Thursday 19 September 2019

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 28


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 28

            காலையில் எழ முயன்றாள் தாட்சாயணி. தலை உடைந்துவிடும்போல் வலித்தது. தலையைத் தூக்க முடியவில்லை. படுக்கையில் படுத்துக்கொண்டே என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.
            வீடு அமைதியாக இருந்தது. இன்னுமா யாரும் எழுந்திருக்கவில்லை? கடிகாரத்தைப் பார்த்தாள். எட்டுமணி ஆகிவிட்டிருந்தது. என்றுமில்லாமல் இன்றென்ன இப்படிக் கிடந்திருக்கிறோம். சிரமப்பட்டு எழுந்தாள்.
            மெதுவாகக் கீழே இறங்கி வந்தாள். ஒருவரையும் காணோம். வீடு பூட்டியிருந்தது. உள்ளேயிருந்து லீவரை முறுக்கிக் கதவைத் திறந்தாள். ஒருவரும் இல்லை. வெளிக்கதவும் பூட்டி இருந்தது. அனைவரும் எங்கே சென்றார்கள்?
            அலுவலகம் செல்வோமா? நிச்சயமாக முடியாது. உடல் ஒத்துழைக்க மறுத்தது. சரி பேசாமல் லீவு போட்டு விடுவோம். சமையலறைக்குச் சென்றாள். பத்துப் பாத்திரங்கள் எவைவும் விளக்கப்படாமல் அம்பாரமாய்க் குவிந்திருந்தன. பிரிட்ஜைத் திறந்து பால் பாக்கெட் ஒன்றை எடுத்து வெட்டிக் காய்ச்சினாள். ஒரு தலைவலி மாத்திரையோடு காபி குடித்தாள். அலுவலகத்திற்கு விடுப்பு சொன்னாள். ஹாலின் சோபாவில் படுத்துக் கொண்டாள். தலைவலி போக உறங்க முயன்றாள்.
            அவ்வப்போது விழிப்புவரும் நேரங்களில் தன் கண் எதிரே மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள்.
                10.00 மணி
                10.35 மணி
                11.20 மணி
                12.48 மணி
            உறக்கமும் விழிப்புமாகக் கிடந்தபொழுது திடீரென்று பேச்சுக் குரல்கள் கேட்டன. கதவின் பூட்டை வெளிப்புறமிருந்து திறக்கும் சத்தம் கேட்டது. 'இங்கேயே இருப்போமா? மேலே செல்வோமா?' - முடிவு எடுக்க முடியவில்லை. அதற்குப் போதிய அவகாசமுமில்லை.
            அதற்குள் கதவு திறக்கப்பட்டு விட்டது. சுந்தரியின் அண்ணன், அண்ணி, குழந்தைகள் இன்னும் சிலர் உள்ளே வந்துவிட்டனர்.
            சந்திரனும் சுந்தரியும் வாசலில் நின்றார்கள். சந்திரன் பட்டுவேட்டி கட்டியிருந்தான். புதிதாக எடுத்திருக்க வேண்டும்.
            சுந்தரி மயில்கழுத்துக் கலரில் பட்டுப்புடவை கட்டியிருந்தாள். ரெடிமேட் ஜாக்கெட் சற்றே இறுக்கமாக இருந்தது. இருவரின் கழுத்திலும் சம்பங்கி மாலை தொங்கியது. சுந்தரியின் கழுத்தில் வெண்மையான சம்பங்கி மாலையின் அடியிலிருந்து தடிமனான மஞ்சள் கயிறு பளிச்சென்று எட்டிப் பார்த்தது.
            சுந்தரியின் அண்ணி உள்ளே இருந்து ஆரத்தி கரைத்துக்கொண்டு எடுத்துச் சென்றாள். மணமக்களுக்கு ஆரத்தி எடுத்தாள்.
                'வலது கால எடுத்து வெச்சி உள்ளே வாங்க' என்று யாரோ சொன்னார்கள். மணமக்கள் உள்ளே வந்தனர்.
            தாட்சாயணி அலுவலகம் சென்றிருப்பாள் என்று சந்திரன் நினைத்திருந்தான்.
            உள்ளே வந்ததும் சோபாவில் தாட்சாயணி சிலையாக அமர்ந்திருப்பதைக் கண்டான்.
                'மச்சான், திடீர்னு கல்யாணம் அமைஞ்சாலும் ரொம்ப சிறப்பா நடந்துடிச்சி. என்னடா இது . . ? சுந்தரி வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு நெனச்சேன். சுந்தரி சொன்னதுபோல உண்மையிலேயே நீங்க பெரிய மனுஷன்தான்.' விநாயகம் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான்.
                'இன்னிக்குக் கல்யாணம் நடந்திருந்தாலும் உங்களுக்குப் பர்ஸ்ட் நைட் எல்லாம் கெடயாது', ஒரு கிறுக்கன் ஜோக் என்று நினைத்துக்கொண்டு உளறினான்.
            அதில் கண்ட நகைச்சுவைக்காக எல்லோரும் கைகொட்டிச் சிரித்தனர்.
            இந்தக் கண்றாவிக் காட்சிகளைப் பார்ப்பதற்குப் பதிலாகத் தான் அலுவலகமே சென்றிருந்திருக்கலாம்.
            விழுந்துவிடாமல் தன் அறைக்குச் சென்றாள் தாட்சாயணி.
            யாரும் அவளை ஏனென்று கேட்கவில்லை. உண்மையில் தாட்சாயணிதான் சுந்தரிக்குப் பெருந்தீங்கு இழைத்துவிட்டதாக அவர்கள் அனைவரின் பார்வையும் அமைந்திருந்தது.
            மாலையில் டிபன், காபி எடுத்துக்கொண்டு சந்திரன் தாட்சாயணி அறைக்குச் சென்றான்.
            முதல் நாள் சொன்ன செய்திகளை மறுஒலிபரப்பு செய்தான். அவளை உண்ணுமாறு வற்புறுத்தினான். அவள் உண்ணாவிட்டால் இனித் தானும் உண்ணாமல் சாகப் போவதாகக் கூறினான்.
            தாட்சாயணியும் எத்தனை வேளைதான் பட்டினி கிடக்க முடியும்? ஒரு தோசையை வேண்டாவெறுப்பாக விழுங்கினாள்.
(தொடரும்)

1 comment:

  1. தங்கள் எழுத்து அருமையாக இருக்கிறது. முதலில் இருந்து கதையை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அருமை.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஏழு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது முரண்கோடுகள் (புதினம்) – அத்தியாயம் 36 பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete