Friday 27 January 2017

அவ்வை நிர்மலாவின் மரத்தை வீழ்த்திய விழுது - திறனாய்வு

அவ்வை நிர்மலாவின் மரத்தை வீழ்த்திய விழுது - திறனாய்வு





பெண்கள் சூழ்நிலைக் கைதிகளா? சந்தர்ப்பவாதிகளா?
திருமதி அனந்தலட்சுமி ஹேமலதா
துணைப்பேராசிரியர், ஆங்கிலத் துறை
தாகூர் கலைக் கல்லூரி,
புதுச்சேரி

           மனிதன் ஆறறிவு படைத்த ஒரு விலங்கு என்பர். மனித மனம் ஒரிடம் நில்லாது குரங்காய்த் தாவும் இயல்புடையது; சில சமயம் இருக்கும் இடத்திற்கேற்பப் பச்சோந்தியாய் நிறம் மாறும். மனிதனுக்குப் பல முகங்கள்; பல குணங்கள். சந்தர்ப்பங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் தெரியும்; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளவும் தெரியும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களைத் தோலுரித்துக் காட்டும் முயற்சியே எழுத்தாளர் நிர்மலா கிருட்டினமூர்த்தியின் மரத்தை வீழ்த்திய விழுது என்னும் புதினம். நான்கு முதன்மைப் பாத்திரங்களைக்கொண்டே இக் கதையை நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர். இவர்களில் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவும் சிலர் சூழ்நிலைக் கைதிகளாகவும் அமைவதற்கான காரணங்களை ஆய்வதாக இக் கட்டுரை அமைகிறது.
முதிர்கன்னியின் திருமண ஆசை
                  கதையின் நாயகன் கோபாலன் சிறந்த பண்புகளோடு விளங்குபவன். தன் மனைவி பவித்ரா மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பவன். அவனது இந்தக் குணமே அவன் அலுவலகத்தில் பணிபுரியும் கல்யாணிக்கு அவன் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. சுயநலம் மிக்கவர்கள், காமக்கண் படைத்தவர்கள், ஆணாதிக்க வெறி கொண்டவர்கள் - இப்படிக் குறையுடைய ஆடவர்களையே தன் வாழ்க்கையில் கண்ட கல்யாணிக்குச் சிறந்த பண்புகளைக்கொண்ட கோபாலனைக் கண்டதும் அவன்மீது விருப்பம் ஏற்படுகிறது. கல்யாணி நாற்பதை நெருங்கும் முதிர்கன்னி; இயல்பாகவே பிறர்க்கு உதவும் பண்புடையவள்; அலுவலகத்தில் மற்றவர்கள் முடிக்கவேண்டிய சில்லரை வேலைகளைத் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்பவள். சுறுசுறுப்பும் அறிவும் பணிவும் நிறைந்த கல்யாணி குடும்பச்சுமை காரணமாகத் திருமணமாகாமல் வாழ்ந்துவருகிறாள். அவள் நல்லவளாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஒரு கட்டத்தில் ஏற்கெனவே திருமணமான கோபாலனைத் தனக்குரியவனாய் ஆக்கிக்கொள்ளும் சுயநலமிக்க சந்தர்ப்பவாதியாய் மாறுகிறாள். குழந்தையில்லாக் குறையை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கும் கோபாலன் - பவித்ரா தம்பதியினரிடையே நுழைந்து அந்தச் சின்ன நூல்கண்டை வைத்து அவனைச் சிறைப்படுத்தவும் முயல்கிறாள். இந்த இலாவகம் முதிர்கன்னியர் சிலர் தமது எதிர்கால நலனுக்காக ஏற்படுத்திக் கொள்ளும் சுயநலமிக்க சந்தர்ப்பமாக அமைவதை உளவியல் உண்மையோடு எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர். தனக்கு வாய்த்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வாடகைத்தாய் என்ற அஸ்திரத்தைக் கல்யாணி கையிலெடுக்கிறாள். அதற்கு அவள் தாயும் முழுமையாக ஒத்துழைக்கிறாள்.
             கல்யாணி கருவுற்ற நிலையில், தனக்குக் கோபாலனின் விருப்பமே முதன்மையானது என்பதுபோல்,
உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா இதைக் கலைச்சுடறேன். (26)
உங்களுக்காகவே உங்க பிள்ளைய சுமக்கறது எனக்கு ரொம்ப சந்தோஷங்க (28)
என்றெல்லாம் கூறுகிறாள். தனக்கு வரப்போகும் அவதூறுகளைப் பற்றிச் சற்றும் சிந்திக்காமல் கோபாலனுடைய மகிழ்ச்சியும் எதிர்காலமுமே தன் குறிக்கோள் என்பதாய் ஒரு போலி நாடகத்தைக் கோபாலன் நம்பும்விதமாக அரங்கேற்றுகிறாள் கல்யாணி.
தாயின் இயலாமை
கல்யாணியின் தாய் கணவனை இழந்தவள்; மூன்று பெண்குழந்தைகளைப் பெற்றவள்; மூத்த மகளான கல்யாணியின் சம்பளத்தில் இளைய பெண்களின் திருமணத்தை முடித்தவள்; நாற்பதை நெருங்கும் கல்யாணிக்குத் தமிழ்ச் சமுதாயத்தில் இயல்பாய் நடப்பதுபோன்ற திருமணத்திற்கு வாய்ப்பில்லை என்ற உண்மையை நன்றாக உணர்ந்தவள்; தனக்குப்பின் அவளுக்கு ஆதரவாக யார் இருப்பார்கள் என்ற கேள்விக்கு விடைகிடைக்காமல் அஞ்சிக் கொண்டிருப்பவள்.
                  கல்யாணியின் மேலதிகாரியான வசதிபடைத்த கோபாலனின் குணநலன்களைக் கல்யாணி மூலமாக அவள் அறிகிறாள். அத்தகையவன் தன் மகளுக்குக் கணவனானால் அவள் வாழ்க்கை செல்வ வளத்துடனும் மகிழ்ச்சியாகவும் அமைந்துவிடும் என்று எதிர்பார்க்கிறாள். அத்தருணத்தில் கல்யாணிக்கும் கோபாலனுக்கும் இடையில் நிலவிய சுமூகமான நட்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் முனைகிறாள். எனவே அவள் தன் வீட்டிற்கு வரும் கோபாலனிடம் மெல்லப் பேச்சுக் கொடுக்கிறாள். பெரும்பாலும் தன் குடும்பச் செய்திகளைப் பிறரிடம் வெளிப்படுத்தாத கோபாலன் கல்யாணியின் தாயினுடைய சாதுர்யத்தால் ஒளிவுமறைவு இல்லாமல் வெளியே கொட்டிவிடுகிறான். குடும்ப விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்து,
சொத்து சுகம் எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்? அப்பான்னு கூப்பிட ஒரு புள்ள இல்லையே? (14)
என்று கூறி அவன் மனத்தின் மூலையில் மறைந்திருந்த குழந்தை வேட்கையை வெளியே கொணர்கிறாள் கல்யாணியின் தாய். பட்டத்தரசி கோசலையாக பவித்ரா இருந்தபோதும் தசரதனுக்குத் தக்க சமயத்தில் உதவிபுரிந்து வரம் வாங்கிய கைகேயியைப்போல் தன் மகள் வாழ்க்கை அமையும் என்று நம்புகிறாள். அதனால் கல்யாணியும் கோபாலனும் உறவுகொள்ளும் தருணத்திற்குரிய சூழலையும் உருவாக்கித் தருகிறாள். அதன் விளைவான கல்யாணியின் கர்ப்பத்தைச் சாதகமாக்கிக் கோபாலனைக் கல்யாணியின் வலையில் விழவைக்கிறாள்.
தம்பி. . . நீங்க எதுவும் பயப்படாதீங்க. . . எங்களுக்கு உங்க அன்பே போதும். தாலி வேணும், சொத்து வேணும் அப்படின்னு எல்லாம் நானோ என் பெண்ணோ எப்போதும் ஆசைப்பட மாட்டோம். (25)
என்று மெல்ல அவனை அசைத்துப் பார்க்கிறாள். மேலும்,
காதும் காதும் வெச்ச மாதிரி நீங்க யாரோ ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கிட்டதா ஆக்கிடலாம். எந்தக் குழந்தையோ உங்க வீட்டுல உரிம கொண்டாடறதவிட உங்க இரத்தம் உங்க மடியில தவழறது சந்தோஷம் இல்லையா. . . ? (28)
என்று கோபாலனின் வாழ்க்கையை பொருளுடையதாக்கத் தானும் தன் மகளும் பெருமுயற்சி மேற்கொள்வதுபோல் காட்டிக்கொள்கிறாள்.
                  கோபாலனின் வாழ்வில் நுழைவதற்குக் குழந்தைதான் ஒரேயொரு துருப்புச் சீட்டு என்பதைக் கல்யாணியும் அவள் தாயும் நன்குணர்ந்து யாருக்கும் சந்தேகம் வராமல் எந்தச் சிக்கலுமின்றிக் குழந்தையைப் பெற்றெடுக்கச் சென்னைக் கிளைக்கு மாற்றல் வாங்கிப் போகிறார்கள். சூழ்நிலையைத் தங்களுக்கேற்றவாறு சாதகமாக மாற்றியமைத்துக் கோபாலனை ஆட்டி வைக்கின்றனர்.
