நான் கண்ணகியில்லீங்க. . .
அன்னிக்கு, கண்ணகி டீச்சர் முன்நெத்தில பெரிய
பிளாஸ்திரியோட ஸ்கூலுக்குள்ள வந்தாங்க. . பாத்த எனக்குப் பக்குன்னு போயிடிச்சி.
‘அய்யய்யோ, என்னம்மா இது? எப்டி அடிபட்டுது?’ - துடிச்சிப்போயி கேட்டேன்.
‘நேத்து வண்டியில போவும்போது கீழ உழுந்துட்டேன்
அஞ்சல’ - சோகமா சொல்லிட்டு
நகரப் பாத்தாங்க.
‘அம்மா, கையில, கால்ல அடிபட்டுடிச்சா?’ - கேட்டுக்கினே கை கால் பூரா கண்ண மேயவுட்டேன். அப்டி எதுவும் காணோம்.
‘அதெல்லாம் ஒன்னும் ஆகல அஞ்சல, நல்ல காலம்! சரிசரி ...... பஸ்டுஅவர் கிளாசு
இருக்கு’னு சொல்லிட்டு
வேகமா போய்ட்டாங்க.
அவுங்க மூஞ்சி ரொம்பத்தான் வீங்கிப்போயி
இருந்துது. இந்த வருஷம் பொறந்து இந்த எட்டு மாசத்துக்குள்ள ஒரு எட்டு
வாட்டியாச்சும் இப்டி ஏதாவது மூஞ்சில அடிபட்டு வந்திருப்பாங்க. கண்ணகி டீச்சர்
ரொம்ப நல்ல மாதிரி. இங்க மாத்தலாயி வந்து ஒரு வருஷந்தான் ஆவுது. பாக்கறதுக்கு
நல்லா போல்டா இருப்பாங்க.
அவங்களுக்கு சரியா வண்டி ஓட்ட வராதுன்னு
நெனக்காதீங்க. சூப்பரா வண்டி ஓட்டுவாங்க. என்னகூட எத்தினிதரம் டபுள்ஸ்
அடிச்சிருக்காங்க தெரியுமா? நம்ம புதுச்சேரி ரோட்டுல குறுக்கால மறுக்கால ரூல்ஸ பாலோ பண்ணாம எருமாட்டு மந்த
கணக்கா படிச்சவங்களும் படிக்காதவங்களும் சின்னவங்களும் பெரியவங்களும் வண்டி
ஓட்டிக்கினு போறாங்களே, அவங்களுக்கு மத்தியில பதட்டமே இல்லாம வண்டி ஓட்டுவாங்கன்னா பாத்துக்கோங்களேன்.
பாத்ரூமுல கூடத்தான் வழுக்கி வுழுந்துட்டதா
ரெண்டுமொற காரணம் சொன்னாங்க. அப்படின்னா அவுங்க கண்ணு என்ன பொறணியிலயா இருந்துது.
ஒவ்வொரு வாட்டியும் இப்டி ஏதாச்சும் காரணம்
சொல்வாங்க. ‘வண்டில யிருந்து
உழுந்துட்டேன்’, ‘பாத்ரூமுல
உழுந்துட்டேன்’, ‘தரையில தண்ணி
இருந்தது. . . பாக்காம உழுந்துட்டேன்’, - அப்டி இப்டின்னு ஏதாச்சும் சொல்வாங்க. ஆனா அவுங்க எப்ப
அடிபட்டு வந்தாலும் மூஞ்சில்லாம் வீங்கிப்போயி இருக்குங்க.
