நீலவானத்து நிலாவிற்கருகில்
கோலமிகு மாளிகையில்
குலவியிருப்போமென
குருட்டுத்தனமான
கற்பனைகள் குவிக்காதே!
மின்வெட்டிலா ஊரில்
வீடொன்று வாங்கிவிட்டுத்
திட்டவட்டமாய் என்னைத்
திரும்பிவந்து பார்த்திடு!
‘நட்சத்திரங்கள் பறித்துவந்து
நீநடக்கும் பாதையிலே
கொட்டிடவா’ என்றெல்லாம்
கோரிக்கை வைக்காதே!
வெட்டிப் பயலாக
ஊர்சுற்றித் திரியாமல்
வேலை யன்றில்
சேர்ந்துவிட்டு எந்தன்
விருப்பத்தைக் கேட்டிடு!
சுட்டெரிக்கும் சூரியனைப்
பற்றிவந்து தரட்டுமாவென
காதில்பூ சுற்றுகிற
வெட்டிப்பேச்சுகளை
இத்தோடு விட்டுவிடு!
வாழ்க்கை இனித்திடவே
வசதிகளைச் சேர்ப்பதற்கு
வழிவகை செய்துவிட்டு
வந்தெனக்குச் சொல்லிவிடு!
கற்பனைத் தேரினிலே
கனவுக் குதிரைபூட்டி
காலமெலாம் எனையேற்றி
காயப்படுத்தாதே!
நாம் இருவர்
மகிழ்ந்துசெல்ல
நானோ காராவது
பதிந்துவிட்ட பின்னாலே
காதல்மடல் வரைந்திடு!
காலங்கள் கடந்துநிற்கும்
காவியங்கள் படைத்துநிதம்
காலடியில் கொட்டுவதாய்க்
கதைகள் புனையாதே!
சாராயம் குடித்துவிட்டு
சாக்கடையில் உருண்டுநிதம்
தள்ளாடி வீடுவந்து
தகராறு செய்யாத
தரமுண்டேல் சொல்லிவிடு!
திருமணம் புரிந்திடில்
பன்னீரில் நீராட்டி
பாதத்தைக் கழுவுவதாய்ப்
பசப்புவார்த்தை பிதற்றாதே!
பிரச்சனை வந்துவிட்டால்
அமிலத்தால் அபிஷேகம்
அறவே நடக்காதென
உறுதிமொழிப் பத்திரம்நீ
எழுதிவந்து தந்திடு!
‘உனக்காக உயிரையும்
உறுதியாகக் கொடுப்பேன்’ என்ற
உலுத்துப்போன வார்த்தைகளை
உளறிக் கொட்டாதே!
தனித்துநாம் இருக்கையிலே
காமுகர்கள் சூழ்ந்துவிடில்
என்கற்பைக் காத்திடவே
தற்காப்புக் கலைபயின்று
தகுதியுடன் வந்திடு!
No comments:
Post a Comment