Tuesday 3 September 2019

பேராசிரியர் மித்ரா அணிந்துரை - நற்றமிழ்த் துளிப்பா நானூறில்


பேராசிரியர் மித்ரா
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (/நி)
சிதம்பரம்.
அணிந்துரை
     மாற்றமில்லாமல் மானிட வாழ்க்கை இல்லை. மனித குல வளர்ச்சியாம் அதுவே வரலாறாகிறது. பழமையை ஒதுக்காமல் புதுமையை ஏற்போம். பாட்டுலகம் பல நூற்றாண்டு சிறந்து விளங்க அயல்மொழிக் கவிதைகளை, நூல்களை மொழிபெயர்ப்பதும் தேவையாகிறது.
      சப்பானிய மொழி நமது தாய் மொழிபோல் இலக்கண வடிவங்களைப் பெற்றது. காலந்தோறும் நமது தமிழ்மொழியில் வடிவங்கள் மாறி வந்ததுபோல் ஹைகூவும் பல்வேறு வடிவங்கட்குப் பின்வந்ததாகும். அதனைப் படிப்போர் அங்குள்ள வாமன வடிவத்தை வெறுக்க இயலாது.
                கவிஞர் ஔவை நிர்மலா தமது பெயரிலேயே ஓர் அறிவு ஜீவியின் பெயரைக் கொண்டுள்ளார். இவரது ஹைகூகளில் பல அவரது அனுபவங்களைக் கூறுகின்றன; கண்ட காட்சிகளை எடுத்துரைக்கின்றன. டபிள்யூ. . தாமஸ்ஆண்கள் ஒரு காரியம் செய்யுமிடத்தில், பெண்கள் ஐந்து காரியங்களைச் செய்வதைக் காணமுடியும்என்று இவருக்குத்தான் சொன்னார் போலும்.
        பல்வேறு திறமைகளையும் பண்பு நலன்களையும் பல்துறை அறிவையும் பெற்றுள்ள இவரது நற்றமிழ்த் துளிப்பா நானூறை இனி ஆய முற்படலாம்.
                தாயை யாரோடும் எப்போதும் ஒப்பிட இயலாது. அவளே மனித இனம். அவளே தெய்வம். அவள் வாழுமிடம் கோயில்; சொர்க்கம். அவள் அன்பு, பாசம், பண்பு ஆகியவற்றின் உறைவிடம். தொடக்க காலத்தில் அவள் தாய்வழிச் சமுதாயத்தின் சிறப்பான அங்கமாக இருந்தாள். குடும்பத்துக்காக வேண்டிய உணவைச் சேகரித்தாள்; சமைத்தாள்; குழந்தைகளைப் பராமரித்தாள்; அவர்களுக்காகவே வாழ்ந்தாள். வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தாள். அன்றும் இன்றும் என்றும் தாய் தியாகத்தின் திருவுருவாகத் திகழ்கிறாள். இருக்கும் உணவைக் குழந்தைகட்குப் பகிர்ந்தளித்துவிட்டு உணவுப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்துவிட்டுப் பசியோடும் பட்டினியோடும் இருக்கும் தாயின் மகத்துவத்தை,
உண்டனர் குழந்தைகள்
உண்ணாமல் நிறைந்தது வயிறு
தாய்!
என்னும் ஹைகூ கூறுகின்றது.
                மனித உணர்வைப் பறவையின் மீது ஏற்றிச் சொல்லும் ஹைகூ என் மனம் தொட்ட ஹைகூவாகும். முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சுபொறித்து, தன் சிறகெனும் இமைக்குள் வைத்துப் பாதுகாக்கும். அக் குஞ்சு தானாகப் பறக்கும்வரை பறக்கவும் கற்றுத் தருகிறது. ஆனால், குஞ்சு பறக்கச் சிறகை விரிக்கும்போது, குஞ்சு தன்னை விட்டுப் பிரிந்து போய்விடுமோ என்று அச்சம் வந்துவிடுகிறது. ஏனெனில் அவள் தாய். அதனைச் சொல்லும் ஹைகூ:
இறக்கை விரிக்கிறதே
பறந்து போகுமோ?
தாயின் கவலை!
என்பதாகும்.
                1791 செப்டம்பர் பெண்இன வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறித்த பெண்ணின் உரிமைப் பிரகடனத்தை வெளியிட்டது. அப் பிரகடனம், ‘பெண் சுதந்திரமாகவே பிறந்தாள். அவளுடைய உரிமைகள் ஓர் ஆணின் உரிமைகளைப் போன்றதே. சட்டமானது பொதுவான மனோ உறுதியின் (சித்தத்தின்) ஒரு வடிவாக இருக்க வேண்டும். எல்லாப் பிரஜைகளும் - ஆண்களும் - பெண்களும் ஒன்றுபோல் அதை உருவாக்குவதில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். அது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். எல்லாப் பிரஜைகளும், அவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி. அதனுடைய பார்வையில் சமமானவர்கள். எல்லாப் பொதுப் பதவிகளுக்கும், நிலைகளுக்கும், வேலைகளுக்கும் அவர்களது திறமையைப் பொறுத்துச் சமஅளவில் தகுதியுடையவர்களாகக் கருதப்படவேண்டும். அவர்களது நற்குணங்கள் மற்றும் திறமைகளைத் தவிர வேறு எந்த அளவுகோல்களும் கடைபிடிக்கப்படக் கூடாது என்பதாம். இதனை, ஆண்கள் ஒருமுறை படித்தல் அவசியம். பெண் மக்களுக்கு சக உறுப்பினர்களை வேலை வாங்கும் திறன் இருக்கும்; கல்வித் தகுதி இருக்கும்; ஓயாது உழைக்கும் ஆற்றல் இருக்கும். ஆனாலும், ஏனோ பெண்மக்களை ஆண்கள் அவர்களது அறிவை - திறனை - உழைப்பை ஒத்துக் கொள்வது இல்லை. ஆண் மக்களது பழிவாங்கும் உணர்வை, அடிமையாக நடத்தும் பாங்கை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் இழிசெயலை அவள் விரும்புவது இல்லை. எனவே பெண் வெகுண்டெழுகிறாள். அவற்றை,
சுற்றிச்சுற்றிப்
பம்பரமாய்ப் பணி
சுழல் நாற்காலி!