அப்ப ஒங்களுக்கு நான் சொல்ல வந்தது
புரிஞ்சிடிச்சிங்களா. அவங்க எங்க உழுந்தாங்க? எல்லாம் கப்ஸா! நம்ம காதுல என்ன பூ சுத்திகினா
இருக்கோம்? அவங்க புருஷன்
ஒரு குடிகாரருங்க. மனுஷன் என்னமோ நல்லவருதான். அன்பாதான் வெச்சிருக்காரு. என்னகூட
எத்தினிவாட்டி அன்பா வெசாரிச்சிருக்காரு. ஆனா குடிகாரங்களுக்கு ‘அது’ உள்ளபோயிட்டா மனுஷனாவா இருக்கான்? மிருகமால்ல மாறிப்போறான்? டி.வி. பொட்டிய தொறந்தா பொம்பளைங்க சாராயக்கடய ‘மூடுமூடு’ன்னு மறியல் பண்றத நெதந்தான் பாக்கறோம். ஆனா
அரசாங்கத்துல படிச்சவங்க யாரும் இல்லியா? அவுங்களுக்கு நம்ம கஷ்டநஷ்டம் தெரியாதுங்களா? நமக்கு எதுக்குங்க அரசியலு?
கண்ணகி டீச்சர் கதைக்கி வருவோம். அவுங்க அப்டி
காரணம் சொல்றப்பல்லாம் நானும், ‘அய்யோ, பாவம்!, ஜாக்கறதயா பாத்துப் போங்கம்மா’ன்னு சொல்லுவேன். பாம்புக்குப் பாம்போட கால்
தெரியும்னு சொல்வாங்க. அவங்க பவிசு என்னன்னு எனக்குத் தெரியாதா? ஏன்னா என் ஊட்லயுந்தான இதே சங்கிதி. வூட்டுக்கு
வூடு வாசப்படி,
ஆனா நானு வண்டில இருந்து உழுந்துட்டேன்னு
சொல்றதில்ல. சொன்னாலும் யாரும் நம்பமாட்டாங்க. ஏன்னா, என்கிட்ட வண்டியே இல்லியே! என் வூடு மண்ணுதர
வூடு, வழுக்கி
உழுந்துட்டேன்னும் சொல்லமுடியாது. ஆனா நான் எதுக்குப் பொய் சொல்லோணும்? திருக்குறள்னு ஒரு பொஸ்தகம் இருக்காமே,
- ஸ்கூல்ல அரசாங்க சம்பளத்த
வாங்கிக்கினு இருக்கே, எட்டாங்கிளாஸ்
படிச்சிருந்தாதானே வேல குடுத்துருப்பாங்க, அப்பிடின்னு என்னக் கேக்காதீங்க. ஏதோ பெஷல் கிளாஸ் வச்சி
எங்கமேல எரக்கப்பட்டு, எங்கள பாசு
போட்டு நெரந்தரம் பண்ணிட்டாங்க. ஆனா உண்மையச் சொல்லப்போனா எனக்கு எழுதப் படிக்கத்
தெரியாதுங்க. கையெழுத்து மட்டும் போடுவேன்.
அய்ய! கதய வுட்டுட்டு அந்தண்ட இந்தண்ட
போயிட்டனா? எல்லாம் இந்த
பள்ளிகூடத்தால வந்த வென. டீச்சருங்க பாடம் நடத்தகுள்ள பாத்துருக்கேன். எதயாச்சும்
பேச ஆரம்பிச்சி, ஊரு கத, ஒறவு கதன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க. அப்பறம்
பெல் அடிச்சிடும். அதமாதிரி ஆயிபோச்சி நான் கத சொல்றது.
திருக்குறள்னு சொன்னனா? தமிழ் மிஸ்ஸ§ எப்பப்பாத்தாலும் ‘பொய் சொல்லக்கூடாது பொய் சொல்லக்கூடாது’ன்னு பாடம் எடுத்துக்குனு இருப்பாங்க. இந்தத்
திண்ணைல ஒக்காந்து கேட்டுக்கேட்டு நானும் பொய் சொல்றது இல்லீங்க.
