Friday 27 January 2017

மங்கையராய்ப் பிறப்பதற்கே...



வெள்ளனநான் எந்திரிச்சி
வெளிவாசல் பெருக்கணுமே!
வெச்சபுள்ளி தப்பாம
மாக்கோலம் முடிக்கணுமே!

பால்காச்சி டீப்போட்டு
பரபரன்னு குடிச்சிபுட்டு
அடுப்படில வேலயத்தான்
அசராம முடிக்கணுமே!

அம்முகுட்டி செல்லகுட்டி
எந்திரிங்க என்றுசொல்லி
எம்புள்ள ரெண்டையுந்தான்
எழுப்பிவிட வேணுமில்ல!

பேருசொல்லிக் கூவிகூவி
பல்லத்தான் வெளக்குங்க,
பாத்ரூமு போய்வாங்க,
பள்ளிக்கூடப் புஸ்தகங்க
பட்டுன்னு எடுத்துவைங்க!
பத்துபாஞ்சி நிமிஷத்துல
பள்ளிவேனு வந்துபுடும்!
மீதிபாதி இட்டலியும்
சாப்பிட்டு முடிங்கன்னு
டைகட்டி சூபோட்டு
தரதரன்னு இழுத்துபோயி
பஸ்ஸ§லத்தான் ஏத்திவிட்டா
அப்பத்தான் மூச்சுவரும்
அடுத்தவேல நெனப்புவரும்!

அந்தப்புறம் பாத்தாக்கா
தாலிகட்ன மவராசன்
பேப்பரும் கையுமாத்தான்
பேஜாரு பண்ணுவாரு!
அத்தானே டீக்குடிங்க
ஆபிசுக்கு நேரமாச்சு
வெரசாக குளிங்கன்னு
நச்சரிப்பேன் ஓயாம!

பேண்ட்டுசட்ட அயனுபண்ணி
செல்போனு சார்ஜுபண்ணி
செருப்பயுந்தான் தொடச்சிவச்சி
செய்யவேணும் பலவேல!

சுறுசுறுப்பே இல்லாம
மணிக்கணக்கா இருந்துபுட்டு
நேரந்தான் ஆனதுன்னு
பறப்பாரு றெக்ககட்டி!
அய்யய்யோ பாவமுன்னு
அவசரமா நானுந்தான்
அஞ்சாறு இட்டலிய
அருமயான சட்னியோட
தட்டுலத்தான் ஏந்திநின்னா -
சாப்பிடத்தான் நேரமில்ல
சண்டகிண்ட புடிக்காதனு
சட்டுனுதாங் கௌம்பிடுவார்!

கண்டகண்ட தண்ணியால
காமால வந்துடும்னு
காச்சிநல்லாக் குளிரவச்ச
தண்ணியத்தான் ரொப்பிவச்சா
பட்டிகாடு நானுன்னு
பகடிசெஞ்சி போயிடுவார்!

சுத்தபத்தம் இல்லாம
எப்படியோ சமச்சுவச்சு
யார்யாரோ சாப்புட்ட
எச்சிதட்ல பரிமாறும்
ஓட்டலோட சாப்பாடு
ஒத்துக்கா துன்னுநானு
சீக்கிரமா எந்திரிச்சி
செரமமாநான் சமச்சுவெச்சி
கட்டிவெச்ச சாப்பாட்டக்
கட்டாயப் படுத்தாத
கைச்சுமையே வேண்டான்னு
கத்திபுட்டுப் போயிடுவார்!

வெயிலிலே சுத்தாதிங்க
வொடம்புரொம்ப கருத்துபுடும்!
வெளியில சாப்டாதிங்க
வயிறுரொம்ப கெட்டுபுடும்!
வேகமா போவாதிங்க
ஆபத்தா ஆகிபுடும்!
இப்படித்தான் எச்சரிக்க
எத்தனையோ நானுசொல்ல
நச்சரிக்கக் கூடாதுனு
என்னோட வூட்டுகாரு!
எகத்தாளம் பண்ணுறாரு
எங்கபோயி முட்டிக்கிட?

புள்ளங்க புருஷனுந்தான்
பொறப்பட்டுப் போனபின்ன
ஜிலோன்னுத்தான் ஆகிபுடும்
என்னோட வூட்டுலதான்!
எத்தினியோ வேலைங்கதான்
எனக்கோசம் காத்துருக்கும்!

முரண்டுசெஞ்சி மூத்தமவன்
கடாசிட்ட புஸ்தகம்லாம்
கச்சிதமா அடுக்கவேணும்!
சின்னமவ வீசிபோட்ட
பென்சிலத்தான் தேடவேணும்!
கண்டகண்ட எடத்துலெல்லாம்
கலஞ்சிபோயி கெடக்குமந்த
மைபேனா இஸ்கேலு
அழிரப்பர் ஷார்ப்பனரு
நோட்டுபுக்கு எல்லாமும்
குனிஞ்சிநானு பொறுக்கவேணும்!
சாக்சுஷ¨ ஜோடிகளச்
சேத்துசேத்து வெக்கவேணும்!

கழட்டிபோட்ட யூனிபாரம்
கருத்தோடக் கசக்கவேணும்!
தண்ணியில சோப்புபோட்டு
முக்கிஅத வெக்கவேணும்!
காலருல தங்கிப்போன
அழுக்குகர தேய்க்கவேணும்!
மண்ணெண்ண ஊத்தியூத்தி
மைக்கரயப் போக்கவேணும்!

புள்ளங்க இப்படின்னா
புருஷனுந்தான் இன்னுமோசம்!
பாத்ரூமு மூலையில
கைலிங்க நனஞ்சிருக்கும்!
சோப்புபெட்டிக் குள்ளேதான்
ரெண்டுஇஞ்சித் தண்ணிநிக்கும்!
சோபாவின் முதுகுமேல
சட்டயோட தோரணந்தான்!
பேண்ட்டுதுண்டு பனியனுலாம்
கட்லுமேல குவிஞ்சிருக்கும்!
பாக்கெட்ல கையவுட்டா
கத்தையாகத் தாளிருக்கும்!
குப்பதான்னு தூக்கிபோட்டா
குய்யமுய்யோ கூச்சலுதான்!

துணியெல்லாம் தொவச்சிபோட்டு
கொடிக்கயித்ல விரிச்சிபோட்டு
பறக்காம கிளிப்புபோட்டு
வெள்ளத்துணி வெயில்லபோட்டு
சாயத்துணி நெழல்லபோட்டு
மழைவந்தா எடுத்துபோட்டு
காஞ்சதுமே மடிச்சிபோட்டு
ஷெல்புலதான் வெக்கபோனா
காலைஅவர் எடுத்ததாலத்
துணிபூரா கலஞ்சிருக்கும்!
களேபரத்து நெலமபாத்து
மனசுகுள்ள தீப்புடிக்கும்!

எரிச்சலெல்லாம் மூட்டகட்டி
எல்லாமும் அடுக்கிவெச்சி
குப்பகூளம் பெருக்கிவெச்சி
குவிஞ்சபேப்பர் மடிச்சிவெச்சி
எச்சிதட்டு கழுவிவெச்சி
எலிபிடிக்க மருந்துவெச்சி
மச்சுமேல வெச்சசாமான்
மங்காம வெளக்கிவச்சி
ரேஷனரிசி கோதுமய
வண்டுபோவக் காயவெச்சி
இட்டிலிக்கு மாவரச்சி
தோசபொடி இடிச்சிவச்சி
அழுக்கடஞ்ச டப்பாவ
சோப்புபோட்டுக் கழுவிவெச்சி
அலங்காரப் படத்தயெல்லாம்
துணியால தொடச்சிவெச்சி
ஒட்டடய அடிச்சிவச்சி
மூலமுடுக்கு சுத்தஞ்செஞ்சி
ஓஞ்சிகொஞ்சம் ஒக்காந்தா
அலறிவரும் பூதம்போல
அழைப்புமணி ஒலிகேக்கும்!

எழுந்துபோயி தொறக்கநானு
ஒருசெகண்டு லேட்டுபண்ணா
கதவொடஞ்சி போறாப்ல
தடதடன்னு தட்டிடுவான்
சிடுசிடுன்னு கத்திடுவான்
சிங்ககுட்டி எம்மவன்தான்!
காலகைய கழுவாம
காலுசட்ட மாத்தாம
தின்றதுக்குக் குடுமான்னு
சிணுங்கிடுவா சின்னமவ!

கடையிலநான் வாங்கிவச்ச
முறுக்குதட்டை எடுத்துதந்தா
எப்பவுமே இதுதானா?
பஜ்ஜிபோன்டா போட்டுத்தா
சூடாவட சுட்டுதான்னு
அடம்பிடிப்பான் ஆசமவன்!

அதுவேணும் இதுவேணும்
அப்பாட்ட சொல்லுமாநீ!
அடுத்தவாரம் டூருபோவ
ஐநூறு வாங்கித்தா!
புராகிரசு ரிப்போட்ல
கையெழுத்து போட்டுத்தா!
இப்படித்தான் எத்தினியோ
கண்டிஷனப் போடுவாங்க!

எல்லாத்தயும் கேட்டப்றம்
வீட்டுபாடம் செய்யவெச்சி
விட்டதெலாம் வரஞ்சிதந்து
கிழிஞ்சஅட்ட மாத்திதந்து
லேபிளயும் ஒட்டிதந்து
பிஞ்சிபோன ஸ்கூலுபைய
ஊசியால தச்சிதந்து
ராத்திரில சோத்தயுமே
ரவரவயா ஊட்டிவுட்டு
கொழந்தகள தூங்கவெச்சி
அசந்துபோயி எந்திரிச்சா
அப்புறமும் வேலவரும்!

இங்கஎன்ன கவனிக்க
ஒனக்குநேரம் ஏதுனுதான்
எப்பவுமே சொல்லிகிட்டு
எடக்காத்தான் பேசிகிட்டு
டீவியவே பாத்துகிட்டு
கெடப்பாரு எம்புருஷன்!
சப்பாத்தி சுட்டுவச்சி
சாப்புடநான் கூப்டாக்கா
வெகுநேரம் கழிச்சிவந்து
காஞ்சிபோன இத்தநீதான்
கழுதைக்குப் போட்டிடும்பார்!
வந்தவுடன் சுட்டுத்தர
பொறுமத்தான் வேணுமுன்னு
பொருமிகிட்டு இருப்பாரு!

காலைல இருந்துநீயும்
ஊட்டுகுள்ள என்னாத்த
வெட்டித்தான் முறிச்சேனு
வெறுப்பேத்தி உடுவாரு!

அனுசரன பத்தாது
அறிவுனக்குக் கிடையாது
அடிமுட்டாள் நீயின்னு
அடுத்தவங்க பாக்கறப்ப
அதட்டலாத்தான் கத்துவாரு!
அடிக்கக்கை ஓங்குவாரு!
ஆபீசு போறவர்க்கு
ஆயிரந்தான் டென்ஷனுன்னு
அசதியாதான் வந்தவர்க்கு
ஆத்திரமேன் மூட்டனுன்னு
அவரோட ஏச்சுகள
அமைதியாநான் உட்டுடுவேன்!

அத்தனைக்கும் அப்புறமா
மிச்சமீதி சாப்டுட்டு
மீதிவேல அத்தனயும்
மறுநாளு பாக்கலான்னு
படுக்கநானு போவயிலே
ரேடியோல இருந்தொருத்தர்
வகதொகயா பேசுறத
காதாலக் கேட்டேங்க!

மங்கயராப் பொறந்திடவே
மாதவந்தான் செஞ்சிருக்க
வேணும்னு சொன்னாராம்
ஆம்பளக் கவியொருத்தர்!
அதக்கேட்டு நானுந்தான்
அசந்துட்டேன் ஒருநிமிஷம்
அறியாம சொன்னாரோ?
அறிஞ்சேதான் சொன்னாரோ?
அனுதாபப் பட்டுத்தான்
அருமகளப் புகழ்ந்தாரோ?
அனுபவந்தான் உள்ளவங்க
ஆருகிட்ட கேக்றதுன்னு
ஆராய்ச்சி பண்ணிகிட்டே

அசதியிலே தூங்கிபுட்டேன்!
(ஆசிரியரின் பெண்களின் கதை - கவிதை நூலிலிருந்து... ப.1 (விழிச்சுடர்ப் பதிப்பகம், காரைக்கால், 2013)

No comments:

Post a Comment