ஆணி அறையவில்லை
அசைய முடியவில்லை
தலைமை!

அதிகாரியானாலும்
எதிர்க்கப்படுகிறாள்
பெண்!
என்னும் ஹைகூக்கள் வெளிப்படுத்துகின்றன.
                உன்னதமான ஒரு சமுதாயத்தைப் படைக்க வேண்டுமானால் பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளின் நிலையில் இருப்பதை ஒழிக்க வேண்டும் என்றனர் மார்க்ஸ் எங்கல்ஸ். உண்மையில் பெண் என்பவள் ஆணாதிக்கச் சமுதாயத்தில் வேலைபார்க்கும் இயந்திரமாகவே எண்ணப்படுகிறாள்.
      தொடக்ககாலத்தில் பெண் தன் குழந்தைகட்கு, குடும்ப உறுப்பினர்கட்கும் சமைத்தாள். ஆண்வழிச் சமுதாயம், சமைப்பதை அவளது வேலையாக்கி இருந்தது. இன்று சமைப்பது இருபாலரும் செய்யவேண்டிய கடமையாகிவிட்டது. சமையலறை இருபாலருக்கும் பொதுவானதாகி விட்டது.
         பழைமை வெறுத்துப் புதுமையை நாடிய மனம் மேலை நாட்டு உணவுகளையும் வடநாட்டு உணவுகளையும் உண்பதை நாகரிகமாகக் கருதியது. அவ்வுணவுகளால் ஏற்படும் விபரீதங்களை அறிந்து பழைய முறை உணவே மருத்துவ குணம் வாய்ந்தது என்பதை அறிந்து பெண் மக்களைப் பழைய முறை உணவைச் சமைக்கச்சொல்லி வற்புறுத்துகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தின் இத்தகைய போக்கை
சமையலில் நவீனம்
திரும்புங்கள் பழைமைக்கு
அறிவுறுத்தும் ஆணாதிக்கம்!
என்னும் ஹைகூ எடுத்துரைக்கிறது.
          அன்று வேளாண் பெருங்குடி மக்கள் விவசாயம் செய்யவும் உயிரினங்கள் நீர் பருகவும் வீர நாராயணன் ஏரி, பொன்னேரி போன்ற ஏரிகளையும் குளங்களையும் வெட்டி நீர் நிரப்பிப் பாதுகாத்தனர். அதனை, ‘குளந்தொட்டு வளம் பெருக்கிஎன்னும் பாடலடியால் அறியலாம். அது அன்றைய மன்னராட்சியின் மகத்துவம் பேசும் பாடலடி. குளங்களிலும் ஆறுகளிலும் ஒருபுறம் பெண்கள் நீர் எடுப்பர், இன்னொருபுறம் மாக்கள் குளிக்கும், நீர் குடிக்கும். பெரியவர்களும் சிறியவர்களும் குளிப்பர். சேற்றில் உழுத எருமைகள் குளங்களில் படுத்து மிதக்கும் சுகானுபவத்தை இன்று அனுபவிக்க இயலவில்லை. நீர்வரத்தின் வழித்தடங்கள் தூர்க்கப்பட்டு சுயநலமிக்க அதிகாரிகளின் செயலால் வீடுகளாக்கவும் அயல்நாட்டினர் தொழில் செய்வதற்கும் பொதுநிலங்கள் தாரை வார்க்கப்பட்டன. இவற்றை,
குளியல் சுகம்
இழந்தன எருமைகள்
தூர்ந்த குளம்!