அப்பால, என் கதக்கி வறேன். என் வூட்டுகாரரும் நெதமும்
குடிச்சிட்டு வந்து அடிப்பாருங்க. செலநாள் கதவு தொறக்காம இருந்து பாத்தேன். ஆனா
என்ன புண்ணியம்? அவரு கத்தற
கத்தலக் கேட்டு ஊரு சனம் கூடிடுது. அவர யாரும் திட்றதில்ல. வெளில நிக்கவெச்சேன்னு
என்னதான் வையறாங்க. புருஷங்கிட்ட அடிவாங்கி அடிவாங்கி ஒடம்பு மறத்துப் போச்சிங்க.
ஆனா ஒருநா நம்ம கண்ணகி டீச்சர்தான், அவங்கதான் என்எஸ்ஸஸ்ஸாமே அதோட டீச்சரு. ஒரு
மீட்டிங் வெச்சாங்க, மீட்டிங்குல
ஒக்காந்திருந்த புள்ளங்களுக்கு பிஸ்கட்ட கொடுக்கச் சொன்னாங்க. பிஸ்கட்டு
குடுத்துகினே நானு அவங்க பேசறத காதால கேட்டேங்க. ஆம்பளைங்க அடிச்சி ஒதச்சா
பொண்ணுங்க பொறுத்துக்கினே இருக்கக் கூடாது, பொங்கி எழனுன்னு சொன்னாங்க. நல்லா பேசினாங்க.
அப்டியே சிலுத்துப்போச்சிங்க.
அன்னிக்கு ராத்திரியும் என் புருஷன் நல்லா
குடிச்சிட்டு வந்தாரு. ‘ஏன்யா இப்பிடி செய்யறேன்னு கேட்டதுதான் தாமசம், உடனே கெட்டகெட்ட வார்த்த பேசிக்கினு என்ன
அடிக்க வந்தாரு. நான் முந்திக்கினேன். ஒரு நெட்டு நெட்டித் தள்ளினேன் போங்க.
அப்டியே போயி தொபுக்கடீர்னு உழுந்தாரு. கைய காலப் பரப்பிக்கினு எந்திரிக்க முடில.
நான் கைகொடுத்து தூக்கவே இல்லியே! அப்டியே கெடக்கட்டுன்னு உட்டுட்டு கடைக்கி
போய்ட்டேன். வந்து பாத்தா பேசாம பூனகுட்டியாட்டம் படுத்துக்கிட்டிருந்தாரு.
அதுக்குப் பொறவு என்ன அடிச்சதே இல்ல.. அன்னிக்குத்தான் புரிஞ்சிது! பொம்பளங்க
அடிவாங்கிக்கினு இருந்தா, ஆம்பளங்க அடிக்க லஜ்ஜயே இல்லாம இருப்பாங்கன்னு.
அதுக்கப்பறம் என் மூஞ்சி வீங்கிப் போயி யாரும் பாத்திருக்கவே
முடியாதே... ஆனா இத்த எனக்குச் சொல்லித்தந்த கண்ணகி டீச்சர் அடிக்கடி மூஞ்சில அவரு
புருஷன் உட்ட குத்தால வீங்கிப்போயி வர்றாங்களே..... ஏன்னுதான் தெரியலங்க.....
அப்பிடித்தான் போன வாரம் கண்ணகி டீச்சர்
பிளஸ்டூ பசங்களுக்கு ஒரு மீட்டிங் வச்சாங்க. யாரோ பொம்பள வக்கீலாம். கூட்டிகினு
வந்து பேச வச்சாங்க .... அவுங்க சட்டம்லாம் புட்டுபுட்டு வச்சாங்க. நெறைய
சொன்னாங்க. யாரோ ஒரு குடிகார கம்... வாய்ல
நல்லாத்தான் வருது... சே சே... ஸ்கூல்ல தமிழம்மா கெட்ட வார்த்த பேசக்கூடாதுன்னு
சொல்லியிருக்காங்க . . .
அது கெடக்கட்டும். என் கதைக்கி வறேன்.