குழந்தை ஆசை
                  மரத்தை வீழ்த்திய விழுது கதைத்தலைவன் கோபாலனும் சந்தர்ப்பவாதிதான். பவித்ராவின் கணவனாய்ப் பவித்திரமாய் இருக்கவேண்டியவன் ஒரு சந்தர்ப்பம் வாய்த்ததும் கல்யாணியோடு உறவுகொண்டு தனக்கென ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கத் துணிகிறான். அதுவரை அவன் மனைவியோடு அவன் வாழ்ந்த வாழ்க்கை ஒரு நாடகமாக அர்த்தமற்றதாக முடிவடைகிறது. கல்யாணியுடனான தனது உறவைத் தன் மனைவியிடமிருந்து மறைக்கப் பல வழிகளில் முயற்சி செய்கிறான். பவித்ரா அவனைக் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொய்களைக் கூறிச் சமாளிக்கிறான். தன் தவறுகளை நியாயப்படுத்துவதற்குத் தகுந்த காரணங்களைக் கண்டுபிடிக்கிறான். கல்யாணி பெற்றெடுக்கவிருக்கும் குழந்தையைக் காலப்போக்கில் தத்துக் குழந்தையாய் ஆக்கி விடலாம் என்று முடிவு செய்கிறான்.
  சிலப்பதிகார மாதவியைக் கற்புக்கரசி என்று புகழ்ந்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அத்திப்பூக்கள் நெடுந்தொடரில் இடம்பெறும் கற்பகத்தைத் தியாகச்சுடர் என்று வருணித்தும் கல்யாணியை அவர்களோடு மனத்திற்குள் ஒப்பிட்டுப் பார்த்தும் மகிழ்ந்துபோகிறான். ஆனால் என்றேனும் தன்மனைவிக்கு உண்மை தெரியும்போது அவள் அடையப்போகும் மன வேதனையையும் அவளது எதிர்கால வாழ்க்கை நிலையையும் குழந்தையைப் பெற்றெடுத்தவுடன் கல்யாணி தனக்கு அளிக்கப்போகும் நெருக்கடிகளையும் குறித்து அவன் எள்ளளவும் சிந்தித்க முனையவில்லை. தன் விருப்பத்திற்கும் தன் செயல்களுக்கும் ஏற்றாற்போல் மனைவி தன்னை அனுசரித்து வாழ வேண்டும் என்னும் ஆணாதிக்க வெறி அவனுள்ளிருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் தன்மையை அறியமுடிகிறது. மனைவியைச் சமமாக நடத்துபவனாகவே இருந்தாலும் ஆடவன் தன்னுடைய விருப்பங்களுக்கே முக்கியத்துவம் அளிப்பவனாக இருக்கும் இயல்பையும் அத் தருணத்தில் அவன் தன் மனைவியைத் தூக்கி எறியவும் தயங்காத போக்கினைக் கொண்டவனாக இருப்பதையும் புலப்படுத்தும் ஆசிரியர் ஒவ்வொரு ஆடவனுக்குள்ளும் ஆண் என்ற அகம்பாவம் தூங்கிக் கொண்டிருப்பதைத் தோலுரித்துக் காட்டுகிறார்.
சூழ்நிலைக் கைதி
      இக்கதையில் பவித்ரா மட்டுமே சுயநலமற்றவளாய்ச் சூழ்நிலையின் கைதியாய்ச் சித்திரிக்கப்படுகிறாள். அவள் பத்தாண்டுக் காலம் தன் கணவனொடு வாழ்ந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை நினைத்தும் இப்போது தன்னைக் காட்டிலும் அவன் கல்யாணிக்கு முக்கியத்துவம் தருவதை உணர்ந்தும் ஒரு முடிவெடுக்கிறாள். கணவன் தன் கைமீறிப் போய்விட்டதால் தனது சர்க்கரை நோய்க்கு உரிய மருந்துகளை உட்கொள்ளாமல் நேரத்திற்கு உணவருந்தாமல் உடம்பைக் கெடுத்துக்கொண்டு இறுதியில் உயிரையே விடுகிறாள்.
கதைக்குள் கதை
