தனையை ஆழ்வாரின் பாடலுக்குப் பெரியவாச்சான் பிள்ளை எழுதிய உரையோடு இயைபுபடுத்தி விளக்குகிறது திருமூலரின் மூப்பு இறப்புச் சிந்தனைகள்என்னும் கட்டுரை. திருமாலின் வண்ணம் கருமை மட்டும் அன்று, அவருக்கு நீலம், பசுமை, வெண்மை முதலான நிறங்களும் உண்டு என்பதை ஆழ்வார் பாசுரங்கள் வழி அழகுற மொழிகிறது திருமால் வண்ணம்என்னும் கட்டுரை. யாழ் எனும் இசைக்கருவி சீவகசிந்தாமணியில் எவ்வாறெல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளது என்பதை இந்நூலில் உள்ள சீவகசிந்தாமணியில் யாழ்என்னும் கட்டுரை விளக்குகிறது. இவையன்றிக் கம்பராமாயணத்தில் இடம்பெறும் சிவன் குறித்த செய்திகள், வாழ்வியல் தொடர்பான சித்தர்களின் எண்ணங்கள், தியாகையரின் இசைப்பாடல்களில் அமையும் சமுதாயச் சிந்தனை, வள்ளலார், பாரதியார் ஆகியோரின் இறைக்கோட்பாடு, சாதிச் சார்பு சமூக அமைப்பின் வலிமையை எடுத்துக்காட்டும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, மரியம்மை காவியப் படைப்பில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் பெறுமிடம் போன்ற பொருண்மைகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் அனைத்தும் சிறப்பிற் குரியன. முனைவர் இரா. நிர்மலா அவர்களின் சமயச் சாரலில் என்னும் நூலிலுள்ள இக் கட்டுரைகள் பல்வேறு சமயங்களில் எழுதப்பட்டவையாக கருத்தரங்குகளில் படிக்கப்பட்டவையாக இருக்கக்கூடும் என எண்ணுகிறேன். தற்போது அவற்றைத் தொகுத்து நூல்வடிவில் வழங்கியுள்ளார். பல வண்ண மலர்களைத் தொடுத்து அழகுபட உருவாக்கும் மாலை போன்று பல பொருண்மையுடைய கருத்துகளைத் தொடுத்துச் சிந்தனைக்கு விருந்து படைக்கும் கட்டுரை மாலையாக இந்நூலை அமைத்துள்ளார் நூலாசிரியர்.
   இக் கட்டுரைகளைக் கருத்தூன்றிப் படிக்கும்போது ஆசிரியரின் நுணுகிநோக்கும் ஆய்வுப் பண்பும் நிரல்பட உரைத்திடும் நெறியும் தெளிவும் எளிமையும் கொண்ட இனிய மொழிநடையும் இலக்கியங்களைச் சமூகத்தோடு இயைபுபடுத்திக் காணும் சிந்தனைத்திறமும் ஒருங்கே வெளிப்பட்டுச் சிறத்தலை உணரலாம். தமிழில் அடிப்படை ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படல் வேண்டும் என்னும் எண்ணத்தை இந்நூல் ஏற்படுத்துகின்றது. இந்த நூலை ஆராய்ச்சியாளர்களும் தமிழ் அறிஞர்களும் வரவேற்றுப் போற்றுவர் என நம்புகிறேன். சிறந்த நூலைப் படைத்து வழங்கும் நூலாசிரியர் இரா. நிர்மலா அவர்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                              சிவ. மாதவன்


No comments:

Post a Comment