குடிகாரன் ஒருத்தன் வூட்ல தனியா இருந்த தன்னோட பொண்ணையே கெடுத்துட்டானாமே! குடிச்சிட்டா பொண்ணு எது? பொண்சாதி எதுன்னு கூடவா தெரியாம போயிடும்?
படுபாவி... எனக்கும்
ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க... மனசுல ஏதோ ஒன்னு சுருக்குன்னு தச்சிது. . .
தெனம் குடிச்சிட்டு சம்பாத்தியத்த எல்லாம்
தொலைக்கிற இப்படிப்பட்ட ஆம்பளயோட குடும்பம் நடத்தறதவிட அவன தூக்கி எறிஞ்சிடலாம்.
எப்பிடியும் கொடலு வெந்து சாகத்தான் போறான். அவன் செத்துப்போயி வெதவ ஆகிப்போறதவிட,
பேசாம அவனையே
தூக்கியெறியறதே உத்தமம்னு சொன்னாங்க அந்த வக்கீலு. ஒருத்தர் வெவாகரத்து பண்ணாத்தான் மத்த
ஆம்பளங்களுக்கும் புத்தி வரும்னு சொன்னாங்க. . .
நானும் நல்லா யோசிச்சேன். அவங்க சொன்னதுதான் சரி. என் புருஷனக்
கட்டிக்கிட்டு என்ன சொகத்த நான் கண்டேன்? ரெண்டு பொம்பள புள்ளைங்கள பெத்துக்கிட்டது தவிர... அதுங்க
நெதம் அப்பா அடிப்பாரோன்னு பயந்துகிட்டு மூலையில மொடங்கிப் போகுதுங்க. ஸ்கூல்ல
யாராவது அவங்க அப்பா பத்திக் கேட்டா கூனிக்குறுகிப் போகுதுங்க. . .
கண்ணகி டீச்சர்கிட்ட அந்த வக்கீலம்மா அட்ரஸ
கேட்டேங்க. என்னய ஆச்சரியமா பாத்தாங்க. வெஷயத்த சொன்னதும் ஷாக் ஆயிட்டாங்க.
‘ஏன் அஞ்சல இப்டி ஒரு முடிவெடுக்கற? ஒனக்கு ஒரு ஆம்பள பாதுகாப்பு வேணாமா?’ அப்டின்னு கேட்டாங்க.
‘அவுரா எனக்குப் பாதுகாப்பு? நான் சம்பாதிச்ச பணத்தகூட திருடிக்கிட்டு போற
அவுரு எப்டி எனக்குப் பாதுகாப்பா இருக்க முடியும்? கொஞ்சங் கொஞ்சமா சேத்துவச்சி பவுனு விக்கற வெலயில
காலு பவுனு அர பவுனா சேத்துவெச்சா, அப்பப்ப குடிச்சிட்டுக் கீழ வுழுந்து அடிபட்டு வந்தா ஆசுபத்திரி செலவுன்னு
நகைய அடகுவெச்சி அப்பறம் அத மீட்கமுடியாட முழுவிப்போவுது. அவுரா எங்களுக்குப்
பாதுகாப்பு? அவருகிட்ட அடிஒத
வாங்காம கொழந்தகள பாதுகாக்கறதே எனக்குப் பெரிய வேலயா போவுது...’ ன்னேன்.
‘ஊரு ஒலகம் என்ன சொல்லும்?’னு கேட்டாங்க கண்ணகி டீச்சர்.
‘அவன் குடிய தொடும்போது, என்ன அடிக்கவரும்போது கண்டுக்காத இந்த ஊரு
ஒலகம். . . காரித் துப்பணும்போல இருக்குதும்மா எனக்கு . . .’ன்னு சொன்னேன்.
அவங்க கண்ல தண்ணி வந்துடிச்சி. பொலபொலன்னு
அழுதிட்டாங்க.
‘ஏம்மா? அம்மா என்னம்மா ஆச்சி? நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா? தப்பு பண்ணிட்டனா?’ன்னு பதறிகிட்டே கேட்டேன்.