                  மேகலா என்ற முதிர்கன்னிக்கும் எழுத்தாளர் முகுந்தனுக்கும் ஏற்பட்ட தவறான உறவால் உண்டாகியிருக்கும் குழந்தையால் எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என்பதை மேகலா தான் வாசிக்கும் ஒரு நாவலின் மூலம் உணர்வதாக ஆசிரியர் கதைக்குள் கதை என்கிற உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். மேகலா கல்யாணியைப் போல் சந்தர்ப்பவாதியில்லை, திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் முதலானவற்றில் தான் கண்ட சித்திரிப்புகளின் தாக்கத்தால் வாடகைத்தாய் என்பது தியாகத்தின் கடைசிப்படி என்ற நினைப்பால் உந்தப்பட்டு, தன் யோசனைக்கு உடன்படாத முகுந்தனை அன்பினால் கட்டிப்போட்டு அவனுக்காகவே ஒரு குழந்தையைச் சுமக்கிறாள். இச் சமயத்தில் கோபாலன் - பவித்ரா பற்றிய புதினத்தை வாசிக்கிறாள். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு மனப்பூர்வமாக முடிவெடுத்து மாத்திரைகளை உட்கொண்டு கருச்சிதைவு செய்துவிடுகிறாள்.
எதிர்ப்பின்மை
                  தன் கணவனிடத்தில் பவித்ரா கொண்ட தூய்மையான அன்பும் பத்தாண்டுகள் அவனோடு இல்லறம் நடத்திய மாண்பும் ஆணாதிக்கத்தை எதிர்த்துக் குரல்கொடுக்கின்ற வேகத்தைக் கட்டிப்போடுகிறது. அதனால் பவித்ரா கோபாலனின் வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ள உயிரைவிடுகிறாள். ஒரு ஆண், இரண்டு பெண்கள் என்னும் முக்கோணக் கதையில் பெரும்பாலும் கதைமுடிவில் ஒரு பெண்ணைச் சாகடித்துவிட்டு எஞ்சியிருக்கும் பெண்ணோடு அந்த ஆண் சுபமாக வாழ்க்கையைத் தொடருவதாகக் கதைபுனைதல் பண்டைதொட்டு எழுத்தாளர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற உத்தியாகும். இதனை இக்கதையின் ஆசிரியரும் பயன்படுத்தியுள்ளார். எனினும் கதையை இத்துடன் நிறுத்திவிடாமல் கோபாலனைச் சற்றே மாறுபட்டுப் படைத்துள்ளார். பவித்ராவின் இறப்புக்குத் தான்தான் காரணம் என்ற குற்றவுணர்ச்சியால் அவன் இறந்துவிடுவதாகக் காட்டி அவனையே நம்பி வாழ்க்கையைத் தொடங்கநினைத்த கல்யாணியையும் இறக்கச்செய்து அனைத்திற்கும் காரணமான கல்யாணியின் தாயையும் தற்கொலை புரிந்துகொள்ளச்செய்கிறார். எந்தக் குழந்தையின் காரணமாகக் கோபாலனின் வாழ்க்கை திசைமாறியதோ அந்தக் குழந்தை அனாதையாகக் கிடப்பதாகக் காட்டி வாழ்க்கையில் எட்டவேண்டிய உயரம் குழந்தைப்பேறு மட்டுமே என்பதைப் புறந்தள்ளி, வாழ்க்கையில் கணவனும் மனைவியும் இறப்புவரை எட்டவேண்டியது எக்காரணத்தாலும் பிரிக்கமுடியாத உள்ளம் ஒன்றுபட்ட அன்பே என்பதை நிறுவுகிறார் ஆசிரியர். இக் கருத்தை மேகலா மூலமாகவும் வாசகர்களுக்குப் புரியவைக்கிறார்.
முடிவுரை
                  சூழ்நிலை காரணமாக வேறு வழியின்றி விதிவசம் தம் வாழ்க்கையை ஒப்படைத்து வாழ்ந்து மடிபவர்கள் ஒருபுறம் இருந்தாலும் வாழ்க்கையை மாற்றியமைக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு தன்னலத்திற்காய்ப் பிறரைப் பலவிதங்களில் பயன்படுத்திக்கொண்டு அவர்களுடைய நீரோட்டமான வாழ்க்கையைச் சீர்குலைத்து விடுகிறார்கள் என்பதை இந்தக் குறும்புதினம் மூலம் எழுத்தாளர் நிர்மலா கிருட்டினமூர்த்தி எடுத்துக்காட்டுகிறார். இலக்கியம் என்பது நம்மிடையே வாழும் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். சமூகச் சிக்கல் ஒன்றைக் கையாண்டு அதற்கு ஒரு தீர்வும் வழங்கியுள்ளார் ஆசிரியர். சந்தர்ப்பவாதத்திற்குத் 'தியாகம்" என்றும் 'நல்ல எண்ணம்" என்றும் போர்வை போர்த்திக்கொண்டு அலையும் மனிதர்களை இனியேனும் நாம் அடையாளம் காண முடிந்தால் அது இப்புதினத்திற்குக் கிடைக்கும் வெற்றியாகும்.

முதன்மை நூல் :
நிர்மலா கிருட்டினமூர்த்தி, மரத்தை வீழ்த்திய விழுது, சென்னை : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2008.



No comments:

Post a Comment