அயலக நிறுவனங்கள்
ஏரிகளைத் தூர்க்கின்றன
வேட்டிக் கறை(ரை)கள்!

மழைநீர்ச் சேகரிப்பு
ஏரிகள் தூர்ப்பு
நரித்தந்திரம்!
என்னும் ஹைகூக்கள் கூறுகின்றன.
                இதில் என்ன விந்தையெனில் பொதுமக்களும் அரசியல் வாதிகளுமே இயற்கைக்கு எதிராகச் செயல் பட்டதை அறியாமல் பிறர்மேல் பழிபோடுகின்றனர். இதனைக் கவிஞர் ஔவை நிர்மலா, பத்து ஹைகூக்களில் குறிப்பிட்டுள்ளார். சுற்றுச் சூழலைப் பெரிதும் பாதிப்படையச் செய்வது குப்பைகளாகும். எரிக்கையில் ஏற்படும் புகைமூட்டம் காற்றை மாசடையச் செய்கிறது. மலைபோல் குவிக்கப்படும் குப்பைக் கூளங்களால் நில மாசு ஏற்படுகிறது. நாகரிக விரும்பிகள் நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் அவையும் நிலத்தில் குவிக்கப்பட்டு நிலம் மாசடைகிறது. மேலும், குப்பைகளால் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு, டைபாய்டு போன்ற பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. அவற்றை,
வளர்கின்றன
மலைகள்
குப்பை!

தொன்னை அழுக்கு
நெகிழிக் கோப்பையில் புற்று
நாகரிக விரும்பிகள்!
என்னும் ஹைகூக்கள் பகர்கின்றன.
                தொழிற்சாலைப் புகை மேகத்தில் கலந்துவிடுவது உண்டு. அப் புகை காற்று மண்டலத்திலும் கலப்பதால் காற்று மாசடைந்து விடுகிறது. காற்று மண்டலம் மாசடைவதால் மக்களுக்கு நுரையீரல் புற்றுநோய், மூச்சுத் திணறல் முதலானவை ஏற்படும். தொழிற்சாலைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் நீர் மாசும் ஏற்படுகிறது. இவற்றைத் தடுத்தல் வேண்டும். காற்று மாசு, நீர் மாசு இவற்றைக் கவிஞர் ஹைகூவில் சுட்டிச் செல்வதை,
ஓடியது மேகம்
கண்ணீரோடு
தொழிற்சாலைப் புகை!

