Thursday 19 September 2019

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 29


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 29

                'தாட்சு . . . நான் இப்படில்லாம் நடக்கும்னு நெனச்சுப் பாக்கவேயில்ல. எல்லாம் சுந்தரியோட அண்ணன்தான். . . விடாப்பிடியா யோசிக்கவே விடாம இப்படி திடீர்னு கல்யாணம் பண்ணி வெச்சிட்டான். நான் எதிர்பார்க்கவே இல்ல. அதனாலதான் உன்கிட்டயும் எதுவும் சொல்லமுடியலே.' - சின்னத்தம்பியில் வரும் பிரபுவின் அப்பாவித்தனத்தோடு பேசினான் சந்திரன்.
                'இன்னைக்கு ஒருநாள் பொறுத்துக்கோ, நாளைக்கு எல்லாரையும் அனுப்பிச்சிடறேன்'.
            அவன் சொன்னது மறுநாள் நிகழவில்லை.
            முதல்நாள் அலைச்சல் சுந்தரிக்கு ஒத்துக் கொள்ளவில்லையாம். கொஞ்சம் அதிகமாகவே 'அய்யோ!, அம்மா!' என்றாள்.
            எல்லாம் அண்ணன் குடும்பத்தைத் தன்னுடன் இருக்கச்செய்ய அவள் செய்த நாடகம் என்பது தாட்சாயணிக்கு மட்டுமே புரிந்தது. யாருக்குப் புரிய வேண்டுமோ அவன் மக்கு மாணவனாக இருந்தான்.
            சந்திரன் பரிதவித்தான். நிச்சயமாக தாட்சாயணி இனி வீட்டு வேலைகள் செய்யமாட்டாள். அவளுக்கிருக்கும் கோபத்தில் சுந்தரிக்குப் பச்சைத் தண்ணீர்கூட எடுத்துக் கொடுக்கமாட்டாள். அப்படியானால் இந்த நிலையில் சுந்தரியை யார் பார்த்துக் கொள்வார்கள்?
            சுந்தரியைப் பார்த்துக்கொள்வதற்காகத் தன்னுடைய உறவுமுறையிலிருந்து யாரை வரவழைக்க முடியும்? அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தன்னால் பதில்தர முடியுமா? அவர்கள் என்ன தாட்சாயணியா அவன் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள?
                'சுந்தரி இப்படி வாயும் வயிறுமா பரிதவிக்கும்போது எப்படி அவளத் தனியா உட்டுட்டுப் போறது மச்சான்?' விநாயகம் கேட்டான்.  என்ன பதில் சொல்வான் சந்திரன்.
                'கொழந்த பொறக்கறவரை பேசாம நீங்களும் சுந்தரியோட இருந்து பாத்துக்கோங்களேன். அவளுக்கும் ஆறுதலா இருக்கும். எனக்கும் ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு. இவளப் பத்தின கவல இல்லாம நானும் என் வேலையப் பாக்கப்போகனும்.'
                'சரி சரி! எங்களவிட்டா ஒங்களுக்கும் உதவி செய்ய யார் இருக்கா', வேண்டா வெறுப்புடன் ஒத்துக் கொள்வதைப்போல் ஒத்துக்கொண்டனர் சுந்தரியின் அண்ணியும் அண்ணனும்.
            சுந்தரியைப் பார்த்துக்கொள்ளும் சாக்கில் அவர்களின் ராஜ்ஜியம் அமர்க்களமாக ஆரம்பமானது.
            தாட்சணியின் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று சந்திரன் சுந்தரியிடம் வரம் கேட்டான்.
                'என்னங்க இப்படிச் சொல்லிட்டிங்க? என்னை இப்படி நெனச்சிட்டீங்களே? நான் அக்கா மேல எவ்வளவு பாசமா இருக்கேன்னு என் இதயத்தக் கிழிச்சுக் காட்டட்டுமா? அப்பத்தான் நம்புவீங்கன்னா அதையும் செய்யறேன்'.
                'நான் வாழற வாழ்க்கை அவங்க போட்ட பிச்சயில்லையா? அவங்க என்னோட கடவுள். என் ஜன்மத்துக்கும் அவங்க காலடியிலேயே கெடந்து உசுர விடுவேன்' - நா தழுதழுத்தாள் சுந்தரி.
            ஒரே வாரத்தில் சந்திரன் கேட்ட வரமும் சுந்தரி கொடுத்த சரணாகதி வாக்குமூலமும்  மறுபரிசீலனை செய்யப்பட்டன.
                'நான்தான் போயிப் போயி அக்காகிட்டப் பேசறேன். ஆனா அவங்க என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கறாங்க. நான் என் வயித்த பிடிச்சுக்கிட்டு நடக்க முடியாம நடந்து மாடி ஏறி எத்தனை தடவை அக்காவப் போயி பாத்துருக்கேன் தெரியுமா? அவங்கள வேணா இது உண்மையா இல்லையான்னு கேட்டுப் பாருங்க. ஆனா அவங்க என்னைப் பாத்ததும் முகத்தத் திருப்பிக்கறாங்க. நம்ம கொழந்தயக் கரிச்சுக் கொட்டறாங்க. அவங்க என்ன மொறச்சுப் பாக்கறதப் பாத்தா எங்க நம்ம கொழந்தைக்கு ஏதாச்சும் ஆகிடுமோன்னு பயமா இருக்குதுங்க' பொலபொலவென்று கண்ணீர் உகுத்துக் காட்டினாள் சுந்தரி.
                'அய்யய்யோ! அழாத செல்லம்மா! அவ கெடக்கறா, நீ ஏன் இப்படி மாடிப்படியெல்லாம் ஏறுற செல்லம்? டாக்டர் உன்னை மாடிப்படி ஏறக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்களேடா செல்லம், இனி நீ ஒன்னும் அவ எதுர போகாத, எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.' அவள் வயிற்றைத் தடவிக்கொடுத்தான் சந்திரன். அவளைப் படுக்கையில் படுக்கவைத்துவிட்டு .சி.யை ஆன் செய்தான். சிறிதே தட்டிக்கொடுத்துவிட்டு கதவை மூடிக்கொண்டு வெளியே சென்றான்.
            சுந்தரியின் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகை படர்ந்தது; எல்லாம் அவள் நினைத்தவாறே நடந்து முடிந்ததால்!


(தொடரும்)

No comments:

Post a Comment