Friday, 6 January 2017

பிறர் கண்படுமே

பிறர் கண்படுமே!
                                       
2
காதலி! கண்பாரடி!
என்று
கையில் பாட்டிலோடு
கன்னத்தில் தாடியோடு
தள்ளாடுகிறது
ஒரு கூட்டம்

காதலி . . .
இல்லையென்றேல்
செத்தொழி . . .
என்று
அமிலத்தோடு
அச்சுறுத்துகிறது
மற்றொரு கூட்டம்

காதலும் வேண்டாம்
கால்கட்டும் வேண்டாம்
காமவெறி தீர்த்துவிடு!
என்று
கோரப்பற்களை நீட்டிக்கொண்டு
சுற்றிவளைக்கிறது
இன்னொரு கூட்டம்

அப்பப்பா . . .
கன்னியர்கள்
கால்பதிக்கும் தடத்தினிலே
எத்தனை எத்தனை
வேகத் தடைகள்!

மோக வலைவிரித்து
லட்சியப் புறாக்களை
ரணப்படுத்தும்
காமக் கழுகுகளின்
கழுத்தை நெறிக்கின்ற
கருநாகச் சட்டங்கள் 
இனி
கட்டாயம் வேண்டும்
அவற்றை
நிச்சயமாய் நிறைவேற்ற
மனுநீதிச் சோழன்கள்
மறுஅவதாரம் - இங்கு
எடுத்திடவே வேண்டும்

அதுவரை கன்னியரே . . . !
சற்றுக் கவனமாக இருங்கள்
காளையரின்
கண்ணில்படாமல்
கரந்துறையும் மந்திரத்திற்குக்
கடவுளிடமாவது

கருணைமனு போடுங்கள்!

No comments:

Post a Comment