பொங்கும் நுரை
குளிக்கிறதோ ஆறு
தொழிற்சாலைக் கழிவு!
என்னும் ஹைகூக்களால் அறியலாம்.
             பெருகிவரும் கனரக வாகனங்களால் சாலையில் உண்டாகும் புழுதி, புகை, ஒலி இவற்றால் முறையே நுரையீரல் பாதிப்பு, தொண்டைப் புற்று, செவிட்டுத் தன்மை ஆகியவை ஏற்படுகின்றன. காது கேளாமையால் செவிட்டுத் தன்மை ஏற்படுகிறது. அதனைப் போக்கச் செவிட்டுக் கருவிகளைப் பொருத்திக்கொள்ள நேரிடும். ஒலிமாசைச் சொல்லும் ஹைகூ -
இன்று ஹெட்போன்
நாளை செவிட்டுக் கருவி
ஒலிமாசு!
என வந்துள்ளதாகும்.
           மூட நம்பிக்கைக்கு வழிவகுக்கும் ஊடகச் சோதிடம், பொய்யும் புரட்டும் அறியாமையும் நிறைந்த புராணத் தொடர்கள், பேய், பிசாசு, ஆவி என்பனவற்றை மையமாகக் கொண்ட மர்மத் தொடர்கள் ஆயிரம், இரண்டாயிரம் நாட்களுக்குமேல் கதை, கிளைக்கதைகள் கொண்ட நெடுந்தொடர்கள் இவற்றிலெல்லாம் மூட நம்பிக்கை துளிர்விடுவதை,
நல்லகாலம் பிறக்கிறது
பெருகும் வருவாய்
ஊடக சோதிடர்!

பகுத்தறிவு தழைக்கும்
நம்பிக்கை செத்துவிட்டது
புராணத் தொடர்கள்!

பகுத்தறிவுக் கண்களிலும்
நடுநிசி ஆவிகள்
மர்மத் தொடர்கள்!

புடைக்கத் தேவை
பெரியாரின் தடி
நெடுந்தொடர்கள்!
என்னும் ஹைகூக்கள் சாடுகின்றன.
           ஊடகங்களில் வேலை பார்க்கும் பெண்கள் தமிழைக் கொலைசெய்தல், தமிழர் தம் பிள்ளைகட்குத் தமிழ்ப் பெயரை வைக்காமல் வடமொழியில் பெயர் வைத்தல், தலையெழுத்து தமிழில் இல்லாமை, ஊடகங்களால் சிறுவர்கள் வாழ்க்கையைத் தொலைத்தல், விவசாயக் கடன் ரத்துக்காக விவசாயி தொடர்ந்து போராடுதல், நட்ட பயிர்கள் மழைவெள்ளத்தில் மூழ்கி நாசமாதல் முதலானவற்றை ஹைகூக்களில் கவிஞர் சமூக அக்கறையுடன் வெளிப்படுத்தும் பாங்கை நினைத்து அவரைப் பெரிதும் பாராட்டவே செய்கிறது மனம்.
                இன்று நூல்களைப் படைப்போரும் பதிப்போரும் அடையும் அவலத்தை நன்குணர்ந்து மனம் நொந்து ஹைகூக்களில் பேசியுள்ளதை அறியலாம். இவரது ஹைகூக்கள் அனைத்தும் சமூக அவலங்களைப் பெரிதும் பேசுவனவாக உள்ளன.
                நற்றமிழ்த் துளிப்பா நானூறில் பத்துப் பத்து ஹைகூக்களை 40 தலைப்புகளில் தொகுத்துள்ள பாங்கும் அவற்றுள் சொல்லப்பட்டுள்ள கருத்துகளும் ஔவை நிர்மலா அவர்களின் முதல் ஹைகூ நூலான அணுத்துளியைக் காட்டிலும் சிறந்தவகையில் செதுக்கியுள்ள பாங்கும், இவர் எதிர்காலத்தில் மிகச் சிறந்த ஹைகூ கவிஞராகத் திகழ்வார் என்ற நம்பிக்கையை என்னுள் உண்டாக்குகிறது.
                ஹைகூ கவிதைகளால் இவர் பெயர் இலக்கிய வானில் ஒளிரும் என்பதில் ஐயமில்லை. இந்நூலை ஒவ்வொருவரும் படித்துப் பயனுற வாழ்த்துகின்றேன்.
                கவிஞர் வாழ்க! வளர்க! வெல்க!
                                                                                                என்றென்றும் அன்புடன்,
                                                                                                                        உங்கள் மித்ரா

No comments:

Post a Comment