அதெல்லாம் ஒன்னுமில்ல அஞ்சல! நீ தைரியமான
பொண்ணு. சரியான நேரத்துல சரியான முடிவு எடுத்திட்ட. உன்னால அது முடிஞ்சிருக்கு!
உன்னால இந்த ஒலகத்த எதுத்து நிக்க முடியும்.
‘கண்ணாலம் ஆன நாள்ல இருந்து அவரு இதோ
திருந்துவாரு, இதோ
திருந்துவாருன்னு பத்து வருஷமாயி போச்சி. அரசாங்க சம்பளம் வாங்கித்தான் என்ன
புரயோஜனம்? சேத்துவெக்க
முடியாம எல்லாத்தயும் குடிச்சே தீக்கறாரு. இனிமேலயும் அவர திருத்தமுடியும்ற
நம்பிக்க இல்லம்மா, அதனாலதான்
அவரவுட்டு பிரியப்போறேன்.’
‘அது அவ்ளோ ஈசியா அஞ்சல?. . . ’ன்னு கேட்டாங்க டீச்சரம்மா.
‘ஏம்மா, நீங்களும் எத்தினியோ பேருக்கு நல்லாத்தான் பாடம்
நடத்தறீங்க. சில பசங்க நல்லா படிக்கறாங்க. சிலது பெயில் ஆயி பூடுதுங்க. அதுக்காக
அவங்களயேவா திருத்தறேன் திருத்தறேன்னு புடிச்சிக்கிட்டு தொங்கறீங்க. பெயிலாயி
போனவங்கள வுட்டுட்டு அடுத்த வருஷம் வர்ற பசங்களுக்குப் பாடம் நடத்திட்டே
போயிட்டிருக்கலயா?’ன்னு நான்
கேட்டதும் அசந்துட்டாங்க.
‘எனக்கே பாடம் எடுக்கறியே அஞ்சல!’ன்னாங்க.
‘அம்மா, அது மட்டும் இல்லம்மா, காலம் முச்சூடும் இப்படியே தனிமரமா இருப்பேன்னு
நான் முடிவு சொல்லல. பதினாறு வயசுல கல்யாணமாயி ரெண்டு புள்ளயும் பெத்துட்டேன்.
இப்ப இருபத்தாறுதான் ஆவுது. எதிர்காலத்துல என்னப் புரிஞ்சுக்கற நல்லவன் ஒருத்தன்
என்னக் கட்டிக்க முன்வந்தா நிச்சயமா நான் வேற கண்ணாலம் பண்ணிப்பேம்மா’ன்னு சொன்னேன்.
நான் இதச் சொன்னதும் கண்ணகி டீச்சர் அப்டியே
தெகச்சிப்போயி என்னக் கட்டிப் பிடிச்சிக்கினாங்க.
அப்பறமா அவங்க கொடுத்த வெலாசத்தத் தேடி
வக்கீலுகிட்ட போனேன்... அவங்களும் டீச்சரம்மா மொதல்ல சொன்னதத்தான் சொன்னாங்க...
ஆனா நான் பிடிவாதமா இருந்தேன். சரின்னு எனக்கோசம் விவாகரத்து தாக்கல் பண்ணாங்க. .
. என் புருஷன் குய்யோ முய்யோன்னு கத்தனாரு. . . இதோ ஆறு மாசம் பல்ல கடிச்சிட்டு
இருக்கணும் . . . அப்பறம் என் சம்பாத்தியம்... முழுசா என் புள்ளங்களுக்கு . . .
நான் தனியா நின்னு சாதிச்சுக் காட்டுவேன். . .
இதோ கண்ணகி டீச்சர் வந்துட்டாங்க. . . அட!
இன்னிக்கும் அடிபட்டு நெத்தில பிளாஸ்திரியோட . . .
***
No comments:
Post a Comment